PDA

View Full Version : பூ அவர்களின் கவிதைக்கு ஒரு விமர்சனத் திரĬ



ஆதவா
01-03-2007, 05:43 PM
பூ அவர்களின் மூன்று கவிதைக்கும் சேர்த்து ஒரு திரியே ஆரம்பித்துவிட்டேன்.... மன்னிக்க நிர்வாகிகளே!! ஏதாவது வித்தியாசமாக செய்யவேண்டுமே!!

சற்று சுருக்கமாக எழுதிவிடுகிறேன்...


அந்திசாயும் நேரமது..
கடலலை காற்றுடன்
கைகோர்த்திருக்கையில் சந்தித்தேன்..
அந்த அதிர்ஷ்ட தேவதையை..

சில கவிதைகள் நெஞ்சை வருடும் படி அமைந்துவிடுகின்றன... க்ஷணநேரம் யோசித்தபிறகுதான் நமக்குள்ளும் இப்படி ஒரு யோஜனை இல்லை என்று தெளிவாகும். ஒரு கடற்கரையில் சாயுங்காலப் பொழுதில் வந்தமர்ந்த வேளையில் அதிர்ஷ்ட தேவதையைப் பார்க்கும் நாயகன், தானும் ஒரு அதிர்ஷ்டக்காரன் அந்த கிளிக்கு என்று அறியவில்லை... அகந்தைக் கண்களை மறைப்பது நல்ல குணங்கள்...

எண்ண வலைகளை
தன்னைச்சுற்றி பின்னலானாள்...
தூரமாகிப்போன வானம்..
நிமிர்ந்துப் பார்ப்பதில்லை யாதலால்..
விளிம்பைத் தொடும்முன்
விலாசமிழந்துவிடும் சிறகுகள்...
வளர வளர வெட்டப்படும்
உள்மன ஆசைகளும்கூட...

ஒரு கிளி,.. (பெண்கிளி.) அதிலும் சிறகுகள் வெட்டப்பட்ட கிளி, எண்ண வலைகளை பின்னுவது என்பது அந்த சதுரப்பெட்டிக்குள் எண்ணுவது... அழகாக வடிக்கப்பட்டு இருக்கிறது. அருமை பூ!! வானத்தை முழுவதுமாய் அனுபவிக்காத ஒரு கிளிக்கு அந்த பெட்டியின் விளிம்பே தொடுவானம்..



கணநேரம் விடுதலை
கனமான மனதோடு அவள்
கரைசேரும் கவலைகள்....
நிகழ்காலம் தொலைகையில்
எதிர்கால தேடல்கள் கேலிப்பொருள்
அவள் அகராதியில்..

சில நிமிடங்கள் மட்டுமே வானம் பார்க்கும் இவளின் கவலை கரை சேர நேரம் அதுவே! சோதிடக் கிளியைச் சொல்வதாக இருந்தாலும் சோதிடந்தனையிகழ் என்ற பாரதியின் வார்த்தை ரீங்காரமிடுகிறது... வார்த்தை அமைப்பு பிரம்மாண்டம்...


விரக்தியோடு வருபவரும்..
விதியை நிந்தித்து வருபவரும்
வரிசைக்கிரமப்படி
இவள்பின்னேதான்..
அறிந்தவள் அவள் மட்டுமே...
இல்லையேல் பறந்துபோய்விடும்
அதிர்ஷ்ட தேவதை பட்டம்..

சோதிடத்தை நம்பி பல காரியங்கள் கெட்டதுண்டு,,, அதிலும் கிளிக்கு எப்போதுமே அதிர்ஷ்டதேவதை பட்டம் கிடைத்துவிடும். எளிதில் ஏமாற்றாது.. ஏமாற்றுபவன் சோதிடன் மட்டுமே!! சிறு நிகழ்வு அடங்கிய துளியாக இந்த வரிகள் இருக்கிறது... மிக அருமை பூ!


என் கரம்சேர்ந்த அழகுதேவதை..
உண்மையில் அதிர்ஷ்ட தேவதை..
முடிவெடுத்தேன்..முற்றுப்புள்ளி
வைத்தேன்..
நிர்ணயித்த விலை
உனக்கானதல்ல...
உன்னை முடமாக்கி
நிர்மூலமாகி போனவனுக்கான
நிவாரணம்..

