PDA

View Full Version : விடையில்லா கேள்விகள்ஆதவா
23-03-2007, 07:45 AM
ஃப்ளக்ஸ் விளம்பர பேனர்கள்
தொங்கவிடப்பட்டிருந்தன
வண்ணக் காகிதங்கள்
வடிவாய் கத்தரிக்கப்பட்டு
அங்கங்கே ஒட்டவைக்கப்பட்டிருந்தன
இவற்றில் ஆறிலொரு பங்கு செலவில்
பலகையால் அலங்கார மேடைகள்
அடிக்கவைக்கப்பட்டிருந்தன
சறுக்கி விழாதிருக்க
சாமியானா டெண்ட் போர்வைகள்
விரித்துக் கிடந்தன.


நானொரு மூலையில்
காட்சிக்காக காத்துக்கொண்டிருந்தேன்
ஒலிப்பெருக்கியில் சொன்ன நேரத்தில்
பறந்து வந்தன அழகிய பறவைகள்.
கண்கள் மயக்கும் உடைகளில்...
வலிகளை அடக்கிய
முகச்சாயம் தெரிகிறது.
நடனத்துக்குண்டான அசைவுகளை
மேடையில் சொல்லிக்கொண்டன.
இளம் பிஞ்சுகள்


ஒலியில்லாமல் அசைகின்றன
நர்த்தனமாடும் இவர்களின்
உதடுகள்.
கூட்ட இரைச்சலைக்
கண்டும் கேளாது இருக்கின்றன
இவர்களின் செவிகள்.
சிறப்பு நடனம் தருவதொன்றே
குறிக்கோள் போலும்..


முன்னே
மின்னொளி புகுத்தப்பட்டது.
பொதுமக்களுக்காக
பாடல் ஒலிபரப்பப்பட்டது
முதலில்,
தமிழை கொலை செய்யும்
குத்துப்பாட்டுகள் பாடின,
இன்ன பாடல்
என்றறியாமல் ஆடுகின்றன
மிகச் சரியான நடன அசைவில்.
இவர்கள் வாழ்வது
அந்த கொலையில்தான் என்பது
தெரிகிறது தெளிவாக..

பாடல் முடிந்ததும்,

" விஜய் ரசிகர் நற்பணி மன்றம்
சார்பாக ரூபாய் ஐம்பது
நன்கொடையாக பெறப்பட்டது "

என்ற அறிவிப்புகள்

" நன்கொடை தாரீர்"

நடனக் குழுத் தலைவி.
பேசத்தெரிந்தவள்
அவளொருத்தி மட்டும்.

மனம் கேட்டது.

" நீ?"

" நானொரு கவிஞன் "

" அதனால்?"

விடையில்லை என்னிடம்

கைதட்டலில் திருப்தியின்றி
நடந்து வருகிறேன்...
ஒலிப்பெருக்கியில்
ஒரு பாடல்
ஒலித்துக்கொண்டிருந்தது
பிஞ்சுகளின் ஆடைகள்
மாறிவிட்டிருந்தன.

இளசு
25-03-2007, 07:58 AM
பாராட்டுகள் ஆதவா..

பல அடுக்குகளில் இக்கவிதையை உரித்து அலசலாம்.
அத்தனை கனம்.. அத்தனை ஆழம்..

முதல் அடுக்கு:

பந்தல், விளக்கு, மேடை - நேரடி நுணுக்கப்பார்வையின் பதிவு..
(சிலப்பதிகாரத்தில் இப்படி மேடை நுணுக்கங்கள் - இத்தனை அடி அகலம், நீளம் என இளங்கோவடிகள் பதிந்ததால் அக்காலக் கலைக்கூறுகளை நாம் அறிய முடிகிறது).

இப்படி காணும் நிலைகளை துல்லியமாய் பதிவது முதல் அடுக்கு..

தான் பாடாத வரிகளுக்கும் வாயசைப்பது - இக்காலப் 'பின்னணி' கலாச்சாரத்தின் சிறப்புப்பார்வைப் பதிவு..


இரண்டாம் அடுக்கு:

காண்பவற்றை மீறி குறிப்பால் கவியுள்ளம் உணர்ந்ததை சொல்லால் உரைப்பது..


சாயம் மறைத்த வலி..

(மொழிக்) கொலையால் ஒருவரின் பிழைப்பு..


முதல் வரி நடனம் ஆடுவோருக்கு மட்டுமா?

வரவேற்பு, தட்டச்சு, கடைகளில் பணி, என அலுப்பை மறைத்து சிரிப்பும் அலங்காரமும் மேற்பூசி
வாழும் எண்ணற்ற நம் சகோதரிகளுக்கும்தானே பொருந்தும்,?


சாயம் என்பது - புன்னகை என்றால்..

நம் எல்லாருக்கும் ஏதாவதொரு சமயத்தில் பொருந்தும்..

தமிழ் சரியாக பேசாமல் இருக்க தனிப்பயிற்சி கொடுத்து ஊடகங்களில்
உலவ விடும் நிலை இப்போது....அதையும் பதிவு செய்த விதம் அருமை..


முன்றாம் அடுக்கு:

இது சுய அகழ்தல்..
சில சூழல், சுணக்கம் காரணமாய்
'செயத்தக்கதை செய்யாமல் விட்டதை'
எண்ணிக் குமையும்....
குறுகுறுப்பைச் சபையில் ஒப்பிக்
குமுறும் உள்ளம்...

பார்வைகளே என்றும் முதல்..
பதிவுகளே கவிதை விளைவுகள்..
தீர்வுகள் பின்னால் வரும்..

நாளை இன்னும் நான் நல்ல மனிதன் என்னும்
நம்பிக்கை அச்சாணியில் சுழலுவதே வாழ்க்கைச்சக்கரம்..


என் பாராட்டுகள் மீண்டும் நம் ஆதவனுக்கு...

ஆதவா
25-03-2007, 10:45 AM
ஆஹா!! படிக்கும்போதே புல்லரிக்க வைக்கும் வரிகள். ஒரு கவிதையை எப்படி விமர்சனம் செய்யவேண்டும் என்பதற்கு உண்டான அருமையான சான்று.. வார்த்தைகளில் வலிமையான அர்த்தங்கள் பொதிய எழுதும் திறன் எப்போதும் அண்ணாவுக்கே சாரும். அதை எல்லா இடங்களிலும் கண்டிருக்கிறேன்.

கவிதை எழுதுவதால் மட்டும் கவிஞனாகிவிடமுடியாது ; அதைப் புரிந்து அதைத் தன் வாயில் போட்டு மென்று பசியடக்குபவனே கவிஞன். அந்த வகையில் நீங்கள் ஊட்டி விடுகிறீர்கள்..

மன்றத்தில் நான் சிலரைப் பார்த்து பொறாமைப் பட்டதுண்டு .. அதில் நீங்களும் ஒருவர்..

நன்றி அண்ணா!

இளசு
25-03-2007, 11:07 AM
அன்பு ஆதவா,

விமர்சனத்துக்கும் விமர்சனம் தரவைக்கும் கலை நம் பென்ஸிடம் கற்றது..

வெகுஜன ஊடகங்களில் எழுதுவோருக்கும் கிட்டாத ஒரு பேரின்பம்
நமக்கு இங்கே கிடைக்கிறது..

நம் மதிப்பீட்டில் உயர்ந்த நம் நண்பர்கள் நம் படைப்புகளுக்கு கருத்திட, அதை ஒட்டி நாம் அந்நியோன்ய பதிலிட..

இந்த மனநெருக்கம் வாய்ப்பது மன்றம் போன்ற இடங்களில் மட்டுமே..

தன் குழந்தையை அலங்கரித்து கூடத்தில் இட்ட தாய்
விருந்தினர் முத்தமிட்டு அலங்காரம் கலைந்ததா
என ஆவலாய் அடிக்கடி வந்து எட்டிப்பார்க்கும் தாய்..

படைப்பாளியின் மனநிலையை நண்பன் தம்
,வெட்கம் கெட்ட தாய்' கவிதையில் தத்ரூபமாய் சொல்லியிருப்பார்.

