PDA

View Full Version : முத்திரை பேண் -மீனாகுமார்
30-01-2007, 05:33 PM
ஆற்றில் சிதறிய குங்குமம்
கரைந்தெங்கும் செல்வதுபோல்
பல்லாயிரமாண்டு பிரிந்து வாழ்ந்த
மனிதகூட்டமெலாம் இன்று

வானில் பறந்து
கூடிக்கூடி குலவுகின்றன
நேசமும் பாசமும்
கரைகடந்து இயங்குகிறது

பணமும் வியர்வையும்
கம்பியில் விரைகிறது.
குரலும் தகவலும்
கண்ணறியா காற்றிலலைகிறது

அது மட்டுமா

கரகாட்டமும் கோலாட்டமும்
தொலைக்காட்சியில்கூட தெரிவதில்லை.
பம்பரமும் குண்டுவிளையாட்டும்
கணிணியிடம் பறிபோயின

மார்கழி பஜனையும்
சுவாமி தரிசனமும்
மனிதன் இஷ்டப்பட்ட நேரந்தான்
மனிதன் கடவுளை விஞ்ஞிவிட்டானோ

சிற்சில ஆண்டுகளில்
மாறிவிட்ட உலகமே
இது கலாச்சார முன்னேற்றமா
இல்லை சீர்குலைவா

அன்று உருவாக்கிவைத்த
பலப்பல மொழிகளும்
பழக்கங்களும் யாவுமின்று
ஒன்றாக ஒரேஇடத்தில்

இச்சூழல் முன்னறிந்த உலகினர்
தம்மைத் தாமே பாதுகாக்கின்றனர்
முட்டாள் இந்தியனைத்தவிர
தன்னைத்தானே இகழ்கிறான்

யார்பின்னே போகிறோமென்று
அறியாது செல்கிறான்
அதை மக்களுக்குணர்த்துபவரும்
தம்வாய் மூடிக்கிடக்கிறார்

பள்ளியிலும் கல்லூரியிலும்
நாளைய இந்தியா உருவாகிறது
இளமை மனத்தினிலே சரியான
விதை பயின்றிட வேண்டும்

நின் முத்திரை உணர்
நின் முத்திரை பேண்
நின் முத்திரை உலகெலாம் முழங்கு
காக்க காக்க நிம்தம் முத்திரை காக்க.

காலம் தாழ்ந்தபின்
எண்ணித்தான் யாதுபயன்

ஷீ-நிசி
30-01-2007, 05:46 PM
மிக அழகான உண்மைகளை உள்ளடைக்கின கவிதை.. வாழ்த்துக்கள். முதல் கவிதையே முத்திரை கவிதை..

இளசு
30-01-2007, 06:09 PM
பாராட்டுகள் மீனாகுமார்..

சுய அடையாளம் இழந்து
சொர்க்கமே அடைந்தாலும்?


ஷீ-நிசி சொன்னதுபோல்
முதல் கவிதையே முத்திரை பதித்த கவிதை..


தொடர்ந்து படைப்புகள், கருத்துகளை மன்றத்தில் இடுங்கள்..

ஆதவா
30-01-2007, 06:17 PM
நண்பரே இது என் கருத்து மட்டுமே

உங்களின் இரண்டாவது கவிதையும் அருமை மீனாகுமார்....இனி.....

ஆற்றில் சிதறிய குங்குமம்
கரைந்தெங்கும் செல்வதுபோல்
பல்லாயிரமாண்டு பிரிந்து வாழ்ந்த
மனிதகூட்டமெலாம் இன்று

ஆற்றில் சிதறிய குங்குமம் நிலையாக் நிற்காது... கரைந்து அலையும்.. அழகான சிந்தனை... மனிதர்களை இங்கே இப்படி ஒப்பிடுவதும் இவ்வகையே சிறந்தது...

வானில் பறந்து
கூடிக்கூடி குலவுகின்றன
நேசமும் பாசமும்
கரைகடந்து இயங்குகிறது

பணமும் வியர்வையும்
கம்பியில் விரைகிறது.
குரலும் தகவலும்
கண்ணறியா காற்றிலலைகிறது

இது புதைந்துகிடக்கும் உண்மைகள் மீனா. உங்களின் ஊடக ஆதங்கம் கவிதையில் தெறித்தோடுகிறது... அருமையான தொடக்கமும் அதன்பாதையும்

அது மட்டுமா

கரகாட்டமும் கோலாட்டமும்
தொலைக்காட்சியில்கூட தெரிவதில்லை.
பம்பரமும் குண்டுவிளையாட்டும்
கணிணியிடம் பறிபோயின

ஆம்...... பாரம்பரிய விளையாட்டு:) நம் விஞ்ஞான வளர்ச்சியில் நீங்கள் கண்ட கரகாட்டம் கோலாட்டமெல்லாவற்றையும்விட ஏகப்பட்ட விளையாட்டுக்கள் காணாமல் போயின.... அழிந்து போகக்கூடிய நிலையில் இருக்கும் நாடகங்கள் மட்டும் சிலரால் பிழைத்துக்கொண்டிருக்கின்றன,

மார்கழி பஜனையும்
சுவாமி தரிசனமும்
மனிதன் இஷ்டப்பட்ட நேரந்தான்
மனிதன் கடவுளை விஞ்ஞிவிட்டானோ

விஞ்ஞி என்ற வார்த்தை நான் கேட்டதில்லை........ மிஞ்ஞியாக இருக்கலாம்.. அதெல்லாம் இருந்துகொண்டுதான் இருக்கிறது நண்பரே!!

சிற்சில ஆண்டுகளில்
மாறிவிட்ட உலகமே
இது கலாச்சார முன்னேற்றமா
இல்லை சீர்குலைவா

இரண்டுமேதான்... சில ஆண்டுகள் என்பதைவிட பல ஆண்டுகள் என்றுகூட சொல்லலாம்........... திடீரென எதுவும் முளைக்காது...

அன்று உருவாக்கிவைத்த
பலப்பல மொழிகளும்
பழக்கங்களும் யாவுமின்று
ஒன்றாக ஒரேஇடத்தில்

இச்சூழல் முன்னறிந்த உலகினர்
தம்மைத் தாமே பாதுகாக்கின்றனர்
முட்டாள் இந்தியனைத்தவிர
தன்னைத்தானே இகழ்கிறான்

அருமையான சாட்டையடி......... எந்த இந்தியனும் இம்மாதிரிய்ல்ல...

யார்பின்னே போகிறோமென்று
அறியாது செல்கிறான்
அதை மக்களுக்குணர்த்துபவரும்
தம்வாய் மூடிக்கிடக்கிறார்

வாய் திறந்து அடுத்தநாள் வாய்க்கரிசி கிடைத்துவிட்டால்????? அதனால்தான் திறவாமல் இருக்கிறார்களோ?

பள்ளியிலும் கல்லூரியிலும்
நாளைய இந்தியா உருவாகிறது
இளமை மனத்தினிலே சரியான
விதை பயின்றிட வேண்டும்

நிச்சயமாய்..........

நின் முத்திரை உணர்
நின் முத்திரை பேண்
நின் முத்திரை உலகெலாம் முழங்கு
காக்க காக்க நிம்தம் முத்திரை காக்க.

நமக்கென தனி முத்திரை வேண்டுமெனச் சொல்கிறீர்கள்.......... நன்று

காலம் தாழ்ந்தபின்
எண்ணித்தான் யாதுபயன் - இதையே பதிலாகக் கொள்ளவும்..........

மொத்ததில் ஓர் அலசல்: கொஞ்ச மாறுதலில் நம் கவிதைப் போட்டிக்கு செல்லவேண்டிய கவிதை..... முத்திரையை பேணுவதாக தலைப்பிட்டு இங்கே சேர்த்திருக்கிறீர்கள்............

உங்கள் முதல் வரிகளில் நீங்கள் எங்கோ சென்று விடுகிறீர்கள்.. அடுத்தடுத்து இன்னும் சற்று முயலுங்கள். கவிதையின் கரு அருமையாக இருந்தாலும் கொஞ்சம் சற்றே பாதை விலகியது போன்ற தோற்றம் மனதில் ஏற்படுகிறது. ஏதோ ஒரு இடத்தில் இணைப்பு (conjunction) வேண்டுமோ என்று நினைப்பு வருகிறது....... சமூக நல அக்கறை கவிஞர்களுக்கு உண்டு என்பதை நீங்கள் நிரூபித்திருக்கிறீர்கள்........ வாழ்த்துக்கள் மீனாகுமார்... முத்திரை பதித்துவிட்டீர்கள்.............

மேலும் தொடருங்கள்........

மனோஜ்
30-01-2007, 06:32 PM
கவிஞர்கள் அலசியபின் நான் எதை கூற
நன்றாக முத்திரை பதித்துவிட்டீர்கள் நன்றி

pradeepkt
31-01-2007, 05:03 AM
ஆற்றில் சிதறிய குங்குமம்
கரைந்தெங்கும் செல்வதுபோல்
பல்லாயிரமாண்டு பிரிந்து வாழ்ந்த
மனிதகூட்டமெலாம் இன்று

-- சேர்ந்து அப்படின்னு இருக்க வேண்டுமோ?

மனிதன் கடவுளை விஞ்ஞிவிட்டானோ

-- விஞ்சிவிட்டானோ என்பதுதானே இது???

நிற்க, பலப்பல மொழிகளும் பலப்பல கலாச்சாரங்களும் கூடி வருவதில் தவறில்லை. 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தில் யவனர்களும் அராபியர்களும் கொற்கையிலும் புகாரிலும் கூடிக் களித்து தமிழரிடமே பணிபுரிந்த காலங்கள் உண்டு! அங்கும் தமிழன் தன் தனித்தன்மையை நிலைநாட்டவே செய்தான்! எனவே கலாச்சாரங்கள் ஒரே இடத்தில் இருப்பதில் தவறில்லை. நீங்கள் கடைசியாகச் சொல்வது போல் அவன் தன் முத்திரையை இழக்காதிருப்பது மட்டுமே முக்கியம்!

காக்க காக்க நிம்தம் முத்திரை காக்க.
-- இது நின்றன் என்று இருக்க வேண்டும். நிம்தம் என்ற வார்த்தைப் பிரயோகம் வித்தியாசமாக இருக்கிறது.

காலம் தாழ்ந்தபின்
எண்ணித்தான் யாதுபயன்
-- உண்மை, வெறும் வார்த்தையில்லை!

வாழ்த்துகளுடன் உங்கள் சிந்தனைக்குப் பாராட்டுகளும்.

மதுரகன்
31-01-2007, 04:40 PM
முதலில் அருமையான ஒரு கவிதையை தந்ததற்கு வாழத்துக்கள்
உங்கள் உணர்வு பாரம்பரிய கலைகள் சிதைந்துபோவதை எண்ணி நீங்கள் பொருமுவது புரிகிறது...
அது வேதனை மிக்கதே..
ஆனால் அதற்காக விஞ்ஞானத்தை முற்றாக புறக்கணிக்கவும் முடியாதே...

மீனாகுமார்
31-01-2007, 05:09 PM
ஆற்றில் சிதறிய குங்குமம்
கரைந்தெங்கும் செல்வதுபோல்
பல்லாயிரமாண்டு பிரிந்து வாழ்ந்த
மனிதகூட்டமெலாம் இன்று

-- சேர்ந்து அப்படின்னு இருக்க வேண்டுமோ?
=> பிரிந்து என்பது தான் சரி என்று நினைக்கிறேன். ஏனெனில், விமான போக்குவரத்தும், இன்றுள்ளது போல் பல்வழிப்போக்குவரத்தும் அக்காலத்தில் இல்லாமையால் பெரும்பாலும் தம் நாடே உலகமென நினைந்து பல்வேறு நாட்டு மக்கள் வாழ்ந்து கொண்டிருந்ததையே குறிக்கிறேன். உதாரணம்- சீன கூட்டம் ஐரோப்பாக் கண்ட கூட்டம்.

ஆதவா
31-01-2007, 05:18 PM
ஆற்றில் சிதறிய குங்குமம்
கரைந்தெங்கும் செல்வதுபோல்
பல்லாயிரமாண்டு பிரிந்து வாழ்ந்த
மனிதகூட்டமெலாம் இன்று

-- சேர்ந்து அப்படின்னு இருக்க வேண்டுமோ?
=> பிரிந்து என்பது தான் சரி என்று நினைக்கிறேன். ஏனெனில், விமான போக்குவரத்தும், இன்றுள்ளது போல் பல்வழிப்போக்குவரத்தும் அக்காலத்தில் இல்லாமையால் பெரும்பாலும் தம் நாடே உலகமென நினைந்து பல்வேறு நாட்டு மக்கள் வாழ்ந்து கொண்டிருந்ததையே குறிக்கிறேன். உதாரணம்- சீன கூட்டம் ஐரோப்பாக் கண்ட கூட்டம்.

சேர்ந்து என்ற வார்த்தை வர வாய்ப்பில்லை... இங்கே யாவர் சேர்ந்து வாழ்ந்தனர்? மீனாவின் கவிதையில் பல்லாயிரம் ஆண்டு என்று சொல்லியிருப்பதை கவனிக்கலாம். சேர்ந்து வாழ்ந்திருந்தால் உலகம் எங்கேயோ அல்லவா போயிருக்கும்??

மீனா!!! அதென்ன சீன கூட்டம் ஐரோப்பாக் கண்ட கூட்டம் விளக்குங்கள்!

ஆதவா
31-01-2007, 05:20 PM
ஆற்றில் சிதறிய குங்குமம்

காக்க காக்க நிம்தம் முத்திரை காக்க.
-- இது நின்றன் என்று இருக்க வேண்டும். நிம்தம் என்ற வார்த்தைப் பிரயோகம் வித்தியாசமாக இருக்கிறது.
.

நண்பரே! நிம்தம் என்றுகூட போடலாம்......... நின்றன் என்பது எளிமை......அவ்வளவே...

leomohan
31-01-2007, 05:23 PM
நல்ல கவிதை மீனாகுமார். வெயில் படத்தில் வந்த பாட்டை நினைவுபடுத்தியது. அதில் சொன்ன பெரும்பாலான விளையாட்டுகளை விளையாடி மகிழந்திருக்கிறேன்.

pradeepkt
01-02-2007, 04:56 AM
ஆற்றில் சிதறிய குங்குமம்
கரைந்தெங்கும் செல்வதுபோல்
பல்லாயிரமாண்டு பிரிந்து வாழ்ந்த
மனிதகூட்டமெலாம் இன்று

-- சேர்ந்து அப்படின்னு இருக்க வேண்டுமோ?
=> பிரிந்து என்பது தான் சரி என்று நினைக்கிறேன். ஏனெனில், விமான போக்குவரத்தும், இன்றுள்ளது போல் பல்வழிப்போக்குவரத்தும் அக்காலத்தில் இல்லாமையால் பெரும்பாலும் தம் நாடே உலகமென நினைந்து பல்வேறு நாட்டு மக்கள் வாழ்ந்து கொண்டிருந்ததையே குறிக்கிறேன். உதாரணம்- சீன கூட்டம் ஐரோப்பாக் கண்ட கூட்டம்.
எங்கே குழப்பம் வந்ததென்றால் சேர்ந்ததுதான் பிரிய முடியும். ஆற்றில் சிதறிய குங்குமம் கரைந்தெங்கும் செல்வது சேர்ந்ததைக் குறிக்கிறதா, இல்லை பிரிந்ததைக் குறிக்கிறதா என்று அறிய முடியவில்லை.

pradeepkt
01-02-2007, 05:00 AM
நண்பரே! நிம்தம் என்றுகூட போடலாம்......... நின்றன் என்பது எளிமை......அவ்வளவே...

நிம் தம் என்பது பன்மையைக் குறிக்கலாம். சேர்த்துப் போட்டதால் விளங்கவில்லை. நின்றன் என்பது ஒருமையைக் குறிக்கிறது. ஆனாலும் நிம்தம் என்ற வார்த்தைப் பிரயோகத்தை வேறெங்கும் கண்டதில்லை என்பதால் கேட்டேன்.