PDA

View Full Version : நான் நிரந்தரமானவன்!ப்ரியன்
27-12-2006, 10:04 AM
கண்ணதாசன்...

காலத்தின் கைகளில் அதிர்ந்துகொண்டே இருக்கும் கவிதை வீணை, எவ்வளவோ பேர் பருகியும் தீராத சந்த மதுகோப்பை, தேய்பிறை காணாத தேன் தமிழ் நிலவு, கவியரசருக்குக் காலமெல்லாம் காதல் மேல் உறவு.

http://www.vikatan.com/av/2006/dec/27122006/p179.jpg

மகரந்தச் சொற்களில் கவி பாடிய தென்றல், மரண தேவன் மார்பில் ஏறி விளையாடிய குழந்தை.

வார்த்தைகளில் மட்டுமில்லாமல் வாழ்க்கையிலும் காட்டாறாய் பொங்கிப் பிரவகித்தவர். நான் நிரந்தரமானவன். அழிவதில்லை என செருக்காய் சிரித்த சிறுகூடல்பட்டிச் சிங்கம். வாழ்வே தடாலடியான தனி சினிமா... கவிஞரின் வாழ்விலிருந்து இங்கே கொஞ்சம்...

http://www.vikatan.com/av/2006/dec/27122006/p181a.jpg

* கண்ணதாசனுக்கு 3 மனைவிகள். 15 பிள்ளைகள். அவர் வீடு முழுக்க எப்போதும் குழந்தைகளால் நிறைந்திருக்கும். குழந்தைகளின் பெயர்கள் சமயங்களில் அவருக்கு மறந்துவிடுமாம். என்னடா இது... எவனுக்கு என்ன பேர் வெச்சோம்னே நினைப்பில்லாம மறந்து போகுது. பேசாம எல்லாத்துக்கும் 1, 2, 3&ன்னு நம்பரை எழுதி மாட்டிட வேண்டியதுதான் என்பாராம் சிரித்துக்கொண்டே.

* ஒருமுறை சிங்கப்பூருக்குச் சென்றிருந்தபோது ஷாப்பிங் போயிருக்கிறார். குழந்தைகளுக்கு டிரெஸ் எடுங்களேன் என நண்பர்கள் சொல்ல, இவரும் ரொம்பவும் ஆர்வமாக விதவிதமான வண்ணங்களில் ஆடைகளை அள்ளியிருக்கிறார். அருகில் இருந்த நண்பர் பிரமிப்பாக, உங்க எல்லாக் குழந்தைகளோட டிரெஸ் சைஸம் உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்க, எவனுக்குத் தெரியும்? எங்க வீட்லதான் எல்லா சைஸ்லேயும் குழந் தைங்க இருக்காங்களே. யாருக்கு எது பொருந்துதோ அதைப் போட்டுக்க வேண்டியதுதான்! என்றாராம் அதிர அதிரச் சிரித்தபடி.

http://www.vikatan.com/av/2006/dec/27122006/p181.jpg

* நேரம் கிடைத்தால், குடும்பத்துடன் மொத்தக் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு சுற்றுலா செல்வாராம். அப்படி ஒரு நாள், எல்லோருடனும் பெங்களூருக்குச் சென்றிருக்கிறார். அங்கேயிருந்து திடீரென அப்படியே ஊட்டிக்குப் போயிருக்கிறார்கள். ஊட்டியில் குடும்பத்துடன் இவர் தங்கியிருந்த ஓட்டலில் ஓர் ஊழியர், யாரோ ஒருவரிடம், ஸாரி சார். ரூம் எல்லாமே ஃபுல். ஏதோ ஸ்கூல் லேருந்து டூர் வந்திருக்காங்க என்று சொன்னதைக் கேட்டுக் கொந்தளித்திருக்கிறது கவியரசர் குடும்பம். கவிஞரோ சிரித்தபடியே, விடு விடு, அவன் சரியாத் தான் சொல்றான். நான் ஒரு ஸ்கூலையேதானே பெத்திருக்கேன் என்றா ராம்.