நாயகன் கையில் நாயகி.. சோதிடனிடமிருந்து வாங்கப்பட்ட கிளியை அழகாய் எழுதியிருக்கிறீர்கள்... கடைசி வரியில் சோதிடனின் நிலையும் தெளிவு செய்யப்பட்டது... சபாஷ்


விரிய விரும்பிய
சிறகுகளை வாஞ்சையாய் தடவினேன்....
வழக்கமாய் ஒலித்த
வரிகளை மறக்கச் செய்தேன்...
வாசங்களாய் பதியவைத்தேன்..
வாசகங்களை பிரதிபலித்தேன்..
கால மாற்றங்களில்
மாற்றங்கள் காலத்தோடு..

கிளியை இதுவரை நான் தொட்டுப் பார்த்ததில்லை.. ஒரு நிகழ்வை மனதில் எடுத்துக்கொண்டு எழுதியதுமில்லை... இப்போதூ தொடுகிறேன் காணுகிறேன்... ஒரு யதார்த்தம் இங்கே பதார்த்தமாய் தெளிக்கப்பட்டு இருக்கிறது. கடையிரண்டு வரிகள் மிக அருமை....


களங்கள் விரிய விரிய
சரியென சொன்னது
மனம்!..
அவளை விடுவிக்க நினைத்தேன்!!..
அழைத்துச் சென்றேன்..
அங்கே பார்..
நீல வானம் எத்தனை நீளம்..
இயற்கையாவும் உனக்கே சொந்தம்..
உன் சொந்தமெல்லாம் இயற்கையொன்றே..
உன்னைச்சுற்றி கம்பிகளில்லை..
உன் சிறகுகள் கத்தரிக்கப்படவில்லை...
உன் இமைகளுக்கிடையில்
விருப்பமானதை படமெடு..
பிரசவம் முடித்தையில்
முடியாதுபோனதே..மறந்திடு..
பரவசமாய் பறந்திடு...

ஒரு கிளியின் விடுதலை.... மிகத் தெளிவான எளிய நடை.. மேற்கண்ட வரிகளை அடுக்காமல் எடுத்து இங்கே பரப்பினாலே போதுமானது... விமர்சனம் தயார்... அந்த அளவுக்கு அருமையாக பின்னப்பட்டு விடுதலை அளிக்கப்படுகிறது ஒரு கிளிக்கு.... கடைசி மூன்று வரிகள் எனக்கு பல்வேறு அர்த்தம் அளிக்கிறது.. அங்கே கொஞ்சம் விளக்கவும்...

உயரே போ.. உயர..உயரே.. போ...
கரங்களிலிருந்து விடுவிடுத்தேன்..
மறுநொடியே
என் மடிதனில் சரணடைந்தாள்.....மீண்டும்..
மீண்டும்...மீண்டும்..!!

தடவிய வாஞ்சை.... தஞ்சமடைந்தது கிளீ..........


ஒரு கிளீயின் விடுதலை என்பது மிகச் சாதாரண நிகழ்வல்ல.. சமூகக் கவிதைகளில் இதுவும் ஒன்று.... எனக்கு ஆரம்பம் முதலே கவிதையை ஒருமாதிரியே பார்த்தேன்.... வீட்டில் அடைந்துகிடக்கும் ஒரு பெண்.. அவளை விடுவிக்க நினைக்கும் ஒரு ஆண்... ஆணின் வாஞ்சையில் பெண் கைகோர்கிறாள் அவனோடு.... என் கண்களுக்கு இப்படித்தான் தெரிகிறது.. தவறிருந்தால் மன்னிக்க... ஒரு ஆழமான ருசுவை அதிகப்படியான நீரூற்றி வளர்க்காமல் எளிமையாக கொண்டு சென்று இறுதியில் முடித்தவிதம் மிக அருமை... நான் முன்னமே சொன்னதுபோல விமர்சனம் இந்த கவிதைக்கு தேவையற்றது... கவிதையே ஒரு விமர்சனம் போல இருக்கும் போது வீணாக எதற்கு?,, நான் பல காலம் ஏங்கி இருக்கிறேன் இம்மாதிரி எளிமையாகவும் நேர்த்தியாகவும் கவிதை எழுத.... பூவுக்கே உரிய மென்மை தெறித்தோடுகிறது கவிதையில்ல்.... வாழ்த்துக்கள்...

