PDA

View Full Version : போதாதெனும் மனம் - புதிய தொடர்கதை



leomohan
20-01-2007, 11:02 AM
தம்பி, தம்பி என்று செட்டியாரின் குரல் கேட்டு சட்டென்று தனது மேசையிலிருந்து விழித்தான் சிவகுமார்.

சிவகுமார். வயது 28. அநாதை என்று அவனுக்கு நினைவில்லாமல் இருப்பதற்கு முதலியார் மட்டுமே காரணம்.

அவன் தந்தை முதலியாரின் அப்பாவின் கீழ் வேலை பார்த்து வந்தார். அவன் தந்தை இறந்தபோது அவனுக்கு வயது மூன்று. அப்போது சவத்திற்கு இறுதி மரியாதை செலுத்த அவருடைய தந்தையுடன் முதலியாரும் வர, மூன்று வயது குழந்தையாக இருந்த சிவகுமார் தவழ்ந்து போய் முதலியாரை கட்டிக் கொண்டானாம். அப்போது அவருக்கு 30 வயது இருந்திருக்கும். நெகிழந்து போய் அள்ளி தூக்கிக் கொண்டு வீட்டுக் வந்துவிட்டாராம். முதலியாரின் மனைவி சொல்லித்தான் அவனுக்கு தெரியும்.

முதலியாருக்கும் அவருடைய மனைவிக்கும் பெரிய மனசு. சிறுவயதிலிருந்து இவனை வளர்த்து பெரியவனாக்கி பிகாம் வரைக்கும் படிக்க வைத்திருந்தார்கள். 7 வயது வரை அப்பா அம்மா என்று இவர்களை அழைத்து வந்தவன் விஷயம் தெரிந்ததிலிருந்து ஐயா, அம்மா தான். முதலியார் எத்தனை முறை சொல்லியும் மாற்றவில்லை அவன்.

முதலியாரின் மனைவி சிறுவயதில் இவனக்கு பூ முடித்த அலங்காரம் செய்வாராம். பெருங்களூரில் இருந்த அவர்கள் இவன் புதுகோட்டைக்கு படிக்க வருவதால் அங்கிருந்து வரும் பஸ் டிரைவரிடம் பெரிய காரியரில் உணவு கட்டிக் கொடுக்க மதியம் உண்டுவிட்டு காரியர் மீண்டும் சாயங்கால ரிட்டன் டிரிப்பில் டிரவைர் எடுத்து வருவாராம். அத்தனை கவனிப்பு.

பிறகு குடும்பத்துடன் அனைவரும் புதுக்கோட்டைக்கே வந்துவிட்டனர். முதலியார் அவருடைய தந்தையின் தொழிலை இன்னும் பெருக்கியிருந்தார். 3 வீடுகள், எண்ணைய் மண்டி, மளிகை கடை என்று.

அவருடைய வீட்டை கட்டும் போது முட்டை அடித்து கட்டினார்களாம். பெரிய வீடு. இவனக்கு இவை அனைத்திற்கும் கணக்கு கவனிக்கும் வேலை. பழைய காலத்து சிறிய மேசை. கீழே உட்கார்ந்து தான் கணக்கு. கம்மி வேலை. டிரேஸ் பேப்பர் வைத்துக் கொண்டு குமுதம் ஆனந்த விகடனில் வரும் பெரிய ஓவியர்களின் படங்களை நகலெடுத்துக் கொண்டிருப்பான்.

தம்பி, தம்பி மீண்டும் அந்த குரல். அவர் இவனை பெயர் சொல்லிக் கூப்பிட்டதே இல்லை.

ஐயா.. என்று பதட்டத்துடன் எழுந்தான்.

என்னப்பா கண் தொறந்துகிட்டே தூக்கமா.

இல்லை ஐயா. சொல்லுங்க என்றான்.

அவர் தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றார். பெரிய மரநாற்காலியில் அவர் அமர்ந்துக் கொண்டார்.

தம்பி, எனக்கு இரண்டு பொண்ணுங்க. உனக்கே தெரியும் எனக்கு பெரிய வயசாகலை தான். ஆனா எனக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா நீ தானே இந்த குடும்பத்தை பாத்துக்கனும் என்றார்.

ஐயா, ஏன் இதெல்லாம் பேசறீங்க இப்போ.

தம்பி, கீழத்தெரு ராமலிங்க ஜோசியர் வந்திருந்தார் காலையிலே. நான் இன்னிக்கு ராத்திரி தாங்க மாட்டேன்னு சொல்லிட்டாரு.

என்னய்யா இது. நல்லா இருக்கறீங்க உங்களை போய். இருங்க வரேன் என்ற சட்டென்று வெளியே வந்து செருப்பை மாட்டிக் கொண்டு ஜோசியரை பார்க்க கிளம்பினான்.

தம்பி, நில்லு என்று சொல்வதை காதில் வாங்காமல்.

20 நிமிடத்தில் திரும்பி வந்தவனின் கையில் திருவிளையாடல், திருவருட்செல்வர், கந்தன் கருணை, ஆதிபராசக்தி, சம்பூர்ண ராமாயணம் என்ற பக்தி படங்களின் வீடியோ நாடாக்கள்.

என்ன தம்பி ஏதாவது வீடியோ கடை வைக்க போறியா என்றார் மெல்லிய சிரிப்போடு.

ஐயா, ராமலிங்க ஜோசியரிடம் பேசினேன். இன்னிக்கு நீங்க தூங்க கூடாது. இன்னிக்கு ராத்திரி தூங்கமா கடத்திட்டீங்கன்னா இன்னும் 20 வருஷத்துக்கு உங்க ஆயுசு கெட்டி என்றான் நம்பிக்கையுடன்.

என்னப்பா சொல்றே.

ஆமாம் ஐயா. செஞ்சி பாப்போம்.

சரி என்று தலையாட்டினார்.

இரவு உணவு முடிந்ததும் சம்பூர்ண ராமாயணம். இன்றும் போய் நாளை வாராய் என எனை ஒரு மனிதனும்.... என்று வீணை மீட்டிக் கொண்டிருந்தான் ராவணன்.

நாற்காலியில் மெதுவாக சாய்ந்தார் முதலியார்.

ஐயா எழுந்து உட்காருங்க. நான் காபி போட்டு கொண்டு வரேன். நீங்க நிமிர்ந்து உட்கார்ந்துக்கனும்.

சரிப்பா என்றார் ஆசிரியர் சொல் பேச்சு கேட்கும் மாணவனாக.

சட்டென்று காபி கலந்து ஒரு பெரிய ஃப்ளாஸ்கில் போட்டு எடுத்து வந்தான். இதை அறியாமல் முதலியாரின் மனைவி உறக்கத்தில் இருந்தார்.

திருவருட்செல்வர். ஞான சம்பந்தர் தன்னை தூக்கி வந்தது திருநாவக்கரசர் என்றறிந்ததும் மிகவும் வருதப்படுகிறார். முதலியாரின் கண் சொக்கியது.

இன்னொரு கோப்பை எடுத்து கொடுத்தான்.

ஐயா கொஞ்சம் நடந்துட்டு வாங்க என்றான்.

அவர் எழுந்து நடந்து வந்தார். மீண்டும் அமர்ந்தார்.

திருவிளையாடல். தருமிக்காக சிவன் பாட்டெழுதி போராடுகிறார். சிவகுமாருக்கு தூக்கம் சொக்கியது.

உன் தத்துவம் தவறென்று சொல்லவும் வந்த என் தமிழுக்கு உரிமை உண்டு. சிவகுமாருக்கு தூக்கம் சொக்கியது. முதலியாருக்கும் தான்.

சிவகுமார் கண்விழித்தான்.

முதலியார் சிவனடி சேர்ந்திருந்தார்.

leomohan
20-01-2007, 11:02 AM
2

முதலியாரின் மூத்த மகள் சென்னையில் கடைசி வருடம் மருத்துவம் படித்து வந்தாள். அவளுக்கு இரவே அப்பவோட மனசு சரியில்லை என்று தந்தி அடித்திருந்ததால் அவள் அவரை பார்க்க கிளம்பிவந்திருந்தாள். வந்தவளுக்கு அவருடைய சடலம் தான் கிடைத்தது.

வாசலில் நின்றிருந்த சிவகுமாரின் கையை மாமா என்று சொல்லி அழுதவாறு பிடித்துக் கொண்டாள் கவிதா. சிறுவயதிலிருந்து வளர்ந்திருந்தாலும் இருக்கும் வயதவித்தியாசத்தால் மாமா வென்றே அழைத்தனர் இரு பெண்களும். இரண்டாவது பெண் மாலதி முதலியாரின் மனைவியின் மடியில் படுத்துக் கொண்டு அழுதவாறே இருந்தாள்.

அவனுக்கு அழுது அழுது முகம் வீங்கியிருந்தது.

வீட்டில் ஒரே கூட்டம். அவருடைய எண்ணை மண்டியில் வேலை செய்பவர்கள் மளிகை கடை நண்பர்கள் என்று அனைவரும் வந்திருந்தனர். யாருக்கும் சொல்லி விடக்கூட இல்லை. புதுகோட்டையில் செய்தி பரவுவது என்ன பெரிய கஷ்டமா.

இருக்கும் போது வருபவர்களை விட இறக்கும் போது வருபவர்களை வைத்து உன் செல்வாக்கை சொல்கிறேன் என்பார் ஒரு கவிஞர். முதலியார் சம்பாதித்தது பணத்தை மட்டும் அல்ல மக்களின் அன்பையும் மதிப்பையும்.

இரண்டு வாரம் எல்லா சடங்குகளும் முடிந்தது. கவிதா சென்னைக்கு கிளம்ப தயாரானாள்

அவள் சிவகுமாரை அழைத்து மாமா, உள்ளே வாங்க என்று தன் அறைக்கு அழைத்து சென்றாள்.

மாமா என்று அவள் சொல்லும் போது நாதழுதழுத்தது.

என்ன கவிதா.

அவள் கண்களில் நீர்.

என்ன கவிதா. கவலைப்படாதே. சாவு எல்லாருக்கும் வர்றதுதானே. அம்மாவையும் உங்க இரண்டு பேரையும் பாத்துக்கறது என்னோட கடமை. நீ எதுக்கும் கவலைப்படாதே.

இல்லை மாமா. அப்பா செத்ததுக்காக இப்ப அழலை என்று சொல்லிக் கொண்டே ஒரு கட்டு காகிதத்தை எடுத்து நீட்டினாள்.

என்னவென்று கேள்வி முகத்தில் தொற்றி நிற்க அதை வாங்கிக்கொண்டு பிரித்தான். பெரியவரின் உயில். அவர்கள் இருக்கும் பெரிய வீடு அம்மாவுக்கு, ஒரு வீடு பெரிய பெண்ணுக்கும் இன்னொரு வீடு சிறிய பெண்ணுக்கும் வடக்கு தெரு வீடு, இப்போது மளிகை கொடோவனாக பயன்பட்டு வருகிறது - இவன் பெயருக்கும் எழுதியிருந்தார்.

எண்ணை மண்டி விற்றுவிடலாம் என்றும், அதனால் வரும் பணத்தை இரு பெண்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு பெண்ணின் வங்கி கணக்கில் 25 லட்சம் பணமும் சிவகுமாரின் கணக்கில் 10 லட்சம் பணமும், முதலியாரின் அம்மாவுக்கு அவள் சாகும் வரையில் மாதம் 7500 வருமாறு வங்கி கணக்குகளை அமைத்திருந்தார்.

மேலும் மளிகை கடை சிவகுமார் நடத்தலாம் என்றும் ஆனால் குடும்பத்திலிருந்து எந்த பண உதவியும் எதிர்பார்க்க கூடாது தென்றும் கூறியிருந்தார்.

