PDA

View Full Version : ♔. எமக்குத் தொழில் லொள்ளு...!



ராஜா
03-02-2007, 09:30 AM
நான் நடுநிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சம்பவம் இது.ஆறாம் நிலையிலிருந்து ஏழாம் நிலைக்கு தேர்ச்சி அடைந்து முதல் நாள் பள்ளி செல்லவில்லை. ஆண்டு விடுமுறை முடிந்த சோகத்தை அனுசரிக்க (துக்கம் அனுஷ்டிக்க..?) முதல் நாளே மட்டம் போட்டு விட்டேன். அப்பா வியாபாரத்துக்கு போய்விட்டார். தாய் சிறு வயதிலேயே தவறி விட்டார். என்னைப்போல ஓரிரு பள்ளி செல்லாப் பிள்ளைகளுடன் கிட்டிப் புள் விளையாடிக்கொண்டிருந்தபோது காலைப் பள்ளி முடிந்து தெருப் பையனெல்லாம் வந்துகொண்டிருந்தனர்.

பொதுவாக முதல்நாள் பள்ளி என்றால் அரை நாள் தான் இருக்கும். வந்தவர்கள் எல்லோரும் என்னை பரிதாபமாகப் பார்த்தார்கள். ஒருவேளை என்னை ஆறாம் நிலையிலேயே அமர வைத்துவிட்டார்களோ என்ற பதைப்புடன் அவர்களை இது குறித்து விசாரித்தேன்..

"பெயிலாப் போயிருந்தா கூட நல்லாருக்குமேடா ராஜா.. ஒன்னை மட்டும் செவன்த் 'ஏ' கிளாஸ்லே போட்டுட்டாங்கடா.." என்று வருத்தமா அல்லது மகிழ்ச்சியா என்று கண்டுபிடிக்க முடியாத தொனியில் கூட்டு பாடினார்கள். எனக்கு 'இப்பவே ஊரை விட்டு ஓடிரலாமா' என்று தோன்றியது.காரணம் ஏழாம் நிலை 'அ' பிரிவின் வகுப்பு ஆசிரியர் டேனியல் வாத்தியார்..

குள்ளமான உருவம்.. வழுக்கைத்தலை.. பக்கவாட்டுப் பைகளில் அழுக்கேறிய கதர் ஜிப்பா...தோளில் காதி கிராஃப்ட் பை தொங்கும்..
வெறித்த பார்வை.. இதுதான் டேனியல் வாத்தியார்.. ஆசிரியர்களிலேயே கூட யாருக்கும் அவரைப் பிடிக்காது. ஆனால் அளவற்ற ஞானம்.. இலக்கணத்தமிழில் எல்லையற்ற புலமை. அவர் மாணவர்களுக்கு போடும் கொட்டுகள் (குட்டுகள்) ஊர் பிரசித்தம். மெல்ல குட்டினால் அது கால் குட்டு.. வலிக்கிறமாதிரி குட்டினால் அரை குட்டு.. வீங்குகிற மாதிரி குட்டினால் அது முக்கால் குட்டு..! முழு குட்டு இதுவரை யாரும் வாங்கியதில்லை..! அது எப்படி இருக்கும் என யாரும் ஆராய முற்பட்டதும் இல்லை...!!

மற்ற வகுப்பில் எல்லாம் மாணவர்கள் கூட்டம் அலைமோதும்.. ஆனால் டேனியல் வகுப்பு மட்டும் வெறிச்சோடிக் கிடக்கும்.அவர் வகுப்புக்கு பிரித்து அனுப்பப்படும் மாணவர்கள் கவுன்சிலர் முதல் குடியரசுத் தலைவர் வரை சிபாரிசுக்கு அழைத்துவந்து முதலில் வகுப்பு பிரிவை மாற்றிவிட்டுதான் உள்ளேயே நுழைவார்கள். இந்த ரகசியம் தெரியாதவர்களும், அல்லது கவுன்சிலர் அளவுக்கு கூட யாரையும் பிடிக்க முடியாதவர்களும், மிக நன்றாகப் படிக்க கூடியவர்களும், மாணவிகளும் மட்டுமே அந்த வகுப்பில் இருப்பார்கள்.பலர் தொடர் விடுமுறையில் இருப்பார்கள்.சிலர் தன் தந்தையாரின் மேலதிகாரியைப் பிடித்து வேறு ஊருக்கு மாற்றல் வாங்கும் முயற்சியில் கூட இருப்பார்கள்..!!

இதில் அவருக்கு உயரமான மாணவர்களையும் தலை கொள்ளாமல் முடியிருப்பவர்களையும் அறவே பிடிக்காது. எனக்கோ இலக்கணம் என்றால் வேப்பங்காய். இந்த அம்சங்களையெல்லாம் மனதிற்கொண்டு அப்பா வந்ததும் "பிட்டை" மெல்ல போட்டேன்.. அப்படியாப்பா..? எனக் கேட்டவர் லேசாக யோசிக்கத் தொடங்கினார்..( என் அப்பா உழைத்து முறுக்கேறிய உடலமைப்புடனும் முரட்டு மீசையில் அச்சுறுத்தும் தோற்றத்துடனும் இருப்பார்.. ஆனால் சிறு வயதிலேயே நான் தாயைப் பறிகொடுத்தவன் என்பதால் என்மீது அளவற்ற பாசம் கொண்டிருந்தார்.. தற்போது அமரராகிவிட்ட அந்த வாழ்க்கைப் போராளியைப் பற்றி தமிழ் மன்றத்தில் பதிவிட மெத்த ஆசை).
நான் காரியம் பாதி கனிந்து விட்டதாக முடிவு செய்தேன். வகுப்பு மாற்றப்படவில்லை என்றால் கூட பரவாயில்லை.. என் அப்பாவை டேனியல் கண்ணில் காட்டிவிட்டால் கூட போதும்..அப்புறம் என் மேல் ( தலையில்) கைவைக்க தயங்குவார் என்பது என் திட்டம். ஆனால் அப்பா மெல்ல , "தம்பி.. உனக்கு அம்மா இல்ல.. நானும் பாதி நாள் வெளியிலேயே சுத்திக்கிட்டிருக்கேன்.. உன்னப் பத்தி காதிலே விழற சங்கதி எல்லாம் அவ்வளவு நல்லா இல்லே. அதனாலே... அவர் கிளாஸ்லேயே படி" என்று இடியை இறக்கிவிட்டு தூங்கிவிட்டார்.. அவருக்கென்ன தூங்கிவிட்டார்..அகப்பட்டவன் நானல்லவா.. எப்படி தூக்கம் வரும்..? அதுவும் மறுநாள் அப்படி ஒரு சம்பவம் நடக்க வேண்டும் என்று "தலையில்" எழுதியிருக்கும்போது...!!!

மறுநாள் காலையில் பழைய சாதம் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு சென்றேன்.. 'அதிர்ஷ்டம் ஆர்டினரி தபாலில் வரும்..தரித்திரம் தந்தியிலே வரும்' என்ற வாய்மொழிக்கேற்ப முதல் தமிழ் வகுப்பே இலக்கணம்...முதல் நாள் தூக்கமின்மை, பழைய சாதம், சாளரத்தினூடே வந்த வேப்பமரக் காற்று..இலக்கணப் பாடம் எல்லாம் சேர்ந்து நிம்மதியான தூக்கத்தை தரவே, கடைசி டெஸ்கில் சாய்ந்து அயர்ந்து விட்டேன்..!

இன்னும் சற்று நேரம் போயிருந்தால் இடைவேளை மணி ஒலித்திருக்கும்.. ஆனால் விதியின் விளையாட்டு,,,திடீரென்று பக்கத்து மாணவன் உசுப்பவே, அரைக்கண்ணைத் திறந்து பார்க்க ஜிப்பா போட்ட பத்ரகாளியாக டேனியல்..

"சொல்லு.. புளி மாங்காய் என்றால் என்ன..?

சாதாரணமாகவே தூக்கத்தில் விழித்து சகஜ வாழ்க்கையில் ஈடுபட எனக்கு 5 மணித்துளிகள் தேவைப்படும்.. அன்று சிறப்புத் தூக்கம் வேறு..! இருந்தாலும் சிரமப்பட்டு சொன்னேன்..

"அது ஒருவகை ஊறுகாய் அய்யா.. !"

இந்த பதிலை டெஸ்கில் சாய்ந்திருந்த நிலையிலேயே சொன்னேன் என்னுடைய குற்ற விகிதம் ஏறிக்கொண்டிருப்பதை உணராமல்..!

அன்று தன்னுடைய வாழ்க்கையின் முதலாவது முழுக்குட்டை பதிவு செய்யும் உத்தேசத்துடன் கையை பின் தூக்கி முழுவேகத்தில் டெஸ்கில் படிந்து இருந்த என் தலையை நோக்கி இறக்கினார்.. நான் போர்க்கால நடவடிக்கையாக தலையை "பொசுக்" கென்று இழுத்துக்கொள்ள... அன்றிலிருந்து அவர் பெயர் " டெஸ்க் குட்டி டேனியல் வாத்தியார்."

ஷீ-நிசி
03-02-2007, 03:50 PM
நல்லாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ சிரிததேன் நண்பரே... இது தொடருமா.......

ஆதவா
03-02-2007, 05:50 PM
..................................................................................................
..................................................................................................
..................................................................................................
..................................................................................................

வார்த்தை வரவில்லை........... சிரிப்புதான் வருது

விகடன்
04-02-2007, 03:01 AM
இதுவரை சிரிப்பாகத்தான் இருந்தது. மிக்க நன்றி.

......இருந்தாலும் ஒரு சந்தேகம்.

அதற்குப் பிறகு உங்களை சும்மாவா விட்டார்?

ராஜா
04-02-2007, 07:25 AM
இதுவரை சிரிப்பாகத்தான் இருந்தது. மிக்க நன்றி.

......இருந்தாலும் ஒரு சந்தேகம்.

அதற்குப் பிறகு உங்களை சும்மாவா விட்டார்?


நான் படிப்பை விட்டுட்டேன்....!

ஷீ-நிசி
04-02-2007, 02:56 PM
நான் படிப்பை விட்டுட்டேன்....!


ஹ ஹ ஹ ஹ ஹ ஹ.........

மதுரகன்
04-02-2007, 04:37 PM
"அது ஒருவகை ஊறுகாய் அய்யா.. !"

சிரிப்பு ஓயவில்லை ஐயா...

மன்மதன்
04-02-2007, 05:13 PM
ஓஹ்ஹோ.. ஹ்ஹாஹ்ஹா.. தங்கர் படித்தால் 'பள்ளிக்கூடத்தில்' சேர்த்துவிடுவார். அருமை ராஜா.. (இது உண்மை சம்பவமா??? கற்பனை குதிரையா??)

pradeepkt
05-02-2007, 10:54 AM
குடிகாரரே குடிகாரரே மன்னார்குடிகாரரே...

படித்துப் படித்துச் சிரித்தேன்.... உங்க அடுத்த நிலையை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது. ஆனால் ஒரு காமெடியை டிராஜடி ஆக்க விரும்பாமல் பாதியிலேயே நிறுத்தி விட்டீர்கள் போலும் :D

பென்ஸ்
05-02-2007, 12:36 PM
ஹீ.. ஹீ...
என்ன இது ... பெரியபுள்ளதனமாயில்ல இருக்கு...

மனோஜ்
05-02-2007, 01:26 PM
ராஜா அய்யே ராஜ ராஜ வயிறு வலிக்குது சிறிக்க முடியல போங்க..

மயூ
05-02-2007, 04:18 PM
அடடா!
என்ன ஒரு சாகசம்! ஹரி போட்டர் எல்லாம் தோத்துவிடுவார் போல இருக்குது!

அறிஞர்
05-02-2007, 04:38 PM
எப்படி இருந்த வாத்தியார்...
உங்களால் அவர் நிலை இப்படி ஆகிட்டதே (டெஸ்க்.. குட்டி ....)

தங்கள் பதிவை படித்தபின் சிரிப்பை அடக்கமுடியவில்லை...

இது போன்ற சுவையான சம்பவங்களை கொடுங்கள் ராஜா.