ஆதவா
01-03-2007, 05:44 PM
காதலிக்கும்முன்
புரிந்தேன்.. நீ
கவிதையையும் காதலிப்பவள்..
மணந்தபின்
தெரிந்தேன்.. நீ
கவிதையை வெறுப்பவள்..


வித்தியாசமான கவிதைகள் உங்களிடமிருந்து...... உண்மை நிகழ்வுகளாய் தோன்றிவிடுகிறது எனக்கு.... கவிதையைக் காதலித்த காதலி, மனைவியானபின் வெறுக்கிறாள்... பெண்ணின் நிலையிலிருந்து கவிதை எழுதி பழக்கப்பட்ட நமக்கு முதன்முறையாக ஆணின் பார்வையில் கவிதை....


ஆயினும்...
விதையாக உனை நினைத்து
நான் பதிப்பதெல்லாம்
வினையாவதின் விவரமென்ன.
விபரீதமென்ன...

அது நீங்கள் கணவனாகிவிட்டீர்கள் அல்லவா???:D

கொவ்வைப்பழ உதடென்றால்..
எவளுடைய தென்கிறாய்..
கொடியிடையா ளென்றால்
கொலைபாதகி யாரென்கிறாய்..

சந்தேகப் புத்தி எப்போதுமே பெண்களுக்குண்டு என்பார்கள்... அது சிலருக்குத்தான் என்பது என் எண்ணம்,, நமது வர்ணிப்புகளின் அர்த்தம் காலத்திற்கு ஏற்ப மாறிவிடுகிறது பார்த்தீர்களா? ஆண் இந்தவகையில்தான் கஷ்டப்படுகிறானோ?


ஆயினும்..
அனுபவம் புதுமை
அனுபவிப்பது கொடுமை...

அதுவும் சரிதான்..... :D

அன்று
காதலுக்கு இனித்த
கனி நீ..
இன்று
கவிதைகளுக்கு கசக்கும்
காய் நீ....

கால மாற்றம்... கழுத்தில் ஏறிய கயிறு.... காதலிக்கும் போது இருந்த மனப் பக்குவம் மணத்திற்கு பின் இருப்பதில்லை... லைசன்ஸ் கிடைத்தபின் நாம் வண்டி ஓட்டும் விதமே தனிதான்... ஆனால் முன்போ மிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டுமே!

ஆயினும்..
உனக்கு மறந்துபோனதேன்..
கவிதைதான்
நம் திருமண உறவின் விதையென...
கவிதைதான்
நம் இருமனக் காதலின் உரமென..

அது மறந்துபோயிருப்பாள்.. காலம் கண்ணை மறைத்திருக்கும்.. காதல் என்ற சொல் மறந்திருக்கும்.. கவிதைகள் இப்போது வேப்பங்காய்களாய் தெரியும் அவளுக்கு....

உன் சுயநலம்
உன்னதமானதுதான்...
உருவகமெல்லாம்
உன்னைச்சுற்றி யிருப்பதில்
உளம் மகிழும் உன் சுயம்..
உள்வாங்கி தைத்திருக்கிறேன்...
இன்னமும் வைத்திருக்கிறேன்
உண்மை உணர மறுப்பதேன்..

அந்த சுயநலத்தையும் உன்னதமானதாக கருதும் இருதயம் ஆணுக்கு... மறந்திட்ட பெண்ணுக்கு உண்மை உணரமுடியவில்லை... சற்று யோசிக்கவேண்டி இருக்கிறது வரிகள்...

ஆயினும்..
நான் தொடுப்பதெல்லாம்
உனை விடுத்துதானென
உன்னை முடிவெடுக்க
வைத்ததெதுவென புரியாமல்
தவிக்கிறேன்..

தவிப்புகள் ஆணுக்கு மட்டும்தான்.. கல்யாணத்திற்கு பின்.. அவள் எடுத்த முடிவு அவளுக்கே தெரியாதிருக்கலாம்.. எளிய வரிகள்.. வார்த்தை சுகம்...


