PDA

View Full Version : கணவன் அமைவதெல்லாம்? (பாகம் = 1 + 2 )



Narathar
19-01-2007, 02:10 AM
விமானம் தரையை தொட இன்னும் இரண்டு மணித்தியாளங்கள் இருப்பதாய் கொஞ்சும் ஆங்கிலத்தில் அறிவித்துக்கொண்டிருந்தார்கள்.... இன்னும் இரண்டு மணித்தியாளத்தில் நான் தாயகத்தில், நினைக்கவே இனிமையாக இருந்தது. ஆனால் மனதுக்குள் ஏதோ ஒன்று நெருடியது... அது என்ன? என்பதை என்னால் ஊகிக்க முடியாதிருந்தாலும், உள் மனது அது சுருதியின் நினைப்புத்தான் என்று அடித்துச்சொன்னது.

சுருதி அவள் நினைவுகள் என்னை இரண்டு மணித்தியாளத்துக்கு முன்னதாகவே இலங்கைக்கு கொண்டுபோனது..... நினைவலைகளை திருப்பிப்போட்டு பார்க்கின்றேன்....... சுருதியோடு நான் கடலோரத்தில் கபடமில்லாமல் கொஞ்சி விளையாடிய அந்த குழந்தைப்பராயம், பள்ளியில் ஒன்றாய் படித்த பள்ளிப்பருவம், சுருதிக்கு காதல் கடிதம் கொடுத்தவனை புரட்டி எடுத்த விடலைப்பருவம், என்று ஒவ்வொன்றாய் மனதில் நிழலாடியது.....

ஆனால் அந்த இளமைப்பருவம் மட்டும் ஏன் அவ்வளவு கசப்பாய் போனது நான் அறியேன். யார் செய்த பாவமது சுருதியா? இல்லை நானா? இல்லை காலத்தின் கோலமா? இன்னும் விடைதெரியாத கேல்வியது. கன்னத்தின் ஓரத்தில் வெள்ளி மயிர்கள் மின்ன ஆரம்பித்திருந்தும் இன்னும் அந்த கேள்விக்கு மட்டும் என்னால் விடை காண முடியவில்லை...

ஏலெவல் (A/L) வரையில் ஒன்றாக படித்த அவளுக்கும் எனக்கும் என்ன ஒரு புரிந்துணர்வு? நான் ஒரு பக்கம் திரும்பினாலும் நான் ஏன் திரும்பினேன் என்பதை துள்ளிய்யமாக சொல்வாள் சுருதி.

ஏ லெவல் காலத்தில் சிங்கள மீடியத்தில் படித்த சுசித்ராவை நான் காதலிக்கின்றேன் என்ற போது அவள் எதிர்த்ததை பார்க்க வேண்டுமே? இந்த காதல் விபரம் என் வீட்டில் தெரிந்தால் அப்பா கூட அந்த அளவு ஆட்டம் போடமாட்டார், ஆவேசப்பட மாட்டார். ஆனால் சுருதி கிட்டத்தட்ட பத்ரகாளியாகவே மறிவிட்டாள்.

அவள் எதிர்ப்பை பார்த்த நண்பர்கள் அவள் என்னை காதலிப்பதாக சொன்னார்கள். என்னால் நம்ப முடியவில்லை. சின்னவயதிலிருந்தே ஒன்றாக பழகிய சுருதிக்கு அப்படி ஒரு நினைப்பு வராது என்று நினைத்தேன்....... நான் எப்போது சரியாக நினைத்தேன் அந்த நினைப்பு சரியாவதற்கு?

சுருதியை உயிருக்கு உயிராக காதலித்தான் என் சக மாணவன் அஸ்மி.... என்னிடம் வந்து நீ சுருதியை காதலிக்கின்றாயா? என்று கேட்ட விதமாகட்டும். இல்லையென்றவுடன் என்னை கட்டித்தலுவி தன் சந்தோசத்தை வெளிப்படுத்திய விதத்திலாகட்டும் எனக்கு அவன் காதல் நன்றாகவே புரிந்தது..... ஆனால் சுருதிக்கு புரியவில்லை. புரியவில்லையா? இல்லை புரிந்தும் புரியாதவளாய் இருந்தாளா? அவளுக்குத்தான் தெரியும்.

அவள் மறுப்பை தாங்க முடியாத அஸ்மி என்னிடம் வந்து அழுததையும், அவள் உன்னைத்தான் காதலிக்கின்றாள் என்று அடித்துச்சொன்னதையும் என்னால் இன்னும் மறக்க முடியவில்லை.

ஆனால் அவளிடம் என்னை காதலிக்கின்றாயா என்று முகத்தைப்பார்த்து கேட்க பயம். அப்படி அவள் என்னை காதலிக்கின்றாள் என்றால்? நினைக்க எனக்கு ஏதோ போல் இருந்தது. ஆனால் அது சரிய தவறா என்று அப்போது புரியவில்லை. ஏன் இப்போதும் தான்.

ஒடு நாள் பேச்சு வாக்கில் அவளிடம் அஸ்மியைப்பற்றி கேட்டேன்....... அவன் காதலை ஏன் நிராகரித்தாய்? என்று கேட்டேன். கண்கள் சிவக்க என்னை ஒரு பார்வை பார்த்தாள், ஒருவாரம் அவள் முகத்தைக்கூட பார்க்க முடியாமல் வெட்கி தலை குனிந்து போனேன்.... என்ன மாயமோ மந்திரமோ ஊருக்கெல்லாம் சட்டாம் பிள்ளையாக நாட்டாமை செய்து கொண்டிருந்த நான் சுருதியின் ஒரு பார்வைக்குள் அடங்கிப்போனேன்....... ஆனால் அது காதலா?

நண்பர்கள் கேலி பேசுவதும் வீட்டில் சாடை பேசுவதும் அதிகமானது. இல்லை எனக்கும் சுருதிக்கும் அப்படி ஒன்றும் இல்லை என்று மனது சொன்னதே தவிர அதையே உரத்துச்சொல்ல உதடு தயாராக இருக்கவில்லை.

"உலகம் ஆயிரம் சொல்லிட்டு போகட்டும் உனக்கு தெரியும் நான் யாரென்று"

என்று சுருதி சொன்னதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை. பிடிபடவும் இல்லை. வழமை போல காலத்தின் கைகளில் எங்கள் உறவுக்கு அர்த்தம் சொல்லும் கடமையை விட்டுவிட்டேன்......

"இன்னும் ஏதாவது குடிக்கப்போகின்றீர்களா?"

என்னும் கொஞ்சும் ஆங்கில குரல் என்னை மறுபடியும் விமானத்துக்கு இட்டு வந்தது. பத்து மணித்தியாளங்களாக பறந்து கொண்டிருக்கின்றேன்.. இருக்கையில் சாய்ந்து அமர்ந்து

" ஒன்றும் வேண்டாம்"

என்று புன்னகையாலேயே பதில் சொல்லிவிட்டு கண்களை மூடிய போது ரஜினி என் கண்ணுக்குள் வந்தாள். அவளுக்கும் என்னோடு இலங்கை வர விருப்பம்தான் என்றாலும் மூத்தவளின் பள்ளிப்படிப்பு பாதிக்கப்படுமே என்று சொல்லி என்னை விமான நிலையம் வரை வந்து வழியனுப்பிவைத்து விட்டு

" பீ குட்"

என்று கண்ணடித்து விடை தந்துவிட்டுப்போனாள். அன்னிய நாட்டுக்கலாச்சாரத்தில் வளர்ந்திருந்தாலும் தாய் மண்ணின் மண் வாசம் போகாத மனைவியவள். புரிந்துணர்வென்றால் என்ன என்பதை எனக்கு உணர்த்தியவள்.

நான் இந்த நாட்டில் வந்து தனிமையில் கஷ்டப்படும் போது இறைவனால் எனக்காகவே அனுப்பப்பட்ட தேவதை போன்று வந்து நின்று, நான் கேட்காமலே என் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்த தேவதை அவள். அந்தக்காலங்களில் எதையோ பரிகொடுத்தவன் போல நிற்கும் என் கோலத்தைப்பார்த்து எனக்கு ஆறுதலாய் இருந்தவளும் அவள்தான்.

