PDA

View Full Version : சொல் ஒரு சொல்gragavan
21-03-2007, 12:48 PM
இந்தத் தொடர்....பழைய தமிழ்ச் சொற்களை அறிமுகப் படுத்துவதற்கு. குறிப்பிட்ட நாளில் வரும் என்றில்லை. நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் வரும். நகைச்சுவையாக சொல்லும் முயற்சி.

செரு

கவுண்டமணி அன்று பள்ளிக்கூடத்திற்கு ஆய்வாளராக வந்திருக்கிறார். தலைமை ஆசிரியர் உசிலைமணி அவரை வரவேற்று ஒவ்வொரு வகுப்பாக அழைத்துச் செல்கையில் செந்தில் தமிழ்ப்பாடம் எடுக்கும் வகுப்பிற்குள் நுழைகிறார்கள்.

"ஆய்வாளர் ஐயா! இவர்தான் தமிழாசிரியர் கொண்டல்நாதர். இவர் தமிழ்ப் பாடம் எடுத்தார்னா நூத்துக்கு நூறுதான். இதுவரைக்கும் ஒருத்தர் கூட பெயில் ஆனதில்லை. ஹிஹ்ஹிஹ்ஹி"

கவுண்டர் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். "ஓ! தமிழ் ஆசிரியர்! (செந்திலோடு கை குலுக்குகிறார்.) கொண்டல்! பேரே நல்ல தமிழ்ப் பேர். ஒங்களப் பத்தி தலைமை ஆசிரியர் ரொம்ப நல்லபடி சொல்லீருக்காரு. அதுனால......ஒங்கள நான் பாராட்டுறேன்."

செந்தில் முகமெல்லாம் புன்னகையுடன். "நன்றி ஐயா! நான் உ.வே.சா கிட்ட தமிழ் படிச்சவன். அதுனாலதான் இப்பிடி. என்னோட பெருமைய நானே சொல்லக் கூடாது. இருந்தாலும்....."

கவுண்டர் இன்னும் வியக்கிறார். "உ.வே.சா? You mean தமிழ்த் தாத்தா? நீங்க ரொம்பப் பெரியவர். சரி.இன்னைக்கு என்ன பாடம்? எதுவும் கேள்வி கேக்கலாமா?"

"நீங்க கேளுங்க ஐயா. பசங்க நல்லா பதில் சொல்வாங்க. இன்னைக்குக் காளமேகப் பாடல்தான் பாடம்." பெருமையோடு சொல்கிறார்.

"ஓ! காளமேகம்!" கவுண்டமணி ஒரு மாணவரை எழுப்பி, "தம்பி! இன்னைக்குச் சொல்லிக் கொடுத்த பாட்டு ஒனக்குத் தெரியுமா? எங்க ஒரு வரி சொல்லு."

"செருப்புக்கு வீரரைச் சென்றுழக்கும் வேலன்-னு தொடங்குற பாடல் ஐயா."

"செருப்பு? என்ன செய்யுள் இது?" செந்திலை நோக்கி. "ஐயா, தமிழ்க் கடலே. இந்த வரி சரிதானா? என்ன பொருள்னு சொல்லுங்களேன். பையன் எதோ செருப்பு பருப்புன்னு சொல்றானே?"

செந்தில் மிகப் பெருமையுடன். "சொல்றேன் ஐயா. சொல்றேன். செருப்புக்கு வீரரைன்னா கல்யாண வீட்டுல செருப்பு திருடுற வீரன் ஒழக்கு மாதிரி இருந்தாலும்னு பொருள்."

வியப்படைகிறார் கவுண்டர். "என்ன கொடுமை சரவணன் இது? காளமேகப் புலவர் காலத்துலயே கல்யாண வீட்டுல செருப்பு திருடீருக்காங்களா? சேச்சே! நம்ப முடியலையே. நீங்க உ.வே.சா கிட்டயெல்லாம் படிச்சிருக்கீங்க. சரியாத்தான் சொல்வீங்க.." தலையை ஆட்டி அலுத்துக் கொள்கிறார்.

"இல்லை ஐயா. அந்தப் பாட்டுக்குப் பொருள் வேற." பாடலைச் சொன்ன மாணவன் படக்கென்று சொல்கிறான்.

கவுண்டமணி பொங்கி எழுகிறார். "என்னது பொருள் வேறயா? இவர யாருன்னு நெனச்ச? தமிழ்ப் பெரியதாத்தா மீனாட்சி சுந்தரம் பிள்ளை கிட்ட பாடம் படிச்ச தமிழ்த்தாத்தா உ.வே.சா கிட்ட பாடம் படிச்சவரு. பாரதியார் பாரதிதானோட விவாதம் செஞ்சு தமிழ் இலக்கணத்துக்கெல்லாம் சிக்கெடுத்தவரு. ஆத்திச்சூடி எழுதும் போது...கால நீட்டி உக்கார்ரதால ஔவையாருக்கு விழுந்த சுளுக்கத் தமிழ்ப் பாட்டுப் பாடியே சரி செஞ்சவரு. நீ எட்டாப்பு படிக்கிற சின்னப் பையன். ஒனக்கென்ன தெரியும். எங்க? தெரிஞ்சதச் சொல்லு பாக்கலாம்?"

"அதாவதுங்க..செருன்னா போர்க்களம். செருப்புக்கு அப்படீன்னா செருவுக்குள்ள புகுகின்றன்னு பொருள். செருப்புக்கு வீரரைன்னு சொன்னா போர்க்களத்துக்குள்ள புகுகின்ற வீரன்னு பொருள். அப்படிப்பட்ட வீரனைச் சென்று உழக்கும் வேலன். அதாவது முருகப் பெருமானோட போருக்குப் போகிற வீரர்களை வெல்லும் முருகன் அப்படீன்னு பொருள். அதுவுமில்லாம முழுப்பாட்டையும் சொல்றேன் கேளுங்க.
செருப்புக்கு வீரரைச் சென்றுழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனைப் புல்ல
மருப்புக்குத் தண்டேன் பொழிந்த
திருத்தாமரை மேல் வீற்றிருக்கும் வண்டே விளக்குமாறே
காளமேகத்திடம் செருப்பு என்று தொடங்கி விளக்குமாறு என்று முடிக்குமாறு முருகனைப் பற்றிப் பாடச் சொன்ன பொழுது பாடிய பாடல்."

யோசிக்கிறார் கவுண்டமணி. "சரி. ஆனா விளக்குமாறுன்னு வருதே? அதுக்கு என்ன பொருள்?"

"அதாவது திருத்தாமரை மேல் வீற்றிருக்கும் வண்டை விளக்குமாறு கேட்கிறார்."

"வண்டு கிட்ட விளக்குமாறு ஏன் கேக்குறாரு? கடைல கிடைல வாங்குறது."

"விளக்குமாறுன்னா விளக்கிச் சொல்லுமாறு கேட்பது. இதுதாங்க இந்தப் பாட்டுக்கு உண்மையான பொருள்"

செந்தில் சிரித்துக்கொண்டே, "பாத்தீங்களா ஐயா. பையன் எப்படி பதில் சொன்னான்னு. அவன் வாயால வரனும்னுதான் நான் வேணுக்குன்னே தப்பாச் சொன்னேன். ஹி ஹி ஹி."

கவுண்டமணிக்குப் புரிந்து போகிறது. கிண்டலோடு "ஓ அப்படீங்களா ஐயா? நீங்க சொன்னா சரிதாங்க ஐயா. நீங்க எப்பேர்ப்பட்டவர். நல்லவர். வல்லவர். தமிழ் மொழியையே செம்புத் தண்ணீல கல்ல்ல்லக்கிக் குடிச்சவர். இப்பப் பாருங்க. இந்தப் பையன நான் எப்படி மாட்டுறேன்னு." அந்த மாணவனைப் பார்த்து, "தம்பி. இந்தப் பாட்டுக்கு நல்லா விளக்கம் சொல்லீட்ட. அது சரீன்னு ஒங்க தமிழ் ஆசிரியரே ஒத்துக்கிட்டாரு. அதுவுமில்லாம இவரு பாடம் எடுத்தா வகுப்புல (ஒவ்வொரு மாணவனாகக் காட்டி) நீதான் பாரதியாரு. அவந்தான் பாரதிதாசன். இந்தப் பையந்தான் இளங்கோவடிகள். அந்தப் பொண்ணுதான் கோதை ஆண்டாள். இந்தப் பொண்ணுதான் சௌந்தரா கைலாசம். ஆகையால இன்னொரு கேள்வி. செருன்னா போர்க்களம்னு சொன்ன. சரி. இந்தச் செரு வர்ர வேறொரு செய்யுள் சொல்லு பாக்கலாம்."