என் படைப்புகளை இங்கே இட்டு அதே பரிதவிப்புடன் உலவும் எனக்கு...

தன்னைப்போல் பிறரை எண்ணிச் சாலப்பரிந்தூட்டுவதில்
ஆத்ம திருப்தியே ஆதவா...

உன் ஏற்புரையில் என் உள்ளம் நிறைகிறது..நன்றி..

aren
25-03-2007, 11:19 AM
ஆஹா!! ஒரு அழகான கவிதைக்கு அருமையான விமர்சனம். இளசு அவர்களின் விமர்சனத்தைப் படித்தவுடன் கவிதையின் தன்மை இன்னும் அதிகமாக தென்படுகிறது. பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

பரஞ்சோதி
25-03-2007, 11:21 AM
கவிதை படைத்த ஆதவனை கண்டு அதிசயிப்பதா அல்லது அருமையான விமர்சனம் கொடுத்த அண்ணாவை கண்டு அதிசயிப்பதா.

உங்கள் இருவரையும் எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. தொடரட்டும் உங்கள் இலக்கிய சேவை.

ஆதவா
25-03-2007, 11:23 AM
மீண்டும் நன்றி இளசு அண்ணா! திரும்பவும் பாருங்கள் உங்கள் வரிகளில் எத்தனை ஆழம்..!!!! மன்றத்தில் உங்களைப் போலவே சாயல் பென்ஸ் அவர்களும்... விமர்சனத்திலேயே நல்ல கெட்டது பிரித்து அலசும் ஆற்றல்...

ம்ம்... நான் இன்னும் வளரவேண்டும்........................ கருத்து இடக்கூட..
--------------------------------------------------------
நன்றி ஆரென் அண்ணா! உங்களின் வாழ்த்தைப் பார்க்கும் போது உள்ளம் பூரிக்கிறது.

----------------------------------
பரம்ஸ் அண்ணா! என்னைப் பாராட்டுவதை விட இளசு அண்ணாவை பாராட்டுவதுதான் அழகு... கவிஞனைவிட பார்வையாளந்தான் மிகமுக்கியம்.. அதிலும் மிக ஆழமாக அலசும் பார்வையாளர்தான் மிக முக்கியம்.. அந்த வகையில் இளசு அண்ணாவுக்கே பாராட்டுகள் சேரவேண்டும்..

நன்றி அண்ணா!

பரஞ்சோதி
25-03-2007, 11:24 AM
ஆதவனின் கவிதையில் சமுதாயப் பார்வை அருமையாக வெளிப்படுகிறது.

நண்பரே! நீங்க புகழ்பெற்ற கவிஞர்கள் வரிசையில் கட்டாயம் இடம் பிடிப்பீர்கள். உங்க பெயரை சொல்லி, நட்பை சொல்லி, நானும் பெருமைப்பட காத்திருக்கிறேன்.

இளசு
25-03-2007, 11:24 AM
ஆஹா!! ஒரு அழகான கவிதைக்கு அருமையான விமர்சனம். இளசு அவர்களின் விமர்சனத்தைப் படித்தவுடன் கவிதையின் தன்மை இன்னும் அதிகமாக தென்படுகிறது. பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

அன்பின் ஆரென்

குறிப்பிட்ட நேரத்தில் சரியான உதவி..
இங்கே பணம் அன்பளிப்பு - நடனக்குழுவுக்கு-
செய்ய முடியாததை எண்ணி வருந்தும் நல்ல உள்ளம்
எழுப்பிய அலைகளில் என் எண்ணப்படகு...மிதந்தது..

நம் எல்லாருக்கும் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் நடப்பதுதான் இல்லையா?


உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பதும்
வல்லவன் வகுத்ததில்லையா?

இளசு
25-03-2007, 11:29 AM
கவிதை படைத்த ஆதவனை கண்டு அதிசயிப்பதா அல்லது அருமையான விமர்சனம் கொடுத்த அண்ணாவை கண்டு அதிசயிப்பதா.

உங்கள் இருவரையும் எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. தொடரட்டும் உங்கள் இலக்கிய சேவை.

