PDA

View Full Version : காற்றாய்.. (பஞ்சபூதம்!) சிறுகதை...rambal
02-05-2003, 06:21 PM
காற்றாய்.. (பஞ்சபூதம்!) சிறுகதை...


எங்கும்
வியாபித்திருக்கிறாய்....
என் சுவாசிப்பும் நீதான்..
என் வாசிப்பும் நீதான்..
தென்றலாய்..
சில சமயம் பருவமாய்..
எப்போதாவது புயலாய்..
வீசும் காற்றாய்....
நீயடி பெண்ணே...


சென்னை ஏர்போர்ட்..
அந்த பிளைட் கிளம்ப இன்னும் மூன்று மணி நேரம் இருந்தது. அவள் இன்னும் செக்யூரிட்டிக்குள் நுழையவில்லை. என்னருகில் அமர்ந்திருந்தாள்.. இதுதான் கடைசி.. இன்றே இந்தப்படம் கடைசி என்றால் ஒன்றும் பிரச்சினையில்லை. இன்றோடு பெட்ரோல் கடைசி என்றாலும் கூட வேறு வழியில் பயணிக்க எத்தனிக்கலாம். இன்றே கடைசி காற்று.. இனி சுவாசிக்கக்காற்றே கிடையாது என்றால் எப்படி? அது போல் இவள் இன்றே கடைசி.. இதுதான் கடைசி மணி நேரங்கள். எங்கள் இருவருக்கும் இடையில் மௌனம் பேசிக்கொண்டிருந்தது. மனதிற்குள் ஆயிரமாயிரம் எண்ணங்கள் அடித்துக்கொண்டிருந்தது.. அவளுக்குள்ளும் இப்படித்தான் இருக்குமோ?

"உங்க நாட்டில என்னை பார்க்கிற எல்லோரும் படுக்கத்தான் கூப்பிடுறான். ஏன் வெளிநாட்டுக்காரின்னா மட்டும் இந்தப்பார்வை.. வெள்ளைக்காரின்னா மனசு, செண்டிமெண்ட் கிடையாதா? எங்களைப்பத்தி உங்க பள்ளிக்கூடத்தில இப்படித்தான் கத்துக் கொடுத்திருக்காங்களா?"

அவள் கேட்ட கேள்வியில் நிலைகுலைந்து என்ன சொல்வது என்றே புரியாமல்.. ஒரு நொடியில் என் இந்தியாவைக் கேவலப்படுத்திவிட்டாளே என்ற போதும் அதில் இருந்த உண்மை சுட்டது..

"அதுக்குக் காரணம் இருக்கு லிசா.. இங்கிலீஸ் படத்தில பூரா கிஸ்ஸம் பெட்ரூம் சீனுமா இருக்கா.. அதை இங்க இருக்கிற மக்கள் தப்பாப் புரிந்து கொண்டார்கள். அதன் விளைவுதான்.. எல்லா வெள்ளைக்காரியையும் அப்படி பார்க்கத் தோணவைக்குது.." சமாளித்தேன்..
"அப்படின்னா உங்க இதிகாசங்கள்ல.. யாரு அது.. ராம்.. அவர் இல்லையா? அவரை முன்மாதிரியா எடுக்கமாட்டாங்களா?"
இவளுக்கு எப்படிச் சொல்லி புரியவைப்பேன்.. ராமாயணம் வேறு.. இது வேறு.. இவளுக்கு ராமாயணத்தை அறிமுகப்படுத்தியவன் மட்டும் கையில் கிடைக்கட்டும்.. மனதிற்குள் புலம்பிக் கொண்டேன்..
"இருக்கிறாங்க லிசா.. ஆனா, அந்தக் கூட்டம் கம்மி.. அந்தக்காலம் வேற.. இந்தக்காலம் வேற.. நாகரீகத்தின் முன்னோடி பாபிலோனியாவும் சிந்துவும்தான். ஒத்துக்கிறேன்.. ஆனால், இன்று இங்கு மக்கள் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கிறார்கள். ஒரு குழம்பிய மனநிலை.. கொஞ்ச காலம் ஆகும் இதெல்லாம் மாறுவதற்கு.."
"கடைசிவரைக்கும் உன் நாட்டை விட்டுக்கொடுக்கமாட்டியே.."
"நீ விட்டுக்கொடுப்பியா?"
"மாட்டேன்"

