PDA

View Full Version : காத்திருக்க நேரமில்லைlenram80
09-01-2007, 12:58 AM
கடல் நீர் குடித்ததற்கே காமம் தலைக்கேறி
கரை கடக்கும் போது கறை கொண்ட மனதோடு
நிராயுதபாணியான நிலப் பெண்ணின்
துகிலுரிக்கும் துரியோதன "சூறாவளி"!

கோபத்தில் முகம் சிவக்காமல், வித்தியாசமாய் முழு உடலும் கறுத்து
இருட்டில் குறி பார்த்து இடி குண்டை வீச - மின்னல் ஒளி அடித்து
பிறகு மழை கை மூலம் அழிவை தடவிப் பார்த்து
மனிதர்களின் அலறல் சத்தம் கேட்டு
ஆனந்தத்தில் காற்றின் மூலம் சிரிக்கும் அரக்க "மேகம்"!

"தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும்"
தொடக்கப் பள்ளியில் யாரோ வாசித்த போது
வாசலில் மறைந்து நின்று கேட்டு விட்டு
அராஜக ஆட்டத்தை அவ்வப்போது அரங்கேற்றி
அனைத்தையும் உண்ணும் அனகொண்டா "பூகம்பம்"!

சூரிய ராட்டினத்தில் சுற்றிக் கொண்டே இருப்பதனால்
தலை கிறுகிறுத்து, பூமி தன் மலைவாயின் வழியே
'தீ'யுடன் எடுக்கும் வாந்'தீ' "எரிமலை"!

யாருக்கும் தெரியாது என நினைத்து
நீரின் அடியில் சென்று, தன் கபால ஓடுகளை
கண நேரம் ஆட்டிப் பார்க்கும் களவானி பூமி!
கடலை 'சாமி' என நினைப்பவனையே
காவு கொள்ளும் எமனின் பினாமி "சுனாமி"!

பிரியாத பெருங்கடலையே நான்காய் பிரித்த மனிதன்
பிரிந்தே கிடக்கும் நிலத்தை- பாகப்
பிரிவினை செய்வதில் ஒன்றும் வியப்பில்லை தான்!
அதற்காக,
அணு கருவினை, ஆயுத வயலில் விதைத்து
உயிர்களை களை எடுத்து - அடுக்கி வைக்கும்
வைக்கோல் போர்களாய் "உலகப் போர்கள்"!

மதிய உணவு போடுவதால், பசி கொண்ட நேரத்தில்
பள்ளி என்று கூட பார்க்காமல் பந்தி கொள்ளும்,
கொண்ட பிறகு முந்திக் கொல்லும் தீவிரவாத "தீ"!

மதங்களின் பெருமைகளை சொல்லி மாநாடு நடத்த
'கட்அவுட்'களாய் வைக்கப்படும்
மதம் கொண்ட கலர் வரங்களாய் "கலவரங்கள்"!

இப்படி இத்தனை ஆபத்துக்களுக்கு நடுவே
உயிருடன் வாழ்வதே சாதனை!
இதை எல்லாம் தாண்டி,
காதலிக்கப் புறப்படுவது அதை விட சாதனை!
காதலே உன் காதில் விழாமல் இருந்த உன்னிடம்
என் காதலை சொல்லிய பிறகும் கூட
இன்னும் நீ யோசிப்பது - சோதனை!

நீ நின்று நிதானமாய் யோசிப்பதற்கும்
நான் உன் நினைப்பை மென்று தின்று காத்திருப்பதற்கும்
நேரமில்லை என்னவளே!
கொஞ்சம் தாமதப்பட்டாலும்,
சொர்க்கத்தில் தான் நாம் இனி சேர முடியும்!

ஏனென்றால்,
ஐம்பது வயது வரை வாழ்ந்தாலே
'அதிக நாள் வாழ்ந்த'தற்கான
விருது கொடுக்கும் காலமிது!

முடிவெடு! விடை கொடு!
இல்லையென்றால் விட்டு விடு!
அதோ... அணைக்கும் தூரத்தில்.... அடுத்தவள்!

அடுத்தவளிடம்,
Hello... excuse me...Do you have one min pls?

ஷீ-நிசி
09-01-2007, 02:25 AM
இயற்கையில் ஆரம்பித்து,, காதலில் முடித்திருக்கிறீர்கள்... நல்ல முயற்சி லெனின்

ஆதவா
09-01-2007, 03:18 AM
கடல் நீர் குடித்ததற்கே காமம் தலைக்கேறி
கரை கடக்கும் போது கறை கொண்ட மனதோடு
நிராயுதபாணியான நிலப் பெண்ணின்
துகிலுரிக்கும் துரியோதன "சூறாவளி"!

