PDA

View Full Version : நீராகி.. (பஞ்சபூதம்!) சிறுகதை.. (400வது பதிப்பு..)rambal
01-05-2003, 02:04 PM
நீராகி.. (பஞ்சபூதம்!) சிறுகதை.. (400வது பதிப்பு..)


என் மண்ணில்
ஓடுகின்ற நதிகளுக்கெல்லாம்
உன் குலப்பெயர் வைத்து
போற்றினோம்...
பிணம்போட்டு
சாக்கடையும் கலந்து
தூற்றினோம்..
என்ன இருந்த போதும்
நீரின் புனிதம் மட்டும்
கெட்டுப் போவதில்லையடி...


அந்த ஆசிரமம் கலை கட்டி இருந்தது. அந்த அனாதை ஆசிரமத்தின் ஆண்டுவிழா.இதுதான் இருபது ஆண்டுகளில் இந்த ஆசிரமத்திற்கே முதல் விழா. ஸ்பான்சர் கிடைக்காததினாலும் பணத்தட்டுப்பாட்டாலும் இதுவரை யாரும் கொண்டாடியதில்லை. வினோதினி வந்த பின் எல்லாம் தலைகீழ். ஆசிரமத்தின் தலைமை நிர்வாகி வினோதினி பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தாள். முப்பது வயது. திருமணம் ஆகவில்லை. அர்ப்பணிப்பு.. அப்படி ஒரு ஈடுபாடு. இந்தமாதிரியான ஆசிரமத்திற்கு அவளைப்போல் ஒருவர் நிர்வாகியாக வர கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

"சீப் கெஸ்ட் எத்தனை மணிக்கு வற்றேன்னார்?"
"ஏழு மணிக்கு மேடம்."
"அவர் வந்ததும் விழா ஆரம்பிச்சிடலாம்"
"சரி மேடம்"
"எல்லா ஏற்பாடும் சரியா நடந்திட்டிருக்கா?"
"யெஸ் மேடம்"
"சரி நான் ரூம் வரைக்கும் போயிட்டு வற்றேன். எல்லாத்தையும் பக்கத்திலேயே இருந்து கவனிச்சுக்குங்க" காரியதரிசிக்கு உத்தரவு கொடுத்துவிட்டு ரூமிற்கு கிளம்பினாள்.

இன்னும் ஏழு மணியாக மூன்று மணி நேரம் இருந்தது. வினோதினி ஆசிரமத்தின் பின்னால் இருந்த அவள் அறைக்குள் நுழைந்தாள். விழா அழைப்பிதழைப் பார்த்தாள். சீப்கெஸ்ட் கார்த்திக் MBA. கார்த்திக் இன்று ஒரு மிகப்பெரிய வியாபாரப் புள்ளி. முப்பது வயதிற்குள் சாதித்த இளைஞன். அந்தப் பெயரைப் படிக்கும் போதே அவள் கண்களின் ஓரத்தில் ஒரு துளி கண்ணீர் அவளை அறியாமல் எட்டிப்பார்த்தது.

கனகனவென்று செல்லமாய் சிணுங்கிய போனை போர்வைக்குள்ளிருந்தே ஒரு கையை விட்டு எடுத்து காதில் பொருத்தினேன்..

"கார்த்தி.. நான் கௌரி பேசுறேன்.."
"ஏய் கௌரி என்ன ஆச்சு?"
"வினு இங்கதான் இருக்கா.. ஒரே கலாட்டா"
"ஏன் என்னவாம்?"
"கதிருக்கு அடுத்தவாரம் கல்யாணமாம்.. அவன்கூட போன்ல பேசினதிலருந்து ஒரே அழுகை."
"யாரு.. கதிரா?"
"ஆமா.. இவ என்னென்னமோ சொல்றா.. எனக்கு பயமா இருக்கு.. கொஞ்சம் வற்றீயா"
"இந்நேரத்துக்கா? இப்ப மணி என்ன தெரியுமா?"
"இவளை காத்தால வரைக்கும் வைச்சிருக்க முடியுமான்னு தெரியலை"
"என்ன சொல்றா"
"என்னாலக் கட்டுப்படுத்தமுடியல..வீட்டில எல்லாம் ஊருக்குப் போயிட்டதால துணைக்கு வாடின்னு சொன்னேன். வந்தது வினை.."
"இப்ப எங்க அவ?"
"டிவி பாத்துட்டிருக்கா. பாத்ரூம் போறேன்னு சொல்லிட்டு உனக்கு போன் பன்றேன்.. ப்ளீஸ் கொஞ்சம் வந்துட்டுப் போ"
"சரி. அவளை தனியா விடாதே.. அவ கூடவே இரு.. எதுனா செல்லுல கூப்பிடு. நான் இன்னும் அரை அவர்ல வந்துடுறேன்.."

