PDA

View Full Version : 2ம் பகுதி கள்ளியிலும் பால்



gragavan
08-02-2007, 01:51 PM
"இந்தாம்மா காஃபி." கோப்பையை சந்தியாவிடம் நீட்டினார் சிவகாமி. மடியில் சுந்தரை வைத்திருந்த சந்தியா ஒற்றைக் கையால் கோப்பையை வாங்கினாள். காஃபியைச் சிறிது உறிஞ்சியவள்..."அப்பா எப்ப வர்ராங்களாம்? அரவிந்துக்கு இப்ப எப்படி இருக்காம்?"

மெத்துமெத்தான அந்தக் கருப்பு ரெக்சின் சோஃபாவில் சந்தியாவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு சுந்தரை வாங்கினார் சிவகாமி. "இப்பத் தாவலையாம். அப்பா நாளைக்கு காலைல கெளம்பி வர்ராங்க. வாணி மதியம் ஃபோன் பண்ணீருந்தப்போ சொன்னா. கண்ணனும் புதுக் கார் பதிஞ்சிருக்கானாம்."

யார் இந்த அரவிந்த், வாணி, கண்ணன் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. சரி. ஒவ்வொருவராக அறிமுகப்படுத்துகிறேன்.

சுந்தரராஜன் - சிவகாமியின் கணவர் - ஓய்வு பெற்ற அரசு உயரதிகாரி
கண்ணன் - சந்தியாவின் தம்பி. ஒன்றரை வயது சிறியவன். அயல்நாட்டுத் தூதரகத்தில் பணிபுரிகிறான்.
வாணி - கண்ணனின் மனைவி. திநகரில் கணவனோடு வசிக்கிறாள். இடுப்பெலும்பு அறுவை சிகிச்சை செய்த இவளது தாயும் கடந்த மூன்று மாதங்களாக இவர்களுடன் இருக்கிறார். அவரது பெயர் ராஜம்மாள். இட்டிலிப் பிரியர்.
அரவிந்த் - வாணிக்கும் கண்ணனுக்கும் பிறந்த மகன்

சுடச்சுட இறக்கி வைத்த இட்டிலியை வெறும் கையால் பிசைந்து விட்டான் குழந்தை அரவிந்த். உள்ளங்கை சிவந்து காய்ச்சல் வேறு வந்து விட்டது. அதனால் அங்கு துணைக்கும் உதவிக்கும் சுந்தர்ராஜன் சென்றிருந்தார். அரவிந்துக்குச் சரியானதையும் சுந்தரராஜன் வருவதையும் மதியம் வாணி அத்தையைத் தொலைபேசியில் அழைத்துச் சொல்லியிருக்கிறாள். அத்தோடு கண்ணன் புதிதாக கார் வாங்கப் போவதையும் சொல்லியிருக்கிறாள். இப்பொழுது பாத்திரங்கள் யார்யாரென்று உங்களுக்குப் புரிந்திருக்குமே! கதைக்குப் போவோமா?

காஃபியைக் குடித்து முடித்திருந்தாள் சந்தியா. "என்ன காராம்? ஏற்கனவே இருக்குற சாண்ட்ரோவ என்ன செய்யப் போறானாம்?"

"எனக்கு அதெல்லாம் தெரியாது. என்னவோ பேர் சொன்னா வாணி. சரியாக் கேட்டுக்கலை. சுந்தர் எப்படியிருக்கான்னு கேட்டா. சனிக்கிழமை வர்ரேன்னு சொன்னா. சம்மந்தியம்மாவும் அங்க இருக்குறதால....பாவம்...எங்கயும் நகர முடியலையாம். ஏற்கனவே அவங்க இடுப்பு ஆப்பரேஷன் செஞ்சவங்க. ஒரு வேலையும் செய்ய முடியாது. அரவிந்த் வேற துறுதுறுப்பா இருக்கான். இவங்களால சமாளிக்க முடியலையாம்." சுந்தரைச் சந்தியாவின் கைகளில் கொடுத்து விட்டு காஃபி கோப்பையோடு அடுக்களைக்குள் நுழைந்தார் சிவகாமி.

