PDA

View Full Version : 6ம் பகுதி கள்ளியிலும் பால்gragavan
27-02-2007, 01:48 AM
அந்த வாரம் படபடவென ஓடியது. சனிக்கிழமையும் வந்தது. ஏற்கனவே சிவகாமியிடம் தொலைபேசியில் சொல்லியபடி வாணி பெசண்ட் நகர் வந்தாள். கண்ணனுக்கும் ராஜம்மாளுக்கும் மதிய உணவைக் காலையிலேயே தயாரித்து வைத்து விட்டு அரவிந்தைத் தூக்கிக் கொண்டு காரில் கிளம்பி வந்து விட்டாள்.

வாணி வந்ததும் சந்தியாவின் அப்பார்ட்மெண்ட் கலகலப்பானது. வாணிக்கு நன்றாகச் சமைக்க வரும் என்றாலும் இந்த மாதிரி பெசண்ட் நகர் வருகையில் சிவகாமியின் கைப்பக்குவத்தைத்தான் விரும்புவாள். வாரயிறுதியில்தான் பெரும்பாலும் வருவதால் மீன், கோழி என்று எதாவது எடுப்பார்கள். நிறைய செய்து வாணியிடம் கண்ணனுக்கும் கொடுத்தனுப்புவார் சிவகாமி. அன்றைக்கு வஞ்சிர மீன்.

சனிக்கிழமைக்கே உரிய சோம்பலுடன் சந்தியா மிகவும் தாமதமாக எழுந்து இன்னமும் குளிக்காமல் இருந்தாள். அரவிந்தோடு விளையாடிக் கொண்டிருந்த சுந்தரை வாணியே குளிப்பாட்டினாள். வாணியிடம் சுந்தர் நன்றாக ஒட்டிக் கொண்டான். பிறகு ஹாலில் சுந்தரராஜன், வாணி, சந்தியா உட்கார்ந்து கண்ணன் வாங்கப் போகும் காரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அடுக்களையில் வேலைக்கு வரும் ஜான்சி இருந்ததால் சிவகாமி உள்ளே வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.

"ஜென் எஸ்டிலோப்பா. கருப்புதான் வாங்கனும்னு அடம் பிடிச்சாங்க. நாந்தான் குறுக்க விழுந்து தடுத்திட்டேன். அதுவும் எப்படி? எனக்குப் பிங்க் கலர்தன் வேணும்னு அடம் பிடிச்சேன். கடைசியில ரெண்டு பேருக்கும் பொதுவா முடிச்சோம். ஹா ஹா ஹா." சொல்லிச் சிரித்தாள் வாணி. கண்ணனை எப்படி வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்று தெரிந்தவள் அவள்.

"ஆகா. ஒனக்குச் சொல்லிக் குடுக்கனுமா?" சந்தியா பாராட்டினாள். "ஒனக்கு நெனைவிருக்கா? ஒங்களுக்குக் கல்யாணம் ஆன புதுசுல தேநிலவுக்கு அவன் தாய்லாந்து போகனும்னு அடம் பிடிக்க...நீ எகிப்து போகனும்னு அடம் பிடிக்க...கடைசீல நீ விருப்பப் பட்ட மாதிரியே சிங்கப்பூர் மலேசியா போயிட்டு வந்தீங்களே!" அவனுக்குச் சரி நீதான். வஞ்சகமில்லாமல் நாத்தனாரைப் புகழ்ந்தாள் சந்தியா.

எல்லாரும் சிரித்து மகிழ்ந்து இருக்கையில் ஒரு கொக்கியைப் போட்டாள் வாணி. "அடுத்த வாரம் வெள்ளிக் கிழமை மதியத்துக்கு மேல கார் டெலிவரி எடுக்கச் சொல்லீருக்காங்க. அன்னைக்கு நீங்களும் வாங்கப்பா. கார் எடுத்துட்டு நேரா அகஸ்தியர் கோயிலுக்குப் போய் பூஜை போட்டுட்டு டின்னர் வெளிய போலாம். சந்தியா, நீங்களும் சுந்தரும் கண்டிப்பா வரனும்."

வாணியின் திடீர் அழைப்பு அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது. வாணியே தொடர்ந்தாள். "என்ன அமைதியாயிட்டீங்க. இப்படியே இருக்க முடியுமா? கொஞ்சம் கொஞ்சமா வரப் போக இருந்தா பழகீரும். பழையபடி எல்லாரும் ஒரே வீட்டுல இருக்க முடியும்னு தோணலை. ஆனா வரப்போக கண்டிப்பா இருக்கனும். அதுதான் நல்லது."

சுந்தரராஜன் முதலில் பதில் சொன்னார். "வாணி, நீ சொல்றது கேக்கும் போதும் நெனைக்கும் போதும் நல்லாயிருக்கு. ஆனா வேலைக்காகுமா? பொதுவுல யாருக்கும் இதுனால பிரச்சனை வரக்கூடாது."

"அப்பா, நீங்க நெனைக்கிறது புரியுது. அன்னைக்கு அம்மா பேசுன மாதிரி யாரும் பேசுவாங்களோன்னு பயப்படுறீங்க. மொதல்ல பேசுவாங்கப்பா. ஆனா போகப் போக அமைதியாயிருவாங்க. இன்னமும் சொல்லப் போனா இந்த வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு நா. அப்படி வந்தும் என்னையும் இந்தக் குடும்பத்துல ஒருத்தியா நெனைக்கிறதாலதான் இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு கொண்டு வரனும்னு நெனைக்கிறேன். விரும்புறேன். ஒரு வாட்டி எல்லாரும் அங்க வந்தீங்கன்னா சரியாப் போகும்." கெஞ்சும் தொணியில் முடித்தாள் வாணி.

எல்லாருக்கும் அந்த ஆசை இருக்கத்தான் செய்தது. அதனால்தான் வாணி சொன்னதும் அந்த ஆசை இன்னமும் பெருகியது. சரி என்று சொல்லிவிட சுந்தரராஜனும் சிவகாமியும் துடித்தனர். ஆனால் முடிவெடுக்க வேண்டியது சந்தியா. அதனால் ஆவலுடன் அவள் முகத்தையே பார்த்தனர். பெற்றோரின் விருப்பம் சந்தியாவிற்குப் புரிந்தும் இருந்தது. அவர்கள் விருப்பத்தை மீறி பலதைச் செய்திருந்ததால் இந்த விஷயத்திலாவது அவர்களுக்கு ஒரு நிம்மதி கொடுக்க நினைத்தாள்.

"சரி வாணி. கண்ணன் மேல எனக்கு வெறுப்பெல்லாம் கிடையாது. ஆயிரம் இருந்தாலும் அவன் என்னுடைய தம்பி. அவனை என்னால விட்டுக் கொடுக்க முடியாது. அன்னைக்கு வீட்டுல எங்கிட்ட அப்படிப் பேசினாலும் ஊருக்கு முன்னாடி அவன் என்னை விட்டுக் கொடுத்ததில்லைன்னு எனக்கும் தெரியுமே. உன்னையும் எனக்கு நல்லாத் தெரியும். உன்னோட எடத்துல வேறொரு பொண்ணு இருந்திருந்தா என்ன நடந்திருக்கும்னே என்னால யோசிக்க முடியலை. கண்ணன் மட்டுமில்ல, நாங்களும் ரொம்பக் குடுத்து வெச்சவங்கதான். அப்பாம்மாவுக்காக மட்டுமில்ல உனக்காகவும் இந்த முடிவுக்கு நான் ஒத்துக்கிறேன். எடுத்த எடுப்புலயே நான் வர்ரத விட மொதல்ல சுந்தரக் கூட்டீட்டுப் போ. கண்ணனும் சுந்தரும் மொதல்ல பழகுனா அப்புறம் நான் வர்ரது லேசாயிரும். சரியா?" புன்னகையோடு கேட்டாள்.

பெரிய பிரச்சனையாகுமோ என்று பயந்திருந்த வாணிக்குச் சந்தியாவின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியைத் தந்தது. இன்னும் இரண்டு நாட்களில் சரவணனின் வருகையை நினைத்து நினைத்து மகிழ்ச்சியாக இருந்த சந்தியாவிற்கு எல்லாமே நல்லதாகவே நடப்பது போன்ற மகிழ்ச்சி. தலைக்குக் குளித்து விட்டு வந்து அனைவரோடும் உட்கார்ந்து மதிய உணவை முடித்தாள். நன்றாக இருந்த வஞ்சிர மீனை எல்லாரும் மிச்சம் வைக்காமல் ஒரு பிடிபிடித்தனர். வாணி மறந்தாலும் சிவகாமி கண்ணனுக்காக தனியாக ஏற்கனவே சில துண்டுகளைத் தனியாக எடுத்து வைத்திருந்தார். சிறிய தூக்கத்திற்குப் பிறகு நான்கு மணிக்கு மேல் ஏலக்காய் டீ குடித்து விட்டு வாணியும் அரவிந்தும் டி.நகருக்குக் கிளம்பிப் போனார்கள்.

மாலையில் கண்ணனிடம் மெதுவாகப் பேச்சைத் தொடங்கினாள். "கார் எடுக்க அப்பாவும் அம்மாவும் வர்ரதாச் சொல்லீருக்காங்க. அப்புறம் பாருங்க...சுந்தர் எங்கிட்ட நல்லா ஒட்டிக்கிட்டான். போன வாட்டி போனப்பவே கீழ எறங்க மாட்டேன்னு அடம் பிடிச்சான். தூக்கி வெச்சுக்கிட்டேயிருந்தேன். இந்த வாட்டி அவனை நாந்தான் குளிப்பாட்டினேன். நல்லாச் சிரிக்கிறான்." ஏதோ இயல்பாகச் சொல்வது போலச் சொன்னாள்.

கண்ணனுக்கும் சதை ஆடத்தான் செய்தது. "ஒங்கிட்ட ஒட்டிக்கிட்டானா? போன வாட்டி வாங்கீட்டுப் போன டிரஸ் சரியா இருந்ததா? அவனுக்கு மொட்டை வேற எடுக்கனும். அதுக்கு என்ன பண்ணப் போறாங்களோ. காது வேற குத்தனும்."

தன் பங்கிற்கு வாணியும் நன்றாகவே ஊசியேற்றினாள். "ஆமாங்க. திருப்பரங்குன்றம் போகனுமே. ஒங்களுக்கும் லீவு கெடைக்கனும். ஒங்க மடியில் வெச்சுத்தான மொட்டை எடுக்கனும். அப்பா கிட்டச் சொல்லி சனி ஞாயிறுல வர்ர மாதிரி நல்லநாள் பாக்கச் சொல்லனும். கண்ணுக்குள்ளயே இருக்கான் சுந்தர். அடுத்த வாட்டி போகும் போது அவனையும் தூக்கீட்டு வந்திரப் போறேங்க." ஏதோ அப்பொழுது தோன்றுவது போலச் சொன்னாள்.

"ஏய்! நீ பாட்டுக்கத் தூக்கீட்டு வந்திராத. சந்தியாவால அவனை விட்டுட்டு இருக்க முடியுமா? அப்புறம் அவன் அழுதான்னா என்ன பண்றது?"

"அதுவும் சரிதாங்க. காரெடுக்க அப்பாவும் அம்மாவும் வரும் போது அவனைத் தூக்கீட்டு வரச் சொல்வோம். அப்புறம் எப்படியும் ராத்திரி அவங்க பெசண்ட் நகர் போயிருவாங்களே. அதுனால பிரச்சனையிருக்காது. சரி. எனக்கு நேரமாகுது. நீல்கிரீஸ் போகனும். அம்மாவைக் கூட்டீட்டுப் போறேன். அவங்களுக்கும் வெளிய போன மாதிரி இருக்கும்." கண்ணனின் பதிலுக்குக் காத்திராமல் அரவிந்தை அவனிடம் ஒப்படைத்து விட்டு ராஜம்மாளோடு கிளம்பினாள். சுந்தரை மட்டும் வரச்சொல்வதை விட வாணி சந்தியாவையும் அழைத்திருக்கலாமே என்று சிந்திக்கத் தொடங்கியிருந்தான் கண்ணன்.

பக்கத்துத் தெருவில்தான் நீல்கிரீஸ். வாணியும் ராஜம்மாளும் மெதுவாக நடந்தே சென்றனர். தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கியதும் ராஜம்மாள் கேட்டார். "எதுக்கு நீ வேண்டாத வேலையெல்லாம் பாக்குற?"

தொடரும்.....

மதி
27-02-2007, 02:31 AM
எல்லாம் எங்க போய் முடிய போகுதோ..???

SathishVijayaraghavan
27-02-2007, 02:53 AM
கதை விருவிருப்பாக போய் கொண்டு இருக்கிரது... அடுத்து என்ன நடக்கும்... சீக்கரம் பதியுங்கள்... காலை வந்ததும் முதல் வேலையாக படித்துவிட்டேன்...

mukilan
27-02-2007, 03:22 AM
வந்திட்டேன் வணக்கம். முழுச்சாப்பாடு போடுங்க. பசியெடுக்க அப்பெட்டைசர் போல இருக்கு.

pradeepkt
27-02-2007, 05:14 AM
இந்தப் பகுதியில் நிறமில்லை.. இந்தப் பகுதியில் திடமில்லை. ஆனால் இந்தப் பகுதியில் சுவையிருக்கு :)
ஐயா, அடுத்த பகுதி எங்கே???
ரொம்ப வேலையோ???

மனோஜ்
27-02-2007, 06:31 AM
இந்தப் பகுதியும் படிச்சாச்சு அடுத்து எப்பே ராகவன் சார்...