PDA

View Full Version : 9ம் பகுதி கள்ளியிலும் பால்



gragavan
11-03-2007, 09:26 AM
சந்தியாவைப் பற்றி நாம் நிறைய பார்த்து விட்டோம். ஆனால் சரவணனைப் பற்றி? சரவணன் பல பெண்களோடு பழக்கம் உள்ளவன். புகை அவனுக்கும் பகை. குடிப்பழக்கம்......தொடர் குடியன் அல்ல. ஆனால் தேவைப்பட்டால் அவனால் சிறிது குடிக்க முடியும். மற்ற படி அதன் மேல் அவனுக்கு விருப்பம் என்றெல்லாம் சொல்ல முடியாது. இப்படியெல்லாம் சொல்லி சரவணனை உத்தமன் என்று சொல்லப் போகிறேன் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. அவன் சாதாரண மனிதன். சந்தியாவிற்குச் சொன்னது இவனுக்கும் ஆகும். ஏமாற்று வேலை, அரசியல், திருட்டு, கொள்ளை, பொறாமை ஆகிய பழக்கங்கள் எல்லாம் நல்ல பழக்கம்....பலருடன் படுப்பது மட்டும் கெட்ட பழக்கம் என்றால் அவன் கெட்டவந்தான்.

சரவணனுக்குச் சந்தியா மிக முக்கியமான உறவு. நட்புறவுதான். அவன் மனதில் நினைப்பதையெல்லாம் அவனது மற்ற நண்பர்களை விட அவளிடம் மிகவும் வெளிப்படையாகப் பேச முடியும். அப்படிப் பட்ட நெருக்கமே அவர்கள் இருவரையும் முதன்முதலில் நெருங்க வைத்தது. ஆனால் இருவரும் அதைக் கை குலுக்குவது போலத்தான் ஆரம்ப காலங்களில்....ஏன் இப்பொழுதும் எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். நெதர்லாண்டில் வேலை கிடைத்ததும் முதலில் அவனை யோசிக்க வைத்தது சந்தியாதான். அவளைப் பிரிந்து அவனால் இருக்க முடியுமா என்றுதான். ஆனால் பக்கத்தில் இருந்தால்தான் உறவா என்று படக்கென்று நெதர்லாண்டு போய் விட்டான். தொடக்கத்தில் அடிக்கடி மெயிலிலும் தொலைபேசியிலும் தொடர்பு வைத்திருந்தான். நாள்பட நாள்பட மெயில்களும் தொலைபேசி அழைப்புகளும் குறைந்து கொண்டேயிருந்தன. இருவரின் பணிப்பளுதான் அதற்குக் காரணம். இந்தியாவிற்கு வருவதே அவளுக்காகத்தான். சந்தியாவிற்கும் அங்கேயே ஒரு வேலையைப் பார்த்தான். ஆனால் சந்தியா மறுத்து விட்டாள். அதில் அவனுக்கும் வருத்தந்தான். ஆனாலும் அவர்கள் நட்பு தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.

அது சரியா தவறா என்று விவாதம் செய்து கொண்டேயிருந்தால் அடுத்து என்ன நடந்தது என்பதைப் பார்க்க முடியாது. ஆகையால் கதைக்குப் போகலாம்.

சந்தியாவின் வீட்டிற்குப் போவதற்காகவே நன்றாக உடையணிந்து கொண்டு கும்மென்று வந்தான். சுந்தரராஜனுக்கு ஒரு நல்ல தங்கப்பேனாவும் சிவகாமிக்கு ஒரு அழகான கிச்சன் செட்டும் கொண்டு வந்திருந்தான். அவனை வரவேற்றுக் கதவைத் திறந்தது சந்தியாதான். யாரும் பார்க்கவில்லை என்று உறுதி செய்து விட்டு அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்தான். அவள் செல்லமாக முறைத்துக் கொண்டே உள்ளே அழைத்துச் சென்றாள்.

"என்னம்மா...வீட்டுல யாரையும் காணோம்?" அமைதியான வீடு அவனைக் கேட்க வைத்தது.

தலையைச் சாய்த்துச் சாய்த்து சந்தியா சொன்னாள். "சொல்லவே மறந்துட்டேன் டா. இன்னைக்குக் கண்ணன் புதுக்கார் எடுக்குறான். அதுக்குதான் அம்மாவும் அப்பாவும் போயிருக்காங்க. இப்பதான் கெளம்பிப் போனாங்க." முதலில் சரவணனை வீட்டிற்கு அவசரப்பட்டு வரச்சொல்லி விட்டோமே என்று சந்தியாவும் அஞ்சினாள். ஆனால் வீட்டிற்கு வந்த பிறகுதான் வாணி சொன்னது அவளுக்கு நினைவிற்கு வந்தது. ஆகையால் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படி சுந்தரையும் அப்பாவோடும் அம்மாவோடும் அனுப்பி வைத்தாள். ஆனாலும் அவர்கள் வெளியே போவதைப் பற்றிச் சரவணனிடம் சொல்லாமல் மறைத்தாள். சொல்லி விட்டால் பிறகு வருகிறேன் என்பானே! அதே போலச் சரவணன் வருகிறான் என்று வீட்டிலும் சொல்லவில்லை.

பொத்தென்று சோஃபாவில் விழுந்தான். சந்தியாவின் கையையும் பிடித்து இழுத்துக் கொண்டு. "எனக்குச் சொல்லீருக்கலாமே. நான் நாளைக்கு வந்திருப்பேனே! ம்ம்ம்....நீ போகலையா? உன்னோட தம்பிதான கண்ணன்?"

"ஆமா. என்னோட தம்பிதான். போயிருக்கலாம்தான். ஆனா நானும் போயிட்டா வீட்டுல உன்னை யார் வரவேற்குறது." சமாளித்தாள். சரவணனுக்கு லெதர் சோஃபா. சந்தியாவிற்கு சரவணன் சோஃபா.

"ஆகா....என்னோட செல்லம். சரி. இப்ப எனக்குப் பசிக்குதே. காபியாவது போட்டுக் கொடு. டின்னருக்கு என்ன பண்றது?"
அவனது மடியிலிருந்து எழுந்தாள். "இரு காபி போட்டுத் தாரேன். அம்மா டிபன் ஒன்னும் செய்யலை. மேரி ப்ரவுன்ல ஆர்டர் பண்ணீறலாம். சரியா?"

"ஓகே. எதையாவது செய். மொதல்ல ஒரு காபி குடு." பிறகு சந்தியா காபி கொடுத்ததையும் மேரி பிரவுனில் ஆர்டர் கொடுத்ததையும் தன்னைக் கொடுத்ததையும் இப்பொழுது கண்டு கொள்ள வேண்டாம். அடுத்து மேலே போகலாம்.

சுந்தரையும் தூக்கிக் கொண்டு போனது நல்லதாகவே இருந்தது. சிவகாமியும் வாணியும் இருந்ததால் அவனைப் பார்த்துக் கொள்வது எளிதாயிற்று. கண்ணனுடனும் அவன் நன்றாக ஒட்டிக் கொண்டான். கண்ணனுக்கும் நெஞ்சில் ஒரு நெகிழ்ச்சி. ஒரு மகிழ்ச்சி. காரை எடுத்து பூஜை போட்ட கையோடு தங்கமாளிகைக்குச் சென்று சின்னதாக ஒரு தங்கச்சங்கிலி வாங்கிக் கொடுத்தான். வாணிக்கும் நிம்மதி.

நினைத்தபடியே எல்லாம் நடக்கிறதே. நல்ல வேளையாக ராஜம்மாளை வீட்டிலேயே விட்டுச் சென்றனர். அப்படியே இரவு உணவை முடித்து விட்டு சுந்தரராஜனும் சிவகாமியும் சுந்தரைத் தூக்கிக் கொண்டு பெசண்ட் நகர் திரும்பினர். சந்தியா சொல்லிச் சரவணன் வந்து சென்றதை தெரிந்து கொண்டனர்.

கண்ணன் தங்கச்சங்கிலி வாங்கிக் கொடுத்தது சந்தியாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. சுந்தருக்கு மொட்டை எடுப்பதற்குக் கண்ணனை அழைப்பதில் சிரமம் இருக்காது என்ற முடிவுக்கு அவளால் எளிதாக வரமுடிந்தது. பிரச்சனையிருந்தாலும் வாணி சமாளித்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த நிம்மதியும் சரவணனுடனான பிரியாணியும் அவளை ஒரு மகிழ்சி மேகத்தில் மிதக்க வைத்தது.

அடுத்து வந்த சனி ஞாயிறு சரவணனுக்குப் பரபரப்பாகவே இருந்தது. இந்தியாவிற்கு வரும் முன்பே சாட்டிங்கில் ஒரு கிளியைப் பிடித்து வைத்திருந்தான். அவளோடு பொழுது போனது. நிறைய காபி குடித்தாலும் சுவையில்லையென்றால் நாவில் நிற்காது. அந்த நிலையில்தான் கிளிக்கு டாடா காட்டினான் சரவணன். கிளியும் எண்ணிக்கைக் கணக்கை எண்ணிக் கை தட்டிச் சென்றது.

ஆனால் சந்தியா எங்கும் போகவில்லை. எதனாலோ தேவையிருக்கவில்லை. அவளுடைய வாரயிறுதியும் மகிழ்ச்சியாகவே கழிந்தது. அதற்கு அடுத்த வாரம் இருவருக்கும் மிக வேகமாகச் சென்றது. சரவணனுக்குத் தெரிந்தவர்களைச் சென்று பார்க்க வேண்டியிருந்தாலும் செவ்வாய்க் கிழமை மாலை சந்தியாவோடு fishermen's cove போகத் தயங்கவில்லை. அதற்கு நேரம் கிடைத்த அவனுக்குப் பெசண்ட் நகர் செல்லத்தான் நேரம் கிடைக்கவில்லை. :-)

அத்தோடு வியாழக்கிழமை லேண்ட்மார்க்கிற்கு கள்ளியிலும் பால் கவிதைத் தொகுப்பின் கையெழுத்து நிகழ்ச்சிக்காக தேன்மொழி சந்தியாவையும் குடும்பத்தாரையும் அழைத்தாள். சந்தியாவும் ஒப்புக் கொண்டாள். அதுவும் அங்கு வரும் நெரிசலைப் பற்றிக் கொஞ்சமும் யோசிக்காமல்! ம்ம்ம்...என்ன செய்வது? அவளா இந்தக் கதையை எழுதுகிறாள்? நானல்லவா. எத்தனை முறைதான் அவளால் தப்பிக்க முடியும்?

தொடரும்....

ஓவியா
11-03-2007, 03:31 PM
அருமையான கதை

அருமையான நடை....


நேற்றே பிலக்கில் புலோகில் படித்து விட்டேன் :D


அடுத்த பாகத்தை நோக்கி........

மனோஜ்
11-03-2007, 04:52 PM
விரு விருப்புடன் தொடருங்கள்...........

SathishVijayaraghavan
12-03-2007, 03:18 AM
ம்ம் அருமையாக செல்கிரது... தொடருங்கள்...

மதி
12-03-2007, 03:30 AM
அடுத்து...???

மன்மதன்
12-03-2007, 05:39 AM
ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் வைக்கப்படும் பஞ்ச் சூப்பரபு. கிளி பத்தி ஒரே லைனில் முடிச்சிட்டியே.. பறந்து போயிடுத்தோ...!!

pradeepkt
12-03-2007, 11:24 AM
ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்...