http://www.vikatan.com/av/2006/dec/27122006/p180e.jpg

* முதல் மனைவி பொன்னழகியுடன் முதலிரவு. அவர் கிராமத்துப் பெண்மணி. வீட்டில் பார்த்து வைத்த கல்யாணம். பால் சொம்புடன் வந்த மனைவியை உட்காரவைத்து, நீ எப்படி நடந்துக்கணும் தெரியுமா... என்று தன் குடும்பத்தைப் பற்றி, நண்பர்கள், தொழில் என எல்லாம் பேசியிருக்கிறார். பொன்னழகி எல்லாவற்றுக்கும் தலையை ஆட்டி ஆட்டிக் கேட்க, சரிதான்... அடக்கமான பொண்ணா அமைஞ்சுட்டா என்று உற்சாகமாகி விட்டார். காலையில் கண்ணதாசன் வெளியே வர, பொண்ணு நல்லபடியா இருந்தாளா? அவளுக்குக் காது மட்டும் கொஞ்சம் சரியா கேட்காது. மத்தபடி ரொம்ப நல்ல பொண்ணு என்று சொல்ல, கவியரசருக்கு அதிர்ச்சி. நேத்து நைட் நான் சொன்னதுக்கெல்லாம் தலையை ஆட்டி என்னை நம்ப வெச்சுட்டியேடி என மனைவியைக் கிண்டலடித்த கவியரசர், கவிஞன் பாடுவது தமிழ்ப் பாட்டு, வந்த பொண் டாட்டியோ கைநாட்டு என்றாராம் அழகாக.

http://www.vikatan.com/av/2006/dec/27122006/p180d.jpg

* முதல் கல்யாணம் நடந்து கொஞ்ச நாள்தான் ஆகியிருக்கும். கவிஞரின் அண்ணன் ஏ.எல்.சீனிவாசன் வீடு இருந்த தெருவிலேயே, ஒரு கட்டடத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் டிராமா ட்ரூப் இருந்தது.

அதில் நடிகையாக இருந்த பார்வதியுடன் காதல். இது என்.எஸ்.கே&வுக்குத் தெரிய வர, அடேய் கவிஞா... எனக்கே தண்ணி காட்டிட்டியே! என்று அவரே திருமணம் செய்து வைத்தாராம்!

http://www.vikatan.com/av/2006/dec/27122006/p179c.jpg

* கிட்டத்தட்ட ஐம்பதை நெருங்கும் நேரத்தில், மூன்றாவது கல்யாணம். வள்ளியம்மை, கவிஞருக்கு ரசிகையாக அறிமுகமானவர். கல்லூரி மாணவியான வள்ளியம்மை, கவிஞருக்கு அடிக்கடி கடிதங் கள் எழுதுவது வழக்கம். ஒருமுறை அந்தக் கல்லூரியின் வழியாகப் பயணம் போன கண்ணதாசன், திடீரெனக் கல்லூரிக்குள் நுழைந்துவிட்டார். நேராக முதல்வர் அறைக்குப் போனவர், வள்ளியம் மையைக் கூப்பிடுங்க என வரச் சொல்லி பார்த்துப் பேசினார். அந்த இன்ப அதிர்ச்சி அடுத்தடுத்துத் தொடர, கடித வழியிலேயே நட்பு தொடர்ந்து, காதலாக வளர்ந்து, திருமணத்தில் முடிந்திருக்கிறது.

http://www.vikatan.com/av/2006/dec/27122006/p179b.jpg

வள்ளியம்மையைக் கல்யாணம் செய்துகொண்டு, அண்ணன் வீட்டு வாசலில் நின்றிருக்கிறார் கவிஞர். அண்ணன் பயங்கரக் கோபமாகி, குழந்தைங்க இருக்கும் போது இந்த வயசுல என்னடா இது? என டென்ஷனாக, அமைதியாக நின்றிருக்கிறார் கவிஞர். நீயெல்லாம் திருந் தவே மாட்டே. எப்பிடி யாவது போய்த் தொலை என அவர் சொன்னதும், அண் ணன் மன்னிச்சுட்டாரு, வா வா வா! என வள்ளியம்மையை அழைத்துக் கொண்டு உள்ளே போயி ருக்கிறார் கவிஞர்.

* எத்தனை துயரமான பொழுது களிலும் தன் சோகம் குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது என்பதில் கவனமாக இருந்தவர் கவியரசர். அவர் குழந்தைகள் முன்னால் கதறி அழுதது ஒரே ஒரு முறைதான்.