எண்ணை மண்டி விற்க வேண்டாமென்று மக்கட் நினைத்தால் சிவகுமாரே அதன் பாதுகாப்பு பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதை படித்துவிட்டு நடுங்கினான். அநாதை எனக்கு 10 லட்சம் பணம், வீடு, மற்றும் செய்ய தொழில், அதுவும் நல்ல நிலையில் இயங்கும் தொழில். அவன் கண்களில் நீர் பெருகியது.

என்ன கவிதா, என் பேர்ல அப்பா சொத்து எழுதினது உனக்கு விருப்பம் இல்லையா என்று கேட்டான்.

என்ன மாமா இப்படி கேட்டுட்டீங்க. அவரு சொத்து முழுக்க உங்க பேருக்கு எழுதியிருந்தா கூட நான் வருதப்பட்டிருக்க மாட்டேன். உங்க மேல் எங்களுக்கு நம்பிக்கை இல்லாமலா. ஆனால் நான் வருத்தப்பட காரணம் வேற.

என்ன என்றான்.

மாமா, நானும் மாலதியும் கல்யாணமாகாத பெண்கள். அம்மாவுக்கும் இப்படி ஆயிடுத்து. உங்களுக்கும் கல்யாணம் ஆகலை. நீங்கள் இன்னும் இந்த வீட்டில் இருந்தா, எங்களை தப்பா பேச ஆரம்பிச்சுடும் ஊரு. அப்புறம் எங்களுக்கும் கல்யாணம் ஆகாது என்று சொல்லி நிறுத்தினாள்.

ஒருவரின் மறைவால் அந்த வீட்டிலேயே தான் அந்நியப்படுத்துவிட்டதை உணர்ந்தான். அவள் சொன்னதில் நியாயம் இருந்தது.

நீங்க வடக்குத் தெருவில இருக்கற வீட்டுல தங்கிக்கலாமே என்றாள். உன் வீட்டில் இரு என்று சொல்லாமல் சொன்னாள்.

அப்ப எண்ணை மண்டி என்றான்.

அது நீங்க பாத்த்துக்கோங்க மாமா. நாங்க சொல்றப்ப வித்துக் கொடுத்தால் போதும் என்றாள்.

இருவரின் கண்களும் பனித்தன. அவன் உள்ளே வளர்ந்து வரும் அந்த இனிய காதலை யாரும் அறிந்திருக்கவில்லை. அவனுக்கென்று அந்த வீட்டில் ஒன்றும் இல்லை. ஒன்றை தவிர. அதை விட்டுவிட்டு துணிமணிகளையும் மற்ற சில பொருட்களையும் உயிலின் ஒரு நகலை எடுத்துக் கொண்டு அனைவரிடமிருந்தும் விடை பெற்றான்.

leomohan
20-01-2007, 11:03 AM
3

வீட்டில் யாரும் இல்லை. முதலியாரும் அம்மாவும் முதல் பெண்ணுடன் ஒரு விசேஷத்திற்கு சென்றிருந்தார்கள். இரண்டாவது பெண் மாலதிக்கு பள்ளியில் பரீட்சை இருந்ததால் விட்டுச் சென்றிருந்தார்கள்.

சுமார் 5-6 வருடங்கள் இருக்கும். சிவகுமார் வழக்கப்படி தன்னுடைய மேசையில் உட்கார்ந்து பழைய புத்தகங்களிலிருந்து அரஸின் ஓவியங்களை டிரேஸ் பேப்பர் மூலம் வரைந்துக் கொண்டிருந்தான்.

உள்ளே படித்துக் கொண்டிருந்த மாலதி சிறிது நேரத்தில் முனக துவங்கியிருந்தாள். சிறிது நேரம் கழித்து ஓ வென்று அலறினாள்.

ஓடிச் சென்ற அவன், அவள் வராதீங்க மாமா, வராதீங்க மாமா வென்று கத்தியதை பொருட்படுத்தாமல் உள்ளே நுழைந்தான். மாலதி பெண்மையின் முதல் படியை எட்டியிருந்தாள். உடலெல்லாம் ரத்தம் வழிந்தது. வலியால் துடித்தாள்.

இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. சட்டென்று அவளை தூக்கிப் போட்டுக் கொண்டு அம்பாஸிடரை எடுத்துக் கொண்டு பெரிய தெரு மருத்தவரிடம் ஓடினான். அவர் தன்னுடைய மனைவி, அவரும் ஒரு டாக்டர், அவரை அழைத்து பார்க்க சொல்லிவிட்டு, அவனை தனியாக அழைத்துச் சென்றார்.

தம்பி, நீ இவளை அழைச்சிகிட்டு வந்ததை யாரும் பார்க்கலையே என்றான்.

பார்த்திருந்தால் என்ன பெரிய தப்பா என்பது போல குழப்ப பார்வையுடன் தலையை இல்லையென்று ஆட்டினான். தம்பி, நீங்க முதலியாரோட பையன் இல்லையின்னு ஊருக்கு தெரியும். இந்த பொண்ணு பெரியவளாயிட்டா. இந்த நேரத்தில் நீங்க தூக்கிட்டு வந்ததா சொன்னா இந்த மக்கு ஊரு அநாவசியமா கற்பனை கட்டிவிட்டு அவ வாழ்கையை பாழாக்கிடும்.

நான் என் பெண்டாட்டி கிட்டே சொல்லி குழந்தையை டிராப் பண்ண சொல்றேன். நீங்க முதலியாருக்கு தகவல் சொல்லிட்டு அவங்க வீட்டு வந்த பிறகு போங்க என்றார்.

சே. என்னடா உலகம் இது என்று நினைத்தான். அவர் சொன்னதும் நியாயமாக படவே அதையே செய்தான்.

ஆனால் முதலியாரோ அவர் மனைவியோ ஒன்றுமே கேட்கவில்லை. முதல் பெண் பெரியவளானதும் சில வாரங்கள் இவன் முன்னால் எல்லாம் வராமலிருந்தவள் பிறகு எல்லாம் சகஜமாகிவிட்டது. அது போல சில வாரங்கள் அந்த பெண்ணின் மேல் கட்டுப்பாடுகள் இருக்கலாம்.

மாலதி தான் பெண்மையின் முதல் படியை அடைந்திருந்ததை உணர்ந்திருந்தாள். அவளுள் பல மாற்றங்கள். தன்னை தொட்டு தூக்கிய சிவகுமாரின் மீது அன்பு கொண்டாள், காதல் கொண்டாள். சிறுவயதில் எத்தனையோ முறை உப்பு மூட்டை தூக்கியிருக்கிறான். ஆனால் ஆணின் வளர்ச்சி பெண்ணின் வளர்ச்சி இவையிரண்டிலும் பெரிய மாற்றங்களை சந்திப்பது பெண். மன ரீதியாலும் உடல் ரீதியாலும்.

மீண்டும் வீட்டில் யாருமில்லாத போது தன் காதலை சொல்ல காதலென்று அறியாமல் வேலைக்காரனை போல வாழ்ந்து அவனுக்கு உறவின் முக்கியத்துவம் அறியத் தொடங்கியிருந்தது.

படிக்கும் போது அவள் தலையை தட்டுவதும், அவள் இவனுக்காக தனியாக உணவு போடுவதும், நேரம் கிடைக்கும் போது காதல் கடிதங்கள் தட்டுவதுமாக சென்ற காதல் 6 வருடங்களில் பிரியாக் காதலாக மாறியிருந்தது. வயது வித்தியாசம் அதிகம் இருந்தாலும் ஒரு பெண் தன்னைவிட வயது மூத்தவனின் அறிவிலும் வளர்ச்சியிலும் அதிக நாட்டம் கொள்கிறாள். ஒத்த வயது கொண்ட இளைஞர்கள் பல சமயம் முதிர்ச்சியற்ற சிறுவராய் காட்சி தருகிறார்கள். அதனால் தான் 10 வருட வித்தியாச திருமணங்கள் பல வெற்றியடைந்துள்ளன.

கணவன் தன் மனைவியை சிறுமியாக பார்த்து அவள் தவறுகளை மன்னிக்கின்றான். மனைவி கணவனை தன்னைவிட பெரியவன் என்பதால் மதிக்கிறாள்.

ஒத்த வயதுடையவர்களின் மத்தியில் ஈகோ பிரச்சனைகள் வர அதிகம் வாய்ப்பிருக்கிறது. ஆனால் இம்மாதிரி வயது வித்தியாசம் அதிகமிருக்கும் திருமணங்களில் அதை காண முடிவதில்லை.

இப்போது அவள் கல்லூரியின் முதலாண்டில் இருக்கிறாள். கல்லூரி முடியும் வரையில் வீட்டில் சொல்ல வேண்டாம் என்று சொல்லியிருந்தாள். அவனுக்கும் எப்படி சொல்லப் போகிறோம் என்ற பயம் இருந்தது. வெறும் மெழுகு காகிதங்களில் மாலதியை ஹீரோயின் கணக்காக வரைந்து அன்புடன் சிவா என்று எழுதி தள்ளிக் கொண்டிருந்தான்.

முதலியார் இறந்தபிறகு அவனுக்கு தன் காதலை சொல்ல இன்னும் பயமாக இருந்தது.

மயூ
20-01-2007, 12:28 PM
ஊர் மக்கள் சந்தேகப் பட்டதை இவன் உண்மையாக்கிவிட்டானே!

எனக்கென்னவோ இந்தக் கதை நாயனில் வெறுப்புத்தான் உண்டாகியுள்ளது. அறியாத வயசுப்பெண்ணை ஏமாற்றிவிட்டான்!

leomohan
20-01-2007, 12:44 PM
4

சிவகுமார் பொறுப்பேற்றதும் வடக்குத் தெரு வீட்டை சுத்தப்படுத்தி தனகென்று ஒரு புகலிடத்தை அமைத்துக் கொண்டான். வீடு பெரிய வீடு. அகலம் குறைவு. ஆனால் தெற்கு தெருவையும் வடக்குத் தெருவையும் இணைக்கும் பெரிய வீடு. இரண்டு வாசப்படிகள். தனிமை.

எண்ணை மண்டியிலும் மாற்றங்கள் கொண்டு வந்தான். பாலிதீன் பாக்கெட்டுகளில் நல்ல வண்ண பதிப்போடு மாலதிஸ் என்று விளம்பரப்படுத்தினான்.

ஏன் தன் பெயரை வைக்கவில்லை என்று கவிதா கேட்க, அவ சின்னப் பொண்ணு இல்லை. அதனால் அவ பெயரை போட்டேன். உன் பெயரை அடுத்த ப்ராடெக்டுக்கு போட்டுறேன் என்றான் மழுப்பலாக.

சிங்காரம் போட்டி மண்டியின் அதிபர். ஆனாலும் முதலியார் இருந்த வரை நட்போடு வந்து செல்லவார். சிவகுமாரின் தடாலடி நடவடிக்கையால் நிலை குலைந்து போனார். அவனை பார்க்க ஓடி வந்தார்.

வணக்கம் வாங்க, உட்காருங்க ஐயா என்று எழுந்து நின்றுக் கொண்டான் சிவகுமார்.

அடடே உட்காருங்க தம்பி. நீங்க தான் இப்ப முதலாளி என்றார் புன்னகையுடன்.

இல்லை ஐயா. இன்னும் நான் மண்டியை பொருத்த வரையில் வேலைக்காரன் தான் என்றான் பவ்யமாக.

தம்பி முதலியார் வீடு இப்போதைக்கு இரண்டரை கோடி போகும். உங்களுக்கு இஷ்டமிருந்தா பேசி பண்ணி கொடுங்க. நான் வாங்கிக்கறேன். உங்களுக்கு 25 லட்சம் கமிஷனா தரேன் என்றார்.

ஐயா, முதலியார் அம்மாவையும் அவங்க பொண்ணுங்களையும் கேட்டுதான் முடிவு பண்ணனும். அதுல எந்த உரிமையும் எனக்கு இல்லை.

கேட்டு சொல்லித்தம்பி. வியாபாரம் எல்லாம் பலமாக நடக்குது போலிருக்கு.

