PDA

View Full Version : நாளைய செய்தியில்....poo
22-03-2007, 08:55 AM
நாளைய செய்தியில்
நான் வருவேன்..

நான்
கடலின் நடுவே
தள்ளப்பட்டவள்..

விட்டுப் போனவனை
சபிப்பதற்கு மனமில்லை..
வழுக்கும் வாழ்க்கையை
இழுத்துப்பிடிக்க
கற்றுக் கொடுத்தமையால்.

நடுத்தீவில்
கவிழ்ந்து கிடந்த
படகினை சீரமைத்தேன்..
புயலில் சிக்கி
சேதமாகிப் போயிருப்பினும்
தாய்வீடெனத் தஞ்சமானேன்..

நீலிக்கண்ணீர் வடித்த
முதலைகள்..

நீளத்தில்
வால்தூக்கிய திமிங்கலங்கள்..

கண்சிமிட்டி
அழைத்த நட்சத்திர மீன்கள்..

காலைத் தீண்ட
முயற்சித்த நண்டுகள்..

பிடுங்கியெறிந்தேன்..
கரையோர கொடுக்குகளோடு
தூரத்து அச்சங்களையும்.

சிதறிக்கிடந்த
பருக்கைகளை பொறுக்கியெடுத்து
அவ்வழிச் சென்ற
பறவைகளுக்கு பங்கு வைத்து
பிழைப்பு நடத்தினேன்..
இடையில்
கொத்திச்செல்ல முயன்ற
பருந்துகளில் சிலவற்றை
குதறிவைத்தேன்..
குறியொன்றை வைத்தேன்..

மடியிறங்கிய
கனத்தினை
மனதில் சுமத்தினேன்..

தனியொரு
மரத்தினை உரமிட்டு
வளர்த்தேன்..
தேவதையொன்றினை
வானிறக்கினேன்..
ஒரு தோப்பு
உருவானதில்
உணர்ச்சிமயமானேன்..

இலக்கெட்டிய
இளைப்பில் ஓய்ந்தேன்...
இடையிடையே
ஓய்வளிக்கப்பட்டேன்..

வளர்ந்த
மரங்களுக்கிடையில்
முதிர்ந்த மரமானேன்..

என் கிளைகளில்
பல விறகாகி
எரிந்தபோதெல்லாம்
நெஞ்சனைத்தேன்..

இறக்கிப்போனவனை
சபிப்பதற்கு மனமில்லை..
சாதித்தவளாய்
உணர்ந்தமையால்..
சபிக்கவில்லை நான்.

நாளை
என்னை கட்டுமரமாக்கும்
யோசனை காதில் விழுந்தபின்
என்னை நானே
பிடுங்கிக் கொண்டேன்...

நாளைய செய்தியில்
நான் வருவேன்..
ஏதேனுமொரு வலி
என் வலிகளை
போர்த்திக்கொண்டிருக்கும்
வழக்கம்போல!!

ஆதவா
22-03-2007, 09:06 AM
நல்ல கவிதை... கவிதையைப் பல்வேறு கோணங்களில் நான் பார்க்கிறேன். புரிதல் கடினமாக இருந்தாலும் என் கோணம் சரியென்றுதான் நினைக்கிறேன்.

மற்றவர்களின் விமர்சனத்தை எதிர்நோக்கி........

ஆதவா
22-03-2007, 09:35 AM
நண்பர் பூவுக்கு
கவிதை எப்படிப்பட்ட கரு உடையது என்று எனக்குத் தெரியாது.. அந்த அளவுக்குண்டான பக்குவம் எனக்கில்லை.. உங்கள் கவிதை மூலமாக பாடம் படிக்கும் காரணத்தினால் மேலும் மேலும் படிக்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது...
.
அது உங்களின் வெற்றி. நான் (மன்றத்தினரும்)முன்பே குறிப்பிட்டது போல கவிதை எழுதியவர் கருவை விட பார்வையாளர் கருவும் மேலானது.. அதேசமயம் முழுமையாக கவிஞனின் கரு சென்றடைய வேண்டும் என்பதில் குறியாக இருப்பவன் நான்.. சரி எனக்கு இந்த கவிதையில் புரிந்த கருத்துக்கள்...