-------------
வாழ்க்கை போராளியான தங்கள் தந்தைப் பற்றியும் பதிவு கொடுங்கள். பலருக்கு பிரயோசனமாக இருக்கும்.

maganesh
06-02-2007, 01:11 PM
சற்றே நீண்ட நகைச்சுவைதான். ஆனாலும் படிக்கச் சுவாரசியமாக இருந்தது. தொடர்ந்து இவ்வாறான பதிப்புக்களை உங்களிடமிருந்து எதிபார்க்கின்றேன்.

ராஜா
17-02-2007, 03:24 PM
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் சென்னையில் இருந்து விரைவுப் பேருந்தில் திரும்பும் போது நடந்த சம்பவம் இது.

இரவு 10 மணி..பேருந்து புறப்படும் தருவாயில் இருந்தது.. எனக்கு 11 ம் எண் இருக்கை. நடைபாதையை ஒட்டி இருந்தது. முந்தின இரண்டு நாட்கள் சரியான தூக்கம் இல்லை. வண்டி விக்கிரவாண்டி போவதற்குள் தூங்கினால்தான் உண்டு.. அதன் பின்னர் சாலை குண்டும் குழியுமாக இருக்கும். மன்னை செல்லும் வரை குதிரைச் சவாரிதான்.. ஓட்டுநர் மாரியம்மன் கோவிலில் உண்டியல் குலுக்குபவர் போல எங்களையெல்லாம் குலுக்கிதான் அழைத்துப் போவார். ஜன்னலோர இருக்கைக்காரர் வந்து அமர்ந்தவுடன் தூங்க ஆரம்பிக்கலாம் என்று சிரமப்பட்டு விழித்துக் கொண்டு இருந்தேன். ஒருவழியாக அவரும் வந்தார்.. நல்ல உடையணிந்து, அதிகாரி போன்ற தோற்றத்தில் இருந்தார். நட்பாக ஒரு சிரிப்பை நான் உதிர்த்து, எழுந்து அவருக்கு வழி விட்டேன். அவரோ, அற்பப் புழுவைப்போல் என்னைப் பார்த்துவிட்டு தான் அமரப் போகும் இருக்கையை செய்தித்தாளால் தட்ட ஆரம்பித்தார். என் வயது இருக்கும்..[47 -ல் இருந்து 50 க்குள்]. பின்னர் கால் சட்டையில் இருந்து கைத்துண்டை எடுத்து நன்கு அழுத்தித் துடைத்தார். நான் காத்திருப்பதையும், அவர் நீண்ட நேரம் சுத்திகரிப்பு செய்வதையும் பார்த்துக் கொண்டிருந்த ஓரிரு பயணிகள் அவர்பால் ஆர்வம் காட்ட ஆரம்பித்தனர்.

ஒரு வழியாக அமர்ந்த அவர் மரியாதைக்குக் கூட சிரிக்கவோ, அமருங்கள் என்று சொல்லவோ இல்லை.நானும் அதுபற்றி கவலை கொள்ளாமல் கண்களைப் பூட்ட முயன்றபோது..

அடடே.. வாங்க சண்முகம்.. என்று பக்கத்திருக்கைகாரர் யாரையோ கத்திக் கூப்பிட்டார்..திடுக்கிட்டு விழித்து என்ன என்று பார்த்தால் "சண்முகம்" என் பக்கத்திலேயே நின்றிருந்தார்.. அவ்வளவு சன்னமான குரல் நம் பக்கத்தவருக்கு..இருவரும் உரையாடிக்கொண்டனர். சண்முகத்துக்கு கடைசி வரிசையில் இடம் ஒதுக்கப் பட்டிருந்தது.
பக்கத்து இருக்கை, " சண்முகம்.. பாத்து ரொம்ப நாளாச்சு.. உக்காருங்க.. பேசிக்கிட்டே போவோம்..!" என்று அவரிடம் சொல்ல, அவரோ.." சார்.. நான் கடைசி இருக்கை.. " என்று தயங்க, 'சார்' சொன்னார்.. so what..? let's push this guy back..!" இவ்வாறு சொல்லி சாய்மானத்துக்கான கைப்பிடியை தள்ளுவது போல் 'சார்' சைகை செய்து சிரித்தார்.[சத்தம் போட்டுதான்]. சண்முகம் நெளிந்தார்..பின்னர் 'சார்' என்னிடம் சொன்னார்.." நீங்க பின்னாடி போய் உட்காருங்க.. நாங்க கொஞ்சம் பேசணும்..!" கொஞ்சம் அதிகார தோரணையாக இருந்ததாலும், குடந்தை குண்டு குழி சாலை நினைவுக்கு வந்ததாலும் " பரவால்லே.. சார்.. நான் இந்த இருக்கையிலேயே சமாளிச்சுக்கறேன்..". என்று நான் சொல்ல, சண்முகம் என் நக்கலை உணர்ந்தவராக பின்புறம் சென்று விட்டார். பேருந்தும் புறப்பட்டு விட்டது. நான் தூங்க ஆரம்பித்தேன்..

திடீரென்று யாரோ கத்தும் ஓசை கேட்டு தூக்கி வாரிப் போட்டது.. பார்த்தால் நம் 'சார்' செல்பேசியில் யாரிடமோ கடிந்து கொண்டிருந்தார்.நான் திடுக்கிட்டு எழுந்ததை பக்கவாட்டுப் பார்வையில் இரசித்தவாறே சார் பேசி முடித்தார். வண்டி தாம்பரம் கூட தாண்டவில்லை. அவர் செல்பேசி அடிக்கொரு தடவை ஒலிப்பதும் சார் எடுத்து கத்துவதும் தொடர்கதையாகி விட்டது. எனக்கோ தூக்கம் வர மறுத்து விட்டது. மற்நாள் கால 10 மணியளவில் "வாட்" தொடர்பான ஒரு விளக்கக்கூட்டத்துக்கு எங்கள் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. அதில் கேட்பதற்கு சில கேள்விகள் என்னிடம் இருந்தன. ஆனால் சார் தூங்க விடமாட்டார் போல இருக்கிறதே..?