http://www.vikatan.com/av/2006/dec/27122006/p180c.jpg

சினிமா தயாரிப்பில் ஈடுபட்டு, பணமெல்லாம் இழந்து நின்ற நேரம். தீபாவளி வந்துவிட்டது. பணத்துக்காக பல இடங்களில் முயற்சி செய்தும் கிடைக்காமல் போகவே, குழந்தை களுக்கு எதுவும் செய்ய முடியாத சூழல். தீபாவளிக்கு முதல் நாள் ஊரே சந்தோஷத்தில் இருக்க, அறைக் குள் படுத்திருந்த கவிஞரிடம் பட்டா சும், புத்தாடைகளும் கேட்டு நின்றிருக் கின்றன குழந்தைகள். அப்படியே அவர்களை அணைத்தபடி உடைந்து போய் அழுதிருக்கிறார் கவிஞர். அன்றைக்கு ஒரு கம்பெனியில் பாட்டு எழுதக் கூப்பிட, அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே, ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாதவன் இதயத் திலே என்று எழுதினார். அந்தப் பாடலுக்காக வாங்கிய பணத்தில் அத்தனை பேருக்கும் புத்தாடைகள் வாங்கினாராம்.

http://www.vikatan.com/av/2006/dec/27122006/p179a.jpg

* கல்லக்குடி போராட்டத்தில் கண்ணதாசனைச் சிறையில் அடைத்துவிட்டது போலீஸ். சிறையில் இருந்து வீட்டுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார் கவிஞர். அதில், இங்கே ஜெயில்ல இருக்க முடியலை. எனக்கு வயிற்றுப் போக்காக இருக்கிறது. இங்கேயே இருந்தா, செத்துப் போயிருவேன். அதனால், உடனே எனக்கு ஜாமீனுக்கு ஏற்பாடு பண்ணுங்க என எழுதிவிட்டு, கடைசியில், எனக்கு வீட்டில் 20 வெள்ளைப் பணியாரம் செய்து அண்ணனிடம் கொடுத்து விடவும். 20 இல்லை யென்றால் 10கூடப் போதும் என எழுதியிருக்கிறார். கவிஞருக்கு வெள்ளைப் பணியாரமும் காரச் சட்னியும் அவ்வளவு பிடிக்கும்.

* ஒருமுறை சிவாஜி யைப் பார்க்க அவரது இல்லத்துக்குச் சென்றிருக்கிறார் கவியரசர். வாடா கவிஞா... என சிவாஜி வாஞ்சையுடன் வரவேற்க, கொஞ்சமும் யோசிக்காமல், சட்டென்று கோபமாகி, என்னடா நடிகா? எனக் கேட்டிருக்கிறார். இந்தச் சம்பவத்துக் குப் பிறகு இருவரும் கொஞ்ச நாள் பேசிக்கொள்ளவில்லை.

http://www.vikatan.com/av/2006/dec/27122006/p180b.jpg

* தன் மகன்களில் கலைவாணன் கண்ணதாசனை கவிஞருக்கு ரொம்பவும் பிடிக்கும். என்னப் பத்தி ஒரு பாட்டு எழுதுங்களேன்- என்று கலைவாணன் கேட்க, அதான் ஏற்கெனவே எழுதிட்டேனடா... ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந் தாயோ? பாட்டை உனக்காகத்தானே எழுதினேன் என்றார் சிரித்துக் கொண்டே. அதைப் பார்த்த மற்ற குழந்தைகள், எங்களைப் பற்றி எழுத மாட்டீங்களா? என்று கோபத்துடன் கேட்க, அதுவும் எழுதிட் டேனே. ஒரேயரு ஊரிலே ஒரே யரு ராஜா... ஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை. அந்த ஒன்பதிலே ஒன்றுகூட உருப்படி யில்லைன்னு வருதுல்ல... அந்தப் பாட்டு உங்களை மனசில் வெச்சு எழுதினதுதான் எனச் சிரிக்க வைத்திருக்கிறார்.

http://www.vikatan.com/av/2006/dec/27122006/p180a.jpg

* கண்ணதாசன் காங்கிரஸில் இருந்தார். காங்கிரஸின் அப்போ தைய சின்னம் காளை மாடு. மயிலை மாங்கொல்லையில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காளை மாடு சின்னத்தில் வாக்களியுங்கள். நாடு சுபிட்சமாய் இருக்கும் என்று ஆதரவு கேட்டுப் பேசினார் கண்ண தாசன். மறுநாள் அதே இடத்தில் தி.மு.க. கூட்டம். அதில் பேசிய கலைஞர், நேற்று என் நண்பர் கண்ணதாசன் இங்கே காளை மாட்டுக்கு ஆதரவு கேட்டுப் பேசினார். அவர் பேச்சைக் கேட்டு காளை மாட்டுக்கு வாக்களித் தால் நாடு நன்றாக இருக்காது. அவருக்குத் தெரியாததல்ல... காளை மாடு கன்று போடாது. அதனால் நாட்டுக்குப் பயனில்லை என்றாராம். தனது தென்றல் பத்திரிகையில் அது பற்றி எழுதிய கண்ணதாசன், நண்பர் கலைஞர் சொல்வது சரிதான். காளை மாடு கன்று போடாது. ஆனால், காளை மாடு இல்லாவிட்டால் பசு என்றுமே கன்று போடாது. அதனால் மக்கள் அனைவரும் காளை மாடு சின்னத்துக்கே வாக்களியுங்கள் என ரிப்பீட் கவுன்டர் கொடுக்க, அதை கலைஞர் உட்பட அத்தனை பேரும் ரசித்தார்கள்.

