PDA

View Full Version : 3ம் பகுதி கள்ளியிலும் பால்gragavan
14-02-2007, 04:49 PM
கேள்வி: ஜயண்ட் வீல் ராட்டிணம் எல்லாருக்கும் தெரியும். அதில் ஏறிச் சுற்றுவது நன்றாக இருக்கும். அதே ஜயண்ட் வீல் கரகரவென வேகமாகச் சுற்றினால்?

விடை:
1. மண்டை கிறுகிறுக்கும்.
2. ஒரு மாதிரி உமட்டி வாந்தி வருவது போல இருக்கும். அதனால் வாயைத் திறக்கவும் அச்சமாக இருக்கும்.
3. சத்தமில்லாமல் உடம்பு இறுகிப் போய் அசையாமல் இருக்கும்.

மேலே சொன்ன விடையின் நிலையில்தான் எல்லாரும் இருந்தார்கள். படிப்பு, வேலை, வீடு, திருமணம் வேண்டாம் என்று அத்தனை முடிவுகளையும் சந்தியாதான் எடுத்திருந்தாள்.ஆனால் இப்படி வயிற்றில் குழந்தையோடு வந்து பெற்றுக் கொள்ளப் போகிறேன் என்றால்?

முதலில் சுதாரித்தது கண்ணன். "என்ன செஞ்சிருக்க சந்தியா! நம்ம மானமே போச்சு. இனிமே நம்ம சொந்தக்காரங்க யார் மொகத்துலயும் முழிக்க முடியாது. வாணி வீட்டுல என்னவெல்லாம் பேசப் போறாங்களோ! இனிமே அவங்க வீட்டுப்பக்கமும் போக முடியாது." திடீர்ப் படபடப்பு. என்ன செய்வதென்றே புரியாமை.

சுந்தரராஜனும் சிவகாமியும் வேதனையோடு அமைதியான சந்தியாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

"கண்ணா! எதுக்கு இப்பிடிக் கத்துற? நான் என்னோட முடிவைச் சொல்லீருக்கேன். அவ்வளவுதான!"

"சந்தியா, நான் கத்துறேன்னு மட்டும் சொல்ற. ஆனா ஏன்னு புரிஞ்சுக்கலையே! ஒரு கல்யாணம் ஆகாத பொண்ணு கொழந்தையோட இருந்தா...இல்ல...கொழந்த பெத்துக்கிட்டா எல்லாரும் எப்படிப் பேசுவாங்க! அது ஏன் ஒனக்குத் தெரிய மாட்டேங்குது? உன்ன யாரோ ஏமாத்தீட்டாங்கன்னும் பேசலாம்.....யார் கிட்டயோ நீ தொடர்பு வெச்சிருக்கன்னும் பேசலாம்.....oh my god....sandhya please understand."

"stop it kanna. நீ இப்படி ஒளர்ரத என்னால கேக்க முடியலை. ஊருல இருக்குறவங்கதான் மனுசங்களா? என்னோட விருப்பங்கள் பெருசில்லையா?"

"விருப்பமெல்லாம் சரி. ஆனா ஒலகத்துக்கு முன்னாடி ஒன்னையும் குழந்தையையும் எப்படி அடையாளம் காட்டப் போற? கொழந்தைக்கு அப்பா யாருன்னு சொல்ல ஒன்னால முடியுமா? தகப்பன் பேர் தெரியாத கொழந்தைன்னு இருந்தா அம்மாவுக்கு என்ன பேர் கெடைக்கும்னு தெரியுமா? ஐயோ..பேச வெக்கிறயே சந்தியா!"

சந்தியாவுக்குக் கொஞ்சம் சுருக்கென்று தைத்தது. "ஆமாண்டா...பேசுறதெல்லாம் பேசீட்டு நான் பேச வெக்கிறேன்னு சொல்லு! என்ன சொன்ன? தகப்பன் பேர் தெரியாத கொழந்தை இருந்தா அம்மாவுக்கு என்ன பேரா? விபச்சாரி. அதான? அதான சொல்ல வர்ர? சொல்லு. உலகத்துல எந்தத் தப்பு செய்றவனும் இருக்கலாம். ஆனா இது மட்டுந்தான பெருந்தப்பு. ஊழல் செஞ்சவனும் கொள்ளையடிச்சவனும் ஏமாத்துனவனும் பெரிய ஆளுங்க. ஆனா கல்யாணம் ஆகாம ஒருத்தி கொழந்த பெத்தா...விபச்சாரி. பொம்பளைங்களச் சொல்ல மட்டும் ஒன்னாக் கெளம்பீருவீங்களே! திருந்துங்கடா! எங்க திருந்தப் போற! நீயும் ஒரு ஆம்பிளைதான!"

