PDA

View Full Version : Sandbox Thinking செய்வது எப்படி?



leomohan
21-01-2007, 02:15 PM
In computer security, a sandbox is a safe place for running semi-trusted programs or scripts, often originating from a third party (see sandbox for the origins of this usage of the word). The sandbox security model provides a tightly-controlled set of resources for foreign programs to run in, such as a small "scratch-space" on the disk and a section of memory to carry out instructions

மணல் தொட்டியில் சிந்திப்பதா எப்படி.

நீங்கள் Jungle Book, Trueman Show படங்கள் பார்த்ததுண்டா.

முதல் படத்தில் ஒரு கூட்டம் காடுகளில் வேட்டையாட செல்லும். அப்போது ஒரு சிறுவனை தவற விட்டுவிடும். பிறகு அந்த குழந்தை காடுகளில் வளர்ந்து மிருகங்களின் பழக்கங்கள் கற்றுக் கொண்டு வளரும்.

இதேபோல் டார்சான் படத்திலும் பார்த்திருப்பீர்கள். ஒரு பெண் மேல் காதல் கொண்டு நகரம் செல்வான். எந்த குடும்பத்திலிருந்து பிரிந்தானோ அங்கே பெரியவன் ஆனதும் மீண்டும் குடும்பத்தில் போய் சேரும் இருந்தாலும் அதற்கு ஒத்து வராது.

ட்ரூமன் ஷோ படத்தில் ஒரு பெரிய ஸ்டூடியோ அமைத்து ஒரு குழந்தையின் வாழ்கை அவன் 25 வயது ஆகும் வரை தொலைகாட்சியில் தொடராக காண்பிப்பார்கள். அனைத்தும் போலி. அவனுக்கு நடக்கும் திருமணமும் போலி. அந்த தொடர் பெரும் வெற்றி அடையும் நிறைய விளம்பரதாரர் குவிவார்கள். ஆனால், அவன் நிஜமாக காதல் வசப்பட்டு அந்த ஸ்டூடியோவின் கட்டுகளை தகர்த்து வெளிவருவான்.

நம் கற்கால மனிதர்களும் இவ்வாறு தான். அவர்களுக்கு படிக்க புத்தகங்கள் இல்லை. சொல்லித்தர யாரும் இல்லை. தொலைகாட்சி இல்லை. வானோலி இல்லை. ஆனால், அவர்களுடைய அறிவு வளர்ந்தது. அதுவே இன்று இந்த தொழில் நுட்ப வளர்ச்சிகளுக்கு காரணம்.

நாம் பல முறை யோசிக்கிறோம். கேள்விகள் கேட்கிறோம். பதில்கள் தேடுகிறோம். நாம் படிக்காமலேயே இருந்திருந்தால் என்னவாகி இருக்கும். நாம் தொலைகாட்சி பார்ப்பதையும் புத்தகம் படிப்பதையும் நிறுத்தி விட்டால் நம் அறிவு வளர்ச்சி நின்றுவிடுமா.

Science of Getting Rich (www.scienceofgettingrich.net (http://www.scienceofgettingrich.net/)) எனும் புத்தகம் 100 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்டது. அதில் ஆசிரியர் மனிதனிடம் அமுதசுரபியாய் ஒரு சக்தி இருக்கிறது. அது உருவமற்றது. அதுவே அவனுடைய யோசிக்கும் சக்தி. அந்த சிந்திக்கும் திறன் ஒன்றுமில்லாத மண்ணிலிருந்து உலோகத்தை உருவாக்கியது. கண்ணில் தென்படா காற்றலைகளிலிருந்து செல்பேசியும் தொலைகாட்சி அலைகளும் உருவானது.

