PDA

View Full Version : கறுப்பு வரலாறு - மர்மத் தொடர்கதை



leomohan
06-11-2006, 03:31 PM
1
களப்பிறர் ஆட்சியைப் பற்றி இதுவரை யாராலும் சரியாக ஆராய்ச்சி செய்ய முடியவில்லை. நம்மிடம் உள்ள நூல்களையும் கல்வெட்டுகளையும் பழம் பெரும் கோவில்களில் கிடைத்த செய்திகளையும் பிராம்மி கல்வெட்டுகளையும் பழைய ஓலைகளையும் ஆராய்ந்து பார்த்ததில் தமிழக வரலாற்றைப் பற்றி பல அரும் பெறும் விஷயங்களை சேகரித்து விட்டோம். ஆனால் இந்த களப்பிறர் ஆட்சியைப் பற்றி யாராலேயும் நிறைவாக ஒன்றும் எழுத முடியவில்லை.

இதைப் பற்றி ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகத்தில் ஒரு திறந்த ஆய்வுக் கட்டுரை நிறைவு பெறாமலேயே இருக்கிறது. இதைப் பற்றி ஆராய்ந்து ஆதரங்களுடன் கட்டுரை சமர்ப்பிப்பவர்களுக்கு டாக்டர் பட்டம் மட்டுமல்ல ஒரு பெரிய சன்மானமும் சமூக அந்தஸ்தும் கிடைக்கவுள்ளது.

பலரும் ஆங்கிலேயர்கள் எழுதிய வரலாற்றுப் புத்தகங்களை வைத்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதி டாக்டர் பட்டங்கள் பெற்றுவிடுகின்றனர். பிறர் எழுதிய வரலாற்று நூல்கள் முற்றிலும் பொய்களாக
இல்லாவிட்டாலும் அவர்கள் தங்களுக்கு தகுந்தவாறு உண்மைகளை மாற்றியிருக்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நான் வரலாறு படிக்கும் காலத்தில் இதைப் பற்றி எழுதத் துவங்கினேன். ஆனால் பல தொந்தரவுகளால் தொடர முடியவில்லை. என்னுடயை ஆசான் அ. சந்திரசேகர் 67 வயதாகியும் இன்னும் அதைப் பற்றி ஆராய்ந்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரால் அதிக வெற்றி காண முடியவில்லை.

ஊக்கமும் ஆக்கமும் விடாமுயற்சியும் கொண்ட உங்களைப் போன்ற இளைஞர்கள் முயன்றால் கட்டாயம் முடியும். இந்த நூற்றாண்டில் இதை செய்ய முடியாவிட்டால் அடுத்த நூற்றாண்டில் இதை யாராலும் சாதிக்க முடியாது.

மனிதர்கள் பல கோடியாக ஆகிவிட்டனர். வயல் வெளிகள் சிமென்ட் கட்டிடங்களாக மாறி வருகின்றன. முழு தமிழகமும் ஒரு அங்குலம் இடைவெளியில்லாமல் கட்டடங்களாக மாறிய பிறகு என்ன அகழ்வாராய்ச்சி செய்ய முடியும்.

கணினி துறை வளர்ச்சி பெற்றிருக்கும் இந்த காலத்தில் பல விஷயங்களை சேகரித்து ஆராய்ந்து அலசிப் பார்க்க பல மென்பொருட்கள் உள்ளன. நீங்கள் மனசு வைத்தால் முடியும். உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் நானும் என் ஆசானும் செய்ய உதவியாக இருக்கிறோம்.
கறுப்பு வரலாறு மீது ஒளி வீசுங்கள் . வாய்ப்புக்கு நன்றி என்று கூறி தன் பேருரையை முடித்தார் சி. பழனியப்பன். சென்னை அரசாங்க கல்லூரியின் முதுகலை வரலாற்று பேராசிரியர்.

பலத்த கைத்தட்டல் அரங்கத்திலிருந்து.

இதுவரை பொழுது போக்கிற்காக வரலாறு பாடம் எடுத்து படித்தவர்களும் உணர்ச்தி வசப்பட்டனர். நம் பாடத்திலும் இத்தனை சங்கதி இருக்கிறதா. வரலாறு என்பது இத்தனை முக்கியமானதா என்று ஆச்சர்யப்பட்டனர்.
வரலாறு படிப்பவன் முட்டாள், வரலாறு படைப்பவனே புத்திசாலி என்று அவர்களுடைய பள்ளி விஞ்ஞான ஆசிரியர் பத்தாம் வகுப்பில் சொன்னது பல வருடங்களாக சேர்ந்து படித்துக் கொண்டிருக்கும் ரவி, ரகு, சங்கர், நீலவேணி மற்றும் சவிதாவுக்கு நினைவில் வந்தது.

கறுப்பு வரலாறு மீது ஒளி வீசுங்கள் என்று பழனியப்பன் சொன்னதை நினைவில் கொண்டபடியே கல்லூரியின் உணவகத்தை நோக்கி சென்றனர் அந்த ஐவரும்.

ஓவியா
06-11-2006, 04:03 PM
அசத்தலான ஆரம்பம்

தொடரவும்

பின் குறிப்பு
இந்த ஒரு கதையையாவது
முழுமையாய் படிக்க முயற்ச்சிக்கின்றேன்

மதி
07-11-2006, 03:04 AM
நல்ல தொடக்கம் மோகன்..தொடருங்கள்..

pradeepkt
07-11-2006, 05:39 AM
ஏதாச்சும் வரலாற்றுப் பின்னணியோடு எழுதப் போறீங்களோ...
தொடருங்கள்...

leomohan
07-11-2006, 09:15 AM
2
சவிதா தான் இந்த ஐவரணி வரலாறு பாடம் எடுக்க காரணம். அவள் இந்த கல்லூரியை தேர்ந்தேடுத்த காரணம் வீட்டை விட்டு அதிக தூரத்தில் இருந்ததால். அப்பா அம்மா அண்ணன் தொந்திரவு இல்லாமல் ஒரு நாள் முழுக்க இருக்கலாம்.

ரவி சவிதாவுடன் ஒட்டிக் கொண்டான். 8வது வகுப்பில் எனக்கு உன்னை பிடிச்சிருக்கு உனக்கு என்னை பிடிச்சிருக்கா என்று எழுதி விஞ்ஞானப் புத்தகத்தில் வைத்து சவிதாவிடம் கொடுத்தான்.

அவள் ஒரு வருடத்திற்கு பிறகு 9வது வகுப்பில் ஆம் என்று எழுதி அனுப்பினாள். அவள் பதினொன்று பண்ணிரண்டில் விஞ்ஞானம் எடுத்தான். ரவியும் விஞ்ஞானம் எடுத்தான். அவள் இளங்கலையில் வரலாறு எடுத்தாள். வீட்டில் அனைவரும் பைத்தியம் என்று திட்டியும் இவனும் வரலாறு எடுத்தான். அவள் வீட்டில் இன்னும் கல்யாண பேச்சை எடுக்கவில்லை இன்னும் நாள் கடத்தவேண்டும் என்றாள். இவனும் சரியென்று முதுகலை வரலாறு எடுத்துக் கொண்டான்.

ரகு சங்கர் ரவியின் கூட்டாளிகள். சங்கர் ரவியைப் பார்த்து எழுதியே முதுகலை வரையில் வந்தவன். வசதியான குடும்பம். அகரத்தில் பெரிய நிலபுலங்கள். என்ன படிக்கிறோம் என்பதைவிட படிக்கிறோமே என்பதில் தான் சந்தோசமே.

ரகுவின் தந்தையும் பஞ்சாயத்து போர்ட் தலைவர். கேட்கவேண்டுமா.

ஆக படிப்பிற்காக படிக்கும் ஒருவரில் நீலவேணி மட்டும். அவளுக்கு வரலாறு பிடிக்கும். எந்தப் போர் எந்த ஆண்டில் யார் யாருடன் என்று தொடங்கி தமிழக வரலாறு எந்த ஆட்சிகாலத்தில் எந்த மன்னன் ஆட்சி என்பது வரை அத்துப்படி. அவள் பேசினால் எப்போது அனைவரும் கேட்பார்கள்.

சங்கருக்கும் ரகுவிற்கும் தனித்தனியே அவள் மீது காதல். இதுவரை சொல்லவில்லை. ஒருவருக்கு ஒருவரும் சொல்லிக் கொள்ளவில்லை.

சங்கரும் ரகுவும் மாற்றி மாற்றி அவளை வீட்டிலிருந்து அழைத்து வருவதும் வீட்டிற்கு விடுவதுமாக ஒரு பாதுப்பு படலம் தான். நீலவேணி வீட்டில் அவர் அப்பா மின்சாரத்துறையில் வேலை செய்வர். முற்போக்கு வாதி. வீட்டிற்கு பிள்ளைகள் வந்தால் கண்டிக்கும் கிராக்கி இல்லை. பசங்களுடன் அரட்டை அடிப்பார். அவர் மனைவியும் காபி கலந்து நொறுக்குத் தீணி கொடுப்பார். கிரிகெட் என்றால் ஐவரணி இவர்கள் வீட்டில் கூடிவிடும். நீலவேணி வீட்டில் இருக்கிறோம் என்று சொல்லிவிட்டால் போதும் மற்றவர்கள் வீட்டில் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.

வீட்டு விசேஷங்கள் வந்தால் பெரியவர்களும் மற்ற பெரியவர்களுடன் கூடி பேசி மகிழ்வார்கள். பிள்ளைகளின் 10 வருட நட்பு இவர்களுக்கும் தொற்றிக் கொண்டுவிட்டது.

நீலவேணி தீர்க்கமாய் சொன்னாள் நாம இதை செய்யனும் ரகு. ஏன்னா நாம இதுவரைக்கும் சாதாரணமாக காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கோம். ஒன்றும் பெரிசா செய்யலை. நாங்கள் பெண்கள். கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிடுவோம். நீங்கள் ஏதாவது பள்ளி ஆசிரியராகவோ இல்லை உங்க அப்பா வைத்துக் கொடுக்கும் வியாபரத்திலோ இறங்கிவிடுவீர்கள். பிள்ளைகள் பெறுவோம். குறைந்த பட்சம் நம் பிள்ளைகள் முன் என்ன சாதித்தோம் என்று சொல்ல ஏதாவது செய்ய வேண்டாமா.

நான் தயார் என்றான் சங்கர். அவனுக்கு நீலவேணி வார்த்தைகள் வேதத்திலிருந்து ஓதப்பட்டவை.
ரகு, அப்ப நெறைய ஊர் சுத்த வாய்ப்பு கிடைக்கும்னு சொல்லு என்றால் உற்சாகமாக.

ஆமாம். தமிழ் நாடு முழுசும் ஏன் வெளிநாடுகள் கூட சுத்த வேண்டியதிருக்கலாம் என்றாள் நீலவேணி.
சவிதாவிற்கு கண்கள் அகலாமாகியது. ஆகா, வீட்டிலிருந்து தப்பிக்க இப்படி ஒரு வாய்ப்பா என்று எண்ணிக் கொண்டே, நான் தயார். ஆனா என் வீட்டில நீங்கள் எல்லாம் சேர்ந்து பேசனும்.

ரவிக்கு ஒரே சந்தோசம். நீ கவலைய விடு பழனியப்பன் சாரை வைச்சி பேச சொல்லிட்டா போச்சு என்றான் கண்ணடித்தவாறு. சவிதா ரவியின் கைகளை பற்றிக்கொண்டே கனவில் மிதந்தாள்.

சங்கரும் ஜோதியில் கலந்துக் கொண்டான். டேய், அப்ப நாளைக்கு போய் பேசலாம்டா என்றான் ஆரவாரமாக.
கறுப்பி வராலாறை தோண்டினால் என்னென்ன விவகாரம் வரும் என்று தெரியாமல் அந்த இளம் பறவைகள் கூக்கூரலிட்டு வீட்டை நோக்கிப் பறந்தன.

மதி
07-11-2006, 11:10 AM
அடடா..சுவாரஸ்யமா போகுதே...ம்..தொடருங்கள்..!

ஓவியா
07-11-2006, 06:19 PM
ஆமாம் ரொம்ப சுவாரஸ்யமாதான் போகுது....

அடுத்த பாகத்தை தயங்காமல் போடவும்...:D :D

நன்றி மோகன்

leomohan
07-11-2006, 07:22 PM
3
நல்லா பேசனே பழனி. கரிகாலன் வந்து சொன்னார். யாராவது மசிஞ்சாங்களா என்று கேட்டார் சந்திரசேகர்.

வரலாற்றுக்காக தன் வாழ் நாளை அர்ப்பணித்தவர். பல புத்தகங்கள் எழுதியவர். வேலையில் இத்தனை கவனம் கொண்டு வீடு மனைவி மக்களை துறந்துவிட்டு தனியாக வாழ்பவர். அந்த ஓட்டு வீட்டில் வெறும் புத்தகங்களும் பழைய ஓலைகளும், கல் வெட்டின் பெரிய புகைப்படங்களும் பூதக்கண்ணாடிகளும் வவ்வால் நாற்றமும் நிறைந்துக் கிடந்தன.

ஆமாம் சார். உணர்ச்சிப் பூர்வமா பேசியிருக்கேன். இந்த வருஷம் யாரும் இந்த தலைப்பை எடுத்துக்காத பட்சத்திலே நாம வேறு பல்கலை கழகத்து மாணவர்களைத் தான் போய் பார்க்கணும் என்றார் பழனியப்பன் யோசனையுடன்.

உடல் படபடப்புடன், அப்படி சொல்லாதே பழனி. இந்த வருஷம் தான் என்னுடைய வாழ்நாள்ல கடைசி வருஷம்னு தோணுது. நான் சாகரத்துக்குள்ள நீ களப்பிறர் ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் வாங்கறதை கண்ணாலப் பார்க்கணும்.

நெகிழ்ந்து போனார் பழனி. கட்டாயம் ஐயா. உங்கள் ஆசையை எப்படியாவது நிறைவேற்றி வைக்கிறேன்.

என்ன உதவி வேண்டுமானாலும் என்கிட்டே கேளு. கரிகாலன் உன் கூட படிச்ச பையன் தானே. அவன் என்ன உதவியும் பண்ணுவான். பணம் வேண்டும்னா என்கிட்ட கேளு. கல்லூரியில் சொல்லி ஒப்புதல் வாங்கித்தரேன். நம்ம பல்கலைகழகத்திற்கே பெருமை சேர்க்கற விஷயம் இது. மறந்துடாதே.

இல்லை ஐயா. கடந்து பத்து வருஷமா நாம சேகரிச்ச எல்லா விஷயத்தையும் இந்த வருஷம் கணினியில் ஏத்திடறேன். கட்டுரையும் எழுத ஆரம்பிச்சிடறேன். எழுத எழுத உங்களிடம் கொடுக்கறேன். நீங்கள் திருத்திக் கொடுங்கள். எப்படியாவது இந்த ஆண்டு நிறைவுக்குள் நான் டாக்டர் பட்டம் வாங்கிடறேன்.

ஆ. நல்லது. நீ இப்பவே டாக்டர் தான். ஆனா இந்த தலைப்பில தான் நீ டாக்டர் பட்டம் வாங்கனும் என்றார் சந்திரசேகர்.

ஆம். என்று கூறிவிட்டு விடை பெற்றுச் சென்றார்.

தன்னுடயை குறிப்பேட்டில் டிசெம்பர் 31 என்னுடயை மறைவு நாள் என்று எழுதிக் கொண்டார் சந்திரசேகர்.

கறுப்பு படர ஆரம்பித்திருந்தது அவர்கள் வாழ்வில்.

leomohan
07-11-2006, 07:25 PM
4
சங்கர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். அவன் முதுகலை சேர்ந்தது அவன் வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை. சீக்கிரம் படிப்பை முடிச்சிட்டு வேலையை பாருடா என்று அவனுடைய மூன்று அண்ணனும் இரண்டு அக்காவும் அவனை கடிந்துக் கொண்டார்கள்.

அவன் வீட்டில் ஆராய்ச்சி என்றதும் உன்னை கொலை பண்ணப்போறேன் என்பது போல பார்த்தார்கள். ஆனால் அவன் மாதம் 600 ரூபாய் ஊக்கத் தொகையாக கிடைக்கும் அதை அப்படியே வீட்டுக்கு கொடுத்துவிடுகிறேன் என்றதும் சரியென்று ஒத்துக் கொண்டுவிட்டார்கள்.

அப்ப நீ என்ன செலவுக்கு செய்வே என்று குணசேகரன் கேட்டான். சங்கரின் மூத்த அண்ணன்.

நீ அப்படியே அள்ளி கொடுக்கற மாதிரி பேசறே. இத்தனை நாள் என் கூட்டாளிகள் கொடுத்த பிச்சையில தானே வாழறேன் என்றான் சங்கர் காட்டமாக.

ஆமா வேண்டாம் வேண்டாம்னு சொன்னாலும் கேட்டாரா அப்பா. எனக்கும் உனக்கும் என் பொண்ணு வயசு வித்தியாசம். கண்டபடி பெத்துப் போட்டு என்னை பாத்துக்கோன்னா. நான் என் குடும்பத்தை பார்ப்பேனா இல்லை எனக்கு அப்புறம் பொறந்த அரை டசனைப் பார்ப்பேனா.

சரிதான் விடுங்க என்ற சங்கரின் அண்ணி சமாதானப்படுத்த அந்த பேச்சு முடிந்தது. உனக்கு என்ன துணி வேணும்னு சொல்லப்பா நான் எடுத்து வைக்கிறேன் என்றாள் அண்ணி.

என்னுடயை கறுப்பு சட்டையை மறக்காமல் எடுத்து வையுங்க என்றான்.

ஓவியா
07-11-2006, 07:39 PM
கறுப்பு வரலாறு
கறுப்பு.....

இதுதான் கருவா....:eek:

பார்ப்போம் இன்னாதான் நடக்குதுனு...

leomohan
08-11-2006, 06:02 AM
5
சவிதா வீட்டில் எந்த சமாதானமும் செல்லவில்லை. நீலவேணி வந்து பேசினாள். ஒன்றும் தேராமல் போகவே பழனியப்பன் வந்தார்.

சவிதாவின் அண்ணனை பார்த்து, சந்துரு, நீ சொல்றது சரிதான் பா. அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணி வை சவிதாவுக்கு. ஆனா ஒன்னு நினைச்சிப் பாரு. உன் தங்கச்சி இந்த ஆராய்ச்சியில வேலை செய்தா பிரபலமாயிடுவா. அந்த பெருமை நாளைக்கு அவனை கட்டிக்கப்போறவனுக்கும் தானே. உனக்கும் மாப்பிள்ளை பாக்கறுது சுலபமாயிடும் இல்லையா.