சிவகாமி குறுக்கே புகுந்தார். கண்ணனை மேற்கொண்டு எதுவும் பேச விடாமல் நிறுத்தினார். சுந்தரராஜனிடம் "என்னங்க, நம்ம பிள்ளைங்க சண்ட போடுறத என்னால பாக்க முடியல. நிலமை இவ்வளவுக்கு வந்தாச்சு. இன்னமும் சும்மாயிந்தா சரியில்ல. ஏதாவது முடிவெடுக்கிறதுதான் நல்லது."

சிவகாமியின் கூற்றைத் தலையை அசைத்து ஆமோதித்தார் சுந்தரராஜன். சந்தியாவைப் பார்த்து, "நீ இன்னமும் கொழந்த பெத்துக்கிறதுங்குற முடிவுலதான் இருக்கியா?" என்று கேட்டார்.

"ஆமாம்ப்பா. அதான் செய்யப் போறேன். என்னோட கொழந்தைய நான் பெத்துக்கத்தான் போறேன். இந்த ஊர் சரியில்லைன்னா....வேற ஊரோ நாடோ போய்க்கிறேன். நீங்களும் அம்மாவும் எங்கூடயே வந்துருங்க. எனக்கு யார் துணை இல்லைன்னாலும் ஒங்க துணை வேணும். இதுதான் என்னோட முடிவு."

"ம்ம்ம்...சரி. அப்ப நம்ம ஒரு முடிவுக்கு வந்திரலாம். கண்ணா நீ கூடிய சீக்கிரம் நல்ல நாள் பாத்து நம்ம டி.நகர் வீட்டுக்குப் போயிரு. அங்க வாடகைக்கு இருக்குறவங்கள காலி செய்யச் சொல்லீரலாம். வாணியும் அரவிந்தும் அடுத்த மாசம் நேரா அங்கயே வரட்டும். ஏன்னா அவங்க வீட்டுல இருந்து கொஞ்ச நாளைக்கு யாராவது வரப் போக இருப்பாங்க. சந்தியா பேறு காலத்துக்குக் காத்திருக்குறப்போ வர்ரவங்க போறவங்க ஏதாவது பேசுவாங்க. அது அவளுக்கும் நல்லதில்லை. அவ கொழந்தைக்கும் நல்லதில்ல. நானும் அம்மாவும் சந்தியா கூட இங்க இருக்கோம். அப்பப்ப டி.நகருக்கும் வருவோம். சரிதானே?" என்று மகனிடம் முதலில் முடிவைச் சொன்னார். கண்ணனும் அதை ஏற்றுக் கொண்டான்.

சந்தியாவிடம் அடுத்தது. "சந்தியா, நீ செய்றது சரியா தப்பான்னு விவாதம் செஞ்சா அதுக்கு முடிவே இருக்காது. சரீன்னு சொல்றவங்களும் தப்புன்னு சொல்றவங்களும் ஆயிரக்கணக்குல காரணங்கள் சொல்வாங்க. உன்னோட இந்த முடிவு அடுத்தவங்களுக்குத் துன்பம் கொடுக்காத முடிவுதான். ஒத்துக்கிறேன். ஆனாலும் இதால உனக்கும் உன்னோட கொழந்தைக்கும் ஏற்படப் போற துன்பங்களை எடுத்துச் சொன்னோம். அதை எப்படி நீ சமாளிக்கப் போறங்குறது ஒன்னோட பொறுப்பு. அதுக்கு எங்க உதவி எதுவும் வேணும்னா நிச்சயம் செய்வோம். கண்டிப்பாப் பல விதங்கள்ள பேச்சுகள் வரும். சமாளிப்போம். எல்லாம் நல்லபடியா நடந்தாச் சரி."


சுந்தரராஜனின் முடிவு உடனே செயலுக்கு வந்தது. அதற்குப் பிறகு நடந்தவை கீழே.


