PDA

View Full Version : பாதை மாறும் கொடிகள்.



ஆதவா
16-03-2007, 10:30 AM
முதன்முதலாய்
உன்னருகே நான்.
உன் போதை விழிகள்
என் உடலில் எழுதின
எனக்கான தலைவிதி.

உன் மனமெப்படியோ
அப்படியே செல்ல
என் வாழ்க்கை
பயணிக்கும் போது
இடையிடையே
இரவுத் தீண்டல்களில்
பாதை தடுமாறும்.

உனக்காக பட்டினி
கிடந்தேன் பல நாட்கள்
மனநிறைவாய் வருவாய்.
எனக்கென இருநாட்கள்கூட
உன் மனம் தாங்காது

சலித்துப் போய்
நடுநிசியில்
யாருமில்லாத வானத்தை
வெறுப்பாக பார்ப்பதும்
கொண்டாட்டமில்லா இரவுகளை
அடியோடு தொலைப்பதும்
இன்றைய சூழ்நிலையாக்கினாய்.

உன் விஷமம் அறிந்தும்
உன்னுயிரோடு ஒட்டுகிறேன்
பிளாஸ்டிக் பை நீராக...
நீ என்னோடு எழுதிய கவிதைகள்
என் அருகே உறங்குகின்றனவே!

________
ஆதவன். :nature-smiley-007:

அமரன்
16-03-2007, 10:48 AM
நீ என்னோடு எழுதிய கவிதைகள்
என் அருகே உறங்குகின்றனவே!



கவிதை எழுத வரவிட்டாலும் கவிதை படிக்க விரும்பும் உள்ளம் நான். இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளன.

ஷீ-நிசி
16-03-2007, 11:08 AM
நல்ல எளிமையான கவிதை நண்பரே!

poo
16-03-2007, 11:11 AM
அருமை ஆதவன்...

இன்னும் எழுத வாழ்த்துக்கள்!!

பென்ஸ்
16-03-2007, 12:35 PM
பிளாஸ்டிக் பை நீர் விளங்கவில்லையே..!!!!
கவிதை எதை பற்றியது... அதுவும் புரியலையே...!!!

ஆதவா
16-03-2007, 01:24 PM
நன்றி நக்கீரன், ஷீ-நிசி, பூ, பெஞ்சமின்..

தலைப்பு : பாதை மாறும் கொடிகள் = ஒரு கோலின் மேல் படரும் கொடியின் பாதை மாறி தலைகவிழ்ந்து தொங்கப் பார்கிறது.

கவிதை: தன் சுகமே பெரிதென நினைக்கும் ஒரு ஆணை மணம் செய்யும் பெண், ஆணுக்கு இவள் சலிப்பாகிறாள். அவளோ பிள்ளைகளுக்காக பொரு(று)த்துக்கொள்கிறாள்.

பிளாஸ்டிக் பை நீர் என்பது (தாமரை இலை நீர்.) ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும் வாழ்க்கை..

நன்றி நண்பர்களே!

பென்ஸ்
16-03-2007, 02:10 PM
ஆதவா....

மன்னிக்க...

நான் உங்களிடம் கவிதையின் விளக்கத்தை கேட்டிருக்க கூடாது....

மன்றத்தில் மக்கள் அடக்கடி சொல்லு வார்த்தை இரண்டு:
1) "கவிதைகள் கவிதைகளாக வாசிக்க படட்டும்"
2) கவிதை வாசிப்பவர்கள் விருப்பத்துக்கு விட்டு விடலாம்

நான் முதல் முறை வாசித்தபோது கைவிட பட்ட ஒரு காதலனின் இடத்தில் இருந்து வாசித்தேன் அதனாலவோ என்னவோ கவிதையில் பல வரிகள் அர்த்தபடுத்தி கொள்ளமுடுயவில்லை....
இப்ப முடியுது.... இந்த திரில் கொஞ்சம் நீண்டிருக்கலாமோ?????

ஆதவா
16-03-2007, 02:52 PM
நான் அப்போதே ஆச்சரியப்பட்டேன்.. பெஞ்சமின் அவர்களுக்கு புரியாமல் போக வாய்ப்பில்லையே என்று... இப்போது தெளிவாகிவிட்டது//

அட இதுக்கெல்லாம் எதுக்குங்க மன்னிப்பு... ஆதவன் எப்போதும் உங்களைவிட சிறியவந்தான்..
உண்மையச் சொன்னா இது முதல் முத்தம் கவிதைப் போட்டிக்கு எழுதவேண்டியது.. சிலது வெட்டி ஒட்டி இங்கே கொடுத்துவிட்டேன். மிச்சம் மீதி இன்னொருநாளைக்கும்.. அதுபோக இப்போது ஏனோ வரிகளை குறைத்து எழுதவேண்டும் என்ற தோணுதல் ஏற்படுகிறது..

