PDA

View Full Version : என் தோழி..poo
01-03-2007, 09:33 AM
தினம்தினம்
என் துணைக்கு வருபவள் - என்னிடம்
இழப்பதற்கு இனி யெதுவுமில்லையெனினும்...

பிறப்பிலிருந்து
இறப்புவரை உடனிருப்பவள் - ஊர்சொல்லை
உதாசீனப்படுத்தி யென்
உடலிருப்பவள்..

என் வலிகளையும் - என்னையறியா
சில கணச் சுகங்களையும்
மூச்சுக்காற்றின்
அனலில் பகிர்ந்து கொள்ளுபவள்..

எப்போதுமென் சுமைகளையும்
சேர்த்து சுமப்பதவள் சாபக்கேடு..
மனமெண்ணும் மறுகணமே
மறக்கச் செய்வாள்
எனக்கே பரிச்சயமான
வாசமொன்றை வீசி
வாடாதேவென வாரியணைப்பாள்..
அடுத்தநாளெனை
மறுபிறவியெடுத்தவளாய் அலங்கரிப்பாள்..

அவளென் மனத்தோழி...
என்னை மணக்க வைப்பாள்..
மனம் மரக்கவைப்பாள்..
பலநேரம் மறக்கவும் வைப்பாள்
முன் நிகழ்வை.... முன்னெடுத்துரைப்பாள்
அவள் வாழ்வை..

அவளென் வாழ்க்கைத்தோழி...
எனைச் சார்ந்த
வயிற்றுக்கும் சேர்த்தே
வழிகாட்டும் நம்பிக்கைத்தோழி...

என்னை
எச்சமாக்கிச் செல்லும்
எலும்புருக்கி கரையான்களுக்கு
எதிர்ப்புத் தெரிவிக்கவே
தினம் தினம்
கருகிக் கொண்டிருக்கிறாள்போலும் -
அந்த என் மல்லிகைத்தோழி!!..

pradeepkt
01-03-2007, 10:04 AM
போன கவிதையில் கண்மூடித் தனமான காதலைச் சொன்ன நீங்கள் இப்போது வாழ்க்கைத் துணை குறித்துச் சொல்கிறீர்கள் போலும். இந்தத் தோழி வாழ்க்கைத் துணையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆயினும் அப்படி இருந்தால் என்ன சுகம் என்ற கற்பனை விரிகிறது. ம்ம்ம்... இப்போது வேண்டிய கற்பனைதான்.

ஆனால், கவிதையில் தொடக்கம் முதல் கடைசி வரை ஒரு தன்னிரக்கம் தழுவிச் செல்வது போல் தோன்றுகிறது. அது என் உணர்வாயிருக்கலாம்! அந்தத் தன்னிரக்கம் ஒரு வேண்டாத தன் இளிவரலைத் தருகிறது. அது ஏன்?

பி.கு. பல இடங்களில் கணம் என்பதற்குப் பதில் கனம் என்றிருக்கிறது. அர்த்தம் மாறினால் பிரச்சினை. எனவே சரி செய்து விடுங்கள்.

poo
01-03-2007, 10:10 AM
எழுத்துப்பிழை சரிசெய்துவிட்டேன் ப்ரதீப்.. தனியே தட்டி பின், யுனிகோடில் மாற்றும்போது ஏதும் பிரச்சினையா என தெரியவில்லை. (கனமான பிரச்சினையாகிவிடும்போல)

கவிதை குறித்து.. உங்கள் புரிதலை நான் குறைகூறவில்லை. ஆனால் எழுதியது நீங்கள் குறிப்பிட்டுள்ள பார்வையில் அல்ல.., கவிதையில் நாயகனே கிடையாது... (என் கவிதைகள் பெரும்பாலும் இப்படியா புரிந்து கொள்ளப்படுகிறது.. கடவுளே!!... நான் திருந்த வேண்டுமோ!?)