நான் " அய்யா.. தயவு செய்து கோபம் கொள்ளாதீர்கள்.. அடுத்த முறை அழைப்பு வந்தால் தயவு செய்து சற்று தணிவான குரலில் பேசுங்கள்.. என் தூக்கம் கெடுகிறது" என்று சொல்ல.. அவரோ" அப்படியானால் டாக்ஸியில போயிருக்கணும்.. இது பஸ்.. இது மொபைல்.. அடிச்சா எடுத்துப் பேசித்தான் ஆகணும்.. சிக்னல் இல்லேன்னா கத்தித்தான் பேசணும்..!" என்று எனக்கு செல்பேசியைப் பற்றி ஒரு அறிமுக உரையே நிகழ்த்திவிட்டு வெற்றிப்பார்வை பார்த்தார். .

அடுத்த அஸ்திரத்தைப் பிரயோகிக்கும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. அவர் ஸ்வெட்டர், ஸ்கார்ஃப் அணிந்திருந்த துணிவில், சன்னல் கண்ணாடியைத் திறந்து வைத்தார். இந்தச் செய்கை, அவரை இன்னும் சில பேருக்கு எதிரி ஆக்கியது. டிசம்பர் குளிர் கண்ணாடி ஓரம் அமர்ந்திருந்த அவரை விட எங்கள் மேல் ஆவேசமாகத் தாக்கியது. வேறு வழியின்றி நான் இடம் மாறுவேன் என்று நினைத்தாரோ என்னவோ.. நான் நம்பிக்கையின்றி கண்ணாடியை மூடச் சொல்ல, உடனடியாக பதில் வந்தது.." பரவால்லே.. நான் கண்ணாடியத் திறந்து வச்சே சமாளிச்சுக்கறேன்..!"
விசுக்கென்று கோபம் வந்தாலும் அவரது கவுன்டர் அட்டாக்கை என் மனம் பாராட்டாமல் இல்லை.

சரியான எதிரியை சந்தித்த சந்தோஷத்தில் என் தூக்கம் ஓடிவிட்டது. எனக்கும் மைண்ட் கேம் ஆடப் பிடிக்கும்.. நான் எதிர்பார்த்திருந்த வாய்ப்பும் வந்தது..

அடுத்த முறை அழைப்பு ந்ம்ம 'சாருடைய' மேல் அதிகாரியிடமிருந்து.. அவர் 'ஹலோ சார்.. சொல்லுங்க .. சார்..' என்று ஆரம்பிக்கும் போதே நானும் என்னுடைய மொபைலை பாக்கெட்டிலிருந்து எடுத்தேன்.. அவர் பேசுவதற்கு எதிராகவே நானும் சத்தமாக "அழைப்பு" செய்து பேச ஆரம்பித்தேன்.. சாரால் தாங்கமுடியவில்லை.. மேலதிகாரியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு பின்னர் கூப்பிடுவதாக சொல்லி துண்டித்தார். " என் பக்கம் திரும்பி, " பொது இடத்தில் நடந்துகொள்ளும் முறை" பற்றி 5 நிமிடம் உரையாற்றினார். நான் மெல்ல, " நீங்க டாக்ஸியில் போனீங்கன்னா இப்படி சிரமம் இருக்காது சார்..!" என்றேன். பக்கத்தில் நடைபாதைக்கு அப்புறம் அமர்ந்திருந்த ஒரு பயணி.."ஆஹா.." என்று எனக்கு தார்மீக ஆதரவு தெரிவிக்க, இன்னும் கோபம் ஆகிவிட்டார் மனிதர். இந்த நேரம் பார்த்து மேலதிகாரி அவரை மீண்டும் அழைக்க.. எடுத்துப்பேசவே பயந்தார்.. நான் என் மொபைலை எடுக்க, அவர் கை தன்னிச்சையாக கண்ணாடி சன்னலை இழுத்து மூடியது. பின்னர் பேச்சும் தணிவாகவே வந்தது.. "இப்போ முடிச்சுக்கறேன்.. ப்ளீஸ்.."

நான் மொபைலை உள்ளே போட்டுவிட்டு தூங்க ஆரம்பித்தேன்..!

மனோஜ்
17-02-2007, 03:38 PM
கருவம் என்றும் நம்மை பின்தல்லும் என்பதை உனர்த்தும் சம்பவம்
அருமை ராஜாதி ராஜா
தொடருங்கள்.....

Mathu
17-02-2007, 03:48 PM
ஆகா சில இடங்களில் இப்படி தான் லொள்ளுக்கு பதில் லொள்ளாதான் இருக்கணும் அசத்தல் ராஜா தொடருங்கள்.

ஓவியா
17-02-2007, 05:27 PM
அண்ணா,
இரண்டு பாகமும் அபாரம், ரசித்து படித்து சிரித்தேன்,

தங்க தமிழில் தங்கள் பதிப்புக்கள் சுவையோ சுவை.

பாராட்டுக்கள், தொடருங்கள்.

ராஜா
07-03-2007, 02:55 PM
வணக்கம் நண்பர்களே..!

இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் தொடர்வண்டியில் என் பாட்டி செய்த லூட்டியைப் பற்றி சொல்ல விரும்புகிறேன்..

பட்டம்மாள்.. வயது 86. தன் மகனுடன் சென்னையில் நலமுடன் வாழ்ந்து வருகிறார்கள். என் தாயின் தாய். தன்னுடைய 38-வது வயதிலேயே கிடைத்த பேரன் என்பதால் என் மீது பாசம் இருந்தாலும், பிறந்ததுமே தன் மகளை விழுங்கிவிட்டானே என்ற ஆதங்கமும் அவருக்கு இன்றும் உண்டு.

படிப்பது துக்ளக்,ஜூனியர் விகடன், நக்கீரன். பாடுவது கே.பி.சுந்தராம்பாள் பாடல்கள். போடுவது புள்ளிக் கோலம், பேரன் பேத்திகளுக்கு போஸ்டர் எழுத்துகளில் கடிதம். [ஏண்டா மடப் பயலே ராஜா என்று எழுதுவதற்கு பதிலாக ஏண்டா மடை பாயலே என்று ஒருமுறை எழுதிவிட நான் குசும்பாக வாய்க்கால் தூர் வார வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பதில் எழுதி பாட்டியிடம் பாட்டு வாங்கியது ஒரு இனிய கதை..] பார்ப்பது சன் சீரியல்கள் என்று ஒரு கலவையான பெண்மணி. படித்தது அந்தக் கால முதல் பாரம் என்றாலும் உலக விஷயங்கள் அனைத்தும் விரல் நுனியில்..