ஏதோ உங்க ஆசீர்வாதத்திலே.

தம்பி, எலெக்ஷன் வருது. உனக்கு முதலியாரோட ஆசீர்வாதம் இருக்கு. நிக்கறது தானே. வியாபாரத்துக்கு வசதியா இருக்குமே.

ஐயோ அரசியலை பத்தி எனக்கு ஒன்னும் தெரியாதுங்க.

இப்ப அரசியல்ல இருக்கறவங்கல்லாம் தெரிஞ்சா வர்றானுங்க.

ஹா ஹா என்று சிரித்து மழுப்பி அவரை வழியனுப்பினான்.

நல்ல நாளாக பார்த்து முதலியார் அம்மாவின் காலில் சென்று விழுந்தான்.

என்ன சிவா என்றார் அவர். முதலியார் போனப்பிறகு அமைதியாகி போயிருந்தார்.

அம்மா எப்படி சொல்றதுன்னு தெரியலை. கவிதா வீட்டுக்கு அடிக்கடி வர வேண்டாம்னு சொல்லிடுத்து. இருந்தாலும் உங்களை பாத்துக்கறேன்னு முதலியாருக்கு வாக்கு கொடுத்திருக்கேன் என்றான்.

அவர் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார்.

அம்மா, நான் அநாதை தான். ஏழைப்பட்டவன் தான். இன்னிக்கு ஐயா போட்ட பிச்சையில் தான் சொந்த கடை வீடு வங்கி கணக்கு எல்லாம்.

அதுக்கென்னப்பா இப்போ....

அம்மா நீங்க ஆசீர்வாதம் பண்ணீங்கன்னா மாலதியை கட்டிதாரீங்களா. சொல்லிவிட்டான்.

அவர் அதே அமைதியில் இருந்தார். அவர்களுக்குள் இருந்த நெருக்கத்தை அறிந்திருந்தார். அது ஒரே வீட்டில் பழகிய நட்பா காதலா என்பதை அறியாமல் இருந்தார். வீட்டுக்கு ஒரு ஆண்பிள்ளை துணை தேவைதானே. அவன் இவர்களை நன்கு அறிந்திருந்தான். அதில் ஏதும் தப்பு இருப்பதாக அவர் நினைக்கவில்லை.

நல்ல விஷயம் சிவா. ஆனா அவரு இல்லாததுனால நான் கவிதா மாலதி இரண்டு பேர்கிட்டேயும் கலந்து ஒரு வார்த்தை பேசிட்டு சொல்றேன்.

வணங்கி விடை பெற்று சென்றான்.

விஷயத்தை கேட்ட கவிதாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. சிவகுமாரை மனதால் விரும்பி வந்தாள். சமயம் வரும்போது சொல்லலாம் என்றிருந்தாள். சென்னைக்கு அவள் சென்றுவிட்டதால் மாலதிக்கும் சிவகுமாருக்கும் ஏற்பட்ட நெருக்கத்தை அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

பெண்கள் தான் முதலில் சந்திக்கும் காதலிப்பது சகஜம். அதனால் தான் அந்த காலத்தில் முடிந்த அளவிற்கு திருமணமாகாத ஆண் பெண்கள் சந்திப்பதை பெரியோர்கள் தடுத்து வந்தனர். மாறிவரும் யுகத்தில் பாட்டு, ஹிந்தி, தட்டச்சு, கணினி என்று பெண்கள் வீட்டை விட்டு செல்ல அதிக வாய்ப்புகள். பெண்கள் காதலில் முன்பை விட வேகமாகவே விழுகிறார்கள்.

மாநகரங்களில் யாரை காதலிக்க வேண்டும் என்று பக்குவம் வந்திருந்தாலும் அந்த பக்குவம் புதுகோட்டையை அடைய இன்னும் சில காலங்கள் ஆகலாம்.

நன்கு அறிந்த ஆண்மகன். பார்க்க நன்றாக இருப்பவன். நேர்மையானவன். அடிக்கடி பார்க்க வாய்ப்புகள் கிடைக்கும். இது போதாதா பெண்கள் ஆணகளிடம் மனதை பரிகொடுக்க. அப்படியே பரி கொடுத்திருந்தாள் கவிதா.

மாலதி தட்டிக் கொண்டுவிட்டாளே என்று மனம் அல்லோல்கல்லோல் பட்டது அவளுக்கு.

அம்மா, நீங்க இஷ்டபடி செய்யுங்க என்றாள் அரைமனதுடன்.

leomohan
20-01-2007, 12:44 PM
5

மாலதியின் படிப்பின் இறுதியாண்டில் இவர்கள் திருமணம் விமர்சையாக நடந்தேறியது. திருமணத்திற்கு வந்திருந்த கவிதா முதல் கேள்வியா ஏன் நான் கண்ணுக்கு படலையா மாமா என்றாள் தடாலடியாக.

கேள்வியில் தடுமாறிப்போன சிவகுமாரை பார்த்து சிரித்து மழுப்பி விட்டாள். நான் தானே பெரிய பொண்ணு. எனக்கு இல்லை முதல் கல்யாணம் பண்ணி வைக்கனும் என்றாள் பிறகு.

முதலியாரின் மனைவி புதுமணத்தம்பதிகளை தம்மோடு தங்கச் சொல்லியும் அவன் கேட்காமல் தன் மனைவியை வடக்குத் தெரு வீட்டுக்கே அழைத்துச் சென்றான்.

கவிதாவும் புதுக்கோட்டையிலேயே ஒரு மருத்துவமனையில் உதவி மருத்துவராக பயிற்சி பெற வந்துவிட்டாள்.

விரைவில் கவிதாவுக்கு நல்ல இடமாக பார்த்து திருமணம் செய்து கொடுத்துவிட்டால் தான் முதலியாருக்கு கொடுத்த வாக்கையும் காப்பாற்றிவிடலாம். பிறகு பெரிய வீட்டுக்கும் போய்விடலாம் என்று நினைத்திருந்தான்.

வியாபாரியான பிறகு பெரிய மனிதர்களின் தொடர்பு வந்திருந்தது அவனுக்கு. அரசியலில் இறங்கலாம் என்று யோசித்தான். பெரிய வீட்டில் இருந்தால் கௌரவமாக இருக்கும் அல்லவா.

மாலதியை கைமேல் வைத்து தாங்கினான் சிவகுமார். மாலதியோ பெரிய வீட்டு கௌரவம் பந்தா இல்லாமல் எளிமையாக இருந்தாள். வேலைகாரர் வேண்டாம் என்று சொல்லி சமைப்பதிலும் வீட்டை பார்த்துக் கொள்வதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினாள்.

படிப்பில் சுட்டியாக இருக்கும் அனைவரும் வேலை செய்வது இல்லை. இன்னும் பல பெண்கள் வீட்டில் இருந்து கணவனை கவனித்துக் கொள்ளவே விரும்புகின்றனர். பிள்ளைகள் பெற்று அவர்களை பராமறிப்பதிலும் பெரு மகிழ்ச்சி கொள்கின்றனர். இது பெண்மைக்கே உரிய சிறப்பு. தாய்மையின் மகிமை. ஆனால் இவர்கள் வேலை செய்ய போவதும் இல்லை எனும் பட்சத்தில் படித்து ஏன் ஒரு ஆண் மகனுக்கு கிடைக்கும் சீட்டுக்கும் வேட்டு வைக்கிறார்கள் என்பது தான் தெரியவில்லை. அது போல திருமணத்திற்கு முன் வேலை செய்யும் பெண்கள் திருமணத்திற்கு பிறகு வேலை விட்டுவிடுகிறார்கள். இவர்கள் எத்தனை ஆண்மகன்கள், குடும்பத்திற்கு ஒரே வருமானம் கொண்டவர்களை தோற்கடித்து இந்த வேலைக்கு வந்திருப்பார்கள். இதை ஏன் செய்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

ஒரு வேளை வேலை செய்பவள் என்றால் வரதட்சணை குறையும் என்று செய்கிறார்களோ என்னவோ.

அது போலத்தான் மாலதியும். நன்றாக படித்தவள் இப்போது வீட்டின் தலைவி.

ஆனால் புத்திசாலி படித்த மனைவி பல சமயம் நல்ல ஆலோசகராகவும் மாறுகிறார்கள். அரசியல் வேண்டாம் மாமா, நிம்மதி போயிடும், பணம் வரும் போகும், ஆனா, அதுக்கு பல தகிடுதத்தம் பண்ண வேண்டியிருக்கும், பயத்தோட தான் நடந்து போகனும், யாரு ஆசிட் ஊத்துவாங்கன்னிட்டு என்று பக்குவமாக சொன்னாள்.

மாலதி, நான் நல்ல அரசியல்வாதியாக ஆக விரும்பறேன். நம்ம ஊர்ல உங்க அப்பாவுக்கு நல்ல மதிப்பு. அவரோட மாப்பிள்ளையாயிட்டனே இப்ப என்றான்.

அவளுக்கு பெரிய விருப்பம் ஒன்றும் இல்லை.

ஒரு நாள் அவன் மேசையில் ஏதோ நோன்டிக் கொண்டிருக்க அவனுக்கு கிடைத்த கடிதம் இந்த அருமையான வாழ்கையில் ஒரு அடி வைத்தது. குழந்தை பிறக்கப்போகும் சந்தோஷத்தில் இருந்த அவன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

மனோஜ்
20-01-2007, 02:03 PM
சீக்கிரம் மீதிய பதியுங்க மோகன்
கதை மிக சுவையாக உள்ளது
பாதி சாப்பாடு ஓகே
மீதி....

leomohan
20-01-2007, 02:17 PM
6

கவிதாவின் தனியறையில் அழுது தீர்த்திருந்தான் சிவகுமார்.

கவிதா மெதுவாக அவன் கைகளை பிடித்தாள், மாமா, என்னை கல்யாணம் பண்ணிகிட்டு இருந்தா இந்த பிரச்சனை வந்திருக்காதுல்ல.

என்ன சொல்ற கவிதா. நீ டாக்டர் படிச்சிருக்கே. நான் வெறும் பிகாம்.

மாமா படிப்புக்கும் காதலிக்கிறதுக்கும் சம்பந்தம் இருக்கா.

என்ன சொல்றே நீ கவிதா.

ஆமாம் மாமா.

நான் ரொம்ப வருஷமா மாலதியை தான் மனசுல நினைச்சிருக்கேன் கவிதா. என்னை மன்னிச்சுடு.

பரவாயில்லை மாமா. என்னைவிட என் தங்கை அதிர்ஷ்டக்காரின்னு நினைச்சிக்கறேன்.

உனக்கு என்னைவிட நல்ல மாப்பிள்ளையா கிடைப்பான் கவலைப்படாதே. நானே தேடறேன்.

அந்த சிரமமம் உங்களுக்கு வேண்டாம் மாமா.

இப்ப இந்த பிரச்சனைக்கு என்ன பண்றது.

கையில் இருந்த கடிதத்தை மீண்டும் படித்தாள் ஒரு முறை.

சின்ன வயசுலேர்ந்து என்னை காதலித்துவிட்டு நீ உன் மாமாவை கட்டிகிட்டே. இப்ப குழந்தை வேற. வெட்கமா இல்லை உனக்கு.

மாமா, இது என்னவோ அவ ஸ்கூல் அல்லது காலேஜ்ல அவளோட படிச்சவங்க யாராவது எழுதியிருக்கனும். இது உங்களுக்கு எப்படி கிடைச்சுது.

நம்ம வீட்டு ஜன்னல் திண்ணை பக்கமா இருக்குல. ஜன்னலுக்கு இந்த பக்கம் மேசை. அது மேல விழுந்திருந்தது. யாரோ திண்ணை பக்கமா வந்து போட்டு போயிருக்கனும் என்றான் சிவகுமார், இன்னும் கண்கள் சிவந்திருந்தது.

நான் வேணா அவ கிட்டே நேரடியா பேசட்டுமா.