போனை வைத்துவிட்டு போர்வையோடு தூக்கத்தையும் சேர்த்து உதறினேன். ஒரு டி சர்ட்டையும் ஜீன்ஸையும் போட்டுக்கொண்டு அவசர அவசரமாக பைக்கை எடுத்துக் கிளம்பினேன்..

"கார்த்தி.. உனக்கு ஒன்னு தெரியுமா?"
"என்ன?"
"நான் கதிரை லவ் பண்றேன்.."
"ஒத்து வராது வினு"
"ஏன்?"
"அவனுக்கு கமிட்மெண்ட்ஸ் ஜாஸ்தி.. இரண்டு தங்கச்சி. அப்பா இல்லை. நிறைய கடன். இதோட இவன் படிச்சி முடிச்சி வேலைக்குப் போய் உன்னைக் கல்யாணம் பண்ணனுங்கிறது.. நினைச்சுக்கூடப் பார்க்கமுடியாது. எல்லாத்துக்கும் மேல அவன் வேற ஜாதி.. நீ வேற ஜாதி. உங்கப்பா ஜாதி சங்கத் தலைவர் வேற.. அவர் இதுக்கு சம்மதிக்கவேமாட்டார்.. அதனால சின்னக்குழந்தையா அடம் பிடிக்காம கொஞ்சம் யோசி.."
"இல்ல கார்த்தி. நான் முடிவு பண்ணா பண்ணினதுதான்.. கொஞ்சம் குழப்பாம ஆறுதலா நாலு வார்த்தை சொல்றியா?"
"நான் குழப்புறேனா? எல்லாம் நேரம்.. அது சரி.. அவன்கிட்ட சொல்லிட்டியா?"
"ஓ.. எப்பவோ.."
"என்ன சொன்னான்?"
"சரின்னுட்டான்"
"அந்த தடியனுக்குக்கூட யோசிக்க அறிவில்லையாமா? நீங்கள்லாம் MBA படிச்சி கிழிச்ச மாதிரிதான். என்னவோ போ.. சாட்சிக் கையெழுத்து போடணும்னா மட்டும் கூப்பிடு வற்றேன்.. பை."

அதற்குப்பிறகு அவர்கள் காதல் விஷயத்தில் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை. என்றாவது ஒரு நாள் பிரச்சினை வரும் அன்று பார்த்துக்கிடலாம் என்று இருந்துவிட்டேன். வினு, கௌரி, நான் மூவரும் சிறுவயது முதலே ஒன்றாய் படித்து வருகிறோம்.. யாரை விட்டு யாரும் பிரிந்ததில்லை.. ஒரே பள்ளி.. ஒரே கல்லூரி.. ஒரே படிப்பு.. விணு மட்டும் காதலால் திசை திரும்பி விட்டாள்.. எல்லாம் காலத்தின் கட்டாயம். காதல் முன்னறிவிப்பு சொல்லிவிட்டு வருவதில்லை.. யோசிக்கவும் விடுவதில்லை. அதன் குறிக்கோள் ஒன்றே.. கலந்து போ.. கரைந்து போ.. காணாமல் போ.. வைரமுத்து சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்.