மேலை நாட்டு அறிஞர்கள் பல வகை சோதனைகள் செய்துள்ளார்கள். ஒரு மனிதனை 40 அடிக்கு கீழ் இருட்டறையில் வைத்துவிட்டு இரவு பகல் என்று தெரியாமல் பல நாட்கள் வைத்திருக்கிறார்கள். பிறகு அவனிடம் நீ எத்தனை நாள் உள்ளே இருந்தாய் என்று கேட்கிறார்கள். அவனுடைய உணவு முறை மாறுகிறதா என்று பார்க்கிறார்கள்.

இன்னொரு சோதனையில் விளக்கு வெளிச்சத்தை குறைத்துவிட்டு வேலை செய்யும் திறனை சோதிக்கிறார்கள்.

நீங்கள் பள்ளிப்பருவத்தில் Robinson Crusoe, Daniel Defoe எழுதிய புத்தகத்தை அவசியம் தமிழிலோ ஆங்கிலத்திலோ படித்திருப்பீர்கள். இதில் ஒருவனுடைய கப்பல் கவிழ்ந்துவிடுகிறது. அவன் மட்டும் தனியாக ஒரு தீவில் மாட்டிக் கொள்கிறான். பல ஆண்டுகள் வாழ்கிறான். ஆள் அரவமற்ற தீவில் அவன் பல விதமான வளர்ச்சிகள் கொண்டு வருகிறான். ஆச்சர்யம் அல்லவா.

அப்படி ஒரு வெளி அறிவு இல்லாத மணல் தொட்டியில் உங்களை ஒரு தலைப்பில் சிந்திக்க சொன்னால் நீங்கள் என்ன விஷயங்களை கொண்டு வருவீர்கள் வெளியே?

தொடரும்....

leomohan
21-01-2007, 02:18 PM
நான் வகுப்பறைக்குள் நுழைந்ததும் கையில் மார்க்கர் பேனா வைத்துக் கொண்டு ஏதாவது ஒரு மாணவனை பார்த்து ஒரு வட்டம் வரையச் சொல்வேன். அவரும் வந்து வரைந்து செல்வார். பிறகு வகுப்பை பார்த்து இது வட்டமா என்று கேட்பேன். சிலர் ஆம் என்பார்கள். சிலர் இது முட்டை என்று சொல்லி சிரிப்பார்கள்.

நான் அவர்களிடம் சில கேள்விகள் கேட்பேன்.

1. நான் மார்க்கரை கொண்டு வரையச் சொன்னேனா.

2. எத்தனை ரேடியஸ் என்று சொன்னேனா

3. ஏன் அருகிலிருந்த மாணவியிடமிருந்து வளையல் வாங்கி வரையலாமே. நல்ல வட்டம் வந்திருக்குமே.

ஆக நீங்கள் கேள்வி கேட்க மறுக்கிறீ்ர்கள். ஒன்று நீங்கள் பலவற்றையும் புரிந்துக் கொண்டு செய்வதாக காரியங்கள் செய்கிறீர்கள் அல்லது பயப்படுகிறீர்கள். கேள்விகள் கேட்க வேண்டும், அதையே என் வகுப்பில் நான் விரும்புவேன் என்பேன்.

பிறகு ஒரு கோப்பை வரைந்து அதில் பாதிவரை திரவம் நிரப்பியிருப்பதுபோல் காட்டுவேன்.

மாணவர்களை பார்த்து இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பேன். சிலர் குடுவையில் தண்ணீர் பாதி நிரம்பியுள்ளது என்பார்கள். சிலர் பாதி காலியாக உள்ளது என்பார்கள்.

நான் ஒரு சிறிய விஷயத்தில் இரண்டு கருத்துக்கள் வருகிறது பார்த்தீர்களா. எப்போதெல்லாம் உங்களுக்கு இந்த பிரச்சனை வருகிறதோ அப்போதெல்லாம் உங்கள் சொந்த நிர்ணயம் எடுங்கள். உங்களால் முடியாவிட்டால் நான் சொல்வதை கேளுங்கள் என்பேன்.

