PDA

View Full Version : நீ மட்டும் எங்கே?



rambal
29-04-2003, 06:40 PM
நீ மட்டும் எங்கே?

இன்று
கண்ணிவெடிகள்
அகற்றப்பட்டு சாலைகள்
எல்லாம்
பேறுகாலம் முடிந்த தாயாய்..

துப்பாக்கி ஓசைகள்
நிறுத்தப்பட்டு
புல்லாங்குழல்
ஊதுவதற்கு முகூர்த்தம்
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்..

அவர்கள் கூட
சமரசத்திற்கு
ஒத்துக் கொண்டார்கள்..
முகத்திற்கு முன்
துப்பாக்கி தூக்கியவர் எல்லாம்
இன்று வெட்கமில்லாமல் புன்னகை
ஒட்டி உலா வருகின்றனர்..

செத்துப் போன உன்
கூட்டாளிகள் எல்லாம்
வீரமரணம் அடைந்ததாக
அறிவிக்கப்பட்டு
போராளியாக.. தியாகியாக..

எல்லாம் கூடி
வருகிறது..
இனி குண்டுச் சத்தங்களும்
அழுகை சத்தங்களும் இருக்கா..
பங்கர்கள் அனேகமாக
ஒளிந்துபிடித்து விளையாட உதவும்..

பெண்டுகளும் பிள்ளைகளும்
இனி மகிழ்ச்சியாக..
இருப்பின் நிலையில்
அமைதியாய்..
தேசம் விட்டு தேசம் அகதியாய்
திரிய வேண்டியிருக்கா..

அடி பட்ட இடத்திற்கு மருந்தாய்
வைத்த இந்த மண் நம்முடய..
ஏலேலோ பாடி உன் குரல் கலந்த
வீசும் காற்றும் நம்முடைய..
இந்தக் குருவிகளும்
பட்டாமூச்சிகளும் கூட..
இனி பீரங்கிகளுக்குக் கூட
வேலையிருக்கா..


இந்த தருணத்திற்காகத்தானே..
நட்பு, குடும்பம், பிள்ளை
வேண்டாம் என்று
ஓடிப் போனாயே..

இப்போது
நீ மட்டும் எங்கே நண்பனே?

நிலா
29-04-2003, 09:15 PM
தொலைத்த அமைதி திரும்பி விட்டது!
தேடிய நண்பன் தொலைந்துவிட்டான்!

அருமையான கவிதை! தொடருங்கள்!

gankrish
30-04-2003, 09:15 AM
ராம் கவிதை அபாரம். இன்னும் இது போல் எத்தனை நண்பர்கள் தொலைந்து இருக்கிறார்களோ.

Narathar
30-04-2003, 10:14 AM
நிதர்சனம்!
உங்கள் கவிதை!!

குமரன்
04-05-2003, 08:35 PM
அமைதிக்கு விதையான
நண்பன் பற்றி மனதில் சோகம்
விதைக்கும் கவிதை.

பாராட்டுகள்...ராம்.
அமைதி விளையும் என்ற நம்பிக்கையில்...

kaathalan
04-05-2003, 09:33 PM
தொலைந்த அமைதி மீண்டும் வந்து கொண்டிருக்கிறது, ஆனால் தொலைந்த நண்பனைத்தான் இன்னும் காணவில்லை தான்!. போக்கிடம் தந்த நாட்டில் முதலில் உயிர் பிச்சை வேண்டும் என்று கேட்டவன் இப்போது கொஞ்சம் கல்வி மற்றும் பொருளாதார உயர்வு நிலையும் வேண்டும் என்கிறான். அவன் சொல்லவதும் சரியாக தான் படுகிறது, அவன் என்ன அமைதியை மட்டுமா தொலைத்தான்!!

ஊரில் இருக்கும் நண்பன் உண்மையிலே கேட்டது போல் இருக்கிறது உங்கள் கவிதை கவிஞரே. உண்மையிலே மனதில் ஒரு பாராம் கல்லை வைத்து விட்டது போல் இருக்கிறது, இருக்கப்போகிறது. இந்த கல்லை கொஞ்சம் கனகாலம் தாங்கப்போகிறேன் நானும் தான். அப்படித்தான் ஆகிவிட்டது.

gans5001
05-05-2003, 02:10 AM
எத்தனை பேரின் தொலைத்தலில் இந்த அமைதி...

அறிஞர்
05-05-2003, 07:56 AM
நல்ல கவிதை.. வாழ்த்துக்கள்...

poo
05-05-2003, 10:11 AM
உன் கவிதைகளில் தெரியும் பொறி மீண்டும்........

பாராட்டுக்கள் ராம்!!!

Nanban
02-06-2003, 12:51 PM
அமைதியின் விலை - நட்பு, குடும்பம், உறவுகள்.....
இந்த விலையின் மதிப்பு எதிர்காலத்திலும் எல்லோருக்கும் உரைக்க வழி வகை செய்வதே அமைதிக்கு கொடுத்த விலைக்கு செய்யும் மரியாதை....
இல்லையென்றால், இன்று நம்மை ஆளும் குரங்காட்டிகள் அங்கும் வந்து விடுவர்.....

சகுனி
07-06-2003, 06:30 AM
நாம் எத்தனையோபேரை இழந்துபெற்றதுதான் இந்த சுதந்திரம் என்பதை ஞாபகப்படுத்துகிறது இந்த அற்புதமான கவிதைப்படைப்பு!

முத்து
07-06-2003, 01:31 PM
காலில் குத்தி முறிந்த முள் தரும் வலியைப்போல உணர்வுகளைக் காட்டும் அருமையான கவிதை...ராம்பால் அவர்களே... பாராட்டுக்கள்..