உன் அந்திம அகராதியில்
காதல் வேறு.. காதலி வேறு..
கல்யாணம் வேறு.. கவிதை வேறா...

உன்னுடன்
சேரவைத்த கவிதை..
உன்னுடன்
வாழவைத்த காதல்..
எதை விடுப்பேனென
நீ யறிவாய்... அது
நிறைவான நியதியாயென
நீ புரிவாயா...?

ஆயினும்..
தவறு உன்னுடையதல்ல...
காதல்... அநேகமாய் எழுதப்படுவதில்லை
அரங்கேற்றமானபின்....

இறுதி வரிகள் மிக அருமை....

ஒரு ஆணின் திருமணத்திற்கு பின் ஏற்படும் தவிப்புகள்... பெண் பார்வையில் பல கவிதைகள் கண்டிருக்கிறேன்.... எனக்கு அறிந்த வரையில் ஆண் பார்வையில் இதுவே முதல்முறையாக......... கவிதை படித்த மாத்திரத்தில் எங்கோ கொண்டு செல்கிறது அதன் பாதை.. ஒரு அழகிய கவிதை அப்படித்தானே இருக்கவேண்டும்.. மிக அழகு பூ!!!
உங்கள் கவிதையின் வாசனை என்றுமே கெடாது.............. அதற்கு விமர்சனம் செய்ய எனக்கு துளியும் தகுதி கிடையாது.... இது நிதர்சனமான உண்மை....

ஆதவா
01-03-2007, 05:45 PM
ஒரு பெண்ணின் பார்வையில் மல்லிகையை அவளின் தோழியாக குறிப்பிட்டு வித்தியாசமாக நட்பைக் கண்ணுக்கு காண்பித்திருக்கிறீர்கள்,, மிக அருமை... நீங்கள் கவிதையின் உச்ச நிலையிலிருக்கிறீர்கள்.... வாழ்த்தவே அருகதையல்லாதா சேறு நிலையில் நான்..... அருமை அருமை...

தினம்தினம்
என் துணைக்கு வருபவள் - என்னிடம்
இழப்பதற்கு இனி யெதுவுமில்லையெனினும்...

மணக்கும் மல்லிகையை தினமும் சூடிக்கொள்கிறாள் நாயகி.. இறுதி வரி என்னை மிகவும் கவர்ந்தது...

பிறப்பிலிருந்து
இறப்புவரை உடனிருப்பவள் - ஊர்சொல்லை
உதாசீனப்படுத்தி யென்
உடலிருப்பவள்..

எனக்கு இந்த வரிகள் புரிந்தும் புரியாமலும் இருக்கிறது... சற்று விளக்கவும்...


என் வலிகளையும் - என்னையறியா
சில கணச் சுகங்களையும்
மூச்சுக்காற்றின்
அனலில் பகிர்ந்து கொள்ளுபவள்..

அருமை தோழரே!!! கற்பனையென்றால் இப்படியல்லவா இருக்கவேண்டும்... ஒரு பெண்ணின் வலியை பூ அறிந்துகொள்வது என்ற வரிகள் இப்படி அருமையாக பூ எழுத என்ன வரம் வேண்டுமோ?

எப்போதுமென் சுமைகளையும்
சேர்த்து சுமப்பதவள் சாபக்கேடு..
மனமெண்ணும் மறுகணமே
மறக்கச் செய்வாள்
எனக்கே பரிச்சயமான
வாசமொன்றை வீசி
வாடாதேவென வாரியணைப்பாள்..
அடுத்தநாளெனை
மறுபிறவியெடுத்தவளாய் அலங்கரிப்பாள்..

சுமைகளை சுமப்பவள் தோழிமட்டுமல்ல இந்த பூவும்தான் என்று மிக அருமையாக படம்பிடித்து காட்டப்பட்டுள்ளது... மணப்பொழுதுகளில் மல்லிகையின்றி எதுவுமில்லை.. அதன் அலங்கார வளைவுகளில்தானே சொக்கிப் போகிறான் மாப்பிள்ளை.... எளிய வரிகள்.... மீண்டும் ஒரு சபாஷ்

அவளென் மனத்தோழி...
என்னை மணக்க வைப்பாள்..
மனம் மரக்கவைப்பாள்..
பலநேரம் மறக்கவும் வைப்பாள்
முன் நிகழ்வை.... முன்னெடுத்துரைப்பாள்
அவள் வாழ்வை..

