PDA

View Full Version : கரகக்கிளி!



poo
19-03-2007, 10:11 AM
மயில்படம் போட்ட
திரையொன்று இழுத்துக்
கட்டப்பட்டிருந்தது...

விழுதுகளில் வெளிச்சம்
களைகட்டியது திருவிழா..

கூட்ட மிகுதியில்
நசுங்கின வண்ணபலூன்கள்..

ஓரிடத்தில் நிற்கவில்லை
குடை ராட்டினக்காரன்.

ஊர்ப்பகை மறந்தன
உள்ளப் பரிமாற்றங்கள்
ஊதுவதற்கு ஆயத்தமானான்
நாயனக்காரன்..

சில்மிஷங்களை
ரசித்துக் கொண்டிருந்தான்
சிரித்து மறக்கும் கடைக்காரன்.

ஆங்காங்கே சுயம்வரங்கள்...
ஆற்றங்கரை யோரத்தோடு
முடிந்துவிடும் அவற்றில் சில..

உடுக்கைக்காரனிடம்
உண்மை கேட்ட
அத்துணை பேர் முகத்திலும்
பரவசம்... வீதியுலா கிளம்பிவிட்ட
அம்மன்.

காணாமல் போயிருந்தது
கட்டியிருந்த திரை.

ஒப்பனை யொன்று
முடிந்த அடையாளங்கள்

கேட்பாரற்றுக் கிடந்தது
காற்று வெளியேறிய
ஒரு பச்சைக்கிளி பொம்மை
யாரோ
மிதித்துவிட்டிருக்கிறார்கள்..

ஊதிச் சுத்தப்படுத்த..
ஊர்கோடியில்தான் ஆரம்பம்..

கைகொட்டி ஆர்பரித்தது
கூட்டம்.. ஆசுவாசமானேன்.

பிடித்திழுத்த முரட்டுக்கரம்
விலக்கினேன் மூச்சுக்காற்றையும்.

மத்தளச்சத்தம்
மாற மாற.. விசில் சத்தம்.

கையிலிருந்த
கிளி காத்திருப்போடு..

நெருங்கி நீட்டினேன்..
உற்று நோக்கினாள்..
மூடித் திறந்தாள்..
இமைகளுக்கடியில் கறை.

ஒற்றியெடுத்தாள்..
சுற்றியொரு பார்வை வீசினாள்..
கூடவே
அந்த பொம்மையையும்.

விசில் சத்தம்
வீதி மாறியிருந்தது..
வீசியெறியப்பட்டக் கிளி
காலி உறைகளுக்கிடையில்
மறைந்து விட்டிருந்தது!!..

ஷீ-நிசி
19-03-2007, 10:26 AM
பூ! கவிதை புரிந்துக்கொள்ள கடினமாக உள்ளதே... இப்போது விளக்கவேண்டாம்.. நண்பர்களுக்கு என்னென்ன கற்பனைகள் தோன்றுகிறது என்று பார்க்கலாம்..

ஆதவா
19-03-2007, 06:18 PM
கவிதை அருமை பூ! சிறு நிகழ்வை படமாக்கி எழுதியிருக்கீர்கள். கிராமத்தில் நிகழும் திருவிழாக்கூட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட (விசிலடங்கிய?) ஒரு பொம்மையை அவள் வீசியெறிய அது தேமேயெனக் கிடப்பதாய் கவிதை செல்லுகிறது.. எனக்கு புரிந்தது அவ்வளவுதான்.. ஆனால் இதன்மூலம் என்ன கருத்து சொல்ல வருகிறீர்கள்? காதலை தவிர்க்கும் கருத்தா? இல்லை வேறா?

அறிஞர்
19-03-2007, 06:28 PM
திருவிழாக்கூட்டத்தில் நடக்கும் நிகழ்வுகள்...

தூக்கியெறியப்பட்ட பொம்மையை அவளிடம் கொடுத்து... அவளின் பார்வைக்கு ஏங்குபவனின் வரிகள்....

