PDA

View Full Version : விழி படபடக்கும் சப்தம்ப்ரியன்
14-02-2007, 06:00 AM
காதலர் தின வாழ்த்துக்கள்...

*

உன்
கோபங்களை
தாபங்களை
மன்னித்துவிடுகிறேன்
முத்தத்தால் நீ முடிப்பதானால்!

*

புல்லாங்குழல்
அழுவதாகவே இருக்கின்றது;
நீ வரும் நாட்களில் மட்டுமே
அது இசையாய் வழிகிறது!

*

மலர் பறிக்கையில்
மேல் விழுந்து சிலிர்ப்பூட்டும்
பனித்துளியாய் உன் நினைவு!

*

கை பிரித்து
அவரவர் திசையில்
முன்னேறுகிறோம்;
இன்னும் பூங்காவில்
முதுகோடு முதுகு சேர்த்தபடி
பேசிக் கொண்டிருக்கின்றன
இதயங்கள்!

*

என் பார்வைக்கெதிரே
தளிர் இலையொன்று
பழுத்து வர்ணம் மாறி
உதிர்கிறது!
நீ வருகிறாய்
உதிர்ந்திட்ட அவ்விலை
மீளவும் மரம் பொருந்தி
பச்சையாக தொடங்குகிறது!

*

சில முடிகள் வெளுத்துவிட்டன
தேகம் பலவீனமடைந்து விட்டது
தோல்கள் சுருக்கம் கண்டுவிட்டன
என்றாலும் என்ன
இப்போதும்
காதலின் குழந்தைகள் நாம்!

*

காதல் பாதையில்
விழி மூடியபடி
பயணிக்கிறேன்;
வழிகாட்டியபடி
துணைவருகிறது
உந்தன் விழியின் ஒளி!

*

உன்னைவிட்டு பிரிந்து
நடக்கும் தருணங்களில்
என் சவத்தை
நானே சுமந்து தொடர்கிறேன்!

*

மரணம் ஒத்த
தூக்கமதிலும்
கேட்டபடியே இருக்கிறது
உந்தன் விழி படபடக்கும் சப்தம்!

*

கொஞ்சினால் மிஞ்சும்
மிஞ்சினால் கொஞ்சும்
காதலும் குழந்தைதான்!

- ப்ரியன்.

ஆதவா
16-02-2007, 02:13 AM
ப்ரியன்.......... உங்கள் கவிதைகள் வாசித்தேன். அற்புதம்.. தபுசங்கரின் சாயல்கள் தெரிகிறது... (அவரேதானா?) அதோடு நீங்கள் செய்திருக்கும் போட்டாஷாப் வேலைகள் அருமையாக இருக்கிறது... சில வரிகளில் அர்த்தம் பொதிய அழகாய் சொல்லி அசத்தி இருக்கிறீர்கள்.

உதிர்ந்த இலை மீண்டும் மரத்தில்........
வழிகாட்டிய விழியின் ஒளி.

எக்ஸலண்ட்.... தமிழில் சொல்வதாக இருந்தால் அற்புதம்.........

ஒரு சின்ன வேண்டுகோள்.............. படம் லோடு ஆவதற்கு நேரம் பிடிப்பதாலேயே உங்கள் கவிதை தவிர்க்கப்படுவதற்கு இடம் கொடுக்கக் கூடாது..... படிப்பவர்களுக்கு படம் முக்கியமல்ல. கவிதைதான் முக்கியம். படத்தை சிறிய அளவிலோ அல்லது இணைப்பாகவோ இட்டு கவிதையை வடிக்கலாம்.... நீங்கள் காதலர் தினத்தன்று இட்ட இக்கவிதை இன்னும் யாரின் கைபடாமலே இருப்பது நல்லதல்ல...........

யோசனையை ஏற்றுக் கொள்வீர்கள் என்றூ நினைக்கிறேன்...

ஷீ-நிசி
16-02-2007, 03:20 AM
பிடித்த வரிகளை காப்பி பன்ன முடியாதது இதில் குறையாக உள்ளது... எனக்கும் கூட பல வரிகள் இதிலே பிடித்துள்ளது.. மேற்கோள் காட்ட நான் அந்த எழுத்துக்களை பதிக்கவேண்டுமே என்றேன்னியே பின்னூட்டமிடவில்லை..


தபூ சங்கரின் சாயல்போல்தான் உள்ளது. ஆதவா சொன்னதுபோல...

உன்னைவிட்டு பிரிந்து
நடக்கும் தருணங்களில்
என்னை நானே
சுமந்துசெல்கிறேன்!

இதுபோன்ற வரிகளுக்காகவே
யோசித்துக்கொண்டே இருக்கலாம்
கவிதை எழுதிட..

வாழ்த்துக்கள் ப்ரியன்

மதுரகன்
19-02-2007, 04:50 PM
கை பிரித்து
அவரவர் திசையில்
முன்னேறுகிறோம்;
இன்னும் பூங்காவில்
முதுகோடு முதுகு சேர்த்தபடி
பேசிக் கொண்டிருக்கின்றன
இதயங்கள்!


ஏதோ ஒரு புதிய யதார்த்தத்தை நோக்கி முன்னேறும்பாங்கு
அசராது வார்த்தைகளை வடிகட்டும் பாங்கு வியக்கவைக்கிறது

வாழ்த்துக்கள் ப்ரியன்..

ஓவியன்
21-02-2007, 12:49 PM
தபூவின் சாயல் இருப்பது என்னவோ உண்மை தான் - தபூவின் வரிகள் என்னை போலவே பிரியனையும் கொள்ளை கொண்டிருக்குமோ என்னவோ?

reallife
21-02-2007, 01:12 PM
மிக அருமையாக இருக்கு காதலர் தின கவிதை.

leomohan
21-02-2007, 03:29 PM
மிக அருமையாக இருக்கு காதலர் தின கவிதை.

வாருங்கள் நண்பரே. தங்களை பற்றி அறிமுகப்பகுதியில் எழுதங்களேன்.

உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

அமரன்
22-02-2007, 11:32 AM
சில முடிகள் வெளுத்துவிட்டன
தேகம் பலவீனமடைந்து விட்டது
தோல்கள் சுருக்கம் கண்டுவிட்டன
என்றாலும் என்ன
இப்போதும்
காதலின் குழந்தைகள் நாம்!


காதலை உடல்ரீதியானது என் நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு சிலருக்குச் சரியான சாட்டை அடி. எனக்குப்பிடித்த வரிகள்.

இளசு
25-02-2007, 06:55 AM
மலர் பறிக்கும்போது மேலே விழும் பனித்துளி...

இத்தகைய நுண்ணிய ரசனைகள் இருக்கும்வரை
இறுதிவரை காதலின் குழந்தைகளாய் இவர்கள் இருப்பார்கள்..

பாராட்டுகள் ப்ரியன்..
மீண்டும் ஒரு காதல் வசந்தத்தை தந்தமைக்கு..