உண்மைதான்... ஒரு பெண்ணின் வெறும் மணத்தோழி மட்டுமல்ல மனத்தோழியும் கூட..

அவளென் வாழ்க்கைத்தோழி...
எனைச் சார்ந்த
வயிற்றுக்கும் சேர்த்தே
வழிகாட்டும் நம்பிக்கைத்தோழி...

அடேயப்பா!! ஒரு சாதாரணப் பூவை இப்படி கற்பனை செய்யவே திறம் வேண்டும்..

என்னை
எச்சமாக்கிச் செல்லும்
எலும்புருக்கி கரையான்களுக்கு
எதிர்ப்புத் தெரிவிக்கவே
தினம் தினம்
கருகிக் கொண்டிருக்கிறாள்போலும் -
அந்த என் மல்லிகைத்தோழி!!..

இறுதி வரிகள்... வாழ்வின் இறுதிக்கட்டத்திலும் கூட வருபவள்...

பூ!!! நீங்கள் இப்படி கவிதை எழுதி என் வாயை அடைப்பீர்கள் என்று எதிர்பார்க்கவேயில்லை.. காதல் காதல் காதல் என்று சுற்றித் திரியும் என்னைபோன்றவர்களுக்கு மத்தியில் உங்களைப்போல சிலர் சம்மட்டி அடிக்கிறார்கள்... ஒரு பூ வாசனையை நுகரச் செய்து இதுதான் ஆதவா கவிதை என்று சொல்லாமல் சொல்லுகிறீர்கள்... அருமை.. எனக்கு சொல்லத்தான் வார்த்தை இல்லை... உற்சாகத்தோடு மீண்டும் படிக்கத் தோணுகிறது... தொடரட்டும் வெற்றி நடை... மிக எளிமையாக சென்று வாசம் வீசுங்கள்... (இப்போதே அப்படித்தான் இருக்கிறது..)

இளசு
01-03-2007, 08:05 PM
நெஞ்சார்ந்த பாராட்டுகள் ஆதவா..

உங்களைக் கவர்ந்த படைப்புகளுக்கு வரிக்கு வரி ஆழ்ந்து அமிழ்ந்து
அழகிய விமர்சனம் தரும் உங்களைப் பார்த்து
பொல்லாப்பில்லா பொறாமை உண்டெனக்கு...
(இந்த பொல்லாப்பில்லா பொறாமை - பூ முன்பு சொன்ன சொற்றொடர்..)

ஷீ-நிசி அவ்வப்போது இதே அளவு விமர்சனம் தருகிறார்..

ஏனோ -- எழுத நினைத்தாலும் என்னால் உங்கள் அளவுக்கு - ஏன்
அதில் ஓரளவுக்குக் கூட எழுத முடிவதில்லை..

நீங்கள் சேறு அல்ல..
பதப்படுத்தப்பட்ட கழனி..
போட்டவை பொன்னாகும் பூமி..

வாயார வாழ்த்தி மகிழ்கிறேன்..

பூவுக்கு இந்த பதிவு நல்லதொரு ஊக்கசக்தி...

முன்னர் நண்பன், ராம்பால் போன்றவர்கள் இதுபோல் ஒரு கவிஞரின் கவிதைகளை தனிப்பதிவாய் அலசிய நிகழ்வுகள் - மைல்கற்கள்..
அதில் ராம்பால் அலசல் ஒன்றின் தலைப்பு -
பூவேடமிட்ட புயல்...

நானும் நண்பனின் பதிவுகளை - மனஓவியம் என்ற தலைப்பில் அலசிய நினைவு நிழலாடுகிறது..

அந்த சுகக்காலங்கள்- ஆதவா, ஷீ-நிசி போன்றவர்களால்
மீண்டும் வலம் வரட்டும்..

ஷீ-நிசி
02-03-2007, 02:53 AM
நன்றி இளசு அவர்களே!

ஆதவா, விமர்சனங்கள் அருமை...

விமர்சனங்கள் கவிஞரை நிச்சயம் ஊக்கபடுத்திடும்....

விமர்சனம் முதலிரண்டு கவிதைகளுக்கு மிக அருமை ஆதவா..

