PDA

View Full Version : முகமூடிகள்!!



poo
21-03-2007, 09:48 AM
புகைவண்டிப் பெருமூச்சை
விஞ்சி வெளிவந்தன
நிம்மதி மூச்சுக்கள்..

கடைவிரித்திருந்த
நடைபாதையில்
எனை விற்றுக்கொள்ள
இறங்கினேன்..
அடியெடுக்கும் முன்
வலி உணர்ந்தேன்..
தோள் பிடித்து
அழுத்தி நிறுத்தியது
ஒரு கரம்.
தடையிட்டேன் - மரத்துப்போன
கால்கள் மட்டுமே
விரும்பியிருக்கக் கூடுமதை.

அவன்..
இறந்துபோன பயணத்தின்போது
என் மிதியடி மீதில்
தன் கைவிரல் ரேகையை
நகலெடுத்துக் கொண்டிருந்தவன்.
பரிதாபப் பார்வைகளில்
பிழைத்து..
ஜன்னலோரப் பிச்சைகளுக்கு
வியப்பளித்தவன்..
என் கணிப்புக் கனைகளை
அவன்மேல் தாங்கிக்கொள்ள
அருகதையில்லா திருந்தவன்..

என்னை யேன்
தடுத்து நிறுத்தினான்...

எனக்கான
அவனது பார்வை
என்னவோ செய்கிறதோ....
இப்போதுதான் கவனிக்கிறேனோ..

முகத்தைக் கோணலாக்கி
பல் இளிக்கும்விதம்
கூசச் செய்கிறதே...

ஏன்.. ஏன்..
இப்படி வெறிக்கிறான்..

கழிவறை ஓரமாய்
நான் விட்டுவந்த பையை
கண்டுப்பிடித்திருப்பானோ...

வழிநெடுக
நான் கழட்டிவைத்த
முகமூடிகளை
இத்தனைபேர் முகத்தின்முன்
அவிழ்த்துக்
கொட்டிவிடுவானோ.....

அலைகழிந்தன
என் மனதோடு கண்களும்..

ஏய்..விட்றா..
நீ போ சார்.. அது ஒரு பைத்தியம் -
விடுவித்த வெள்ளரிப் பிஞ்சு
விற்றுத் தீர்த்திருந்தாள்.
அவன்
ஓடி மறைந்திருந்தான்..
மெதுவாக அவளிடம்
பேச்சுக் கொடுத்தேன்...
அடுத்த முகமூடியொன்றை
அதற்கும்முன் அணிந்து கொண்டேன்!!

ஷீ-நிசி
21-03-2007, 10:40 AM
மிக அருமையான கவிதை பூ.. மூச்சுக்கூட விடமுடியாத பெருங்கூட்டமான இரயில் பயணத்திலிருந்து நடைபாதையில் இறங்கும் நேரத்தில் (நடைபாதையிலிருந்து இறங்கி நிற்பதைக்கூட கவிஞர் தன்னை அவன் விற்றுக்கொள்வதாய் பார்த்திருக்கிறார்.. அர்த்தங்கள் ஆயிரம்) ஒரு யாசகம் கேட்பவன், மனநிலை பாதிக்கபட்டவன், அங்கங்கே அலைந்து திரியும் நிலையில் இருக்ககின்ற மனிதன் திடீரென்று நம் தோள்மீது கைவைத்திட்டால் ஏற்படும் நிலை.. சற்றுமுன் என் காலணிகளை கைகளினால் தொட்டுக்கொண்டிருந்தவன், அப்படி இப்படி என்று அவனை பார்த்துக்கொண்டு யோசிக்கக் கூட இவன் மனம் விரும்பவில்லை. எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்களே! என்று கணநிமிடத்தில் இவன் மனதில் ஆயிரம் கேள்வி கணைகள் வந்துக்கொண்டிருந்த நேரத்தில் வெள்ளர்பிஞ்சு விற்கும் ஒருத்தி அவனைக் காப்பாற்றினாள். இத்தனை நேரம் அந்த மனிதனை பிச்சைக்காரனாய், திருடனாய், கோமாளியாய் எப்படி எப்படியெல்லாமோ, தன் தோளை தொட்டுவிட்டான் என்ற காரணத்திற்காய் எண்ணின மனம், அடுத்த முகமூடியை மாற்றிக்கொண்டு, என்னவோ அவன் மீது அக்கறையாய் விசாரிப்பதாய் அவளிடம் பேச ஆரம்பித்தான் என்று கவிதை முடிந்திருப்பது மிக அழகு..

படிக்கும்போதே காட்சிகள் கண்முன் விரிந்ததால், விமர்சனமும் அப்படியே விரிந்துவிட்டது.. வாழ்த்துக்கள் பூ..

poo
21-03-2007, 10:46 AM
உங்கள் பார்வை இன்னமும் அழகு ஷீ-நிசி.....

இளசு
25-03-2007, 07:54 PM
பூவின் வரிகளும்
ஷீ-நிசியின் விமர்சனமும்..

இரண்டுமே மிக அருமை..

வாழ்த்துகள் இருவருக்கும்!

poo
27-03-2007, 05:23 AM
நன்றி அண்ணா...

உங்களிடமிருந்து இன்னும் கருத்துக்கள் வருமென நினைத்தேன்.. !!.

ஷி-யின் பார்வை--- நாயகனை நேர்மறையாய்..

என் கவிதையின் பார்வையில் நாயகன் நல்லவனாய் சித்தரித்து எழுதப்படவில்லை..

ஷீ- கவிதையில் முக்கிய வரியான அவனது சுயரூபத்தை சுட்டும் வரிகளை தவறவிட்டு விட்டாரோ?!..

ஏன்.. ஏன்..
இப்படி வெறிக்கிறான்..

கழிவறை ஓரமாய்
நான் விட்டுவந்த பையை
கண்டுப்பிடித்திருப்பானோ...

வழிநெடுக
நான் கழட்டிவைத்த
முகமூடிகளை
இத்தனைபேர் முகத்தின்முன்
அவிழ்த்துக்
கொட்டிவிடுவானோ.....

அலைகழிந்தன
என் மனதோடு கண்களும்..




நன்றிகள் ஷீ. (உங்கள் பார்வை இன்னமும் அழகென சொல்லிவிட்டேன் முன்பே... )

மனோஜ்
27-03-2007, 02:14 PM
ஓ கவிதை அருமை ரயில் பயணமாய் இனிக்கிறது நன்றி பூ அவர்களே

இளசு
27-03-2007, 09:37 PM
நன்றி அண்ணா...

உங்களிடமிருந்து இன்னும் கருத்துக்கள் வருமென நினைத்தேன்.. !!.

)

இங்கே ஷீ-நிசியின் விமர்சனம் மீறி ஒன்றும் தோன்றவில்லை பூ..

பென்ஸ், ஆதவன், ஷீ-நிசி போன்றவர்கள் விமர்சனம் தந்தால்
வியந்து மலைத்துப் போகத்தான் முடிகிறது... அத்தனை அசத்துகிறார்கள் நம் நண்பர்கள்!