PDA

View Full Version : ஆயினும்!?..poo
28-02-2007, 10:10 AM
காதலிக்கும்முன்
புரிந்தேன்.. நீ
கவிதையையும் காதலிப்பவள்..
மணந்தபின்
தெரிந்தேன்.. நீ
கவிதையை வெறுப்பவள்..

ஆயினும்...
விதையாக உனை நினைத்து
நான் பதிப்பதெல்லாம்
வினையாவதின் விவரமென்ன.
விபரீதமென்ன...

கொவ்வைப்பழ உதடென்றால்..
எவளுடைய தென்கிறாய்..
கொடியிடையா ளென்றால்
கொலைபாதகி யாரென்கிறாய்..

ஆயினும்..
அனுபவம் புதுமை
அனுபவிப்பது கொடுமை...

அன்று
காதலுக்கு இனித்த
கனி நீ..
இன்று
கவிதைகளுக்கு கசக்கும்
காய் நீ....

ஆயினும்..
உனக்கு மறந்துபோனதேன்..
கவிதைதான்
நம் திருமண உறவின் விதையென...
கவிதைதான்
நம் இருமனக் காதலின் உரமென..

உன் சுயநலம்
உன்னதமானதுதான்...
உருவகமெல்லாம்
உன்னைச்சுற்றி யிருப்பதில்
உளம் மகிழும் உன் சுயம்..
உள்வாங்கி தைத்திருக்கிறேன்...
இன்னமும் வைத்திருக்கிறேன்
உண்மை உணர மறுப்பதேன்..

ஆயினும்..
நான் தொடுப்பதெல்லாம்
உனை விடுத்துதானென
உன்னை முடிவெடுக்க
வைத்ததெதுவென புரியாமல்
தவிக்கிறேன்..

உன் அந்திம அகராதியில்
காதல் வேறு.. காதலி வேறு..
கல்யாணம் வேறு.. கவிதை வேறா...

உன்னுடன்
சேரவைத்த கவிதை..
உன்னுடன்
வாழவைத்த காதல்..
எதை விடுப்பேனென
நீ யறிவாய்... அது
நிறைவான நியதியாயென
நீ புரிவாயா...?

ஆயினும்..
தவறு உன்னுடையதல்ல...
காதல்... அநேகமாய் எழுதப்படுவதில்லை
அரங்கேற்றமானபின்....

ஷீ-நிசி
28-02-2007, 10:19 AM
அற்புதமா எழுதுறீங்க பூ கவிதைகளை.. காதலிக்கும்போது கவிதை அவர்களுக்கு பிடிக்கவில்லை என்று உங்களுக்கு தெரியாமல் போனதென்ன.. அல்லது அன்று அவர்கள் கவிதை பிடிப்பதாய் உங்களுக்காக சொன்னார்களா.. கவிதை புரியாமல் போனாலென்ன.. புரியாமல் போன நிகழ்வை வைத்தே ஒரு கவிதை படைத்து அவர்களுக்கு காட்டிடுங்கள்.. அல்லது இந்தக் கவிதையேயே கூட காட்டிடுங்கள்...

உங்கள் எழுத்துக்கள் என்னை மிகவும் கவர்கின்றன நண்பரே!

pradeepkt
28-02-2007, 12:43 PM
எப்பவுமே காதலிக்கும் போது இருக்கும் பல தேவைகள், திறமைகள், அதுகள் இதுகள் எதுவுமே கலியாணத்தின் பிறகு இருப்பதில்லை.

எனக்கென்னவோ காதலிக்கும் போது ஒரு துணை அடுத்தவரை எப்படியாகிலும் கவர்ந்து விட வேண்டும் என்று இருப்பதை இல்லாததாய்க் காட்டுவதாகவும் அல்லது அடுத்தவரிடம் இல்லாததைக் கூட இருப்பதாய் நம்புவதாகவும் படுகிறது.

சும்மாவா சொன்னாங்க, இதுக்குக் கண்ணு காது கை காலு மூளை எதுவுமே இல்லைன்னு...

பூ, உணர்வுகள் அற்புதம். அதை வெளிப்படுத்தியமைக்குத் தொப்பியைத் தூக்கிவிட்டேன்.

மன்மதன்
28-02-2007, 04:28 PM
பிரதீப்பை ஊட்டி (தொப்பி தூக்கி பாறை) மாதிரி குளிரவைத்த கவிதை எழுதிய பூவிற்கு பாராட்டுகள்...!!

ஆதவா
28-02-2007, 06:48 PM
மிக அருமை பூ!! ஒரு விமர்சனம் செய்பவனாக எனக்கு இதன் விமர்சனம் செய்யவே தோணவில்லை... ஒரு கவிதைக்குள் மிக நீளமான அர்த்தம் பொதிந்து மிதந்து கிடக்கிறது.. இதற்கு என் விளக்கம் எதற்கு?... நன்கு பழுத்த அனுபவம் உடையவர்கள் எழுதும் கவிதை இது... நாங்கள் வெறும் பிஞ்சு.

வரிகள் அமைப்பை விடுங்கள்... அர்த்தம் தான் மெய்சிலிர்க்க வைக்கிறது.. இம்மாதிரி ஒரு கவிதை எழுதவில்லை என மனம் ஏங்குகிறது... இது ஆணுக்கும் பொருந்தும்தானே!??