ஆனால் அந்த கடைசி கவிதை 'என் தோழி' யின் கவிதையின் சாராம்சம்
'ஒரு விபச்சாரி பேசுகிறாள், தான் சூடிக்கொண்டிருக்கும் மல்லிகைப்பூவிடம்'

இந்தப் பார்வையில் தான் கவிஞர் எழுதியிருப்பார் என்று அறிகிறேன்..

ஆதவா
02-03-2007, 02:57 AM
நன்றி நண்பரே!! இப்போது முழுமையாக கவிதை விளங்கிற்று...

ஆதவா
02-03-2007, 02:59 AM
நன்றிங்க இளசு...

pradeepkt
02-03-2007, 03:27 AM
சபாஷ்... அருமையான விமர்சனம்.
முதற்கண் உங்கள் பங்களிப்பு என்னை வியக்க வைக்கிறது.

poo
02-03-2007, 08:09 AM
முதலில் நன்றிகளை சொல்லிவிடுகிறேன் ஆதவன். கூடவே என்னை ரொம்பவே மேலேற்றி இருக்கிறீர்கள்.. நான் உங்களைவிட தரத்தில் குறைவானவனே...

மீண்டும் வருகிறேன்...

மீண்டும் என் மனம்கவர்ந்த உறவுகளுக்கு நன்றிகள்.

ஆதவா
02-03-2007, 08:28 AM
தன்னைத் தரமிழப்பவனும் எப்போதுமே தரமுற்றவனே!!! உங்கள் வரிகள் மிக அழகு.... வாழ்த்துக்கள்.. நிறைய கவிதைகள் எதிர்பார்க்கிறோம்

poo
02-03-2007, 08:58 AM
ஆனால் அந்த கடைசி கவிதை 'என் தோழி' யின் கவிதையின் சாராம்சம்
'ஒரு விபச்சாரி பேசுகிறாள், தான் சூடிக்கொண்டிருக்கும் மல்லிகைப்பூவிடம்'

இந்தப் பார்வையில் தான் கவிஞர் எழுதியிருப்பார் என்று அறிகிறேன்..

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே...

கவிதையில்,

விபச்சாரி பேசுகிறாள்.. தான் சூடிக் கொண்டிருக்கும் மல்லிகையைப்பற்றி நம்மிடம்.. ஒருவேளை நம்மில் எவராவது அதிர்ஷ்டவசமாய் காது கொடுத்தால்.. இல்லையேல் இயற்கையோடு..


இன்னும் தொடருங்கள்.. உங்கள் அன்பையும்.. அலசலையும்!!

poo
02-03-2007, 09:03 AM
உண்மை அண்ணா.. எனக்கு இது ஊக்க சக்தி... நீங்களெல்லாம் என் ஆதாரப்புள்ளி...

நாங்கள் கவிதையென்ற பேரில் கஞ்சத்தனம் செய்வதை.. நீங்கள் பதில் பதிவுகளில் அநாயசமாய் அள்ளிவிடுவீர்கள்.. அந்த ஆற்றல் எனக்கிருந்தால் ஆயிரம் வரிகள் அமைத்து கவிதை எழுதிடுவேன்!

poo
02-03-2007, 09:26 AM
பிரசவம் முடித்தையில்
முடியாதுபோனதே..மறந்திடு..
பரவசமாய் பறந்திடு

-- கடைசி மூன்று வரிகள் எனக்கு பல்வேறு அர்த்தம் அளிக்கிறது.. அங்கே கொஞ்சம் விளக்கவும்...

பல்வேறு அர்த்தங்கள் வருமென நினைத்தேன்.. இருந்தாலும் ஒன்றை எடுத்தால் போதுமென நினைத்து உபயோகித்தேன்., பிரசவம் முடிந்ததும் நியதிப்படி என்னென்ன செய்திருக்குமோ.. கொஞ்சல்.. பறக்க முயற்சி.. படபடத்து பார்த்திருக்குமோ அச்சின்ன சிறகுகளை.. இன்னும் என்னென்னவோ... அதற்கெல்லாம் வாய்ப்பில்லாமல் அது எடுத்து வரப்பட்டுவிட்டதாகவும்.. இப்போது உனக்கு புதுப்பிறப்பென்றும்.. அனுபவியென்றும்.. - இந்த சாதாரண அர்த்தர்த்தில்தான் கையாண்டேன்..!!