http://www.vikatan.com/av/2006/dec/27122006/p180.jpg

* சிவாஜிக்கு அரசியல் தெரியாது என்று கண்ணதாசன் ஒரு மேடையில் பேசிவிட்டார். ராமன் எத்தனை ராமனடி படப்பிடிப்பில் இருந்த சிவாஜிக்குத் தகவல் தெரியப் படுத்தப்பட்டது. படத்தின் இயக்கு நரை அழைத்த சிவாஜி, இதுக்கு சரியான பதில் சொல்ற மாதிரி ஒரு ஸீன் வைக்கணுமே. அதை எப்படி வைக்கலாம்னு கண்ணதாசனிடமே போய்க் கேளுங்க என்று சொல்லி யிருக்கிறார். விஷயம் கண்ணதாசனிடம் செல்ல, சிரித்தாராம். படத்தில் வீர சிவாஜி நாடகத்தை ஒரு காட்சியா வெச்சுக்கலாம் எனச் சொல்லி, அந்த நாடகத்துக்கான வசனத்தையும் அவரே எழுதிக் கொடுத்தாராம். நாடகத்தில், எனக்கா அரசியல் தெரியாது என்று வீர சிவாஜியாக, சிவாஜி பேசிக்கொண்டே வருவதுதான் ஓபனிங் ஸீனே!

- நா.இரமேஷ்குமார்
நன்றி : விகடன் - 27-12-06.

erajesh_khanna
27-12-2006, 12:05 PM
PAYAN ULLA TAVAGALGAL KANATASAN AVARGALIN KADALAN NAN PLAPUTAGANGAL PADITU IRUKEREN NENGAL KODUTHA TAGALGAL SELA NAN PADITU IRATAVAI NADRI IVAN PERYAN AVARGALE

mgandhi
27-12-2006, 04:45 PM
\\கண்ணதாசன் காங்கிரஸில் இருந்தார். காங்கிரஸின் அப்போ தைய சின்னம் காளை மாடு. மயிலை மாங்கொல்லையில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காளை மாடு சின்னத்தில் வாக்களியுங்கள். நாடு சுபிட்சமாய் இருக்கும் என்று ஆதரவு கேட்டுப் பேசினார் கண்ண தாசன். மறுநாள் அதே இடத்தில் தி.மு.க. கூட்டம். அதில் பேசிய கலைஞர், நேற்று என் நண்பர் கண்ணதாசன் இங்கே காளை மாட்டுக்கு ஆதரவு கேட்டுப் பேசினார். அவர் பேச்சைக் கேட்டு காளை மாட்டுக்கு வாக்களித் தால் நாடு நன்றாக இருக்காது. அவருக்குத் தெரியாததல்ல... காளை மாடு கன்று போடாது. அதனால் நாட்டுக்குப் பயனில்லை என்றாராம். தனது தென்றல் பத்திரிகையில் அது பற்றி எழுதிய கண்ணதாசன், நண்பர் கலைஞர் சொல்வது சரிதான். காளை மாடு கன்று போடாது. ஆனால், காளை மாடு இல்லாவிட்டால் பசு என்றுமே கன்று போடாது. அதனால் மக்கள் அனைவரும் காளை மாடு சின்னத்துக்கே வாக்களியுங்கள் என ரிப்பீட் கவுன்டர் கொடுக்க, அதை கலைஞர் உட்பட அத்தனை பேரும் ரசித்தார்கள்.\\

கவிங்கர்களின் சண்டையில் தான் எவ்வளவு சுவாரசியம்

இளசு
27-12-2006, 09:17 PM
நேற்று விகடனில் படித்து ரசித்தேன்.. நன்றி ப்ரியன்..விகடனில் சின்னராசு எழுதிய கட்டுரை இங்கே உங்களுக்காக:


கவியரசர் கண்ணதாசன் மிகச் சிறந்த பாடலாசிரியர் மட்டுமல்ல. மிக உயர்ந்த கதை வசனகர்த்தாவும் ஆவார். அவர் ஈடுபாட்டுடன் அமர்ந்து சிரத்தையுடன் எழுதினால் அதற்கு இணையாக வசனம் யாரும் எழுத முடியாது என்கிற பிரமிப்பை ஏற்படுத்தக் கூடியவர்.