வேணாம் கவிதா. அவளுக்கு குழந்தை பிறக்கப்போகுது. இந்த நேரத்தில எதுவும் பிரச்சனை வேண்டாம். இந்த கடுதாசில உண்மை இருக்காதுன்னு நினைக்கிறேன். அவன் வேணா மாலதியை லவ் பண்ணியிருந்திருக்கலாம். ஆனால் மாலதி என்னை கல்யாணம் கட்டிக்க யாரும் வற்புறுத்தலையே.

மாமா அப்படி நிஜமாகவே அவ இந்த பையனை லவ் பண்ணியிருந்தா அவளுக்கு இருக்கு ஒரு நாளு. உங்கள் வாழ்கையும் கெடுத்து காத்திருந்த எனக்கும் கிடைக்காம அவ இன்னொரு பையனோட வாழ்கையோடும் விளையாடியிருக்கா என்றாள் காட்டமாக.

அவளை அமைதிபடுத்திவிட்டு யோசனையுடன் வீட்டுக்குத் திரும்பினான். மாலதி வீட்டில் சிரித்த முகத்துடன் வரவேற்றாள். மாமா, டாக்டர்கிட்டே போகனும்னு சொன்னீங்களே என்றாள்.

வாம்மா, போகலாம் என்று புதிதாக வாங்கிய மாருதி ஆல்டோவை எடுத்தான்.

கவிதா அங்கு இந்த பிரச்சனையை எப்படி கையாள்வது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

leomohan
20-01-2007, 02:17 PM
7

ஆண் குழந்தை பிறந்தது. ஒரே திருவிழா கோலம் தான் சிவகுமார் வீட்டில். ஊரின் பெரிய மனிதர்கள் வந்தார்கள். அப்படியே இந்த நல்ல நேரத்தில் அந்த மூன்றெழுத்து கட்சியில் சிவகுமார் இணைந்ததாக அந்த மாவட்ட தலைவர் அறிவித்தார்.

சென்ற முறை கவிதாவை சந்தித்து வந்த பிறகு மேலும் இரண்டு கடிதங்கள். வழக்கம் போல கவிதாவிடம் காட்டி விட்டு யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுவிட்டு வந்தான்.

மாலதியையும் கண்காணித்து வந்தான். ஆனால் அவளோ சகஜமாக இருந்தாள். வீட்டின் மேலும் ஒரு கண் வைத்திருந்தான். ஆனால் அந்த மர்ம நபர் மாட்டவில்லை.

மளிகை கடைக்கு சென்று சரக்குகள் வந்தனவா என்று பார்த்துவிட்டு பிறகு நேராக மண்டிக்கு சென்று அன்றைய வரும்படியை எடுத்துக் கொண்டு கல்லா சாத்திவிட்டு வீட்டுக்கு வந்தான்.

மாலதி தன் அறையில் இருக்க யோசனையுடன் ஜன்னலுக்கு அருகில் இருந்த அந்த மேஜையை பார்த்தான். அதில் ஒரு கடிதமும் இருந்தது.

ஹா குழந்தையும் பிறந்தாச்சா. இன்னும் 24 மணி நேரத்திலே நீ என்னோட ஓடி வர்றே. இல்லேன்னா இந்த சங்கரன் யாருன்னு உனக்கு காட்ட வேண்டியதாகிடும்

இதை பார்த்தவுடன் கவிதாவுக்கு போன் போட்டான் சிவகுமார். கவிதா, இன்னிக்கு உன்னுடைய வண்டி சரியாயில்லை. அதனால் நான் உன்னை ஆஸ்பத்திரியிலேர்ந்து வீட்டு அழைச்சிகிட்டு போய் விடறேன்.

என்ன மாமா சொல்றீங்க. வண்டி சரியாதானே இருக்கு.

புரிஞ்சுக்கோ கவிதா என்றான்.

ஓ. சரி சரி என்றாள் அவள்.

மாலதியிடம் சென்று மாலதி, கவிதாவோட வண்டி சரியில்லையாம். நான் போய் அவளை வீட்ல விட்டுட்டு வந்திடறேன்.

சாப்பிட்டு போங்க மாமா என்றாள்.

வந்து சாப்பிட்டுக்கறேன் என்று சொல்லிக் கொண்டே அந்த கடிதத்தை பத்திரப்படுத்திக் கொண்டு வண்டியை எடுத்தான்.

யாரிந்த சங்கரன்.

leomohan
20-01-2007, 02:18 PM
8

சங்கரன் அப்படிங்கற பேர்ல யாராவது கூட படிச்சாங்களா மாலதி கூட என்று தன்னுடைய துப்பறிவும் அறிவை தட்டிவிட்டாள் கவிதா.

தெரியலை கவிதா. எனக்கு மாலதி என்னைவிட்டு போயிடுவாளோன்னு பயமா இருக்கு.

என்ன சொல்றீங்க.

அதாவது சங்கரனோட அழுத்தத்தாலே அவனோட போயிடுவாளோன்னு தோனுது.

என்னையும் நீங்க பேச விடமாட்டேங்கறீங்க அவ கூட. இப்பத்தான் அவளுக்கு குழந்தை பிறந்தாச்சே. நான் பேசறேன்.

சரி நாளைக்கு வா. பக்குவமா பேசு.

சரி என்றவளை பெரிய வீட்டு வாசலில் இறக்கிவிட்டு வீட்டுக்கு வந்தான்.

கதவு திறந்திருந்தது. ஹாலில் ரத்த வெள்ளத்தில் மாலதி. நெஞ்சுக்கு மேல் பல முறை கத்தியால் குத்துக்கள். அருகில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது குழந்தை.

இடிந்து போனான். தடாலென்று கீழே விழுந்தான். ஓடிப்போய் கவிதாவுக்கு போன் போட்டான்.

கவிதா, கவிதா, என்று நிறுத்தமுடியாமல் அழுதான். மாலதி, மாலதி நம்மை விட்டு போயிட்டாம்மா என்ற அலறினான்.

அதிர்ந்து போன அவள், அம்மாவை அழைத்துக் கொண்டு கை ரிக்ஷா பிடித்து அவசரமாக வடக்கு தெரு வந்து சேர்ந்தாள்.

புதுகோட்டையே அல்லோல் பட்டது. போன் கால்கள் பறந்தன. சிங்காரம் முதலில் ஆஜரானார். அவர் வந்து இறங்கியதும் இன்ஸ்பெக்டர் ராகவனை தனியாக அழைத்துச் சென்று சார், இது பெரியவீட்டு விவகாரம், அதனால ஜாஸ்தி பிரபலபடுத்தாம கையாளுங்க. இது என் கோரிக்கை என்றார்.

ராகவனும் சரிங்க. கவலைப்படாதீங்க என்றார்.

ராகவனை தனியே அழைத்த கவிதா, சார், இந்த கடுதாசிகளை பாருங்க. இன்னிக்கு வந்த இதையும் சேர்த்து மொத்தம் 5 வந்திருக்கு. இதில் தான் அவன் பெயரை எழுதியிருக்கான். இதெல்லாம் மாலதி கண்ணுக்கு பட்டுதா இல்லை படறதுக்கு முன்னாடியே மாமா எடுத்துட்டாரான்னு தெரியலை.

மாமா மாலதி மேல உயிரே வெச்சிருக்காரு. பல வருஷமா காதல் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. அதனால அவ முழுகாம இருக்கறப்ப இதை பத்தி பேச வேண்டாம்னு சொல்லிட்டாரு. இப்பத்தான் குழந்தை பிறந்தாச்சேன்னு நான் நாளைக்கு பேசறதா சொல்லியிருந்தேன். அதுக்குள்ளே இப்படி ஆயிடுச்சு என்றாள்.

முதலியார் அம்மாவால் கண்ணீர் அடக்கமுடியவில்லை. அழுது களைத்திருந்தார்.

காவல்துறை தன்னுடைய கடமையை செய்தது. புகைப்படங்கள், தடங்கள் தேடுவது, அங்கிருந்தவர்களை கேள்வி கேட்பது என்றெல்லாம் செய்துவிட்டு சவத்தை பரிசோதனைக்கு அனுப்பினார் ராகவன். இப்போதைக்கு யார் மீதும் சந்தேகம் இல்லையென்றும், ஆனால் சிவகுமார் வீட்டில் யாரும் ஒரு வாரம் எங்கும் போகவேண்டாம் என்றும் கூறினார்.

குழந்தை எழுந்த அந்த அமைதியை உலுக்கியது. ஓடிச் சென்று அள்ளி எடுத்துக் கொண்டாள் கவிதா. ராகவனை பார்த்து நான் பாத்துக்கறேன் சார் குழந்தையை என்றாள்.

நல்லது என்று சொல்லிவிட்டு கவிதா, குழந்தை, முதலியார் அம்மா அனைவரையும் பெரிய வீட்டில் இறக்கிவிட்டு சென்றார் ராகவன்.

மீண்டும் அந்த வடக்குத் தெருவீடு அமைதியாக இருந்தது. மணி அதிகாலை 3. அப்படியே ஒரு ஓரத்தில் தூணில் சாய்ந்தான் சிவகுமார்.

மனோஜ்
20-01-2007, 02:34 PM
கதையில் திடீர் மாற்றம் சூப்பர்..

leomohan
20-01-2007, 06:12 PM
9

ராகவன் மாலதியுடன் படித்த சங்கரனின் விவரங்கள் கண்டறிந்திருந்தார். அவன் முதலாண்டு கல்லூரியில் படிப்பை விட்டுவிட்டவன். இப்போது ராவுத்தரின் அரிசி மில்லில் வேலை பார்க்கிறான்.

பிரேத பரிசோதனை ஒன்றும் புதிய விஷயம் சொல்லவில்லை. கத்தி கிடைக்கவில்லை. பலமுறை குத்தி கொல்லப்பட்டிருக்கிறாள். கைகலப்பு இல்லை. ஆக தெரிந்தவரே கொலை செய்திருக்கவேண்டும்.

கதவு உடைக்கப்படவில்லை. திறக்கப்பட்டுள்ளது. கைரேகை நிபுணர்கள் கையை விரித்துவிட்டனர்.

ராகவன் குயவன் வேஷத்திற்கு மாறினார். மில்லுக்கு வெளியில் வெகுநேரம் காத்து நின்றார். சங்கரனும் வந்தான். தம்பி, பட்டினத்திலே பொண்ணு படிக்கிறா, ஒரு கடுதாசு எழுதி கொடு என்றார்.

அவனும் வெளியில் இருந்த அரிசி மூட்டைகளில் மேல் அமர்ந்து சிரத்தையாய் அவர் சொன்னதை எழுதி கொடுத்தான்.

நல்லது தம்பி என்று சொல்லி விடைப் பெற்றவர் கையெழுத்து நிபுணரின் அறைக்குள் நுழைந்தார். சினிமாவில் வருவது போல யாரும் அவரை உள்ளே விடவில்லை முதலில். பிறகு குயவனிலிருந்து இன்ஸ்பெக்டராக மாறவேண்டியிருந்தது.

15 நிமிடத்திலேயே ரவிசங்கர், கையெழுத்து நிபுணர், இந்த கடிதங்களுக்கு சங்கரனின் கையெழுத்திற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிவிட்டார். இருந்தாலும் இன்னும் நன்கு ஆராய்ந்து ரிபோர்ட் தருவதாக கூறினார்.

பிறகு ராகவன் நன்றி கூறி தன் அறைக்கு திரும்பினார்.

ஏட்டு சீதாராம் அவர் அறைக்குள் நுழைந்தார். உட்காருங்க சீதாராம் என்றார். மிகவும் அனுபவமிக்கவர். புதுகோட்டையில் பெரியதாக காவல துறைக்கு வேலையில்லாவிட்டாலும் அவர் ஊரைப்பற்றி சொந்த வலதுகை போல அறிந்திருந்தவர்.

