PDA

View Full Version : எளிய முறையில் ஜாவா - பகுதி 2.



kavitha
29-01-2007, 10:27 AM
ஜாவாவின் சிறப்புகள்:-


1. ஆப்ஜக்ட் ஓரியண்டட் புரோகிராம் (பொருள் சார்ந்த வரைமுறை)
2. இன்ஹெரிட்டன்ஸ் (பரம்பரை குணாதிசயம்)
3. பாலிமார்ப்பிசம் (பன்முக அமைவு)
4. டைனமிக் பைண்டிங் (நேரடி இணைவு)
5. மெசேஜ் கம்யூனிக்கேசன் (செய்தித்தொடர்பு)


1. பொருள் சார்ந்த வரைமுறை:-

ஜாவாவில் ஒவ்வொரு பகுதி/வகுப்பு(க்ளாஸ்) ல் உள்ள ஒவ்வொன்றும் ஒரு பொருளாகக்(ஆப்ஜெக்ட்) கையாளப்படுகிறது. அதாவது நாம் தினசரி வாழ்க்கையில் கையாளும் பொருள்களைப்போல..

எ.டு
உலகம் என்பது வகுப்பானால்
அதில் உள்ள அனைத்தும் ஒவ்வொரு பொருளாகும்.
அவற்றில் நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் செய்கைகள் ஆகும்.

எனவே கையாளப்படும் ஒவ்வொன்றும் ஒரு பொருளாகவும்(ஆப்ஜெக்ட்), செய்யப்படும் செயல் செய்கை(மெத்தட்)யாகவும் கையாளப்படுகிறது. எனவே பொருளினையும், செயலினையும் தனித்தனியாக வரையறுக்கவும் வேண்டியபோது வேண்டிய பொருளினை வேண்டிய செயல்களுக்காக பயன்படுத்தவும் முடிகிறது.
சரி... இதனால் என்ன லாபம்?
இருக்கிறது. ஜாவா ஒரு கட்டுப்பாடுள்ள கம்யூனிசவாதி என்று சொல்லலாம். அதாவது நாம் நமக்குத்தேவையான ஒரு வகுப்பை நிர்ணயிக்கும்போது அதற்கு என்ன பொருள்கள் வேண்டும், அதில் என்னென்ன செயல்கள் செய்யப்படவேண்டும் என்பதை நாமே நிர்ணயிக்கலாம். அதே போல் அதே வகுப்பையும், பொருள்களையும், செயல்களையும் தேவைப்படின் வேறு ஒருவரும் கையாள முடியும். இதனால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஒரு அமைப்பு மீண்டும் மீண்டும் பயன்படுத்த ஏதுவாகிறது. இதைத்தான் 'ரீ யூசபிலிட்டி' என்கிறார்கள்.

2. பரம்பரை குணாதிசயம்

அது என்ன பரம்பரை குணாதிசயம்?
என்ன தான் ஜாவா புதுமைவாதியாக இருந்தாலும் பண்பில் பழமைவாதி தாங்க..
எப்படினு கேட்கிறீங்களா?
ஜாவா - கிட்ட உனக்கு காதல் திருமணம் பிடிக்குமா? பெற்றோர் பார்க்கும் திருமணம் பிடிக்குமா? என்றால் முன்னுரிமை அளிப்பது 2வது வாய்ப்பிற்குத்தாங்க..
இதில் என்ன லாபம்? இருக்கிறதே!
நம்மில் பலர் ரிஸ்க் எடுக்கவிரும்பாதவர்கள்; நாமே பெண் பார்த்து, நாமே அவளைப்புரிந்துகொண்டு, அவளை நம்வழிக்குக்கொண்டுவருவது....ச்ச! அட இதெல்லாம் எதுக்குங்க..
அவங்களே பார்த்துவைப்பாங்க...அவ நம்வழியிலே இருந்தால் நம்ம பாரம்பரியம், பழக்கவழக்கமெல்லாம் அவளே அறிந்துவைத்திருப்பாள்; அதனால் நம்மை அவள் எளிமையாகப்புரிந்துக்கொண்டு இணக்கமாக
இருப்பாள்; நம் பெற்றோர்களே பார்ப்பதால் அவர்களுக்கிடையேயான கருத்து வேறுபாடுகளும் வருவது
குறைவு என்பது நமது புத்திசாலி வாழைப்பழ சோம்பேறிகளின் எண்ணம்.
நம் ஜாவாவும் அந்த ரகம் தாங்க.
ஏற்கனவே தயாரிக்கப்பட்ட இருவேறு பொருள்களை ஒரு அமைப்பில் இணைத்து வைத்து அதன்
குணங்களை எளிமையாக எடுத்துக்கொள்வதும், தேவைப்படின் அதில் புதுமையைச்சேர்ப்பதும் ஜாவாவில் செய்யக்கூடிய பரம்பரை குணாதிசயம் ஆகும்.

சிங்கிள் இன்ஹெரிட்டன்ஸ்:-
அப்பா/அம்மாவின் முகச்சாயல் பிள்ளைக்கு வருவது
மல்டி லெவல் இன்ஹெரிட்டன்ஸ்:-
அதாவது தாத்தாவின் மூக்கும், பாட்டியின் நிறமும், அப்பாவின் சாயலும் பேரனுக்கு இருப்பதோடு அவனது சொந்த குணங்களும் வெளிப்படுவது.

3. பன்முக அமைவு:-

இது இன்னும் சுவாரசியமானது.
அதாவது நம்ம 'ஜீன்ஸ்' பிரசாந்த்-ஐஸ்வர்யாராய், 'வரலாறு' அஜீத், 'பார்த்திபன் கனவு' சினேகா மாதிரிங்க..
ஒரே ஆள் பல கெட்டப் ல வர்றதுக்கு பேரு பன்முக அமைவு..
இதனால் என்ன லாபம்?
ரொம்ப ஈஸி, கெட்டப் மட்டும் மாத்தினால் போதும். கால்ஷீட்/சம்பளம் ஒன்று தான்.(பயன்பாட்டில்
ஒருமுறை வரையறுத்தால் போதும்)
இங்கே செய்கைகளும் (மெத்தட்) அப்படித்தான், கெட்டப் மாதிரி தகவல்கள்கள்(இன்�பர்மேஷன்) மட்டும்
மாறும். இதனால் பன்முகபயனும், மீள்பயனும் (ரீயூசபிலிட்டி) கிடைக்கிறது.
மீள்பயன் நேரத்தையும், கணினி நினைவகத்தையும் சேமிக்கிறது.

4. நேரடி இணைவு (டைனமிக் பைண்டிங்):-

பொதுவாக ஸ்டேட்டிக் பைண்டிங் தான் நடைமுறையில் உள்ளது.
பைண்டிங் என்பது நாம் எழுதும் வரைமுறையையும், கணினியில் உள்ள கோப்புக்களையும் இணைப்பதாகும். இதற்காக லிங்க்கர்(linker) என்ற புரோகிராமை எழுதிவைத்திருக்கிறார்கள். இந்த லிங்க்கர் தான் நமது எழுத்தாணையையும் கணினியின் செயல்பாட்டையும் இணைக்கிறது. வெவ்வேறு வகுப்பிலுள்ள வெவ்வேறு
செய்கையை இயக்க 'நிலையானப்பிணைவு'(ஸ்டேட்டிக் பைண்டிங்) ஏற்றது. ஏனெனில் ஒருமுறை நினைவகத்தில் ஏற்றப்பட்டவுடன் அது அந்த பயன்பாடு முடியும்வரை நிலையாக இருக்கும். ஆனால் 'வெவ்வேறு வகுப்பிலுள்ள ஒரே செய்கையை' இதனால் ஒரே சமயத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் முதலில் ஏற்றுக்கொள்ளும் செய்கையை மட்டுமே நினைவில் வைத்திருக்கும்.
எ.டு.
நீங்கள் ரயில்நிலையத்தில் முன்பதிவு செய்யப்போகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். 30ம் தேதிக்கு
மதுரை பாண்டியன் எக்ஸ்பிரசுக்கும், 7ம் தேதி கல்கத்தா ஹவுரா எக்ஸ்பிரசுக்கும் பதிவு செய்யவேண்டும் என்றால்,
உங்களது செய்கை(மெத்தட்) பதிவு செய்வது(ஒரே செய்கை); ஆனால் வகுப்புகள்(க்ளாஸ்) வெவ்வேறு (மதுரை, கல்கத்தா).
ஸ்டேட்டிக் பைண்டிங் -ல் ஒரே சமயத்தில் இருவேறு வகுப்புகளுக்கு ஒரே செய்கையைக்கையாள முடியாது.

ஆனால் டைனமிக் பைண்டிங் -ல் இது சாத்தியம்.
ஏனெனில் 'நேரடி இணைவு' நேரடியாக நினைவகத்தைச் சுட்டுவதோடு(பாயிண்டிங்), பயன்பாட்டின் இயக்க
நேரத்தில்(ரன் டைம்) மட்டுமே செயல்படுகிறது. இதனால் செயல் முடிந்தவுடன் அதன் இயக்கம் துண்டிக்கப்பட்டு அதே பெயரிலுள்ள அடுத்த செய்கைக்கு வழிவிடுகிறது.

5. செய்தித்தொடர்பு:-

இதுவரை வகுப்பு(க்ளாஸ்), பொருள்(ஆப்ஜெக்ட்), செய்கை(மெத்தட்) உங்களுக்குப்புரிந்திருக்கும்.
வகுப்பின் அங்கம்தான் பொருளும், செய்கையும். அவற்றுள் அடங்குவது செய்தியும், தகவலும்.
செய்தியையும்(மெசேஜ்), தகவலையும்(டேட்டா) இணைப்பது செய்தித்தொடர்பு(கம்யூனிக்கேஷன்) ஆகும்.

'சிறார்கள் கொல்லப்பட்டார்கள்' என்பது செய்தி.
'நொய்டா', '70' என்பது தகவல்.

"நொய்டாவில் 70 சிறார்கள் கொல்லப்பட்டார்கள்" என்று இரண்டையும் இணைப்பது செய்தித்தொடர்பு.

வெறும் செய்தியோ, வெறும் தகவலோ முழுமையான பொருளைத்தராது. செய்தித்தொடர்பு அதை நிறைவுச்செய்கிறது.


(மீண்டும் சொல்வேன்)

.

பென்ஸ்
29-01-2007, 11:00 AM
கவி....
நான் கல்லூரியில் படிக்கும் போது ஒரு ஆசிரியரின் வகுபிற்க்கு யாரும் எஸ்கேப் ஆவது கிடையாது....
அத்தனை சுவையான, அருமையான வகுப்பு...
இங்கே உங்கள் வகுப்பிற்கும்...

நானும் இந்த ஜாவா படிக்கனும்ன்னு 7 வருசமா நினைக்கிறென்....
இன்றுவரை நடந்தது கிடையாது...
ஏன்னா படித்தால் எளிதில் புரியாது, மூடி வைத்திடுவேன்....

இன்று பணி பளுவிலும் இருந்து ரசித்து, புரிந்து படித்து ...
இதில் டெஸ்ட் வைத்தால் நான் நூத்துக்கு நூறு...

நன்றி கவிதா...

தமிழன்
29-01-2007, 12:37 PM
படித்து வியந்தேன்.
ஜாவா நான் கற்ற பொழுதை விட இன்று அதிகமாய் புரிந்துகொண்டேன்.
அடடா அழகுதமிழில் நடப்பு விசயங்களின் உதாரணத்துடன் அருமையான தொடர்.மிகவும் நன்றி.

பிச்சி
29-01-2007, 03:12 PM
கவிதா அவர்கலுக்கு... ஜாவா எனக்கு ஓரலவு தெரியும். உங்கல் பதிவில் தமிழிலேயே இட்டமைக்கு நன்றி.. ஆனால் ஆங்கிலம் இட வேண்டிய இடத்தில் ஆங்கில வார்த்தைகள் இட்டால் இன்னும் இனிமையாக இருக்கும் என நினைக்கிறேன்.. வகுப்பில் ஏற்கனவே படித்துவிட்டாலும் மீண்டும் பழைய நினைவுகள்... தூண்டுகிறது..

ஷீ-நிசி
29-01-2007, 03:47 PM
எனக்கு ஜாவா என்றால் சுத்தமாக தெரியாது... எளிய முறையில் மிக அழகான உவமைகளோடு சொல்வதை பார்த்தால் யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள முடியும் என்று தோணுகிறது.. தொடர்ந்து கற்றுக்கொடுத்திடுங்கள்...

மதுரகன்
29-01-2007, 05:24 PM
நானும் ஜாவா கற்கவேண்டும் என எண்ணியிருந்தேன்..
தற்பொழுது சி++ கற்பதால் முடியட்டும் என்று நினைத்திருந்தேன்..
ஆனால் அதற்கு அவசியமெ இல்லாலது அழகாக சொல்லித்தருகிறீர்கள்..
நன்றி

இளசு
29-01-2007, 07:22 PM
எனக்கே புரிகிறதே கவீ...
நிஜமாகவே திறமையான ஆசிரியைதான்..

நண்பர்கள் சொல்வதுபோல் - யாரும் ( என்னைப்போல வாழைப்பழச் சோம்பேறி கூட) கற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை தரும் நடை..

அழகிய எடுத்துக்காட்டுகளில் ஒரு கதாசிரியையைக் காண்கிறேன்..

அனைத்து நண்பர்களுக்கும்,

இறுதி வரை எல்லா மாணவர்களும் கிளாஸ் கட் அடிக்காமல் வந்து படித்து, கருத்திட்டு, சந்தேகம் தீர்த்து, - கிளாஸ் லீடர் பென்ஸ் போல
சமர்த்தாக இருக்கணும்...சரீங்களா?

Mathu
29-01-2007, 10:55 PM
கற்றதை கற்று கொடுப்பது ஒரு கலைதான் அது கவிக்கு சுலபமாக வருகிறது,
நாம எப்பவும் லாஸ்ற் பெஞ் பார்ட்டி, நமக்கே புரிகிறதே.

தொடரட்டும் கவி உன் சேவை.....

:D :) :D

kavitha
31-01-2007, 06:39 AM
அனைவருக்கும் நன்றி.. உங்களது பின்னூட்டங்கள் எப்படி இருக்கின்றனவோ என்று எண்ணியபடியே வந்தேன். இந்த பிறந்த நாள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியான உபயோகமான நாளாகும். எனது இந்தப்பதிவின் நோக்கமே கணினி அறியாதவர்களுக்கும் புரியவேண்டும் என்பதே.. அந்த விதத்தில் உண்மையாகவே மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களது சந்தேகங்கள், கருத்துகள், பிச்சி அவர்களைப்போல இன்னும் பல யோசனைகள் இருந்தாலும் தெரிவியுங்கள். மேலும் பதிவிட ஊக்கமளித்த அனைவருக்கும் என் நன்றிகள் பல.

pradeepkt
31-01-2007, 07:10 AM
அடா அடா அடா..

இப்படி அல்லவா இருக்கணும் வகுப்புன்னா??
நடத்துங்க நடத்துங்க... எங்கெங்கே நம்ம பங்களிப்பு தேவையோ அங்கே சேந்துக்கிருவம்...

பாரதி
31-01-2007, 07:42 AM
அனைவருக்கும் நன்றி.. உங்களது பின்னூட்டங்கள் எப்படி இருக்கின்றனவோ என்று எண்ணியபடியே வந்தேன். இந்த பிறந்த நாள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியான உபயோகமான நாளாகும். எனது இந்தப்பதிவின் நோக்கமே கணினி அறியாதவர்களுக்கும் புரியவேண்டும் என்பதே.. அந்த விதத்தில் உண்மையாகவே மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களது சந்தேகங்கள், கருத்துகள், பிச்சி அவர்களைப்போல இன்னும் பல யோசனைகள் இருந்தாலும் தெரிவியுங்கள். மேலும் பதிவிட ஊக்கமளித்த அனைவருக்கும் என் நன்றிகள் பல.

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். எல்லாவளங்களும் பெற்று எந்நாளும் மகிழ்வுடனும் நிம்மதியுடனும் வாழ வாழ்த்துக்கள்.

pradeepkt
31-01-2007, 07:57 AM
அடடா... மிஸ் பண்ணீட்டேனே...
கவிதா உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

பென்ஸ்
31-01-2007, 09:29 AM
பிறந்த நாளா கவி....??
என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்....

அறிஞர்
31-01-2007, 10:07 PM
வகுப்புகள்.. சூப்பராக செல்கிறது...

டீச்சருக்கு நன்றி...

kavitha
09-02-2007, 06:44 AM
நடத்துங்க நடத்துங்க... எங்கெங்கே நம்ம பங்களிப்பு தேவையோ அங்கே சேந்துக்கிருவம்...
__________________
நெஞ்சத் தகநக நட்பது நட்பு


கண்டிப்பாக பிரதீப்... ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

kavitha
09-02-2007, 06:46 AM
பாரதி, பெஞ்சமின், பிரதீப், அறிஞர் அனைவருக்கும் என் நன்றி.

மயூ
09-02-2007, 06:53 AM
நானும் ஜாவா கற்கவேண்டும் என எண்ணியிருந்தேன்..
தற்பொழுது சி++ கற்பதால் முடியட்டும் என்று நினைத்திருந்தேன்..
ஆனால் அதற்கு அவசியமெ இல்லாலது அழகாக சொல்லித்தருகிறீர்கள்..
நன்றி
மதுரகன் ஒரு மொழியை அடிப்படை விளங்கக் கற்றுக் கொண்டால் எனைய மொழிகள் தானே கற்றுக்கொள்ளலாம்.

மயூ
09-02-2007, 06:57 AM
அடடா... மிஸ் பண்ணீட்டேனே...
கவிதா உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.
. நெட் ஆளுங்கெல்லாம் வர்றாங்கப்பா!!!
ஏதோ... ஜாவா வாழ்க!!! :p
.நெட் IDE மாதிரி ஜாவாக்கும் நல்ல IDE உள்ளதா?
JCreator உதவாது!!! \ :mad:
எக்கிலிப்ஸ் பராவியில்லை என்றாலும் .நெட் அதைவிட இலகுவானது. :cool:

ஆதவா
09-02-2007, 08:31 AM
. நெட் ஆளுங்கெல்லாம் வர்றாங்கப்பா!!!
ஏதோ... ஜாவா வாழ்க!!! :p
.நெட் IDE மாதிரி ஜாவாக்கும் நல்ல IDE உள்ளதா?
JCreator உதவாது!!! \ :mad:
எக்கிலிப்ஸ் பராவியில்லை என்றாலும் .நெட் அதைவிட இலகுவானது. :cool:

தமிழ்ல பேசுங்கப்பா!! இல்ல வேற ஏதோ மொழியிலயாவது பேசுங்கள்.. இப்படியா ஜாவா, டாட்நெட், ஐடிஎ..... செசெசெ....:D

pradeepkt
09-02-2007, 09:36 AM
. நெட் ஆளுங்கெல்லாம் வர்றாங்கப்பா!!!
ஏதோ... ஜாவா வாழ்க!!! :p
.நெட் IDE மாதிரி ஜாவாக்கும் நல்ல IDE உள்ளதா?
JCreator உதவாது!!! \ :mad:
எக்கிலிப்ஸ் பராவியில்லை என்றாலும் .நெட் அதைவிட இலகுவானது. :cool:
இருக்கிறது...
ஜேபில்டர் என்று ஒன்று இருக்கிறது.
ஆனாக் கொள்ளக் காசு சொல்வாங்க. இப்பக் கொஞ்சம் சீப்பாக் கெடைக்குதுன்னு கேள்வி.

மயூ
09-02-2007, 09:58 AM
ஜேபில்டர் கேள்விப்பட்டமாதிரி இருக்கு பார்ப்பம் கிடைக்குதா எண்டு!!!

kavitha
09-02-2007, 10:00 AM
.நெட் அதைவிட இலகுவானது
ஆமாம். (நம்ம மக்களுக்கு சமைச்சு சாப்பிடுவதைவிட ஃபாஸ்ட் புட் தான் ரொம்ப புடிக்குது.. என்ன பண்றது!! :) )

மயூ
09-02-2007, 10:04 AM
ஆமாம். (நம்ம மக்களுக்கு சமைச்சு சாப்பிடுவதைவிட ஃபாஸ்ட் புட் தான் ரொம்ப புடிக்குது.. என்ன பண்றது!! :) )
மைக்ரோசாப்டுக்கு மார்கெட்டிங் தெரிகின்றது!! :)

மயூ
09-02-2007, 10:06 AM
மைக்ரோ சாப்ட் மக்களின் நாடிபிடித்துச் செயற்படுகின்றது...
அத்துடன் கள்ள வேலைகள் மூலம் எதிரியையும் வீழ்த்துகின்றது...

ஓவியா
09-02-2007, 09:45 PM
அருமையான பதிவு

வாழ்த்துக்கள் கவி.

நீங்க ஜாவாவில் சிறப்பு தேர்ச்சி பெற்றவரா? நன்று

தொடருங்கள்.

மயூ
10-02-2007, 01:05 PM
அருமையான பதிவு

வாழ்த்துக்கள் கவி.

நீங்க ஜாவாவில் சிறப்பு தேர்ச்சி பெற்றவரா? நன்று

தொடருங்கள்.
சும்மாவா வந்து எழுதுவாங்க!!! நக்கலு!!! :D

raj6272
07-03-2007, 08:30 AM
மிக்க நன்றி கவிதா

kavitha
07-03-2007, 10:11 AM
ஓவியா, மயூரேசன், ராஜ் மற்றும் அனைவருக்கும் என் நன்றிகள்... மூன்றாம் பாகம் இங்கே http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8189

bosprashanth
01-04-2009, 04:45 AM
நான் நினைக்கிறன் மயூ நீங்க Netbens 5.5.1 பாவித்துப் பாருங்களேன் எப்படி இருக்கெண்டு....

சுஜா
01-04-2009, 10:13 AM
நன்றி கவி அக்கா.
நான் ஒரு பொறியியல் மாணவன்.ஆனால் எனக்கு ஜாவா தெரியாது .
அதை தமிழ் தரும் போது மிகவும் எளிமையாக இருக்கிறது .கலை சொற்கள்தான் சற்று இடிக்கிறது . உங்கள் பகுதிகளை இன்னும் எளிமையாக
தொடருங்கள் வாழ்த்துகள் .