அதோடு கவிதை வாசிப்பவர்களின் விருப்பத்திற்கு விட்டுவிட்டால் கவிஞன் எழுதிய கரு சரியாக போய்ச் சேராதே? என்னைப் பொருத்தவரையில் கவிஞனின் முழுக் கருவும் படிப்பவர்களுக்கு சேரவேண்டும்... சில நான் எழுதிய கவிதைகளில் வார்த்தை மட்டுமே கடினமாக இருக்குமே தவிர பொருள் கடினமாக இருக்காது என்று நினைக்கிறேன்..

தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்...

தனிப்பட்டமுறையில்.. உங்களின் போட்டி கவிதை மிகவும் அருமையாக இருந்தது. அதன்பின் ஏன் கவிதைகள் எழுத மறுக்கிறீர்கள்(அல்லது ஏன் எழுதமாட்டேன்கிறீர்கள்?). பகிரங்கமாகவே கேட்கிறேன். மன்றத்தில் உங்களைப் போலுள்ளவர்கள் மூலமாக மட்டுமே பாடம் படிக்க முடியுமல்லவே!!...

ஊக்கத்திற்கு குறைவில்லை. பாடத்திற்குத்தான் குறைவு..

:nature-smiley-008:

அறிஞர்
16-03-2007, 03:21 PM
பெஞ்சமின் போல் நானும் வேறொரு கோணத்தில் பார்த்தேன்.....

தங்களின் விளக்கத்தால்.. கவிஞனின் உண்மையான பொருளை அறிந்தேன்.. நன்றி ஆதவா...

மன்மதன்
16-03-2007, 04:42 PM
நாம் ஒரு கோணத்தில் பார்த்தாலும் கவிஞனின் கோணத்தையும் தெரிந்துகொள்வதில் தப்பில்லையே..
(எனக்கு நீங்க அர்த்தம் சொல்லியவரை புரியலைங்கறதை சுத்தி வளைச்சு சொல்லிட்டேன்..)
கவிதை அருமை.. பென்ஸ்க்கு என் நன்றி..

பென்ஸ்
16-03-2007, 06:18 PM
நான் அப்போதே ஆச்சரியப்பட்டேன்.. பெஞ்சமின் அவர்களுக்கு புரியாமல் போக வாய்ப்பில்லையே என்று... இப்போது தெளிவாகிவிட்டது//
ஊக்கத்திற்கு குறைவில்லை. பாடத்திற்குத்தான் குறைவு..

:nature-smiley-008:

ஆதவா....

தவறு இங்குதான் இருக்கிறது ஆதவா....

இங்கு சிறியவர் பெரியவர் எவருமில்லை...

ஆதவன் நன்றாக கவிதை எழுதுவார்
இளசு நன்றாக விமர்சனம் செய்வார்...
ஓவி நன்றாக கலாசுவாள்..
மன்மதன் நன்றாக டைமிங் ஜோக் கொடுப்பார்...

ஆனால் பாருங்கள் எல்லோரும் இதில் எல்லாம் செய்வார்கள்...

ஒரு பதிவை போட்டு விட்டு இளசு அதை "நல்லது" என்று ஒரு வார்த்தை சொல்லாமல் போகும் போது எனக்கு வருத்தம் வரும் தெரியுமா??? ...
இது எல்லாவற்றிக்கும் காரணம் என்ன ஆதவா???

எதிர்பாப்புகள்....!!!

இருக்கவேண்டியதுதான்...
உறவுகளை வளர்ப்பதற்க்கு காரணமாக இருக்கும் அது...
ஆனால் அது சரியானதாக இருக்க வேண்டும்...

ஆனால் நீங்கள் என் மீது வைத்திருப்பது தவறான எதிர்பார்ப்பு....
அல்லது தவறான நம்பிக்கை....