மேலும் தண்ணீர் இருக்கிறது என்று சொன்ன மாணவர்களை பார்த்து, நான் அதில் உள்ள திரவம் தண்ணீர் என்று எழுதினேனா. ஏன் நீங்களே தண்ணீர் என்று நினைத்துக் கொண்டீர்கள். எதையும் ஊகிக்காதீர்கள். Don't Assume. ASSUME is making an ASS out of U and ME என்று சொல்வேன். சிரிப்பொலி எழும். அவர்களுக்கு அந்த கருத்தும் புரியும். ஆக சந்தேகத்தில் இருந்தால் கேளுங்கள் என்பேன்.

நாம் பல விஷயங்களை Perceive செய்கிறோம். காருக்கு எத்தனை சக்கரங்கள் என்று கேட்டால் மக்கள் பெரும்பான்மையானோர் 4. ஏன் 6 சக்கர கார் இருக்கக்கூடாதா.

நான் 4-சக்கர வாகனத்திற்கு எத்தனை சக்கரம் என்று கேட்டேனா.

நான் பஹ்ரைனுக்கு முதல் முறையாக வந்தபோது உன்னிடம் கார் இருக்கிறதா அல்லது நான்கு-சக்கரம் இருக்கிறதா என்று கேட்டார்கள். என்னடா முட்டாள்தனமான கேள்வியாக இருக்கிறது என்று நினைத்தேன்.

பிறகு தான் புரிந்தது. காரில் பின்னால் இருக்கும் இரண்டு சக்கரங்கள் மட்டும் சுழலுகின்றன. முன்னால் இருக்கும் சக்கரங்கள் உந்தப்படுகின்றன. ஆனால் 4-சக்கர வாகனத்தில் முன்னும் பின்னும் இரண்டும் சுழலுகின்றன. இரண்டுக்கும் இயக்கம் தனித்தனியாக உள்ளது. அதனால் பாலைவனத்தில் செல்வதற்கும், ப்ளாட்பாரத்தில் வண்டியை ஏற்றுவதற்கும் ஏதுவாக இருக்கிறது.

சிறிய ஊரில் வளர்ந்த நான் இதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அதற்கு தடையாக இருந்தது ஊர் அல்ல. கல்வி அல்ல. பள்ளி அல்ல. என்னுடைய Perception. என்னுடைய மனது கார் என்றால் 4 சக்கரம் தான் என்று மூடிக்கொண்டுவிட்டது. காருக்கு பல சக்கரங்கள் இருக்கலாம் அல்லது காரில்லா மற்ற வாகனங்களுக்கும் 4 சக்கரம் இருக்கலாம் என்று நம்ப மறுத்தது மனம்.

இது தான் நாம் பெரும்பாலோனோர் யோசிக்கும் விதம். கேட்டது, படித்தது, பார்த்து இவற்றை வைத்து முடிவுக்கு வருகிறோம்.

இது தவறான அணுகுமுறை. இதனால் நாம் சந்திக்கும் பிரச்சனைகளே அதிகம்.

மத்திய கிழக்கு நாட்டில் உள்ள தமிழர்களுடன் பேசுங்கள். மலையாளிகள் என்றாலே இப்படி. அரபுக்காரனுக்கு மூளை இல்லை இப்படியெல்லாம் தவறான முடிவுகளுக்கு வந்து பேசிக் கொள்வார்கள்.

ஆனால் அனைத்து மலையாளிகளும் பிரச்சனை செயபவர்களா. அனைத்து அரபியரும் முட்டாள்களா. அனைத்து தமிழர்களும் நல்லவர்களா. எதனால் இப்படி பொதுபடையான கருத்துக்களை ஏற்படுத்திக் கொள்கிறோம் - Generalisation. இது போன்ற பொதுப்படையான கருத்து தான் பாகிஸ்தானியர்கள் துரோகிகள், சிங்களத்தவர் இனவெறியர்கள், வட நாட்டுக் காரர் ஆரியர்கள், சீனாக்காரர்கள் கம்யூனிச வாதிகள், ஜப்பானியர்க உழைப்பாளிகள், அமெரிக்கர் கொலை வெறியர், ஈரானியர் மத வெறியர் என்று பல விஷயங்களை பொதுப்படையாக சொல்கிறோம். ஒரு நாட்டில் நல்லவர்களும் கெட்டவர்களும் உண்டு. புத்திசாலி முட்டாள் உண்டு. வெள்ளை கருப்பர் உண்டு. போர் விரும்பி அமைதி விரும்பி உண்டு என்பதை நம் மனது ஏற்க மறுக்கிறது. இதற்கு நாம் ஏற்படுத்திக் கொண்ட Perception தான் காரணம். பழைமைகளை எதிர்ப்பது புதுமைகள் என்று சில பைத்தியக்காரத்தனங்கள் செய்வதும் இதில் அடங்கும்.

