PDA

View Full Version : தெருக்கூத்துக்காரன்ஆதவா
19-03-2007, 08:13 AM
மன்றத்தில் எனது கடைசி பதிவு அனைவரின் நண்பராக.........

விரிக்கப்பட்ட ஒரு துண்டின் மேல்
விழும் எச்சில்களுக்கு
இரத்தம் வருத்த ஆடுகிறான்
தன் பிஞ்சுகளோடு

கனத்த உடலும்
கால் தெரியும் அமைப்பும்
ரசிக்கத்தான் கூட்டமுண்டு
காலணா வீச ஆளில்லை

கரணம் அடிக்கும் பூக்களை
ரசிக்கத் தெரிகிறது
சிந்தும் துளி ரத்தங்கள்
கண்ணுக்குத் தெரிவதில்லை

உழைக்கப் பல தொழில்கள்
பிழைக்கப் பல தொழில்கள்
பிச்சைக்குத் தொழிலுண்டா?
வீசுங்கள் உங்கள் சட்டைப்பை
காசுகளை.

ஆகாயத்தின் மத்தியில்
ஆடும் இவர்களின் வாழ்க்கையும்
அடிக்கடி கலையும் மேகங்கள்

கயிறின் நுனியில்
உயிரை வைத்து
பூக்கள் வாடும் மஞ்சள் வெயிலில்
உதடுகள் வெடிக்க
இவர்கள் ஆடுகிறார்கள்
இறைவனின் கூத்து
இறைவன் ஆடுகிறான்
இவர்களின் வாழ்க்கையில் கூத்து.

இது கொசுறு கவிதை::sport-smiley-007:
(எல்லாவற்றையும்
கவிஞனுக்கு எழுதத் தெரிகிறது
எழுந்து போய் ஒரு வார்த்தை
சொல்ல தெம்பில்லை.)

poo
19-03-2007, 08:25 AM
முதலில் பாராட்டுக்கள் ஆதவன்...

ஏன் இது கடைசி?!!....
என்ன நடந்தது????

pradeepkt
19-03-2007, 08:41 AM
ம்ம்ம்.. ஜம்முனு ஒரு கவிதை... விமர்சனம் செய்யத் தூண்டும் கவிதை...

விரிக்கப்பட்ட ஒரு துண்டின் மேல்
விழும் எச்சில்களுக்கு
இரத்தம் வருத்த ஆடுகிறான்
தன் பிஞ்சுகளோடு

போடும் பிச்சைக் காசுகளை எச்சில் என்கிறீர்களா என்ன? ஆயின், போடுபவனுக்குத்தானே பிச்சை..??? ஆடுபவனுக்கு இச்சைதானே அது????

கனத்த உடலும்
கால் தெரியும் அமைப்பும்
ரசிக்கத்தான் கூட்டமுண்டு
காலணா வீச ஆளில்லை

சவுக்கடிதான். கால் தெரியும் அமைப்பு கழைக்கூத்தாடியின் பிழைப்பு... ஆனால், அதெப்படி கனத்த உடல்... உதைக்கிறதே..

கரணம் அடிக்கும் பூக்களை
ரசிக்கத் தெரிகிறது
சிந்தும் துளி ரத்தங்கள்
கண்ணுக்குத் தெரிவதில்லை

சிந்தும் ரத்தத் துளிகள் கண்களுக்குத் தெரிய ஆரம்பித்தால் இக்கவிதை வருவது எங்ஙனம்?

உழைக்க(ப்) பல தொழில்கள்
பிழைக்க(ப்) பல தொழில்கள்
பிச்சைக்கு(த்) தொழிலுண்டா?
வீசுங்கள் உங்கள் சட்டைப்பை
காசுக்(க் தேவையில்லை)களை.

சரியான அறிவுரை! ஆனால் கவிதை வெறும் வாழ்க்கை விவரிப்பாகவே முன்னும் பின்னும் இருக்கும்போது அறிவுரைக்கு என்ன அவசியம்??? ஒட்டவில்லையே!!!