அன்பின் பரம்ஸ்...

கூசவைக்கும் பிரதிபலிக்கும் குளப்பரப்பும் சேர்த்து
ஆதவனைத்தான் பாராட்டும்..


நல்ல கவிதையே நல்ல விமர்சனத்தின் ஊற்று...

ஆதவா
25-03-2007, 11:31 AM
மீண்டும் நன்றி பரம்ஸ் அண்ணா! உங்கள் வாய்முகூர்த்தப்படி நடக்கத்தான் ஆசை..
-----------------------
இளசு அண்ணா! நான் இந்த நிகழ்ச்சியைக் காணும்போது என்னிடம் பணமில்லை. கொடுப்பதற்கு.. அதிலும் அவர்கள் கேட்டு பெறவேண்டிய சூழ்நிலை. பலர் தம் விளம்பரங்களைக் காட்டி 10 ரூபாயும் 50 ரூபாயும் கொடுத்து விசில் அடிப்பதைக் கண்டு மனம் கொதித்தது உண்மை.
ஆனால் நிகழ்ச்சியின் இறுதியில் அவர்கள் கொடுத்த 10 ரூபாய் கூட என்னால் கொடுக்க முடியவில்லையே என்ற உணர்வுதான் என்னைக் குத்தியது...

சரி!!! அதன்பின்னாவது நான் செய்தது சரியா? இல்லை... அவர்களை மையமாக வைத்து கவிதை எழுதி சுயநலம் பார்க்கிறேன்.

மன்மதன்
25-03-2007, 08:37 PM
கவிதை எழுதி சுயநலம் பார்க்கிறேன்.


சுயநலத்தில் ஒரு பொதுநலம். நல்ல கவிதையை படிக்க எங்களுக்கு தருகின்றீர்களே.. கண்முன்னே காணும் நிகழ்வுகளை அப்படியே கவிதையாக வடிக்க சிலரால் மட்டுமே முடியும். நீங்க அதில் ஒருவர் ஆதவா.

poo
27-03-2007, 05:40 AM
பாராட்டுக்கள் ஆதவன்,

இயலாமைகள் கண்டு வெறுப்போம்.. அவ்வேளை நிச்சயமாய் நாமும் ஒரு இயலாமையில் இருப்போம்..

அண்ணனின் விமர்சனம் தொடர்ந்த கருத்துக்களில், கவிதையின் மேடை கண்முன்னே வந்துவிட்டது...

வெற்றிக்கு வாழ்த்துக்கள் ஆதவன்.

ஷீ-நிசி
27-03-2007, 06:23 AM
ஒரு கலை நிகழ்ச்சி! மேடையில் பல இளவயது பிஞ்சுகள்!
முகத்தில அவர்களுக்கு கலர் சாயம், குத்துப்பாட்டுக்கு ஆடுகிறார்கள் ஒலிவராதபடி வாயை அசைத்து, வாய் கூட நடனமாடுகிறது.. பார்ப்பவர்களெல்லாம் ஆட்டத்தை மட்டுமா பார்க்கிறார்கள்.. ஆடும் ஒவ்வொரு இளவயது பிஞ்சுகளுக்கும் தெரியும், வறுமை பெற்றெடுத்த மோடிவித்தை, விபச்சாரம், குழந்தைதொழிலாளி, போன்ற குழந்தைகளின் வரிசையில் இதுப்போன்ற கலைநிகழ்ச்சியும் ஒன்று..

இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார் மூலையில் நின்றபடி நம் கவிஞர், காசில்லை அவரிடம், கவிதையிருக்கிறது...

கவிஞர்களால் இதற்குமேல் என்ன முடியும் ஆதவா,...

ஆதங்கபட மட்டுமே முடியும்..

வாழ்த்துக்கள்!

ஆதவா
27-03-2007, 06:23 AM
மிக்க நன்றி பூ மற்றும் மன்மி.

ஆதவா
27-03-2007, 06:25 AM
நன்றிங்க ஷீ-நிசி.. இம்மாதிரி கவிதைகளில் தாங்களே எமக்கு முன்னோடி..