"சொல்றேன் ஐயா. முருகனைப் பத்திச் சொல்லும் போது செருவில் ஒருவன்னு நக்கீரர் சொல்லீருக்காரு ஐயா."

"ஓ! நக்கீரர். அதாவது திருவிளையாடல் படத்துல நடிகர் திலகம் கூட நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றமேன்னு சண்டை போட்டவரு." செந்திலை நோக்கி, "தமிழ் ஐயா, இந்த வரியைப் பத்தி நீங்க என்ன சொல்றீங்க?"

செந்தில் லேசாகக் கனைத்துக் கொண்டு, "ஐயா, இந்தப் பாட்டில் பிழை இருக்கிறது."

கவுண்டர் வியப்பது போல நடித்து ஒரு கையைத் தூக்கிக் கொண்டு சொல்கிறார். "ஓ! பரமசிவம் பாட்டுல பிழை இருக்குன்னு சொன்ன நக்கீரர் பாட்டுலயே நீங்க பிழை கண்டு பிடிச்சிருக்கீங்க. நீங்க ரொம்பப் பெரியவராத்தான் இருக்கனும். உ.வே.சா கிட்ட படிச்சிருக்கீங்களே. அப்ப ஒங்களுக்கு கி.வா.ஜா, வாரியார் எல்லாரையும்...."

"ஓ! நல்லாத் தெரியுமே? வாரியாருக்கு வெண்பா எழுதக் கத்துக்குடுத்ததே நாந்தான். கி.வா.ஜாவுக்குச் சிலேடையா பேசச் சொல்லிக் குடுத்ததே நாந்தான். அது மட்டுமில்ல.....கவமணி, தமிழ்த்தாய் வாழ்த்து எழுதுன மனோண்மணீயம் சுந்தரம் பிள்ளை, உவமைக் கவிஞர் சுரதா....ஏன் இப்ப இருக்குற அப்துல்ரகுமான் வரைக்கும் என் கிட்ட படிச்சவங்கதான். இன்னொன்னு சொல்றேன். மெல்லிசை மன்னர் கிட்டப் பேசி தமிழ்த் தாய் வாழ்த்துப் பாட டி.எம்.சௌந்தரராஜனுக்கும் பி.சுசீலாவுக்கும் வாய்ப்பு வாங்கிக் குடுத்ததே நாந்தான்."

செந்திலின் தோளிக் கை வைக்கிறார் கவுண்டமணி. "ஆமாமா! நீங்க கத்துக்குடுத்துதான் அவங்க ரொம்ப முன்னேறிட்டாங்க. ஆனா பாருங்க. நீங்க மட்டும் ஆசிரியராவே இன்னமும் இருக்கீங்க. சரி...அதென்னவோ பிழைன்னு சொன்னீங்களே. அது என்ன?"

"செருவில் ஒருவ அப்படீன்னு பையன் சொன்னான். அது தப்பு. செருகு வில் உருவன்னு வந்திருக்கனும். நக்கீரர் ஓலைல எழுதும் போது தப்பா எழுதீட்டாரு."

"ஓ! நக்கீரர் கோழி கிறுக்குறாப்புல கிறுக்கி தப்பா எழுதீட்டாருன்னு சொல்றீங்க. சரி. இருக்கட்டும்." மாணவனை நோக்கி, "தம்பி,இந்த வரிக்கு நீ விளக்கம் சொல்லு."

"செருவில் ஒருவ அப்படீன்னா போர்க்களத்தில் தனியாக நிற்பவன்னு பொருள். அதாவது இறைவனை எதிர்த்து யாரும் போரிட முடியாதுங்குறதுதான் உட்பொருள். தமிழ் ஐயா சொல்றது போல செருகிய வில் உருவறது கிடையாது."

