PDA

View Full Version : ரகசியக் கவிதை.ஆதவா
22-03-2007, 03:13 AM
நான் ஒரு கவிஞை அல்ல.
பெற்றெடுத்து அதை
உலகத்தில் சிறப்பிக்க
ஆனால் கவிஞை ஆக்கப்படுவேன்
இருட்டில் நடக்கும் எண்ணங்களால்

என் நெஞ்சில் கருவொன்று
திணிக்க முயன்றான் ஒருவன்
எண்ணங்களை உடைத்து
துளிகளின் மேலமர்ந்து
கசங்கிய நிலையில்
விதைத்துப் போனான்
ஒரு கவிதை மட்டுமே விளையும் கருவை.

ஆள் அரவமின்றி காய்ந்து கிடக்கும்
ஒரு தாளில் அழுத்தமாய்
புள்ளியிட்டு சென்றுவிட்டான்.
என் கரங்களில் வலிமை இல்லை
வலி ஏற்பட்ட நேரத்தில்
என் கரங்களும் என்னிடமில்லை

என்னை அறியாமல்
திணிக்கப்பட்ட எண்ணக்கருவால்
ஊற்றெடுத்தது கவிதை ஒன்று
ஆம் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும்.
கரு என்ன என்பது அறியேன்
ஆனால் கவிதை நிச்சயம்.

யாவருக்கும் ஏற்பட்ட
அதே காலத்தில்
கவிதை பெற்றெடுத்தேன்
என் கூரைக்குக் கீழே
ஒழுகும் தண்ணீரில்
கவிதை கரைந்துவிடக்கூடும்
ஆக அது வைக்கப்பட வேண்டிய
இடத்திற்கு வைக்கப்படவேண்டும்

திணித்தவன் எங்கோ ஒரு இடத்தில்
பிரச்சாரம் செய்து கொண்டிருக்கக்கூடும்
கவிஞை ஆக்கப்பட்டவளாகிய நான்
இதை என்ன செய்ய என்று அறியாமல்...

கண்களில் பட்டது....
தவறுகளையும், கழிப்பவைகளையும்
மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளும் களம்.
என் கவிதையை ஏற்றுக் கொள்ளுமா?
இருக்கட்டும்.
ரகசியக் கவிதையான இது
அங்கேயே வைக்கப்படும்.
இழந்த சோகத்தையும்விட
என் நெஞ்சிரண்டும் வலித்தது
கவிதையை வளர்த்திவிட

என் ரகசியக் கவிதை
எனக்குத் திணிக்கப்பட்ட கவிதை
என்னை வலிக்கச் செய்த கவிதை
வேறொரு பெயரிலாவது
புகழ் பெறட்டும்...
என்னோடு இருந்து
மழையின் துளிகளுக்கும்
வெயிலின் தாக்கத்திற்கும்
தாள் கிழிந்து போக வேண்டாம்.

poo
22-03-2007, 05:06 AM
திரும்ப திரும்ப படித்தால் எண்ணங்கள் விரிந்து கொண்டே போகிறது... அந்த வகையில் ஆதவன் மீண்டும் வென்றிருக்கிறார்..

பல படித்தான கருத்துக்களோடு புரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு...

செல்விபிரகாஷ்
22-03-2007, 05:16 AM
கண்களில் பட்டது....
தவறுகளையும், கழிப்பவைகளையும்
மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளும் களம்.

இதில் நீங்கள் சுட்டிக் காட்டுவது எதனை என்று தெரிவிக்கவும். நான் குப்பைத்தொட்டி என்று அர்த்தம் கொண்டேன், அது சரி என்றால் விட்டுவிடுங்கள், தவறு என்றால் வருத்தம் இல்லாமல் விளக்கவும்.

அன்புடன் சகோதரி
செல்விபிரகாஷ்

ஆதவா
22-03-2007, 07:11 AM
நன்றிங்க பூ!@! உங்கள் கருத்தாலேயே என் வெற்றி கண்ணுக்குத் தெரிகிறது..

மிகச் சரிதான் செல்விபிரகாஸ் அவர்களே! கப் என்று பிடித்துக்கொண்டீர்கள்.. மிகவும் நன்றி...

ஷீ-நிசி
22-03-2007, 09:20 AM
நல்ல கவிதை...ஆதவா..

இப்படியான கவிதைகள் பெருகிட இதுவும் ஒரு காரணம்

இளசு
25-03-2007, 09:57 AM
தஞ்சைப்புதர், திருவண்ணாமலை கோவில் பிரகாரம்
இங்கே வீசப்பட்ட மழலைகள் பற்றிச் செய்தி கண்டு
பாரதியின் முரண்தொடரில் ஒரு குறும்பதிவிட்டேன்...

அது பார்வையாளனின் பதிவு..


ஆதவா தந்திருப்பது - படைப்பாளியின் பார்வை..
மழலைக்கவிதைகளின் மதிப்பான வெளியீட்டுக்கு
சமூக முன் அங்கீகரிப்பு- கல்யாண மேடை!

இவ்வுலகின் மிகப்பெரிய நிறுவனம் - திருமணம்!
எத்தனை குறைகள் இருப்பினும் இதுதான்
இன்னும் அருதிப்பெரும்பான்மை இருக்கும் கழகம்!


இதை மீறி பிரசுரிக்கப்படும் கவிதைகள்...
தொட்டி ஜெயாக்கள்... அனாதை இல்ல ரோஜாக்கள்!


பார்வையாளனாய் ஏனடி பாதகி எனப் பதறுவதும் உண்மை..
படைத்தவளின் சூழ்நிலை உணர்ந்து உருகுவதும் உண்மை!


மனிதன் மாறிவிட்டான்
மனிதன் மாறவில்லை....
என் இரு நிலைகளிலும் பாடி
நம்மை ஏற்க வைப்பது
கவிஞர்களின் தனித்தன்மை!


ஆதவனுக்கு என் அன்பு!

ஆதவா
25-03-2007, 10:47 AM
நன்றி அண்ணா!

ஒவ்வொரு வரியும் அர்த்தம் பொதிய எழுதுவது எப்படி என்று எனக்கு சொல்லிக் கொடுங்கள். அதிலும் என் மன உணர்வுகளை அப்படியே உள்வாங்கி சொல்வதுதான் எனக்கு இன்னும் புரியாமல் இருக்கிறது.... கவிஞனின் மனதுக்குள்ளேயே சென்று விடுகிறீர்கள்..

நன்றி அண்ணா

விகடன்
25-03-2007, 05:56 PM
எப்படி ஆதவா இந்தமாதிரியெல்லாம் எழுதுகிறீர்கள்.

சாதாரணமாக எத்தனை நாழிகைகள் இதற்கு செலவிடுவீர்கள்?

ஆதவா
25-03-2007, 06:00 PM
எப்படி ஆதவா இந்தமாதிரியெல்லாம் எழுதுகிறீர்கள்.

சாதாரணமாக எத்தனை நாழிகைகள் இதற்கு செலவிடுவீர்கள்?


நன்றிங்க ஜாவா!!!
சுமாராக அரைமணிநேரம்.... அதற்கு மேலே எனக்கு பொறுமை இருக்காது... கிழித்துவிடுவேன்... மணிக் கணக்கில் எழுத எனக்கு எப்போதுமே பிடிப்பதில்லை..........

இதைவிட கொடுமை... கொட்டினால் அடைமழை.. இல்லையென்றால் பாலைவனம்...

ஒரேநேரத்தில் இரண்டு வகையான கவிதையும் எழுதுவேன்......

சரிசரி ரொம்ப தம்பட்டம் போடக்கூடாது :D

:natur008: