PDA

View Full Version : கிங்கிரன் கொடுங்கீற்று



ஆதவா
11-01-2007, 01:51 PM
நண்பர் மணிகளே!! இந்த கவிதை நான் சிறுவயதில் எழுதியது. தேடி பிடித்து இங்கே சேர்த்து இருக்கிறேன்..
உங்கள் விமர்சனம் இந்தக் கவிதைக்கு அவசியம் தேவை..
இந்த கவிதை மீது உண்டான உங்கள் கருத்துக்களை நான் பெரிதும் எதிர்பார்க்கிறேன்.

வீடிழந்த நிலவிலிருந்து
தள்ளி நிற்கிறாள்
கொங்கைக் கிழத்தி.
முகத்திலே கொற்ற வஞ்சி
சருமங்கள் ரொம்ப பிஞ்சு
கானல் கவிதை காணின்
நாணுவாள்; பேணுவாள்
மயிர்க் கிளர்ச்சி கொள்வாள்,
உயிர்த் தளர்ச்சி வரையிலும்.

மன்மதன் இவன்;
இங்கித மில்லை இவனிடம்
கொங்கை மாந்தர் காணின்
தங்காது போகும் சடரூபன்
சிருங்காரம் மிகுவானன்;
அகங்காரம் தகுவானன்.
யாவும் படைத்த கிங்கிரன்;
தாபத்திலே நிகரில்லா இந்திரன்.

நாணியவள் மேல் கூசம்
காணுகின்றான் கூசாது.
ஏனெனவோ
எங்கெனவோ
கேட்காமல் போவாளா அ(ச்)சாது.?
குறுஞ்சீலை களைப்பான்;
இருகை வைத்தே
ஆயிரம் செய்வான்
நுனி நாக்கில் குழைப்பான்
இனி தடுக்காது போய்விடின்.
படுக்காது போன நிலவை
கொடுங்கீறினான்
சொல்லிங்கே சேராத செயலும்
பல்லினால் செய்வான் பலவாறு.

பருந்திடம் குயில்!
பாடுவதெவ்வாறு?
கிளரும் நரம்புகளின்
உளரும் வார்த்தைகளால்
விருந்து கொள்வான்
கூம்புடையாளை.

இத்துணை ஆனபின்னும்
வித்தினை சேர்த்தபின்னும்
சத்தினைக் கெட்டபின்னும்
சிருங்காரம் அடங்கவில்லை
ஆகாரம் போதவில்லை.

எழுந்தான்;
விழுந்தாள்.

கேணமும்
நாணமும்
மானமும்
போனது

உயிரோடு ஓர் கோழி
உரித் தெடுக்கப்பட்டது

கிங்கிரன் சிரிக்கிறான்
இங்கிவள் அழுகிறாள்

மானம், மானம், மானம்,
எனச் சொல்லியே
அடக்கிக் கொண்டாள்
அழ் மனது வேதனையோடு

அங்கவன் புறப்பட்டான்
திங்கத்தான் மீண்டும்

------------------------
ஆதவன்

ஆதவா
15-01-2007, 04:30 AM
நண்பர்களே!!! நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தேன்.. உங்கள் விமர்சனம் அவசியம் என்று. ஆனால் இதுவரை எழுதவில்லை... ஏனென்பதும் தெரியவில்லை.. இன்றைய நாட்களில் நான் எழுதிய கவிதைகளுக்கு அழகான விமர்சனங்கள் (கிட்டத்தட்ட குறையேதுமில்லாமல்) எழுதி அசத்தினீர்கள். இது கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு முன் எழுதியது. யாரிடமும் காட்டாமல் வைத்திருந்தேன்.. பயம் காரணமாய்!!! அது உங்கள் மனதில் என்ன இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளவே விமர்சனம் கேட்டேன். (ஷீ எனக்கு தனிமடல் அனுப்பியிருந்தார்,, அவர் மட்டும் விதிவிலக்கு)

அதுமட்டுமல்ல, என்னுடைய சில இந்த மாதிரியான கவிதைகள் கொடுமை செய்பவன் செயலைச் சொன்னது வரைக்கும் மட்டுமே எழுதியிருப்பேன். அவனுக்கு இந்த தண்டனை வேண்டும் அல்லது இதற்கு மாற்று இது என்றெல்லாம் எழுத மாட்டேன்...

உதாரணமாக: காமக் கொடுஞ்செயல் செய்த கிங்கிரன் மீண்டும் வேறொரு இடத்திற்கு புறப்படுவது போலவே இந்த கவிதை இருக்கிறது; அந்த அபலை என்ன செய்தாள் என்பது இருக்காது.

இந்த கவிதை பண்பட்டவர் பகுதிக்கு மாற்றாக இங்கே எழுதக்காரணமிருக்கிறது. அனைவரும் இதைப் படித்து தெரியவேண்டும் என்பதுதான்.. ஏனெனில் நான் எழுதிய வயது அனுபவமில்லாத வயது..

அப்போதெல்லாம் தமிழ் மீது மிகுந்த ஆர்வம். (நான் தெலுங்குகாரன்) தாய்மொழி தெலுங்குதான் என்றாலும் வாழும் நாட்டின் மொழி தமிழ்தானே!! தெலுங்கிற்கே தாய் தமிழ் என்று அறிவேன். சில வார்த்தைகள் பாரதியிடமிருந்து கற்றுக் கொண்டேன். சிலது புத்தங்களிடமிருந்து கற்றுக் கொண்டேன். இன்றும் நான் ஆனந்த விகடன் இல்லாமல் சாப்பிடுவதில்லை..
இங்கே ஒரு சில கடினமான (அந்த வயதிற்கு) வார்த்தைகள் இடம்பெறக் காரணம் அதுதான்..

ஆதலால் அந்த வயதில் நான் எழுதிய இந்த கவிதை இந்த வயதில் உள்ளவர்கள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்? என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன்..

(இதே மாதிரி ஒரு கவிதை எழுதி, அதைப் படித்த என் அப்பாவிடம் அடி வாங்கிய அனுபவமுள்ளது.)

தயங்காமல் கருத்து கூறுங்கள்..

மீண்டும் எதிர்பார்க்கிறேன்.....
நன்றி
உங்கள் நண்பன்
ஆதவன்

nonin
15-01-2007, 12:54 PM
வணக்கம் ஆதவன். ரசிக்க வைத்த கவிதை. உங்கள் கவிசொல்லாடல்
தரத்திற்க்கு எனக்கு புரிதல் (சில வார்த்தைகள்தான்) குறைவு என்பதால் மீண்டும் மீண்டும் படித்து அதிசயித்தேன்.ஓவ்வொரு தடவையும் புதுப்பொருள் காட்டும் வார்த்தை ஜாலங்கள்.காமம் தெறிக்கும் அட்சரம்.

வீடிழந்த நிலவிலிருந்து
தள்ளி நிற்கிறாள்
கொங்கைக் கிழத்தி

வீடிழந்த நிலவு - வளமான கற்பனை
கொங்கை கிழத்தி - வடிவான மார்பகம் கொண்ட பெண் என்னும் சங்ககால வார்த்தைகளை சமகாலத்தில் மிக அழகாக பிரயோகித்தீருக்கிறீர்கள்.

முகத்திலே கொற்ற வஞ்சி
சருமங்கள் ரொம்ப பிஞ்சு
கானல் கவிதை காணின்
நாணுவாள்

முகத்திலெ கொற்ற வஞ்சி - இது பண்டைய தமிழ்மகளிரின் கற்பு நிலை
குறித்த குறீயீடாக காண்கிறேன்.
கானல் கவிதை காணின் - இது அர்த்தமாகவில்லை எனினும் பார்வை பரிமாற்றங்களை குறிக்கிறீர்களோ? விளக்கவேண்டும்.

மன்மதன் இவன்;
இங்கித மில்லை இவனிடம்
கொங்கை மாந்தர் காணின்
தங்காது போகும் சடரூபன்
சிருங்காரம் மிகுவானன்;
அகங்காரம் தகுவானன்.
யாவும் படைத்த கிங்கிரன்;
தாபத்திலே நிகரில்லா இந்திரன்

காமம் குத்தீட்டீயாய் கிளம்ப பருவகளம் காணத்துடிக்கும் ஆண்மையை
மிக அழகாய் சித்தரித்துள்ளீர்கள்.

நாணியவள் மேல் கூசம்
காணுகின்றான் கூசாது.
ஏனெனவோ
எங்கெனவோ
கேட்காமல் போவாளா அ(ச்)சாது.?
குறுஞ்சீலை களைப்பான்;
இருகை வைத்தே
ஆயிரம் செய்வான்
நுனி நாக்கில் குழைப்பான்
இனி தடுக்காது போய்விடின்.
படுக்காது போன நிலவை
கொடுங்கீறினான்
சொல்லிங்கே சேராத செயலும்
பல்லினால் செய்வான் பலவாறு.

குறுஞ்சேலை களைதலும், நுனி நாக்கில் குழைப்பதும் - ஆதவன் நுண்ணிய காம உணர்வுகளை என்னமாய் வார்த்தைகளில் இழைக்கிறீர்கள்.
கடையிரண்டு வரிகள் கண்ணியமான கவிதை தணிக்கை.