இது சூறாவளி: ஒப்புமைகள் பிரமாதம். துரியோதன சூராவளி!!! நிராயுதபாணி நிலப்பெண். ஆம், நாம் என்னதான் அணுகுண்டுகளை அடுக்கிக் கொண்டிருந்தாலும் இயற்கையின் போருக்கு மறுபோர் செய்யமுடியாது. நம் நிலை நிராயுதபாணி நிலைதானே!!

கோபத்தில் முகம் சிவக்காமல், வித்தியாசமாய் முழு உடலும் கறுத்து
இருட்டில் குறி பார்த்து இடி குண்டை வீச - மின்னல் ஒளி அடித்து
பிறகு மழை கை மூலம் அழிவை தடவிப் பார்த்து
மனிதர்களின் அலறல் சத்தம் கேட்டு
ஆனந்தத்தில் காற்றின் மூலம் சிரிக்கும் அரக்க "மேகம்"!

மேகம்: கோபத்தில் முகம் கறுத்து,, குண்டு வீசி மின்னல் அடித்து எல்லாம் சரிதான்... மழையே இங்கெல்லாம் பெய்வதில்லை லெனின்.. அதனால் அதன் கொடூரம் எனக்குத் தெரியாமலே போகிறது.. அதே சமயம் மழையால் ஒரு உயிர் பலி யென்றால் அதற்கு முழுக்க முழுக்க நாமே காரணம்... ஹி ஹி.:D மழைக்கு கொஞ்சம் கருணை காட்டுங்க..

"தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும்"
தொடக்கப் பள்ளியில் யாரோ வாசித்த போது
வாசலில் மறைந்து நின்று கேட்டு விட்டு
அராஜக ஆட்டத்தை அவ்வப்போது அரங்கேற்றி
அனைத்தையும் உண்ணும் அனகொண்டா "பூகம்பம்"!

பூகம்பம்: பழமொழியின் மேற்கோள், அருமையானது... பூகம்பம் எப்போதுமே இப்படித்தான். தொடக்கப் பள்ளியோடே மறைந்து கேட்டுக் கொண்டு ஆடிவிடுகிறது.. கொஞ்சம் காலேஜ் வரைக்கும் வந்து நின்னு கேட்டால், பூகம்ப பசிக்கு ஏக உயிரோ விலை? ன்னு சாந்தமா போயிருக்கும்... அனைத்தையும் உண்ணும் அனகோண்டா பூகம்பம் என்பதும் சரியான ஒப்புமை.

சூரிய ராட்டினத்தில் சுற்றிக் கொண்டே இருப்பதனால்
தலை கிறுகிறுத்து, பூமி தன் மலைவாயின் வழியே
'தீ'யுடன் எடுக்கும் வாந்'தீ' "எரிமலை"!

எரிமலை.. எரிமலையால் ஏதாவது அதிகப்படியான சேதாரம் உள்ளதா எனக்கேட்டால், இல்லை என்றுதான் சொல்லுவேன். இருப்பினும் மனிதனைப்போல தலை சுற்றி வாந்தியெடுத்து..என்று சொன்னவிதம் அற்புதம்.

யாருக்கும் தெரியாது என நினைத்து
நீரின் அடியில் சென்று, தன் கபால ஓடுகளை
கண நேரம் ஆட்டிப் பார்க்கும் களவானி பூமி!
கடலை 'சாமி' என நினைப்பவனையே
காவு கொள்ளும் எமனின் பினாமி "சுனாமி"!

மிகச்சரியான அறிவியல் கலந்திருக்கிறது. சுனாமிக்கு கடல் மட்டுமா காரணம்? பூகம்பம்; அதனால் நீங்கள் சொன்ன பரதநாட்டிய கபால பூமி; அதன் பின்னரே சுனாமி.. இருந்தாலும் ஒரு சின்ன திருத்தம்... எமனின் பினாமி என்றதெல்லாம் நிறையபேர் உபயோகித்துள்ளனர்,,, வேறுமாதிரி எழுதியிருக்கலாம். கடைசி வரிகளில் எதுகை எட்டிப்பார்க்கிறது,, வாலியின் கவிதைகளில் இதைப் பார்த்திருக்கிறேன்.


பிரியாத பெருங்கடலையே நான்காய் பிரித்த மனிதன்
பிரிந்தே கிடக்கும் நிலத்தை- பாகப்
பிரிவினை செய்வதில் ஒன்றும் வியப்பில்லை தான்!
அதற்காக,
அணு கருவினை, ஆயுத வயலில் விதைத்து
உயிர்களை களை எடுத்து - அடுக்கி வைக்கும்
வைக்கோல் போர்களாய் "உலகப் போர்கள்"!