ஆகாயத்தின் மத்தியில்
ஆடும் இவர்களின் வாழ்க்கையும்
அடிக்கடி கலையும் மேகங்கள்

ஆம், அதில் சில சூல் கொண்டவை, பல வேல் கொண்டவை!

கயிறின் நுனியில்
உயிரை வைத்து
பூக்கள் வாடும் மஞ்சள் வெயிலில்
உதடுகள் வேடிக்க
இவர்கள் ஆடுகிறார்கள்
இறைவனின் கூத்து
இறைவன் ஆடுகிறான்
இவர்களின் வாழ்க்கையில் கூத்து.

ஆஹா... நல்ல கற்பனை... அருமையான சொல்லாடல்! இறைவன் அனைத்து உயிர்களின் இருப்பிலும்தான் ஆடுகிறான். அதைச் சொன்ன விதம் அருமை! ஆதவா தொடர்க உன் கவிதைப் பணி...

மன்மதன்
19-03-2007, 09:05 AM
உதடுகள் வேடிக்க (வெடிக்க)


இவர்கள் ஆடுகிறார்கள்
இறைவனின் கூத்து

இறைவன் ஆடுகிறான்
இவர்களின் வாழ்க்கையில் கூத்து.
நச்சென்று முடித்திருக்கிறீர்கள். தெருக்கூத்து இப்போதெல்லாம் அபூர்வமாகிவிட்டது..

ஷீ-நிசி
19-03-2007, 09:27 AM
ஆதவா.... முதலில் சபாஷ்.. கவிதை எளிமையாக புரியும்வண்ணம் உள்ளது.. நான் ரசித்தது..

பூக்கள் வாடும் மஞ்சள் வெயில்..

வெயிலின் உக்கிரத்தில் பூக்கள் வாடுகின்றன.. ஆனால் அதைப் படிக்கும்போது வெயில் கூட ஏதோ மென்மையானதாய் தோன்றுகிறது...

கவிதையை விட கொசுறு கவிதை சூப்பர்..

நிஜம்தானே அதிகம் ரசிக்கபடுகிறது..

பென்ஸ்
19-03-2007, 09:42 AM
ஆதவா.... இன்னும் 1999 தான்....

பெஞ்சமின் நல்லவர் வல்லவர் என்று 2000வது பதிவை போடு....
இல்லைனா....:violent-smiley-010:

pradeepkt
19-03-2007, 10:46 AM
அது சரி...
2000 வது பதிவை ஆதவா ஒரு மறக்க முடியாத பதிவாக உருவாக்கிக் கொண்டிருப்பதாகக் கேள்வி.. .நீங்க மறக்க முடியாதபடி ஏதாச்சும் எழுதிறப் போறான்... பாத்து இருந்துக்கங்க...
ஆமா, எல்லாருக்கும் ஏன் இந்தக் கொலைவெறி??? :violent-smiley-010:

pradeepkt
19-03-2007, 10:47 AM
முதலில் பாராட்டுக்கள் ஆதவன்...

ஏன் இது கடைசி?!!....
என்ன நடந்தது????
பூ...
அனைவரின் நண்பராக அவருக்கு இது கடைசிப் பதிவு..
அடுத்து மன்றத்தின் தூணாகப் பொறுப்பேற்கிறார் அல்லவா???

ஆதவா
19-03-2007, 05:17 PM
அனைவருக்கும் நன்றி. பிரதிப் அவர்களின் விமர்சனம் அருமையாக இருந்தது. தவறுகள் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
அலுவலக நேரத்தில் எழுதியமையால் வரிகள் கொஞ்சம் ஒட்டாமல் இருந்திருக்க வாய்ப்புண்டு.. இனி நிதானமாக எழுதவேண்டும்.அல்லது இரவு..

கவிதை பாராக்களில் முதல் பாரா தெருக்கூத்து ஆடுபவனையும், இரண்டாம் பாரா ஒரு பெண்ணையும் (கனத்த உடல்..) மூன்றாவது குழந்தைகளையும் சுட்டுவதாக எழுதியிருக்கிறேன்.