ஒரு அபலைப்பெண் கற்பை இழந்து பலர் இகழ, குழந்தை பெற்று, அவளை மணம் முடிக்கப் போகையில் அவள் மனம் நோகிறாள்.. அதாவது வேண்டாம் என்கிறாள்.. இதுதான் நான் புரிந்துகொண்டது..

அல்லது கற்பை இழந்தவள் என்று கூட சொல்ல வேண்டியதில்லை.. கணவன் இழந்தவள் என்று கூட சொல்லலாம். இதுதான் எனக்கு ஆழமான கருத்தாகப் படுகிறது

எப்படி?

நான்
கடலின் நடுவே
தள்ளப்பட்டவள்..
விட்டுப் போனவனை
சபிப்பதற்கு மனமில்லை..
வழுக்கும் வாழ்க்கையை
இழுத்துப்பிடிக்க
கற்றுக் கொடுத்தமையால்.

கணவனில்லாமல் இருப்பவள் என்றும் அவன் கற்றுக்கொடுத்த வாழ்க்கைப் பாடத்தையும் நான் புரிந்துகொண்டேன்.

நடுத்தீவில்
கவிழ்ந்து கிடந்த
படகினை சீரமைத்தேன்..
புயலில் சிக்கி
சேதமாகிப் போயிருப்பினும்
தாய்வீடெனத் தஞ்சமானேன்..

குடும்பத்தை சரிசெய்தலும் கணவனை இழந்துவிட்டதால் தாய்வீட்டில் தஞ்சமடைதலும் இங்கே காணுகிறேன்

முதலைகள்..
வால்தூக்கிய திமிங்கலங்கள்..
அழைத்த நட்சத்திர மீன்கள்..
முயற்சித்த நண்டுகள்..
பிடுங்கியெறிந்தேன்..
கரையோர கொடுக்குகளோடு
தூரத்து அச்சங்களையும்.

இவையெல்லாம் இவள் படும் இன்னல்கள்... உறவினர்களின் நாடகங்கள்..

சிதறிக்கிடந்த
பருக்கைகளை பொறுக்கியெடுத்து
அவ்வழிச் சென்ற
பறவைகளுக்கு பங்கு வைத்து
பிழைப்பு நடத்தினேன்.....................

அவளின் வாழ்க்கைப் போக்கு...........

மடியிறங்கிய
கனத்தினை
மனதில் சுமத்தினேன்..
தனியொரு
மரத்தினை உரமிட்டு
வளர்த்தேன்..
தேவதையொன்றினை
வானிறக்கினேன்..
ஒரு தோப்பு
உருவானதில்
உணர்ச்சிமயமானேன்..

இறந்துபோன கணவனால் ஏற்பட்ட புது சொந்தம்... அதை அவள் வளர்க்கிறாள்.

இறக்கிப்போனவனை
சபிப்பதற்கு மனமில்லை..
சாதித்தவளாய்
உணர்ந்தமையால்..
சபிக்கவில்லை நான்.
நாளை
என்னை கட்டுமரமாக்கும்
யோசனை காதில் விழுந்தபின்
என்னை நானே
பிடுங்கிக் கொண்டேன்...

இவளின் விதவை நிலையைக் கண்டபின் கலியாணம் முடிக்கும்படி குடும்பத்தார் கூற இவள் மறுக்கிறாள்.. (அப்படித்தான் என்று தோணுகிறது.)

வரலாற்றில் எண்ணிக்கை கூடும்..

பிள்ளைபெறுவதை சொல்கிறீர்களா// அப்படித்தான் இருக்கவேண்டும்...
என் மன ஓட்டங்கள் இவைதான்.. இவை சரியென்றால் மீண்டும் ஆழமாகவே விமர்சிக்க உள்ளேன்..
உங்கள் பதில் தேவை பூ அவர்களே!

poo
22-03-2007, 09:39 AM
மன்னிக்க வேண்டும் ஆதவன்...
முன்பு எழுதிவைத்த இறுதிவரியை இப்போது மாற்றியிருக்கிறேன்.. ஒரு சின்ன சறுக்கல்.. அது என் மன திருப்தியை கொன்றதால் நிஜமாய் வந்ததை எழுதினேன்.. ஆனபோதும் அர்த்தம் சற்றும் மாறவில்லை!

poo
22-03-2007, 09:44 AM
இல்லை.. ஆதவன்.. நான் மாற்றம் செய்த வரிகள் உங்களுக்குள் ஏதும் மாற்றத்தினை உண்டாக்கினால் தெரியப்படுத்துங்கள்.. பின் உங்கள் விமர்சனம் குறித்து கருத்து சொல்கிறேன்..

ஆதவா
22-03-2007, 09:54 AM
ம்ஹீம்.... இளசு அண்ணா ஹெல்ப் ப்ளீஸ்....

poo
22-03-2007, 10:24 AM
முன்பு இருந்த வரிகள்...


நாளைய செய்தியில்
நான் வருவேன்..

வழக்கம்போல
வயிற்றுவலி வரலாற்றில்
எண்ணிக்கையொன்று கூடிவிடும்!

_____________________________________________________

மாற்றியிருக்கும் வரிகள்...

நாளைய செய்தியில்
நான் வருவேன்..

ஏதேனுமொரு வலி
என் வலிகளை
போர்த்திக்கொண்டிருக்கும்
வழக்கம்போல!!

___________
இரண்டில் எதை வேண்டுமானாலும் ஒட்டிப் படியுங்கள்.. விமர்சனம் செய்யுங்கள்!

pradeepkt
22-03-2007, 10:58 AM
வயிற்று வலி வரலாறென்பது தற்கொலையைக் குறிக்கிறது என்று எண்ணுகிறேன். சரியா பூ?

ஆதவா
22-03-2007, 11:20 AM
நான் முதலி அப்படித்தான் எண்ணியிருந்தேன்.. காரணம்

என்னை நானே
பிடுங்கிக் கொண்டேன்...

இந்த வரிகள்.. இருந்தாலும் எனக்கு சந்தேகம்தான்..

poo
23-03-2007, 04:41 AM
வயிற்று வலி வரலாறென்பது தற்கொலையைக் குறிக்கிறது என்று எண்ணுகிறேன். சரியா பூ?

மிகச்சரி ப்ரதீப்..

என் கவிதையின் நாயகி நேற்றைய செய்தியில் வந்தவள்...

http://www.dinamalar.com/2007mar22/events_ind8.asp


ஆதவன், உங்கள் பார்வையும் ஒத்துப் போகிறது.. ஆனால் இன்னும் சிலமுறை முழுமையாக படித்து அர்த்தம் கொண்டிருக்கலாமென தோணுகிறது.. இது குறையல்ல நண்பனே!! (புரிவாய் என நினைக்கிறேன்..). அடடா.. அடுத்தக்கரு கிடைச்சிடுச்சே....

கேட்டுக்கொண்டபடி விமர்சனமளிக்க முன் வந்தமைக்கு நன்றிகள்...

செல்விபிரகாஷ்
25-03-2007, 07:50 AM
பூ அவர்களுக்கு,
கவிதை மிகவும் அருமை. விமர்சனம் செய்யும் அளவிற்கு இன்னும் வளரவில்லை, ஆயினும் என்னுள் தோன்றியதை தெரிவித்து விடுகிறேன். நல்ல கவிஞர்களுக்கு அழகு கருத்தினை வெளிக்கொணரும் வார்த்தைகள் மிகவும் முக்கியம். இங்கு நீங்கள் உபயோகப்படுத்தியிருக்கும் வார்த்தைச் சுழிவுகள் மற்றும் உவமைகள் அழகு.