சீதாராம்

1. சிவகுமார் - அவன் பேர்ல 10 லட்சம், ஒரு வீடு இருக்கு. பொண்டாட்டி பேர்ல இருந்த வீடும் அவனது தான். மளிகை கடை அவன் பேர்ல. எண்ணை மண்டி இப்போதைக்கு விக்க வேண்டாம்னு கவிதாவும் முதலியார் அம்மாவும் சொல்லியிருக்காங்க. இந்த பொண்ணை பல வருஷமா காதலிச்சு கல்யாணம் பண்ணியிருக்கான். கொலை நடந்தப்ப அவன் வீட்டுல இருந்திருக்க வாய்ப்பில்லை. அவன் உள்ளே நுழையற சில நிமிஷங்களுக்கு முன்னாலே கொலை நடந்திருக்கு. இருந்தாலும் அவனை சந்தேக பட்டியலின் முதல் பெயர்ல வைக்கலாம்.

2. கவிதா - அவளுக்கு கல்யாணம் ஆகாம தங்கச்சிக்கு கல்யாணம் ஆன வெறுப்பிருந்திருக்கலாம். இல்லை அவளும் சிவகுமாரை காதலிச்சிருக்கலாம். ஆனா படிச்ச பொண்ணு. டாக்டர் வேற. கொலை பண்ண வாய்ப்பு இல்லை. இருந்தாலும் அவளை பட்டியலில் இரண்டாவதா போட்டிருக்கேன்.

3. சிங்காரம் - தொழில் முறையா சிவகுமார் மேல பகையிருந்திருக்கலாம். சிவகுமாரை மாட்டிவிட இப்படி செஞ்சிருக்கலாம். கொலை நடந்த உடனே அவரும் அங்கே வந்ததால என்கிட்ட ரகசியமா ஆராய சொன்னதால சந்தேகம் இருக்கு. அவரு பட்டியலில் மூன்றாவது.

4. சங்கரன் - ஒரு தடவை பள்ளிக்கூடத்தில் மாலதிக்கு ஐ லவ் யூ சொல்லியிருக்கான். அவ முடியாதுன்னு சொல்லிட்டா. அதுக்கப்புறம் அந்த காதல் எத்தனை தீவிரமா இருந்ததுன்னு சொல்ல முடியலை. காலேஜ் விட்டுட்டு வேலை செய்யறான். இவன் அவளை கடந்த சில வருடங்களில் சந்திச்சானா அப்படிங்கறதுக்கு நமக்கு ஆதாரம் வேண்டும். அவன் கையெழுத்தும் 5 துண்டு கடுதாசிங்களோட கையெழுத்தும் ஒத்து போகலை.

இது பணத்துக்காக செஞ்ச கொலை மாதிரி தெரியலை. ஏன்னா அவ நகையோ வீட்டில் ஒரு பொருளோ கூட காணாமல் போகலை.

எங்கேர்ந்து ஆரம்பிக்கலாம். சொல்லுங்க என்றார்.

சீதாராம் தீவிரமாக யோசித்து பார்த்துவிட்டு. சார், நாம மொதல்ல இந்த கேஸை க்ளோஸ் பண்ணிடுவோம் என்றார்.

என்ன சொல்றீங்க சீதாராம்.

சார், சிங்காரம், சிவகுமார், கவிதா, முதலியார் அம்மா இவங்களை அடுத்த வாரம் கூப்பிட்டு உடனடியாக எதுவும் தெரியலை. இது தவறுதல வேற யாரையோ கொலை பண்ண போய் மாலதி கொன்னதாக இருக்க வாய்ப்பு இருக்கு. அதனால் ஒரு பெரிய துப்பும் கிடைக்கலை. முடிந்த அளவு முயற்சி பண்றோம்னு விட்டேத்தியா சொல்லிட்டு வந்திடுங்க.

அப்புறம்..............

அப்புறம் என் கிட்டே ஒரு யோசனை இருக்கு என்றார் அனுபவம்.

தலைவணங்கியது துடிப்பு.

leomohan
20-01-2007, 06:32 PM
10

அடுத்த ஒரிரு மாதங்கள் காவல் வெறும் பார்வையாளராகவே இருக்க உலகில் மாற்றங்கள் வேகமாக நிகழ்ந்தன.

குழந்தையை பார்த்துக் கொள்ள இரண்டாவது கல்யாணம் செய்துக் கொள்ளட்டுமா என்று முதலியார் அம்மாவிடம் அனுமதி கேட்க, அங்கே நின்றிருந்த கவிதா, தன் வாழ்கையை குழந்தைக்காக அர்பணிக்க முன் வந்தாள். முதலியார் அம்மாவும் சிவகுமாரிடம் கவிதா பாதுகாப்பாக இருப்பாள் என்று இசைந்தாள். அக்காவை கட்டிகிட்டு குழந்தை விட்டுபோய் அவ செத்தா தங்கச்சியை கட்டிப்பாங்க. இதென்னடா அதிசயம், தங்கச்சி வாக்கப்பட்ட வீட்ல அக்கா போறாளே என்று வழக்கமாக வம்பு பேசி, சாப்பிட்டுவிட்டு மொய் எழுதிப் போனது கூட்டம்.

கவிதாவுக்கு தங்கையின் இறப்பு சிவகுமாரை அடைந்த மகிழ்ச்சி சரி கட்டியிருந்தது. ஏற்கனவே அறிந்தவளாக இருந்ததால் வகுமாருக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை. கவிதா மாலதியின் குழந்தையையும் தன் குழந்தை போலவே பார்த்துக் கொண்டாள். மீண்டும் குடும்பத்தில் மகிழ்ச்சி.

அரசியலில் உயர அந்தஸ்து தேவை என்று சிவகுமார் கவிதாவிடம் தூபம் போட, பெரிய வீட்டுக்கு மாறினார்கள்.

எண்ணையின் பாக்கெட்டுகளில் இப்போது கவிதாஸ் என்று காணலாம்.

சிவகுமாருக்கு இடைதேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட அறிவித்திருந்தார்கள். சிங்காரம் பெரிய வீட்டை விற்றுத்தந்தால் கிடைக்கும் கமிஷனை 50 லட்சமாக உயர்த்தியிருந்தார். அவனுக்கோ தலை சுற்றியது.

இதை பற்றி கவிதாவிடமும் முதலியார் அம்மாவிடமும் ஒரிருமுறை பேசப்போய் பலன் இல்லாமல் இருந்தது.

நேரிடியாகவே ஒரு முறை சிங்காரம் முதலியார் அம்மாவிடம் பேச, நான் உசிரோட இருக்கற வரைக்கும் அவரு வாழ்ந்த இடத்திலேயே இருந்துட்டு போறேன் என்றுவிட்டார். நீ எப்ப போறது நா எப்ப வாறது என்று நினைத்துக் கொண்டே வெளியேறினார் சிங்காரம்.

சங்கரன் ஒரு பூச்சிங்க என்றார் சீதாராம்.

எனக்கும் அப்படித்தான் தோனுது.

அப்ப மொத்தம் மூன்று பேர். நாலாவதா முகம் தெரியாத ஆள் அப்படின்னு வெச்சிக்கலாமா என்றார் ராகவன். சிவகுமார் ஒரு தடவை கூட நம்ம கிட்டே வந்து கேஸை பத்தி விசாரிக்காதது இன்னும் சந்தேகத்தை கூட்டுது.

ஆமாங். ஆனா ஒரு வேளை தேர்தல் வேலையில் மறந்திருக்கலாம். அப்ப நான் சொன்ன யோசனை........

அதுவும் செய்திடலாம். நேரம் பார்த்துகிட்டு இருக்கேன் என்றார் ராகவன்.

அவர் எதிர்பார்த்த நேரமும் வந்தது. சிவகுமார் குடும்பத்துடன் ஒரு நாள் திருந்செந்தூர் செல்ல முடிவு செய்திருந்தனர். தேர்தலில் மனு சமர்ப்பிக்கும் முன் ஒரு தடவை போய் வரலாம் என்று.

கட்சியின் தலைமை என் பெண்டாட்டியை கொன்னதே எதிர்கட்சிதான் அப்படின்னு வாய் கூசாம சொல்ல, ஓட்டு உனக்கு தான் என்று பழைய டெக்னிக்குகளை சொல்லி கொடுத்திருந்தது.

கையில் துண்டை எடுத்து எனக்கு மடிப்பிச்சை கொடுங்கன்னு கேட்கனும் என்றார் மூத்த தலைவர். அமைதிபடை பார்த்தேல்ல. அது மாதிரி தான் என்று அறிவுரை வேறு.

சீதாராம் சிவகுமாரின் வடக்குத் தெரு வீட்டில் நுழைந்தார். ராகவன் பெரிய வீட்டில் நுழைந்தார். சுமார் 2 மணி நேரம், சேகரித்த தஸ்தாவேஜ்களுடன் மேல் கரைக்கு வந்தனர். அங்கே ராகவனின் அக்கா பையன் நடத்தி வந்த இணைய மையம் இருந்தது. அவன் தயாராக காத்திருந்தான்.

5 உதவியாளர்களுடன் அனைத்து காகிதங்களும் ஸ்கான் செய்து கணினியில் ஏற்றப்பட்டது. சுமார் 3 மணி இரவில் தஸ்தாவேஜூகள் இருந்த இடத்திற்கு மீண்டும் சென்றன.

காலையில் 5 மணிக்கு சீதாராமும் ராகவனும் வீட்டுக் சென்றனர்.

சிவகுமாரின் குடும்பம் தரிசனம் முடித்து அன்று மாலை வீடு திரும்பியது.

அடுத்த நாள் தேர்தல் மனு.

மனோஜ்
20-01-2007, 06:46 PM
சிவகுமாருதான் என்று நினைக்கிறோன்
இல்லன கவிதா
பாப்போம் யாருனு...

இளசு
20-01-2007, 08:37 PM
மோகன்

கதையின் நடை உங்களின் சொந்த பாணியாய் இருந்தாலும்
ஏதோ 60-70களில் எழுதப்பட்ட நடைபோல் தோணுகிறது.

கதையின் வேக ஓட்டம் அதை ஈடு செய்கிறது.
குழப்பமில்லாமல் கதை சொல்கிறீர்கள்.

இதுபோன்ற துப்பறியும் கதைகளில்.. யார்..யார்... என
வாசகர்களின் எதிர்பார்ப்பு எகிறுவது சகஜமே..
நானும் ஆவலாய்..

பெண்கள் படிப்பது, அலுவல் பயில்வது
கல்யாணமானவுடன் வீணாய்ப்போவது
பெரும்பாலும் கணவர்களின் கட்டாயத்தினாலேயே..
மீதி - தாய்மை, குழந்தை என்ற இயற்கைக் கட்டளைகளாலே..

இருந்தாலும் எதிர்காலப் புயல்களைச் சமாளிக்க
அவர்கள் இந்த நிலையை எட்டி வைத்திருப்பது அவசியம்..

படிப்பு, அதற்கேற்ற பணி, சொந்தக்காலில் நிற்பதற்கான ஆயத்தம் - இவற்றில்
மனைவி என்றால் ஒரு மாதிரி
மகள் என்றால் வேறுமாதிரி
யோசிக்கும் நெஞ்சம் - நம் ஆண் நெஞ்சம்..

leomohan
21-01-2007, 05:11 AM
மோகன்

கதையின் நடை உங்களின் சொந்த பாணியாய் இருந்தாலும்
ஏதோ 60-70களில் எழுதப்பட்ட நடைபோல் தோணுகிறது.

கதையின் வேக ஓட்டம் அதை ஈடு செய்கிறது.
குழப்பமில்லாமல் கதை சொல்கிறீர்கள்.

இதுபோன்ற துப்பறியும் கதைகளில்.. யார்..யார்... என
வாசகர்களின் எதிர்பார்ப்பு எகிறுவது சகஜமே..
நானும் ஆவலாய்..