அவள் பரிவும் பாசமும் என்னை அவள் பால் ஈர்த்தது. இன்று நாங்கள் கணவன் மனைவி என்றாகி இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோருமாகிவிட்டோம்...... மனைவி அமைவதெல்லாம் இறவன் கொடுத்த வரம். எனக்கு அந்த வகையில் இறைவன் நல்ல வரத்தைத்தான் கொடுத்திருந்தான்.

கணவன் அமைவதெல்லாம்? சுருதிக்கு நிகழ்ந்ததை நினைக்கும் போது என் மனதின் பாரம் இன்னும் அதிகமானது........
( தொடரும் )

அன்பர்களே........
நீண்ட நாட்களுக்கு பிறகு எனக்கு கிடைத்த ஓய்வு ஒரு கதை எழுத தூண்டியது.... பாதி எழுதிவிட்டேன் மீதி உங்கள் விமர்சனத்தில் தான் இருக்கின்றது.

என்ன தொடரட்டுமா? இல்லை இதுவே போதுமா?

மதி
19-01-2007, 03:59 AM
அன்பரே என்ன இது...
இப்படி நிறுத்திவிட்டு தொடரவா என்று கேட்கின்றீர்கள்?

சீக்கிரம் தொடரவும்.

இளசு
19-01-2007, 04:09 AM
அன்பு நாரதருக்கு

மிக அழகாய் நளினமாய் கதை சொல்லும் யுத்தி உங்களுக்கு அமைந்திருக்கிறது.

வெகு தொலைவில் நடக்கும் விஷயங்களை, வெகு சிக்கலான காரியங்களை முயன்று அலசி கற்றுத்தேறும் நம்மால்....

வெகு அருகில் வெகுகாலம் தினமும் பழகும் மனிதரின் உள்ளங்களை, எண்ண மாறுதல்களை புரிந்துகொள்ள இயலாமல், முயலாமல்...
காலத்தின் கையில் ஒப்படைத்து......

வாழ்வின் அடித்தளச் சிக்கல்களில் இது முக்கியமானது..

தொடருங்கள்....

சிக்கல் இழை நெகிழ்கிறதா.. இன்னும் இறுகுகிறதா?
அறிய ஆவல்..

விமர்சனமும் தொடரும்..

leomohan
19-01-2007, 05:40 AM
நல்ல துவக்கம். பாத்திரங்கள் ஆழமானவை என்ற ஆவலை ஏற்படுத்திவிட்டது. இன்னும் எழுதுங்கள்.

Narathar
19-01-2007, 12:09 PM
அன்பின் ராஜேஸ் குமாருக்கும், கதை எழுதினால் மட்டும் வாழ்த்துச்சொல்லும் நிர்வாகி இளசுவுக்கும், மோகனுக்கும் எனது நன்றிகள்...........................

சீக்கிரமே தொடர்கின்றேன்

மனோஜ்
19-01-2007, 04:36 PM
பாதி கினறு தான்டி மிதி கினறு தான்டாவிட்டால்
அந்த நிலைதான்
தொடருங்கள்.. நாரதரே

Narathar
20-01-2007, 02:59 AM
"உலகம் ஆயிரம் சொல்லிட்டு போகட்டும் உனக்கு தெரியும் நான் யாரென்று"

என்று சுருதியின் உதடுகள் தான் உச்சரித்தனவே தவிர அவளும் தான் குழம்பிப்போய இருக்கின்றாள் என்று நான் நினைத்துக்கொண்டேன்...... என் வயது என்னை அப்படி நினைக்க வைத்தது. அப்போது சுருதிக்கும் அதே வயதுதானே? அவள் என்ன நினைக்கின்றாள் என்பதை என்னால் சத்தியமாக புரிந்து கொள்ள முடியவில்லை.....

ஆனால் அவளுக்கு என் தயக்கமும் மயக்கமும் புரிந்திருக்க வேண்டும். ஆண்கள் நாங்கள் பெண்கள் மனதை படிக்க ஆயிரம் கஷ்டப்பட்டலும் முடிவதில்லை ஆனால் பெண்களால் மட்டும் நாங்கள் என்ன நினைக்கின்றோம் என்பதை எப்படி புரிந்து கொள்ள முடிகிறது? எனக்கு அப்போது புரியவில்லை.... ஏன் இப்போதும் தான்.

"இன்னைக்கு எங்கேயாவது வெளியே போரியா?"

சுருதி கேட்ட தொணியிலேயே புரிந்தது ஏதோ பிரச்சனை என்று

"இல்லை......... எதுக்கு கேற்கிறாய்?"

"இல்லை உன்னோடு கொஞ்சம் பேச வேண்டும்"

"அதுக்கு அப்பொயின்ட்மென்ட் எடுத்துத்தான் பேசுவீங்களோ?"

சகஜமாக இருப்பதாக காட்டிக்கொள்ளப்பார்த்தேன்.... அவள் பார்வையை தவிர்த்தவாரு

"என்ன ஜோக்கடிக்கிறாயா?.... என்னைப்பார்த்தால் உனக்கு விசரி மாதிரி தெரியுதா?"

"நான் இப்போ என்ன தப்பா சொல்லிட்டேன்"

"நீ தப்பா சொன்னதுமட்டுமில்லே உன் நினைப்பே தப்பு"

"..............."

"உன்னால அப்படி எப்படி நினைக்க முடியுது?"

".................."

"நான் உன்னை ஒரு அருமை நண்பனாத்தான் பார்க்கிறேன்......" அவள் கண்கள் கலங்கிவிட்டது

" நான் இப்போ உன் கிட்ட ஏதாவது கேட்டனா? நீயா எதையோ நினைச்சு கிட்டு நீயா புழம்பினா அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?"

"இங்கை பார் நீ வாயால கேட்கனும்னு இல்லே..... உன் பார்வையிலேயே புரிஞ்சுக்குவேன்"

" என்ன புரிஞ்சுகிட்டியோ....... உனக்கு அது எப்படி அபத்தமாக படுகிறதொ எனக்கும் அப்படித்தான்.. நீதான் என்னை காதலிக்கின்றாயோ என்று குழம்பிப்போனேன்..... அப்பாடா ஒரு பெரிய கண்டத்திலிருந்து தப்பித்தேன்"

அவள் முகம் பார்த்து சிரித்தேன்... அவள் சிரிப்பாளா என்ற ஆசையோடு

"போடா....ங்.. " என்று அடிக்க வந்தாள்....

அன்றிலிருந்து எங்கள் நட்பு மீண்டும் ஒரு தெளிந்த நீரோடையைப்போல ஓட ஆரம்பித்தது.

அந்த தெளிந்த ஓடையில் கல்லெரிந்தது யார்? குணசேகரன் என்ற குணா. சுருதியின் தூரத்து சொந்தக்காரன். என்பதுகளிலேயே ஜெர்மனிக்கு சென்றவன். அவனுக்கு அந்த வாழ்க்கை பிடிக்கவில்லையோ என்னவோ மீண்டும் இலங்கைக்கு ஜாகையை மாற்றினான். அவனிடமிருந்த பணத்தைப்பார்த்து பல் இளித்த சொந்தக்காரர்கள் அம்மா அப்பா இல்லாத அவனை நான் முந்தி நீ என்று தங்களோடு சேர்த்துக்கொள்ள ஆசைப்பட்டார்கள்.
ஆனால் அவன் ஆசையோ சுருதி வீட்டில் தங்குவது.... காரணம் சுருதி.

அவன் பார்வையும் பல் இளிப்புக்களும் சுரிதிக்கு அப்போது பிடித்திருக்கவில்லை, அதனாலேயே எனக்கும் அவனை பிடிக்கவில்லை. ஒரு வில்லனை பார்ப்பதைப்போல அவனை நான் பார்க்கத்தொடங்கினேன்...