இளசு
25-03-2007, 09:21 AM
அன்று தீபாவளி...
அதிகாலை 5 மணி..

அவசரப்பிரிவில் எனக்கு இரவுப்பணி..

புதிய நோயாளிகள் வரவு இல்லாததால்-
இரண்டு பயிற்சி மருத்துவர்களை முன்னிறுத்தி
இரவு மூன்று மணிக்கு மேல் உள்ளறையில் படுத்து - உறங்கிக்கொண்டிருந்த என்னை -
'' சார், மெடிக்கோலீகல் கேஸ் வந்திருக்கு'' - என
எழுப்பினார்கள்..

என் முகத்தில் பனிக்கட்டிகளை அறைந்து எழுப்பியது
நான் கண்ட காட்சி:

70 வயது மூதாட்டி..
கெட்டி மஞ்சள் பூசிய முகம்.. நிர்மலமாய்..
சாந்தி தவழும் நெற்றியில் குங்குமம்..
நரைத்த கூந்தலில் சிறு மல்லிச்சரம்..
துவைத்த பழம் பட்டுச்சேலை..
கழுத்தில் தூக்குக்கயிறின் தடம்..
நிரந்தரத் துயில்...


பண்டிகை நாள் காலை..
சிரத்தையாய் தன்னை கடைசிப்பயணத்துக்கு அலங்கரித்து..

எத்தனை மணி நேர மனத் தயாரிப்பு..
யாருக்கு என்ன பாடம் சொல்லித்தர
அந்த நேரம் பார்த்த அரங்கேற்றம்?


மனதுக்குள் அம்மா என ஓசையின்றி அலறினேன்..
இந்தக்காட்சியைக் காணவும் வைத்தானே என கடவுளை ஏசினேன்..

என்ன தொழில் இது.. எப்படி தாங்கும் இதயம் என
சில நொடிகள் உடைந்தேன்...


பூவின் இக்கவிதை அந்தப்புண்ணைக் கீறிவிட்டது..

காவல்துறையின் வேண்டுகோளுக்கேற்ப
அரளிவிதைகளும், ஒட்டந்தழைகளும்
கயிறும், பூச்சிக்கொல்லியும்
வயிற்றுவலிக்கு மாற்று என சான்று தந்த
கரங்களால் இக்கவிதைக்கு விமர்சனம் எழுதும்போது
தொய்வும் வலியும் ஒருசேர தாக்குகிறது பூ..நிகழ்வுகளைக் கவிதையாக்கும் உன் பணி தொடர்க..
வாசகர் புரிவதில் சிரமம் இருந்தால் ஓடோடி வந்து
மேற்குறிப்பு தருக.. நன்றி..

poo
27-03-2007, 05:32 AM
அண்ணா.. ஒரு பார்வையாளனாய் நான் இருந்து பார்த்தபோது மனம் வெம்பினேன்.. உண்மையில் சந்தித்த உங்கள் நிலை...

இந்த கவிதை எழுதியதில் நான் மனம் பெருமைப்படவில்லை... இப்போது படித்தாலும் நெஞ்சம் கனக்கிறது..

நிச்சயமாக தொடர்வேன்...

கருத்து சொன்ன நண்பர்களுக்கு நன்றிகளை சொல்வதைவிடவும் நாளைய செய்தியில் இதுபோல மீண்டும் வந்துவிடாமல் இருக்க முடிந்ததை செய்யுங்கள்.. சுற்றத்தில் வட்டத்தில், உங்களில். என எங்கெல்லாம் இந்த அவலம் நிகழும் ஆபத்து இருக்கிறதோ அங்கெல்லாம் தடுக்க , தவிர்க்க முயலுங்கள் என வேண்டுகிறேன்!