இந்த Perception-க்கும் Facts-க்கும் பல சமயம் இடைவெளி மிக அதிகம்.

இப்படி adulterated history, adulterated news, adulterated information கொண்டு நாம் வரும் முடிவுகள் எத்தனை சரியானவை.

சன் டிவி திறந்தால் தமிழ் நாடு சொர்க்கமாகிவிட்டது போன்ற ஒரு ப்ரமை. இதே டிவி சென்ற ஆட்சி காலத்தில் தமிழ் நாடு சுடுகாடாகிவிட்டது என்றுவிட்டனர்.

இன்று ஜெயா டிவி பார்த்தால் தமிழ் நாட்டில் நடு ரோட்டில் கற்பழிப்பு நடப்பது போலவும், கருணாநிதி கற்பழிப்பவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுப்பது போலவும் செய்திகள். இதே போல் தான் வடநாட்டு சானல்களான ஸ்டார் ந்யூஸ், ஆஜ் தக், ஜீ ந்யூஸ் மற்றும் என்டிடிவி. இவர்கள் தாங்கள் சார்ந்த அரசியல் குழுக்களுக்கு தகுந்தவாறு செய்திகள் அமைக்கிறார்கள். மேலும் பல சமயம் செய்திகள் விடுத்து ஹேஷ்யங்களை அதிகமா சொல்கிறார்கள். இதை வைத்துக் கொண்டு எந்த முடிவுக்கு வரமுடியும்.

நடுநிலை செய்திகள் என்று ஒன்று உண்டா.

நடுநிலை வரலாறு என்று ஒன்று உண்டா.

மனிதனால் நடுநிலையான விஷயங்கள் சொல்லும் பக்குவம் உண்டா.

அப்படியிருக்க நமக்கு கிடைக்கும் தகவல்களை வைத்து நாம் வரும் முடிவுகள் பெரும்பாலானவை தப்பாக இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்.

மணல் தொட்டி சிந்தனை நமக்கு எப்படி உதவும்.

பார்க்கலாம்.....

ஆதவா
22-01-2007, 03:28 PM
அருமை அருமை......


மனிதன் எப்படியெல்லாம் நினைக்கிறான் என்பதற்கு அருமையான கட்டுரை..
ஏன் இன்னும் இங்கே யாரும் வரவில்லை என்று தெரியவில்லை.
மன்றத்தில் இதை எழுதி ஒரு நாள் ஆகியும் ஒரு பதிலும் இல்லை..... (நால்வர் வந்துள்ளனர்,,)
சில விஷயங்கள் யோசிக்க வைக்கிறது... நாம் சரியென்று ஒத்துக்கொள்ளும் விஷயத்தில் தவறு இருப்பதையும் யோசிக்க வைக்கிறது.
மணல் கட்டுரை என்னவோ சொல்கிறதே என எட்டிப் பார்த்தால். அங்கே வீடு தெரிகிறது..
அருமை மோகன்........... உங்கள் எண்ணம் உங்கள் பெயரைப்போல என்னிடம் ஒட்டிக்கொண்டது.. அதாவது ஒட்டிக்கொள்கிறேன்...
மீண்டும் உங்கள் திரியை தொடருங்கள்

leomohan
22-01-2007, 03:36 PM
உங்கள் பள்ளி திங்கள் கிழமை தொடங்குகிறது. வகுப்பின் தலைமை மாணவன் தண்ணீர் எடுத்து கரும்பலகையை துடைக்கிறான். வலது கோடியில் மொத்தம் 42 ஆஜர் 36 என்று எழுதுகிறான். இடது கைபுறம் கோடியில் தேதியை எழுதி அமர்கிறான்.

