PDA

View Full Version : பங்கு மார்க்கெட்டில் 30 ஆண்டுகள்!karikaalan
01-02-2007, 10:43 AM
பங்கு மார்க்கெட்டில் 30 ஆண்டுகள்!

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் பங்கு மார்க்கெட்டில் முதன் முதலாக முதலீடு செய்தேன். 1977-ல் ஹிந்துஸ்தான் லீவரும், ரிலையன்ஸ் டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரீஸும் பப்ளிக் இஷ்யூ
கொண்டு வந்தார்கள். விண்ணப்பம் போட்டதில் ரூ.16 வீதம் 50 பங்குகள் ஹிந்துஸ்தான் லீவரிலும்,ரூ.10 வீதம் 100 பங்குகள் ரிலையன்ஸிலும் கிடைத்தன.

எந்த ஆதாரத்தில் இக்கம்பெனிகளில் முதலீடு செய்தேன்? நெருங்கிய உறவினர் சொன்னதால். ஆண்டறிக்கை மட்டுமல்ல, Prospectus-ம் சரியாகப் படிக்கவில்லை!

FERA கம்பெனிகள் பப்ளிக் இஷ்யூ வரும்போதெல்லாம், கண்ணை மூடிக்கொண்டு 100 பங்குகளுக்காவது விண்ணப்பம் போடுவேன். ஐந்தில் ஒன்றுதான் கிடைக்கும்.

விற்க வேண்டும் என்று தோன்றாது. நண்பர்கள் கேட்டிருக்கிறார்கள் -- "என்ன, அவற்றைத் திருமணம் செய்து கொண்டு விட்டாயா?" என்று.

இவ்வாறு சேர்ந்த பங்குகள் நெஸ்லே, க்ளாக்ஸோ ஸ்மித்க்ளைன் கன்ஸ்யூமர் (ஹார்லிக்ஸ்), க்ளாக்ஸோ ஸ்மித்க்ளைன் ஃபார்மா, கோல்கேட், ப்ராக்டர் & காம்பிள், இத்தியாதி..

இந்தப் பங்குகள் உங்களிடம் இருந்தால், தயவுசெய்து விற்காதீர்கள் -- மிக மிக அவசியமாக பணம் தேவைப்பட்டால் மட்டுமே, அதுவும் வேறெந்த வழியும் இல்லாவிடில்.

Defensive பங்குகள் என்று அழைக்கப்படுபவை இவை. பங்கு மார்க்கெட் எவ்வளவு கீழே போனாலும், இந்தப் பங்குகள் அதிகமாக சரியாது; அப்படியே சரிந்தாலும் ஏறுமுகம் வரும்போது
முன்னணியில் இருக்கும்.

Growth பங்குகள் எனப்படுபவைகளிலும் முதலீடு செய்திருக்கிறேன்.

செம்மறி ஆடுகள் போலவும் சென்றிருக்கிறேன். இரண்டு முறை. ஹர்ஷத் மேத்தா பவனி வந்த போதும், கேதன் பாரெக் பவனி வந்த போதும். இரண்டிலும் லாபம் ஈட்டியதைவிடப் பன்மடங்கு
நஷ்டத்தைச் சந்தித்திருக்கிறேன். நல்ல உத்தியோகம் இருந்ததால் தெருவுக்கு வரவில்லை.

பிரசவ வைராக்கியம் மாதிரி சில மாதங்களுக்கு சந்தை பக்கமே தலை வைத்துப் படுப்பதில்லை! போதை யாரை விட்டது? மீண்டும் விளையாட்டு துவக்கம்.

கடந்த 5 ஆண்டுகளாக ஒரு Analyst-இடம் இருந்து அறிவுரை கிடைக்கிறது. 5-ல் 4 பழுதில்லை. சில வாங்கிய ஒரு மாதத்திலேயே உயரப் பறக்கின்றன. சில பங்குகளுக்கு இறக்கை முளைக்க ஆறு மாதங்களாவது பிடிக்கும். அவரது அறிவுரை -- ஒரு இலக்கு வைத்துக்கொள்ளவும். அது வந்தவுடன் விற்று விடவும். அதற்குப் பிறகு அது 100% உயர்ந்தாலும் ஐயையோ, போயிடுச்சேன்னு அழக்கூடாது.

இதுவரை கற்றுக் கொண்டது:

1. குதிருக்குள் போட்டு வைக்க வேண்டிய பங்குகளை அவ்வாறே செய்க. அவற்றை நமது எதிர்காலத்துக்கு, நமது செல்வங்களின் எதிர்காலத்துக்காக தனியே வைக்கவேண்டும். அதாவது சந்தை எப்படிப்போனாலும் கவலைப் படாமல் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, என்னிடமுள்ள ஹிந்துஸ்தான் லீவர் பங்குகள் (4110), முதலாவதாக வாங்கிய 50-ம், அதற்கு அடுத்ததாக Rights Issue வந்தபோது வாங்கிய 20-ம் தான் விலை கொடுத்து வாங்கியது. இந்த 70 பங்குகளும் ரூ.10 Face value. இப்போது ரூ.1 face value. மொத்த முதலீடு வெறும் ரூ.1120 மட்டுமே. அதற்குப் பின் கிடைத்தவை எல்லாம் போனஸாக வந்தவையே. இன்றைய சந்தை விலை ஒரு பங்கு ரூ200க்கு மேல்.

2. அவ்வப்போது வாங்கி, விற்க வேண்டிய பங்குகளை அறிவுரையாளரின் உதவியுடன் மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து, Stop Loss வைத்துக்கொண்டு, குறித்த இலக்கு வந்தவுடன் தயவு தாட்சண்யம் இல்லாமல் விற்று விடவேண்டும்.

கணிசமாக லாபம் வந்தவுடன், முதல் பணத்தை PPF அல்லது அது போன்ற இன்ன பிற சமாசாரங்களில் முதலீடு செய்துவிட்டு, மார்க்கெட்டுக்குள் லாபப் பணத்தை போடவும். வந்தால் லாபம்; போனால் ?#*@!

3. ம்யூச்சுவல் ஃபண்ட்களில் அவ்வப்போது முதலீடு செய்தல். எப்படிக் கண்டுபிடிப்பது எந்த ஃபண்ட் சரியானது என்று. கடந்த 2/3 ஆண்டுகளில் எந்த ஃபண்ட் அதிகமான லாபம் ஈட்டியிருக்கிறது என்பதைக் கண்டு பிடிக்கவும். எகனாமிக் டைம்ஸ், ஹிந்து பிஸினஸ் லைன் போன்ற நாளிதழ்களில் இந்த விவரம் வரும். அதன்படி முதல் ஐந்து ஃபண்ட்களைத் தேர்ந்தெடுத்து, சாட் பூட் த்ரீ போட்டுப் பார்த்து(!) அந்த ஃபண்டில் அவ்வப்போது முதலீடு செய்யவும்.

2006 அக்டோபரில் இருந்து இதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். ஏனெனில், சந்தையில் நேரம் செலவழிக்க முற்றிலும் இயலாத சூழ்நிலை.

4. மிக மிக முக்கியமானது -- கடன் வாங்கி பங்குகள் வாங்காதீர்கள். முன்னர் வேறோரிடத்தில் எழுதியபடி, ஒரு ரூபாய் கைவசம் இருந்தால், ஒண்ணேகால் ரூபாய் முதலீடு செய்யாதே!

5. இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது, முயல வேண்டும் என்கிற அவாவும் இருக்கிறது.

===கரிகாலன்

tamil81
01-02-2007, 12:52 PM
அனுபவ உரைக்கு நன்றி
தொடரவும்
ஆவலாக உள்ளோம்

அறிஞர்
01-02-2007, 01:44 PM
அனுபவஸ்தர்களின் பாடம் எப்பொழுதும் வருங்கால சமுதாயத்திற்கு உதவும்.....

உபயோகமான தகவல் கரிகாலன்ஜி... தொடர்ந்து வித்தியாசமான அனுபவங்களை கொடுங்கள்... எங்களுக்கு பயன்படும்.

மயூ
01-02-2007, 01:47 PM
நன்றி பயனுள்ள தகவல்...
தொடரவும்...

aren
01-02-2007, 01:53 PM
அருமை கரிகாலன் அவர்களே. உங்களைப் போன்றோரின் அறிவுரை எங்களைப் போன்றோர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

நானும் பங்கு மார்கெட்டில் நிறைய முதலீடு செய்தேன். 2000 வருட சரிவிற்குபின் அந்த பக்கமே தலைவைத்து படுப்பதில்லை.

srimariselvam
12-04-2007, 04:53 PM
கரிகாலன் அவர்களே, உங்களது பங்குச்சந்தை ஆலோசகரை அறிமுகப்படுத்துங்களேன். எங்களைப்போன்ற இளங்காளைகளுக்கு உபயோகமாக இருக்கும்.

rmsachitha
21-04-2007, 06:49 AM
நான் மிகவும் குறிகிய காலமே பங்கு களை வைத்து இருக்கிறேன். நல்ல தகவல். நன்றி

namsec
11-06-2007, 04:10 PM
ஆன்லைன் வர்த்தகம் பற்றி சிறிது விளக்குங்கள்

karikaalan
11-06-2007, 04:57 PM
நண்பரே

ஆன்லைன் வர்த்தகம் அடியேன் செய்ததில்லை. பலரும் அதனைப் பாராட்டுகிறார்கள்.

===கரிகாலன்