மயிலாப்பூரின் குறுகிய சந்துகளில் வண்டியை ஓட்டி கௌரி வீட்டை அடைந்து காலிங்பெல்லை அழுத்தினேன்..
"வா கார்த்தி.." என்றவாறு கௌரி கதவைத்திறந்துவிட்டாள்..
"அவ எங்கே?"
"அழுதிட்டிருக்கா"
"யேய் வினு''
"கார்த்தி.. உன்னை இந்நேரத்தில யாரு வர சொன்னா?'' அழுகையினுடே கேட்டாள்..
"அதெல்லாம் இருக்கட்டும். உனக்கு என்ன ஆச்சுன்னு இப்படி அழுதிட்டிருக்க?"
"இன்னும் என்ன ஆகணும்..அவன் எனக்கு இல்லைன்னு ஆயிடுச்சு"
"என்ன சொல்றே நீ?"
"அவனுக்குக் கல்யாணமாம்"
"அவன்கிட்ட பேசினியா? என்ன சொல்றான் அவன்?"
"இத விட்டா அவன் தங்கச்சிக்கு கல்யாணம் அமையாதாம்.."
"அவன் கல்யாணத்திற்கும் அவன் தங்கச்சி கல்யாணத்திற்கும் என்ன சம்பந்தம்?"
"பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கிறாங்களாம்"
"அதனால உன் காதலை மறந்திட்டானாமாம்"
"இல்லை.. அவனும் அழுதுகிட்டேதான் சொன்னான்.. அவங்க வீட்டில அவன் அம்மா சாகப்போறேன்னு மிரட்டுனதால சரின்னுட்டானாம்"
"இதனாலதான் அன்னிக்கே சொன்னேன்.. இந்தக் காதல் ஒத்துவராது.. நீதான் சொன்னே.. நான் முடிவு பண்ணா பண்ணதுதான்னு.. இப்ப பிழிஞ்சி பிழிஞ்சு அழுறே.."
"நீ கூட என் பீலிங்கை புரிஞ்சிக்கிடலை.."
"அவன் கொஞ்சம் ஸ்டிராங்கா நின்னான்னா உங்க ரெண்டு பேருக்கும் நானே கல்யாணம் செஞ்சு வைச்சிருவேன்.. அவன்தான் ஜகா வாங்கிட்டானே.."
"அப்படின்னா இதுக்கு என்ன வழி?"
"உங்க அப்பாகிட்ட பேசி பார்த்தியா?"
"அவரைப் பத்தித்தான் உனக்கு தெரியுமே.."
"ஒன்னு பண்ணு.. பேசாம அவனை மறந்திடு.. அதான் ஒரேவழி.. கொஞ்ச நாளைக்கு ஒரு மாதிரி இருக்கும். அப்புறம் எல்லாம் சரியாயிடும். அப்புறமா உங்க வீட்டில பார்க்கிற பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டிலாயிடு. வேணும்னா பிறக்கிறது பையனா இருந்துச்சுன்னா அவனுக்கு கதிர்னு பேர் வைச்சுடு"
"விளையாடாத.. இப்ப நான் மூனுமாசம் முழுகாம இருக்கேன்.."

இந்தப்பதிலில் நாங்கள் இருவரும் அதிர்ந்தே போனோம்..

"என்னடி சொல்றே?" கௌரியிடம் ஒரு பதட்டம் தொற்றிக்கொண்டது..
''ஆமா, மூனு மாசத்துக்கு முன்னாடி மகாபலிபுரம் போகும் போது நடந்திடுச்சு." அழுகை ஒப்பாரியாக மாறியது..
"வினு.. அவனை அடிச்சு தூக்கிட்டு வரட்டுமா?"
"வேண்டாம்... அப்புறம் அவன் குடும்பம் நல்லாயிருக்காது.."
"அப்படின்னா..பேசாம கலைச்சிடு.. எனக்குத் தெரிந்த ஒரு டாக்டர் இருக்கிறார். வேண்டுமானால் அவரிடம் கேட்டுப் பார்க்கிறேன்""
"என்னால முடியாது. எனக்கு என் காதலை விட என் கரு முக்கியம். என் தாய்மை முக்கியம். அந்த பிஞ்சுக்குழந்தை என்ன பாவம் பண்ணியது. நான் செய்த தப்பிற்கு அந்தக் குழந்தைக்கு தண்டனையா?"
"என்ன செண்டிமெண்டா? அதுக்காக கல்யாணம் பண்ணிக்காமலே பெத்துக்கப் போறியா?"

இந்தக் கேள்விக்கு பதில் இல்லை.. கொஞ்ச நிமிடங்கள் மௌனத்தில் கழிந்தன.. நான் பால்கனிக்குப் போய் சிகரெட் பற்றவைத்தேன்.. இப்போதைய பிரச்சினை குழந்தை.. காதல் அல்ல.. காதலை விட தாய்மை புனிதம்.. ஒரு குழந்தைக்கு தாய் ஆவதென்றால் எந்த ஒரு பெண்ணிற்கும் ஒரு பரவச நிலை ஏற்படும். காதலினால் இவள் துவளவில்லை. தாய்மையானதற்கு ஆனந்தம் அடைகிறாள். எப்படி வீட்டிற்குத்தெரியாமல் பெற்றுக்கொள்வது? ஒரே குழப்பமாய் இருந்தது. இறுதியில் இரண்டு முழு சிகரெட்டுகளை கொன்ற பின் அந்த யோசனை சரியென்றேபட்டது..

"வினு.. பைனல் செமஸ்டர் பிராஜக்ட்டுக்கு என்ன பண்ணப் போற?"
"இப்ப என்ன அதுக்கு?"
"இல்லை சொல்லு.. ஒரு விஷயம் இருக்கு.."
"மேனேஜ்மெண்ட்லதான் பண்ணனும்னு இருக்கேன்.."
"சரி பெங்களூர் போறியா?"
"எதுக்கு?"
"அடுத்தமாசம் பிராஜக்ட்டுக்கு பெங்களூர் போயிடு.. ஆறுமாசம் பிராஜக்ட். அங்கேயே குழந்தையை பெத்துக்க.. வேணும்னா நானும் பிராஜக்ட் அங்கேயே பண்றேன்.. குழந்தையை பெத்துட்டு எதுனா ஆசிரமத்தில கொடுத்திடு.. பின்னாடி பாத்துக்கலாம்.."
"சரியா வரும்கிறியா?"
"எல்லாம் சரியா வரும்"

வினோதினி அந்த விழா அழைப்பிதழை மூடிவிட்டு சீப் கெஸ்ட்டை வரவேற்க தயாரானாள்.