பெண்கள் படிப்பது, அலுவல் பயில்வது
கல்யாணமானவுடன் வீணாய்ப்போவது
பெரும்பாலும் கணவர்களின் கட்டாயத்தினாலேயே..
மீதி - தாய்மை, குழந்தை என்ற இயற்கைக் கட்டளைகளாலே..

இருந்தாலும் எதிர்காலப் புயல்களைச் சமாளிக்க
அவர்கள் இந்த நிலையை எட்டி வைத்திருப்பது அவசியம்..

படிப்பு, அதற்கேற்ற பணி, சொந்தக்காலில் நிற்பதற்கான ஆயத்தம் - இவற்றில்
மனைவி என்றால் ஒரு மாதிரி
மகள் என்றால் வேறுமாதிரி
யோசிக்கும் நெஞ்சம் - நம் ஆண் நெஞ்சம்..

மிகவும் சரியாக சொன்னீர்கள். தனிப்பட்ட முறையில் பெண்கள் படிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் அவர்கள் ஒரிரு வருடங்கள் வேலை செய்துவிட்டு வங்கி போன்ற இடங்களில் வேலை விடும் போது வலிக்கிறது. இதனால் ஒரு குடும்பதலைவனான ஆண் மகனின் வேலை வாய்ப்பும் போகிறது. அவனுடைய இரண்டாண்டு சீனியாரிட்டியும் போகிறது.

கதையின் நடை - 60-70. அற்புதமான பார்வை. இந்த கதை நடக்கும் ஊர் புதுக்கோட்டை. அருகில் பெருங்குளத்தூர். இங்கெல்லாம் நான் போனதே இல்லை. இதில் நடக்கும் சில சம்பவங்கள் எங்கள் குடும்ப நண்பர் சுமார் 70 வயதிருக்கும் அவருடைய வாழ்கையில் நடந்தது.

leomohan
21-01-2007, 10:43 AM
11

கையெழுத்து நிபுனர் ரவிசங்கரின் முன் அமர்ந்திருந்தார் ராகவன்.

சார், நான் கீழ்கண்ட கையெழுத்துக்களை ஆராய்ச்சி செய்தோம் என்று ஒரு பட்டியல் கொடுத்தார்.

1. சிவகுமார் - பொருந்தவில்லை
2. கவிதா - பொருந்தவில்லை
3. முதலியாரம்மா - பொருந்தவில்லை
4. சிங்காரம் - பொருந்தவில்லை
5. சங்கரன் - பொருந்தவில்லை

மொத்த தஸ்தாவேஜ்கள் - 201
மொத்த வார்த்தைகள் - 35420
மொத்த எழுத்துக்கள் - இரண்டரை லட்சம்
கணினியால் ஆராய முடியாத எழுத்துக்கள் - 20,000

நீங்க கொடுத்த எல்லா ஸ்கான் கோப்புகளையும் கணினியில் கொடுத்துப் பார்த்தோம். இதில் கிடைத்த கையெழுத்துக்கும் அந்த கடுதாசிகளில் இருந்த வார்த்தைகளும் ஒத்துப் போகவில்லை.

ம்ம

சிவகுமார் டிரேஸ் பேப்பர்களை பயன்படுத்தி வரையும் பழக்கம் இருக்குன்னு சொன்னீங்க.

ஆமாம்.

அவருதான் கணக்கு வழக்க பாத்தாரு இல்லையா.

ஆமாம்.

அவர் இந்த தஸ்தாவேஜ்களில் இருந்த கையெழுத்தை பிரதி எடுத்திருந்தா இதுல ஏதாவது ஒன்னோட மேட்ச் ஆகனும் இல்லையா. அப்படி ஆகலை.

இப்ப என்ன செய்யலாம்.

முற்றிலும் சம்பந்தம் இல்லாத நபர் யாராவது கொலை செஞ்சிருக்கலாம் சார்.

நன்றி கூறி வெளியேறினார் ராகவன்.

வீட்டில் வந்ததும் குழந்தை ஓடி வந்து கட்டிக் கொண்டது. மனைவியிடம் காபி சொல்லிவிட்டு அமர்ந்தார்.

குழந்தை ஓடி வந்து ப்ளாக்ஸ் சேர்த்துக் கொடுங்கப்பா என்றான்.

என்ன விளையாட்டு இது என்று கேட்டார்.

அப்பா இந்த ப்ளாக்ஸ் பின்னாடி ஒட்டகசிவிங்கி இருக்குப்பா. இந்த ப்ளாக்ஸை சேர்த்தா பின்பக்கம் ஒட்டகசிவிங்கி சேர்ந்துடும்.

ஓ அப்படியா என்று சொல்லி குழந்தைக்கு உதவினார். பல வண்ணங்கள் இருந்த ப்ளாக்ஸ்களை தனித்தனியாக வைத்தார்.

அப்பா, கலரை எடுக்க வேண்டாம். எந்த கலராக இருந்தாலும் பின்னாடி ஒட்டகசிவிங்கி சேரும். மாத்தி மாத்தி கூட வைக்கலாம்.

ஓ அப்படியா. சரி பண்ணலாம் என்றவருக்கு சட்டென்று ஒரு பொறி கிடைத்தது.

காபி வேண்டாம் என்று மனைவியிடம் சொல்லிவிட்டு குழந்தையிடம் பிறகு விளையாடலாம் என்று சொல்லி அலுவலகத்திற்கு விரைந்தார்.

ரவிசங்கருக்கு போன் போட்டார்.

ஓ செய்து பாத்திடலாம். கொஞ்ச நேரம் எடுத்துக்கும். ஆனா முடியும் என்றார்.

ரொம்ப தாங்ஸ்.

leomohan
21-01-2007, 10:44 AM
12

சீதாராம் பகுதி நேரமாக ரேடியோ டிவி ரிப்பேர் செய்யும் கடை நடத்தி வருபவர். அவரிடம் ஒரு புதிய 2-இன்-1 கையடக்க பெட்டியை வாங்கி வரச் சொல்லியிருந்தார் ராகவன்.

சீதாராம் உள்ளே நுழைந்ததும், நீங்க சொன்னா மாதிரி செய்யலாம் சீதாராம் என்றார்.

சரி சார் என்றுவிட்டு ஜீப்பை எடுத்தார்.

வண்டியில் போகையில் சீதாராம் சொன்னார், சிவகுமார் ஜெயிக்க நிறைய சான்ஸ் இருக்கு சார். வந்துட்டா ஆளும் கட்சி. அப்புறம் அவரை பிடிக்கறது கஷ்டம். எது செஞ்சாலும் இன்னும் இரண்டு வாரத்துக்குள்ளே செய்யனும் என்றார்.

நீங்க சொல்றது சரி. ஆனா ஒன்னும் கையில் மாட்டவில்லையே.

கிடைக்கும் சார் என்றார் சீதாராம் நம்பிக்கையுடன்.

நேராக சிவகுமாரின் பெரிய வீட்டிற்குள் நுழைந்தார். சிவகுமாருக்கு ராகவனை பார்த்தும் ஒரு மாதிரியிருந்தது. இருந்தாலும் அன்போடு வரவேற்றான்.

வாங்க இன்ஸ்பெக்டர். ஏதாவது நல்ல சேதி கிடைச்சுதா.

கிடைச்சுடும் சார். ஒரு நிமிஷம் உங்களோட தனியா பேசனும்.

பேசலாம் என்று சொல்லிவிட்டு அருகில் இருந்தவர்களை அனுப்பினான் சிவகுமார்.

சார், எங்களுக்கு சிங்காரம் மேல ரொம்ப சந்தேகமா இருக்கு. அவருக்கு நீங்க பிஸ்னெஸ்ல போட்டி. நீங்க வந்த பிறகு இன்னும் டெவலெப் வேற பண்ணிட்டீங்க. உங்களை மாட்டிவிட அவரு இதை செஞ்சிருக்கலாம்.

சே சே அப்படி இருக்காது சார் என்றான் சங்கடத்துடன் சிவகுமார்.

இல்லேன்னா சந்தோஷம் சார். அவருதானா அப்படின்னு கண்டுபிடிக்க உங்க உதவி வேண்டும்.

என்ன உதவின்னாலும் செய்ய தயாராக இருக்கேன் என்றான் சிவகுமார்.

சார், இந்தாங்க என்று தன்னிடமிருந்த 2-இன்-1 பெட்டியை நீட்டினார் சீதாராம்.

சார், இந்த பெட்டியில் டேப் போட்டிருக்கோம். பேட்டரியும் இருக்கு. நீங்க ஒரு தரம் சீதாராம் கிட்டே போகனும். இதை பையில் வெச்சிருங்க. அவர்கிட்டே சாதாரணமா பேசுங்க. என்ன கிடைச்சாலும் பதிவு பண்ணிடுங்க. இந்த கேஸூக்கு உதவியாக இருக்கும் என்றார்.

ஐயோ, தேர்தல் நேரத்தில நான் எப்படி.......... என்று இழுத்தான்.

ஒன்னு பயப்படாதீங்க. பையில் வெச்சிருங்க. இதுல பாஸ்-Pause பட்டன் அழுத்தியிருக்கேன். ரிக்கார்ட் பட்டனும் அழுத்தியிருக்கேன். இப்ப பதிவாகாது. பாஸ் பட்டனை எடுத்துட்டா பதிவாகும். நீங்க பையுக்குள்ள கைவிட்டு அழுத்தலாம். சரியா.

சரி என்றான் சிவகுமார் குழப்பத்துடன்.

சிவகுமாரின் வண்டி சி்ங்காரத்தின் மண்டியை நோக்கி சென்றது.

ராகவன் தொலைவில் தொடர்ந்தார்.

leomohan
22-01-2007, 10:04 AM
13

சிவகுமார் தன்னுடைய வண்டியிலிருந்த இறங்க சிங்காரத்தின் அறையை நோக்கி நடந்தான். தன் கைப்பையை இறுக பற்றிக் கொண்டான். அவரை வேவு பார்க்க வந்திருக்கிறேன் என்றால் என் கதை கந்தல் தான் என்று சொல்லிக் கொண்டான்.

வணக்கம் ஐயா எப்படி இருக்கீங்க.

அடடே எம். எல். ஏ தம்பி. வாங்க வாங்க. உட்காருங்க என்று வரவேற்றார் சிங்காரம்.

என்ன ஐயா. இன்னும் தேர்தேலே நடக்கலை.

தம்பி நம்ம ஆதரவு இருந்தா நீங்க தான் எம்எல்ஏ. கேட்கனுமா. உட்காருங்க.

அவனுக்கு முகம் வேர்த்தது.

டேய் ஏஸி போடுடா. பெரிய வீட்டு மாப்பிள்ளை வந்திருக்காரு என்றார் தமாஷாக.

உதவியாளர் வெளியே போனதும்.

ஐயா, போலீஸ் வந்தாங்க. நீங்க தான் கொலை செய்திருக்கலாம் அப்படின்னு என்னை வேவு பார்க்க அனுப்பியிருக்காங்க. இது பாருங்க டேப்ரிக்கார்டர்.

அடே இதென்ன வம்பா போச்சு.

கவலை வேண்டாம். இன்னும் நான் இந்த பொத்தானை அமுக்கலை. அமுத்தின பிறகு தான் ரிக்கார்ட் ஆகும். நாம் பொதுவா பேசலாம். சரியா என்றான்.

அவர் பீதியடைந்திருந்தார். கொஞ்ச இருப்பா. இதென்ன வம்பு.

ஐயா, முதல் பொண்ணு கவிதா என் மேல கண்ணா இருந்தா. அவ பேச்சு தான் முதலியார் அம்மாகிட்டே எடுபடும். நீங்க வீட்டை வித்து தந்தா கமிஷன் கொடுப்பேன்னு சொன்னீங்க. அதனால அவளை கல்யாணம் பண்ணிக்க முயற்சி பண்ணேன்.

அடப்பாவி நீயே மாலதி பொண்ணை கொன்னுட்டியா.

