PDA

View Full Version : 7ம் பகுதி கள்ளியிலும் பால்



gragavan
01-03-2007, 02:38 AM
ராஜம்மாள் அப்படிக் கேட்டதும் வாணிக்கு எரிச்சல் வந்தது. வெளியில் காட்ட விரும்பவில்லை. அத்தோடு அமைதியாக எடுத்துச் சொல்ல விரும்பி மெதுவாகவே கேட்டாள். "என்னம்மா சொல்ற?"

மகள் அப்படி மெதுவாகக் கேட்டதை தனக்குச் சாதகமாக நினைத்துக் கொண்டு வாயை விட்டார் ராஜம்மாள். "அதாம்மா....சந்தியாவை வீட்டுக்குக் கூட்டீட்டு வர்ரதப் பத்திச் சொன்னியே. அதத்தான் சொல்றேன். நீ பாட்டுக்கு நம்ம வீட்டுக்குள்ள சந்தியாவையும் பையனையும் கூட்டீட்டு வந்தா எல்லாரும் பேசுவாங்க? அத யோசிச்சியா?"

"யோசிச்சேன். நல்லா யோசிச்சேன். ஆனா நீ ஒன்னு யோசிக்கலையேம்மா. இப்ப நம்ம இருக்குறது நம்ம வீடு கெடையாது. மாமாவோட வீடு. அவர் கட்டுன வீடு. அதுல கண்ணனுக்கு எவ்வளவு பங்குண்டோ அவ்வளவு பங்கு சந்தியாவுக்கும் உண்டு. நீயோ நம்ம சொந்தக்காரங்களோ வர்ரது எல்லாரும் பேசும்படி இருக்கும்னு சந்தியா நெனக்கக் கூட உரிமையிருக்கு. ஆனா நெனைக்க மாட்டாங்க. அதுனால நம்மளும் நெனைக்க வேண்டாம்."

"அதில்ல. சந்தியாவுக்குக் கல்யாணமே ஆகலை. அதுதான் எனக்கு நெருடல். யார் கூட எந்த மாதிரிப் பழக்கமோ? கொழந்தை பொறந்தப்புறம் செயற்கையாச் செஞ்சதுன்னு கதை சொல்றா."

வாணியின் பொறுமை எல்லை மீறியது. "நிறுத்துமா. போதும். எதையும் தெரியாமப் பேசாத. அப்படியே சந்தியா யார் கூடயும் தொடர்பு வச்சிருந்தாத்தான் என்ன? இவ்வளவு பேசுற ஒங்கிட்ட ஒரு கேள்வி. இத்தன வருஷ வாழ்க்கைல அப்பாவைத் தவிர வேற எந்த ஆம்பிளையும் மனசால கூட நெனைச்சதில்லையா? இல்லைன்னு என்னால பொய் சொல்ல முடியாது. கல்யாணத்துக்கு முன்னால அஜீத்தையும் விஜயையும் மனசுல விரும்பினேனே. இப்பக் கூட சுட்டும் விழிச் சுடரேன்னு அசின் கூட சூர்யா பாடும் போதோ விக்ரம் சதாவத் துரத்தும் போதோ என்னோட மனசு குழையும். அது மட்டும் சரியா? கண்ணனுக்குக் கூடத்தான் நயன்தாரா பிடிக்கும். பாக்கும் போது கண்டிப்பா மனசுக்குள்ள அந்த நடிகையை நெனைக்காமலா இருக்கப் போறாங்க?"

"இதென்ன கூத்து? நெனைக்கிறதும் செய்றதும் ஒன்னா? இட்லீன்னு நெனச்சா வயிறு நெறைஞ்சிருமா?"

"இட்லீன்னு நெனச்சா வயிறு நெறையாது. ஆனா மனசுக்குள்ள இட்லி சாப்பிடனும்னு ஆசய வெச்சிக்கிட்டு இட்லி சாப்புடுறது தப்புன்னு சொல்றதுதான் தப்பு. ஆகையால....அடுத்தவங்க என்ன செய்றாங்கன்னு பாக்குறத மொதல்ல விடும்மா. நம்ம செய்ய வேண்டியதே நெறைய இருக்கு. அதுகளப் பத்தி யோசிப்போம். இனிமே இதப் பத்திப் பேச வேண்டாம். பேச எனக்கும் விருப்பமில்லை." உறுதியாகச் சொல்லி விட்டாள் வாணி. ராஜம்மாள் கடுகடுவென்று முகத்தை வைத்துக் கொண்டு நடந்தார்.