மீண்டும் அனைவருக்கும் நன்றிகள் பல..

ஆதவா
19-03-2007, 05:19 PM
ஆதவா.... இன்னும் 1999 தான்....

பெஞ்சமின் நல்லவர் வல்லவர் என்று 2000வது பதிவை போடு....
இல்லைனா....:violent-smiley-010:

:icon_nono: :D

பென்ஸ்
19-03-2007, 05:43 PM
ஆதவா ....
கவிதை அழகு....
எனக்கு எப்பவும் இப்படிதான்....
யாராவது சமுதாய கவிதைகள் எழுதிவிட்டால் பாரதியை பார்பது போல் ஒரு உணர்வு....

பூ, ஷீ வரிசையில் நீங்களும்.....


உழைக்கப் பல தொழில்கள்
பிழைக்கப் பல தொழில்கள்
பிச்சைக்குத் தொழிலுண்டா?
வீசுங்கள் உங்கள் சட்டைப்பை
காசுகளை.

ஆனால்...
இந்த வரிகள் என்னை உறுத்துகின்றன ஆதவா....
தெருக்கூத்தாடிகள் பிச்சைகாரர்கள் அல்ல....
பிச்சைகாரர்கள் எதுவும் செய்யாமல் பணம் எதிர்பார்ப்பவர்கள்....
சிக்னலின் கார் கண்ணாடி துடைக்கும் சிறுவன், காதுதுடைக்கும் திரி விற்பவன், இவர்களை போல தான் தெரு கூத்தாடிகள்... இவர்கள் கண்ணுக்கு காட்சி விருந்தளித்து பணம் கேட்கிறாகள்....
டிக்கட் இல்லாமல் , சுவர் கட்டாமல் ஒரு சர்கஸ் காட்சி...
உனக்கு பிடித்திருந்தால் பணம் கொடு அவ்வளவுதான்...
இவர்கள் யாரையும் வற்புறுத்தவில்லை...
இது இவர்களின் வாழ்க்கை...

கொசுறு கவிதைக்காக:
அடுத்த முறை இவர்கள் ஆட்டத்தை பார்க்கும் போது பார்த்த காட்சிக்கான பணத்தை கொடுத்து விட்டு செல்லவும்.

ஆதவா
19-03-2007, 05:57 PM
ஆதவா ....
யாராவது சமுதாய கவிதைகள் எழுதிவிட்டால் பாரதியை பார்பது போல் ஒரு உணர்வு....


என் உணர்வுகள் அப்படியே! என்னை நிரந்தரத் தூக்கத்திலும் தூக்கிவிட்டவராயிற்றே! சமூக கவிதைகள் எழுத வேண்டுமென்ற துடிப்பெல்லாம் முன்பிருந்ததே என்றாலும் பூ, ஷீ போன்றவர்களின் கவிதையை படிக்கும் போது இன்னும் கொஞ்சம் முயற்சிக்கத் தோணுகிறது..பூ, ஷீ வரிசையில் நீங்களும்.....

மிக்க நன்றி..ஆனால்...
இந்த வரிகள் என்னை உறுத்துகின்றன ஆதவா....
தெருக்கூத்தாடிகள் பிச்சைகாரர்கள் அல்ல....

ஆம்.. நீங்கள் சொல்வது உண்மை..கவிதையில் அதை இட்டமைக்கு வருந்துகிறேன்.கொசுறு கவிதைக்காக:
அடுத்த முறை இவர்கள் ஆட்டத்தை பார்க்கும் போது பார்த்த காட்சிக்கான பணத்தை கொடுத்து விட்டு செல்லவும்

இங்கு அவ்வளவாக கூத்து நிகழ்வதில்லை.. பஸ் நிலையங்களில் சில சமயங்களில் பார்த்திருக்கிறேன். பணம் இதுவரை யாருக்கும் கொடுத்ததில்லை.. இனி........... நிச்சயம் கண்டு களித்து விட்டு கொடுப்பேன்......