ஆதவா
01-03-2007, 10:13 AM
இரவு படிக்கிறேன். நண்பரே!!!

pradeepkt
01-03-2007, 12:40 PM
எழுத்துப்பிழை சரிசெய்துவிட்டேன் ப்ரதீப்.. தனியே தட்டி பின், யுனிகோடில் மாற்றும்போது ஏதும் பிரச்சினையா என தெரியவில்லை. (கனமான பிரச்சினையாகிவிடும்போல)

கவிதை குறித்து.. உங்கள் புரிதலை நான் குறைகூறவில்லை. ஆனால் எழுதியது நீங்கள் குறிப்பிட்டுள்ள பார்வையில் அல்ல.., கவிதையில் நாயகனே கிடையாது... (என் கவிதைகள் பெரும்பாலும் இப்படியா புரிந்து கொள்ளப்படுகிறது.. கடவுளே!!... நான் திருந்த வேண்டுமோ!?)
வேறு பல மாறுபட்ட கோணங்களை வாசகனுக்குக் கொடுப்பதுதான் கவிதையின் வெற்றி. நீங்கள் திருந்த வேண்டியது இல்லை. நாங்கள்தான் இன்னும் பல தடவை உங்கள் கவிதைகள் படித்துப் புரிதலில் திருந்த வேண்டும்.

இளசு
01-03-2007, 08:19 PM
பாலியல் தொழிலாளியின் மல்லிகையை கருப்பொருளாக்கி
இப்படியும் கவிதை வடிக்க முடியுமா?

பூவால் முடியும்!

அவள் சுமக்கும் சுமையையும் சேர்த்து சுமக்கும் பின்னந்தலைப் பூ..
அவளையும் மீறி அவள் சிலிர்த்து அனுபவிக்கும் சில கணங்களை அறிந்த பூ..
வாடி உதிர்ந்தாலும் மறுபிறவி எடுத்தாற்போல் மறுநாள் கூந்தலில் சிரித்து அவள் வாழ்வியல் உருவகமாகி விட்ட பூ..

சில நாற்றங்களை மறக்க மரக்கச் செய்யும் பரிச்சய சுகந்தப்பூ..

------------------------

மங்கல சூழலில் மல்லிகை பற்றி ஆயிரம் பாடல்கள்-நித்திய
சுமங்கலிக் கூந்தலில் இருந்து இது முதல் பாடல்..

தாலி ஏறவில்லை - எனவே இறங்க வாய்ப்பில்லை.
இறக்கும் வரை இவளுக்கு மல்லிகைப்பூ (மட்டுமாவது) சாசுவதம்..!

ஷீ-நிசி
02-03-2007, 02:52 AM
நான் ரசித்த வரிகள்..

அவளென் மனத்தோழி...
என்னை மணக்க வைப்பாள்..
மனம் மரக்கவைப்பாள்..

கவிஞரின் இந்த வரிகள் ஒரு படி மேல்..

மனம் மரக்கவைப்பாள்..

மரக்கவைப்பாள் எழுத்துபிழையோ என்று நினைத்தேன்...

பின் தான் புரிந்தது.. மல்லிகை தன் வாசத்தால் முதலில் மணக்க வைக்கிறாள்... பின் வாடிய அவள் மனதை இதுதான் நம் விதியென்று மரக்க வைக்கிறாள்.. உணர்ச்சியற்று போக வைக்கிறாள்...

பூ உங்கள் கவிதைகள் எங்கள் எண்ணங்களை அதிகம் அலச சொல்கிறது...

pradeepkt
02-03-2007, 03:29 AM
ம்ம்ம்.. இப்பத்தாங்க புரியுது முழு கனமும்!!!
இன்னும் நான் என்னை நிறைய வாசிப்புகளுக்கு உட்படுத்த வேண்டும்.

mukilan
02-03-2007, 03:49 AM
எனக்கும் இளசு அண்ணாவின் விமர்சனம் படித்த பிறகுதான் புரிந்தது. உங்களின் சமூகப் பார்வை வியக்க வைக்கிறது பூ! எங்கே திடீரென காணாமற் போய்விடுகிறீர்கள்.

poo
02-03-2007, 08:05 AM
நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதனை முழுவதுமாய் புரிதலில் அண்ணன் என்றுமே முதலில் நிற்பார்..

ஷீ, ஆதவன் நீங்கள்தான் எனது சமீபகால வரவுக்கு தூண்டுகோல்..

வழக்கம்போல உங்கள் அனைவரின் அன்பில், ஆதரவில் மகிழ்கிறேன்..

நன்றிகளோடு மீண்டும் வருகிறேன்..

(நேரமின்மையால் அதிகம் பதில் சொல்லமுடியவில்லை.. மன்னிக்கவும் நண்பர்களே..)