சரி குறிப்பாக ஒரு இடம் நான் சிலாகித்ததை குறிப்பிடுகிறேன்.அன்று
காதலுக்கு இனித்த
கனி நீ..
இன்று
கவிதைகளுக்கு கசக்கும்
காய் நீ....


உன்னுடன்
சேரவைத்த கவிதை..
உன்னுடன்
வாழவைத்த காதல்..
எதை விடுப்பேனென
நீ யறிவாய்... அது
நிறைவான நியதியாயென
நீ புரிவாயா...?


மற்ற எல்லா வரிகளும் அருமையாக இருந்தது... மேலுமொருமுறை படிக்கத்தூண்டுகிறது....

மனோஜ்
28-02-2007, 07:10 PM
உள் உணர்வுகள் வெளிபடுத்துகிறது பூ அவர்களே கவிதை அருமை

poo
01-03-2007, 09:22 AM
வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றிகள்...

ஆதவன் விமர்சிக்க தயங்குவதைப்போல தோணுகிறது.. மன்றத்தில் பதிப்பதே விமர்சனம் நோக்கித்தான்..

ஆதவா
01-03-2007, 10:11 AM
அட அதெல்லாம் இல்லீங்க... இன்னிக்கு ஒரு புடி புடிச்சிடறேன்..

poo
01-03-2007, 10:19 AM
ஹிஹி... இனிமே இந்தப் பக்கமே வரவிடாம பண்ணிடுங்க..

ஏன் விமர்சனம் கேட்கிறேன் என்றால், என் கவிதைகள் எத்தனை பார்வையில் பார்க்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளத்தான்..

நானென்னவோ தெளிவாத்தான் எழுதறாப்போல இருக்கு.. எப்படியாயினும் அண்ணன், அறிஞர் இவர்களெல்லாம் கப்புன்னு பிடித்து விடுவார்கள்..

இளசு
01-03-2007, 08:37 PM
ஒரு ஆதாரமான கேள்வியை வைத்து
பூ பின்னிய இந்த ஆழ்ந்த கவிதைக்கு
முதலில் பாராட்டுகள்..

ஆயினும்..

குக்கர் விசில் அடிக்க
வியர்வைக் கசகசக்க
பெரியவள் தலைவாரக் கூப்பிட
சிறியவன் ஈரம் பண்ணி அலம்பல் செய்ய..

கவிதை ரசிக்க நேரம் ஏது?

மாற்றம் ஒன்றே மாறாதிருப்பது..


கன்னி தாயாவதைப் போல...
சில பயணப்பதைகள் ஒருவழியில் மட்டுமே....!

ஆண் சூரியன்
அன்றும் இன்றும்...

பெண் நிலவு
வளர்பிறையில் கண்டதை
தேய்பிறையில் எதிர்பார்த்தால்?

பூவின் கேள்விக்கு கவியரசே பதில் சொல்ல இயலும்..

இப்படி ஆயினும்...

பாதையெல்லாம் மாறிவரும்
பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்துகொண்டால்
மயக்கம் தெளிந்துவிடும்..!

poo
02-03-2007, 08:11 AM
அண்ணா... எத்தனை நாட்களாகிவிட்டது..இப்படி உங்கள் பாராட்டை... சரளமாய் ஓடிவரும் வரிகளை படித்து சிலாகித்து...

நன்றிகள் அண்ணா..

தங்க கம்பி
02-03-2007, 08:16 AM
ஒவ்வொரு வரிகளும் அருமை. வாழ்த்துக்கள்.

டாக்டர் அண்ணாதுரை
02-03-2007, 08:32 AM
அழகான வரிகள்.
-ஆனந்த்.

poo
02-03-2007, 09:00 AM
நன்றி.. நன்றி நண்பர்களே...

உண்மையில் எனக்கு சில வரிகள் மட்டுமே தெரிகிறது.. அவற்றையே மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதாய் தோன்றுகிறது.. வரியின் தேடலுக்கு முழுமையான தனிமை.. அமைதி தேவை.. அதுவெங்கே அமைகிறது!!?

kavitha
02-03-2007, 10:17 AM
வரியின் தேடலுக்கு முழுமையான தனிமை.. அமைதி தேவை.. அதுவெங்கே அமைகிறது!!?
நியாயமான ஆதங்கம்! கவிதையையும் சேர்த்துத்தான் சொல்கிறேன் பூ...
இதே ஆதங்கம் கூட மனைவியிடத்தும் இருக்கலாம்.. சூழலை அமைத்துக்கொடுங்கள்; சுகப்படுங்கள்.

ஆதவா விமர்சனங்கள் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.

இளசு அண்ணா இங்கே இருக்கையில் வர இயலாத கவியரசைத் தேடுவானேன்!?!

அமரன்
02-03-2007, 10:27 AM
கை பிடித்து பூ நுகர
கையெல்லாம் பூவாசம்
மை பிடித்து பூ கவிவடிக்க
நம்மனம் எல்லாம் .........
ஆனந்த ராகம்

பூ அவர்களே உங்கள் கவிதை நன்று. பிடித்த வரிகள் என்று எதையும் சுட்ட முடியவில்லை. எல்லாமே பிடித்திருந்தால் எப்படிச் சுட்டுவது.

பிச்சி
02-03-2007, 11:21 AM
கவிதை அருமையாக இருக்கிறது...