அவருடைய வசனங்களில் கவிதை நயமும், கருத்தாழமும் நிறைந்திருக்கும். தாய்க்குப் பின் தாரம் படத்தில் அய்யா பிள்ளை என்பவர்தான் வசனம் எழுதினார். அந்த வசனத்தை மேற்பார்வை செய்தவர் கண்ணதாசன். அவருடைய மேற்பார்வைக்கு அடையாளமாக அவருடைய அருமையான தமிழ் அந்த படத்திலே அங்கங்கே தலைகாட்டும்.

கதாநாயகி சொல்கிறாள்...
மாறி விட்டதடி மனம்!
வேலைக்காரி அதற்கு பதில் கூறுகிறாள்.
ஆறி விட்டதம்மா காபி!

இப்படி அங்கங்கே கவிதை வரிகள் அந்த படத்தில் தலைகாட்டும்.

கண்ணதாசன் முதன்முதலாக முழுத் திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதியது, இல்லற ஜோதி என்ற பெயரில் மாடர்ன் தியேட்டர் தயாரித்த படமே ஆகும். அந்தப் படத்தில் சிவாஜி, பத்மினி, ஸ்ரீரஞ்சனி, தங்கவேலு போன்றோர் முக்கிய பாத்திரமேற்று நடித்தனர்.

''பின்னால் திரும்பி பார்க்காமலே பேசுகிற அவசரம் பெண்களுக்கு இருப்பதால்தான், பெண்புத்தி பின்புத்தி என்கிறார்களோ?''

''தரித்திரம் போய்விட்டது. ஆனால் தரித்திரப்புத்தி இன்னும் போகவில்லை''
இந்த மாதிரி அர்த்தம் நிறைந்த உரையாடல்கள் இல்லற ஜோதி படத்தில் ஏராளமாக இருந்தது.

நடிகர் தங்கவேலு அந்தப் படத்தில் சிவாஜியின் தகப்பனாராக வருவார். சிவாஜிதான் ஒரு பெரிய எழுத்தாளனாக உருவாகி ஏராளமாக சம்பாதிக்கப் போவதாக பேசிக் கொண்டிருப்பார். இது அவர் தகப்பனாராக வரும் தங்கவேலுக்கு கொஞ்சமும் பிடிக்காது. ஒரு சமயம் சிவாஜி எழுதிய நாடகம் ஒன்றிற்கு சிவாஜி போய் வருவார். இந்த நாடகம் எழுதியதற்காக தனது மகன் நிறைய பணம் வாங்கிக் கொண்டு வருவான் என தங்கவேலு எதிர்பார்த்துக் கொண்டிருப்பார். ஆனால் நாடகம் எழுதியதைப் பாராட்டி சிவாஜிக்கு அந்த பேனாவை வீட்டில் கொண்டுவந்து காட்டும்போது, தங்கவேலு ரொம்பவும் எரிச்சலடைந்து பேசுகிற வசனமும், அடுக்கான வார்த்தைகளில் வரும்.

''முட்டாப்பயலே, மூணுமாசமா நாடகம் எழுதி மூணு அணா பேனா தந்தாம்னு வந்திருக்கியே மூதேவி போடா''
என்பதாக அந்த வசனம் கோபமாக பேசுவதற்கு எழுதப்பட்டாலும் அதன் தமிழ் நயம் நம்மைச் சிரிக்க வைக்கும்.

கண்ணதாசன் வசனம் எழுதி மிகப் பரமாண்டமான வெற்றியைப் பெற்ற படங்களில் எம்.ஜி.ஆர். நடித்த மதுரை வீரனும் ஒன்றாகும். அந்தப் படத்தில் எரிமலைப் போன்ற வசனங்களும் உண்டு. பனிமலை மாதிரி குளுமையான நகைச்சுவை வசனங்களும் உண்டு.''நாங்கள் அவனை தொடர்ந்து சென்றோம். ஆனால் அவன் முன் தொடர்ந்து சென்றுவிட்டான்''
''நீ ராஜகுமாரிக்கு அத்தை. நிஜமாகவே சொல்றேன். நீ கட்டாயம் செத்தே''
என்பன போன்ற சின்னச் சின்ன வசனங்களிலும் நல்ல தமிழ் சுவை இருந்தது
.
இளவரசி பொன்னியை வீரன் கடத்திப் போய்விட்டான் என்று அவனை பொன்னியுடன் கைது செய்து, பொன்னியின் தாய்மாமன் நரசப்பன் திருச்சி மன்னன் சபையில் கொண்டு போய் நிறுத்துகிறான். அத்துடன் வீரனுக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என நரசப்பன் திருச்சி மன்னரை வேண்டுகிறான். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட திருச்சி மன்னன் தன் தீர்ப்பை வழங்குகிறான்.

