PDA

View Full Version : சூழல் விலங்கு..



poo
02-03-2007, 08:51 AM
என் தேடல்
வேறாக யிருக்கையில்
தேடி வந்ததாளொரு மங்கை...
மனதின் ஈர்ப்புச் சுழலில்
சிக்கிக் கொண்டவள்போலும்...

விலகியவனை
ஈர்த்தாள்... ஈர்த்தவளை
விலக்கினேன்..

நீ போதுமென்றாள்...இல்லை
சரி வராதென்றேன்..
நீ போதுமென்றாள்..இல்லை
இது கூடாதென்றேன்.

இல்லை இல்லை..
நீ வேண்டும் - தீயாய் தெறித்த
அவள் விழிகளில் தெரிந்ததோர்
தீர்க்கம்....
உள்ளெழுந்த யென்
வினாக்களை அமிழ்த்தினேன்..
விடை தேடும்
பயணமிதுவென அமிழ்ந்தேன்...

விழித்துக் கொண்டது...
விதியின் விதி இதுவெனில்...
மனதோரம் மண்டியிடத்
தொடங்கிய உணர்வுப்பிசாசு..தனை
விரட்டும் முயற்சியில்
உதட்டோரம் ஒட்டிய
சொச்ச ஈரங்களோடு
உதிர்க்கத் தொடங்கினேன்...

வாய்ப்பொன்று தராமல்
வழிபார்த்து நடைகட்டி
பொறுப்பாகிக் கொள்ளென
வேள்வியொன்றை உரசிவிட்டு
தீயான யென்
தந்தையின் விருப்பங்களை...

வாய்தாக்களை
வாங்கியபடி...தள்ளிப் போகும்
தருணங்களிலே...
தவிப்பாய் தவித்து..தனிமை தவிர்த்து..
அறுவடைக்கு
காத்திருக்குமென்
அக்காவின் உணர்வுகளை...

பருவப்பெயர்ச்சியில்
அரங்கேறும் புரட்சியால்
இருவேளை உணவோடு
இயற்கைக்கு எதிராய்
போராடிக் கொண்டிருக்கும்
என் தங்கையின்
ஒத்திவைப்பு அவலங்களை..

துடுப்பிழந்தபோது
துடிப்பிழக்க துணிந்து விட்டவளிடம்
வாதம்செய்து
சுற்றத்தை வதம் செய்யும்
முடிவினை உதறக்கேட்க..
வாங்கிய இடமெல்லாம்
வாக்களித்து.. என்னில்
நம்பிக்கையோடிருக்குமென்
தாயின் உறுதிகளை...

விருப்பங்களை..உணர்வுகளை..
அவலங்களை.. நெஞ்சுறுதிகளை.. யெல்லாம்
கொட்டினேன் - தீர்க்கவில்லை..

வறண்டுபோன
உதட்டோடு ஆரம்பித்த யென்
விழிகள் நனைந்து விட்டிருந்தன..

குரல் குளிர
விழுந்த யென் வரிகளை
விழுங்கிக் கொண்டிருந்தாள்..
அதே நேரம்
அவை யாயும் மற்றொரு
திசைநோக்கி திருப்பப்பட
தீர்ப்பெழுதப்பட்டு விட்டதை..
தீர்க்கப்படப்போவதை -
நானறியவில்லை..

உதிர்ந்தவைகள் கண்டு
அதிர்ந்து போகவில்லை - யவள்..
கண்களுக்குள் வலையொன்று
விரிவதாய் உள் தோன்றியதை
உதறியெழுந்தேன்...

கரம்பிடித்திழுத்தாள்...
கனிந்துவிடுவேன்போல..கலங்கினேன்..

பங்குதாரனாய்
எனை யழைக்கிறாள்..
பாங்குதான் சரியில்லை..

எல்லாவற்றிக்கும்
முடிவளிக்கிறேன்.. உறுதியளித்தாள்..
துளிர்க்கத் தொடங்கிவிட்டது
வியாபாரம்....

மூலதனமாய்
நீயொன்றும் தரவேண்டாம்..
எதைக் கேட்டாலும்
வாங்கித் தருவார் தந்தை....

மௌனித்தேன்...
"எதை" கேட்டாலும்
வாங்கித் தருவார் தந்தை...
யோசிக்க வைத்தது..
ஆகட்டும்..தினமொரு பிரச்சினை..
திணையொரு பிரச்சினையா..

என்னையும்
விற்றுக் கொள்ள முடிவெடுத்தேன்....

இந்த வியாபாரத்தில்
நட்டமில்லை.. என் சுயம்தவிர்த்து
வேறெதுவும் நட்டமில்லை!!

முடிந்தது
ஒப்பந்தம்..

கழுத்தை நீட்டிக் கொள்கிறேன் -
கூறிச் சென்றாள்..
ஓ... கலாச்சார எல்லை..
அப்படியாகின் அந்த
காதல்??!......

மன்மதன்
02-03-2007, 07:06 PM
காதல் .. கண்டிப்பாய் இருக்கும்.. இருக்கணும்..

காதல் எங்கே போகப்போகிறது. எல்லாத்தையும் பங்கு போட்டுகொள்வதுதானே வாழ்க்கை..

சூழ்நிலையை கவிதையாய் வடிப்பதில் பூ தொடுக்கும் அம்பு மனதை வருடத்தான் செய்கிறது...

இளசு
02-03-2007, 08:06 PM
குடும்ப பார நுகத்தடி..
காளை எருதுவானது..

மனதை சுகமான ரணமாக்கிய கவிதை...

வாழ்வியல் நிகழ்வுகளை
உணர்ச்சிக்கவிஞன் பூ வடிக்கப் படித்தால்
வரும் அலாதி அனுபவம் இதிலும்..

பாராட்டுகள் பூ...

அமரன்
02-03-2007, 09:24 PM
கழுத்தை நீட்டிக் கொள்கிறேன் -
கூறிச் சென்றாள்..
ஓ... கலாச்சார எல்லை..
அப்படியாகின் அந்த
காதல்??!......


வீரனாக களமாடி மடிந்து
மாவீரனாக வாழ்கின்றனர்
தியாக ராணுவத்தினர்
அவர்களைபோலத்தான் காதலை விட்டுப்பிரிந்தவர்களும். பூவின் வாசம் பரவ வாழ்த்துக்கள்.

அறிஞர்
02-03-2007, 09:59 PM
முடிந்தது
ஒப்பந்தம்..


கழுத்தை நீட்டிக் கொள்கிறேன் -
கூறிச் சென்றாள்..
ஓ... கலாச்சார எல்லை..
அப்படியாகின் அந்த
காதல்??!......


உணர்ச்சி கவிஞன் என்று மற்றவர்களை வாழ்த்தும் நீர் உண்மையிலே சிறந்த உணர்ச்சி கவிஞன்...

சூழ்நிலைகளை அழகாய் படம் பிடித்து காட்டியுள்ளீர்கள்..

பூவின் கவிதைகளால் மன்றம் மீண்டும் அழகு பெறுகிறது.