ஆனால் அவன் காரியக்காரன்..... சுருதியை மடக்க என் நட்பை நாடினான். நண்பனாய் கரம் நீட்டிய ஒருவனை அவன் நோக்கமறிந்து பழக எனக்கு அப்போது பக்குவமில்லை......... அவன் கையிலிருந்த பணமும் பகட்டும் எங்கள் நண்பர்கள் கூட்டத்தில் அவன் சீக்கிரமே இடம்பிடிக்க ஏதுவாயிருந்தது.

மெல்ல அவன் காதலை என் காதில் ஊதினான்.......

"மச்சான் இங்க பார்.... உனக்கு அவவைப்பத்தி தெரியாது..... பிடிக்கலைன்னு வச்சுக்கோ என்னையே செருப்பை கழட்டி அடிப்பா" ஜோக்காக சிரித்துக்கொண்டு சொன்னலும் உண்மையும் அதுதான். அவள் அப்படித்தான்.

ஆனால் குணா விடுவதாய் இல்லை..... எறும்பூர கற்குழிய ஆரம்பித்தது.

"குணா ஒரு Funny guy இல்லே.....?" யதார்த்தமாக தொடங்கினேன் சுருதியிடம்

"இல்லை" வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாக பதில் சொன்னாள்

" என்ன தூது வர்ரீங்களோ?.... ஏன்டா உனக்கு இந்த வெட்டி வேலை?

" ஆமா தூது வர நான் என்ன............." சொல்லி முடிப்பதற்குள் அவள் என் முகத்துக்கு நேரே கைநீட்டி என்னை நிறுத்தினாள்.

" இங்க பார் எனக்கு தெரியும் எதை எப்போ எங்கே செய்யனும் என்று"

"ஆமா... இவ பொம்பளை ரஜினி" பொய் கோபம் காட்டினேன்

"உனக்கு வெட்கமா இல்லே....? அவன் மூஞ்சியும் முகரையும்"

நடந்ததை அப்படியே குணாவிடம் சொல்லி ஆளை விடுடா சாமியென்றேன்.... அவன் நட்பையே கட் பன்னினான். வேலைக்காகதவன் நட்பெதற்கு என்று நினைத்தானோ என்னவோ? அதிலிருந்து அவனை சுத்தமாக எனக்கு பிடிக்கவில்லை..............

சில நாட்களில் நிலமை தலை கீழாகியது..... கொஞ்ச நாட்களில் சுருதி அவனைப்பற்றி பேச ஆரம்பித்தாள் அவள் பேச்சில் காதல் தெரிந்தது. ஒரு நாளைக்கு மூன்றுதரமாவது குணா புராணம் பாடாமல் அவளால் அப்போதெல்லாம் பேச முடியாதிருந்தது. என் உயிர் நண்பி ஒரு சந்தர்ப்பவாதியை நம்பி ஏமாறப்போகின்றாள் என்பதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை...

ஒரு நாள் சுருதியிடம் குணாவைப்பற்றி பேச்செடுத்தேன்......

" எனக்கு தெரியாதது என்ன அப்படி உனக்கு தெரியும்?" என்று காரமாக பேசினாள்

"இல்லைம்மா அவன் நடவடிக்கைகள் எனக்கு பிடிக்கலே....அதான்"

"உனக்கு பிடிச்சு அவனை நீயா கட்டிக்கபோறே?" சுருதி

விளையாட்டாக கேட்டாளா? இல்லை உண்மையாகத்தான் கேட்டாளா? என் மனதை உடைத்துப்போட்டன அந்த வார்த்தைகள். தெளிந்த நீரோடையில் கல்லெரிந்த சலனம்..... சுருதியை தவிர்க்கலானேன். அதை அவளால் தாங்க முடியவில்லை. என்னிடம் பல முறை பேச எத்தனித்தாள்.... நான் மூர்க்கம் காட்டினேன். இளமை முருக்கு. ஆனால் எங்கள் நட்புக்காக அவள் தன் காதலையே தியாகம் செய்யத்துணிந்தாள்.

ஒரு நாள் என் முன் வந்து நின்று.....

"உன் கூட கொஞம் பேசனும்"

"..............."

"டேய் உன்னைத்தான்டா...... உன் கூடத்தான் பேசனும்"

"...............என்னத்தை பேசிக்கிளிக்கப்போறே?" கோபத்தை உடைத்துக்கொண்டுவந்து விழுந்தன வார்த்தைகள். எங்களுக்குள் இப்படி சண்டைகள் அடிக்கடி வருவதுண்டு ஆனால் கோபம் மிஞ்சிப்போனால் ஒரு நாள் தான். அடுத்த நாளே பேசி விடுவோம்.

" நீ என்னோடு பேசாமல் விட்டு எவ்வளவு நாளாகுது தெரியுமாடா உனக்கு?"

"எல்லாத்தையும் சேர்த்துதான் அண்டைக்கு பேசிட்டியே...... அதுக்கு மேலே என்ன பேச?"

"உனக்கென்ன? நான் இப்போ மன்னிப்பு கேட்கனும் அவ்வளவுதானே? இங்க பார் உனக்காக குணாவையே உதரித்தள்ளிட்டு வந்து நிட்கிறேன்"

அவளை குழப்பத்துடன் பார்த்தேன்.....

"ஆமாடா...... எனக்கு எது நல்லது எது கெட்டதுன்னு தீர்மனிக்கின்ற உரிமை உனக்கும் இருக்குடா... ஏன்னா நீ என் உயிர் நண்பன்.....
என் கண்கள் பனித்தது.

தொடரும்..............:)

Narathar
20-01-2007, 03:02 AM
பாதி கினறு தான்டி மிதி கினறு தான்டாவிட்டால்
அந்த நிலைதான்
தொடருங்கள்.. நாரதரே

நீங்கள் அனைவருக் கொடுத்த தைரியத்தில் தொடர்ந்திருக்கின்றேன்......
எப்படி என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்

மனோஜ்
20-01-2007, 06:56 AM
"குணா ஒரு fபன்னி கை இல்லே.....?" யதார்த்தமாக தொடங்கினேன் சுருதியிடம்



இந்த பிழையை மாற்றவும்

கதை மிகவிருவிருப்பாக உள்ளது
தொடருங்கள் நாரதரே

Narathar
20-01-2007, 02:23 PM
இந்த பிழையை மாற்றவும்

கதை மிகவிருவிருப்பாக உள்ளது
தொடருங்கள் நாரதரே

நீங்கள் சுட்டிக்காட்டிய பிறகுதான் தெறிந்தது அது எவ்வளவு பெரிய தவறு என்று நன்றி.

இளசு
20-01-2007, 10:09 PM
அருமையாக கொண்டு செல்கிறீர்கள் நாரதரே.. தொடரவும்..

( கதை எழுதினால் மட்டுமல்ல.. கவிதை எழுதினால் கூட
பாராட்டுவேனாக்கும்..)


சுருதி போன்ற பெண்களின் நட்பு.. ஆஹா..
செல்ல மழையும் நீ..சின்ன இடியும் நீ..
என வைரமுத்து சொன்ன அத்தனை வரிகளும் பொருந்துமய்யா..
சொர்க்கமும் நரகமும் ஒருங்கே தரும் அரங்கம் அது..
அனுபவித்தறிய வேண்டிய இன்பசுகம் அது..

Narathar
21-01-2007, 12:07 AM
அருமையாக கொண்டு செல்கிறீர்கள் நாரதரே.. தொடரவும்..

நன்றி அன்பரே உங்களைப்போன்றவர்களது ஊக்கம்தான் எங்களைப்போன்ற கத்துக்குட்டிகளையும் எழுத தூண்டுகிறது


( கதை எழுதினால் மட்டுமல்ல.. கவிதை எழுதினால் கூட
பாராட்டுவேனாக்கும்..)

