PDA

View Full Version : ஆராய்ச்சிக் கட்டுரைகள்...



இளசு
31-01-2007, 10:55 PM
ஆராய்ச்சிக் கட்டுரைகள்...


படிப்பு, மேற்படிப்பு என்ற நிலையில் பலர் நம் மன்றத்தில்..
நானும் இன்னும் சில மாதங்களில் இதுபோல் கட்டுரை சமர்ப்பிக்க வேண்டும்.. ...

அதனால் இக்கட்டுரை மறுபிரசுரம்..

--------------------------------------------

ஒரு பறவைப்பார்வை

ஒருவரின் மேற்பார்வையில் அறிவியல் பணி ஆற்றி, அதை
கற்றவர் உலகம் தரமானதென்று ஒத்துக்கொள்ளும் வகையில்
கட்டுரை முடிபாய்ச் சமர்ப்பிப்பது -
எம்.எஸ்சி, பி. ஹெச்டி போன்ற பட்ட மேற்படிப்பு மாணவர்கள்
சந்திக்கும் முக்கியமான சவால்!

தேடல்.. ஒரு கேள்வி.. ஒரு கோட்பாடு...
இதற்கான விடை தெரிவதே நோக்கம்....
என்ற அளவில் மாணவரின் மேற்பார்வையாளர்
அவரை சரியான திசை நோக்கி வழி காட்டுவார்.
பொதுவான கேள்வி..புதிர்..கோட்பாட்டை பின்னர்
பல படிகளாய் பிரித்து அலசி
இருக்கும் வாய்ப்பு, வசதி, கால அளவு இவற்றை கருத்தில் கொண்டு...
ஒன்று அல்லது இரண்டு அதி முக்கியமான குறிக்கோள்களை
மாணவர் வரையறுத்துக்கொள்ள வேண்டும்.

இந்தக் குறிக்கோள்களை நிறைவேற்றும் சாத்தியம் பற்றி
மேற்பார்வையாளருடன் கலந்து, கைவசப்படக்கூடிய திட்ட நிரல்
வரையறுத்துக்கொள்ள வேண்டும்..

நோக்கங்கள்.. குறிக்கோள்கள் பொதுவாய் இரு வழிகளில்
அரங்கேறும்..
ஒன்று - ஆராய்ச்சி
இரண்டு - செயல் திட்டம் ( project work)

இரண்டு வழிகளுக்கும் பொதுவான, வலுவான அடித்தளம் ஒன்றுதான் -
அது -இதுவரை நம் நோக்கம் தொடர்பாய் வந்த அனைத்து அறிவியல்
படைப்புகளையும் அலசி கோர்ப்பது ( Review of Literature),
ஆராய்ச்சி / திட்ட காலம் முடிந்து இறுதிக் கட்டுரை எழுதி முடிக்கும் வரை
புதுவெள்ளமாய் தினம் பாயும் படைப்புகளை கவனமாய் சேகரிப்பது
( up -to -date with incoming literature)...

உங்கள் ஆராய்ச்சி/ திட்டப்பணி இறுதியில், பயனுள்ள முடிபுகளை
வடிகட்டித் தர வேண்டும்..
அந்த முடிபுகள் இப்போது இத்துறை - இந்த விஷயம் பற்றி ஏற்கனவே இருக்கும்
அறிவுப்பூங்கொத்தில் இன்னொரு மலராக சேர வேண்டும்..

மேலும், இப்பணியின் விளைவை அழகாய் படைப்பாக்கி,
அதே துறை அறிவாளர் அலசி பதிப்புக்கு ஏற்கும்
அறிவியல் ஏட்டில் பிரசுரிக்க ஏதுவாக தர வேண்டும்.
(peer - reviewed publication.)

ஆராய்ச்சி / திட்டப்பணிகள்: ஆதார உதவிகள்....
இவை பற்றி அறிய நிறைய நூல்கள் உள்ளன....
சில இங்கே ----

Chalmers A.F. எழுதிய
What is this thing called science ? (1999, Open University Press)
Cryer P எழுதிய
The Research Student's Guide to Success ( 1996, Open University Press)
Blaxter L, Hugher C, Tight M எழுதிய
How to Research ( 1996, Open University Press)
Beveridge W.I.B. எழுதிய
The Art of Scientific Investigation ( 1961, Heinmann)
Brown S, McDowell L, Race P எழுதிய
500 Tips for Research Students (1995, Kogan Page)

பல்கலையில், கல்லூரியில் -கற்கும் நிறுவனத்தில்...
ஆராய்ச்சி/ திட்டப்பணிக்கான உதவிக்கு இருக்கும் நபரை
தயங்காமல் அணுகுங்கள்...
தெளிவாகும் வரை சந்தேகம் கேளுங்கள்.
மீண்டும் கேள்வி உதித்தால் மீண்டும் கேளுங்கள்...

காலக்கெடுகளை (deadlines) மெனக்கெட்டு மனதில் பதியுங்கள்..
அவை உங்களை சித்ரவதை செய்வதற்கான வாரண்ட் அல்ல..
காலத்தே செய்து முடிக்க உதவும் மைல்கற்கள்...


எந்தத் தலைப்பில் ஆராய்ச்சி / திட்டப்பணி...?

உங்கள் நிறுவனத்தில் உங்களுக்கான மேற்பார்வையாளர்/ ஆராய்ச்சி தொடர்பாளரிடம்
"சாத்தியமுள்ள ஆராய்ச்சி / திட்டங்கள்" என்று ஒரு பட்டியலே இருக்கும்.
அதில் உங்கள் மனதை சுண்டி இழுக்கும் ( அல்லது உங்கள் வழிகாட்டி மனதை
மிகவும் கவர்ந்து இழுக்கும்) ஒரு தலைப்பை தெரிவு செய்யுங்கள்.
இன்னொரு வழி.. சுயம்புவாய் உங்கள் அடினதில் வேள்வித்தீயாய் கனன்று கொண்டிருக்கும்
ஒரு தலைப்பை முடிவு செய்தபின் அதற்கேற்ற நிறுவனம்/ மேற்பார்வையாளரை
தேடிப் பெறுவது...
எந்த வழியானாலும்...
மனதுக்குப் பிடித்த தலைப்பை தேர்ந்தெடுப்பதே மனம் சோராமல் பணியை முழுமை செய்யும்
உத்தரவாதம்...

கடனே என்று வெற்று கடமைக்கு, ஈடுபாடு இன்றி செய்யும் "ஆராய்ச்சி"களால்
பொதுவாய் பெரிய நன்மைகள் விளைந்து விடுவதில்லை.
"எங்க டிபார்ட்மெண்ட் ஸ்டூடண்ட்டும் ரிசர்ச்சுக்கு போனான்" கதைதான்...

காணலும் கற்றலும்...

துறையின் மூத்த மாணவர்களுடன் பழகி, அவர்களின் அனுபவங்களை
கேட்டறியுங்கள்..
பட்டறிவு விலை மதிப்பற்றது.
அரங்குகளில் அவர்களின் படைப்புகளை பரிமாறும் பாங்கை,
அல்லது அவர்கள் நார் நாராய் கேள்விக்கணைகளால் கிழிக்கப்படும் நிகழ்வை
நேரிடையாய் கண்டு அனுபவ அறிவைக் கூட்டுங்கள்..
எங்கே என்ன சறுக்கல்கள் நேரலாம் என்பதை
முன்னால் நடப்பவரின் பயணத்தை அவதானித்து அறியுங்கள்...

தன் தவறில் கற்பவனை விட
அடுத்தவர் தவறில் கற்பவன் புத்திசாலி..

மேற்பார்வை... ஒரு பார்வை..

மாதம் இருமுறை என்பதுபோல் ஓர் ஒழுங்குடன் உங்கள்
வழிகாட்டியை இன்ன இடம், இன்ன நேரத்தில் சந்திப்பது
என உறுதியாய் திட்டமிடுங்கள்.

இன்றைய சந்திப்பு எதிர்பாரா காரணங்களால் தடைபட்டுப் போனால்
மாற்று சந்திப்பை ஏற்பாடு செய்ய உங்கள் பிரயத்தனம் செலவிடுங்கள்..
வழிகாட்டியே இதற்கும் வழிகாட்டட்டும் என வாளாவிருக்காதீர்கள்..
கற்பவன் முனைப்பே கற்பிப்பவரின் மன வண்டிக்கு எரிபொருள்..
சிந்தையில் உசலாடி, பூஞ்சை படிந்த நூலாம்படை எண்ணங்களை,
கருத்துகளை மூத்தவருடன் பேசிக் காற்றாடவிட்டு
தெளிவு பெறும் அறிவுக்குளியல்களாய் இந்தச் சந்திப்புகளை
பயன்படுத்தத் தவறாதீர்கள்...
என்ன பேசவேண்டும் என்று திட்டமிட்டு, பின் செல்லுங்கள்.
புதுவரவாய் கற்ற கட்டுரைகளை ஒருவரி - இருவரியில்
திருக்குறள் போல் அவரிடம் சொல்லி "சபாஷ், லேட்டா
சொன்னாலும் லேட்டஸ்ட்டா சொன்ன" என்று
ஷொட்டு வாங்குங்கள்...
மொத்த புதுக்கட்டுரையும் அவர் படித்து பின்
உங்களுக்கு இரு வரி சாரம் அவர் தரவேண்டும்
என்று நியாயமில்லாத எதிர்பார்ப்புகள் இருந்தால்...
மன்னிக்கவும்....
பசித்தவன் நீங்கள்... வேகமும் ஆர்வமும் உங்கள் திட்டம் பற்றி
உங்களிடமே அதிகமாய் இவ்வுலகம் எதிர்பார்க்கிறது...
படைப்புகளை நீங்கள் தேடி உண்டு செரியுங்கள்.. சுவை சொல்லுங்கள்..
கக்குவதை நக்குவதில் என்ன சிறப்பு?

பணி வளர வளர, இச்சந்திப்புகளின் பரிமாணமும் வளரும்.
பாதி வரை வந்த முடிபுகளின் பாதை எந்தப்பக்கம் போகிறது...
பிழையான வழிமுறைகளால் தடம் மாறிப் பயணிக்கிறோமா
எதிர்பாரா இடைஞ்சல்கள் முளைத்தனவா...
இதுபோன்ற அர்த்தமுள்ள உரையாடல்கள் இவற்றின்
உள்ளடக்கமாய் இருக்க வேண்டும்...
சொன்னதை, கேட்டதை சில பக்க சிறு குறிப்பாய் வடித்து
அவரிடம் கொடுங்கள்.. திருத்தல்கள், கூடுதல் கருத்துகளோடு
திருப்பித் தரச் சொல்லுங்கள்...
கொட்டாவி மட்டுமல்ல.. உற்சாகம் கூட தொற்று நோய்தான்..
மறந்துவிடாதீர்கள்...
இந்த ஆராய்ச்சி / திட்ட வாகனத்தின் ஓட்டுநர் நீங்கள்..
வழிகாட்ட வந்தவர் அல்லர்.

எல்லாப் படிகளிலும் உங்களைத் தூக்கி தூக்கி அவர் வைத்தால்
அது பயணமல்ல...
நூத்துக்கிழவி மலையாண்டவருக்கு செலுத்தும் நேர்த்திக்கடன்!
தூண்டில் தருவதும், துப்பு தருவதும் நல்ல வழிகாட்டியின் அடையாளங்கள்..
மென்று குழைத்த உணவை தாய்ப்பறவையாய் ஊட்டினால்
உங்கள் தேடுதல் சிறகுகள் வளரா வண்ணம்
ஊறு விளைவிக்கப்படுகிறது என்பதை உணருங்கள்...
தன்னார்வம், முன் வருதல்,
அலைமோதும் எண்ணக் குவியல்களை அறிவுத்தராசில் நிறுத்தி
பதர் ஒதுக்கி விதை சேர்த்தல்...
இவையே கற்பவன் அடையாளங்கள்...
கால அலை வென்று நிற்பவன் அடையாளங்கள்..

சொல்லுதல் எளிய....
மனச்சோர்வு, பயணப்பாதை எங்கும் இருள் உணர்வு,
அம்பாரமாய்க் குவிந்த பணியின் கீழ் அமிழ்ந்த அழற்சி,
என்னால் முடியுமா என்று ஸ்தம்பிக்கும் அயர்ச்சி...
எதுவும் பயண இடையில் வரலாம்..
ஏன் எல்லாமும் சேர்ந்தே வரலாம்..
இவை தாக்காத மனிதர் இல்லை எனலாம்.

இந்த நேரத்தில் சுக்கான் பிடிக்க வழிகாட்டி உதவட்டும்.
எந்த கருமேகத்துக்கும் விளிம்பில் வெள்ளி உண்டு.
மனப்புயல் அடங்கியதும் படகை செலுத்தும்
முதன்மைப் பொறுப்பை மீண்டும் ஏற்றுக்கொள்ளுங்கள்.
தொடர்ந்து சந்திப்புகளை அவர் தவிர்த்தால்..தள்ளிப்போட்டால்
குறிப்புகளை திருத்தி திருத்தித்தாராமல் இழுத்தடித்தால்
உங்களுக்கு இருக்கும் உரிமையை நயமாய் உணர்த்துங்கள்..
மயிலே என்று சொல்லியும் இறகு விழாவிட்டால்
அவருக்கும் மேலிடத்தில் முறையிடுங்கள்..

பணித்திட்டம் (Work Plan)

மதிப்புக்குரிய நண்பர் மனோஜி அவர்கள்
தம் கையெழுத்தில் சொல்வார்:
வாழ்க்கையில் திட்டமிடத் தவறாதே!
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே!!

நாம் ஏன் திட்டமிடல் என்றால் வேம்பாய் எண்ணி ஒதுங்குகிறோம்?
இத்துணை பணிச்சுமை நிச்சயமாய் உள்ளது என
முன்னமே நமக்கு நிதர்சனமாய்க் காட்டும் "பூதக்கண்ணாடி" -திட்டம்.
" அரூள் படம் முத நாள் டிக்கட் இருக்கா.. அடி தூள்..
தீஸிஸா.. அதுக்கு இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு மச்சி"
என்ற உங்கள் குரலுக்கு மாற்றாய்
"இன்னிக்கே லைப்ரரி போவணும் " என்று ஒலிக்கும்
மாய அசரீரி - திட்டம்!
ரோஜா விரித்த பாதை என்று மயங்கிய மனதை
முள்ளும் கல்லும் கூடவே இருக்கு பாரு
என்று உய்த்துணர வைக்கும் உண்மை நண்பன் - திட்டம்!
அதனால்தான் திட்டமிடாமல் பம்முகிறோம்...
இன்னைக்கு பொழுது சுகமா இருக்குப்பா எனக் கிறங்குகிறோம்..
"ஆறு அங்க இருக்கு.. கோவணத்தை இங்கியே ஏன் அவுக்க"
எனப் பிலாக்கணம் பேசி தப்பிக்கிறோம்..
"இது ரொம்ப யேர்லி ஸ்டேஜ்.. எந்த ஷேப்பில் இந்த ப்ராஜக்ட்
எவால்வ் ஆகுன்னே தெரியல... அதால இப்ப உக்காந்து பிளான்
போட்டாலும் பின்னாடி சர்வநிச்சயமா மாறத்தான் செய்யும்..
இப்ப பிளான் பண்றது - டைம் வேஸ்ட்... money வேஸ்ட்..
எனர்ஜி வேஸ்ட்... பாதி வழி போனா இன்னும் தெளிவாகும்..
அப்ப பார்த்துக்கலாம்... அன்னிக்கு நானே போடப்போறேன் திட்டம்!"

தள்ளிப் போடுதல் - கெடுநீரார் காமக்கலன்...
அழிவு தேசம் அழைத்துப்போகும் கப்பல்...

தீஸிஸ் சமர்ப்பிக்கும் நாள்...

"நாளை... நாளை... " என்று திருநாளைப்போவாராய் மாறி
நித்தம் நித்தம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளலாம்..
அப்போதெல்லாம் யாரும் குறை சொல்ல வருவதில்லை.
ஆனால்..தீர்ப்பு நாளில்...(Deadline)?

முதல் திட்டம் எடுத்த எடுப்பில் போட்டால்
அடுத்தடுத்து அதில் மாற்றங்கள் நிகழும் என்பது நிஜமே...
திட்டமிட்டு, பின் தேவைக்கேற்ற அதை மாற்றி செயல்படுபவன்
திட்டமே இல்லாமல் குழப்பக் குட்டையில் உழல்பவனுக்கு மேல்..
மறக்கவேண்டாம்...
நீங்கள் தயாராய் இருந்தாலும், இல்லாவிட்டாலும்
பாபா அரசியல் பிரவேசம் போல் இல்லாமல்
குறித்த நேரத்தில் வந்தே தீரும் - தீர்ப்பு நாள்!
எடுத்த பணியை முடிக்க ஒரு காலம் வகுக்கும் தாயக்கட்டமே திட்டம்.
பணியின் முக்கிய கட்டங்களைச் சுற்றி அமைக்கப்படுவது திட்டம்.
அறிவியல் கட்டுரை சேகரிப்பு,
எடுத்த பணிக்குத் தேவையான புது வினைத்திறன் கற்றறிதல்,
இடையில் விடுப்பு, விழாக்கள் இத்யாதி...

தொடர்வண்டியாய் நீளும் பணியை
தனித்தனிப் பெட்டிகளாய் பிரித்து சுலபமாக்கும் துணைவன் திட்டம்..
இதற்கு ஒரு வாரம், அதற்கு ஒரு மாதம் என
ஒரு கணக்குடன் தொடங்க வழிகாட்டும் ஆசான் திட்டம்..
செயல்பாடு எந்த அளவுக்கு சிறப்பாய் நடைபெறுகிறது
என்று இடையிடையே அளக்க உதவும் கருவி - திட்டம்!
வேண்டிய உபகரணங்கள், தேவையான நிதி ஆதாரம்,
என்று பட்ஜெட் போட உதவும் நிதியமைச்சர் திட்டம்!

திட்டமிடத் தவறாதே!
திட்டமிட்டால் தவறாதே!!

நல்வாழ்த்துகள்...

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=3534

மதுரகன்
01-02-2007, 03:08 PM
நல்ல பயனுள்ள கருத்துக்கள் இளசு..
நன்றி..
இவை பலருக்கு பயனளிக்கும் என நம்புகிறேன்...

ஓவியா
01-02-2007, 03:19 PM
மதிப்புமிகு இளசுக்கு வணக்கம்

சிரமம் பாராது கட்டுரையை மீட்டு தந்தமைக்கு மிக்க நன்றி.

படித்து பயனடைய முயற்ச்சிக்கிறேன்

வாழ்த்துகளுக்கும் நன்றி :)

paarthiban
01-02-2007, 03:55 PM
உருப்படியான கட்டுரை. நன்றி இளசு சார்.

அறிஞர்
01-02-2007, 04:17 PM
வாவ்.. அருமையாக எழுதியிருக்கிறீர்கள்...

இளைய சமுதாயத்திற்கு நல்ல வழிகாட்டுதல். சந்தேகமுள்ளோர்.. தங்களை அணுகுவார்கள் என எண்ணுகிறேன்.

இளசு
02-02-2007, 10:10 PM
மதுரகன், ஓவியா, பார்த்திபன், அறிஞர்..

உங்களின் ஊக்கம் தரும் பின்னூட்டங்களுக்கு நன்றி...

பரஞ்சோதி
03-02-2007, 06:32 AM
அருமையான கட்டுரை அண்ணா.

இரண்டு அல்லது மூன்று பாகங்களாக பிரித்து கொடுத்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.