அவள்கிளம்ப வேண்டிய பிளைட் வழக்கம்போல் மூன்று மணிநேரம் தாமதம் என்ற அறிவிப்பு வந்ததும் மனசு கொஞ்சம் ஆசுவாசமடைந்தது. மூன்று மணி நேரம் அதிகமாக என்னுடன் இருக்கப் போகிறாள்.
"லிசா.. காபி சாப்பிடலாமா?"
"ம்ம்.."
மௌனம்கலந்த காபி சாப்பிட்டுவிட்டு அவளிடம் சிகரெட்டை நீட்டினேன்.
"இல்லை.. சிவ்.. ஸ்மோக்கை நிறுத்திட்டேன்.."
"எப்போதிருந்து"
"இப்போதிலிருந்து"
நானும் சிகரெட்டை பற்றவைக்காமல் திரும்பி காத்திருப்பாளர்கள் பகுதிக்குச் சென்று இருக்கையில் சென்று அமர்ந்தோம்..

ஜெர்மன் ஹால் நிரம்பி வழிந்திருந்தது. அத்தனையும் பட்டாம்பூச்சிகளின் கூட்டம். நடந்துமுடிந்த டிசைனர்ஷோ போட்டியின் முடிவிற்காக நானும் லிசாவும் காத்திருந்தோம். முடிவை அறிவிக்கத் தொடங்கியிருந்தார்கள். நானும் லிசாவும் படபடத்த நெஞ்சோடு.. இறுதியில் இரண்டாம் இடம் எங்களுக்கு..
"சிவ்.. வீ டிட்" என்று என்னைக் கட்டிப்பிடித்தாள்.. முதல் பரிசு கிடைக்காததால் சின்ன வருத்தம் எனக்கு.
அதையும் கண்டு பிடித்துவிட்டாள்..
"உனக்கு சந்தோசமில்லையா?"
"எப்படி சந்தோசப்படச்சொல்றே?"
"ஏன்?"
"பர்ஸ்ட் கிடைச்சிருந்தா சந்தோசப்பட்டிருப்பேன்.. செகண்ட் கிடைச்சா எப்படி?"
"ஒன்னுமே கிடைக்கலைங்கிறதுக்குப் பதிலா ஏதோ ஒன்னு கிடைச்சிருக்கு.. அதை கொண்டாடு.. something is better than nothing"
கொண்டாடு.. ஓஷோ நினைவிற்கு வந்தார்... கொண்டாடுங்கள்.. வாழ்வோ சாவோ.. அனைத்தையும் கொண்டாடுங்கள்..
"ஓகே.. கொண்டாடிட்டால் போச்சு.. எப்படி கொண்டாடலாம்னு நீயே சொல்லு.."
"இந்த ஜின்ல கொஞ்சம் லைம்ஸ்காட் போட்டு ஒரு காக்டெய்ல் தயாரிப்பாங்க.. அதுக்கு இங்க என்ன பேரு? இத்தாலில அதுக்கு வேற.. இங்க வந்ததிலருந்து அதை மட்டும்தான் குடிக்கலை.."
"ஓ.. அதுக்குப் பேரு ஜிம்லெட். உனக்கு அது வேணுமா?"
"ஆமாம்.. மை பேவரிட் டிரிங்"
ஆளுக்கு தலா மூன்று கிளாஸ் குடித்திருந்தோம்.
"சிவ்.. உனக்கு என்னை பாத்தா என்ன தோணுது?"
"நல்ல பிரெண்ட். கிடைச்சத வைச்சு திருப்தி அடைகிற பெண்.."
"அவ்வளவுதானா?"
"வேற என்ன எதிர்பார்க்கிற?"
"என்னை லவ் பண்றேன்னு சொல்ல மாட்டியா?"
"எப்படி சொல்லச் சொல்றே.. எனக்கு உன் மேல லவ்வே இல்லாதப்ப?"
"ஏன் வரலை?"
"இதுக்கு எப்படி பதில் சொல்றதுன்னு தெரியலை.. அது என்னவோ உன்னைப்பார்த்து லவ் வரலை.."
"நான் சிகரெட் பிடிக்கிறேன்.. குடிக்கிறேன்.. அதுவும் போக நான் இத்தாலிக்காரி.. இதுவும் போக உனக்கு கொஞ்சம் அடக்க ஒடுக்கமா போத்திகிட்டு இருக்கிற மாதிரின்னா பிடிக்கும்னு நினைக்கிறேன்.. இதுதான உங்க ஊர் ஆண்கள் மெண்ட்டாலிட்டி.. ஊரில இருக்கிறவ எல்லாம் அவுத்துப் போட்டுட்டு.. வற்ற மனைவி மட்டும் போத்திகிட்டு"
"லிசா.. எதுக்கும் ஒரு லிமிட் இருக்கு.. என்ன நினைச்சிகிட்டு இருக்கிற இந்தியா பத்தி.. இது வெறும் நூறு கோடி மக்களும் 146 மொழிகளும் பத்திற்கு மேற்பட்ட மதங்களும் கலந்து தைச்ச லம்பாடி லுங்கின்னா? இங்க பெண்களுக்கு இருக்கிற மதிப்பு தெரியுமா? இந்த பூமியில இருந்து ஓடுற ஆறிலிருந்து எல்லாம் பெண்கள் பெயராய் வைச்சு பூஜிக்கிறோம். எவனோ ஒன்னு ரெண்டு பேர் தப்பு பண்ணினதுக்கு ஒட்டு மொத்தமா பழி போடாத.."
"சரி.. வாபஸ் வாங்கிக்கிறேன்.. போதுமா? உன்னை சும்மா டெஸ்ட் பண்ணேன்.. அதுக்கு போய் கோவிச்சுகிட்டியே.."
"நேரமாயிடுச்சு.. நீ அதிகமா குடிச்சிருக்க.. உன்னை வீட்டில விட்டுட்டு போறேன்.."