பருந்திடம் குயில்!
பாடுவதெவ்வாறு?
கிளரும் நரம்புகளின்
உளரும் வார்த்தைகளால்
விருந்து கொள்வான்
கூம்புடையாளை

பருந்திடம் குயில் - வண்காமத்திற்க்கு பொருந்திய வார்த்தை.
கூம்புடையாளை - கவிஞரின் கணிதத்திறன் கைவண்ணம் பெறுகிறது.

இத்துணை ஆனபின்னும்
வித்தினை சேர்த்தபின்னும்
சத்தினைக் கெட்டபின்னும்
சிருங்காரம் அடங்கவில்லை
ஆகாரம் போதவில்லை

வலிய புணர்ந்ததை வித்தினை சேர்த்ததாய்(அவள் விரும்பி உள் வாங்கி கொண்டதாய் அல்லாமல்)மிக சமத்க்காரமாய் வடித்துள்ளீர்கள்.

அங்கவன் புறப்பட்டான்
திங்கத்தான் மீண்டும்

தறியில் அகப்பட்ட நூலைப்போல் அவளை நெருக்கி சுகம் கண்டும்
வெறி அடங்காது கனி குதற புறப்பட்டதுடன் முடிக்கீறீர்கள் கவிதை.

ஆதவன் நான் இந்த கவிதையை வேறோரு கோணத்திலும் ரசிக்கிறேன்.
அதாவது கொங்கை கிழத்தியை, மலர்ந்தும், சூடவும் சுகமும் பெறாத
முதிர்கன்னிகளாகவும், வரதட்சணை எனும் வலையில் மாட்டி கொண்டு
மலர்மாலை-மணவாளன் தொடுகைக்காகவும் காத்திருக்கும் பாவப்பிறவிகளாகவும் பாவிக்கிறேன்.கிங்கிரனை அந்த பெண்மையை அலைக்கழிக்கும் விரகமாக உருவகபடுத்திக்கொள்கிறேன்.
தனிமையில் தாக்கி தாபத்தை தூண்டும் காமத்து புயலில் ஆட்பட்டு அவள் தவறான பாதைக்கு பயணப்படுவதை அவளே அடக்கி கொள்ளும்
விதமாகத்தான்

மானம், மானம், மானம்,
எனச் சொல்லியே
அடக்கிக் கொண்டாள்
அழ் மனது வேதனையோடு

இந்த வரியை காண்கிறேன்.

ஆதவன் நீங்கள் அருமையான மரபுக்கவிஞர். தமிழ்மன்றத்தில் விருந்து படைத்து கொண்டிருக்கிறீர்கள். விமர்சனங்களை அவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டு பின்னூட்டமிடுகிறீர்கள்.தங்கள் பணி மேலும்
சிறக்க வாழ்த்துக்கள்.

தாங்கள் மற்ற படைப்பாளிகளின் ஆக்கங்களை விமர்சனம் செய்யும்பொழுது கவிதை வரிகளை தனி தனியாக மேற்க்கொள்காட்ட
copy/paste முறையை கையாள்கிறீர்களா? அல்லது வேறு வழியா? ஏனெனில் எனக்கு தட்டச்சு மிகவும் வேகம் குறைவாகத்தான் வரும்
தங்களின் படைப்பை வரியாக மேற்க்கோள் காட்டி(காப்பி/பேஸ்ட்)முறையில் பின்னூட்டமிட இரண்டு மணித்துளிகள் ஆனது.எனினும் இந்த விமர்சனம் எனக்கு மிக மனநிறைவை தந்தது.

ஆதவா
15-01-2007, 02:33 PM
அட நானின்!!! என் பாணியிலே ஒரு விமர்சனமா?? அழகாய் இருக்கிறது.... பயமாய் இருக்கிறதே!!!!
நன்றிப்பா!!!

நண்பரே கானல் என்பது நமக்குத் தெரிந்தும் தெரியாதிருப்பது.....
புதுக்கவிதை என்பது புரிந்தும் புரியாமல் இருப்பது.....

நான் எப்போதுமே கவிதையை முழுமையாக Paste செய்து பின் ஒவ்வொரு வரியையும் ஆராய்வேன்...
நேரமின்மையால் நாளை மீண்டும் சந்திக்கலாம்..
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

மதுரகன்
15-01-2007, 04:04 PM
மன்னிக்கவும் ஆதவா இந்தக்கவிதைக்கு பின்னூட்டல் அளிக்காததற்கு...
அதற்கு காரணங்களும் உள...

எனக்கு அதற்குரிய தகுதியிருப்பதாக நான் எண்ணவில்லை...

ஏனெனில் முற்று முழுதாக நான் மரபு , மற்றும் நவீன கவிதைகளுக்கு அப்பாற்பட்டவன் எழுதுவதில்...