''வீரனே நீ பொன்னி மனச்சிறையில் ஆயுள் முழுக்க கிடந்து சாவாயாக அத்துடன் என்னுடைய தளபதி ஆவாயாக''
என்று திருச்சி மன்னன் தீர்ப்பு கூறுவதைக் கேட்டு திடுக்கிட்டு நரசப்பன் பதறிக்கொண்டு, ''அரசே'' என்கிறான்.
அதற்கு திருச்சி மன்னன் தொடர்ந்து, ''நீ போவாயாக!'' என பதில் கூறுகிறான். அந்த வசனத்தில் அரசாங்கமே சிரிப்பில் மூழ்கும்!


கண்ணதாசன், திருடாதே என்ற எம்.ஜி.ஆர். நடித்த சமூகப் படத்திற்கும் வசனம் எழுதியிருக்கிறார். திருடாதே படமும் மகத்தான வெற்றி பெற்ற படம். அந்தப் படத்திலும் கண்ணதாசனின் வசனம் நயமாக இருக்கும்.

''அவன் கழுவிய மீனில் நழுவிய மீனாச்சே''
என்பன போன்ற வசனங்களை அந்தப் படத்தில் கேட்கலாம்.

அதேபோல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் தயாரித்த நாடோடி மன்னன் படத்திலும் கண்ணதாசனின் முத்திரை பதித்த வசனங்கள் உண்டு.

''நாங்கள் கொள்ளையடிப்போம்; நல்லவர் உள்ளங்களை!
நாங்கள் தீயிடுவோம்; தீயவைகளுக்கு!
நாங்கள் கொன்று குவிப்போம்; கூடாதவைகளை!''
என்பதாக மிக அருமையான வசனங்களையெல்லாம் அந்தப் படத்தில் அவர் தந்திருப்பார்.

அதுபோல மகாதேவி, மன்னாதி மன்னன், தெனாலிராமன், சிவகங்கைச் சீமை, மாலையிட்ட மங்கை, ராஜா தேசிங்கு போன்ற ஏராளமான படங்களுக்கு கண்ணதாசன் வசனம் எழுதினார். மட்டுமின்றி தேசபக்தியை ஊட்ட ரத்தத் திலகம் படத்தை கதை, வசனம் எழுதி சொந்தமாகவே தயாரித்தார். சமூகப் பிரச்சினையின் அக்கறையோடு கருப்புப் பணம் போன்ற படத்தை தயாரித்து அதில் கதை, வசனம் எழுதியதோடு நடிக்கவும் செய்தார்
.

ராமன் எத்தனை ராமனடி என்ற படத்தில் மராட்டிய வீரர் சத்ரபதி சிவாஜியின் ஓரங்க நாடகத்தை காட்ட விரும்பினார்கள். சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் என்ற அண்ணாவின் மேடை நாடகத்தில் நடித்ததால் தந்தை பெரியாரால் சிவாஜி என்ற பட்டம் சிவாஜி கணேசனுக்கு கிடைத்தது. எனவே இப்போது அந்த நாடகத்தின் வசனங்களையே சிவாஜியை பேச வைத்து எடுக்கலாம் என ராமன் எத்தனை ராமனடி படத்தை இயக்கிய மாதவன் விரும்பினார்.

ஆனால் அண்ணா எழுதிய வசனங்கள் யாரிடம் இருந்தும் பெறமுடியவில்லை. எனவே அண்ணா எழுதிய கதையமைப்பை அடிப்படையாகக் கொண்டு சத்ரபதி சிவாஜி தோன்றும் ஒரு காட்சிக்கு கண்ணதாசனையே வசனம் எழுதித்தர கேட்டார்கள்.
அவ்வாறு கண்ணதாசன் அந்தக் காட்சிக்கு எழுதிய வசனம் நடிகர் திலகத்தை மாவீரர் சிவாஜி வேடத்தில் கர்ஜனை செய்யும் ஓரங்க நாடகமாக அமைந்தது.
அப்படி கண்ணதாசன் வசனம் எழுதி சிவாஜி நடித்த மாவீரர் சிவாஜி நாடகத்தின் அந்தக் காட்சியை இங்கே காணலாம்.