ஒரு முறை அவரது மகன் சி.எம்.சி. மும்பையில் பணிபுரிந்து வந்தார். அப்போது நெருங்கிய உறவினர் வீட்டு திருமணத்துக்கு அவர் வர இயலாததால், தன் தாயை கும்பகோணத்துக்கு அனுப்பி வைத்தார். மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து, பின் சென்னையில் இருந்து குடந்தை வர முன்பதிவு செய்து தொடர்வண்டியில் இவரை அனுப்பி வைத்தார். மும்பை - சென்னை தொடர் வண்டி 4 மணி நேரம் தாமதமாகிவிட, சென்னையில் இருந்து கிளம்பும் வண்டியைப் பிடிக்க இயலவில்லை. என்றாலும் பாட்டி அயரவில்லை. எழும்பூரில் புறப்படத் தயாராக இருந்த வேறொரு வண்டியில் தான் செல்லவிருந்த பெட்டி, இருக்கை எண் பிசகாது ஏறி செட்டில் ஆகி விட்டார். வண்டி மட்டும் வேறு.

உண்மையிலேயே அந்த இருக்கைக்குரிய நபர் வந்து கேட்ட போது பாட்டி எழ மறுத்து விட்டார். அவருக்கும் பாட்டிக்கும் இடையே நடந்ததாக நம்பப்படும் உரையாடல் இது..[ ஒவ்வொரு முறை இந்தக் கதையை நாங்கள் பாட்டியைச் சொல்லச் சொல்லி கேட்கும் போது சம்பவங்கள் ஒரே மாதிரியும் பேச்சு வார்த்தைகள் வெவ்வேறாகவும் இருக்கும்..!]

பாட்டிம்மா.. எந்திரிங்க.. இது என் சீட்..

ஏன்.. இது என்னோடது..

இல்லம்மா.. எங்க உங்க சீட்டைக் காட்டுங்க.. நீங்க உக்காரவேண்டிய சீட்டு எதுன்னு நான் காட்டறேன்..

உன் சீட்டே உனக்கு தெரியலே.. இதில எனக்கு சீட்டு காட்டுவியா.. இதுதான் என்னோடது..

உங்க டிக்கட்டைக் காட்டுங்களேன்..

நீ என்ன ரயில் ஆபீசரா..? முடியாது.. [ உண்மையில் டிக்கட்டை பிடுங்கிக் கொண்டு ஓடி விடுவார் என்ற பயமாம் பாட்டிக்கு..]

கிழவிகளுக்கு ஒரு வசதி என்னவென்றால் யாரும் அவர்களை பிடித்து இழுக்கவோ, திட்டவோ அஞ்சுவார்கள்.. நம் நண்பரும் வேறு வழியின்றி பயணச் சீட்டு பரிசோதகரைத் தேடிப் போக.. பாட்டி படுக்கையைப் போட்டு போர்வையைப் போர்த்திக்கொண்டு படுத்து விட்டது. வண்டியும் புறப்பட்டு விட்டது. சற்றுப் பொறுத்து அதிகாரி வந்து எழுப்பி டிக்கெட் கேட்க, தன் டிக்கெட்டை எடுத்துக் கொடுத்தது பா[ர்]ட்டி. முதலில் அதிகாரி சரியாக இருக்கிறதே என்று குழம்பினாலும், ஒவ்வொன்றாக சரிபார்த்து வரும்போது, வண்டி மாறியிருப்பது தெரிந்தது. பின்னர்...

பாட்டிம்மா.. எந்திரிங்க சொல்றேன்..

சொல்லுங்க.. எனக்கு உடம்பு சரியில்ல..

கொஞ்சம் போர்வையை எடுத்துட்டு என்னப் பாருங்க.

சொல்லுறது கேக்குது.. சொல்லுங்க..

நீங்க போகவேண்டியது இந்த ரயில் இல்லம்மா..

[சற்றே முகத்தைத் திறந்து, அதிகாரி பக்கம் திரும்பி..] இது கும்மோணம் போற வண்டி இல்லியா..?

போகுது.. ஆனா..

பின்ன என்ன.. ? எனக்கு உடம்பு சரியில்ல..[ திரும்பி படுத்து விட்டார்].

என்னம்மா இது வம்பாப் போயிருச்சு..? இங்கே பாரும்மா.. உன் வண்டி முன்னாடியே போயிருச்சு.. நீ முன்னாடியே வந்திருக்கணும்.. அதை கோட்டை விட்டுட்டு இம்சை பண்றே.. எந்திரி..

அது எப்படிப் போவும்..? பம்பாயில் இருந்து செண்ட்ரல்ல எறங்கி டாச்சி புடிச்சு இங்க வந்து ஏறியிருக்கேன்.. அதெல்லாம் ஒண்ணுமில்ல..

அதிகாரி மீண்டும் முட்டுச்சந்துக்கு வந்து விட்டார். பின்னர் திரும்ப பாட்டியின் சீட்டுகளை சோதித்து ஒருவாறு மும்பை வண்டி தாமதமென அறிந்து..

பாட்டிம்மா.. நீங்க பாம்பேலேருந்து வந்த வண்டி லேட்டு.. அதனால இங்க இருந்த வண்டி கிளம்பிருச்சு.. இது இவர் இருக்க வேண்டிய சீட்டு.. நீங்க எந்திரிங்க.. உங்களுக்கு வேற சீட்டு தாரேன் வாங்க..

அத அந்தப் புள்ளைக்கு குடுங்க.. லேட்டாமில்ல.. நாங்க தாதருக்கு சரியான நேரத்துக்கு வந்துதான் ஏறினோம்..

இனி சாமம் வேலைக்காகாது.. தண்டம் தான் என்று முடிவுக்கு வந்த அதிகாரி...

ஏ.. கெழவி.. என்ன லா பாய்ண்ட் பேசறே.. எந்திரிக்கிறியா..? இல்லே தூக்கி வெளில போடவா..?

யாரைப் பார்த்து கெழவிங்கறே..? நீ அப்படியே கொமரனாவே இருக்கப் போறியா..? நான் ஒரு இஞ்சினீரு அம்மா.. அப்பை சப்பையா நெனைச்சுடாதே..?

அதிகாரி துணுக்குற்றாலும் சமாளித்து..

இஞ்சி நீரா இருந்தா என்ன.. சுக்கு நீரா இருந்தா என்ன.. சரி.. எந்தக் கம்பேனியில வேல செய்யுறாரு உம் மொவன்..?

சியெம்சி.. கேள்விப் பட்டுருக்கியா..?

அதிகாரிக்கு பலமான அதிர்ச்சி.. இந்தக் காலத்தில் கணினிகளும் நிறுவனங்களும் சர்வ சாதாரணம்.. 25 வருடங்களுக்கு முன் அவ்வாறல்ல.. அதிலும் ஐ.பி.எம் ஆக இருந்து, ஆளுவோரால் கோக் இத்யாதியுடன் விரட்டியடிக்கப்பட்டு பின் இந்திய அரசு ஆதரவுடன் கம்ப்யூட்டர் மெயிண்டனன்ஸ் கார்ப்பரேஷன் என்ற பெயரில் துவக்கப்பட்ட அந்தக் கால இலுப்பைப் பூ அது. மேலும் கம்ப்யூட்டர் என்றால் ரோபோ என்று ரொம்ப பேர் நினைத்திருந்த
அந்தக் காலத்தில், சியெம்சி என்று சர்வ அலட்சியமாக ஒரு கிழவி சொன்னால்.. அதிர்ச்சி இல்லாமல் இருக்குமா..?

என்றாலும் அதிகாரிக்கு ஒரு சந்தேகம்.. எவ்வளவு விவரமாகப் பேசினாலும் பேச்சு வழக்கு ஒருவரின் தகுதியைக் காட்டிக் கொடுத்துவிடும் என்று நம்மில் பலர் நம்பிக் கொண்டிருக்கிறோம் அல்லவா..? அது போல கடைசி முயற்சியாக...

இந்தாம்மா .. எதுவா வேணா இருந்துட்டுப் போகட்டும்.. இப்ப எந்திரிக்கிறியா.. இல்லே போலீசைக் கூப்பிடவா..?

பாட்டி விருட்டென்று எழுந்தது.. பாட்டிலைத் திறந்து கொஞ்சம் தண்ணீர் குடித்தது. அதிகாரி மற்ற பயணிகள் மத்தியில் தன் இமேஜ் உயரப் போவதை எண்ணி மகிழ்ந்திருக்க, பாட்டி சம்மட்டி அடி கொடுத்தது..

நீ போலீசைதான் கூப்பிடுவே.. எம் மவன் யாரு தெரியுமா..? (அப்போதைய மத்திய அமைச்சர்) மாதவ ராவ் சிந்தியாவோட பிரெண்டு. ரெண்டு பேரும் பந்து விளையாடுற படம் வச்சிருக்கேன் காட்டவா..?

பின்னர் அந்த 'அசல்' பயணிக்கு வேறு இடம் ஒதுக்கப் பட்டது. மயிலாடுதுறை வந்ததும் அதிகாரி பாட்டியை எழுப்பி..

பாட்டிம்மா.. இந்த சீட்டை வச்சிக்கங்க.. இங்கெருந்து கும்மோணத்துக்கு போட்டிருக்கேன்.. இங்கே நான் எறங்கிடுவேன்.. வேற அதிகாரி வருவாரு.. சீட்டு கேட்டா இதைக் காட்டுங்க.. இல்லேண்ணா என் வேலை போயிடும்..

என்று தன் செலவில் எடுக்கப்பட்ட ஒரு டிக்கட்டைக் கொடுத்துவிட்டு இறங்கிப் போனாராம்..!
__________________

அறிஞர்
07-03-2007, 03:10 PM
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் சென்னையில் இருந்து விரைவுப் பேருந்தில் திரும்பும் போது நடந்த சம்பவம் இது.....
நான் மொபைலை உள்ளே போட்டுவிட்டு தூங்க ஆரம்பித்தேன்..!

கண்ணுக்கு கண்..
பல்லுக்கு பல்
என்ற பாணியில் பக்கத்தில் உள்ளவரை வறுத்திட்டிங்க போல...

10 மணிக்கு மேல் பேருந்தில் செல்போனில் சத்தமாக பேச தடை வந்தால் நன்றாக இருக்கும்.

அறிஞர்
07-03-2007, 03:17 PM
பாட்டிம்மா.. இந்த சீட்டை வச்சிக்கங்க.. இங்கெருந்து கும்மோணத்துக்கு போட்டிருக்கேன்.. இங்கே நான் எறங்கிடுவேன்.. வேற அதிகாரி வருவாரு.. சீட்டு கேட்டா இதைக் காட்டுங்க.. இல்லேண்ணா என் வேலை போயிடும்..

என்று தன் செலவில் எடுக்கப்பட்ட ஒரு டிக்கட்டைக் கொடுத்துவிட்டு இறங்கிப் போனாராம்..!
__________________
பாட்டி லொள்ளு கொஞ்சம் ஓவரு...
பேரனுக்கு.. பாட்டியின் ஜீன் அதிகமாக இருக்கும் போல...

சுவையான சம்பவம்.
பாட்டிகள் எப்படியெல்லாம் சாதிக்கிறாங்க...

மன்மதன்
07-03-2007, 04:05 PM
ஆஹா.. என்னே சமயோசிதபுத்தி.. பாட்டியும் பேரனும் பதினாறடி பாய்ஞ்சிருக்கீங்க.. பேருந்தில் பயணம் என்றாலே இம்சைகள் இல்லாமலா?? அதை சமாளிக்கும் விதத்தில் உங்களை மிஞ்ச ஆளில்லை...

(கடைசியா உங்க வயசு தெரிஞ்சுபோச்சு..!)

அமரன்
07-03-2007, 04:52 PM
ராஜாவின் லொல்லு தாங்க முடியல.

pradeepkt
08-03-2007, 04:17 AM
பலே பா(ர்)ட்டிங்க... நம்ம பாட்டி!
ராஜாவுக்கே பாட்டின்னா சும்மாவா?

மதி
08-03-2007, 07:02 AM
பாட்டியும் பேரனும்...
கலக்கலோ கலக்கல்..!

மனோஜ்
08-03-2007, 07:36 AM
பாட்டி பலே பாட்டி தா ராஜா
அதா அவங்கபானி உங்களை பிடிச்சுருச்சு:D :D :D :D

raj6272
08-03-2007, 09:15 AM
ராஜா சார் பின்னிட்டீங்க. உங்க பாட்டி பலே பாட்டி!

ஓவியா
08-03-2007, 12:09 PM
விவரமான பாட்டிதான்.

பாட்டிகளின் உயர்வு என்னை வியக்க வைகின்றது. காரணம் சொத்து சுகம், நகை நட்டு, அண்டா குண்டா, துணி மணிகளை இழந்த பாட்டிகளின் புள்ளி விவரம்...............அடேங்கப்பா....

தவறுதான் இருப்பினும்
பாட்டிக்கு எனது பாராட்டுக்கள்.


அண்ணாவின் சுவையான பதிவுக்கு பாசமலரின் வாழ்த்துக்கள்

pradeepkt
09-03-2007, 04:02 AM
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் சென்னையில் இருந்து விரைவுப் பேருந்தில் திரும்பும் போது நடந்த சம்பவம் இது.


ஆமாங்க, இந்த மாதிரி எனிமி சார்களுக்கு எனிமா குடுக்குற உங்களை மாதிரி ஆட்கள் தேவை... B)

aren
09-03-2007, 04:31 AM
உங்கள் அனுபவங்களை அழகாக எழுதி எங்களை சிரிக்க வைத்துவிட்டீர்கள். உங்கள் பாட்டியுன் சமயோசிதபுத்தி அருமை. உங்களுக்கும் அதில் கொஞ்சமாவது இருக்கிறது என்று தோன்றுகிறது.

ஓவியன்
12-05-2008, 04:56 PM
நான் போர்க்கால நடவடிக்கையாக தலையை "பொசுக்" கென்று இழுத்துக்கொள்ள... அன்றிலிருந்து அவர் பெயர் " டெஸ்க் குட்டி டேனியல் வாத்தியார்."

இப்படி ஒரு அருமையான திரி இது வரை என் கண்களில் படாமல் இருந்திருக்கிறதே - சிரித்து சிரித்து எனக்கு புரையேறி விட்டது அண்ணா..!! :icon_b:

அன்புரசிகன்
12-05-2008, 06:00 PM
அடுத்த முறை அழைப்பு ந்ம்ம 'சாருடைய' மேல் அதிகாரியிடமிருந்து.. அவர் 'ஹலோ சார்.. சொல்லுங்க .. சார்..' என்று ஆரம்பிக்கும் போதே நானும் என்னுடைய மொபைலை பாக்கெட்டிலிருந்து எடுத்தேன்.. அவர் பேசுவதற்கு எதிராகவே நானும் சத்தமாக "அழைப்பு" செய்து பேச ஆரம்பித்தேன்..



இந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு மாப்பு.....

:D :D :D....

அதுசரி அடுத்தநாள் கேள்வி எல்லாம் சரமாரியா கேட்டீங்களா?

ராஜா
12-05-2008, 06:25 PM
நன்றி தம்பி மற்றும் மாம்ஸ்..!

அப்படியே... "ராஜா ரயில் பயணம் ராங்கா போன கதை" என்று ஒரு திரி இருக்கும்.. அதையும் கிளப்பி தூசி தட்டுங்களேன்.. புது உறுப்பினர்களும் சிரிச்சுட்டு போகட்டும்..!

அன்புரசிகன்
12-05-2008, 06:27 PM
நன்றி தம்பி மற்றும் மாம்ஸ்..!

அப்படியே... "ராஜா ரயில் பயணம் ராங்கா போன கதை" என்று ஒரு திரி இருக்கும்.. அதையும் கிளப்பி தூசி தட்டுங்களேன்.. புது உறுப்பினர்களும் சிரிச்சுட்டு போகட்டும்..!

நிச்சயமாக..... இன்றைக்கு சிரித்தது போதும் தூங்கு என்று இங்கே நண்பர்களின் நெரிச்சல் வேறு இங்கு.... :D :D :D

logini
16-05-2008, 09:47 AM
கில்லாடி பாட்டி தான். அவங்க தைரியத்தை பாராட்டனும். சிரிப்பை அடக்க முடியல.

அனுராகவன்
16-05-2008, 10:32 AM
ராஜா அவர்களே!!
அருமையான ஜோக்ஸ்
உங்க பாட்டி பலே பாட்டி!

kavitha
16-05-2008, 10:44 AM
[ஏண்டா மடப் பயலே ராஜா என்று எழுதுவதற்கு பதிலாக ஏண்டா மடை பாயலே என்று ஒருமுறை எழுதிவிட நான் குசும்பாக வாய்க்கால் தூர் வார வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பதில் எழுதி பாட்டியிடம் பாட்டு வாங்கியது ஒரு இனிய கதை..]
ஹஹ்ஹ்ஹா.... :) :)

பாட்டியின் லூட்டி அருமையான புத்தி சாதுரியம். பாட்டியே அப்படினா... பேரன் சும்மாவா?

வாழ்க்கைப்போராளியான உங்கள் தந்தை பற்றியும், லூட்டிக்கு பிறந்த சுட்டி.... அதாங்க உங்க பையனைப்பற்றியும் அறிய ஆவல்.

சூரியன்
18-05-2008, 01:03 PM
நான் போர்க்கால நடவடிக்கையாக தலையை "பொசுக்" கென்று இழுத்துக்கொள்ள... அன்றிலிருந்து அவர் பெயர் " டெஸ்க் குட்டி டேனியல் வாத்தியார்." [/COLOR][/SIZE][/FONT][/B]

அப்பறம் என்ன நடந்தது அண்ணா?

சூரியன்
18-05-2008, 01:10 PM
பின்னர் பேச்சும் தணிவாகவே வந்தது.. "இப்போ முடிச்சுக்கறேன்.. ப்ளீஸ்.."

நான் மொபைலை உள்ளே போட்டுவிட்டு தூங்க ஆரம்பித்தேன்..!



சரியான பதிலடி.

ராஜா
19-06-2008, 01:25 PM
அப்பறம் என்ன நடந்தது அண்ணா?



உண்மையிலேயே இது அக்கறையினால் கேட்கப்படும் கேள்வியா.. இல்லே அதுக்கப்புறம் டேனியின் நடவடிக்கை என்னவென்று அறியும் ஆவலா..?

SivaS
26-06-2008, 02:42 AM
ராஜா அண்ணன் கூட இருந்தாலே போதும் வாழ்கைல கவலை:frown: என்பதே தெரியாது சிரிச்சுகிட்டெ இருக்கலம்.:lachen001:
ஓவரா சிரிச்சுகிட்டெ இருந்தால் அதுக்கு பேர் வேறு என்று யாரோ சொல்வது கேட்கிறது.
அண்ணா நீங்கள் முற்பிறவியில் தென்னாலிராமனாக இருந்திருப்பீர்களோ:smilie_abcfra::confused:
எதுக்கும் ஒரு நல்ல ஜோசியரிடம் உங்கள் ஜாதகத்தை காட்டி இந்த மன்றதின் சந்தேகத்தை நிவர்த்தி செய்யுங்கள்:icon_b:

ராஜா
18-12-2008, 05:06 AM
நன்றி நண்பர்களே..!

கா.ரமேஷ்
03-01-2009, 08:47 AM
முதலாவது நல்ல நகைச்சுவை....
இரண்டவது நல்ல பாடம்...
மூன்றாவது பாவம் அந்த இருக்கைக்கு உடையவரும்...சீட்டு பரிசோதகரும்...
எப்படியோ நல்லொதொரு நகைச்சுவை தொகுப்பு

தூயவன்
17-01-2009, 04:55 AM
அருமை மிக்க நன்றி

ராஜா
22-07-2012, 10:40 AM
நன்றி ரமேஷ் மற்றும் தூயவன்..!

கலைவேந்தன்
22-07-2012, 11:40 AM
முன்பே வாசித்திருந்தாலும் மீண்டும் வாசிக்கும் போதும் சிரிப்பை அடக்க முடியவில்லை. மூன்று சம்பவங்களுமே மிக அருமை.

மதுரை மைந்தன்
22-07-2012, 12:21 PM
இந்த திரி என் கண்ணில் படாமல் போனது எப்படி? டேனியல் வாத்தியார், பேருந்தில் சக பிரயாணியுடன் துவந்த யுத்தம், சூப்பர் பா(ர்)ட்டி இப்படி கலக்கோ கலக்கு கலக்கிறீங்க ராஜ அய்யா. இந்த தொடரை ஏன் நிறுத்தி விட்டீர்கள்? நிச்சயம் உங்களிடமிருந்து இன்னும் பல நகைச்சுவையான சம்பவங்களின் பதிவுகளை எதிர் பார்க்கிறேன்.

ராஜா
22-07-2012, 01:24 PM
அண்ணாவும், தம்பியும் கண்ணுற்று மறுமொழியிட்டதில் பெரும் மகிழ்ச்சி..!

கீதம்
23-07-2012, 01:56 PM
ரசனையான தலைப்பே ஈர்க்கிறது. பகிர்ந்திருக்கும் சம்பவங்களில் தென்படும் புத்தி சாதுர்யமும், பிரச்சனைகளை சமாளிக்கும் சமயோசிதமும் சிரிப்பையும் வியப்பையும் ஒருங்கே வரவழைக்கின்றன. பாட்டியின் துணிகரச் செயல் பெரும் வியப்பு!

டெஸ்க் குட்டி டேனியல் வாத்தியார் பற்றிப் படித்ததும் ஒரு நினைவு. என் தம்பியும் அவன் நண்பர்களும், உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போது சில ஆசிரியர்களுக்கு நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, செங்குட்டுவன் என்றெல்லாம் பட்டப் பெயர் வைத்துக் குறிப்பிடுவார்கள். காரணம் சொல்லாமலேயே விளங்கியிருக்குமே!

பாராட்டுகள் ராஜா அவர்களே. இவை போன்ற சுவையான பதிவுகளைத் தொடர்ந்து வெளியிட்டு அசத்துங்கள்.

jayanth
23-07-2012, 08:36 PM
நன்றி ரமேஷ் மற்றும் தூயவன்..!

நன்றி சொல்ல மூன்றரை வருடங்கள்... இந்த "பெட்டர் லேட் தான் நெவர்" என்ற ஆங்கிலப்ப் பழமொழிக்கு உகந்தவாறு... சம்பவஙகள் அனைத்தும் அருமையோ அருமை மன்னிக்கவும் சிரிப்போ சிரிப்பு...http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/57622.gif (javascript:emoticonp(':greenstars:')) http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/57622.gif (javascript:emoticonp(':greenstars:')) http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/57622.gif (javascript:emoticonp(':greenstars:'))

ராஜா
24-07-2012, 07:29 AM
நன்றி மேடம் & ஜயந்த்..!

கீதம்
24-07-2012, 09:32 AM
மேடம் எல்லாம் வேண்டாம். கீதம் போதுமே. :)

ராஜா
24-07-2012, 10:00 AM
ச(ரி)ங் கீதம்..!

பாரதி
24-07-2012, 02:18 PM
தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.
அருமையான நிகழ்வுகள். அழகாக பகிர்ந்தமைக்கு பாராட்டு.
தொலைபேசி நிகழ்வும், பாட்டியின் சாதுரியமும் இனிமேல் திரைப்படங்களில் வந்தால் வியப்பதற்கு இல்லை...!

ராஜா
25-07-2012, 04:07 AM
நன்றி பாரதி..!

நலமா..?