முதல் வகுப்பு ஆங்கிலம். சார் வந்து Preposition பற்றி பாடம் நடத்துகிறார். அவர் சென்றதும் தலைமை மாணவன் மீண்டும் வந்து அழிக்கிறான். தண்ணீர் போட்டு அல்ல. வெறும் டஸ்டரால். பிறகு தமிழ் ஐயா செய்யுள் நடத்துகிறார் நாலடியார். மீண்டும் அழிக்கிறான். உற்று பார்த்தால் ஆங்கில வார்த்தைகளும் தெரியும். பிறகு வரலாற்று ஆசிரியர் ஷாஜகான் என்ன செய்தான் என்று சொல்லிச் செல்ல விஞ்ஞான ஆசிரியர் மனிதனி உள்ளகம் வரைந்து பாகங்களை குறித்து விவரமாக வரைந்து பாடம் நடத்துகிறார். சதை, ஈரல், இதயம் என்று. பிறகு வரும் பூகோள ஆசிரியர் பூமத்திய ரேகை நடத்தி செல்ல, கணித ஆசரியர் வந்து அல்ஜீப்ரா நடத்தி செல்கிறார்.

கரும்பலகையை உற்று பாருங்கள் (A+B)2 Preposition பயன்படுத்தினால் ஷாஜகானின் பாகங்கள் வரைந்து பூமத்திய ரேகையில் வைத்தால் நாலடியார் புரியும்

கணினி படங்களின் layers போல இருப்பதில்லை நாம் கிரஹிப்பவை. ஒரு லேயரை-தட்டை எடுத்தால் போதும் என்று சொல்ல.

சுவற்றிற்கு வெள்ளை அடிப்பதை கண்டதுண்டா. முதல் பூச்சு. சிமெண்ட் சுவர் அங்கங்கு தெரியும். நன்றாக காயவிட்டு இரண்டாம் பூச்சு. கொஞ்சம் நல்லா இருக்கும். நன்றாக காயவிட்டு மூன்றாம் பூச்சு. சுவர் பளிச்சென்று இருக்கும். வெறும் சுண்ணாம்பால் கட்டிய சுவர் போல இருக்கும். சிமெண்டின் அடையாளமே இருக்காது. அதனால் தான் பாடப்பாட ராகம் என்றும் Practice makes perfect என்றும் கூறுகிறார்கள்.

இளமையில் கல் என்பதற்கும் இதுவே காரணம். கரும்பலகை சுத்தமாக இருக்கிறது. பச்சை களிமண் எப்படிவேண்டுமானாலும் வடிவமைக்கலாம் என்பார்கள்.

நாம் ஒரு காய்கறி சந்தையை கடப்பதற்குள் பல விஷயங்களை பார்க்கிறோம். தக்காளி, முட்டைகோஸ், பொன்னாங்கனி, கொத்துமல்லி, கறிவேப்பிலை, வெங்காயம், வெண்டைக்காய். பொன்னாங்கனி மூக்கில் ஏறுகிறது. வீட்டில் வந்து கேட்டால் முட்டைகோஸ் இருந்ததா என்பது நினைவுக்கு வருவதில்லை. ஏனென்றால் உங்கள் கரும்பலகையில் நீங்கள் கடைசியாக படித்து கணிதம். அதுவே நினைவுக்கு இருக்கிறது. ஆனால், உற்று நோக்கினால் முட்டைகோஸ் நினைவுக்கு வரும்.