பிறப்பிலிருந்து
இறப்புவரை உடனிருப்பவள் - ஊர்சொல்லை
உதாசீனப்படுத்தி யென்
உடலிருப்பவள்..

- எனக்கு இந்த வரிகள் புரிந்தும் புரியாமலும் இருக்கிறது... சற்று விளக்கவும்...

இதுவும் பெரிதாய் ஒன்றுமில்லை.. அந்த மல்லிகை பிறந்ததும்... மொட்டவழிந்ததும் அவள் கூந்தலேறுகிறாள்.. கருகி சிதறும்வரை உடனிருக்கிறாள்.. இன்னும் ஒரு அர்த்தம் இருக்கிறது.. ஆனால் அவை இலைமறைவாகவே இருக்கட்டும்!!


-----------------

விரிவான விமர்சனம்கண்டு மகிழ்ந்தேன்.. நன்றிகளும். காதல் கவிதைகள் எல்லோரையும் ஈர்க்கும்.. ஆனால் இவைபோன்றவைகள்?!...
மேலும் காதல் கவிதைக்கு வரிகள் தேடுவது கடினம்.. (!!!). கற்பனனகள் அதிகம் ஓடவேண்டும், நிறைய யோசிக்க வேண்டும்., ஆனால் இவையெல்லாம் நிகழ்வுகள்.. எளிதான வரிகளால் சொன்னால்தான் எளிதாய் புரியுமென நினைத்து எழுதுகிறேன்..

வேடந்தாங்கலில் வந்துபோகும் பறவையைப்போலவே என்னை நினைத்துக் கொள்கிறேன்.. சீசனுக்கு வருவதுபோல.. திடீரென்று வருகிறேன்.. பிரசவிக்கிறேன்.. பிறகேன் மறக்கறேன்.. புரியாத புதிர்...

இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கட்டும்.. அதுவரை எல்லோரும் இன்றுபோலவே இணைப்பாய் இருக்கட்டும்.. அதன்பின் மன்றம்.. கவிதை,.. என தினமும் அர்பணிக்க எண்ணியுள்ளேன்.. பார்க்கலாம்.. ஆண்டவன் கணக்கினை!!

_______________________

ஓவியன்
02-03-2007, 09:38 AM
உங்கள் விமர்சனங்களும் விளக்கங்களும் அருமை.

அமரன்
02-03-2007, 10:38 AM
முதலில் நன்றிகளை சொல்லிவிடுகிறேன் ஆதவன். கூடவே என்னை ரொம்பவே மேலேற்றி இருக்கிறீர்கள்.. நான் உங்களைவிட தரத்தில் குறைவானவனே

அனைவரும் பூகொடுத்து வாழ்த்துவதுதான் வழமையானது. ஆனால் இங்கே பூவுக்கே வாழ்த்துச் சொல்ல ஒரு வாய்ப்புத் தந்தது ஆதவானாயினும் தூண்டியது பூவல்லவா. நன்றிகள் இருவருக்கும். ஆதவன்-பூ இருவரும் இயற்கையானவர்கள் அதனால்தான் இயற்கையின் ஊற்றாக கவி பிறக்கின்றதோ.

பூவுக்கு பூவுலகில் எல்லோரும் உயர்ந்தவர்களே. உங்களை குறைத்துக் கூறியதன் மூலம் இன்னும் உயர்ந்துள்ளீர்கள் என் பார்வையில். அடுத்தவனை வேதனைக்குள்ளாக்கும் உலகில் கவிஞராலும் கலைஞராலுமே மற்றவர்களை அதிகம் சந்தோசப்படுத்த முடியும் என்பது எனது கருத்து. அந்தவகையில் நீங்கள் உயர்ந்தவரே.

சேரன்கயல்
02-03-2007, 10:41 AM
ஆதவனின் இந்த பங்களிப்பு சிறப்பூ...
பூவின் கவிதைகளும், ஆதவனின் அலசலும் நல்லா இணைந்திருக்கு...
வாழ்த்துக்கள் இருவருக்கும்...

(என்னமா எழுதறாங்கப்பா மக்கள்)