வாசிப்பில் நவீன கவிதை அறிமுகம் வேண்டியளவு இருப்பினும்
மரபுக்கவிதைகளில் பண்டைய இலக்கியங்களை மட்டுமே ஆய்ந்து வாசித்திருந்தேன்...

மரபுக்கவிதைகளை நான் தேடிச்சென்றதில்லை....
அதுவே அந்தத்துறையில் ஓர் அனுபவக்குறைவிற்கு காரணமாயிற்று..

ஆகவே நான் எண்ணவில்லை ஓர் தரமான விமர்சித்தலை தரமுடியுமா என...

அத்துடன் கவிதையின் பொருட்பரப்பில் கவனமாக
வார்த்தைகளைக் கையாளுமளவிற்கு பக்குவம் என்னிடம் இல்லை...

எப்படியிருப்பினும் உங்கள் ஜாலம் என்னால் வாசிக்கப்பட்டு உணரப்பட்டது..
உன்னதமானது என.....

ஆதவா
16-01-2007, 03:13 AM
மது!
முதலில் இது மரபுக் கவிதை அல்ல..... எதை வைத்து இதைச் சொல்லுகிறீர்கள் என்பது தெரியவில்லை. கடினமான வார்த்தைகளினாலா? அப்படி கடினமும் இல்லை... இருப்பினும் நான் அன்று இதைச் சேர்த்ததற்கு காரணமுண்டு... யாருக்கும் எளிதில் புரியக்கூடாதென்பது.... சிறு வயதில் எழுதியதால் (ஓரளவு பக்குவப்பட்ட பதினைந்து) யாரும் திட்டத்தானே செய்வார்கள்,.. அவர்களுக்கு புரியாத வண்ணம்...

பின்னூட்டமிடவும் ஒரு தகுதி வேண்டுமென்றால், நானே பின்னூட்டமிடுவதை நிறுத்திக்கொள்வேன்.... எனது பழைய பின்னூட்டங்களைப் பாருங்கள். ஒற்றைவரிகளில் இருக்கும்..
மன்றத்தில் யாரும் கவிதையை படித்து உணர்ந்து பின்னூட்டமிடுவதோடு சரி, மிக ஆழமாக அலசுவதில்லை என்று அறிந்தேன். (அவ்வளவுதூரம் அலச அவசியமில்லை... புரிந்தாலே போதுமானது..) சிலர் நேரமின்மையால் பின்னூட்டம் இடாமல் போகின்றனர்,
இதைப் பயன்படுத்திக்கொண்டேனே தவிர, எனக்கும் ஒரு அனுபவம் கிடையாது.
நாமளாகவே வளர்த்திக்கொள்ளுதலில்தானிருக்கிறது. மூன்றுவருடங்களுக்கு முன்பு நீங்கள் கவிதை எழுதுவதைப் பற்றி யோசித்ததாக சொன்னது நினைவுக்கு வருகிறது....
அலசுங்கள்... முதலில் நிறைகளைக் கூறிவிட்டு குறைகளை மெல்ல களைந்தீர்களானால் போதும்..... விமர்சனம் தயார்...
பக்குவம்: அப்படியொரு வார்த்தையில்லாத அளவிற்கு மாற்றுங்கள் , உங்களால் முடியும்...

தொடருங்கள்

மதுரகன்
16-01-2007, 05:06 PM
நன்றி ஆதவா நானும் இப்போது விமர்சனங்கள் எழுத ஆரம்பித்து விட்டேன்.. நண்பர் பர்கானின் முதல் கவிதையிலும் பிச்சியின் ஏழாவது கவிதையிலும் சற்றே முயன்றுள்ளேன்... படித்து எப்படியிருக்கின்றதென கூறுங்கள்...

அடுத்து மரபுக்கவிதை என நான் திட்டமாக கூறவில்லை அப்படி என்னிடம் அளவுகோலும் எதுவுமில்லை...
எனது கவிதை வாசிப்பு அறிவைக்கொண்டு மனம் கூறுகின்றபடி வரையறுப்பேன்

உங்கள் கவிதை மரபுக்கவிதையை மீறி நவீன கவிதைக்குள் புக முயன்று தடைப்படுவது போல் உள்ளது கவிதையை படிக்கும் போது அதற்கு கடினமான வார்த்தைப்பிரயோகங்களும் காரணமாகலாம்...
ஆனால் அது மட்டும் காரணமில்லை......
மற்றைய படி கடின வார்த்தைப்பிரயோகத்திற்கு நீங்கள் கூறும் காரணம் ஏற்புடையதே...

ஆதவா
17-01-2007, 01:08 PM
நன்றி மது..... விமர்சனங்கள் எழுதுங்கள்...