இவள் ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்? ஆரம்பத்திலிருந்தே லிசா மேல் எனக்கு ஒரு சாப்ட்கார்னர். ஒரு ஈர்ப்பு..அது என்னவோ ஒரு இது... ஆனால், காதல் மட்டும் இல்லை. அது ஏனென்று மட்டும் சொல்லத் தெரியவில்லை.. அவள் பட்டென்று போட்டுடைத்ததும் கொஞ்சம் நிலை குலைந்துதான் போயிருந்தேன்.. ஒருவேளை அந்த ஒரு இது காதல்தானா? குழம்பிய மனநிலையிலேயே தூங்கினேன்..

"என்ன குழப்பத்தில இருக்கியா?"
"இல்லையே"
"என்னை காதலிக்கிறதா வேண்டாமான்னுதானே?"
"அப்படில்லாம் ஒன்னும் இல்லை"
'உன் கண்ணே சொல்லுதே.. ஆரம்பத்திலிருந்தே உனக்கு என் மேல் ஒரு அட்ராக்சன்.. எனக்குத் தெரியும். அதான் உன்கிட்ட நானே கேட்டேன். நீ மறைச்சிட்ட.. இதுவும் இந்திய மெண்ட்டாலிட்டிதான்.. ஓப்பனா சொல்ல வெட்கம்.. இல்லை கூச்சம்.. நான் அடுத்த மாசம் ஊருக்குக் கிளம்புறேன்.. திரும்பி வர மாட்டேன்.. அதுக்குள்ள யோசிச்சு ஒரு முடிவெடு.."
"நான் முடிவெடுக்கிறது இருக்கட்டும்.. நீ ஏன் என்னை காதலிக்கிற? அதுக்கு காரணம் சொல்லு.. அப்புறமா உனக்கு என் பதிலை சொல்றேன்.."
"சொல்லவா.. நீ சுத்தமான இந்தியன்.. பெண்கள் மேல நீ மரியாதை வைச்சிருக்கிற.. உன்னோட கண்ணியம்.. எவ்வளவோ தடவை உன் கூட தண்ணி அடிச்சிருக்கேன்.. நீ நினைச்சிருந்தா என்னை உன் கூட படுக்க கூப்பிட்டிருக்கலாம். இல்லை என்னை என்ன வேண்டுமானாலும் பண்ணியிருக்கலாம்.. எதுவுமே நீ பண்ணலை.. அதனால உன்னோட இந்த குணத்துக்காக உன்னைக் காதலிக்கிறேன்.. எல்லாத்துக்கும் மேல உன் பேர் சிவா.. இந்துக்களின் ஆதி கடவுள் பெயர்.. என்னோட பேவரிட் கூட அவர்தான்.."
"என்ன திடீர்னு இந்தியா மேல கரிசனம்?"
"இல்லையே.. ஒன்னை பற்றி விமர்சிக்கனும்னா அதைப்பத்தி முழுசா தெரிஞ்சிக்கிடணும்.. அப்புறம்தான் விமர்சிக்கணும். அதே மாதிரி நல்லதா இருந்தா அதை முழுசா ஏத்துக்கிடணும். இதுதான் என் பாலிஸி.."

அவள் செல்லும் பிளைட்டிற்கான அறிவிப்பு வந்தது.. சொல்லிவிடலாமா? அதுதான் சரி.. இதைவிட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது..
"லிசா.. ஐ லவ் யூ...