வல்லினம்

க. வாணி சென்னைக்கு வந்ததும் கண்ணன் அவளிடம் உண்மையைச் சொல்லி விட்டான். அவளும் நிலமையைப் புரிந்து கொண்டு அமைதியாக இருந்தாள்.

ச. அன்று அந்தப் பேச்சுப் பேசிய கண்ணன் மட்டும் சந்தியாவுடன் பேசுவதைத் தவிர்த்து வந்தான். அதுகூட ஆத்திரத்தில் அல்ல. அப்படிப் பேசி விட்டோமே என்ற வருத்தத்தில்.

ட. சந்தியாவின் அலுவலகத்தில் வெளிப்படையாக artificial insemination உதவியால் குழந்தை பெற்றுக் கொள்வதாகக் கூறி விட்டாள்.

த. அவ்வப்போது சென்னைக்கு வந்து போய்க் கொண்டிருந்த ராஜம்மாள் வகையறாக்களும் சந்தியாவை ஒரு விதமாகப் பேசினார்கள்.

ப. சந்தியாவின் சொந்தக்காரர்களுக்கும் குழந்தை பற்றிய செய்தி தெரிவிக்கப்பட்டது. முனுமுனுப்புகள் எழுந்தன.

ற. படுக்கையில் கணவன் என்ற பெயரில் சூர்யாவோடும் விஜய்யோடும் கூடிக் கொண்டாடும் உத்தமப் பத்தினிகள் சிலர் சந்தியாவின் முதுகுக்குப் பின்னால் அவளது கற்பைப் பற்றிப் பல் கூசக்கூசப் பேசினர்.


இடையினம்

ய. டி.நகர் வீட்டிற்குக் கண்ணன் குடி போனான்.

ர. குழந்தை அரவிந்த் தாத்தா வீட்டில் வளரட்டும் என்பதற்காக டி.நகருக்கு வந்து விட்டதாக வாணி குடும்பத்தாருக்குச் செய்தி போனது.

ல. வாணிக்குத் துணையாக ராஜம்மாள் வந்து தங்கியிருந்தார். கணவனைப் பறிகொடுத்திருந்த அவருக்குப் பேரனோடு பொழுது போக்குவது மிகவும் பிடித்திருந்தது.

வ. வாணியின் குடும்பத்தார் பெசண்ட் நகர் வீட்டிற்குச் செல்வதைத் தவிர்த்தனர்.

ள. சுந்தரராஜனும் சிவகாமியும் அவ்வப்பொழுது டி.நகர் சென்று வருவார்கள். ஊர் பேச்சு அவர்களை வருத்தப்பட வைத்தாலும் பொறுத்துக் கொண்டார்கள்.

ழ. மருமகன் அரவிந்திற்குச் சந்தியா செய்ய வேண்டிய சீர்களைத் தவறாமல் செய்தாள். வாணியும் கண்ணனும் அவைகளை ஏற்றுக் கொண்டார்கள்.


மெல்லினம்

ங. சந்தியாவிற்குச் சுகப் பிரசவம் நடந்து சுந்தர் பிறந்தான்.

ஞ. மகளையும் பேரனையும் சுந்தரராஜனும் சிவகாமியும் நல்லபடி பார்த்துக் கொண்டார்கள்.

ன. வாணி ஏதாவது வாய்க்குச் சுவையாக செய்தால் அதை பெசண்ட் நகர் வரை சென்று சந்தியாவிற்குக் குடுத்தாள்.

ந. சுந்தருக்குத் தங்கச் சங்கிலியும் கைக்காப்பும் வெள்ளித் தண்டையும் வாங்கித் தந்தாள். சாப்பிடுவதற்கு வெள்ளிக் கிண்ணமும் கரண்டியும் சங்கும் கொடுத்தாள்.

ம. தனது மகன் பெயரை ச.சுந்தர் (S.Sundar) என்று பெயரைப் பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்தாள். அம்மாவின் பெயரைத்தான் முதலெழுத்தாகப் பயன்படுத்தலாமே.

ண. மொத்தத்தில் அந்த வீட்டு மனிதர்களுக்குள் பிரச்சனைகள் தவிர்க்கப்பட்டு அமைதி இருந்தது.


கடையினம்

இப்படி நடந்ததெல்லாம் மனதில் அசை போட்டுக் கொண்டே தூங்கப் போனாள் சந்தியா. அடுத்த நாள் அவள் வாழ்க்கையைத் தோசையாக்கப் போகும் மின்னஞ்சல் வரப் போவது தெரியாமல். அதாவது அவளுக்குத் தெரியாமலே வாழ்க்கையைத் திருப்பிப் போடும் மின்னஞ்சல்.

தொடரும்...

pradeepkt
15-02-2007, 03:36 AM
வல்லினம் மெல்லினம் இடையினம் - கடையினம்.
எப்படிய்யா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க...
முழுக் கதையையும் படிக்காம என்னால கருத்துச் சொல்ல முடியலை...

மதி
15-02-2007, 07:42 AM
ராகவன்...
இப்போது தான் முழுமூச்சாக மூன்று பாகத்தையும் படித்தேன். தற்சமயம் பிரதீப் நிலையில் தான் நானும். முழுவதும் கற்பனையா என்று தெரியவில்லை. அடுத்த பகுதியை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

gragavan
15-02-2007, 09:38 AM
ராகவன்...
இப்போது தான் முழுமூச்சாக மூன்று பாகத்தையும் படித்தேன். தற்சமயம் பிரதீப் நிலையில் தான் நானும். முழுவதும் கற்பனையா என்று தெரியவில்லை. அடுத்த பகுதியை விரைவில் எதிர்பார்க்கிறேன்.
இதை முழுவதும் கற்பனை என்று சொல்ல முடியாது. நமக்கு இரண்டு தலைமுறைகளுக்கு முன்பே எடுத்துக்காட்டு சொல்ல முடியும். ஒரு பிரபல அரசியல் தலைவரின் குழந்தையை ஒரு பெண் திருமணம் செய்யாமல் சுமந்து பெற்றுக் கவிஞராக்கியதையும் உலகம் அறியும். விவியன் ரிச்சர்சின் குழந்தையை நீனா குப்தா பெற்று பெரிய பெண்ணாக வளர்த்திருப்பதையும் உலகு அறியும். அப்படிப் பெற்றுக் கொண்ட ஆண்கள் உலகில் நல்ல பதவியும் புகழும் பெற்றார்கள். பெண்கள்? ஒரு பிரபலப் பெண் அரசியல்வாதிக்குக் குழந்தை இருக்கிறதா இல்லையா என்று தெரியாமலேயே அவரை அதைச் சொல்லிக் கிண்டல் செய்வது தமிழ்ச் சமுதாயத்தின் மு(மூ)ட நம்பிக்கையைக் காட்டுகிறது.

மதி
15-02-2007, 10:32 AM
ராகவன்..
நானும் ரொம்ப நேரம் யோசித்துப் பார்த்தேன். எனக்கு பொது அறிவு ரொம்ப கம்மி (அட உனக்கு அறிவுன்னு ஒன்னு இருக்குதான்னு பென்ஸும் பிரதீப்பும் முணுமுணுக்கறது கேக்குது). நீங்க சொன்ன நபர்கள் யார்ன்னும் தெரியல.

சீக்கிரமாய் தொடருங்கள்..

ஒரு கேள்வி,
குழந்தை அரவிந்த் சூடான இட்டிலியில் கையை சுட்டுகொண்டான். இந்த நிகழ்வை விளக்குவதற்காக ராஜம்மாள் இட்டிலிபிரியை என்று வர்ணித்தீரா? இல்லை அதை சம்பந்தப்படுத்தி வேறேதும் இருக்கிறதா..?

gragavan
15-02-2007, 10:39 AM
ராகவன்..
நானும் ரொம்ப நேரம் யோசித்துப் பார்த்தேன். எனக்கு பொது அறிவு ரொம்ப கம்மி (அட உனக்கு அறிவுன்னு ஒன்னு இருக்குதான்னு பென்ஸும் பிரதீப்பும் முணுமுணுக்கறது கேக்குது). நீங்க சொன்ன நபர்கள் யார்ன்னும் தெரியல.

சீக்கிரமாய் தொடருங்கள்..

ஐயோ மதி! என்னாச்சு ஒங்களுக்கு! உள்ளூர்ச் சரக்கே தெரியலையே! பிரதீப்பு கிட்ட கேளுங்க. பிச்சுப் பிச்சு வெப்பாரு.