தம்பி புதுக்கார் வாங்கப் போவதை நினைத்து மகிழ்ச்சிதான் சந்தியாவுக்கு. அதிலும் இரண்டாவது கார். சந்தியாவைக் கூப்பிட்டுச் சொல்லியிருக்கலாம்தான். ஆனால் அது இப்போதைக்கு நடக்காது. பின்னே ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் நடந்த அந்தச் சண்டை. ம்ம்ம்ம்....

அப்பொழுது அரவிந்த் மூன்றுமாதக் கைக்குழந்தை. வாணி குழந்தையோடு மதுரையில் தாய் வீட்டில் இருந்தாள். பெசண்ட் நகர் அப்பார்ட்மெண்ட்டை சந்தியா வாங்கி ஓராண்டுதான் ஆயிருந்தது. அப்பார்ட்மெண்ட் சந்தியாவின் பெயரில் இருந்தாலும் அங்கு மனைவியோடு இருப்பது கண்ணனுக்கு உறுத்தலாக இருக்கவில்லை. மகிழ்ச்சியாகத்தான் இருந்தார்கள்.

ஒருநாள் இரவுச் சாப்பாட்டில்தான் அந்தப் பேச்சு தொடங்கியது. சிவகாமி அனைவருக்கும் தட்டில் போட்டு விட்டு தானும் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார்.

"அப்பா, நான் ஒரு முடிவெடுத்திருக்கேன். அத உங்க எல்லார் கிட்டயும் சொல்லலாம்னு நெனைக்கிறேன்." பாதிச் சாப்பாட்டில் சந்தியா பேச்சைத் தொடங்கினாள்.

எல்லாரும் சாப்பாட்டை மறந்து சந்தியாவையே ஆர்வத்தோடு பார்த்தார்கள். என்ன முடிவு எடுத்திருக்கிறாளோ என்று.

"கொழந்தை பெத்துக்கலாம்னு இருக்கேம்ப்பா."

மற்ற மூவருக்கும் ஒரு நொடி ஒன்றும் புரியவில்லை. சுந்தரராஜன் சுதாரித்துக் கொண்டு முதலில் கேட்டார். "என்னம்மா சொல்ற? கல்யாணமே செஞ்சுக்காம கொழந்த பெத்துக்கப் போறியா?"

"ஆமாம்பா! எனக்கு ஒரு கொழந்தை வேணும்னு தோணுது. அதான் இந்த முடிவு. தப்பாப்பா?"

தட்டில் சாப்பாடு காய்வது கூடத் தெரியாமல் சிவகாமியும் கண்ணனும் ஒருவித கலக்கத்தோடு அவர்கள் உரையாடலை கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

"இதுதான் தப்பு இதுதான் சரின்னு எதையும் உறுதியாச் சொல்ல முடியாதும்மா. ஆனா இப்படி ஒரு முடிவு எடுத்தா அதோட பின்விளைவுகளையும் யோசிச்சுப் பாக்கனும். பாத்தியா?"

"நல்லா யோசிச்சுப் பாத்தேம்ப்பா. அதுக்கப்புறந்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன். இதுல எனக்குக் கெட்ட பேர் கூட வரலாம். ஆனா உங்க துணை இருந்தா எல்லாத்தையும் தாண்டி வருவேம்ப்பா."

இனம்புரியாத ஒரு உணர்ச்சியில் பெருமூச்சு விட்டார் சுந்தரராஜன். "கெட்ட பேர் ஒனக்கு மட்டும் வராதும்மா. எங்களுக்கும் சேத்துதான் வரும். ஏற்கனவே உனக்குக் கல்யாணம் செய்யாம வெச்சிருக்கோம்னு ஒவ்வொருத்தரும் பேசுறாங்க. உனக்கு முடிக்காம கண்ணனுக்கு முடிக்கும் போது நல்ல வேளையா பெரிய சலசலப்பு எதுவும் வரலை. ஆனா குழந்தை பெத்துக்குறதுங்குறது...."

