PDA

View Full Version : கூண்டுக்கிளி...



poo
27-02-2007, 09:58 AM
அந்திசாயும் நேரமது..
கடலலை காற்றுடன்
கைகோர்த்திருக்கையில் சந்தித்தேன்..
அந்த அதிர்ஷ்ட தேவதையை..

எண்ண வலைகளை
தன்னைச்சுற்றி பின்னலானாள்...

தூரமாகிப்போன வானம்..
நிமிர்ந்துப் பார்ப்பதில்லை யாதலால்..

விளிம்பைத் தொடும்முன்
விலாசமிழந்துவிடும் சிறகுகள்...

வளர வளர வெட்டப்படும்
உள்மன ஆசைகளும்கூட...

கனநேரம் விடுதலை
கனமான மனதோடு அவள்
கரைசேரும் கவலைகள்....
நிகழ்காலம் தொலைகையில்
எதிர்கால தேடல்கள் கேலிப்பொருள்
அவள் அகராதியில்..

விரக்தியோடு வருபவரும்..
விதியை நிந்தித்து வருபவரும்
வரிசைக்கிரமப்படி
இவள்பின்னேதான்..
அறிந்தவள் அவள் மட்டுமே...
இல்லையேல் பறந்துபோய்விடும்
அதிர்ஷ்ட தேவதை பட்டம்..

என் கரம்சேர்ந்த அழகுதேவதை..
உண்மையில் அதிர்ஷ்ட தேவதை..
முடிவெடுத்தேன்..முற்றுப்புள்ளி
வைத்தேன்..

நிர்ணயித்த விலை
உனக்கானதல்ல...
உன்னை முடமாக்கி
நிர்மூலமாகி போனவனுக்கான
நிவாரணம்..

விரிய விரும்பிய
சிறகுகளை வாஞ்சையாய் தடவினேன்....

வழக்கமாய் ஒலித்த
வரிகளை மறக்கச் செய்தேன்...

வாசங்களாய் பதியவைத்தேன்..
வாசகங்களை பிரதிபலித்தேன்..

கால மாற்றங்களில்
மாற்றங்கள் காலத்தோடு..

களங்கள் விரிய விரிய
சரியென சொன்னது
மனம்!..

அவளை விடுவிக்க நினைத்தேன்!!..
அழைத்துச் சென்றேன்..

அங்கே பார்..
நீல வானம் எத்தனை நீளம்..
இயற்கையாவும் உனக்கே சொந்தம்..
உன் சொந்தமெல்லாம் இயற்கையொன்றே..
உன்னைச்சுற்றி கம்பிகளில்லை..
உன் சிறகுகள் கத்தரிக்கப்படவில்லை...
உன் இமைகளுக்கிடையில்
விருப்பமானதை படமெடு..
பிரசவம் முடித்தையில்
முடியாதுபோனதே..மறந்திடு..
பரவசமாய் பறந்திடு...

உயரே போ.. உயர..உயரே.. போ...
கரங்களிலிருந்து விடுவிடுத்தேன்..
மறுநொடியே
என் மடிதனில் சரணடைந்தாள்.....மீண்டும்..
மீண்டும்...மீண்டும்..!!

pradeepkt
27-02-2007, 01:01 PM
கணநேரம் விடுதலை

முழுக் கவிதையையும் இன்னும் பல தடவை வாசித்துப் பொருள் கொள்ள வேண்டும்... வெகு நாட்களுக்குப் பிறகு கவிதை படைத்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துகள். இன்னும் நிறைய எழுதுங்கள்.

அறிஞர்
27-02-2007, 01:11 PM
கூண்டிலிருந்து விடுவித்தவனின்
அன்புக்கு அடிமையாகி விட்டதோ...
அந்த கூண்டுக்கிளி...

அருமை பூ.....

இன்னும் அதிக கவிதைகளை எதிர்பார்க்கிறோம்.

அமரன்
27-02-2007, 02:08 PM
மிகவும் நன்றாக இருக்கின்றது. திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டுகின்றது. தொடருங்கள் நண்பரே.

இளசு
27-02-2007, 08:19 PM
பணிச்சுமைக்கு ஓய்வு - மாற்றுப்பணி என்பார் என் அப்பா..
(Change of work is relaxation)..

ஒரு அடிமைத் தனத்துக்கு மாற்று - இன்னொன்று..

இப்படி சட்டென உதாசீனப்படுத்த முடியவில்லை -
பூ விடுவித்த கிளியின் முடிவினை...

அதிர்ஷ்டம், வியாபாரம்..
அதற்கு கூண்டு, நெல்...

விடுதலை, வியாபித்தல்..
விரும்பியபடி பறக்க, படம் பிடிக்க ஊக்கல்..

ஆனாலும் மடியில் சரணம் மீண்டும்,...மீண்டும்..!

முந்தைய அடிமைத்தனத்துக்கு - நிர்ப்பந்தம் காரணம்
பிந்தைய ஒப்பந்தத்துக்கு - மன பந்தம் காரணம்..

காலங்கள் மாறி கிளி பறந்தால்
வாழ்த்தி வழியனுப்ப
பரந்த மனம் வேண்டும்..வானை விடப்
பரந்த மனம் வேண்டும் மனமே!..


---------------------------------

ஒரு இடைவெளிக்குப் பிறகு கவிதைச் சரம் தொடுக்கத் தொடங்கி இருக்கும்
அன்புத் தம்பி பூவுக்கு அண்ணனின் வாழ்த்துகள்..பாராட்டுகள்..

தொடரட்டும் சரம் தொடுக்கும் விரல்களின் பணி..

poo
28-02-2007, 07:02 AM
என்னை என்றென்றும் அரவணைக்கும் அண்ணன், அறிஞர், பிரதீப் மற்றும் நண்பர்கள் எல்லோருக்கும் நன்றிகள்..

நான் மீண்டு(ம்) வரவேண்டும்.. என்பதுதான் என் விருப்பமும்.. ஏனிந்த தொய்வு என என்னால் விடைகாண முடியவில்லை.. என் மூளை மழுங்கிவிட்டதா .. இல்லை மனம் மரத்துவிட்டதாயென அடிக்கடி கேள்வி எழுகிறது!!..

சேரன்கயல்
28-02-2007, 08:22 AM
என்னை என்றென்றும் அரவணைக்கும் அண்ணன், அறிஞர், பிரதீப் மற்றும் நண்பர்கள் எல்லோருக்கும் நன்றிகள்..

நான் மீண்டு(ம்) வரவேண்டும்.. என்பதுதான் என் விருப்பமும்.. ஏனிந்த தொய்வு என என்னால் விடைகாண முடியவில்லை.. என் மூளை மழுங்கிவிட்டதா .. இல்லை மனம் மரத்துவிட்டதாயென அடிக்கடி கேள்வி எழுகிறது!!..

அன்புப் பூ...
மண்டை காய்ந்து திரியும் என் போன்ற மர (மண்டை)ங்கள் சொல்லவேண்டியதை கவிதாயாய் பூக்கும் நீங்கள் சொல்லலாமா...
இவ்வளவு அழகா தமிழில் கவிதை எழுதிவிட்டு மூளை மழுங்கிவிட்டது என்றால் எப்படி...

ஆதவா
28-02-2007, 09:28 AM
இரவு படிக்கிறேன் நண்பரே!!

ஷீ-நிசி
28-02-2007, 09:54 AM
சூப்பர்ப் கவிதை பூ... சூப்பர்ப்...

அற்புதமாக உள்ளது இக்கவிதை...

கூண்டில் இருக்கும் அந்த சதுர வடிவ பெட்டியின் கம்பிகுள்ளிருக்கும் கிளியின் நிலைப் பற்றின கவிதை..

மாலை நேரத்தில் கடற்கரையில் அமர்ந்துக்கொண்டிருக்கும் ஒருவன்!

கூண்டுக்கிளியோடு அவ்வழியே ஒருவன்!

கூண்டுக்குள்ளேயே இருப்பதால் கிளியால் வானத்தை நிமிர்ந்து பார்த்திட முடியாது!

பறக்க விட்டாலும் பத்தடி உயரத்திலிருந்து மீண்டும் பூமிக்கே விழுந்துவிடும்.. சிறகுகள் வெட்டபட்டதால்..

வளர வளர
வெட்ட வெட்டபடும் உள்மன ஆசைகளும் கூட..

இந்த இடத்தில் சிறகுகள் வெட்டபட்டன என்பதை நேரடியாக புகுத்தாமல் உள்மன ஆசையோடு சேர்த்து சொல்லியிருப்பது சபாஷ்!

நிகழ்காலமே சரியில்லாத கிளியால் மனிதர்களின் எதிர்காலத்திற்கு என்ன வழி கூறிட முடியும்..

அவன் அக்கிளியை வாங்கி பறக்கவிட்டாலும் அது அவனிடமே வருகிறது...

மீண்டும்! மீண்டும்!

வாழ்த்துக்கள் நண்பரே! தொடர்ந்து உங்கள் கவிதைகளை எதிர்பார்க்கிறேன்!

மன்மதன்
28-02-2007, 04:55 PM
அன்புப் பூ...
மண்டை காய்ந்து திரியும் என் போன்ற மர (மண்டை)ங்கள் சொல்லவேண்டியதை கவிதாயாய் பூக்கும் நீங்கள் சொல்லலாமா...
இவ்வளவு அழகா தமிழில் கவிதை எழுதிவிட்டு மூளை மழுங்கிவிட்டது என்றால் எப்படி...

என்னையும் சேர்த்துக்கோங் சேரன்.. பூ எப்படி அப்படி சொல்லலாம்.. ;) ;)

ஆதவா
28-02-2007, 06:31 PM
கவிதை மிக அருமை பூ!! ஏற்கனவே பெருந்தலைகள் இங்கே தேவையான அளவு அலசிவிட்டார்கள்... நான் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன்..
கூண்டுக் கிளியின் விடுதலையோடு அதன் வாஞ்சையை கடைசி வரியில் அடக்கி இருக்கிறீர்கள்.. மிக அருமையான கவிதை... ஒரு பூவுக்கே உரிய மென்மையான வரிகள்... சில வரிகள் நெஞ்சம் மீண்டும் படிக்கச் சொல்லுகிறது..... கிளியைப் போல உங்களைச் சுற்றி வருகிறது கவிதைகள்..

வாழ்த்துக்கள்.

மன்மதன்
28-02-2007, 06:39 PM
அப்படியெல்லாம் சொல்லகூடாது ஆதவா.. கவிதை பக்கத்தில் நீங்க அடக்கிவாசிக்காதிங்க.. உங்க ஸ்டைல் விமர்சனம் எப்பவும் அருமைதான்..அதையும் கொடுங்க..

poo
01-03-2007, 09:24 AM
நன்றி மன்மதன்..

ஆமாம் ஆதவன்.. அப்படியெல்லாம் சொல்லக்கூடாது!!

பிச்சி
02-03-2007, 11:16 AM
கவிதை அருமை..