''சிவாஜி தாழ்ந்த ஜாதி! அரசியலே அறியாதவன்! ஹம்! யார்? தானும் நாடும் ஒன்றெனக் கண்டு தன்னையே தந்த மன்னன் சிவாஜி தாழ்ந்த ஜாதியா? மன்னர் குலத்தில் பிறக்காதவன், பரம்பரை உரிமை இல்லாதவன், மானம் காக்கும் குடியானவன், மகுடம் தாங்க முடியாதா? தார்தாரியார் தந்த புரவியில் அமர்ந்து ஆர்த்தெழுந்த சிவாஜியைக் கண்டு நாட்டுக்குடைய நல்லவனென்றும் போர்ப்பாட்டு முழக்கும் மன்னவனென்றும், ஆரத்தியெடுத்த மக்களேங்கே? ஓரத்தில் நின்று வெற்றி வரட்டும் அதன் சுகத்தை அனுபவிப்போம் என்று காத்திருந்த இந்த ஆணவக்காரர்கள் எங்கே? உறையிருந்த வாளெடுத்து ஒவ்வொரு முறையும், மராட்டியம் என்றே முழங்கி இரையெடுக்கத் துடித்த வேங்கை போல் எங்கே பகைவர் எங்கே பகைவர் என்று தேடி கறை படியாத என் அன்னை நாட்டை காப்பேன்! காப்பேன்! என சூளுரைத்து இந்த நாடு என் சொந்த நாடு. இந்த மக்கள் என் சொந்த மக்கள், உயிரினும் இனிய என் மக்களுக்காக ஓடினேன். பகைவரைத் தேடினேன். வாள் கொண்டு சாடினேன். வெற்றியை நாடினேன். பகைத் தேடி வெல்ல மட்டும் உரிமை உண்டாம். முடி சூட்டிக் கொள்ள மட்டும் தடை செய்வாராம்.
அரசியலை நான் அறியாதவனா? ஹ... அரசு வித்தைகள் புரியாதவனா? ஹ... ஹ... எவனோ வந்தவன் சொன்ன வாய்ப்புரை கேட்டு நொந்து போக நான் நோயாளி அல்ல! என்னை விட்டொருவன் இந்த தரணியாளும் தகுதியை அடைந்துவிட்டானா? ஏமாந்த மக்களிடம் ஏற்றம் கொண்டு நாமேதான் நாடொன்று தலைதூக்கித் திரியும் அந்த புல்லுருவிகள் எனது முடியைத் தடுக்கிறார்களா அல்லது தங்கள் முடிவைத் தெடுகிறார்களா?
அதோ போர்ணா! கொட்டிய முரசும், கூவிய படையும் எட்டிய பரியும் எழுந்து நடந்து கோட்டை மதிலை சுற்றி வளைத்து வேட்டையாடி வெற்றி படைத்து, வாழ்க சிவாஜி வாழ்கவென்று வாழ்த்துரை கூறி வழங்கியபோது, ஓஹோ என்று எதிரொலித்ததே இந்தக் கோட்டைத்தான்.
அதோ புரந்தர்! போகாதீர்கள்! படை பலம் அதிகம்! கோட்டை முன்னால் தடைகளும் அதிகம். ஒற்றன் தடுத்தான் ஒருநாள் என்னை! இடுப்பொடிந்தோரெல்லாம் இல்லத்திருங்கள்; கோழைகள் விலக வீரர்கள் வரட்டும். ஏறு முன்னேறு என எக்காளமிட்டு பகைவர் தலைகளை கனியென கொய்து முரசும் ஒலித்து நான் முழக்கிய கோட்டை இதுதான். புரந்தர்! இதுதான்!
அதோ ராஜகிரி! ஆடுவார் ஆட்டமும், பாடுவார் பாட்டுமாய் அந்நியர் களித்திருக்க யாரது மண்ணிலே யாரது நாடகம் பார்ப்போம் என்று நான் படையெடுக்க, என்னடா முடியும் உன்னால் என்று எதிரிகள் கொக்கரிக்க, இதுவும் முடியும்... இன்னமும் முடியும் என்று நான் வாளெடுக்க பெட்டையர் கூட்டம் உள்ளம் கலங்க மராட்டிய மண்டல மக்கள் களிக்க நான் கட்டுக்காத்த கோட்டை இதுதான்.
அதோ கல்யாண்! கண்ணீர்விட்டு கதறிய பெண்கள், ஐயோ என்று அலறிய குழந்தைகள், முடிவறியாது தவித்த முதியோர் கொடியோர் கையில் சிக்கிக் கிடந்தனர்! பகைவர் பொடிப் பொடியாக போர்க்கலம் ஏந்தி மராட்டியக் கொடியை நான் ஏற்றிய கோட்டை இதுதான். என்னையா கேட்டார்கள்; நீ யாரென்று! எவன் இந்த மண்ணனுக்கு சொந்தக்காரனோ! எவனது நெற்றியில் எப்போதும் ரத்தத் திலகம் திகழ்ந்து கொண்டேயிருக்குமோ, அவனைப் பார்த்து வாழ வந்த வஞ்சகக் கூட்டம் கேலி பேசுகிறதாம்! தாழ்ந்த ஜாதி... அரசியலை அறியாதவன் என்று! இதுதான் முடிவென்றால்... இல்லையெனக்கு முடியென்றால், நான் காத்த கோட்டைகள் வேண்டுமோ? கொத்தளங்கள் வேண்டுமோ? வெற்றி பாட்டு வேண்டுமோ? பரவசம் வேண்டுமோ? கரையான் புற்றென்ன கருநாகங்களுக்கு சொந்தமோ? அடிபடட்டும் கோட்டைகள்! இடியட்டும் மதில் சுவர்கள்''

