PDA

View Full Version : மாறாத வண்ணத்துப் பூச்சி...



mayan
04-01-2007, 04:37 PM
மாறாத வண்ணத்துப் பூச்சி...

என் இளம் வயது புகைப்படமும்
அப்போது நான் வரைந்த
வண்ணத்துப் பூச்சியின் ஓவியமும்
சுவரில்
அருகருகே தொங்குகின்றன.
என் புகைப்படத்தின்
வாயிலாக
பின் நோக்கிப்
பயணிக்க இயலாத
காலத்திற்குள்
சென்று வருகிறேன்.
ஓவியத்தின் வழியாய்
சேமித்து வைத்த கற்பனைக்குள்
புகுந்து வெளியேறுகிறேன்.
இருந்த போதிலும்
வெளியில்
பறந்து திரியும்
வண்ணத்துப் பூச்சியும்
ஓவியத்தில் சிறை வைக்கப்பட்ட
வண்ணத்துப் பூச்சியும்
இன்றும்
கொஞ்சம் கூட மாறவில்லை.

ஆதவா
04-01-2007, 06:58 PM
அருமையான பதிவு மயன்....
மயன் எனக்கு மிகவும் பிடித்த பெயர்.. கலைகளிலே வல்ல மயன். இது இட்ட பெயராக இருக்க முடியாது...

ஞாபங்களில் பலவகை.. நீங்கள் சொன்னது ஒருவகை,. ஞாபகக் கவிதைகள் பல நமக்குத் தோன்றுகின்றன.
இந்த கவிதை நாயகனும் கலையரசனாக காட்டுகிறீர்... நன்று.

இது என் ஞாபகம்:

கிணற்றடி சப்தம்
இன்னும் அகலவில்லை
கூச்சல் குழப்பத்திற்கிடையில்
கயிரோடு உறவாடு பெற்றெடுத்த
நீரைக் காணும் காட்சியும்,

புல் பூண்டுகளை மிதித்து
ரீங்காரமிடும் கொசுக்களையும்
வண்டுகளையும் கடந்து வந்த
அந்த சப்தமும்

அரைகுறை நிர்வாணமாய்
வீட்டுக்கு வீடு ஓடி திரிந்து
என் வயதுச் சிறார்களோடு
கொட்டமடித்த வாழ்க்கையும்

ஆட்டமும் பாட்டுமாய்
அமர்க்களப்படுத்தி
மண்ணிலே மண்டியிட்ட
காலமும்

ஒரு தலையாய்
காதலைச் சொல்லி
வாங்கிக் கட்டிய என்
முதல் காதலும்

(இப்படி சொல்லிக் கொண்டே போகும்
என் கவிதையும்)

என் கண்களை விட்டு
இன்னும் அகலவில்லை

அறிஞர்
04-01-2007, 09:55 PM
வண்ணத்து பூச்சியின் நினைவுகள் அருமை...

சில படங்களை பார்க்கும்போது தோன்றும் நினைவுகள் என்றும் அழியாதவை.....

ஆதவனின் மலரும் நினைவுகள் மிக அருமை.......

ஆதவா... மலரும் நினைவுகளை ஒட்டி ஒரு தலைப்பில் தனி பதிப்பாக கவிதை கொடுங்கள்.. சிறப்பாக இருக்கும்.

meera
05-01-2007, 08:20 AM
மாறாத வண்ணத்துப் பூச்சி...


பறந்து திரியும்
வண்ணத்துப் பூச்சியும்
ஓவியத்தில் சிறை வைக்கப்பட்ட
வண்ணத்துப் பூச்சியும்
இன்றும்
கொஞ்சம் கூட மாறவில்லை.

மயன்,

அழகான நினைவுகள்.தொடருங்கள்.

இந்த வண்ணத்துப்பூச்சிக்காக அப்பாவை அழவைத்த காலம் எல்லாம் உண்டு.ம்ம்ம்ம்ம்ம்ம்:D :D :D

meera
05-01-2007, 08:23 AM
ஆதவா,

உங்க நினைவுகள் நல்லா இருக்கு.அதுலையும் இந்த வரி :


ஒரு தலையாய்
காதலைச் சொல்லி
வாங்கிக் கட்டிய என்
முதல் காதலும்

ஆதவா
05-01-2007, 08:44 AM
வண்ணத்து பூச்சியின் நினைவுகள் அருமை...

சில படங்களை பார்க்கும்போது தோன்றும் நினைவுகள் என்றும் அழியாதவை.....

ஆதவனின் மலரும் நினைவுகள் மிக அருமை.......

ஆதவா... மலரும் நினைவுகளை ஒட்டி ஒரு தலைப்பில் தனி பதிப்பாக கவிதை கொடுங்கள்.. சிறப்பாக இருக்கும்.

நன்றிகள் கோடி.. முதலில் மயனுக்கு எனது நன்றி.. கண்டிப்பாக அறிஞரே!!! மலரும் நினைவுகள் திரி தொடங்குவேன்..

ஆதவா
05-01-2007, 08:47 AM
ஆதவா,

உங்க நினைவுகள் நல்லா இருக்கு.அதுலையும் இந்த வரி :

நன்றி மீரா அவர்களே!! அது நிஜமாகவே மறக்க முடியாத முதல் காதல்... அது சுவாரசியமானது. அவள் என்னை காதல் என்ற வார்த்தைக்கு தகுதியானவன் நானா என சிந்திக்கவைத்தவள்.. நினைவுகள் மறக்கத் தகாதது.. அவள் பற்றி பிறகு சொல்லுகிறேன்.

mayan
05-01-2007, 03:36 PM
கவிதையைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி

இது ஞாபகங்களைப் பற்றிய கவிதை அல்ல
என்பதை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன்

ப்ரியன்
06-01-2007, 05:01 AM
மாறாத வண்ணத்துப் பூச்சி...

என் பால்ய வயது புகைப்படமும்
அப்போது நான் வரைந்த
வண்ணத்துப் பூச்சியின் ஓவியமும்
சுவரில்
அருகருகே தொங்குகின்றன.
என் புகைப்படத்தின்
வாயிலாக
பின் நோக்கிப்
பயணிக்க இயலாத
காலத்திற்குள்
சென்று வருகிறேன்.
ஓவியத்தின் வழியாய்
சேமித்து வைத்த கற்பனைக்குள்
புகுந்து வெளியேறுகிறேன்.
இருந்த போதிலும்
வெளியில்
பறந்து திரியும்
வண்ணத்துப் பூச்சியும்
ஓவியத்தில் சிறை வைக்கப்பட்ட
வண்ணத்துப் பூச்சியும்
இன்றும்
கொஞ்சம் கூட மாறவில்லை.

நல்ல அருமையான கவிதை மயன்...வாழ்த்துக்கள்...

சில திருத்தங்கள் சொல்கிறேன்

முதல் வரியில் பால்ய வயது சரியாக வரவில்லை என்பது என் கருத்து...

5 வரியில் என் தேவையில்லை

வெகுநாள் கழித்து ஒரு கவிதை சிறகு கொண்டு மனத்தோட்டத்தில் அமர்ந்து,பறந்து அழகாக்கிச் செல்கிறது.நன்றிகள் பல நல்ல கவிதை தந்தமைக்கு

மயூ
06-01-2007, 06:13 AM
அருமை அருமை!
பழைய நினைவுகளை மீட்டுவதே தனி சுகம்தான்.

mayan
06-01-2007, 07:25 AM
படித்து மகிழ்ந்த நண்பர்களுக்கு நன்றி.

கவிதைக்குத் திருத்தம் சொன்ன இவன் ப்ரியனுக்கு நன்றி.
முடிந்த வரை பொருத்தமான அல்லது மிகப் பொருத்தமான
சொற்களைத்தான் தேர்வு செய்கிறேன்.

பால்ய வயது என்று குறிப்பிட்டது காலத்தைக் குறிப்பதற்காகத்தான்.
பால்யத்திற்கு மாற்று வார்த்தைகள் பல இருந்தாலும்
இந்த வார்த்தை சரியென்று பட்டதால் எழுதினேன்.

பழையா ஞாபகங்கள் என்பது என்ன?

திரும்பி வராத காலத்திற்குள் பயணித்து நமக்குத் தேவைப்படும் மகிழ்ச்சியான அல்லது துக்கமான
கணத்தை மீட்டெடுப்பதுதான்.

காலத்திற்குள் முன்னும் பின்னும் போய் வருவதைப் பற்றி இந்தக் கவிதை பேசி இருந்தாலும்
மிக மிக முக்கியமான ஒன்று மாற்றம்.

காலத்திற்குள்ளும், கற்பனைக்குள்ளும் போய் வர முடிந்தாலும்,
வண்ணத்துப் பூச்சி மாறாமல் அப்படியேதான் இருக்கிறது.
பால்ய காலப் புகைப்படத்தில் இருக்கும் நானுக்கும்
இந்தக் கவிதையை எழுதிய நானுக்கும் நிறைய வேறுபாடுகள். மாற்றங்கள்.

இதைப் பற்றித்தான் இந்தக் கவிதை பேசுகிறது.

ப்ரியன்
06-01-2007, 07:32 AM
படித்து மகிழ்ந்த நண்பர்களுக்கு நன்றி.

கவிதைக்குத் திருத்தம் சொன்ன இவன் ப்ரியனுக்கு நன்றி.
முடிந்த வரை பொருத்தமான அல்லது மிகப் பொருத்தமான
சொற்களைத்தான் தேர்வு செய்கிறேன்.

பால்ய வயது என்று குறிப்பிட்டது காலத்தைக் குறிப்பதற்காகத்தான்.
பால்யத்திற்கு மாற்று வார்த்தைகள் பல இருந்தாலும்
இந்த வார்த்தை சரியென்று பட்டதால் எழுதினேன்.

நல்லது மயன்...(இவன் ப்ரியன் அல்ல 'ப்ரியன்' என்றே அழையுங்கள் ப்ரியன் என்ற பெயர் தமிழ்மன்றத்தில் கிட்டாததால் தேர்ந்தெடுத்த பாவனைப்பெயர் (username) ivanpriyan)...

நல்லது மயன் அவ்வாறு சொற்களை தேர்ந்தெடுப்பதே சிறப்பு நான் சுட்டிக் காட்டியது 'பால்ய வயது' என்றச் சொல் பயன்படுத்த இயலாது 'பால்ய பருவம்' என்பதே சரியானச் சொல்...அதையே குறித்திருந்தேன்...


காலத்திற்குள் முன்னும் பின்னும் போய் வருவதைப் பற்றி இந்தக் கவிதை பேசி இருந்தாலும்
மிக மிக முக்கியமான ஒன்று மாற்றம்.

காலத்திற்குள்ளும், கற்பனைக்குள்ளும் போய் வர முடிந்தாலும்,
வண்ணத்துப் பூச்சி மாறாமல் அப்படியேதான் இருக்கிறது.
பால்ய காலப் புகைப்படத்தில் இருக்கும் நானுக்கும்
இந்தக் கவிதையை எழுதிய நானுக்கும் நிறைய வேறுபாடுகள். மாற்றங்கள்.

இதைப் பற்றித்தான் இந்தக் கவிதை பேசுகிறது.


இதையே நானும் உணர்ந்தேன் நன்றி

mayan
06-01-2007, 07:51 AM
நன்றி ப்ரியன். மாற்றம் செய்து விட்டேன்.
மொழி மீதான விழிப்புணர்வு நிறைய வேண்டும்.
கற்றுக் கொண்டிருக்கிறேன்.

ப்ரியன்
06-01-2007, 07:56 AM
மொழி மீதான விழிப்புணர்வு நிறைய வேண்டும்.
கற்றுக் கொண்டிருக்கிறேன்.

உண்மை மயன்...நானும் இப்போதுதான் கற்க ஆரம்பித்திருக்கிறேன்

பென்ஸ்
06-01-2007, 11:53 AM
மயன்,

எங்கோ தூள் பிடித்து கிடக்கும் பழைய பள்ளி குறிப்புகள் முதல்
பொக்கிசங்கள் எல்லாம் எடுத்து பார்க்கும் போது அவை மற்றும்
அல்லாமல் நினைவுகளும் தூள் தட்ட படுகின்றன.

அப்பாவிம் கட்டி புத்தகத்தை பிரிக்கும் போது கானும் வண்ணாத்து
பூச்சிகள் , அன்று இருந்த நம்மை மட்டும் இன்றி நம்மை சுற்றி
இருந்தவற்றையும் நினைவு படுத்தும்... சில நேரங்களில் சம்மந்தமில்லாத சம்பவங்களையும்....

ஆனால் எல்லாம் மாறி போயிருக்கும்...
உயிரில்லாத எல்லாம், மாறிபோயிருக்கும்.

என் நினைவுகளை அப்படியே ஒத்து , கவிதையாய் கொடுத்த ஆதவனுக்கு நன்றி....

விக்கி..
அப்பப்ப வந்து கவிதைக்கு விமர்சனம் கொடுத்து போகலாமே...
புதியவர்களை ஊக்குவிப்பது தனி சுகம்தானே...

ப்ரியன்
07-01-2007, 04:11 AM
விக்கி..
அப்பப்ப வந்து கவிதைக்கு விமர்சனம் கொடுத்து போகலாமே...
புதியவர்களை ஊக்குவிப்பது தனி சுகம்தானே...

எனக்கும் ஆசைதான் பென்ஸ் ஆனா பாருங்க இந்த மடலை கூட இன்னிக்கு (ஞாயிறு) அலுவலகத்திலிருந்துதான் அனுப்புகிறேன்... :eek:

ஷீ-நிசி
07-01-2007, 11:54 AM
ஓ ப்ரியனும் , இவன் ப்ரியனும் ஒன்றுதானா....

என்னவன் விஜய்
17-05-2008, 10:52 PM
அது ஒரு பருவம். மாறியது நானும் நீங்களும், மாற்றியது காலமும் சூழலும், மாறாதது ............................?

இளசு
15-06-2008, 12:00 AM
மனமயக்கம் தரும் கவிதை..

ஓவியமும் புகைப்படமும்
காலநதியின் ஒரு கணத்தை உறையவைத்தவை..

வரையப்பட்ட வண்ணத்துப்பூச்சியும்
படம்பிடிக்கப்பட்டவனும்...
இன்று மாறியிருப்பார்கள்..
மாறியே தீரவேண்டும்..

உறைந்த பிம்பங்களைக் கொண்டு
உசுப்பலாம் பழைய நினைவுகளை..
கொஞ்சம் பாவனை கூட கொள்ளலாம்..பாலனாக..

ஆனாலும்
மாண்டால் திரும்பாதது மனித உயிர் மட்டுமன்று..
காலக்கணங்களும் அதன் திடநிகழ்வுருக்களும்..

பாராட்டுகள் மயன்..

ஆதவா,

உன் அழகிய ஆட்டோகிராப் அருமை!