இங்கு யவரும் எல்லா கவிதையையும் சரியாக புரிந்து கொண்டது கிடையாது... பலரும் தவறாகவே புரிந்து பின் விளக்கபடும்போது , விளங்கி கொள்ளுகிறார்கள்....
இதற்க்கு கவிதாவின் உதிர்தல்... இளசுவின் "என் தோட்டம்" போன்ற கவிதைகள் உதாரணம்....

மன்றத்தில் கவிதைகள் சக்கை போடு போடுகிறன...
ஆனால் எனக்கு பணிபளு...
வாசித்து செல்ல மட்டும் நேரம் கிடைக்கின்றன....
இந்த வார இருதி பிரம்மாகிரி மலைக்கு டிரக்கிங்... அதனால இந்தவார விமர்சன ஐடியாவும் போச்சு...

ஆதவா
16-03-2007, 06:33 PM
ஆதவா....

தவறு இங்குதான் இருக்கிறது ஆதவா....

எதிர்பாப்புகள்....!!!

இருக்கவேண்டியதுதான்...
உறவுகளை வளர்ப்பதற்க்கு காரணமாக இருக்கும் அது...
ஆனால் அது சரியானதாக இருக்க வேண்டும்...

ஆனால் நீங்கள் என் மீது வைத்திருப்பது தவறான எதிர்பார்ப்பு....
அல்லது தவறான நம்பிக்கை....

இங்கு யவரும் எல்லா கவிதையையும் சரியாக புரிந்து கொண்டது கிடையாது... பலரும் தவறாகவே புரிந்து பின் விளக்கபடும்போது , விளங்கி கொள்ளுகிறார்கள்....
இதற்க்கு கவிதாவின் உதிர்தல்... இளசுவின் "என் தோட்டம்" போன்ற கவிதைகள் உதாரணம்....

எதிர்பார்ப்புகள்... இன்றைய தேதிக்கு எதிர்பார்ப்புகள் இன்றி ஏதுமில்லை. அட. இங்கே சுயநலமும் கலந்து இருக்கிறதே! நாங்கள் எதிர்பார்ப்பது பழுத்த எழுத்துக்களை.. அதனால் நாங்களும் அனுபவம் பெறக்கூடுமல்லவா?. ஆக தவறான எதிர்பார்ப்புகளாக இருக்காது என்றே நினைக்கிறேன்.

கவிஞனின் கவிதை கரு அவன் வழியில் ஒருவகையில் புரிந்துகொண்டாலும் பார்வையாளனின் எண்ணம் கவிஞனை விஞ்சும் அளவிற்கு இருக்கும். இருந்தாலும் கவிஞன் என்ன எண்ணுகிறான் என்பதை அறிந்துகொள்வதில் சிரமம் இருக்கக்கூடாது என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட எல்லா கவிதைகளும் மன்றத்தில் புரிந்துவிடுகிறது ஒரு சில மட்டும் இருவேறு அர்த்தங்கள் இருப்பதாக நினைத்துக்கொள்கிறோம் அல்லது பக்குவம் வந்திராது. அல்லது எண்ணச் சிதறல் இருந்திருக்கும்...

மலையேறலா? பலே! வெற்றிகரமாக சென்று வாருங்கள்.:icon_v:

இளசு
16-03-2007, 11:01 PM
ஆதவா -பென்ஸ் உரையாடல் படிக்க மனம் நெகிழ்கிறது...
என் அன்பு இருவருக்கும்..

பென்ஸின் நினைவாற்றல் அசரவைக்கிறது..

ஆதவா...

கவிதை கவிஞன் எழுதிய பொருளில் (மட்டும்) நிச்சயமாய் படிக்கும் அனைவரையும் சேர்ந்துவிட வேண்டுமா?

-- விரித்து வைத்த சேலை போல..

அல்லது உள்ளீடுகளை படிப்பவர் விரித்து பல வகையிலும் உணர்ந்து..
அதில் சிலர் கவிஞனின் எண்ண அலைகளை உரசி உவக்க வேண்டுமா?

-- மடிப்பு விசிறி அங்கவஸ்திரம் போல...


நேரிடை எளிமைக் கவியின்பமா?
இருண்மை, இசங்கள், குறியீடுகள், படிமங்களால் கட்டப்பட்ட
புதிரின்பமா?


அடிக்கடி மன்றத்தில் வந்த கேள்வி இது..

நண்பன், ராம்பால் போன்ற ஆழமான கவிஞர்கள் பெரும்பாலும் இரண்டாம் வகையில் படைத்தாலும் என்னால் சட்டென புரியக்கூடிய எளிய நேரிடைக் கவிதைகளும் நிறை....ய்ய எழுதி இருக்கிறார்கள்..

நான் பொதுவாய் எனக்கும் படிப்பவர்களுக்கும் சட்டென விளங்கும்படி எழுதும் வழக்கம் உள்ளவன். ஆனாலும் பென்ஸ் சொன்னதுபோல சில மற்ற ரகம்.. நண்பன் கூட அதைச் சுட்டி இருக்கிறார்.

இருவகைக் கவிதைகளும் தேவையே..

எடுத்த பொருள், எழுதுபவர் மனநிலை, படிம பயிற்சி-பரிச்சயங்கள்..
இவை நிர்ணயிக்கும்...

இரண்டாம் வகைக் கவிதைகளின் வாசகர் வட்டம் சிறிது..

அதை அவ்வகைக் கவிஞர்+வாசகர் வட்டம் தெரிந்தே வைத்திருக்கிறது..


-------------------------------------------

ஒட்டாமல் போன பல்லாயிரம் பந்தங்களை
ஒட்டி வைக்கும் கோந்துக்கள்- குழந்தைகள்!

இந்திய சமூக அமைப்பின் பலமும் பல்வீனமும் இதுதான்..

மிக நுண்ணிய இழை முடிச்சு இது..
சட்டென வெளிப்பார்வைக்குப் புலப்படாது..

ஆதவா போன்ற கவிப்பார்வை - விதி விலக்கு!

தாம்பத்யம் செய்யாமல் அன்று காமம் எழுதியவர் திருத்தக்கர்..

முத்தம் தராமல், முதலிரவு காணாமல் -
இன்று உறவு முடிச்சுகள் சொல்பவர் நம் ஆதவா..!

ஷீ-நிசி
18-03-2007, 09:26 AM
விளக்கத்திற்குப் பின் கவிதை படிக்கும்போது மிக அழகாக இருக்கிறது...

அர்த்தம் கிடைக்காவிட்டால் கவிதையின் உண்மையான சுவை கிடைக்காமலே போய்விடும் என்பது என் தனிப்பட்ட கருத்து.

Mathu
18-03-2007, 10:13 AM
பலரை போல எனக்கும் ஆரம்பத்தில் சரியான கருத்து புரியவில்லை
கருத்தை படித்து மீண்டும் கவிதை படிக்க உண்மை கரு புரிகிறது.
அழகாய் கோத்திருக்கிறீர்கள்.

நிறைய எழுத வாழ்த்துகள்.

பென்ஸ்
18-03-2007, 08:56 PM
கவிதையை விமர்சிக்கவில்லையே ஆதவா....

கொடி மரம் சார்ந்து வாழும்,
சார்ந்தவை அதன் குணாதிசயங்களில் சிலவற்றை எடுக்கலாம்...
ஆனாலும் , அதுவாகவே இருக்கும்...
சில கொடிகள் மரத்தோடு இனைந்து வாழும்..
சில மரத்தை கொன்று வாழும்,
இந்த கொடிகள் வெட்டிவிட படவேண்டியவைகள்...
மரம் சாராத கொடிகள் மண்ணோடு மண்ணாய் மிதித்து நாசமாக்கபடும்...

மனம் போல் வாழ்க்கை... !!!!
புரியுதா....???

ஆதவா
19-03-2007, 04:43 PM
கவிதையை விமர்சிக்கவில்லையே ஆதவா....

கொடி மரம் சார்ந்து வாழும்,
சார்ந்தவை அதன் குணாதிசயங்களில் சிலவற்றை எடுக்கலாம்...
ஆனாலும் , அதுவாகவே இருக்கும்...
சில கொடிகள் மரத்தோடு இனைந்து வாழும்..
சில மரத்தை கொன்று வாழும்,
இந்த கொடிகள் வெட்டிவிட படவேண்டியவைகள்...
மரம் சாராத கொடிகள் மண்ணோடு மண்ணாய் மிதித்து நாசமாக்கபடும்...

மனம் போல் வாழ்க்கை... !!!!
புரியுதா....???

எல்லாருக்கும் நன்றி... புரியாத கவிதை படைத்தமைக்கு வருந்துகிறேன். மீண்டும் நடவாதிருக்கும்படி பார்த்துக்கொள்ளுகிறேன்..:icon_03:

பெஞ்சமின் அவர்களே!.. புரிந்தும் புரியாமல் இருக்கிறேன்.. :mini023: