PDA

View Full Version : சிதம்பர ஜாலம் - பலிக்கவில்லைpradeepkt
28-02-2007, 10:11 AM
நிதிநிலை அறிக்கையை முழுமையாகக் கண்டேன். இப்போதுதான் அலுவலகம் வந்தேன்

பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சமீபத்திய மூன்று தேர்தல்களில் இரண்டில் காங்கிரஸை மண் கவ்வ வைத்த ஜோரில் தயாராக இருந்தார்கள். அத்தோடு குவாத்ரோச்சி வேறு அவர்களுக்கு ரகசிய உற்சாகம் அளித்து வந்தாரல்லவா? அவ்வப்போது அந்த உற்சாகம் சத்தமாக வெடித்து சபாநாயகர் கெஞ்சலாகவும் கொஞ்சலாகவும் அதட்டலாகவும் அடக்க வேண்டி வந்தது. சோனியாவும் மன்மோகனும் அதைவிடப் பெரிய ஆச்சரியமாக அத்வானியும் வாய்மூடி மௌனிகளாக நிதிநிலை அறிக்கை முழுவதும் இருந்தனர். வாஜ்பாயைக் காணவில்லை.

ஆயிரங்கோடிக்கணக்கில் வரி போட்டார், ஆயிரங்கோடிக்கணக்கில் வரி எடுத்தார் ... அதற்கெல்லாம் அசராத பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாய் மற்றும் பூனை உணவுகளுக்கு வரிவிலக்கு என்றதும் கொதித்து எழுந்தார்கள். எப்போதுமே இப்படி ஒரு அஸ்திரத்தை வைத்து அவர்களைத் திசை திருப்புவதை சிதம்பரம் ஒரு கலையாகவே வைத்திருக்கிறார். இன்னொரு விஷயம் அவ்வப்போது ஆளுங்கட்சித் தரப்பில் இருந்து எழுந்த கூச்சல்களை சும்மா "ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்" என்று சிதம்பரமே அடக்கினார். சோனியா மர்மமான புன்னகையுடன் அதைப் பார்த்திருந்தார்.

பட்ஜெட்டில் மாதச் சம்பளம் வாங்குவோருக்குப் பெரிய மாற்றமில்லை. ஒரு பக்கம் 1000 ரூ. வரிவிலக்கு அளித்துவிட்டு இன்னொரு பக்கம் 1% அதிக சர்சார்ஜ் ஏற்றி விட்டார் சிதம்பரம். இந்த 1% உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்விக்கானது என்று அறிவித்திருக்கிறார். ஏற்கனவே பாலர் கல்விக்கான 2% இன்னும் தொடரும். இதை யாராலும் மறுத்துப் பேச இயலாது. எப்படிப் பார்த்தாலும் உங்கள் வரி ஒரு பைசா கூடக் குறையாது. அதிகரிக்க மட்டுமே செய்யும்.

விவசாய அறிவிப்புகள் தவிர சிதம்பரத்தின் முழு நோக்கமும் விலைவாசி மற்றும் பண வீக்கத்தைக் கட்டுப் படுத்துவதில் மட்டுமே இருந்தது. பெட்ரோல் டீசல் விலைக் குறைப்பால் எண்ணெய்க் கம்பெனிகளின் நஷ்டத்தை ஈடு கட்டக் கூட ஒரு சிறு திட்டம் வைத்திருக்கிறார். தேயிலை, காப்பி மற்றும் தென்னை மறுபயிருக்கு வேறு வரிவிலக்கு அளித்திருக்கிறார்.

வாட் வரிகளும் பல பொருட்களுக்குக் குறைக்கப் பட்டு இருக்கின்றன. தொலைத் தொடர்பு வரிகளை ஒருமுகப் படுத்த ஒரு திட்டத்தைத் தொலைத் தொடர்பு அமைச்சகம் அளிக்கும்.

சிறப்பாகச் செயல்பட்டமைக்காக இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரி (ITI) களுக்கு சிறப்புச் சலுகைகளும் இரண்டு வேளாண் பல்கலைக் கழகங்களுக்கு (அதில் ஒன்று கோவையில்) சிறப்பு நிதியாக ரூ. 50 கோடியும் அளித்திருக்கிறார்.

