PDA

View Full Version : காலப் பயணத்தில்..poo
16-03-2007, 08:10 AM
ரதமேறப் போகையில்
கால் தடுக்கிறேன்...
விரல்நீட்டி வரவேற்கிறானென்
வருங்கால மணவாளன்..

விட்டுப் போகமாட்டேன்
விரல் கோர்த்து உறுதிசெய்த
வேள்விகளை கேலிசெய்தான்
கடந்தகாலக் காதலன்..

திரும்பிப் பார்க்கிறேன்..
விழுந்தெழுந்த போதெல்லாம்
விரல் கொடுத்து நடைபழக்கிய
அப்பா..

சத்தியவலைகளை கிழித்தெறிந்தேன்...
காதைத் துளைத்த வாத்தியங்கள்.

விண்ணில்
சிதறிச் சிரித்தன வண்ணவெடிகள்..
ஒரு நட்சத்திர விரிப்பில்
காதலன்..
குழந்தையாய் குதூகலித்து
தோள் குலுக்கினான் மணவாளன்..

திரும்பிப் பார்க்கிறேன்..
வேடிக்கைக்கு பிடித்துவரும்
மின்மினிப் பூச்சிகள்
கால்களின் கீறலை
எனக்கு காட்டிக் கொடுத்துவிடுமொவேன
பதறிய அப்பா..

சிந்தனைகளை சிதைத்தேன்..
வானைப் பிளந்த வெடியோசை.

மணவாளன் மடிதொட்டேன்..
காதலன் மனம்தொட்டேன்..
அப்பாவின் விழிதொட்டேன்..
மானசீகமாய் கோரினேன்..
மன்னிப்பெய்து விடுங்கள்..

ஒரு சுழலிலிருந்து
என்னை தூக்கி வீசினேன்..
நதியின் போக்கில்
இணைந்து கொண்டேன்!..

பென்ஸ்
16-03-2007, 08:43 AM
பாராட்டுகள் பூ...
ஒரு கதாபத்திரத்தின் மனநிலையில் இருந்து கதை, கவிதை படைப்பதில் நீங்கள் சிறந்தவர் என்று இன்னும் நிருபித்து வருகிறிர்கள்....

ரதமேறப் போகையில்
கால் தடுக்கிறேன்...
விரல்நீட்டி வரவேற்கிறானென்
வருங்கால மணவாளன்..

எத்துனை படித்தவனாக இருந்தாலும் மனதில் எங்கோ பதிந்து போன சில நம்பிக்கைகள், இது மூடமோ மனதின் முடமோ எதுவோ...

தனக்காக வரும் போது,
நிச்சயமில்லாமை வரும் போது,
... பயம் வருபோது மேலோங்கி...

விட்டுப் போகமாட்டேன்
விரல் கோர்த்து உறுதிசெய்த
வேள்விகளை கேலிசெய்தான்
கடந்தகாலக் காதலன்..

எந்த ஒரு காதலிக்கும் வரும் சாதாரன மனநிலை...
இது இயலாமையின் வேளிப்பாடு என்பதை விட குற்ற உணர்வுகளின் ஒரு சேர்க்கையோ????
ஆனாலும் "கேலி செய்தான்" என்று கடந்த காலத்தில் உள்ளதை சொல்லி அவன் எத்துனை "சேடிசம்" உள்ளவன் என்று சொல்லுவதையோ அல்லது அவன் கெட்டவன் என்று தன்னை தேற்றி கொள்வதையோ காட்டுகிறிர்கள்....
இவள் யார்... ???
நம்முடன் தான் இருக்கிறாள்....
மாற மாட்டாளா???
மானுடம் மாறட்டும்...

திரும்பிப் பார்க்கிறேன்..
விழுந்தெழுந்த போதெல்லாம்
விரல் கொடுத்து நடைபழக்கிய
அப்பா..
பெண்மைக்கே உரிய ஏமாற்றங்கள்....
இது சமுதாயத்தின் தலை விதி....
மாறிவரும் உகங்களில் தேறிவரும் மானுடம்...
அன்று வரை தூக்கி, தாங்கி நடந்த அப்பாவை அனாதையாய் ஆக்கி விட்டு...
இதனால் தான் பெண்னினம் வெறுக்கபடுதோ....

சத்தியவலைகளை கிழித்தெறிந்தேன்...
காதைத் துளைத்த வாத்தியங்கள்.

விண்ணில்
சிதறிச் சிரித்தன வண்ணவெடிகள்..
ஒரு நட்சத்திர விரிப்பில்
காதலன்..
குழந்தையாய் குதூகலித்து
தோள் குலுக்கினான் மணவாளன்..

எங்கோ வாசித்த வரிகளை நினைவு படுத்துகிறன இந்த வரிகள்...
"இவர்களின் அழுகை
வாத்தியங்களின் ஓசையில்
அடங்கிவிடுகின்றன"


திரும்பிப் பார்க்கிறேன்..
வேடிக்கைக்கு பிடித்துவரும்
மின்மினிப் பூச்சிகள்
கால்களின் கீறலை
எனக்கு காட்டிக் கொடுத்துவிடுமொவேன
பதறிய அப்பா..


நான் ரசித்த வரிகள் பூ....
அத்துனை அருமையாய் காட்டி இருக்கிறீர்கள்
கடந்து வந்த பாதைகள் யாருக்கும் பூக்கள் நிரம்பியதாய் இல்லை...
இங்கே இந்த பூவைக்கும்...
முக்களின் காயங்களை தாங்கியா இன்னும் செல்லுகிறாள் இவள்...???
மின் மினிகளின் வெளிச்சம் கூட அவளது காயத்தை காட்டி கொடுத்து விட கூடது என்று கலங்கும் தகப்பன்... இவன் வாழ்வின் வெளிச்சத்துக்கு போய்விடுகையிலும் கலங்குவாரோ????


ஒரு சுழலிலிருந்து
என்னை தூக்கி வீசினேன்..
நதியின் போக்கில்
இணைந்து கொண்டேன்!..

பேதை பெண் .... இயலாமைதானே இது....!!!
இதற்க்கு இவள் மடிந்தே போயிருக்கலாமோ???

இளசு
17-03-2007, 12:01 AM
பாராட்டுகள் பூ...

ஒரு விரல் - நடை பழக்கிய விரல்
ஒரு விரல் - விலகமாட்டோம் என இறுக்கிய விரல்..
ஒரு விரல் - விரைந்து மணத்தேர் ஏற சமிக்ஞை செய்யும் விரல்..

மூவிரல் = நீர்ச்சுழல்..

மூவரிடமும் மன்னிப்பு..
சுழலிலிருந்து எகிறிக் குதிப்பு..

இனி நதிவழிப் பயணம்..
இனியொரு சுழலில் சிக்காமல் சீராக அமையட்டும்..


நெருக்கடியான கட்டம் வரை வந்து
அப்போதாவது அதிரடி தீர்வு அடைவது..

அண்மையில் அடிக்கடி ஊடகங்களில்...

அப்படி ஒரு நிகழ்வின் பதிவு....( என நினைக்கிறேன்...)

poo
21-03-2007, 06:04 AM
இங்கே கேலி செய்கிறான் காதலன் என அவள் கூறுவது அவனின்மேல் பழிபோட அல்ல... நீங்கள் முதலில் கூறியதுபோல தன்னை எண்ணி வெட்கிக்கொள்ள...தன் குற்ற உணர்வினை பழிக்க.. கழிக்கவல்ல...

அப்பா--குடும்பச்சூழல் இவை பல பெண்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்டுவிடும்.. குறிப்பாக காதலில்.

-- வாத்திய சத்தங்கள் காதைப்பிளந்தன... - அவளது நினைவுகளை கலைக்கவே பயன்படுத்தினேன்..

அந்த மின்மினிகள்... இரண்டுமாதிரி புரியலாம்,.. அதைத்தான் நீங்கள் செய்திருக்கிறீர்கள் பென்ஸ்.. மகிழ்ச்சியாய் இருக்கிறது.. நிறைவாய் உணர்கிறேன் உங்களை எண்ணி!!