இல்லை ஐயா. அது மாதிரி நான் செய்வேனா. பள்ளிக்கூடத்தில சங்கரன் ஒரு பையன் மாலதியை லவ் பண்ணதா சொல்லியிருந்தா. அதை வைச்சி சும்மா குடும்பத்துல ஒரு குழப்பம் பண்ணி கவிதாவோட சேர்ந்திருலாம்னு திட்டம் பண்ணி தான் இந்த கடுதாசி வேலைகளை செஞ்சேன். ஆனா இந்த கொலை எதிர்பாராத விதமா யாரோ பண்ணி காரியத்தை கெடுத்துட்டாங்க.

அப்ப இது நீ பண்ணலையா என்றார் பதட்டம் குறையாமல் சிங்காரம்.

இல்லை ஐயா. இத்தனை விஷயம் சொன்னவன் இதை சொல்லமாட்டேனா.

சரி இதை பத்தி நாம்ப அப்புறம் பேசுவோம். ராத்திரி வீட்டு பக்கம் வா. அந்த பொத்தானை அமுக்கி என்ன கேட்கனுமோ கேட்டுத் தொலை என்றார்.

சிவகுமார் பொத்தானை அமுக்கி பாஸ் நிலை விடுவித்து கேள்விகள் கேட்க துவங்கினான். அவர் ஒட்டும் ஒட்டாமலும் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அவை எதுவும் பதிவாகவில்லை.

ஏனென்றால் சீதாராம் ஏட்டு மட்டுமல்ல, ரேடியா தொழில்நுட்பமும் அறிந்தவர். பாஸ் பொத்தான் அமுக்கினால் தான் ரிக்கார்ட் ஆகும் படியும் அதை விடுவித்தால் ரிக்கார்ட் ஆகாத படியும் செய்திருந்தார். சிவகுமாரும் சிங்காரமும் மேலே பேசிய அனைத்தும் பதிவாகி இருந்தன.

leomohan
22-01-2007, 10:52 AM
14
ரவிசங்கர் போன் செய்தார் ராகவனுக்கு. சார், நீங்க சூப்பர் சார். நீங்க சொன்ன மாதிரியே எல்லா எழுத்துக்களையும் சோதனை செய்தோம். சிவகுமார் மெழுகு பேப்பர் வெச்சி ஒவ்வொரு இடத்திலிருந்து ஒவ்வொரு எழுத்தை கோத்து இந்த மொட்டை கடுதாசிங்களை எழுதியிருக்கான். நீங்க சொன்ன மாதிரி நான் எழுத்துவாரியா
பாக்காட்டா முழு வார்த்தைகளையோ வாக்கியங்களையோ வெச்சி யாருடைய கையெழுத்துன்னு சொல்லியிருக்க முடியாது. இது ரொம்ப யோசிச்சி பண்ண வேலை.

சுமார் 7 கடிதங்களில் இருந்த இந்த வார்த்தைகளை எடுத்து எழுதியிருக்கான்.

நன்றி என் பையனுக்கு சொல்லனும். அவன் தான் ப்ளாக்ஸ் கேம் விளையாடி எனக்கு போதி மரமானான்.

நன்றி என்று சொல்லி போனை துண்டித்தார்.

சிவகுமார் வெளியே வந்ததும் அவனுக்கு அதிகம் நேரம் கொடுக்காமல்
அவனிடமிருந்து டேப் ரிக்கார்டரை வாங்கிக் கொண்டு அவனுக்கு நன்றி சொல்லி அனுப்பினார்.

சீதாராம், சிவகுமார் ரிக்கார்ட் பண்ணி கொண்டு வந்தது வெறும் மொட்டை கடுதாசி எழுதினதுக்கு மட்டும் தான் ஆதாரம் கிடைச்சிருக்கு. கொலையை தான் செய்யலேன்னு சொல்றானே.

எனக்கும் குழப்பமாத்தான் இருக்கு சார். நாம இன்னொன்னு பண்ணா என்ன என்றார்.

சொல்லுங்க.

இப்ப நாம சிங்காரத்தை சிவகுமார்கிட்டே அனுப்புவோம். இதே டேப்ரிக்கார்டரோட என்ன சொல்றீங்க.

அடே. அப்படியும் செய்யலாம் என்று சொல்லிவிட்டு சிங்காரத்தை பார்க்க கிளம்பினார்.

வணக்கம் சார்.

வாங்க இன்ஸ்பெக்டர் என்று சுரத்தில்லாமல் சற்று நடுக்கத்துடனே வரவேற்றார் சிங்காரம். வேலியில் போற ஓனான் மாதிரி சும்மா இல்லாமல் அவன் வீட்டை விற்றுத்தர கமிஷன் தரேன் என்று மாட்டிக் கொண்டேனோ. இதில் அரசியலில் சேரு என்று அறிவுரை வேறு. மாலதி செத்தவுடன் முதல் ஆளாக அங்கே போறதுக்கு என்ன அவசியம். சிவகுமார் எமகாதகனாக இருப்பான் போலிருக்கு. முதலியாரின் பெரிய
வீட்டுக்கு போவதற்கு பதிலாக மாமியார் வீட்டில் கம்பி எண்ண வேண்டி வருமோ என்று பலவாறாக யோசித்துக் கொண்டிருந்தார்.

சார், சார், என்ன யோசிக்கிறீங்க. உங்க கிட்டே ஒரு உதவி வேணும்.
சொல்லுங்க.

சார் இது சின்ன டேப்ரிக்கார்டர். இதை நீங்க பையில் வெச்சிகிட்டு நீங்க
சிவகுமாரோட சகஜமா பேசனும். எங்களுக்கு என்னவோ கொலையை அவருதான் செய்திருக்காரு என்று தோன்றுகிறது. ஆனா எவிடென்ஸ் இல்லை.

அடப்பாவி எங்க ரெண்டு பேருக்கும் நடுவிலே இந்த வம்பா. சரிதான் என்று நினைத்துக் கொண்டார். தான் சிவகுமார் கொண்டு வந்து ரிக்கார்ட் செய்து போனதை அறியாதவாறு காட்டிக் கொண்டார்.

என்ன இன்ஸ்பெக்டர் என்னை போய் இதெல்லாம் பண்ண சொல்றீங்க. நான் ஒரு பெரிய மனுஷன். சமூகத்திலே அந்தஸ்து இருக்கு. எனக்கு ஒரு மரியாதை இல்லையா. இந்த மாதிரி சின்னத்தனமான காரியங்கள், என்னைவிட்டா.

சார். உங்களை மாதிரி பெரியவங்க உதவினால் தான் போலீஸால் கடமையை செய்ய முடியும். கொஞ்ச மனசு பண்ணுங்க சார்.

இன்னும் வேண்டாம் என்றால் தன் மேலும் சந்தேகம் வந்துவிடப்போகுதே என்று தலையை ஆட்டினார். அது சரி எதை வெச்சி சிவகுமார் தம்பி கொலை செஞ்சிருக்கும்னு சந்தேகப்படறீங்க.

சார், முதல்ல மொட்டை கடுதாசி எழுதினது அவர் தான் என்று
கண்டுபிடித்துவிட்டோம். அவர் வீட்டிலே நிறைய டிரேஸ் பேப்பர் கிடைச்சிது. அது மட்டமில்லை அவர் வீட்டில் ரேயிட் பண்ணி எல்லா தஸ்தாவேஜூகளையும் அலசி அவர் எந்த எந்த கடிதங்களிலிருந்த எழுத்துக்களை நகல் எடுத்திருக்கிருக்கிறார் அப்படிங்கறதை கூட கண்டுபிடிச்சிட்டோம்.

மேலும் சீக்கிரத்தில் இரண்டாவது கல்யாணம். இரண்டு வீடு அவர் பேர்ல வந்துடுத்து. முதலியார் அம்மாவுக்கு பிறகு அந்த வீடு கவிதாவுக்கு வரும். கவிதாவுக்கு வந்தால் அவருக்கு.
அநாதையா காசு பாக்கமா வேலைக்காரன் மாதிரி இருந்தவருக்கு இந்த சொத்து, அந்தஸ்து, இப்ப எம்எல்ஏ பதவி வேற. இப்பெல்லாம் போதும் என்கிற மனம் யாருக்கு சார் இருக்கு. இன்னும் கேட்டா போதாதெனும் மனம் தான் எல்லார்கிட்டேயும் இருக்கு.

உங்க காலத்தில் முதலியாரோட என்ன தான் போட்டி இருந்தாலும் நீங்க அவரை ஆளைவிட்டு அடிக்கறதோ அவர் உங்களை ஆளை விட்டு அடிக்கறதோ நடந்திருக்கா.

நீங்க அந்த காலத்து மனுஷன். கண்ணியம் இருக்கு. கட்டுபாடு இருக்கு. இப்ப, இளைய தலைமுறை வேகமா முன்னேற வழிகள் இருக்கான்னு பாக்குது என்றார் ராகவன் ஒரு பெரிய லெக்சர் முடித்த பொறுப்பில்.

சரி இன்ஸ்பெக்டர் நான் இன்னிக்கு அவரை வீட்டுக்கு விருந்துக்கு கூப்பிடறேன். அப்புறம் பேசறேன். ஆனா ஒன்னு, இதுக்கப்புறம் என்னை இழுக்காதீங்க.

கட்டாயம் சார். இது ஒரு தடவை மட்டும் தான். ரொம்ப நன்றி என்று கூறி சீதாராமும் ராகவனும் விடை பெற்றனர்.

இரவு சொன்னபடியே சிவகுமார் வந்தான். அவனுக்கு அதே டேப்ரிக்கார்டரை காட்டினார்.

என்ன ஐயா, உங்களை விட்டு என்னை வேவு பாக்க சொல்லிட்டாங்களா. வேற வேலை இல்லை இந்த போலீஸ்க்கு என்றான்.

எப்படியாவது இந்த சிக்கலில் இருந்த வெளி வந்தால் போதும் என்றாகிவிட்டது சிங்காரத்திற்கு. எழுதி கொடுக்காத சொந்த டயலாக் பேசினார் அவர்.

தம்பி, நீ நல்லா மாட்டிகி்ட்டே. நீ தான் கொலைகாரன்கிறதுக்கு அவங்களுக்கு நல்ல ஆதாரம் கிடைச்சிடுத்து. நீ தான் லெட்டர் எழுதினேங்கறதையும் கண்டுபிடிச்சிட்டாங்க.

என்ன சார் சொல்றீங்க. நான் கொலையே பண்ணலை.

தம்பி போலீஸ் இந்த டேப்ரிக்கார்டரை கொடுத்து வேவு பாக்க சொன்னாங்க. அவங்க என்கிட்டே எல்லா எவிடென்ஸீம் கிடைச்சிடுத்து. சிவகுமாரே கன்பெஸ் பண்ணா, அடிதடி பண்ணி உண்மை வரவழைக்கனும் என்ற அவசியம் இல்லை. பக்கா சாட்சிகள் கிடைச்சிருக்குன்னு சொன்னார்.

சார் அவங்க போட்டு வாங்கறாங்க. எனக்கு ஒன்னும் பயமில்லை.

நான் இன்னும் இதை ஆன் பண்ணலை. நானும் நீனும் தொழில்ல கூட்டு. நாளைக்கு எம்எல்ஏ ஆயிட்டேன்னா எனக்கு தான் நல்லது. நீ என்கிட்டே உண்மையை சொல்லு. நமக்கு தெரிஞ்ச ஆளுங்களை வெச்சி எப்படியாவது மூடி மறைச்சிடலாம். வேறு யாராவது உள்ளே போனா, கேஸை இழுத்திடலாம். தேர்தல் நேரத்தில நீ உள்ளே போயிட்டேன்னா அது கட்சிக்கும் ஆபத்து. உனக்கும் கெட்ட பேரு. சொல்லு என்றார்.