விவியன் ரிச்சர்ட்ஸ் மட்டும் நானே சொல்றேன். நீனா குப்தா என்ற நடிகை அவருடைய குழந்தைக்கு அம்மா. அந்தப் பெண்ணுக்கே இப்பொழுது வயது 25க்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை.


ஒரு கேள்வி,
குழந்தை அரவிந்த் சூடான இட்டிலியில் கையை சுட்டுகொண்டான். இந்த நிகழ்வை விளக்குவதற்காக ராஜம்மாள் இட்டிலிபிரியை என்று வர்ணித்தீரா? இல்லை அதை சம்பந்தப்படுத்தி வேறேதும் இருக்கிறதா..?

எதுவுமில்லை. அது சும்மா....சம்பந்தப்படுத்தி எதுவுமில்லை.

அறிஞர்
15-02-2007, 01:54 PM
பல எதிர்ப்புக்கள் நடுவில் உருவான... குழந்தை பாசத்துடன் வளர்கிறது.

சந்தியாவின் வாழ்க்கையை திருப்பி போட போகும் மின்னஞ்சலை எதிர் நோக்கி காத்திருக்கிறோம்...

மயூ
15-02-2007, 02:44 PM
ம்...
என்னால் ஏற்கமுடியாத கருத்துக்களுடன் சந்தியா!!!!
அடுத்த பாகம் வரட்டும் முழுமையான வார்த்தையாடலைத் தொடங்குவோம்....

ஓவியா
17-02-2007, 08:37 PM
சந்தியாவின் பெற்றோர் ஒரு ஆர்ப்பாட்டமும் பன்னாதது விந்தையாக தான் இருக்கு. :eek: :eek:

நான் எப்பொழுதும் உங்கள் கதையின் ரசிகை

தொடரவும்


.....................................................................................
ராகவன்,
என்னா'னு கதயை முடிக்கறீங்கனு பார்த்துட்டு,
உங்களை கடைசி எப்பிசோட்டில் வச்சுகிறேன். ;)
உங்களை திட்ட எனக்கு ஒரு வாய்ப்பு வருதுனு ஜக்கம்மா குரி சொல்லியாச்சு..(சும்மா லுலுவாங்கட்டிக்கு :D )

SathishVijayaraghavan
21-02-2007, 10:49 AM
தோடருங்கள் இராகவன்... கதை முழுமையாக படித்த பின் எனது கருத்தை கூறுகிரேன்...

இளசு
25-02-2007, 12:53 PM
அன்பு ராகவன்,

கதை வேகமாய் நகர்கிறது.

வினா விடை; மூவினம் -கடையினம் இதுவரை காணாத யுத்திகள்.
பாராட்டுகள்..

கரு - நெருடலானாலும் நிதர்சனம்.. ( சந்தியா கண்ணனைக் கேட்டது எனக்கும் - ' நீயும் ஆம்பிளதான?).

குழந்தை என்பது நாம் சம்பாதிக்கும் சொத்து அல்ல..
முழு ஆயுள் உரிமை கொண்டாட..
கலீல் கிப்ரான் சொல்வார் : குழந்தை பெற்றோரைக் கருவியாகக் கொண்டு உலகம் வரும் சுயப் பிரஜைகள்.

நாளை.. அதற்கு மறுநாள் என் குழந்தை என்னைப் பார்த்து, ' ஏன் இப்படி?' எனக் கேட்கக்கூடிய சாத்தியமே.. ( சமூக அழுத்தங்களால்)
இவ்வகைக் கருக்கதவுகளை நம் நாட்டில் இன்னும் சாத்திவைத்திருக்கிறது..அல்லது கலைத்துவிடுகிறது..

சில விலக்காய்...

தாய், ( மறைந்து வெளிப்படும் தந்தை) செயல் விளக்கம் அளிக்கலாம்..
மகவுகளின் மனநிலை???

ஏதேனும் உளவியல் அறிக்கை உண்டா இவர்களிடம் இருந்து?
(நம்ம பென்ஸ் எங்கேப்பா?)

மன்மதன்
04-03-2007, 02:12 PM
வல்லினம், இடையினம், மெல்லினம்

இது உண்மை கதையான்னு தெரிஞ்சுக்க
இன்னும் உன்னை குடையணும்..!!