இவ்வாறு கண்ணதாசன் இலக்கியத் தமிழில் குமுறும் எரிமலையாக சத்திரபதி சிவாஜி முழக்கமிட, இந்த அற்புதமான வசனங்களை நடிகர் திலகம் சிவாஜிக்கு எழுதித்தந்தார். படத்தில் நடிகர் திலகம் சத்திரபதி சிவாஜிக்கு இலக்கணம் வகுக்கிற நடிப்பினால் இந்த எழுச்சிமிகு வீரவசனம் பேசிய காட்சி நமக்கெல்லாம் சிலிர்ப்பை உண்டாக்கின.
கண்ணதாசன் தொடர்ந்து பாடல்களுடன் உரையாடல்களையும் திரைப்படத்திற்கு எழுதி வந்திருந்தால் தமிழில் இன்னும் பல அற்புதமான திரைக்காவியங்கள் எல்லாம் நமக்கு கிடைத்திருக்கும்.

பரஞ்சோதி
28-12-2006, 04:29 AM
பிரியன் எப்படி இருக்கீங்க.

தேடி கொடுத்தமைக்கு நன்றி. கூடுதல் செய்தி கொடுத்த இளசு அண்ணாவுக்கும் நன்றி.

ஓவியா
02-01-2007, 06:38 PM
முதலில் ரசித்து படித்தேன்
பின் படித்து ரசித்தேன்.....

அனைவருக்கும் நன்றி

அருமையான பதிவு

தொடரலாமே

ஓவியன்
26-02-2007, 06:34 AM
ஒரே ஒரு வார்த்தையில் சொன்னால் திறமைசாலி!!!

ஆனால் அவர் தன் வாழ் நாளிலே பட்ட துயரங்கள் மற்றும் சோகங்கள் தான் எத்தனை எதனை?

ஆனால் அவர் எழுதிய சுயசரிதைகளால் அவரது அனுபவங்கள் இன்றைய இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டிகள்.

ஷீ-நிசி
26-02-2007, 06:48 AM
கண்ணதாசன் அவர்களின் இந்த வாழ்க்கை நிகழ்வுகளை ஏற்கெனவே படித்திருந்தாலும் மீண்டும் படிக்கும்போது அவரின் எழுத்துக்கள் ஆச்சரியபடவைக்கின்றன்.. அதிலும் அந்த சத்ரபதி சிவாஜிக்காய் அவர் எழுதின வசனங்கள் படிக்கின்ற நமக்கே ஒரு வீரத்தினை தருகின்றன.. தொகுப்புகளை எங்களுடன் பகிர்ந்திட்டமைக்கு நன்றி நண்பர்களே!

மனோஜ்
26-02-2007, 07:37 AM
கண்ணதாசன் பற்றி அதிகமாக அறிந்து கொன்டதில் மகிழ்ச்சி
நன்றி பிரியன் மற்றும் இளசு அவர்களே

வெற்றி
03-03-2007, 11:31 AM
என்னை யோசிக்க வைத்த முதல் கவிஞர் கண்ணதாசன் தான்...