இளசு
02-05-2003, 06:48 PM
கதை அருமை ராம்....
சிவா - லிசா இணைவதை வரவேற்கும் நெஞ்சு....
இங்கே வந்தால் அவளோ
அங்கேயே இருந்தால் அவனோ
ஏற்கப்போகும் ஏனைய இழப்புகளை எண்ணி ஏனோ வாடுகிறது...
கதையின் முடிவையும் தாண்டி படிப்பவர் நெஞ்சம் பயணித்தால்.....
படைத்தவரின் திறமைக்கு வெற்றிதானே....
400 வது பதிப்புக்கு சிறப்பு வாழ்த்துகள்...

நிலா
02-05-2003, 10:25 PM
அவன் ...... அவளிடம்....... மனம் திறக்க
காற்றாய் மனசு இலேசாகிப்
போனது உமது அடுத்த படைப்பை நோக்கி!

karikaalan
03-05-2003, 05:50 AM
பனிக்கட்டி உடைந்ததே!

ராம்பால்ஜி! அருமையான சிச்சுவேஷன்.... படிப்பவர்கள் அனுபவித்து லயிக்கும்படியான கதை. நன்றிகள்.

===கரிகாலன்

குமரன்
04-05-2003, 02:33 AM
காதலுக்கும் நட்பிற்கும் உள்ள தூரம் ஒரு நூலிழைதானோ...

சிறுகதை...அருமை, பாராட்டுகள் ராம்.

rambal
08-05-2003, 12:19 PM
பாராட்டிய நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள் பல..

Dinesh
27-05-2003, 06:14 AM
நண்பர் குமரன் கூறுவதுபோல காதலுக்கும்
நட்புக்கும் இடையே இருப்பது நூலிழை இடைவெளித்தானோ?!
சிறப்பான சிறுகதை ராம்பால் அவர்களே!
வாழ்த்துக்கள்.

தினேஷ்.

gankrish
30-05-2003, 05:27 AM
இன்று தான் படித்தேன் ராம். அருமையான கதை. நல்ல நடை

aren
30-05-2003, 06:14 AM
முதலில் வரும் ஒரு ஈர்ப்புதான் பின்னால் காதலாகிறது என்பதன் அடிப்படையில் அமைந்த அருமையான சிறுகதை. எங்கே உங்கள் கதாநாயகனும் "நடுத்தரவர்க்கத்தை" சேர்ந்தவரோ என்று நினைத்தேன். ஆனால் அவர் ஒருபடி மேல் என்று தெரிகிறது. பாராட்டுக்கள்.

indian_usa
31-05-2003, 02:41 AM
உங்கள் கதை ஒவ்வொன்றும் அருமை...

rambal
13-04-2004, 04:58 PM
இந்த கதையில் சில இந்திய கலாச்சார முரண்பாடுகளை முன் வைத்து எழுதினேன். அது எந்தளவிற்கு ரசிக்கப்பட்டது என்று தெரியாத போதும் ஒட்டு மொத்தக் கதை ரசிக்கப்பட்டது கண்டு மகிழ்ச்சி..

natchatran
26-04-2004, 06:45 AM
ராம்,
கதை படித்தேன்.உங்களுக்கு சரளமாக ஒரு விசயத்தை சொல்ல வருகிறது...ஆனால், நீங்கள் எடுத்திருக்கும் சப்ஜெக்ட் மிகவும் செயற்கையானதாய்ப்படுகிறது...என்னைப் பொருத்தவரை கதையில் ஒரு ஒட்டல் இல்லாமல் போகிறது...அதற்குக் காரணம் எனது prejudise ஆக இருக்கலாம்...எதைப் பற்றியும் கவலைப் படாமல் எழுதித் தள்ளுங்கள்...ஜோர்ஜ் லூயி போர்ஹே, இடாலோ கால்வினோ,கொர்த்தஸார் போன்ற மூன்றாம் உலக சிறுகதாசிரியர்களைப் படித்துள்ளீரா...இல்லையெனில் படித்துப்பாருங்கள்...(அவர்களைப் படித்தபின் நான் சிறுகதை எழுதுவதையே கொஞ்சநாள் நிறுத்திவிட்டிருந்தேன்....)
நானும் சிறுகதையில் தோல்வியுற்றவன் தான்...எனக்கு அது இன்னும் பாச்சா காட்டிபடி நகர்ந்துகொண்டிருக்கிறது...நான் எனது மாஸ்டர்பீஸைப் படைக்க வெகுநாள் ஆகக்கூடும்...அதுவரை நான் மேற்கொள்வது வெறும் பயிற்சிதான்...
நீங்கள் வருவீர்கள்....

ஜோஸ்
27-04-2004, 04:29 PM
நாளைய சமுதாயத்தினருக்கு வேண்டிய கதை....வாழ்த்துக்கள் நண்பரே...