சார் நீங்க சொல்றது சரி. ஆனா கல்யாண வயசுல வீட்டை விட்டு தனியா மூனு மாசம் நாலு மாசம்னு போனா ஊர் என்ன சொல்லும்.

தம்பி இவங்க அஞ்சு பேரோட நானும் போறேன். கரிகாலன் சாரும் வர்றாரு. இவங்க பாதுகாப்புக்கு நான் உத்திரவாதம். என்ன சொல்றீங்க.

சவிதாவின் அப்பா, சரி சார். நீங்க இவ்வளவு சொல்றதால நான் ஒத்துக்கறேன். ஆனா பின்னாடி எந்த பிரச்சனையும் வரக்கூடாது, என்றார் இருமனதுடன்.

சவிதா ஹாலின் ஒரத்தில் என்னைப்பற்றியா பேசுகிறார்கள் என்ற மாதிரி முக பாவனையுடன் இருந்தாள். நீலவேணி அவள் காதில் டன் என்றால் உற்சாகமாக.

கவலைப்படாதீங்க சார். உங்கப் பொண்ணு பத்திரமா வீடு வந்து சேருவா என்று தான் காப்பாற்ற முடியாத ஒரு விஷயத்திற்கு உத்திரவாதம் தந்துவிட்டுச் சென்றார்.

சவிதா சந்தோஷமாக தன் கருப்பு ட்ராலியை தேடி எடுத்து சுத்தம் செய்யத் துவங்கினாள்.

leomohan
08-11-2006, 06:05 AM
6
நீலவேணியின் தந்தை உற்சாகமாக, அவசியம் போயிட்டு வாம்மா. இது உனக்கு வாழ்நாளில் ஒருமுறை வரும் வாய்ப்பு என்றார். அவரும் சில புத்தகங்கள் எடுத்து வைத்துக் கொண்டு நீ தஞ்சாவூர் சரஸ்வதி மகாலில் இருந்து உன் ஆராய்ச்சியை ஆரம்பிக்கலாம். அதில்லாம ப்ராஜெக்ட் மதுரையில் பல புத்தகங்களை கணினியில் மின் புத்தகமா மாத்தியிருக்காங்க. நான் என்ன பண்றேன் உனக்கு ஒரு லாப்டாப் கம்ப்யூட்டர் வாங்கித்தரேன். எல்லா தகவல்களையும் அதில் சேகரித்துக் கொண்டே வா என்றார்.

தாங்கயூ டாடி என்று அணைத்துக் கொண்டாள் தந்தையை.

அம்மாவோ, இதெல்லாம் தேவையா. தனியா போய் சாப்பாடுக்கு கஷ்டப்பட்டுக்கிட்டு என்றார்.

அம்மா இது ஒரு ரிசர்ச் ட்ரிப் இல்லை. என்னை பொருத்தவரைக்கும் அட்வென்ச்சர் டிரிப்.

என்ன அட்வென்ச்சரோ. அதென்ன இதவரைக்கும் யாரும் கண்டுப்பிடிக்காத ஒன்னை நீ கண்டுபிடிக்கப் போறே.

அம்மா. நான் கண்டுபிடிக்கலை. நான் சும்மா உதவிக்குத்தான் போறேன். பழனியப்பன் சாருக்குத்தான் டாக்டர் பட்டம் கிடைக்கும். ஆனா நாங்க பிஹெச்டி பண்ணும் போது நாங்க இதுல வேலை செஞ்சோம்னு சொன்னாலே மதிப்பு வரும்.

அப்படி என்ன எழவு ஆராய்ச்சி என்றாள் அவள் அம்மா.

அம்மா, இதுக்கு பேரு கறுப்பு வரலாறுன்னு பேரு.

கறுப்பு வரலாறா, பேரே நல்லாயில்லை. என்னாகப்போகுதோ போ என்றாள் சங்கடமாக.

leomohan
08-11-2006, 02:02 PM
7
ரகுவின் வீட்டிலும் ரவியின் வீட்டிலும் அதிகம் பிரச்சனை இருக்கவில்லை. ரகுவின் வீட்டில் அவனுக்கு மூன்று மாதத்திற்கு தேவையான உணவு வகைகளை எடுத்து அடுக்க ஆரம்பித்துவிட்டனர்.


படுக்கை ஹோல்டார்கள், காம்பிங் பொருட்கள், துணி மணி, குறிப்பு புத்தகங்கள், விளக்குகள், மருந்து மாத்திரை, சமைக்கும் பொருட்கள் என்று ஆராய்ச்சிக்கு செல்லும் போது தேவையான விஷயங்கள் என்று ஒரு பட்டியலிட்டு தந்திருந்தார் சந்திரசேகர்.

எங்கெல்லாம் செல்லவேண்டும் எந்த விஷயங்கள் விட்டுப்போயிருக்கின்றன, யாரை சந்தித்தால் என்ன தகவல் கிடைக்கும் என்று அணைத்தையும் விளக்கியிருந்தார் பழனியப்பனுக்கு.

இங்க பாருங்க நமக்கு இப்ப தேவையான விஷயங்கள் நான்கு

1. களப்பிறர் ஆட்சிக்கு முன் ஆட்சி செய்தது யாரு

2. எதனால களப்பிறர் ஆட்சி வந்தது

3. எத்தனை வருஷம் இந்த ஆட்சி நடந்தது

4. எந்த மன்னன் இந்த களப்பிறர் ஆட்சியை முடிச்சி வைச்சான்

அதனால எடுத்த காரியத்தில டிவியேட் ஆகமா இதைப் பற்றி மாத்திரம் விஷயங்களை சேகரிச்சிகிட்டு வாங்க. நீங்க போகறது பிக்னிக்கு இல்லை. சின்ன பிள்ளைகள் கூட இருக்கறதால அவங்களை அப்படி இப்படின்னு கவனம் சிதராம பார்த்துக்க வேண்டிய உங்கப் பொறுப்பு.
வெளிய சுத்தற வேலை 3 பசங்களுக்கு கொடுங்க. விடுதியில் தங்கி குறிப்பெடுக்கற வேலை புகைப்படம் கட்டுரை எழுதற டாக்குமெண்டேஷன் வேலைகளை பெண்கள் செய்யட்டும்.

எல்லாவற்றையும் பவ்யமாக கேட்டுக் கொண்டார் பழனியப்பன். அவரிடமிருந்த நூற்றுக் கணக்கான காகிதங்களையும் வாங்கிக் கொண்டார்.

கல்லூரியில் இந்த ஆராய்ச்சிக்கா ஒப்புதல் வாங்கி அனைவுருக்கும் மாதாமாதம் ரூபாய் 1250 கிடைக்குமாறும் வகைசெய்தார். அவர்கள் படிப்பு கெடாமல் இருக்க அவர்களுக்கு பிரத்யேக பரீட்சைக்கும் அனுமதி வாங்கித் தந்தார்.

சங்கருக்கு ஆகா 600 சொல்லி 1250 கிடைக்குதே என்று ஒரே சந்தோஷம்.

கரிகாலன் வாகனத்துக்கு வாடகைக்கு கொடுக்கும் காசையும் வாகன ஓட்டுனருக்கு கொடுக்கும் காசையும் தனக்கே கொடுத்துவிடும் படி கூறினார். பழனியப்பனும் சரியென்று சொல்ல அவர் தன்னுடயை டாட்டா சுமா வாகனத்தை எடுத்து வந்துவிட்டார். 45 வயதனாலும் கரிகாலன் பார்க்க போலீஸ் அதிகாரி போல கும்மென்று இருந்தார்.

கரிகாலனும் பழனியப்பனும் பால்ய ஸ்நேகிதர்களாக இருந்தாலும் மாணவர்களுக்கு முன்பாக சார் சார் என்றே ஒருவரை ஒருவர் அழைத்துக் கொண்டனர்.
வெள்ளிக் கிழமை இரவு சிதம்பரத்திற்கு பிரயாணித்தனர். முதன் முதலில் களப்பிறர் பற்றிய கட்டுரை எழுதிய தம்பிரானை போய் சந்திக்கவேண்டும் என்று பட்டியலில் இருந்தது.

மாணவர்கள் ஐவரும் பின்னே அமர்ந்துக் கொள்ள முன்னால் பழனியப்பனும் ஓட்டுனர் இருக்கையில் கரிகாலனும். வண்டியின் மேல் இவர்களின் மூட்டை முடிச்சுகள்.

வண்டியில் அமர்ந்ததும் அனைவருக்கு 20-30 தாள்களை தந்தார் பழனியப்பன். இதை எல்லாரும் படிங்க. பத்திரமா வைச்சிக்குங்க. இதுக்கு பிரதி கூட இல்லை. நீலா, சவிதா சிதம்பரம் போனதும் நீங்க இரண்டு பேரும் இதை கம்ப்யூட்டரில் பதிக்க ஆரம்பிச்சிடுங்க என்றார்.
அனைவரும் வாங்கிக் கொண்டனர். வண்டி செங்கல்பட்டை கடந்திருக்கும். சிறிசுகள் சில்மிஷம் செய்யலாம் என்று நினைத்திருக்க முன்னால் இரண்டு பெரிசுகளும் தூங்கும் பாடில்லை. ஏதாவது பேச வேண்டுமே என்பதற்காக சங்கர், இந்த களப்பிறர் ஆட்சியைப் பற்றி கொஞ்சம் சொல்லு நீலா என்றான் முன்னால் அமர்ந்திருந்த நீலவேணியை பார்த்து. அவளும் சிரத்தையுடன் பேசத் தொடங்கினாள்.