சிறிய வயதில் அப்பா பட்ட கஷ்டங்களை தனக்கு தெரியாவண்ணம் வளர்த்த நிகழ்வு.., அதேபோல இவள்பட்டவைகளையும் மறைக்க போராடும் மனது.. மின்மினிப் பூச்சிகளின் வெளிச்சத்தில் அவள் விட்டில் பூச்சியாகிவிட எளிதில் விடமுடியுமா...உணர்வுப் போராட்டங்களின் குவியல் தொடரும்தானே..
- நன்றி பென்ஸ்.

இறுதி வரிகளில்.. இயலாமை..ஆம்.. சில நேரங்களில் இயலாதவளாய் போவதே நல்லது... வறட்டாய் எதிர்த்து என் செய்வாள்.... செய்வதால் விளைவதைக் காட்டிலும், இயலாமை இங்கே சுகம்தான்.. குறைந்தபட்சம் அவளைச் சுற்றியவர்களுக்கு.. காலப்போக்கில் அவளுக்கும்!!!


-- மீண்டும் நன்றி பென்ஸ்..


நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...
கொஞ்சம் அதிகப்படியாகவே பாராட்டியிருக்கும் பென்ஸிற்கு சிறப்பு நன்றிகள்.. கூடவே வந்துள்ள விமர்சனத்திற்கு..
கவிதா, நண்பன், ராம் இல்லாத குறையை தீர்க்க வேண்டும் இன்னும் தொடர்ச்சியாய்..

poo
21-03-2007, 06:13 AM
அண்ணா... சுழலில் இருந்து எகிறிக் குதித்தவள்.. சுழல்விடுத்து வெளிவரும் ஒரு நதியில்தானே இணையமுடியும்..

அண்மைக்காலமாய் நிகழும் நிகழ்வுகளின் பாதிப்புதான் அண்ணா,.. (உங்கள் மனச்சுழலில் சிக்காமல் என்னால் என்று கவிதை எழுத முடியும்?!!) . ஆனால் அந்த முடிவுகள் அதிரடியாய் அவ்வேளையில் எடுக்கப்பட்டதில் எனக்கு கொஞ்சம் வருத்தம்தான்.. பேசாமல் நதியின் போக்கில் இணைந்திருக்கலாமே..(நதியில் இறங்கிவிட்டு எதிர்நீச்சல் போடுவதேன்.. இந்த நதி ஆபத்தானதென அறிந்து இறங்கத் துணிந்தபின் பின் வாங்குவதேன்... நம் ஒப்புதலோடு நதியிறக்கி விட விரல் பிடித்து வந்தவனின் விரலொடிப்பது எவ்வகை நியாயம்?!)

பென்ஸுக்கு சொன்னமாதிரி.. காலப்போக்கில் மாற்றங்கள் வரும்தானே...


--- நன்றி அண்ணா... உங்களின் துடிப்பான விமர்சனங்கள் என்னை எழுதத் தூண்டுகிறது மீண்டும்.. மீண்டும்..

(அண்ணா.. காட்சிகள் கிடைக்காமல் தவிக்கிறேன்.. காட்சி கவிதை அல்லது தொடர்கவிதை என முன்புபோல ஆரம்பிக்கலாமா... அய்யோ வேணாம்டா தம்பீன்னு நீங்கள் சொல்வது கேட்கிறது... தனிமடலில் சில கருக்களை வீசுங்கள்.. இங்கே கணனி அறைவிட்டு வெளியேற அனுமதி கிடைப்பதே அகால நேரமென ஆகிவிட்டது அண்மைக்காலமாய்!)

செல்விபிரகாஷ்
21-03-2007, 06:44 AM
வார்த்தைகள் இல்லை பாராட்டுவதற்கு... அருமையான வரிகள். ஒரு சில நொடிப் பொழுதுகள் மனதில் நடக்கும் விவாதங்களை கண்களில் பூட்டி கண்ணீர்த்துளியில் கரைத்திருப்பாள். கவிதையின் கருவினை விளக்கிய விதம் நன்றாக உள்ளது

வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்
செல்விபிரகாஷ்

poo
27-03-2007, 05:33 AM
நன்றி சகோதரி..