கடலும் மனிதனும்: மனிதன் பிரியாத கடலைப் பிரித்தவன் மனிதன்.. சிந்தனைகள் அருமை. (ஏம்பா நாலாவா பிரிச்சான்?) பிரிந்த நிலத்தை பிரிப்பதில் வியப்பில்லைதான். உலகச்சண்டை எதிலே இருக்கிறது? நிலத்தில் தான்... அதாவது நிலத்திற்காக,...
அண்க்கருவினை ஆயுத வயலில் விதைப்பது களையெடுக்க வேண்டுமே தவிர நீங்கள் சொன்னமாதிரி உயிர் களை எடுக்க அல்ல தானே!!.. உயிர்களை களை என்று இரண்டு வார்த்தைகள் வந்துவிட்டது... ஒரு வார்த்தை எடுத்துவிட்டாலே அர்த்தம் மாறாது,,,, எடுத்துப் படித்துப் பாருங்கள்..

மதிய உணவு போடுவதால், பசி கொண்ட நேரத்தில்
பள்ளி என்று கூட பார்க்காமல் பந்தி கொள்ளும்,
கொண்ட பிறகு முந்திக் கொல்லும் தீவிரவாத "தீ"!

ஏங்க! கும்பகோணத்த இன்னும் மறக்கல போல,,,, எல்லா நேரத்திலும் எல்லா காலத்திலும் இது ஆவதில்லை... நீங்கள் சொன்ன பட்டியல் அனைத்தும் நிதமும் ஆகிக்கொண்டிருப்பவைதான்... இது இங்கே சேராது...
பந்தி கொள்ளூம். முந்தி கொல்லும்... அருமையான எதுகை.

மதங்களின் பெருமைகளை சொல்லி மாநாடு நடத்த
'கட்அவுட்'களாய் வைக்கப்படும்
மதம் கொண்ட கலர் வரங்களாய் "கலவரங்கள்"!

இந்த மதங்களைப் பற்றி பேசினாலே டென்ஷன் தலைகேறிவிடும்... அதனால அடுத்து...

இப்படி இத்தனை ஆபத்துக்களுக்கு நடுவே
உயிருடன் வாழ்வதே சாதனை!
இதை எல்லாம் தாண்டி,
காதலிக்கப் புறப்படுவது அதை விட சாதனை!
காதலே உன் காதில் விழாமல் இருந்த உன்னிடம்
என் காதலை சொல்லிய பிறகும் கூட
இன்னும் நீ யோசிப்பது - சோதனை!

அபாரமாக போய்கொண்டிருந்த நீங்கள் திடீரென்று காதல் என்று இறங்கிவிட்டீர்களே!! கவிதையின் பாதை சற்று விலகியதுபோல தோற்றமளிக்கிறது... ஆனாலும்.... இத்தனை ஆபத்துகளைத்தாண்டி வாழ்வது சாதனைதான்...அதிலும் காதல் அதைவிட சாதனை


நீ நின்று நிதானமாய் யோசிப்பதற்கும்
நான் உன் நினைப்பை மென்று தின்று காத்திருப்பதற்கும்
நேரமில்லை என்னவளே!
கொஞ்சம் தாமதப்பட்டாலும்,
சொர்க்கத்தில் தான் நாம் இனி சேர முடியும்!

லெனின்... முடிந்தவரையில் காதல் கவிதையில் என்னவள் தவிர்த்து வேறு ஒரு வார்த்தை இடலாம்...

ஏனென்றால்,
ஐம்பது வயது வரை வாழ்ந்தாலே
'அதிக நாள் வாழ்ந்த'தற்கான
விருது கொடுக்கும் காலமிது!

இப்படியெல்லாங்கூட விருது கொடுக்கிறார்களா?

முடிவெடு! விடை கொடு!
இல்லையென்றால் விட்டு விடு!
அதோ... அணைக்கும் தூரத்தில்.... அடுத்தவள்!

அடுத்தவளிடம்,
Hello... excuse me...Do you have one min pls?

யப்பா! கில்லாடி நீங்க... அடுத்தவளா?

முடிவாக, இயற்கையை சாடிவிட்டு அதனாலே காதலைக் கலந்து ஒரு தோசை சுட்டிருக்கிறீர்கள்...(சாதாவா ஸ்பெஷலான்னு கேட்றாதீங்க) இயற்கையில் அருமையான சிந்தனைகள் கலந்து குழம்பு வைத்திருக்கிறீர்கள்.. காதல் எப்போதுமே கலர்ஃபுல்தான்.. அதனால் அதைப்பற்றி பேச அவசியமில்லை... கடைசி வரிகள் என்னை சிரிக்க வைத்தது.. அருமை லெனின்... உங்கள் பயணம் தொடரும்..
(அடுத்த தோசை எப்ப சார்?)

மதுரகன்
09-01-2007, 04:46 PM
இயற்கை மற்றும் செயற்கைப் பேரழிவுகளை அருமையாய் விபரித்திருக்கிறீர்கள்..
என்றாலும் கடைசிவரிதான் இப்போதும் என் நினைவில் ஊசலாடுகிறது..