PDA

View Full Version : கல்



kjothira
15-12-2006, 11:21 AM
கல் - இதன் மேல் காக்கை
இன்றும் எச்சமிட்டது.
ஆடு மேய்ப்பவன்
கடந்து செல்லும் போது
கழியால் ஓங்கி அடித்தான்.
நேற்று பெய்த மழைக்கு மிச்சமாய்
ஒட்டிக்கிடந்த ஈரச்சுவடுகள் காய்ந்திருக்க
கரையாமல் கரடுமுரடாய்
கல்.

உணர்வுகளின் வாசம்
அறிந்திருக்க வாய்ப்பில்லை.
காற்றோடு மரங்கள் பேசுவதை
கவனித்துப் பழக்கமில்லை.
இது கல் - வெறும் கல்.
இதன் உடைமை - வெறுமை.

திடீரென்று பூக்களெல்லாம்
மொத்தமாய் திரும்பிப் பார்க்கின்றன -
நீ வருகிறாய்.

அருகினில் அமர்கிறாய் -
உன் சுவாசம் பட்ட வெப்பம்
ஏனோ உறைக்கிறது.

காற்றினில் உன் கூந்தல்
கையெழுத்திடுகிறது -
விழித்துக் கொள்கின்றன கண்கள்.

சரம்சரமாய் சிரிக்கிறாய் -
செவிகள் திறந்து கொள்கின்றன.

பேச ஆரம்பிக்கிறாய் -
மரங்களையெல்லாம்
மெளனிக்கச் சொல்கிறது கல்.

அதிசயமாய் வந்த வெட்கத்தில்
ஏதோ உளறி வைக்கிறாய் -
சிரிக்கவும் செய்கிறது கல்.

உன் கண்கள் பனிக்கின்றன -
கரங்களை செதுக்கிக் கொள்கிறது கல்.

காற்றினில் விழுந்து விட்ட
உன் பூக்களைத் தாங்கிப் பிடிக்கிறது -
மென்மையாகிறது கல்.

ஏனோ நீ வந்த வழியே
சொல்லாமல் போகிறாய்.
நீ விட்டுச் சென்ற வாசத்தை
பூக்களெல்லாம் சிறைபிடிக்க -
உன் காலடி ஓசையை
காற்று வந்து கொண்டு செல்ல -
எல்லாம் போகிறது.

விரக்தியில்
சிரிக்கிறது கல் - யாருக்கும்
செவியில்லை.
அழுகிறது கல் - யாருக்கும்
விழியில்லை.

மீண்டும் மரங்கள் பேச ஆரம்பிக்க
மெளனிக்கிறது கல்.

காக்கை வந்து எச்சமிடுகிறது.
அதோ,
ஆடு மேய்ப்பவனும்
திரும்பி விட்டான்.

கல் நெஞ்சமடி உனக்கு.

leomohan
15-12-2006, 11:25 AM
ஓ, இதனால் தான் கல்நெஞ்சமுன்னு சொல்றாங்களா.

பாரதி
15-12-2006, 04:54 PM
பிரமாதம் நண்பரே. பாராட்டுக்கள்.

நம்பிகோபாலன்
15-12-2006, 05:13 PM
அருமை

இளசு
15-12-2006, 07:25 PM
கல்லான முல்லை
இன்றென்ன வாசம்?

காதல் ரசவாதம்..

காதல் மறைந்ததும்
கல்லாய் மீண்டும்..


பாராட்டுகள் கணேஷ்குமார்.

அறிஞர்
15-12-2006, 07:26 PM
உணர்வுகளற்றிருந்த கல்லுக்கு
உணர்வுகளை ஏற்படுத்தி......
சிரிக்க வைக்கும் மாயம்
அவளுக்கு மாத்திரம் தான்
தெரியுமோ....
---
கல்லின் நிலை அதோகதி தான்....

pradeepkt
17-12-2006, 03:10 AM
ம்ம்ம்ம்... அருமையான கவிதை.
கல் என்றும் கல்தான்.

mgandhi
17-12-2006, 04:13 PM
கல்யை பற்றி கற்றுக்கொன்டேண்

தாமரை
18-12-2006, 03:59 AM
கல்லிற்கு உசுப்பேற்றி
கடுகிச் சென்றவள்

இதயம் இடம் மாறியது
கல் இதயம்
சிருங்காரமாய் கவிதை வடிக்க
அவளிடம்
கல் மனசு

கத்தியின்றி ரத்தமின்றி
இந்த
இதய மாற்றம்
காதல்...எனப்படும்

sarcharan
18-12-2006, 04:02 AM
அருமையான கவிதை. ;) ;) ;)

kavitha
18-12-2006, 04:21 AM
காற்றினில் உன் கூந்தல்
கையெழுத்திடுகிறது -
விழித்துக் கொள்கின்றன கண்கள்


ரசித்த வரிகள்.

"கல்லையும் சிரிக்கவைத்தாள் அவள்;
பேசும் சிலையை பேசவைக்க இயலவில்லையோ!"

meera
18-12-2006, 04:38 AM
கணேஷ்,


ரசித்தேன்.அழகான கவிதை.