அவரவர்க்கு எழுத வருவதைத்தானே எழுத முடியும்..........
நான் கவிதை எழுதப்போய் அந்தப்பகுதியையே நீங்கள் பூட்டுப்போடுவதை நான் விரும்பவில்லை:D :D

Narathar
21-01-2007, 12:08 AM
சுருதி போன்ற பெண்களின் நட்பு.. ஆஹா..
செல்ல மழையும் நீ..சின்ன இடியும் நீ..
என வைரமுத்து சொன்ன அத்தனை வரிகளும் பொருந்துமய்யா..
சொர்க்கமும் நரகமும் ஒருங்கே தரும் அரங்கம் அது..
அனுபவித்தறிய வேண்டிய இன்பசுகம் அது..

அனுபவசாலிகளுக்குத்தான் இப்படியெல்லாம் எழுத வரும்........
நாராயணா!!!!!

leomohan
21-01-2007, 05:24 AM
அன்பின் ராஜேஸ் குமாருக்கும், கதை எழுதினால் மட்டும் வாழ்த்துச்சொல்லும் நிர்வாகி இளசுவுக்கும், மோகனுக்கும் எனது நன்றிகள்...........................

சீக்கிரமே தொடர்கின்றேன்


ஹா ஹா அப்படியில்லை நாரதரே. கிடைக்கும் நேரத்தில் என்னுடைய sequence of reading இது தான்.


அரசியல்
பொது தலைப்பு, அலசல்
வாக்கெடுப்புகள், பட்டிமன்றம்
சிறுகதை
தொடர்கதை
கவிதை
திரையுலகம்
ஆக இந்த வரிசையில் கட்டாயம் படித்திருப்பேன்.

தொடரட்டும் உங்கள் படைப்புகள்.

பரஞ்சோதி
21-01-2007, 05:39 AM
நாரதரெ! கதை நன்றாக உள்ளது. பாராட்டுகள்.

ஓவியா
21-01-2007, 05:49 PM
வணக்கம் நாரதர் சார் (கலியுகத்தில் நாங்கள் இப்படிதான் சார் மோர்'னு கூப்பிடுவோம்)

கதை மிகவும் அருமையாய் இருக்கு,

எத்தனை யுகங்கள் கடந்தாலும் நினைவில் இனிப்பது இரண்டு விசயமே, ஒன்று காதல் அடுத்தது நட்பு :D

இரண்டையும் இனைத்து ஒரு கதை....ம்ம்ம்ம் நல்லாதான் கத சொல்லறீங்க, பாராட்டுக்கள்

சுபம் போட்ட பின் என் விமர்சனம் அவசியம் உண்டு

தொடருங்கள்

நாராயணா!!!!! நாராயணா!!!!!

sarcharan
22-01-2007, 02:59 AM
தொடருங்கள்

logini
20-06-2008, 05:45 AM
என்ன நாரதரே இப்படி பாதியில் விட்டுட்டீங்க?????????? காதலையும் நட்பையும் வைத்து அழகாக எழுதியிருக்கீங்க மிகுதியை விரைவாக தொடரலாமே....

SivaS
20-06-2008, 09:15 AM
என்னய்யா நாரதரே நீங்களே திரிசங்கு சொர்க்கத்தில நிக்கிற மாதிரி தொடரும் போட்டு அந்தரதில நிக்கிறியள்
ஒண்டில் நாரயணனிடம் போம் இல்லாட்டி தமிழ் மன்றம் வாரும் எங்காவது தொங்கி கொண்டு நிக்காதயும்.

தவறுகள் இருப்பின் இச்சிறியேனை மன்னியுங்கள்

MURALINITHISH
30-08-2008, 10:42 AM
நாரதர் தன் நாரதர் வேலையை இங்கேயும் காட்டு விட்டாரா எவ்வளவு அழகான கதை அதை பாதியில் நிறுத்தி விட்டு வேறு என்ன வேலை வாங்கள் சீக்கிறம் எழுதுங்கள் மீதியை

ஐரேனிபுரம் பால்ராசய்யா
30-08-2008, 02:05 PM
படித்துறைகளில் படிந்து கிடகும் பாசிகள் போல மன ஆழத்தில் பதிந்து கிடக்கும் பழைய நட்பை தட்டியெழுப்பி அதை கதையாக வடித்து அருமையாக தந்திருக்கிறீகள். கதையின் போக்கும் நடையும் நன்றாக உள்ளது பாராட்டுக்கள்