நிலா
01-05-2003, 10:22 PM
சுவாரஸ்யம் குறையாமல் கொண்டுசெல்கிறீர்கள் கதையை!
பஞ்ச பூதம்! நல்ல தலைப்பு!
புரட்சிகரமான ஆளோ நீங்கள்?
கவிதை,கதை எல்லாமே என்னை அப்படித்தான் எண்ணவைக்கிறது!
பாராட்டுக்கள்!

rambal
02-05-2003, 08:05 AM
நான் பெரிய புரட்சிக்காரனெல்லாம் இல்லை.. ஏதோ என்னால் இயன்ற அளவிற்கு மாறுபட்ட கருத்துக்களோடு முயற்சிக்கிறேன்.. அவ்வளவே.. பாராட்டிற்கு நன்றி..

karikaalan
02-05-2003, 10:30 AM
அருமையான சிறுகதை. பாராட்டுக்கள் ராம்பால்ஜி! படித்து மகிழச்செய்கிறது.

===கரிகாலன்

பாரதி
02-05-2003, 05:16 PM
பாராட்டுக்கள். சிறு கதை ரொம்பவும் யோசிக்க வைக்கிறது.

Mano.G.
03-05-2003, 02:15 AM
வாய்ச்சொல்லில் சொல்ல முடியாதவைகளை
பேனா முனையில் ( இல்லை இல்லை விசைப்பலகையின் மூலம்) சொல்லியுள்ளீரே , அதுதான் ராம்பால்.ஜி
வாழ்த்துக்கள் ஐயா ,
உங்கள் படைப்புக்களை மேலும் எதிர்பார்க்கும்
தோழர்கள், காற்றாடிகள்.

மனோ.ஜி

குமரன்
04-05-2003, 02:47 AM
விறுவிறுப்பான சிறுகதை...பாராட்டுகள் ராம்.
மேலும் தொடருங்கள்.

rambal
05-05-2003, 04:40 PM
பாராட்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி..

முத்து
05-05-2003, 06:07 PM
சுவாரசியமான கதை ! நன்றி நண்பரே !

அறிஞர்
09-05-2003, 01:49 AM
மாறுபட்ட கருத்துக்கள்.. அருமை வாழ்த்துக்கள்

lavanya
11-05-2003, 10:51 AM
உங்களது முன்னுரையாய் அமைந்த கவிதை அருமை....
பின் கவிதையாய் அமைந்த கதை ஒரு பூகம்ப அதிர்வைத் தந்தது
(சமயங்களில் நிஜம் கற்பனையை விட பயங்கரமாய் இருக்கும்
உதாரணம் இந்த கதை)
உங்கள் 400 ஆவது படைப்பு இந்த எளிய ரசிகையின் வந்தனங்களும்
பாராட்டுகளும்....

Emperor
11-05-2003, 01:05 PM
அருமையான கதை ராம்பால், கதையில் மூழ்கடித்துவிட்டீர் !

rambal
11-05-2003, 03:34 PM
இது என் வாழ்வில் நடந்த கதை அல்ல..
இதோடு ஒத்த சம்பவத்தையும் கொஞ்சம் கற்பனையையும் கலந்து கொடுத்தேன்.. அவ்வளவே..
நன்றி லாவ்..
மற்றும் பாராட்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்..

poo
11-05-2003, 04:40 PM
அருமை ராம்.. இன்றுதான் படித்தேன்.. (உன் கதையை ஆசுவாசமாக படிக்க ஆசை... அதனால்தான் பொறுமை!!)

Dinesh
27-05-2003, 05:57 AM
தாய்மை அனைத்திலும் மிகச்சிறப்பானது...
அந்த தாய்மையை போற்றும் விதத்தில் அமைந்த
சிறுகதை மிகவும் அருமை..
வாழ்த்துக்கள் ராம்பால் அவர்களே!

தினேஷ்.

dellas
09-01-2011, 03:06 PM
நல்ல சுவாரஸ்யமான கதை. பாராட்டுக்கள் ஆனால் நாயகியின் வாழ்க்கையில் இனி சுவாரஸ்யம் இருக்குமா நண்பரே.