நம் மூளை பல் ஆயிரம் கணினிகளின் திறனுக்கு சமமானது. சுமார் 1 லட்சம் பெயர்கள், உருவங்களுடன் நினைவுக்கு கொள்ள முடியும். நான்கு அகராதிகளை நினைவில் கொள்ள முடியும். கணினி செய்ய முடியாத நுகரும் திறன் நமக்கு உண்டு. சுமார் 10,000 விதமான பொருட்களை நுகர்ந்து கண்டு பிடித்துவிடலாம். இவையெல்லாம் புள்ளியல் அல்ல. தோராயமான எண்ணிக்கைகள். விஞ்ஞானம் இன்னும் பல்மடங்காக ஆராயந்து உள்ளது.

கண்ணால் காண்பது, காதால் கேட்பது, மூக்கால் நுகர்வது, கைகளால் உணர்வது என்று ஒரு சமயத்தில் பல Input Units உங்கள் உடலில் வேலை செய்கிறது. உங்கள் மூளை இவை அணைத்தையும் பதிவு செய்துக் கொள்கிறது.

இட்லி மல்லிகைப்பூ போல இருக்கிறது. வாயில் போட்டவுடன் வழுக்குகிறது. சாம்பாரில் உப்பு தூக்கல். தொட்டால் சுடுகிறது. சட்னி ஜில் தான். நல்ல பாட்டு விடுதியில் ஓடிக் கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆர் நடித்த படம்.

இப்படி உங்களை தாக்கிக் கொண்டிருக்கும் Volume of Information-ஐ எப்படி கையாள்கிறீர்கள். இதற்கென்று தனி முயற்சிகள் செய்கிறீர்களா.

உங்களுக்கு கிடைக்கும் தகவல் அனைத்தும் சரியா. எப்படி சரிபார்ப்பது. சாம்பார் கெட்டுவிட்டதே. அதை எப்படி சாப்பிடுவது. வாய் சொல்லிவிடும். மீறி சாப்பிட்டால் வயிறு கடமுடவென்கும். விஷவாயு கண்ணை எரிக்க செய்யும். சத்தம் காதில் விழும். அதிகமானால் காதை பொத்திக் கொள்வோம். இப்படியிருக்க தவறான தகவல்கள் வந்தால் ஏற்றுக் கொள்ள முடியாத மூளை இருக்கவில்லையே ஏன். உங்கள் நண்பர் கட்டாயம் பணம் தருகிறேன் என்று சொல்லி உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றிவிடுகிறார். அவர் சொல்வது பொய் என உங்கள் மூளை உணரவில்லை. ஆனால் அவர் மனைவி கர்ணகடூரமாக பாடினால் உங்கள் மூளை உணர்கிறது. காது பொத்திக் கொள்கிறது.

எங்கே மணல் தொட்டி.

தொடரும்.....

leomohan
22-01-2007, 03:37 PM
இளைய நிலா பொழிகிறது இதயம் வரை நனைகிறது, உங்களை பள்ளிப்பருவத்திற்கு அழைத்து செல்லும், ஏய் ஐயா சாமி நீ ஆளை காமி, யாரு அந்த ராதிகா கண்ணனோட கோபிகா உங்களை கல்லூரிக்கு அழைத்து செல்லும், கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் காதல் என்று அர்த்தம் உங்களுடைய முதல் வேலையை நினைவுபடுத்தும், அக்கறை சீமை அழகினிலே மனமாற கண்டேன உங்களை குழந்தையாக்கிவிடும். எப்படி.

உங்கள் கண்களை கட்டிவிட்டு உங்கள் வீட்டுக்கே அழைத்துச் சென்றால் அறையின் தட்பவெட்பத்தை வைத்து ஆ இது நம்ம வீடு என்று சொல்கிறீர்கள்.

