PDA

View Full Version : கரைந்துபோகும் நிஜங்கள்!!poo
24-03-2007, 08:33 AM
கைகளை
தொன்னையாக்கி
பயபக்தியோடு
அள்ளி நீட்டுகிறேன்..
நீயோ...கானல் நீரை
சுட்டுகிறாய்..
உனக்குத் தடையில்லை
உன்
தாகத் தீரலை
தள்ளிப்போடுவதற்கு..
துளித்துளியாய்
வழிந்து
வற்றிக் கொண்டிருக்குமென்
ஈரங்களை என்சொல்லி
தேற்றுவதென்று
தவிக்கிறேன் நான்..

கச்சேரி நுழையும்முன்
கவசத்தில் முழுவதுமாய்
புதைந்துபோகத்
தயங்குவதாலேயே
நானெய்தும் நிஜங்களெல்லாம்
உந்தன் அழகான
கற்பனைத் தேரிலேறி
காணாமல் போகிறது...

உண்மைகள்
உரைக்கப்படுவது
கடுகளவில்..
உணரப்படுவதில்லை
மலையளவில்..
இனியொரு விலக்கென்ன..
இங்கே
உன்னை என்னை
பழித்தலைவிடவும்
நோகிறேன்....
நிதர்சனம் தொலைக்கும்
வழிதம்மை!!

ஆதவா
24-03-2007, 09:24 AM
பூ அவர்களுக்கு...... கவிதை எனக்கு மீண்டும் புரியவில்லை என்றாலும் என் மனதில் நினைத்ததைச் சொல்லுகிறேன்... ஆனால் ஒன்று... நான் நினைத்த இந்த கருத்துக்கள் சற்று பொருந்தியும் பொருந்தாவிடினும் அற்புதமான வரிகளால் கரைந்து போகிறது என் மனத் தோன்றல்கள்...

இனி நான் நினைத்த கவிதையின் முதல் கருத்து :

கைகளை
தொன்னையாக்கி
பயபக்தியோடு
அள்ளி நீட்டுகிறேன்..
நீயோ...கானல் நீரை
சுட்டுகிறாய்..
உனக்குத் தடையில்லை
உன்
தாகத் தீரலை
தள்ளிப்போடுவதற்கு..
துளித்துளியாய்
வழிந்து
வற்றிக் கொண்டிருக்குமென்
ஈரங்களை என்சொல்லி
தேற்றுவதென்று
தவிக்கிறேன் நான்..

தொன்னை = யாசகப் பாத்திரம் அல்லது கைகள் இரண்டும் சேர்ந்த நிலை..

முதலில் நான் நினைக்கும் கருத்து ஒரு பத்திரிக்கைக்கு (ஆசிரியருக்கு) கொடுக்கப்படும் நிஜமான செய்தி என்பதாகும்..

அச்செய்தியானது வழங்கப்படுகிறது என்றாலும் கானல் நீரைச் சுட்டுவதுபோல நிஜம் மறைக்கப்பட்டு செய்தி வெளிவருகிறது. ஆசிரியனுக்குத் தடையில்லை... எந்த செய்தியும் வெளியிடாமலும் வெளியிட்டும் இருக்கலாம்.. அதாவது தாகம் தீர்ப்பதைத் தள்ளி போடலாம்.. ஆனால் உண்மை செய்தியின் தாகத்தைத் தீர்க்க முடியாது. இறுதி வரிகளும் இம்மாதிரி அர்த்தம் கொண்டவைதான்,.

கச்சேரி நுழையும்முன்
கவசத்தில் முழுவதுமாய்
புதைந்துபோகத்
தயங்குவதாலேயே
நானெய்தும் நிஜங்களெல்லாம்
உந்தன் அழகான
கற்பனைத் தேரிலேறி
காணாமல் போகிறது...

அச்சில் ஏறி நுழையும் முன் நிஜமான செய்தியானது பத்திரிக்கைகளில் சரியான இடங்களில் (Placement) இடாத காரணத்தாலும் நிஜத்தினும் கற்பனை கலந்து ஏறிவிடுவதாலும் உண்மை காணாமல் போகிறது.

உண்மைகள்
உரைக்கப்படுவது
கடுகளவில்..
உணரப்படுவதில்லை
மலையளவில்..
இனியொரு விலக்கென்ன..
இங்கே
உன்னை என்னை
பழித்தலைவிடவும்
நோகிறேன்....
நிதர்சனம் தொலைக்கும்
வழிதம்மை!!

சின்ன செய்தியென்றாலும் அதை பெருமளவில் உணர்வதில்லை நம் மக்கள்.. அதையே அவர்கள் இதெல்லாம் ஒரு செய்தியா என்று பழித்தலை விடவும் நோகிறதாம் நிஜமான உண்மை..

சற்றூ ஏறக்குறைய வரிகள் என் கருத்துக்களோடு ஒத்துப்போகிறது என்று நினைக்கிறேன்.........

அப்படியே ஒரு காதலன் காதலியிடம் தன் காதலைச் சொல்வது போலவும் உருவகப் படுத்திக்கொள்ளலாம்... அப்படியே பொருந்தும்... எந்த ஒரு மறைமுகப் பொருளில்லாமலும்..

சின்ன விளக்கம்.........

காதலன் யாசகம் கேட்பதுபோல அவளிடம் கை நீட்டுகிறாள்.. அவளோ அதைக் காணாதவாறு கானல் நீரைக் காண்பிக்கிறாள்... அவளுக்கென்ன தடை? காதல் ஈரம் வற்றிக்கொண்டிருக்கும் காதலன் கதிதான் தவிப்பதுபோல இருக்கிறது.

கச்சேரி நுழையும்முன் - இதயம் நுழைவதற்கு முன்..

அவளின் கற்பனை நினைவுகளினால் இவனின் நிஜக்காதலே காணாமல் போகிறது.
காதல் சொன்ன சிறு உண்மை பெருமளவில் உணரமுடியாமல் போகிறது அவளால்... கடையிரண்டு வரிகள் ஒத்துவராமல் இருப்பதுபோலத் தெரிகீறது..

இருந்தாலும் மேற்ச்சொன்ன இவையிரண்டும் உங்களின் கவிதையயத் தீண்டிச்செல்கிறதே தவிர முழுவதுமாக ஆக்கிரமிப்பதில்லை.. ஆக உங்கள் கருத்தென்ன என்பதைச் சொல்லுங்கள்.

திரும்பவும் படிக்கிறேன்.... புரிந்தால் இன்னொரு கருத்து வரலாம்

நன்றி

ஆதவன்

இளசு
25-03-2007, 09:08 AM
கும்பிட்ட கரங்களை முறிப்பவர் ஒரு ரகம்..

குவிந்து ஏந்திய கரங்களை
கானல் நீர் நோக்கி ஏவுபவர் மறுரகம்..

பரிமாறுவதால் பசியாறும் நிலை என்றாலும்
தள்ளிப்போடுதல் அவள் நிலை!

தாகம் என்று நிற்பவனின் ஈரம் காய்ந்திடுமோ
கால வெயிலில் என்பது அவன் கவலை..!!

உண்மைகள் புறப்படுமுன்னே
பொய் அலங்கரித்து ஊர்வலமே முடித்துவிடுமாம்..

புரைதீர்ந்த நன்மை பயக்குமெனில் பொய் அழகுதான்...
மற்ற நேரங்களில்?


நிஜம் எப்போதும் சுடும்..
இக்கவிதை சுடுகிறது..


பாராட்டுகள் பூ..


----------------------------------------------------

அன்புள்ள பூவுக்கு


கவிதைக்கு ஆதவனின் விமர்சனம் மிக அழகாய் இருவகை
விளக்கம் தருகிறது..

கவிஞனின் அனுபவத்தை மெய்நிகராய் தானும் அனுபவிக்க
வாசகன் எப்போதும் முயல்கிறான்.

பல சமயம் அதில் சுலப வெற்றி..

சில சமயம் பல வழிப்பாதைகள்... சுற்றிச் சுற்றி வருகிறான்.

குறுக்கெழுத்துப்புதிர்களில் பரிச்சயம் உள்ளவர்கள் சட்டென விடை காண்பார்கள்.. பழக்கம் இல்லையென்றால் ?

புதிர்களுக்காகவது அடுத்த இதழில் விடை வரும்..


இவ்வகைக்கவிதைகளுக்கு ஒரு குறிப்பளித்து வாசகன் கருத்தை
வழிநடத்துவதே நம் மன்றத்தின் தனிச்சிறப்பு...

சிற்றிதழ்களில் கிடைக்காத சிறப்பு...


எங்கள் விமர்சனம் மீதான உன் கருத்தை நேரம் கிடைக்கும்போது
அளிக்க வேண்டுகிறேன்..

விகடன்
25-03-2007, 06:01 PM
ஆதவனின் விளக்கத்தின் பின்னரே பூவின் கவிதையி ஆழத்தை அறிய முடிந்தது.

பூவிற்கு எனது வாழ்த்துக்கள்.
ஆதவனுக்கு எனது நன்றிகள்.

ஓவியா
25-03-2007, 06:28 PM
ஆதவா உங்க விமர்சனத்தை கண்டு ஆனந்தம். தூள்பா

பூ கவிதை மிகவும் இனிமை.
கருவை சொல்லும் விதம் அருமை.

வாழ்க நின்பணி.


இளசு சார் சொல்ல்வது போல்
இக்கவிதை சுடுகிறது..

பாராடுக்கள் பூ.

poo
27-03-2007, 05:14 AM
நேரமின்மை.. பணிச்சுமை.. (பணியிடத்தில் மன்றத்தில் உலவுவதைக் கண்டு, வேண்டுமென்றே....) , அதனால் மன்னிக்க வேண்டுகிறேன் நண்பர்களே...

ஆதவன்,
உங்கள் பதிவு கண்டேன்.. உங்கள் கருத்தைப்போல இன்னும் நிறைய இடங்களில் பொருத்திப் பார்க்கலாம்..
கவிதையை ஏந்திக்கொண்டு மேடையேறுபவன் நிலையில்- நான் எழுதி இருக்கிறேன்... இங்கே கவிஞன் தன்னை நொந்துகொண்டு, வாசகனின் புரிதலை நொந்துகொண்டு, கவிதையெனில் இப்படித்தான்(கற்பனையாக, பொய்யாக..) இருக்குமென நினைக்க வைத்த தவறான
வழிகாட்டுதலை..கலாச்சாரத்தினை நொந்து கொள்வதாய் எழுதினேன்..
காதலன் கவிஞனாய். காதலி வாசகனாய்.. என உங்கள் கருத்தில் பொதித்தும் பார்க்கிறேன்..

நன்றிகள்.. தொடரும் ஆதரவில் மகிழ்கிறேன்.. தொடர வேண்டுகிறேன்!


அண்ணா,

முன்பு நீங்கள் சொல்வீர்கள். பணிகள் தாண்டிதான் மன்றமென, அதைத்தான் செய்கிறேன்..
அதனாலேயே நான் பதிவுகளை உதாசீனப்படுத்துவதாய் தோன்றிவிடுகிறதோ?!. மன்னியுங்கள் அண்ணா...

படிப்போரை சுழற்றிவிட நினைத்து எழுதுவதில்லை.. ஆனால் சுழலில் அவர்களிடமிருந்து வரும் கருத்தில் நெகிழ்கிறேன்...

நான் எப்போதுமே எடுத்தாளும் கருக்கள் மிக எளிதான ஒன்றே.. நிஜமான ஒன்றே என்பதை நீங்கள் அறிவீர்கள்.. அதை நான் உடனே குறிப்பிடும் இடங்களில் என் கவிதை அதற்குமேல் படிக்கப்படுவதில்லை.. ஆர்வமாக. நிஜங்களைக் காட்டிலும் கற்பனையில் மிதத்தலும், காதலை சொட்டுவதாகவும் இருத்தலே என்றும் விரும்பப்படுகிறது!!!!?.

என் ஆதங்கம்தான் இந்தக் கவிதையின் கரு அண்ணா!!

(மனம் நோகும்படி கருத்து இருந்தால் மன்னியுங்கள்!)

ஆதவா
27-03-2007, 06:36 AM
அழகோ அழகு....... நான் சற்று இன்னும் யோசித்திருக்கவேண்டும்... பத்திரிக்கைக்குக் கொடுக்கப்படும் செய்தி என்று போட்டேன்..... கவிதை அரங்கேற்றத்தை மறந்துவிட்டேனே!!!!