இது நடந்து மூன்று நாட்கள் ஆகி விட்டன. சந்தியா பரபரவெனக் கிளம்பிக் கொண்டிருந்தாள். விமான நிலையத்திற்கு. சரவணனை வரவேற்க. விடியற்காலையிலேயே மும்பை வந்து அங்கிருந்து கிங் ஃபிஷரில் சென்னை வருகிறான். ஜெல்லி ஐஸ்கிரீம் போலக் குளுகுளுவெனக் கிளம்பினாள். சரவணன் வருவதை ஏற்கனவே வீட்டில் சொல்லியிருந்தாள். சந்தியாவிற்கும் சரவணனுக்கும் உள்ள நட்பு(!) மட்டும் வீட்டில் தெரியுமாதலால் சந்தியாவின் பரபரப்பைச் சாதாரணமாகவே எடுத்துக் கொண்டனர். கத்திப்பாராவில் இன்னும் கட்டப்பட்டுக் கொண்டேயிருக்கும் மேம்பாலத்தையும் அது உண்டாக்கும் நெரிசலையும் சபித்தபடி காரை ஓட்டிக் கொண்டு ஒருவழியாக விமான நிலையத்திற்குள் நுழைந்தவளை வரவேற்றார் பெருமாள்சாமி. சரவணனின் தந்தை.

"என்ன சந்தியா. எப்படியிருக்க? சரவணன் வந்தாத்தான் ஒன்னப் பாக்க முடியுது. இல்லைன்னா நீ இருக்கியா இல்லையான்னே தெரியாது. வீட்டுல எல்லாரும் நல்லாயிருக்காங்களா?"

இவர் வருவார் என்று சந்தியா எதிர்பார்க்கவில்லை. முன்பெல்லாம் அவரை அடிக்கடி பார்த்துப் பேசியவள்தான். சுந்தரைச் சுமக்கத் தொடங்கியதிலிருந்து அவரைத் தவிர்த்து வந்தாள். அவர் வழியாகச் சரவணனுக்குக் குழந்தை பிறந்தது தெரிந்து விடுமோ என்ற பயந்தான். சரவணனுக்குத் தெரிந்தால் இல்லாத கேள்விகள் கேட்பானே. அதனால்தான் அவரைப் பார்த்ததும் வழிந்தாள். "நல்லாயிருக்கேன் அங்கிள். வீட்டுலயும் எல்லாரும் நல்லாயிருக்காங்க. நீங்க எப்படியிருக்கீங்க? ஆண்ட்டி எப்படி இருக்காங்க?"

"நான் நல்லாயிருக்கேன். இப்பல்லாம் கார் ஓட்டுறதில்லை. டிரைவர்தான். அதுனால ஏர்போர்ட்டுக்கு நானே வந்துட்டேன். ரிட்டையர் ஆயாச்சு வேற. வேற என்ன வேல வீட்டுல. சரியான நேரத்துக்குத்தான் நீயும் வந்திருக்க. பிளைட் வர்ர நேரந்தான்."

அறிவிப்புப் பலகையில் கம்ப்யூட்டர் கிங்பிஷர் வந்து இறங்கியதை ஆங்கிலத்திலும் தமிழிலும் இந்தியிலும் சொல்லியது. "வந்துருச்சு அங்கிள். ஃபிளைட் வந்துருச்சு. இன்னும் பத்து நிமிஷத்துல லக்கேஜ் எடுத்துக்கிட்டு சரவணன் சீக்கிரமா வருவான்னு நெனைக்கிறேன்." மனதிற்குள் ஒளித்துக் கொண்ட துள்ளல் குரலில் எட்டிப் பார்த்தது.

"ஆகா வந்தாச்சு. நல்லவேளை டிலே ஆகலை. உன்னோட பிரண்டு வந்ததும் சொல்லு. இந்த வாட்டி அவன் கல்யாணம் பண்ணிக்கனும்னு. நல்ல வரனெல்லாம் வருது."

சந்தியா மனதால் உடலால் உயிரால் சடன் பிரேக் போட்டாள். ஆனாலும் சமாளித்துக் கொண்டு, "என்ன அங்கிள். சரவணனுக்குக் கல்யாணமா?" என்று கேட்டாள்.

மனதுக்குள். "என்ன அங்கிள்! சரவணனுக்குக் கல்யாணமா?" என்று கேட்டாள். அதே கேள்விதான். ஆனால் தொனி மாறியிருந்தது.

"ஆமாம்மா. அவனுக்கேத்த நல்ல வரன்கள் நெறைய வருது. அதான்."

(வரும் அங்கிள் வரும். சரவணனோட மொத வரனே நாந்தான். நீங்க என்னடான்னா புதுப்புது வரனாப் பாக்குறீங்க. அவன் பாத்த வரன்களையெல்லாம் கணக்குப் பாக்க முடியுமா ஒங்களால!)

"அதுவுமில்லாம...எங்களுக்கும் பேரன் பேத்தியப் பாக்கனும்னு ஆசை இருக்காதா?"

(பேரன் பேத்தியப் பாக்கனுமா? ஏற்கனவே ஒங்களுக்குத் தெரியாம ஒரு பேரன் இருக்கான். பேரு சுந்தர். அது சரி....எனக்குத் தெரிஞ்சி ஒரு பேரந்தான். எனக்குத் தெரியாம எத்தன பேரு ஒங்களுக்குப் பேரனையோ பேத்தியையோ பெத்திருக்காங்களோ!)

"அத்தோட...அவன் வெளிநாட்டுல இருக்கான். வேண்டியத ருசியாச் செஞ்சு சாப்பிடவும் தெரியாது. கண்டதத் தின்னுக்கிட்டிருப்பான். அவனுக்குன்னு ஒருத்தி வந்துட்டான்னா வீட்டுச் சாப்பாடு கெடைக்கும். ஒடம்புக்கும் நல்லது."

(சரவணனே ஒரு 5 ஸ்டார் ஹோட்டல். அங்க கெடைக்கிற விருந்துகளே எக்கச்சக்கம். அதுவுமில்லாம சரவணன் கைப்பக்குவம் எப்படீன்னு எனக்குத் தெரியும். அவனோட பிரியாணின்னா...சரி...அதெல்லாம் ஒங்களுக்கு எங்க புரியப் போகுது! சொல்லத்தான் முடியுமா!)

"அதாம்மா...நீ அவன் கிட்ட எடுத்துச் சொல்லு. அது சரி. நீயும் சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்கமா. நீங்க ரெண்டு பேரும் ஒன்னாப் படிச்சவங்கதான. சரவணன் கிட்ட நான் சொல்றேன். அவன் வந்து ஒன்னைய சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்கச் சொல்வான்."

(ஆகா! சரவணன் கிட்ட நான் சொல்லனும். எங்கிட்ட சரவணன் சொல்லனும். கிழிஞ்சது போங்க! ரெக்கமெண்டேஷனுக்கு நல்ல ஆளப் பிடிக்கிறீங்களே! நான் அவன் கிட்ட முதலிரவுக்குத்தானே ரெக்கமெண்டேஷன் செய்ய முடியும்!)

"அந்தா! சரவணன் வந்துட்டாம்மா." அப்பாவைப் பார்த்துக் கையை அசைந்த சரவணனுக்குள் சந்தியாவைப் பார்த்ததும் கோக்கோகோலா பொங்குகிறது. சந்தியாவும் இன்ஸ்டண்ட் எனர்ஜியைப் புன்னகையிலும் பரவசத்திலும் காட்டி வரவேற்றாள்.

"எப்படி இருக்கீங்கப்பா?" என்று அப்பாவைக் கேட்டவன் அப்படியே திரும்பி, "ஹே சந்தி, என்னது இது? திடீர்னு அழகாயிட்ட? பியூட்டி பார்லர் போயிட்டு வந்தியா?" என்று கிண்டினான். பொய்க் கோபத்தைக் கண்களில் கொப்பளித்து விட்டு மகிழ்ச்சியாகச் சிரித்தாள் சந்தியா.

"என்னப்பா, அம்மாவும் நீங்களும் ஏர்ப்போர்ட்டுக்கு வருவீங்கன்னு சொன்னீங்க? அம்மா வரலையா?"

"இல்லப்பா. ஒரு நல்ல வரன் வந்திருக்கு. ஒனக்குதான். அது சம்பந்தமா பேச ஒன்னோட மாமா வந்திருக்காரு. அவரோட பேசிக்கிட்டிருக்கா. அதுனால நான் மட்டும் கெளம்பி வந்தேன். வீட்டுக்குப் போய் எல்லாம் பேசிக்கலாம். சந்தியா, நீயும் வீட்டுக்கு வர்ரியாம்மா?"