மன்மதன்
19-03-2007, 07:09 PM
பூ விளக்கிய பின் புரிந்துகொள்வேன். ஆனாலும் கவிதை பெரிய பொருள் அடங்கிய மாதிரி தெரிகிறது..

poo
20-03-2007, 10:04 AM
இதில் விளக்குவதற்கு ஒன்றுமே இல்லையே மன்மதன்....

poo
20-03-2007, 10:15 AM
நண்பர்கள் கொஞ்சம் எனக்காக பொறுமையாக படிக்கக் கோருகிறேன்...

அமரன்
20-03-2007, 10:19 AM
நெருங்கி நீட்டினேன்..
உற்று நோக்கினாள்..
மூடித் திறந்தாள்..
இமைகளுக்கடியில் கறை.



கருத்தாழம்மிக்க என்னைக்கவர்ந்த வரிகள். கிராமத்து திருவிழாவைக் கண்முன் நிறுத்திய கவிதை.

இளசு
20-03-2007, 11:37 PM
பூவுக்கு வேண்டுகோள்..

காலப்பயணம் கவிதைக்கு உன் ஏற்புரை எங்கே காணோம்?

பென்ஸ்
21-03-2007, 04:59 AM
பூ...
யாராவது விளக்கமாட்டார்களா, அப்புறம் விமர்சிக்கலாமே என்று விட்டு சென்றவர்களில் நானும் ஒருவன்...

இளசுவும் நாசுக்க சொல்லிவிட்டு விட்டு போன பிறகு என் புரிதலை எழுதலாம் என்று விட்டு விட்டேன்...

திருவிழாவின் போது நடுக்கும் கூத்துகளுக்கு கவிதைவரிகள் கொடுக்கும் போது புரிவது கடினமே, அனைவரும் இந்த திருவிழாக்களை அது ஒன்றில் நாம் பாத்திருக்கவேண்டும்... இந்த மாதிரி கரக நிகழ்ச்சிகள் எல்லாம் நான் கல்லூரி படிக்கும் போது தான் பாத்திருக்கிறேன்...
கரக பெண்கள் இருக்கும் இடத்தை மோப்பம் பிடித்து சுற்றிவரும் எச்சில் நாய் கூட்டம் இல்லாத ஊர் எது???
திரைமறைவில் ஆடை மாற்றுவதை கூட எதோ கலை நிகழ்ச்சியாக ஒளித்து பார்க்க செல்லும் இவர்கள் மாறுவதும் இல்லை..
அதில் எவனோ ஒருவன் மிதித்து சென்ற பிலாஸ்டிக் கரககிளியை எடுத்து கரககாரிக்கு கொடுக்கும் குழந்தையாய் காட்டி இருக்கிறிர்கள்...

அவளுக்கு இது சகஜம் தானே, விட்டேறிந்து விடுவாள், பாவம் இந்த குழந்தை இவனுக்கு என்ன தெரியும்.
பூ... இது நான் அர்த்தபடுத்தி கொண்டது.... தவறேனில் விளக்கலாமா???

poo
21-03-2007, 05:12 AM
முதலில் நண்பர்கள் ஷீ,ஆதவன்,மன்மதன்,அறிஞர்,நக்கீரன், பென்ஸ் மற்றும் அண்ணன் அனைவருக்கும் என் நன்றிகளோடு...

பென்ஸ்.. சரியாக புரிந்து இருக்கிறீர்கள்.. நன்றிகள்..


(அண்ணா.. காலப்பயணம் நிறைய கவிதைகளினால் பக்கம் பின்னோக்க.... கூடவே வேலைப்பளுவில் கவனிக்காமல் விட்டுவிட்டேன்.. மன்னிக்கவும்.. அங்கேதான் முதலில் போனேன்.. அதற்குள் நம்ம பென்ஸ் இங்கே இழுத்துவிட்டார்.. இது முடித்து அங்கு வருகிறேன் அண்ணா.. )

பென்ஸ்
21-03-2007, 05:16 AM
ஐ சக்ஸ்சஸ்.. சக்ஸ்சஸ்....
கவிதையை சரியாக வாசித்துவிட்டேன்.....

poo
21-03-2007, 05:30 AM
இப்போதெல்லாம் கரகாட்டம் சாராய உறைகளுக்கு இடையில் நசுங்கிவிட்டது.. மத்தளச்சத்தங்கள் ஆபாச நடனங்களுக்குத்தான் வாசிக்கின்றன.. தலையில் இருக்கும் கரகமோ.. அதில் காணாமல் போன கிளியோ கவனிக்கப்படாத அவலத்தை சொன்னேன்..

கரகம் ஆடும் பெண்கள் பாக்கெட் சாரயங்களை குடித்துவிட்டு ஆட வேண்டியிருக்கிறது.. அப்போதுதான் காதுகூசும் வர்ணணைகள்.. உடல்கூசும் பார்வைகளை தாங்க முடியும்.. ரெக்கார்டு டான்ஸுகளே தேவலாம் போலிருக்கிறது.. இவர்கள் குத்தாட்டம் போடுவது மனதை சாகடிக்கிறது.. தயவுசெய்து தலைமேல் இருக்கும் கரகத்தை கழட்டிவைத்துவிட்டு..., கரகாட்டம் என்ற சாயத்தை துடைத்துவிட்டு தொடரலாம்.. அதேவேளையில் தவறு அவர்கள்மேல் இல்லை என்ற எண்ணமும் மேலோங்கவே இந்த கரகக்கிளி எழுதினேன்.. அவள் கண்ணீரோடு வீசியெறிந்ததை குறிப்பிட்டேன்..

சாராய மூச்சுக்காற்றுக்கள் பாதுகாப்பு அரண்கள்.
விசில் சத்தங்கள் விரச உச்சங்கள். வீதிமாறி போய்க்கொண்டே இருக்கிறது ஆட்டம்..

பொம்மைபோலவே, அவளது கலையும்.. அவளும் விழுந்து கிடைக்கிறார்கள் காலியாகும் சாராய உறைகளுக்கிடையில்..

அண்மையில் மாமியார் ஊரில் திருவிழா.. இரவு நடந்த கரகாட்டம் பார்க்கப்போனேன்.. திரும்பி வந்து தூக்கம் தொலைத்தேன்.. (கரகாட்டக்காரியின் பாதிப்பல்ல.. கரகாட்டக் கலையின் பாதிப்பு..)

___________

தொடரும் ஆதரவுக்கு நன்றிகள் மீண்டும்!!

ஷீ-நிசி
21-03-2007, 07:44 AM
அருமை பூ! நீங்கள் அந்த திருவிழாவில் என்ன நிகழ்வுகளைக் கண்டீர்களோ அங்கே என்னென்ன மனம் கணக்கும் நிகழ்வுகள் உங்கள் வசம் சிக்கியதோ அவையெல்லாவற்றையும் தோரணம் கட்டியுள்ளீர்கள். கரகக்கிளி கவிதையில். விளக்கம் படித்த பின் மீண்டும் சென்று கவிதைப் படித்தேன்..

மூடித் திறந்தாள்..
இமைகளுக்கடியில் கறை.

வேதனை நிறைந்த வரிகள்....

கால ஓட்டத்தில் இந்தக் கலையும் இந்த இழிநிலைக்கு மாறிவிட்டது..

பூ வின் எண்ண ஓட்டத்திற்கு வாழ்த்துக்கள்!

poo
21-03-2007, 08:05 AM
நன்றி நண்பரே..

அநேகமாய் படித்த எல்லோருமே சரியாகத்தான் புரிந்திருப்பார்கள்.. வேறு ஏதாவது இருக்குமோ என்ற சிறு தயக்கம்தான் கட்டிப் போட்டிருக்கிறது..

ஆம்.. அரிதாரம் பூசிய அவளது கண்களில் வழியும் கண்ணீர் கரு-மையாய்...

kavitha
10-04-2007, 11:40 AM
அருமை பூ