செந்திலின் கழுத்தில் இருக்கும் துண்டைப் பிடித்து இழுக்கிறார். "ஐயா. தமிழ் ஆசிரியரே. உ.வே.சா இருந்தது எப்ப? நீங்க பொறந்தது எப்ப? எங்கிட்டயே காது குத்துறீங்களே. செருன்னு ஒரு சொல். அதுக்குப் பொருள் தெரியலை. ஒங்களப் பத்தித் தலைமை ஆசிரியர் ரொம்ம்ம்ம்பப் புகழ்றாரு. அதெப்படி ஒங்க வகுப்புல மட்டும் எல்லாரும் நல்ல மதிப்பெண் வாங்குறாங்க?"

மாணவன் குட்டை உடைக்கிறான். "ஐயா. இவரு எப்பவும் ஒழுங்காவே பாடம் சொல்லித்தர மாட்டாரு. பாதி நேரம் வகுப்புல தூக்கம்தான். இன்னைக்கு நீங்க இருக்கிறதால தூங்காம இருக்காரு. இவரு சொல்லித்தர மாட்டாருன்னு தெரிஞ்சதால நாங்களே படிச்சிக்கிறோம். அதனாலதான் எல்லாருக்கும் நல்ல மதிப்பெண் கிடைக்குது."

"அப்படிச் சொல்லுடா தம்பி." செந்திலைப் பார்த்து, "இனிமே இந்த வகுப்புல நீதான் மாணவன். (மேசையைக் காட்டி) இனிமே இங்க நிக்கக் கூடாது. (மாணவர்கள் அமர்ந்திருக்கும் இடத்தைக் காட்டி) அங்கதான் உக்காரனும். புரிஞ்சதா?"

போலியான பணிவோடு, "புரிஞ்சது ஐயா."

"ரொம்ப நல்லது. எங்க செருன்னா என்னன்னு சொல்லு பாக்கலாம்."

"செருன்னா போர்க்களம் ஐயா."

கிண்டல் சிரிப்போடு. "இது..இது...இது நல்ல பிள்ளைக்கு அடையாளம். இப்பிடிப் பொருள் சொல்றத விட்டுட்டு செருப்புக்கு அலையக் கூடாது.புரிஞ்சதா?"

"புரிஞ்சது ஐயா."

"நல்லது." மாணவர்களை நோக்கி, "எங்க ஒவ்வொருத்தரும் வேறெந்த நூல்ல செருவைப் பத்திப் படிச்சிருக்கீங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம்."

அன்புடன்,
கோ.இராகவன்

மனோஜ்
21-03-2007, 02:58 PM
அருமை தமிழ்சொல்லை விளக்கிய விதம் நகைசுவை உனர்வேடு

gragavan
21-03-2007, 04:54 PM
நன்றி மனோஜ். உங்கள் பாராட்டு ஊக்கமளிக்கிறது.

leomohan
21-03-2007, 05:12 PM
நல்ல பயனுள்ள தொடரை நகைச்சுவையுடன் விளக்கியுள்ளீர்கள். மேலும் எங்களுக்கு புதிய வார்த்தைகளை (பழைய வார்த்தைகள்) தாருங்கள். நன்றி.

பென்ஸ்
21-03-2007, 05:26 PM
ராகவன்....
உங்க பங்களிப்பு கொஞ்சம் குறிந்துள்ள மாதிரி தெரிவதால்.... சிறுக்கதை, பயணகட்டுரை பகுதிகள், விவாத பகுதிகள் எல்லாம் தூங்குது.... எழுப்பிவிடுங்க பிளீஸ்....
ராகவா, இது இலக்கிய பதிவில் இருந்ததால் நானும் எதோ படத்தில் உள்லதோ என்று நினைதுட்டேன்.... அது எப்படி ராகவனா கோக்கா???

pradeepkt
22-03-2007, 05:37 AM
ராகவன்....
உங்க பங்களிப்பு கொஞ்சம் குறிந்துள்ள மாதிரி தெரிவதால்.... சிறுக்கதை, பயணகட்டுரை பகுதிகள், விவாத பகுதிகள் எல்லாம் தூங்குது.... எழுப்பிவிடுங்க பிளீஸ்....
ராகவா, இது இலக்கிய பதிவில் இருந்ததால் நானும் எதோ படத்தில் உள்லதோ என்று நினைதுட்டேன்.... அது எப்படி ராகவனா கோக்கா???
கோக்கும் இல்லை பெப்சியும் இல்லை.
கொக்கு!!! :)
ராகவா புத்தம் புது முயற்சியாக இருக்கிறது இது!
புதுப்புதுச் சொற்களை அனைவருக்கும் எளிதாக விளக்கும் இத்திரி நிஜமாகவே பயனுள்ளது... வாழ்த்துகள்.

poo
22-03-2007, 05:48 AM
முதலில் கையைக் கொடுங்க ராகவன்... (கடைசியில திருப்பிக் கொடுத்து விடறேங்க...)