தொடரும்...

மதி
01-03-2007, 04:22 AM
சரி...
அடுத்த பாகம் எப்போ...???

கதை போற போக்கை கணிக்க முடியவில்லை..பாராட்டுக்கள் ராகவன்.!

pradeepkt
01-03-2007, 04:59 AM
சரி...
அடுத்த பாகம் எப்போ...???

கதை போற போக்கை கணிக்க முடியவில்லை..பாராட்டுக்கள் ராகவன்.!
கதை போற போக்கைக் கணிக்க முடியாததினால பாராட்டா?

ராகவா, முன்ன நீங்க தொடர் எழுதும்போது ஓவ்வொரு அத்தியாயத்திலும் ஏதாச்சும் பக்குனு இருக்கும். இந்தத் தடவை கத்தி மேல நடக்குறதுனால ரொம்பக் கவனமா இருக்கீங்களோ???

ஒண்ணும் புரியலீங்க.

மனோஜ்
01-03-2007, 06:38 AM
மனதின் என்னங்கள் அழகாய் தொடருங்கள்.....

SathishVijayaraghavan
01-03-2007, 11:00 AM
இப்போதுதான் படித்தேன்... அடுத்த பாகம் விரைவில் பதியுங்கள்... ஆர்வம் கூடிக்கொண்டே போகிரது...

மன்மதன்
04-03-2007, 02:33 PM
மொத்தம் எத்தனை பாகம்..?

gragavan
06-03-2007, 04:50 AM
மொத்தம் எத்தனை பாகம்..?தெரியாதுப்பா!

gragavan
06-03-2007, 04:58 AM
கதையைப் படித்துக் கருத்திட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் எதிர்பார்ப்புகளை வருகின்ற பாகங்கள் பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன்.

ஓவியா
06-03-2007, 02:10 PM
புதுமையை புகத்தும் கதையாசிரியர் ராகவனுக்கு வாழ்த்துக்கள்.

அந்த உதடும் மனமும் பேசும் வசனம் தூள்மாமே...:D

ஆனால் இதேல்லாம் நடைமுறை வாழ்வில் நடப்பது அறிதுதான்.


மீதி பாகத்தை ஆவலுடன் எதிற்ப்பார்க்கும்
ஓவியா

gragavan
07-03-2007, 09:41 AM
நன்றி ஓவியா. இன்னும் சிறப்பாக எழுத முயல்கிறேன்.

ஓவியா
08-03-2007, 12:18 PM
நன்றி ஓவியா. இன்னும் சிறப்பாக எழுத முயல்கிறேன்.

ஒரே ஆச்சர்யமா இருக்கு நன்பா பதிவுக்கு பதில் போட்டு இருக்கீக..
கொஞ்ச நாளா நீங்க என் பதிவுக்கு பதில் போடுவதில்லை அதான் :cool:

கத நல்லா போகுது.

ராகவா
அன்மையில் தங்களுக்கு எதாவது போட்டியில் முதல் பரிசு கிடைத்ததா????? :confused:

pradeepkt
09-03-2007, 04:04 AM
ஒரே ஆச்சர்யமா இருக்கு நன்பா பதிவுக்கு பதில் போட்டு இருக்கீக..
கொஞ்ச நாளா நீங்க என் பதிவுக்கு பதில் போடுவதில்லை அதான் :cool:

கத நல்லா போகுது.

ராகவா
அன்மையில் தங்களுக்கு எதாவது போட்டியில் முதல் பரிசு கிடைத்ததா????? :confused:
எனக்கும்தாங்க ஆச்சரியமா இருக்கு. அவரு எப்பவுமே யாருக்குமே பதில் போட மாட்டாரே... ஏன் உங்களுக்கு மட்டும் பதில் போட்டாரு... :rolleyes:

ஓவியா
09-03-2007, 11:49 AM
எனக்கும்தாங்க ஆச்சரியமா இருக்கு. அவரு எப்பவுமே யாருக்குமே பதில் போட மாட்டாரே... ஏன் உங்களுக்கு மட்டும் பதில் போட்டாரு... :rolleyes:

ராகவரே வந்து பதில் போடும்மையா...:)


சைக்கில் கேப்பில்
அந்த 9ம் பாகம் எப்ப வருதாம் :)