தென்னிந்தியாவை பல பேர் ஆட்சி செஞ்சிருக்காங்க. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது 1956ல தான். அதுக்கு முன்னாடி ஆங்கிலேய காலத்துல மெட்ராஸ் பிரசிடெண்ஸின்னு தென் மாநிலங்களை சொன்னாங்க.

பல மன்னர்கள், பேரரசர்கள், குறு மன்னர்கள், நிலசுவாந்தார்கள் ஆட்சி செஞ்சிருக்காங்க. நமக்கு இதுவரைக்கும் கிடைச்ச தகவல் படி கடுங்கோன் அப்படிங்கற முதலாம் பாண்டிய பேரரசர்களிலிருந்து, பல்லவர்கள், சோழர்கள், சேரர்கள், முகமதியர்கள், மதுரை சுல்தானியர்கள், விஜய நகர அரசர்கள், மதுரை மற்றும் தஞ்சை நாயக்கர்கள், செஞ்சி நாயக்கர்கள், ராமநாதபுரம் சேதுபதிகள், தஞ்சை மராட்டியர்கள், அப்புறம் சுகந்திரம் கிடைக்கவிருந்த கொஞ்சம் வருஷம் முன்பு வரை புதுக் கோட்டை தொண்டைமான்கள் என்று நம் நாட்டையே கட்டம் போட்டு ஆண்டிருக்காங்க.


சுமார் 4வது நூற்றாண்டுல வடக்கேர்ந்து வந்ததாக சொல்லப்படுபவர்கள் தான் இந்த கள்வர் அல்லது களபிறர். அதாவது கள்ள பிறர் என்பது தான் களப்பிறர் ஆகிடுச்சு. களப்பிரர் அப்படின்னு கூட சொல்றாங்க. பெரிய ற சின்ன ர குழப்பம் இருக்கு. பல்லவர்கள் ஆட்சி ஆரம்பிச்ச பிறுகு தான் இந்த களப்பிரர் ஆட்சி முடிஞ்சிது. இது தமிழக வரலாற்றில் ஒரு கறுப்பு நேரம் என்கிறார்கள். இது தான் கறுப்பு வரலாற்றின் ஆதாரமே.

leomohan
08-11-2006, 02:02 PM
7 தொடர்ந்து...

களபிறர்கள் ராட்சதர்கள். நீதி நேர்மை என்ற வார்த்தைகளே அவங்க அகராதியில் இல்லை. கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று அட்டூழியங்கள் செய்தனர். ஒரு ராஜா ஒரு மந்திரி என்றெல்லாம் இல்லை. கூட்டமிருந்தால் வாள் இருந்தால் ராஜா தான்.

கொள்ளையடிக்கிறதும் குகைகளில் மறைந்து போவதும் தீவுகளில் அந்த வேட்டைகளை புதைத்து வைப்பது என்று ஒரே கூத்து தான். இன்றைய தமிழ் நாட்டின் உள்ளேயும் கடல் பிரதேசத்திலும் நிறைய தீவுகள் இருந்ததா சொல்றாங்க. அதுவெல்லாம் இவங்க கட்டுப்பாட்டில தான் இருந்துதாம். வழிப்பறி கொள்ளையர்கள் கடல் கொள்ளையர்கள் என்றே சொல்லலாம். இவர்கள் வடக்கிலிருந்தே வந்தவர்களா இல்லை தமிழ் நாட்டின் வடப்புறத்திலிருந்து வந்தவர்களா என்பது தெளிவாக தெரியவில்லை. இவர்களுக்கு சில குறும் மன்னர்களும் உதவி செஞ்சிருக்காங்க. சில பேர் பயத்திலும் சில பேர் அவங்க கொடுக்கிற பொன்னுக்கும்.


மஹாபாரதத்துக்கு பிறகு ஆரம்பிச்சதுதான் இந்த இருண்ட காலம் அப்படின்னு சில பேரு சொல்றாங்க. தமிழ் இலக்கியங்கள் சுமார் 3000 வருடம் களப்பிறர் காலம் இருக்கலாம்னு சொல்றாங்க. அதுக்கப்புறம் தான் சேரன் சோழன் பாண்டியன் அப்படிங்கறது இன்னொரு கூற்று.
கொங்கு நாட்டை களப்பிறர் ஆண்டதாக சொல்றாங்க. அவங்க களப்பிறர்னா தமிழ் அல்லாத மற்ற மொழி பேசறவங்கனு குறிப்பிட்டு இருக்காங்க.


ரகு மிகுந்த ஆர்வத்துடன் அது சரி, எதுக்கு அந்த இருண்ட காலத்தைப் பற்றி நமக்கு இத்தனை ஆர்வம். அதைப்பத்தி ஆராய்ச்சி பண்ணனும் ஏன் நிறைய பேர் துடிக்கனும்.


அப்பாடா ரகு தூங்கிட்டியோன்னு நினைச்சேன் என்றாள் நீலா நக்கலாக.

சங்கரும், ரவியும் ரகுவின் தோளில் சாய்ந்துக் கொண்டு ஆர்வத்துடன் கதை கேட்டுக் கொண்டிருந்தனர்.
ரவி, பின் சீட்டு வழியாக சவிதாவின் கூந்தலை மோந்துக் கொண்டிருந்தான்.


ரகு எதுக்கு இந்த ஆராய்ச்சி அப்படின்னா, ஆங்கிலே அரசு நம் நாட்டில் இந்த மாதிரி ரிசர்ச் பண்றவங்களுக்கு ரொம் உதவி பண்ணுது. அவங்களுக்கு என்ன ஆர்வம் அப்படின்னா, களப்பிறர்கள் அறிவிலேயும் சிறந்து விளங்கினவங்க. அவங்க கொள்ளையடிச்சதை பல இடங்களிலே ரகசியமா மறைச்சி வச்சிருந்தாங்க. அதுல எவ்வளவு செலவு பண்ணாங்கன்னு யாருக்கும் தெரியாது. எத்தனை கிடைச்சிது எத்தனை இன்னும் மறைஞ்சிருக்குன்னு. பல்லவர்கள் காலத்திலே கோவில் கட்டும்போது ஒரு சில புதையல் கிடைச்சிது. இன்னிக்கு தேதில தமிழக பட்ஜெட்டையே பண்ணலாம். ஆனால் அதுவும் களப்பிறர் தான் வெச்சதான்னு தெரியலை.


அது சரி ஆங்கிலேயர் தான் நம் நாட்டை இத்தனை காலமா ஆண்டாங்களே, அவங்க காலத்திலே ஏன் ஆராய்ச்சி பண்ணலை என்று ஒரு புத்திசாலி கேள்வி கேட்டாள் சவிதா.


அதுதான் நான் சொன்னேன்ல களப்பிறர்கள் பயங்கர புத்திசாலின்னு. அவங்க கட்டுப்பாட்டுல்லே நம்ம நாடு இருக்கும் போது ஒரு அங்குலம் விடாம தேடிப்பார்த்துட்டாங்க ஆங்கிலேயர்கள். அவங்களால முடியலை. அதனாலதான் ஆராயச்சி இன்னும் தொடருது.


அப்படியா சங்கதி. அப்படின்னா நம்ம பழனியப்பன் சாருக்கு இந்த ஆராய்ச்சி முடிஞ்சதும் டாக்டர் பட்டத்தோடு பல கோடி ரூபாய் கிடைக்கும்னு சொல்லு. இல்லையா சார் என்றான் சங்கர்.


அட பசங்களா. நான் டாக்டர் பட்டத்துக்காக மட்டும் ரிசர்ச் பண்ணிக்கிட்டு இருக்கேன். நீங்க பாட்டி இது மாதிரி புரளி கிளப்பிவிடாதீங்க. அப்புறம் புதையலை தேடறோம்னு சினிமாவில வரமாதிரி நம்ம பின்னாடி ஒரு கூட்டம் வந்துடும். நம்ம எல்லோரையும் தீர்த்துக் கட்டிடுவாங்க.


அவர் விளையாட்டாக சொன்னது நிஜமாகிவிடும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை

ஓவியா
08-11-2006, 07:13 PM
அருமையான மர்ம நாவல்
படிக்க-படிக்க ஒரே மர்மமாக இருக்கு.....எங்க போய் முடியுமோ...

போலீஸ் அதிகாரி போல கும்மென்று இருந்தார்.
வர-வர நாட்டில் போலீஸ் அதிகாரிங்க எல்லாம் கும்மென்றுதான் இருக்காங்க......:D :D ...ஒரே குண்டப்பா கணக்கில்.........:D :D

மர்ம நாவலிலும் ரசனையா ஒரு காதல் கதையை சொறுவி இருகீங்க...ம்ம்ம்

நன்றி மோகன்.......

leomohan
09-11-2006, 05:18 AM
8
அதிகாலையில் வண்டி சிதம்பரத்தை தாண்டி ஒரு குக்கிராமத்தில் சென்று நின்றது. பேராசிரியர் தம்பிரான் அவர்களுக்காக ஒரு கிராம வீட்டை ஏற்பாடு செய்திருந்தார். அவருடைய பணியாள் அவர்களை தங்கவைத்துவிட்டு குளித்து முடித்துவிட்டு சுமார் 11 மணிக்கு வந்தால் தம்பிரனை பார்க்கலாம் மதியம் உணவு அங்குதான் என்று சொல்லிச் சென்றார்.

இரவு முழுவதும் உட்கார்ந்தே வந்ததால் அனைவரும் களைத்திருந்தனர். தம்பிரான் இவர்கள் காலை சிற்றுண்டி முடித்துவிட்டதாக நினைத்துவிட்டார் போலும்.