கணினியில் ROM Read Only Memory என்கிறார்கள். உங்களை அடித்து துவைத்து போட்டாலும் உங்கள் பெயர், உங்கள் தந்தை தாயின் பெயர்களை மறக்க மாட்டீர்கள். RAM Random Access Memory or Switch-Off Memory கணினியை அணைத்தவுடன் தகவல் அழிந்துவிடும். சில நேரங்களுக்கு படித்த புத்தகத்தின் கதை நினைவிருக்கும். ஆனால் சரியான வார்த்தைகள் நினைவில் இருக்காது. சில நாட்களுக்கு பிறகு கதையும் மறைந்து போகும்.

நீங்கள் சர்வ வல்லமை பொருந்திய மனிதர். உங்கள் மூளை அதீதமானது. முதல் வகுப்பில் நாள் வாரியாக என்ன நடந்தது என்று கேட்டாலும் சொல்லும் சக்தி படைத்தது. ஆனால் உங்களால் சொல்ல முடிகிறதா. பாலைவனத்தில் பழைய மணல் மேடுகளை மூடும் புதிய மணல்கள் போல அனைத்தும் நீர்படுத்தப்பட்டுவிட்டன.

கணினியில் Indexing எனும் வகைப்படுத்தப்பட்ட தேடுதல் வசதி இருக்கிறது. நம்மிடம் அது தான் இல்லை. நாம் நம் மூளையில் இருப்பதை ஒழுங்குபடுத்தி சேமிப்பதில்லை. அதனால் பல விஷயங்கள் தெரிந்த மாதிரியும் இருக்கும். பல விஷயங்கள் தெரியாத மாதிரி இருக்கும்.

கந்தர் சஷ்டி கவசம் ஓடும் போது கூடவே சொல்லுவோம். ஆனால், டேப் ரிக்கார்டரை அணைத்துவிட்டால் நமக்கு வரிகள் வராது.

அது போல ஆத்திச்சூடி சொல்லத்துவங்குவோம் சில வரிசைகளை குழுப்பிவிடுவோம்.

ஏன் இப்படி. இதற்கு என்ன செய்வது.

மூளையில் தீண்டாமை ஏற்ற முடியுமா. ஒரு விஷயம் பாதிக்காமல் மற்றொரு விஷயம் அறிய முடியுமா. முன்பு கூறிய அஞ்சறை பெட்டி போன்ற மனதை உருவாக்குவது கடினமா.

இப்படி தகவல் தாக்குதல், ஒழுங்கற்ற முறையில் தகவல் சேமிப்பு, மேலும் பலவகையில் தகவல் உள்வருகை, மற்றும் சரியான தகவலா என்ற சந்தேகம் இப்படி பல சாதனைகள்-சோதனைகள் நம் மூளை சந்திக்கிறது.

மணல் தொட்டியில் சிந்திப்பது சாத்தியமா. அப்படி சிந்திக்க வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும். இதற்கு கல்வி தகுதி என்ன. மொழி எதாவது தெரிந்திருக்க வேண்டுமா. ஏதாவது பயிற்சி எடுக்க வேண்டுமா. எங்கே கற்றுத்தருகிறார்கள். புத்திசாலிகள் மட்டுமே மணல் தொட்டியில் சிந்திக்க முடியுமா. என்னால் சிந்திக்க முடியுமா.

பார்ப்போம்....

ஆதவா
22-01-2007, 03:38 PM
நண்பரே ட்ரூமேன் ஷோ மிக அருமையான படம்..... ஒரு ஜோக்'கர் இவ்வளவு அருமையாக நடித்ததே எனக்கு ஆச்சரியம்.... கடைசி காட்சிகளின் கண்களிலிருந்து கண்ணீர்.... எனக்கு படம் புரிவதற்கு இரண்டு முறையானது... ஜிம் கேரியின் அனைத்தையும் பார்த்துவிடுவேன்.. மனதில் ஒட்டிய பாத்திரங்களில் அந்த படத்தின் பாத்திரமும் ஒன்று....

leomohan
22-01-2007, 03:43 PM
ஆம் பல தத்துவங்களை எளிமையாக விளக்கிய படம். ரசித்து பார்த்தேன்.