குழந்தைகளுக்கு இனிப்பு தடவி மருந்து கொடுக்கும் முயற்சி இது... நிச்சயமாக வெற்றிபெறும்.. முதல் பதிவு என்பதால் ஒரு சொல்லல மட்டும் கையாண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.. காட்சி ஓட்டம் கண்முன்னே வந்துவிடுகிறது.. நிறைய சொற்களை போகப்போக பயன்படுத்துங்கள்...

பாரதி
22-03-2007, 06:10 PM
அன்பு இராகவன்,

இந்தப்பதிவு இனிய அதிர்ச்சியைத்தந்தது. மிகவும் பயனுள்ளதாகவும் அமையும் என்றே நம்புகிறேன். நகைச்சுவை மேலோங்கி, அது மட்டுமே நினைவில் நின்று விடாமல், சொல்ல வந்த கருத்து மன்ற உறவுகளின் மனதில் இடம்பெற வேண்டும் என்று விரும்பி, இப்பதிவு முடிவுறா பயணம் காண வாழ்த்துகிறேன்.

mukilan
22-03-2007, 06:38 PM
அருமை ராகவன். தலையாலங்காணத்துச் "செரு" வென்ற பாண்டியன். ஒரே வார்த்தைக்கு இவ்வளவு நேரம் செலவிட்டீங்கண்ணா நாங்க எபப்டி நிறைய வார்த்தைகள் கற்றுக் கொள்வதாம்?

ஓவியா
22-03-2007, 08:59 PM
நன்றி ராகவன்..

மிகவும் பயனுள்ள பதிவு,

முக்கியமாக எனக்கு இந்த வார்த்தையே தெரியது.
இன்று தான் கற்றேன். நகைச்சுவையும் பலே.

இந்த பதிவால் உலகத்தில் எங்கெங்கோ உள்ள தமிழ் மக்களுக்கு இலவசமாக தமிழ் கற்று தருகின்றீர்கள்.....

ம்ம்ம் எத்தனை முறைதான் சாமி உங்கள பாராட்டுவது.......
இந்த தபா அத செய்யலே...மாறாக

மிக்க நன்று.

இளசு
14-04-2007, 12:47 PM
சுட்டி தந்த ஓவியாவுக்கு நன்றி..

ராகவனின் தமிழறிவு, நகைச்சுவை, எள்ளல் அத்தனையும் தெளித்த
சுவையான பதிவு.. தொடரட்டும்..மாணவன் குட்டை உடைக்கிறான். "ஐயா. இவரு எப்பவும் ஒழுங்காவே பாடம் சொல்லித்தர மாட்டாரு. பாதி நேரம் வகுப்புல தூக்கம்தான். இன்னைக்கு நீங்க இருக்கிறதால தூங்காம இருக்காரு.

இதையொட்டி நான் அறிந்த நகைச்சுவை ஒன்று -

ஆய்வாளர் வரும் நேரம் ஆசிரியர் தூக்கத்தில்..
சட்டென விழித்து ஆசிரியர் வகுப்பைப் பார்த்துச் சொன்னார்:
''மாணவர்களே -- இப்படித்தான் கும்பகர்ணன் தூங்கினான்..''

ஓவியா
15-04-2007, 05:08 PM
இதையொட்டி நான் அறிந்த நகைச்சுவை ஒன்று -

ஆய்வாளர் வரும் நேரம் ஆசிரியர் தூக்கத்தில்..
சட்டென விழித்து ஆசிரியர் வகுப்பைப் பார்த்துச் சொன்னார்:
''மாணவர்களே -- இப்படித்தான் கும்பகர்ணன் தூங்கினான்..''

அந்த ஆசிரியர் பெயர் ஹி ஹி ஹி

ரசித்தேன். நன்றி இளசு