எனக்கு அனைத்து அம்சங்களிலும் மிகப் பிடித்தது ஊனமுற்றோருக்கான வேலை வாய்ப்பு. எந்த ஒரு ஊனமுற்றோருக்கு நிரந்தர வேலை அளிக்கும் நிறுவனத்திற்கும் பரிசாக நிறுவனத்தின் சார்பாக அவருக்கு அளிக்க வேண்டிய நிரந்தர வைப்பு நிதியை மூன்று வருடங்களுக்கு அரசாங்கமே அளிக்கும் என்றார். அதிலும் சிறப்பு இது மாதம் ரூ. 25000 சம்பாதிப்பவர் வரைக்கும் பொருந்தும்... யாரும் ஏமாற்றாத வகையில் பயந்தரும் நல்ல திட்டம். வாழ்க!

ராணுவ நிதியாக 96000 கோடி ரூபாய் வழங்கப்பட்டு பாஜக வாய் அடைக்கப் பட்டிருக்கிறது.

மற்றவை எல்லாம் ஒன்றும் அவ்வளவு பெரிதாகச் சொல்லக் கூடிய ஒன்றுமில்லை. பங்குச்சந்தை காலங்கார்த்தாலேயே 500 புள்ளிகள் கம்மியாகத் தொடங்கியது. சேவை வரி வலை பெரிதாக்கப் பட்டதும் பெரிதாக வரிச் சலுகைகள் இல்லாமல் போனதும் தலைகீழாக ஆக்கி விட்டன. கடைசியாகப் பார்த்தபோது ஒரு 350 புள்ளிகள் டைவ் அடித்திருந்தது.

மற்றவை நாளை விவாதங்களுக்குப் பிறகு!

மக்களே! உங்கள் கருத்துகள் என்ன?

மன்மதன்
28-02-2007, 05:37 PM
உன் கருத்துதான் என் கருத்து பிரதீப்.:D கரிகாலன் அண்ணா வந்தா புட்டு புட்டு வைப்பார்..

மயூ
28-02-2007, 05:50 PM
அட கணனி வல்லுனர் ஒரு நிதியியல் வல்லுனர் ஆனார்.... :) :)

pradeepkt
01-03-2007, 04:26 AM
உன் கருத்துதான் என் கருத்து பிரதீப்.:D கரிகாலன் அண்ணா வந்தா புட்டு புட்டு வைப்பார்..
ஆமா, அண்ணனைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நேத்துப் பூரா மனசே சரியில்லை.

லேட்டா ஆபீசு வந்துட்டுச் சீக்கிரமே போயி உன் மொழியில் சோகம் தாங்காம நல்லா டின்னிட்டுத் தூங்கிட்டேன் :D :D

pradeepkt
01-03-2007, 04:32 AM
அட கணனி வல்லுனர் ஒரு நிதியியல் வல்லுனர் ஆனார்.... :) :)
அட நீ வேற...
நல்லா ஆனேன் நிதியியல் வல்லுனனா!!! நேத்து ஒரு வரிகட்டு வல்லுநரா நான் நொந்த கதை இதுடா தம்பி... :)

praveen
01-03-2007, 05:17 AM
இதுவரை வந்த எந்த பட்ஜெட்டை எதிர்கட்சிகள் ஏற்றுக் கொண்டன. தாங்கள் ஆளுங்கட்சியாய் இருக்கும் போது வரிச்சலுகை செய்தால் ஆஹா, அதுவே எதிராளி செய்தால் அய்யய்யோ, இது தானே நடக்கிறது.

கழுதையின் முதுகில் அதிக பாரத்தை ஏற்றி பின் அது பார்க்கும்படி ஏதாவது ஒரு பொருளை தூர எறிந்து அதை சந்தோசத்தோடு அதிக பொதி சுமக்க வைப்பது ஒரு டெக்னிக் தானே.

மக்களுக்கு ஏதாவது ஒருவகையில் வரிச்சுமை ஏற்றுவதும், ஒருசில பொருட்களுக்கு வரிச்சலுகை அளிப்பதும் வருடா வருடம் நடப்பது தானே.

pradeepkt
01-03-2007, 05:27 AM
அது என்னமோ உண்மைதாங்க.
இந்த முறை மாதச் சம்பளக்காரர்களுக்கு அதிக சலுகை அளிக்கவில்லை. போனதடவை இப்படி அதிக சலுகை அளித்ததனால் பலர் இந்த வட்டத்துக்குள் வந்தனர். இப்படி வந்தபிறகு சலுகை தேவையில்லாமல் போய்விட்டது.

அதிலும் கல்வித்துறைக்கும் விவசாயத்திற்கும் இம்முறை அதிக ஒதுக்கீடு தேவைப்பட்டதால் வேறு வழியின்றி நிதிநிலை அறிக்கையில் மாதச் சம்பளக்காரர்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டனர்.

அந்த ஆதங்கம்தான் எனக்கு.

இளசு
01-03-2007, 07:09 AM
பிரதீப் முதுகில் டின்னு கட்டிய சிதம்பரத்தினால்
பிரதீப்பும் முன்னிரவில் டின்னு கட்ட..

சோகத்தையும் களைகட்ட சொன்ன பதிவுக்கு ஷொட்டு!

கல்யாணம் கட்ட மண்டபம் போனாலும் சேவை வரி
கல்விக்கு பிள்ளையை பள்ளி அனுப்பினாலும் சேவை வரி..

கோடி கோடி வரி பாக்கி வச்சா - தள்ளுபடி..
இரண்டு லட்சம் சம்பாதித்தால் - சுளுக்கு..

-------------------------------

ஹார்வார்டு படிப்பு மேதைகளை விட
லாலு-வேலு பரவால்ல போல!

pradeepkt
01-03-2007, 10:38 AM
நன்றி அண்ணா,

ஒரு வகையில் பார்த்தால் இது பண முதலைகளுக்கு எதிரான நிதிநிலை அறிக்கையும் கூட. இன்றைக்குக் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற ஒரு சிறந்த உபாயம் கலியாணங்கள்தான். அதற்கு ஆப்பு வைத்திருக்கிறார் சிதம்பரம்.

மற்றபடி அந்தக் கோடிக் கோடி வரித் தள்ளுபடிகள் எல்லாமே உண்மைதான் அண்ணா... லாலு வேலு மீது மக்கள் தைரியமாக நம்பிக்கை வைக்கலாம் என்று அவர்கள் எப்போதோ நிரூபித்து விட்டார்கள். பேசாம நிதித்துறையை லாலுகிட்டக் கொடுத்திட்டா என்ன???

மயூ
01-03-2007, 03:03 PM
இந்தியப் பொருளாதாரத்தில என்னவெல்லாமோ நடக்குது... ம்ஹூம்.... நடக்கட்டும் நடக்கட்டும்.

தங்க கம்பி
01-03-2007, 06:21 PM
ஹார்வார்டு படிப்பு மேதைகளை விட
லாலு-வேலு பரவால்ல போல!

கோடியில் ஒரு வார்த்தை இது. அருமை நண்பரே!

மன்மதன்
01-03-2007, 06:22 PM
பேசாம நிதித்துறையை லாலுகிட்டக் கொடுத்திட்டா என்ன???

நல்ல ஐடியா.. லாபகரமாக நடத்துவார்..;) ;)

pradeepkt
02-03-2007, 04:02 AM
ஆனா நேத்திக்கு சிதம்பரம் பேட்டிகளைப் பல தொலைக்காட்சிகளில் பார்த்தேன். பல பொருளாதார வல்லுநர்களின் கிடுக்கிப்பிடி கேள்விகளைச் சும்மா ஜஸ்ட் லைக் தட் எதிர் கொண்டார். எந்தத் தயக்கமும் இல்லாமல் இப்படி ஒரு வெகுஜன எதிர்ப்பைப் பெற்ற நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த பிறகு இப்படிப் பல தொலைக்காட்சிகளுக்குத் தனித்தனியாகப் பேட்டி கொடுக்கத் துணிந்தமைக்கே அவரைப் பாராட்ட வேண்டும். இவரைப் போன்ற தமிழக அரசியல்வாதிகள் ஒரு பேட்டியிலேயே கல்லாக் கட்டியதை மறக்க வேண்டாம்!

நாம் கேட்க நினைத்த அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொன்னார். அப்பதில்களில் பெரும்பாலானவை எனக்கும் ஏற்புடையதாக இருந்தன.

அத்தனையும் பார்த்த பிறகு இவர் செய்தது சரியோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

pradeepkt
02-03-2007, 04:03 AM
நல்ல ஐடியா.. லாபகரமாக நடத்துவார்..;) ;)
நாட்டின் நிதி அமைச்சகமும் லாபத்தைக் குறிக்கோளாகக் கொண்டால் உருப்பட்ட மாதிரிதான் :D :D

pradeepkt
02-03-2007, 04:03 AM
இந்தியப் பொருளாதாரத்தில என்னவெல்லாமோ நடக்குது... ம்ஹூம்.... நடக்கட்டும் நடக்கட்டும்.
ஏன் இந்த அங்கலாய்ப்பு??? :D :D

mukilan
02-03-2007, 05:14 AM
என்னவோ புரிஞ்சா மாதிரி இருக்குது. ஆனாப் புரியலையே!