"என்னப்பா? நீங்களாப்பா இப்படிப் பேசுறீங்க? அவங்கவங்க முடிவை அவங்கவங்க சரியா எடுக்கக் கத்துக்குடுத்ததே நீங்கதானப்பா. அப்படியிருக்குறப்போ இப்பத் தயங்குறீங்களேப்பா?"

"சந்தியா என்னது இது? பைத்தியக்காரத்தனமா இருக்கு. இப்படி ஒரு முடிவு எடுத்துக்கிட்டு அதுக்கு நாங்களும் சம்மதிக்கனும்னு எதிர்பார்க்குறயா? எங்களால கண்டிப்பா முடியாது. அப்பா பேச்சையும் கேக்காம நீ வாதாடுறது நல்லாயில்ல." குறுக்கிட்டான் கண்ணன். கொஞ்சம் எரிச்சல் அவனுக்கு.

"டேய். சும்மா இரு. அப்பா பேசுறாங்கள்ள." என்று சொல்லி மகனை அடக்கினார் சிவகாமி.

சுந்தரராஜன் மகளின் கையை மென்மையாகப் பிடித்தார். "சந்தியா. நீ படிச்ச பொண்ணு. இப்படி ஒரு முடிவு எடுக்குறதால ஒனக்கு மட்டும் கெட்ட பேர் வராது. அந்தக் குழந்தையப் பத்தி நெனச்சுப் பாத்தியா? இனிஷியல் வேண்டாமா?"

"இப்பத்தான் அம்மா பேர இனிஷியலா போடலாம்னு சட்டமே இருக்கேப்பா."

"உண்மைதான். சட்டத்தோட மட்டும் நீ வாழப் போறதில்லை. சமுதாயத்தோடதான் வாழனும். நம்ம ஊர்ல இதெல்லாம் ஒத்து வராதும்மா."

"அப்ப நான் ஒத்து வர்ர ஊருக்குப் போயிரட்டுமாப்பா?"

திகைத்துப் போனார் தந்தை. மகள் தங்களை விட்டுப் போய் விடுவாளோ என்று சற்று பயந்தார். பிறகு உறுதியாகச் சொன்னார். "சந்தியா. உண்ணால எந்த நாட்டுலயும் நல்ல வேலை வாங்கிக்க முடியும்னு எனக்குத் தெரியும். ஆனா இனிமே வரப்போற ஒரு உறவுக்காக இருக்குற அத்தனை உறவுகளையும் இழக்கனுமா என்ன? அது சரியாத் தெரியலை. நல்லா யோசிச்சுப் பாத்தா எனக்கென்னவோ நீ எடுத்திருக்குற முடிவு சரியா வராதுன்னு தோணுது. வேணும்னா ஒரு குழந்தையைத் தத்தெடுக்கலாம். அது உனக்கு நல்ல பேரையும் வாங்கித் தரும். ஒரு குழந்தைக்கு அனாதைங்குற பட்டமும் போகும். இதுதான் சரியான வழின்னு எனக்குப் படுது. இதுதாம்மா என்னோட முடிவு."

நேராக நிமிர்ந்து அப்பாவைப் பார்த்தாள். சுந்தரராஜன் முடிவைச் சொன்ன விதத்திலிருந்து அவருக்குச் சம்மதமில்லை என்று புரிந்து கொண்டாள். அம்மாவிடம் இதற்கு மேல் ஒன்றும் எதிர்பார்க்க முடியாது. கண்ணனோ திருமணம் செய்து குழந்தை பெற்றவன். அவனுடைய உதவியையும் இனிமேல் கேட்க முடியாது. தன்னுடைய முடிவைச் சொல்வதே நல்லது என்று இப்படிச் சொன்னாள்.

"சரி. நீங்க ஒங்க முடிவைச் சொல்லீட்டீங்க. என்னுடைய முடிவையும் நான் சொல்லீர்ரேன். I am already pregnant."

தொடரும்.....

பென்ஸ்
08-02-2007, 02:25 PM
ராகவன்....
யதாமாக பேசும் அப்பா..
யதார்த்தம் மீறி சிந்திக்கும் சந்தியா...
எல்லா அம்மா போல் பேசமுடியாமல் போகும் அம்மா...
இவர்களின் செயலுக்கான மன நிலைக்கான காரணம்...
அதன் விளைவு.. இன்னும் கதையின் ஓட்டத்தோடு புரிந்து கொள்ள ஆவலாய்...

ஆனால்...
இவர்களின் அறிமுகம் கதையின் ஓட்டத்தோடு கொடுத்திருக்கலாம்...
கதையில் இருந்து தனியே அழைத்து அவர்களை அறிமுக படுத்துவது போல் ஒரு உணர்வு...

அறிஞர்
08-02-2007, 07:01 PM
இருக்கும் கலாச்சாரத்தை விட்டு வெளியேற/மாற்ற துடிக்கும் உங்கள் கதையின் நாயகி....

ஒரு குடும்பத்தில் ஏற்படும் உணர்ச்சிகளை அழகாக எழுதியுள்ளீர்கள்..

இன்னும் தொடருங்கள்..

ஓவியா
10-02-2007, 05:09 PM
யாரும் எதிர் பாரா வகையில் கதையில் ஒரு திருப்பம்.

நச்சுனு கரு. ;)

அடுத்த பாகத்தை படிக்க ஆவலாய்...

நன்றி


மயிலாரே நல்லா கத உடறீக....சும்மா லுலுவாங்காட்டிக்கு :)

மன்மதன்
10-02-2007, 05:32 PM
அய்யகோ.. இனி என்ன நடக்கபோவுதோ... ஆமா.. பிள்ளை வரம் கொடுத்த அந்த சண்டாளன் யாரு..!!??


(உண்ணால-உன்னால)

gragavan
14-02-2007, 04:48 PM
அய்யகோ.. இனி என்ன நடக்கபோவுதோ... ஆமா.. பிள்ளை வரம் கொடுத்த அந்த சண்டாளன் யாரு..!!??


(உண்ணால-உன்னால)
அது சண்டாளன்னு எப்படிச் சொல்ற மன்மதா? சந்தியா கோவிச்சுக்கப் போறா. அதான் artifical inseminationனு சொல்றாளே!

மயூ
15-02-2007, 02:40 PM
ஐயோ சந்தியா!!! என்ன இது இப்படிக் குண்டைத் தூக்கிப் போட்டிட்டீங்களே!!! அடுத்த பாகத்துக்கு மூச்சு வாங்க ஓடுறேன்..... ஹா.. ஹா...

இளசு
25-02-2007, 12:06 PM
சில மனமுடிச்சுகள்.. உறவுச்சிக்கல்கள்..
ஈராக், பாலஸ்தீன், காஷ்மீர் சிக்கல்களைவிட பூதாகாரமானவை..

சுயம், சிந்தித்தல் - இன்றைய அப்பா -மகள் உறவின் அடித்தளம்..
எழும்பும் கட்டடங்களில் சில இப்படி பின்நவீனத்துவ அமைப்பில் இருப்பின் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது..

50 ஆண்டுகளுக்கு முன் மேலைநாட்டில் இருந்த சாலைவசதிகள், தொலைத்தொடர்பு, வாழ்க்கை வசதிகள் இன்று நம் நாட்டில்..
அதே வழியில் கலாச்சார அளவீடுகளும் மதிப்பும் மாறத்தானே செய்யும்?

தொடர்கிறேன் ராகவன்.. படிக்க..

மன்மதன்
04-03-2007, 02:15 PM
அது சண்டாளன்னு எப்படிச் சொல்ற மன்மதா? சந்தியா கோவிச்சுக்கப் போறா. அதான் artifical inseminationனு சொல்றாளே!

அடுத்த பதிவுல வர்ரபோறத முன்கூட்டியே சொல்ல எனக்கு என்ன ESPயா இருக்கு..!!! எனக்கு புதுசுபுதுசா நிறைய கத்து தர்ரே.. நன்றி..