அனைவரும் கிணற்றடியில் குளித்து மகிழ்தனர். அந்த அதிகாலை கிராமப்பொழுது மிகவும் ரம்மியமாக இருந்தது. மரம் செடி கொடிகள், மண்ணின் மணம் குயில்களின் கூவல் தெளிந்த கிணற்று நீர் என்று நரகவாழ்கை அனுபவித்த வந்த நகரவாசிகளுக்கு அந்த குக்கிராமம் சொர்க்கம் போல் காட்சி தந்தது.

கரிகாலனுடன் சங்கர் சென்று அனைவருக்கும் காலை உணவு வாங்குவதாக முடிவானது. சிதம்பரம் 11 கிலோ மீட்டர் தூரம். ஆண்களும் பெண்களும் கிடைத்த இடத்தில் ஒரு குட்டித்தூக்கம் போடச் சென்றனர்.

சங்கர் இரவு பழனியப்பன் கொடுத்த காகிதங்களை வழியில் படிப்பதற்காக எடுத்துக் கொண்டான். நீலாவின் விளக்கங்களுக்குப் பிறகு நிஜமாகவே ஆராய்ச்சியில் பங்காற்றவேண்டும் என்று எண்ணம் மேலோங்கி நின்றது அவனுக்கு.

தூக்கம் கண்களில் இருக்க மெதுவாக படித்துக் கொண்டே வந்தான். கரிகாலன் மெதுவாக ஓட்டிச் சென்று நகரத்திற்கு நுழையும் முன் முதலில் கண்ணுக்கு தென்பட்ட உணவகத்தில் வண்டியை நிறுத்தினார்.

சிறிய உணவகமாக இருந்தாலும் சுத்தமாக இருந்தது. என்ன சாப்பிடறீங்க என்று வழக்கமாக கேட்கும் கேள்வி கேட்காமல் கரிகாலனுக்கும் சங்கருக்கும் இரண்டு தட்டு இட்லிகள் கொண்டு வைத்துவிட்டு ஒரு சிறிய காகிதத்தில் வெல்லக் கட்டி ஒன்றையும் இருவருக்கும் வைத்துவிட்டு போனார்.

இது எதுக்கு என்று சங்கர் கேட்க பிரசாதம் தம்பி என்று உரிமையாளர் பெரியவர் பதில் அளித்தார்.

காலை வேளையில் சுடச்சுட இட்லி சாம்பார் சாப்பிட்ட பிறகு இருவரும் உயிர் வந்தது போல இருந்தது. இன்னும் சில பலகாரங்களை சொல்லிவிட்டு எடுத்துக் கொண்ட போகவேண்டிய உருப்படிகளையும் சொன்னார் கரிகாலன். சங்கர் விடாமல் படித்துக் கொண்டிருந்தான்.

சாப்பிட்டு முடித்துவிட்டு காபி என்று சொன்னார்கள். சட்டென்று ஒரு பக்கத்தை பார்த்த சங்கர் அதிர்ந்தான்.

வாங்க கரிகாலன் சார் நாம அவசரமா போகனும். பழனி சார் கிட்டே இந்த விஷயத்தை சொல்லனும் என்றான் பதட்டமாக.

இருப்பா காபி வருது குடிச்சிட்டு போகலாமே என்றார் இட்லி தோய்ந்த ருசியான சாம்பாரை குடித்துக் கொண்டே.

இல்லை சார். நாம உடனடியா போகனும் வாங்க என்றான்.

காபி வேண்டாம் என்று சொல்லிவிட்டு சாப்பிட்டதுற்கும் எடுத்து செல்லவேண்டிய பொட்டலங்களுக்கும் காசு கொடுத்துவிட்டு வண்டியை எடுத்தார் கரிகாலன்.

வண்டி சிறிது தூரம் சென்றதும் அப்படி என்னப்பா படிச்சே இந்த பக்கங்களிலே என்று கேட்டார் கரிகாலன்.

சார். ஒரு பெரிய துரோகம் நடந்திருக்கு சார். இதை பழனியப்பன் சார் கிட்டே கட்டாயம் சொல்லியாகனும் என்று சொல்லிக் கொண்டே தன்னிடம் இருந்த ஒரு பக்கத்தை அவரிடம் காட்டினான்.

அட இது ரொம்ப அநியாயமா இருக்கே என்ற அவர், அந்த டாஷ்போர்டிலிருந்து அந்த டார்ச் லைட் எடேன் என்றார்.

இப்ப எதுக்கு சார் டார்ச் லைட் என்றான் சங்கர் பதட்டதுடன்.

அதுவா இந்த கியருக்கு கீழே வைக்கனும். எடேன் என்றார் அவசரமாக.

டாஷ் போர்டை திறந்து அந்த பெரிய கைப்பிடி கொண்ட டார்ச் லைட்டை எடுத்து தந்தான் கரிகாலனிடம்.

அவர் தன் இடது கையால் அதை வாங்கிக் கொண்டு, தம்பி நீ அதிகம் தெரிஞ்சிக் கிட்டே என்று சொல்லிக் கொண்டே அவன் தலையில் ஓங்கி அடித்தார்.

அவர் அடிக்க வருவதை உணர்ந்த அவன் சார் என்ன செய்யறீங்க......... என்று சொல்லி முடிப்பதற்குள் நச்-சென்று அவன் தலையில் அந்த ஸ்டீல் தலை இறங்கியது. பலபேர் தலையினுள் மேளக்கச்சேரி வாசிப்பது போல் இருந்தது. அப்படியே சரிந்தான். அவன் முழுவதும் நினைவு இழப்பதற்குள் இன்னொரு நச் தலையில் இறங்கியதை உணர்ந்தான்.
கறுப்பு வரலாறு தன் முதல் பலியை வாங்கிவிட்டது. மயங்கியவன் பிறகு எழுந்திரிக்கவே இல்லை.

மதி
09-11-2006, 05:55 AM
அடடே..ரொம்ப சுவாரஸ்யமா போகுதே...!
சீக்கிரம் மீதி பாகங்களையும் வெளியிடுங்கள் மோகன்..

leomohan
09-11-2006, 11:47 AM
9

கரிகாலன் வந்து வண்டியை அந்த கிராம வீட்டின் முன் நிறுத்தினார். ரகு வெளியே வந்து பொட்டலங்களை கையில் வாங்கியபடியே சங்கர் எங்க சார் என்று கேட்டான்.


அவனாப்பா அவன் கிராமத்து வெளியிலே இறங்கிட்டான். வயல் வரப்புல நடந்து வர ஆசைன்னு சொன்னான். வந்திடுவான். நீங்கள்லாம் சாப்பிடுங்க என்றார்.


அனைவரும் சிதம்பரத்தின் ருசியான உணவை உண்டு மகிழ்ந்தனர். பிறகு தம்பிரானை காண தயாரகினர்.


பழனியப்பன் வந்து, எங்கப்பா இந்த சங்கரு. தம்பிரான் ஐயாவை பார்க்க நேரமாகுதுல்ல என்றார் சலிப்புடன்.


அவன் வரட்டும் சார். நாம போகலாம் என்று நீலவேணி சொன்னாள். இரு பெண்களும் சொல்லி வைத்தால் போல பச்சை புடவை கட்டியிருந்தார்கள். நீலா தன் தந்தை வாங்கித் தந்த புதிய லாப்டாப்பை தாங்கி வந்தாள். ரவியும் ரகுவும் வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி அணிந்து கிராம மணத்துடன் ஒன்றியிருந்தனர்.


தம்பிரானுக்கு 52 வயது இருக்கும். ஒல்லியான தேகம். கண்ணாடி போட்டிருந்தார். வெறும் மார்ப்புடன் அமர்ந்திருந்தார். நெற்றியில் பெரிய பட்டை. அவருடைய வீடு பழய வீடாக இருந்தாலும் அழகாக இருந்தது.


வாங்க வாங்க என்று வரவேற்றார். குனிந்து வாங்க. இது பழைய காலத்து வீடு என்றார்.


அனைவரையும் பாயில் ஒட்கார வைத்து விட்டு தானும் தரையில் அமர்ந்தார். பெரிய தாழ்வாரம். வானத்திலிருந்து சூரியன் நேராக வீட்டில் வருகை. கம்பியின் வழியே அழகான கோடுகளின் நிழல் கோலங்கள்.


சோபா இருந்தாலும் ஆற அமர உட்காருனும்னா அது பாய் தான், இல்லையா என்றார்.


இரு இளைஞர்களும் நெளிந்தனர்.


அனைவரையும் அறிமுகப்படுத்திவிட்டு பழனியப்பன் பேசினார். ஐயா, சந்திரசேகர் ஐயா தான் உங்களை பார்த்து வரச் சொன்னார். நீங்க தான் களப்பிறர் ஆட்சியைப் பற்றி ஆராய்ச்சி ஆரம்பிச்சிட்டு பாதியிலே நிறுத்திட்டீங்க. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே நீங்கள் அந்த முயற்சி எடுத்தீங்க. உங்களால உதவ முடியும்னு சொன்னாரு.


விட்டத்தை சில நிமிஷங்கள் பார்த்துவிட்டு, நீங்க இத்தனை தூரம் என்னை பார்க்க வந்ததுக்கு ரொம்ப நன்றி. என்னால உங்களுக்கு உதவியாக இருக்க முடியமான்னு சந்தேகமாக இருக்கு. ஏன்னா நான் ஆரம்பத்திலேயே நிறுத்திட்டேன்.

ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னன்னா, என்னை இந்த தலைப்பில ஆராய்ச்சி செய்யவேண்டாம்னு சொன்னதே சந்திரசேகர் சார்தான்.


அப்படியா என்று ஒரே நேரத்தில் ஆச்சர்யத்துடன் கேட்டனர் அனைவரும்.


ஆமா. ஒரு பத்து-பதினைந்து பக்கம் எழுதிட்டு அப்ப என்னுடயை லக்சரரா இருந்த சந்திரசேகர் சார் கிட்ட போய் காட்டினேன். பல்லவர்கள் எப்ப ஆட்சி செஞ்சாங்க, நாயக்கர் ஆட்சி காலம் எதுன்னு 2-3 கேள்வி கேட்டார். எனக்கு பதில் தெரியலை. ஒழுங்கா புத்தகத்தில இருக்கற விஷயத்தை முதல்ல படி, அப்புறம் பெரிய ஆராய்ச்சி பண்ணலாம்னு திட்டி அனுப்பிச்சிட்டாரு. அவரு ஒரு பர்பெக்ஷனிஸ்ட். அவரு எந்த ஒரு பாடம் நடத்தினாலும் கையில புத்தகம் வைச்சிகிட்டது இல்லை. தேதிகள் அவருக்கு அத்துப்படி. அன்னிக்கு அவரு திட்டினது மனசுக்கு கஷ்டமாக இருந்தாலும் நான் சரின்னு வந்திட்டேன். அப்புறம் அந்த உத்வேகம் இல்லை. நான் எழுதினது கூட அவர்கிட்டேயே விட்டுட்டு வந்திட்டேன். காலேஜ் முடிச்சதும் அவரே கூப்பிட்டு நான் எழுதின கட்டுரை திருப்பி கொடுத்துட்டு, இனிமே முதுகலை பண்ணப்போறே, அதுக்கப்புறம் இந்த தலைப்புல ஆராய்ச்சி செய் அப்படின்னு சொல்லி அனுப்பினாரு. ஆனா அதே கல்லூரியில் முதுகலை பண்ணினாலும் அப்புறம் அந்த தலைப்பை தொடரனும்னு தோணவே இல்லை.


அவர் பேசி முடித்து விட்டு கண்ணாடியை கழற்றினார். பிறகு விட்டத்தை பார்த்தார். பிறகு ஒரு பெரும் மூச்சு விட்டார்.


ரகுவினுள் ஒரு சிறந்த கலைஞன் இருந்தான். ஓவியன். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் அந்த கிராம வீட்டை தன் கையேட்டில் அழகாக வரைந்திருந்தான்.


அதைப் பார்த்த தம்பிரான், அடடே, தம்பி, காட்டுங்க. என்ன அழகா வரைஞ்சிருக்கீங்க. நானும் உங்களை மாதிரி தான், பார்த்ததை பார்த்த மாதிரியே வரைஞ்சிடுவேன். உங்க பேரு என்ன சொன்னீங்க.


ரகு சார் என்றான்.


ரகு. உங்களுக்கு என்ன என்னால கொடுக்க முடியும்னு யோசிச்சேன். உங்களுக்கு சில விஷயம் கொடுக்க முடியும். இருங்க என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

ஒரு பெரிய தகரப்பெட்டியை கொண்டு வந்து அவர்கள் முன் வைத்தார். அதை திறந்து சுருட்டி வைத்திருந்த ஒரு படத்தை எடுத்தார். அதை பிரித்து கீழே வைத்தார்.


தம்பி, இதை நல்லா பாருங்க. இது நரசிம்ம வர்ம பல்லவன் காலத்து கல்வெட்டு. இதை நான் ஒரு லைப்ரரியில் பார்த்தேன். உடனே வரைஞ்சிட்டேன். இதுல என்ன எழுதியிருக்குன்னா களப்பிறர் நூறு பேரை வென்ற பல்லவன் வழி வந்தோனே என்று நரசிம்மவர்மனை புகழந்து பாடியிருக்கிறார் ஒரு புலவர். சுமார் ஆயிரம் நூல்கள் தேடினாத்தான் களப்பிறர் பத்தி ஒரு வரி கிடைக்கும். ஆனால் அதிர்ஷ்ட்டவசமாக எனக்கு இது முதல் வாரத்திலேயே கிடைச்சிடுத்து. இது யாருக்கும் தெரியாது. ரிசர்ச் தொடர்ந்தா பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன். ஆனா, உடல் நலம் சரியில்லாததால வேலையை விட்டுட்டு சொந்த ஊரான இந்த கிராமத்திலே வந்து செட்டிலாயிட்டேன்.


அனைவரும் மிகுந்த ஆச்சர்யத்தோடு பார்த்தனர். ரகு உடனே அதை பிரதியெடுக்க ஆரம்பித்துவிட்டான்.


அவர் இன்னும் சில காகிதங்களை எடுத்து பழனியப்பனிடம் கொடுத்தார். அதை பவ்யமாக வாங்கிக் கொண்ட அவர் அதை எடுத்துப் பார்த்தார். சுமார் 15-20 பக்கங்கள் இருக்கும். அதை வாங்கி கண்களை ஓட விட்டவருக்கு கண்கள் வெளுத்தது. படபடப்பாக இருந்தது.


எனக்கு என்ன தோனுதுன்னா இதுக்கு மேல எங்கிட்ட எந்த தகவலும் உங்களுக்கு கிடைக்காது. அதனால நீங்களே மேலே முயற்சி செய்யுங்க. என் ஆசீர்வாதம் என்றார்.


சவிதா அமைதியாக இருந்தவள் மறுபடியும் ஒரு புத்திசாலித்தனமான கேள்வி கேட்டாள். சார், உங்களுக்கு எதனால இந்த தலைப்பில ஆர்வம் வந்தது.


ஆ........ங், நானும் என் நண்பனும் கதை கவிதைகள் எழுதுவோம். அவன் பேரு ஞானபிரகாசம். ஒரு நாள் எதோ பேச்ச வாக்கிலே எம் ஏக்கு அப்புறம் ரிசர்ச் பண்ணனும் அப்படி பண்ணா தமிழ் நாட்டை சம்பந்தப்பட்ட தலைப்பில தான் ஆராய்ச்சி பண்ணனும்னு பேசிக்கிட்டோம். தமிழக வரலாறுல குழப்பமா இருக்கற ஒரு தலைப்பு களப்பிறர் ஆட்சிக்காலம் தான். சிலர் அவங்க 3000 வருஷம் ஆட்சி செஞ்சாங்கன்னு சொல்றாங்க. சிலர் 300 அப்படிங்கறாங்க. அதனால இந்த தலைப்பில ஆர்வம் ஆனோம். ஆ. ஒன்னு சொல்ல மறந்திட்டேன். அவன் முதுகலை முடிச்சப்பின்னும் அந்த தலைப்பில தான் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருந்தான்னு சொன்னாங்க. எனக்கு தொடர்பு விட்டுப் போச்சு.


சார். நல்ல விஷயமா சொன்னீங்க. சொல்லுங்க அவரு எங்கிருக்கிறார்.


அவன் தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழகத்தில வேலை செஞ்சதா கேள்வி. மேல தொடர்பு இல்லை.


ரொம்ப நன்றி சார். உங்களோட இந்த நூலை வெச்சி நாங்க மேலே தொடர முயற்சி பண்றோம் என்று அனைவரும் நன்றி தெரிவித்தனர்.


அவருடைய மனைவி அதற்குள் சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தார்.


எங்கப்பா இந்த சங்கர். சின்னப் பசங்களை இந்த மாதிரி முக்கியமான வேலைக்கெல்லாம் அழைச்சிகிட்டு வந்தது என் தப்பு என்றார் பழனியப்பன் கோபமாக.


நண்பர்கள் குழப்பத்துடன் கரிகாலனைப் பார்த்து எங்க சார் இறக்கிவிட்டீங்க என்றனர்.


இந்த ஊர் எல்லையில தாம்பா. ஏதோ வயல் வெளி போறேன்னு சொன்னான். ஆளை காணோமே.


சரி நீங்க சாப்பிடுங்க. அந்த தம்பி வந்தா தனியா பரிமாறிக்கலாம் என்றார் தம்பிரான் விருந்தோம்பலுடன்.


அனைவரும் மதிய உணவை உண்டு மகிழ்ந்தனர். தாமரை இலையில் சோறும் சாம்பாரும் சுடச்சுட அப்பளமும் உண்ட பிறகு வாழைப்பழமும் ஒரு வித்தியாசமான உணர்வை கொடுத்தது.



சாப்பிட்டு முடித்த ரவி, சார் கொஞ்சம் சைக்கிள் தர்றீங்களா, இவன் எங்கே போனான்னு பார்த்திட்டு வந்திடறேன் என்றான்.


அவரும் தாராளமா எடுத்துட்டு போப்பா. நான் வேணா பச்சைமலைய கூட அனுப்பறேன் என்று சொல்லி வண்டி சாவி தந்து தன் பணியாளையும் கூட அனுப்பி வைத்தார்.


ஊர் எல்லையில் வண்டியை நிறுத்தி விட்டு அருகிலிருந்த வயல் வெளியில் நடக்கத் தொடங்கினர் இருவரும். அவ்வப்போது சங்கர் என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்த ரவி அந்த காட்சியை பார்த்ததும் சட்டென்று உறைந்து நின்றான்.


பம்பு செட்டுக்கு அருகில் சங்கரின் உடல் மின்சாரத்தில் அடிபட்டு கருகி நின்றிருந்தது. பேச்சடைத்து நின்றான். சங்கரின் உடல் கரிகட்டை போல கறுப்பாக இருந்தது.

ஓவியா
09-11-2006, 07:33 PM
ம்ம்ம்ம் ஒரே மர்மமாக இருக்கே..

அப்ப அந்த வில்லன் யாரு கரிகாலன்னா....

guna
10-11-2006, 09:09 AM
என்ன மோகன் இது?

மர்ம கதைனா மரணம் இருந்தே தன் ஆகனுமா?
சின்ன வயசு வேற..

ம்ம்ம்ம் சரி, உங்க கற்பனை படியே தொடருங்கள்..

குணா

leomohan
10-11-2006, 03:55 PM

leomohan
10-11-2006, 04:04 PM

leomohan
10-11-2006, 04:10 PM
என்னால் இந்த பகுதியில் தொடர்ந்து பதிப்புகளை இட முடியவில்லை. வெறும் வெற்று பதிவு தான் வருகிறது.

leomohan
10-11-2006, 08:19 PM
10
போலீஸ்க்கு சொல்லி அனுப்பி மூன்று மணி நேரத்திற்கு பிறகு வந்தது. ரவி யாரும் சங்கர் வீட்டில் சொல்ல வேண்டாம் என்றும் உடலை எடுத்துக் கொண்டு ஊருக்கு சென்ற பிறகே தகவல் சொல்லலாம் என்று சொல்லிவிட்டான்.

போலீஸும் பிரேத பரிசோதனை நடத்தி தகவலை சென்னையில் தெரிவிப்பதாக கூறினர். அனைவரும் அவன் பம்பு செட்டில் குளிக்க முயன்றிருக்கலாம் என்றும் அதனால் மின்சாரம் பாய்ந்து இறந்திருக்கலாம் என்று முதல் சோதனையில் முடிவுக்கு வந்திருந்தனர். அதனால் அதிக விசாரனை எதுவும் நடக்கவில்லை.

அனைவரும் சென்னைக்கு திரும்பினர். சங்கரின் வீட்டில் சோகம் சூழ்ந்தது. இருக்கும் போது வெட்டியாக இருக்கும் ஒருவன் இறந்த பிறகு எத்தனை பேரை சோகத்தில் ஆழ்த்த முடியும் என்று அன்று பார்க்க முடிந்தது. அவனுடைய அண்ணன் குழந்தையும் அண்ணியும் தான் அதிகம் அழுதது.

சில நாட்களுக்கு பிறகு அவர்களின் ஆராய்ச்சி பயணம் மீண்டும் தொடர்ந்தது. சோகத்தில் இருந்தாலும் எந்த வேலையும் யாருக்காகவும் நிற்பதில்லையே. தஞ்சை நோக்கி வண்டி பயணித்தது.

சங்கரின் அகால மரண கூத்தினால் யாரையும் சந்திக்காமலே தஞ்சை வந்து சேர்ந்தனர். நேராக தமிழ் பல்கலை கழகத்தில் வந்த சேர்ந்தனர்.

ஞானப்பிரகாசம் தன்னுடைய அறையில் இருந்தார். தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு கரிகாலனும் பழனியப்பனும் அமர்ந்தனர். மாணவர்கள் வணக்கம் தெரிவித்துவிட்டு ஒரமாக நின்றனர்.

ஞானப்பிரகாசம் சொன்ன தகவல்கள் இன்னும் பிரம்மிப்பை ஊட்டியது.

ஆமாம். தம்பிரானும் நானும் ஒன்னாத்தான் ஆரம்பிச்சோம். அவனுக்கு ஆர்வம் போயிடுத்து. நான் இன்னும் இரண்டு வருஷம் தொடர்ந்தேன். ஆனா ஒரு அதிர்ச்சியான விஷயம் நடந்தது. அதுக்கப்புறம் நானே அதை கைவிட வேண்டியதா போயிடுத்து.

என்ன என்று அனைவரும் ஆச்சர்யத்துடன் கேட்டனர்.

நீங்க சொன்னா ஆச்சர்யப்படுவீங்க. சினிமாவில வருகிற மாதிரி என்னை நாலு பேரு அடிச்சி துவைச்சிட்டாங்க. என்ன ஏதுன்னு கேட்க விடலை. நல்லா அடிச்சிட்ட பிறகு என்னடா மயி.... களப்பிறர் ஆராய்ச்சி. மவனே இந்த ஆராய்ச்சியில்லாம் விடலைன்னா உடம்புல ஒரு எலும்பு கூட இருக்காதுன்னு.

இந்த ஆராய்ச்சிக்கும் இந்த அடிக்கும் எனக்கு ஒரு சம்பந்தமும் புரியலை. வீட்டுக்கு வந்த என்னை காயத்தோட போட்டுட்டு வீட்டிலிருந்த ஆராய்ச்சி கட்டுரைகள் எல்லாம் எடுத்துட்டு போயிட்டாங்க.


என்ன ஐயா சொல்றீங்க. எதுக்காக யார் உங்களை அட்டாக் பண்ணனும் என்று ரகு கேட்டான்.

அதாம்பா எனக்கும் புரியலை. நான் என்ன வருமான வரி அதிகாரியா இல்லை நகராட்சி ஆபீஸரா.

நீங்க சொல்றது ரொம்ப ஆச்சர்யமாவும் அதிர்ச்சியாவும் இருக்கு. அப்ப உங்க கிட்ட எந்த தகவலும் இல்லையா ஆதங்கத்துடன் கேட்டாள் நீலா.

சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு பிறகு சொன்னார். இங்கப்பாரும்மா நீங்கள் எல்லாரும் இந்த தலைப்பில ரொம்ப ஆர்வமா இருக்கீங்க. இது நடந்து ஒரு 30 வருஷம் இருக்கும். அதனால யாராலையும் எனக்கு பிரச்சனை வராதுன்னு நினைக்கிறேன். ஆனா அந்த சம்பவத்திற்கு பிறகு எனக்கு இதை பத்தி பேசினாலே பயமா இருக்கு.


அந்த அறையில் ஒரு மயான அமைதி நிலவியது.

பிறகு அவரே பேசினார். என்னடைய காதலி மாலான்னு ஒரு பொண்ணு. வீட்டில பேசிடாதீங்கப்பா. எனக்கு அந்த பொண்ணோட கல்யாணம் ஆகலை. அவளுக்கு கையெழுத்து ரொம்ப அழகாக இருக்கும். அவ தினமும் நான் எழுதின குறிப்புகளை அழகா பிரதியெடுப்பா. அவகிட்டு அதிர்ஷ்டவசமா இந்த ஆராய்ச்சி பத்தி எல்லாம் இருக்கு பிரதியா. என்னுடைய மத்த ஆராய்ச்சியெல்லாம் அந்த ஆளுங்க எடுத்துட்டு போயிட்டாங்க. என்னை ஆஸ்பத்திரியில வந்து பாத்திட்டு அவகிட்ட இருந்த பிரதியை கொடுத்திட்டு போனா. நான் யார்கிட்டேயும் எதுக்காக அடிபட்டதுன்னு சொல்லலை. நான் அதை பத்திரமா வைச்சிருக்கேன்.

அவர்களுடைய கண்கள் விரிந்தது. மேலும் அவர் பேச காத்திருந்தனர்.

சரி.நீங்க ஊர் சுத்திப் பார்த்திட்டு வாங்க. சாய்ங்காலம் கல்லூரி முடிஞ்சதும் நான் உங்களுக்கு அந்த தொகுப்பை தர்றேன் என்றார்.

அனைவரும் நன்றி கூறி உற்சாகமாக விடை பெற்று சென்றனர். பிறகு அனைவரும் தஞ்சை பெரிய கோவிலை சுற்றிப் பார்த்துவிட்டு ப்ரதீஸ்வர பவனில் நன்றாக வெட்டினர்.


மாலையில் மங்களாபுரம் காலணியில் இருந்த அவர் வீட்டு அழைத்துச் சென்றார் ஞானப்ரகாசம். பின்னால் இருந்த அறையில் மிகவும் ரகசியமாய் வைத்திருந்த பழைய காகிதங்களை எடுத்த தந்தார். அதை மிகவும் பரவசத்துடன் வாங்கிக் கொண்டாள் சவிதா. அவர்களுக்கு மேலும் ஒரு படி முன்னேறியது போல ஒரு மகிழ்ச்சி. இதை அந்த ஜோடிக் கண்கள் வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தன.

leomohan
13-11-2006, 02:12 PM
11

தஞ்சையிலேயே ஒரு விடுதியில் அறையெடுத்தனர்.

இரவு உணவுக்கு சேர்ந்த அனைவரும் களப்பிறர் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்.

டேய் ரவி களப்பிறர் நூறு பேரை வென்ற பல்லவன் வழி வந்தோனே
அப்படின்னா மொத்தம் 100 பேர் இருந்தாங்க அப்படித்தானே அர்த்தம் என்றான் ஏதோ கண்டுபிடித்த மாதிரி ரகு.

இல்லை ரவி, இதை பல வழிகள்ல பார்க்கனும்.