சற்று நேரம் சிவகுமார் யோசித்தான். பிறகு தீர்க்கமாய்,
ஆமா ஐயா. நான் தான் கொலை பண்ணேன். குழந்தையை சாக்கா சொல்லி கவிதாவை கல்யாணம் பண்ணிகிட்டு, அப்புறம் பெரிய வீட்டை என் பேருக்கு மாத்தி வித்து நீங்க கொடுக்கற 50 லட்சம் எடுத்திடலாம்னு பார்த்தேன். எல்லாம் சரியா தான் செஞ்சேன். எங்கே கோட்டைவிட்டேன்னு தெரியலை.

அடப்பாவி, என்கிட்டே கேட்டிருக்ககூடாதா. இப்படி பண்ணிட்டியே. என்று அவர் சொல்லும் போதே அவருடைய மனைவி வந்து உங்களை பார்க்க இரண்டு பேரு வந்திருக்காங்க என்றார்.

அவர் யாரென்று சென்று பார்ப்பதற்குள் சீதாராம் ஓடிப்போய் டேப்ரிக்கார்டரை வாங்கினார்.

அனைவரையும் அமரச்சொல்லி டேப்ரிக்கார்டரை போட்டுக் காட்டினார் ராகவன். சிவகுமார் தன்னை சிங்காரம் ரிக்கார்டாகவில்லை என்று சொல்லி ஏமாற்றியதாக நினைத்தான். சிங்காரம் ராகவன் தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைத்தார். சீதாராம் சிவகுமாரை தள்ளாத குறையா ஜீப்பை நோக்கி அழைத்துச் சென்றார்.

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகிறார் ஞானதங்கமே
அவர் ஏதும் அறியாதடி ஞானதங்கமே
நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து
நல்லவர் போல் நடிப்பார் ஞானதங்கமே - அவர்
நாடகம் என்ன சொல்வேன் ஞானதங்கமே

என்று திருவருட்செல்வரில் சிவனாக வரும் ஜெமினி கணேசன் பாடிய பாடல், கடைசியாக முதலியாரோட பார்த்தது மின்னலை போல் சிவகுமாரின் நினைவுக்கு வந்து சென்றது.

முற்றும்

இளசு
22-01-2007, 10:58 PM
மோகன்

இரு முடிச்சவிழ்க்கும் உத்திகள்

1) Blocks விளையாட்டிலிருந்து - ஒவ்வொரு எழுத்தாக அச்செடுத்து கடிதம் எழுதுவது. ஆரம்பத்தில் கணினியே கோட்டைவிட்டதை, சிறு விளையாட்டு தந்த பொறியால் அறிவது. ( அடிக்கடி சிவகுமார் அச்செடுத்து வரைவதை முன்னரே சொன்ன உத்திக்கு சிறப்பு சபாஷ்)

2) பொத்தான்களை வைத்து பொறியியல் தெரிந்தவர் வைத்த பொறி..
அதில் சிக்கிய எலியாய் நாயகன்.. அசூயை, கோபம், வருத்தம் ஒருங்கே எழுந்தது அவன் மீது.

எத்தனை நல்லவை அவன் மீது வலிய வீழ்ந்தன.
அத்தனையும் அவன் பேராசையால் வீழ்ந்தன.


நல்ல கதை. படிப்பினை. பொருத்தமான இறுதிப்பாடல்..பாராட்டுகள்..

leomohan
23-01-2007, 04:24 AM
மிக்க நன்றி இளசு. மன்றம் வந்து படிப்பவர்களின் நேரத்தை கருத்தில் கொண்டு வர்ணனைகளை குறைத்து நேராக விஷயத்திற்கு வந்துவிட்டேன்.

மனோஜ்
23-01-2007, 09:36 AM
கதை அருமையே அருமை கடைசில் விருவிருப்பு குறைத்து விட்டிர்கள் போல எனினும் அருமையாக இருந்தது
நன்றி மோகன் அவர்களே

leomohan
23-01-2007, 09:45 AM
கதை அருமையே அருமை கடைசில் விருவிருப்பு குறைத்து விட்டிர்கள் போல எனினும் அருமையாக இருந்தது
நன்றி மோகன் அவர்களே

இதற்கு மனதில் ஒரு முடிவு வைத்திருந்தேன். அது இன்னும் மூன்று அத்தியாயங்கள் வரும். மன்றத்தில் வந்து இணைய தொடர்பில் சொற்ப நேரமே செலவிட்டு படிப்பவர்களை மனதில் கொண்டு விரைவாக முடித்துவிட்டேன்.

அந்த முடிவு இன்னொரு கதையில் வரும். கவலை வேண்டாம்.

உங்கள் ஆதரவிற்கு நன்றி.

ஓவியா
28-01-2007, 04:50 PM
படிப்பில் சுட்டியாக இருக்கும் அனைவரும் வேலை செய்வது இல்லை. இன்னும் பல பெண்கள் வீட்டில் இருந்து கணவனை கவனித்துக் கொள்ளவே விரும்புகின்றனர். பிள்ளைகள் பெற்று அவர்களை பராமறிப்பதிலும் பெரு மகிழ்ச்சி கொள்கின்றனர். இது பெண்மைக்கே உரிய சிறப்பு. தாய்மையின் மகிமை.

இது ஒருவகை ஆத்ம திருப்திதான்


ஆனால் இவர்கள் வேலை செய்ய போவதும் இல்லை எனும் பட்சத்தில் படித்து ஏன் ஒரு ஆண் மகனுக்கு கிடைக்கும் சீட்டுக்கும் வேட்டு வைக்கிறார்கள் என்பது தான் தெரியவில்லை.

வீட்டில் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டாமா, அதான் ;)


அது போல திருமணத்திற்கு முன் வேலை செய்யும் பெண்கள் திருமணத்திற்கு பிறகு வேலை விட்டுவிடுகிறார்கள். இவர்கள் எத்தனை ஆண்மகன்கள், குடும்பத்திற்கு ஒரே வருமானம் கொண்டவர்களை தோற்கடித்து இந்த வேலைக்கு வந்திருப்பார்கள். இதை ஏன் செய்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.


இதற்க்கு பதிலே இல்லை :D

ஆஹா கருத்தை ரசித்தேன்

ஓவியா
28-01-2007, 04:56 PM
மோகன் தங்களின் அனைத்து கதைகளும் அருமை

ஒவ்வொன்றும் ஒருவிதம், தங்களுக்கு விசாலமாக சிந்திக்கும் ஆற்றல் அதிகம்

இன்னும் அதிகம் எழுதி, புகழ் பெற்று, சாதனையாளராக வாழ்த்துக்கள்

வாய்பிருப்பின் மீண்டும் சந்திப்போம்

அன்புடன்
ஓவியா

leomohan
28-01-2007, 07:08 PM
படிப்பில் சுட்டியாக இருக்கும் அனைவரும் வேலை செய்வது இல்லை. இன்னும் பல பெண்கள் வீட்டில் இருந்து கணவனை கவனித்துக் கொள்ளவே விரும்புகின்றனர். பிள்ளைகள் பெற்று அவர்களை பராமறிப்பதிலும் பெரு மகிழ்ச்சி கொள்கின்றனர். இது பெண்மைக்கே உரிய சிறப்பு. தாய்மையின் மகிமை.

இது ஒருவகை ஆத்ம திருப்திதான்


ஆனால் இவர்கள் வேலை செய்ய போவதும் இல்லை எனும் பட்சத்தில் படித்து ஏன் ஒரு ஆண் மகனுக்கு கிடைக்கும் சீட்டுக்கும் வேட்டு வைக்கிறார்கள் என்பது தான் தெரியவில்லை.

வீட்டில் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டாமா, அதான் ;)


அது போல திருமணத்திற்கு முன் வேலை செய்யும் பெண்கள் திருமணத்திற்கு பிறகு வேலை விட்டுவிடுகிறார்கள். இவர்கள் எத்தனை ஆண்மகன்கள், குடும்பத்திற்கு ஒரே வருமானம் கொண்டவர்களை தோற்கடித்து இந்த வேலைக்கு வந்திருப்பார்கள். இதை ஏன் செய்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.


இதற்க்கு பதிலே இல்லை :D

ஆஹா கருத்தை ரசித்தேன்

தனியாக சொன்னால் உதைப்பார்கள் என்று கதையோடு சேர்த்துவிட்டேன். கண்டுபிடித்துவிட்டீர்களே. படு சுட்டி தான்.

leomohan
28-01-2007, 07:08 PM
மோகன் தங்களின் அனைத்து கதைகளும் அருமை

ஒவ்வொன்றும் ஒருவிதம், தங்களுக்கு விசாலமாக சிந்திக்கும் ஆற்றல் அதிகம்

இன்னும் அதிகம் எழுதி, புகழ் பெற்று, சாதனையாளராக வாழ்த்துக்கள்

வாய்பிருப்பின் மீண்டும் சந்திப்போம்

அன்புடன்
ஓவியா

மிக்க நன்றி ஓவியா.

ஓவியா
28-01-2007, 10:33 PM
தனியாக சொன்னால் உதைப்பார்கள் என்று கதையோடு சேர்த்துவிட்டேன். கண்டுபிடித்துவிட்டீர்களே. படு சுட்டி தான். :D :D :D


ஆமாங்க நண்பா,

ஆண்கள் ஆபீசில் ஒரு பீ.ஏ'வை சமாலிக்க எத்தனை புத்தகம் படிகின்றீர்கள் :D :D

நாங்களோ, மாமா, மாமி, அத்தான், அதின்பே, அண்ணீ, மண்ணீ' ..(பன்மையில்) குழந்தை குட்டிங்க, வீட்டில் வளர்க்கும் நாய்க்குட்டி வரைக்கும் சமாலிக்கனுமே!!!!!!!!.....அதுக்கு அட் லீஸ்ட் ஒரு பேச்சலர் டிகிரியாவது இருக்க வேண்டாமா?

ஆண்கள் ஆபீஸ் முடிந்து வரும் வரை கணக்கு தெரியாமல் குழந்தை காக்க வைக்க வேண்டாமே என்று நல்ல எண்ணத்தில் நாங்கள் பாடுபடுகிறோம்...:cool:

சில அப்பாங்க வர மணி பத்தாவுது....அது வரைக்கும் மிட்டாய் கொடுத்து குழந்தையை காக்க வக்க கூடாதுனு தான் இதெல்லாம் நடக்குது.....

மற்றும் ஒரு விசயம்,
பெண்கள் என்னதான் உயர படித்தாலும், வீட்டில் உள்ள அத்தனை அறையும் தன் கைவசம்தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். :D

சில கனவன்மார்களும் அதற்க்கு பச்சைக்கொடி காட்டுகின்றனர், இன்னும் சிலரோ பெண்களை முடக்கி வைக்க அப்படி செய்கின்றனர், பெண்களோ குடும்பம்தான் கோவில் என்று விட்டுக்கொடுத்து எற்றுக்கொள்கின்றனர்...அதானால் வேலைக்கு செல்வதில்லை

பேசாம மனைவியை கூப்பிட்டு ஒரு பாராட்டு விழா நடத்துங்க...;)

ஓவியா
28-01-2007, 11:51 PM
எங்க நாட்டின் ஆய்வில் பல்கலைகலகத்திற்க்கு தேர்வாகும் மாணவர்களில் 65% பெண்கள்தான் முதலிடம்....:)

என் அனுபவம்,
நாட்டின் இளய தூதர் பங்கெடுப்பில் (2 மில்லியம் இந்திய மக்களுக்கு வெரும் 4 சீட்டுக்கள்தான் :eek: :eek: ) நூற்றுக்கும் மேற்ப்படவர்களை சலித்து எடுத்ததில் முதல் 7 பெயர்களும் பெண்களாகவே இருந்தோம்....பாவம் பசங்க அப்பீட்டு,....

2 பெண்கள் 2 ஆண்கள் செல்ல வேண்டும் அதனால், அவர்களுக்கும் 2 சீட் கிடைத்தது :D

leomohan
29-01-2007, 07:11 AM
ஆம் ஓவியா. படித்த பெண்கள் படிக்காத பெண்களை விட குடும்பம் நன்றாக நடத்துவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை