PDA

View Full Version : என் உயிர் கண்ணம்மா.



ராஜா
24-03-2007, 09:37 AM
அன்பு நண்பர்களே..!

முன்னெச்சரிக்கை ; இன்று என் ஆருயிர்த் துணைவியார் திருமதி.கண்ணம்மா அவர்களின் பிறந்தநாள்.. பொல்லாச் சிறகை விரிக்கும் வான்கோழியாய் இந்தக் கல்லாதானின் கவிதைக்கான கன்னி முயற்சி இது..

இனி கவிதை.....

இனிய இல்லறத்தின் இருபத்தைந்தாம் ஆண்டு..உன்
கனிவு முகம் கசங்கியதில்லை யாண்டும்..

மணமுடித்து புகுமனை ஏக மகிழ்வுந்தில் நாம்..
இணக்கமுடன் இரவுக் குளிரில் மாப்பிள்ளை மடியில்
துயில் கொண்டு வந்த முதல் மணமகள் நீயோ..
அயர்வும் மாமன் மகனென்ற உரிமையும் மட்டுமல்ல..
உயர்வாக நம் குடும்பம் தலையெடுக்க வாழ்க்கைத்
துயரெல்லாம் நீ தாங்கி எம்மைக் காக்க..
முன் தூங்கி பின் இப்போதும் விழித்திருக்கும்
கண்ணம்மா நீ கண்ணுறங்கியது அன்றுதானே..?

மழையில் நனைந்து குழந்தையாய் நான் திரும்புவேன்..
இழையோடும் கவலையொடு முந்தானை எடுத்து
தலை துவட்டி முகம் துடைத்து
செல்லக் கோபம் காட்டி, மெல்லத் தலையில் தட்டி
சொல்லுமொரு வெல்லம் நிகர் வார்த்தை.."குரங்கு"..!
அடுத்த மழை எப்போதென ஏங்கும் மனம் மயங்கி..

அன்றொரு நாள் உன் பிறந்தநாள்.. நாட்காட்டியில்
இன்றொரு தகவல் எனக் காட்டியதை நான் காட்டினேன்..
யாரோ ஒரு அறிஞர் சொன்னது.. உலகில் தீமை பிறப்பதை
யாராலும் தடுக்க இயலாதென்று.. உனைச் சீண்டினேன்..
கணக்கறிந்து சொன்னாய்..இனம் இனத்தைச் சேரும்..
மைனஸ் இண்டு மைனஸ் ஈஸ் ஈக்வல் டு ப்ளஸ்..

தொழில் துரத்தல்களில் காயம்பட்டு சிலநாள் திரும்புவேன்..
அழும் பிள்ளையாய் நான்.. ஆறுதல் தரும் அன்னையாய் நீ..
ஒத்தடமாய் உன் வார்த்தைகள் உற்சாகம் தரும்..
சத்தியமாய் அடுத்தநாள் நான் சாதித்து மீள்வேன்..

அடுத்த பிள்ளை உன் உயிருக்கு ஊறு.. மருத்துவர்
எடுத்துச் சொன்னார் இப்போது வேண்டாம் பேறு... செவி
மடுத்திடா மடையன் நான்.. கேட்கவே இல்லை.. வலி
எடுத்திட மருத்துவர் கை விரித்திட நீ கலங்கவே இல்லை.

சென்றோம் வேறொரு மருத்துவ மனை.
மன்றாடி கேட்டு சேர்த்திட்டேன் உனை.
கேட்டு வந்தது உன் உறவுக் கூட்டம்.. கை
காட்டி எனை ஏசியது அடை மழையாட்டம்..

அத்தனை வலியிலும் எழுந்து நீ நின்றாய்.. என்
அத்தானை திட்டுபவர் போ வெளியில் என்றாய்..
எத்துணை உயர்ந்தவள் நீ எனக் கண்டேன்.. அன்றே
வைத்துனைத் தொழுதேன்.. மனக்கோவில் கொண்டே..!

பிறந்தநாள் வாழ்த்துகள் என்னுயிரே..!

பின்னுரை ; கற்களைத் தேடும் கரங்களுக்கு ஒரு கனிவான வேண்டுகோள்..
இனி கவிதை என்ற பெயரில் கிறுக்கி உங்களைச் சோதனைக்குள்ளாக்க மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்..நன்றி.

leomohan
24-03-2007, 09:48 AM
அற்புதமான கவிதை ராஜா. திருமதி ராஜாக்கு இதைவிட பெரிய பிறந்த நாள் பரிசு கிடைத்திருக்க வாய்ப்பில்லை.

இன்று அவர் உங்களை கவிஞனாகவும் ஆக்கிவிட்டார்.

அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் பல

ஆதவா
24-03-2007, 10:08 AM
ராஜா சார்!!!

உங்கள் மனைவிக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

இதைவிட வேறென்ன பரிசு கொடுக்க முடியும்?. அழகிய நடை. சந்தம், எதுகைகள் எல்லாம் கலந்து கொடுத்த அறுசுவை உணவு உங்கள் கவிதை.........

கன்னி முயற்சி அல்ல இது........... எழுதியதைப் பார்த்தால் தெரிகிறது இது முதல் கவிதை அல்ல.........

ஆனாலும் மிக அருமையாக ஒரு திருமண வாழ்வை ஞாபகப் படுத்தும் கவியாக இருக்கிறது.

மீண்டும் வாழ்த்துக்கள் உங்கள் மனைவிக்கு.. சாரே!

(நிறைய கவிதை எழுதுங்கள்... நாங்கள் கற்களைத் தேடும்போது வைரம் கிடைத்தால் விடமாட்டோம்.:) )

அமரன்
24-03-2007, 10:19 AM
திரு ராஜைவை கவிஞனாக்கிய திருமதி ராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

மனோஜ்
24-03-2007, 10:36 AM
ராஜா அண்ணா
அ அருமை வாழக்கையில்
ஆ ஆருயிர்த் துணைவியார் திருமதி.கண்ணம்மா அவர்களின் பிறந்தநாளில்
இ இப்படி ஒரு அழகான கவிதையை அவர்களுக்காக வடித்தமை
ஈ ஈடுஇனையில்லா பெருமையை அவர்களுக்கு கொடுத்துள்ளீர்கள் அவர்களுக்கு என்
உ உலமாற வாழ்த்துக்கள்
ஊ ஊலகினில் ஆனைத்து மகிழ்ச்சியையூம் பெற்று
எ என்சார்பிலும் மன்றத்து சார்பிலும் மீன்டும் வாழ்த்துகளை தெரிவித்து
ஏ ஏவறும் புகழும் வன்னம் வாழ்க்கை அமைய
ஐ ஐசுரியங்கள் அனைத்தும் பெற்று
ஒ ஒருமனமாய் கூடு சுற்றத்துடன் வாழ
ஓ ஓய்வின்றி மகிழ்ச்சியை வாழ்வில் பெற
ஒள ஒளவை போன்று நீடிய வாழ்வுபெற வாழ்த்துக்கள்

ராஜா
24-03-2007, 11:26 AM
நன்றி நண்பர்களே..!

திரு மோகன் என்றும் பாராட்ட பஞ்சம் வைப்பதேயில்லை.

என் ஆதவன் என்னைப் பாராட்டுவதும் புதிதல்ல..

நக்கீரரும் அவ்வாறே..

திரு.மனோஜ் அவர்களின் ஆர்வம் மிக்க பாராட்டு என் நெஞ்சை அள்ளுகிறது.

ஒரு கிறுக்கலுக்கு இத்தனை பாராட்டா..?

ஆதவா
24-03-2007, 11:49 AM
கிறுக்கல்களில்தான் உண்மையும் நேர்மையும் அன்பும் பாசமும் கலந்து வரும்......

மயூ
24-03-2007, 12:15 PM
கணவனைக் கவிஞன் ஆக்கிய உங்கள் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

pradeepkt
24-03-2007, 01:06 PM
சபாஷ்...
அத்தோடு உங்கள் மனைவிக்கு எங்கள் வாழ்த்துகளை மறக்காமல் சொல்லுங்கள்.

இளசு
24-03-2007, 08:42 PM
மழைநாளும், நாட்காட்டி செய்தியும் கண்டு புன்முறுவலோடு....
படித்துக்கொண்டே வந்தவன்..

பிரசவ அறை வரிகளை படிக்க முடியவில்லை..

கணினித்திரை ஏன் கலங்கலாக?

அன்புத் தம்பதிகளுக்கு
என் ஆனந்தக்கண்ணீர் முத்துகள் பரிசாக...


எழுத முடியவில்லை மேலும்...
வாழ்த்துகள் வாழ்த்துகள்.....

இளசு
24-03-2007, 08:44 PM
ஒரு கிறுக்கலுக்கு இத்தனை பாராட்டா..?

இயற்கையை மிஞ்சும் படைப்பு இல்லை..
உண்மையை விஞ்சும் அழகு இல்லை!

உங்கள் கவிதை மிக மிக மிக அழகு ராஜா!

ஷீ-நிசி
26-03-2007, 05:06 AM
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...

உங்களுக்கு இறைவன் மிக சிறப்பான வரத்தையே அளித்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.. தங்கள் துணைவியாருக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

கவிதை உண்மையிலேயே அருமையாயிருக்கிறது ராஜா சார்..

http://www.raaga.com/playerV31/index.asp?pick=3614&mode=3&rand=0.3540420555939142&bhcp=1

உங்களுக்காகவும், உங்கள் துணைவியாருக்காகவும் இந்தப் பாடல்...

செல்விபிரகாஷ்
26-03-2007, 09:54 AM
மனைவிக்கு மிகப்பெரிய சந்தோஷம் கணவன் அவளை புரிந்து கொள்வது, இன்று உங்கள் மனைவிக்கு இது தான் மிகவும் விலைமதிப்பற்ற பரிசாக இருக்கும். திருமதி ராஜா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்
செல்விபிரகாஷ்

ஓவியா
26-03-2007, 10:23 AM
கணக்கறிந்து சொன்னாய்..இனம் இனத்தைச் சேரும்..
மைனஸ் இண்டு மைனஸ் ஈஸ் ஈக்வல் டு ப்ளஸ்..

ஹி ஹி ஹி ஹி ஹி

அருமை அண்ணாவுக்கும் வணக்கம்.
அண்ணீக்கு (கலம் கடந்த, மன்னிக்கவும்) இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

கவிதை அருமை. பாராட்டுகிறேன். :icon_08:

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். :natur008:

நீங்க ரொம்பதான் கொடுத்தி வைத்துள்ளீர்கள்.

பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

ராஜா
27-03-2007, 04:36 AM
நன்றி நண்பர்களே..!

mukilan
27-03-2007, 03:02 PM
மனதிற்கு வயதாவதே இல்லை என நிரூபணம் செய்து விட்டீர்கள் ராஜா! கணவன் அமைவதுவும் இறைவன் கொடுத்த வரம்தான். இதைவிடப் பெரிய பிறந்தநாள் பரிசு கொடுக்கவே முடியாது. தாமதமான எனது பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சொல்லி விடுங்கள்.

அறிஞர்
27-03-2007, 03:09 PM
நல்ல வாழ்க்கை துணை அமைந்தால்.
வாழ்நாளெல்லாம் கொண்டாட்டம் தான்...

அருமை துணைவியாருக்காக
கொடுத்த கவிதை.....
தங்கள் அன்பை அழகாக வெளிப்படுத்துகிறது.

இன்னும் பல பிறந்த நாட்களை
சீரும் சிறப்புடன் கொண்டாட வாழ்த்துக்கள்.

பென்ஸ்
27-03-2007, 03:46 PM
கணினித்திரை ஏன் கலங்கலாக?
....

பாராட்ட பலதும் சொல்லலாம்,
ஆனால் பொய் சொல்ல தேவையில்லை...

ராஜா, கவிதையின் கடைசி வரிகளில் ,
கணனி திரை மங்களாக, இளசுவை போல...

ஒரே ஒரு வேண்டுகோள்:
தயவு செய்து உங்கள் கவிதையை திருமதி. ராஜாவுக்கு வாசித்து காட்டவும்.
குரல் கண்ணீரில் கரையுமானாலும் நிறுத்த வேண்டாம், அந்த ஆனந்த கண்ணீருக்கு அணை போடுவது நல்லதல்லவே.

வாழ்த்துக்ள்...
ஒரு நல்ல மனைவிக்கும்,
மனைவியை புரிந்த இந்த கணவனுக்கும்.

praveen
08-04-2007, 09:40 AM
பொதுவாக நான் கவிதைகள் படிப்பதில்லை, அர்த்தம் புரிந்து கொள்ள மெனக்கெடனும் என்று, இங்கு வந்த பின் தான் தெரிகிறது, அர்த்தம் புரிந்தால் அது எத்துனை மன உவகை தருகிறது என்று, உங்கள் கவிதை எல்லோருக்கும் (எனக்கே புரிந்து விட்டது என்றால் அப்படித்தானே அர்த்தம்) புரியும் வண்ணம் உள்ளது.

அதுவும் உங்கள் துணைவியரை பற்றி நீங்கள் சிறப்பாக கூறி இருப்பதால் அது இன்னும் சிறப்பு பெறுகிறது.

வாழ்த்துக்கள் நண்பரே, கவிதை முயற்சியை கைவிடாதீர்கள், உங்களுக்குள்ளும் ஒரு கவிஞர் இருக்கிறார் அதை மறந்து விடாதீர்கள்.

ராஜா
08-04-2007, 09:47 AM
நன்றி நண்பர்களே..!

poo
09-04-2007, 07:59 AM
தாமதமான வாழ்த்தென தயக்கமில்லை. உங்கள் இல்வாழ்க்கை ஆல்போல் தழைக்க, இன்றுபோல் என்றும் சிறக்க ஆண்டவனை வேண்டுகிறேன்...