1. நூறு பேரை வென்ற .........கவிஞர்கள் பாடும் போது நூறு யானைகளை கொன்ற, நூறு புலிகளை அடக்கிய அப்படின்னு சொல்வாங்க. ஆனா நூறு இங்க எண்ணிக்கையின்னு எடுத்துக்க கூடாது. நூற இங்க பல அப்படின்னு அர்த்தம்.
2. நூறு பேரை வென்ற ...........ஆக நூறு களப்பிறர்களை வென்றிருக்கிறான் பல்லவன் ஒருத்தன். ஆனா நூறு பேரு தான் இருந்தாங்கன்னு அர்த்தம் இல்லை. அதுமாதிரி நூறு பேர்தான் இருந்தாங்கன்னா, அனைத்து களப்பிறரையும் வென்ற அப்படின்னு பாடியிருப்பாங்க.

என்று கூறினார் பழனியப்பன்.

ஆனா ஒரு குழப்பமான விஷயம் ரவி. சரி நான் அதைப்பத்தி அப்புறமா பேசறேன். அடுத்து என்ன பண்ணலாம்னு உங்கள் கருத்தை சொல்லுங்க என்றார்.

இன்னும் இரண்டு நாள் இங்கே இருந்து முடிவு செஞ்சிகிட்டு அப்புறமா கிளம்பலாம் என்றான் கரிகாலன்.

எனக்கும் அது தான் சரின்னு தோணுது என்றான் ரகு.

அதுக்கு முன்னாடி நம்மிடம் உள்ள தகவல்களை எல்லாம் படிக்கனும் மொதல்ல என்றாள் நீலவேணி.

ஆமாம், அது தான் நமக்கு மேலே என்ன பண்ணலாம்ற க்ளாரிட்டி கொடுக்கும் என்றாள் சவிதா. நீலா உன் லாப்டாப்பை என்கிட்டே கொடு. இன்னிக்கி ராத்திரி உட்கார்ந்து நான் ஞானப்ரகாசம் சார் கொடுத்த எல்லாத்தையும் என்டர் பண்ணிடறேன் என்றாள்.

அனைவரும் உண்டுவிட்டு அவர்களுடைய அறைக்கு சென்றனர்.

சுமார் 11 மணி அளவில் சவிதாவின் கதவு தட்டப்பட்டது. யாரென்று பார்த்த அவள், கரிகாலன் நின்றிருப்பதை கண்டாள். என்ன சார் இந்த நேரத்தில என்றாள்.

உள்ளே வரலாமா என்றார் அவர்.

வாங்க என்று தயக்குத்துடன் சொன்னாள்.

அவர் உள்ளே வந்து அமர்ந்துக் கொண்டார்.

என்ன சார் ஒரே பதட்டமாக இருக்கீங்க.

ஆமாம் மா. சங்கர் செத்ததிலேர்ந்து எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. இன்னிக்கு என் மனைவி செத்த நாள். அதனால ஒரே துக்கமாக இருக்கு. கொஞ்ச நேரம் உங்கிட்ட பேசிட்டு போகட்டுமா என்றார் கெஞ்சலாக.

சரி சார். இந்தாங்க என்று ப்ளாஸ்கில் இருந்த காபியை ஒரு டம்ளரில் போட்டு கொடுத்தாள்.

அவர் மெதுவாக அதை குடித்தார்.

இன்னும் தூங்கலையா சவிதா என்றார்.

தூங்கனும் சார். இன்னிக்கு கிடைச்ச தகவல்களை கம்ப்யுட்டரைஸ் பண்ணிகிட்டு இருக்கேன்.

வேண்டாம் மா இந்த ஆராய்ச்சி. பழனியப்பன் நல்லவரு இல்லை. உங்களை நல்லா உபயோகப்படுத்திக்கிறாரு. அவருக்கு தான் பேரு கிடைக்கப் போகுது. உங்களுக்கு ஒன்னும் கிடைக்காது என்றார்.

பரவாயில்லை சார். நாங்க ஒரு அனுபவத்துக்காகத்தான் வந்திருக்கோம் என்றாள் சவிதா மிகவும் அடக்கமாய்.

அப்ப கல்யாணத்திற்கு அப்புறம் கிடைக்கிற அனுபவத்தை இன்னிக்கு அனுபவிக்கிலாமா என்றார் ஒரு மாதிரி பார்வையுடன்.

என்ன சார் இது மாதிரி பேசறீங்க. நீங்க மொதல்ல வெளியே போங்க என்றாள் காட்டமாக.

வா, வா என்று சொல்லிக் கொண்டே சட்டென்று அவளை கட்டியணைத்தார்.

அவள் உதறினாள். அவளை லாவகமாக தூக்கி கட்டிலில் எறிந்தார். அவரும் கட்டிலில் குதித்தார். அவள் உருண்டு புரண்டு ஓட முயற்சிக்க கண்ணிமைக்கும் நேரத்தில் அவள் மேசை மேலிருந்த ஞானப்ரகாசம் கொடுத்த காகிதங்களை பனியனுக்குள் ஒளித்து வைத்துக் கொண்டு அவர் கொண்டு வந்த காகிதங்களை அதே இடத்தில் வைத்தார்.

அவள் ஓடி கதவின் பக்கம் செல்ல முயல, அவள் சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் அவள் காலில் சாஷ்டாங்கமாய் விழுந்தார்.

என்னை மன்னிச்சிடு சவிதா. சட்டென்று என் மூளை பிசகிடுத்து. என் மனைவி செத்த பிறகு ஒரு பெண்ணை இத்தனை கிட்ட இப்பத்தான் பார்க்கிறேன். உன் அழகுல என் கண் மயங்கிடுத்து. என் மன்னிச்சிடு. நான் உன்னை ஒன்னும் பண்ணாம போயிடறேன். நீ யார்கிட்டேயும் சொல்லிடாதே என்று புலம்பினார்.

அவள் அதிர்ச்சியுடன் கதவை திறந்துவிட அவர் விரைந்து வெளி சென்றார்.

அதிர்ச்சி குறையாமல் அவள் படுக்கையில் வந்து அமர்ந்தாள்.

leomohan
13-11-2006, 02:12 PM
12

மறுநாள் காலை சிற்றுண்டியில் சந்தித்தனர் அனைவரும். கரிகாலனும் சவிதாவும் மௌனமாக இருக்க, அனைவரும் கதையளத்துக் கொண்டிருந்தனர்.

பழனியப்பன் சவிதாவைப் பார்த்து ஞானப்ரகாசம் சார் கொடுத்த பக்கங்களையெல்லாம் கம்ப்யூட்டரில் ஏத்திட்டியா என்றார்.

இல்லை சார். நேத்து உடம்பு சரியில்லை என்றாள்.

பரவாயில்லை இன்னிக்கு பண்ணு.

சார் மாத்திரை வாங்கனும். நானும் ரவியும் போயிட்டு வரட்டுமா.

அவருக்கு இவர்கள் நடுவில் நடக்கும் காதல் கதை தெரியும். எதுவும் தப்பதண்டா நடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.

சரி. ஆனால் 30 நிமிடத்துக்குள் திரும்பி வரனும். புரியுதா என்றார் ரவியைப் பார்த்து சற்று கண்டிப்புடன் அதே சமயத்தில் அவனைப் பார்த்து கண்ணடித்தப் படியே.

இல்லை சார். கட்டாயம் அரைமணியில் வந்திடறோம் என்றான் ரவி.

நான் வரட்டுமா என்றார் கரிகாலன்.

வேண்டாம் நாங்க ஆட்டோல போறோம் என்று காட்டமாக சொல்லிவிட்டு கிளம்பினாள் சவிதா.
ஆட்டோ தஞ்சை பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்த மருந்துக் கடைக்கு வந்து நின்றது.
ரவி, எனக்கு மருந்து வேண்டாம். உன்னோட பேசத்தான் வெளியே வரச் சொன்னேன் என்றாள் சவிதா அவசரமாக.
என்ன விஷயம் சொல்லு.
ரவி, நேத்து கரிகாலன் என்ன செஞ்சாறு தெரியுமா என்று தொடங்கி அனைத்தையும் கூறினாள்.
என்ன. கரிகாலன் சாரா. நம்பவே முடியலையே. இப்பவே பழனியப்பன் சார்கிட்டே சொல்ல்லாம் என்றான் கோபமாக.
இரு. இன்னொரு அதிர்ச்சியான விஷயம் சொல்றேன்.
என்ன என்றான் ரவி குழப்பத்துடன்.
நேத்து ஞானப்ரகாசம் சார் கொடுத்த கட்டுரை வார்த்தைக்கு வார்த்தை மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய களப்பிறர் ஆட்சியில் தமிழகம் அப்படிங்கற புத்தகம்.
என்ன.

ஆமாம். ஞானப்ரகாசத்தை பார்த்து மயிலை சீனி காப்பியடிச்சாரா இல்லை மயிலை சீனியை பார்த்து ஞானப்ரகாசம் காப்பியடிச்சாரா.
சே. சே. மயிலை சீனியை பத்தி எனக்கு தெரியும். அவருடைய பல கட்டுரைகளை நான் படிச்சிருக்கேன். இந்த குழப்பம் தீரனும்னா ஞானப்ராகசத்திற்கு போன் போடுவோம் என்ற அவளை இழுத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த தொலைபேசி கூடத்திற்கு சென்றான்.
இருவரும் ஒரு அறைக்குள் நுழைந்துக் கொண்டு இருவரும் கேட்பதுபோல தொலைபேசிக் கருவிகளை வைத்துக் கொண்டு அவருடைய எண்ணை சுழற்றி சவிதாவை பேசச் சொன்னான்.
சார் வணக்கம். நான் சவிதா பேசறேன்.
சொல்லும்மா உன்கிட்டேர்ந்து கால் வரும்னு நான் எதிர்பார்தேன்.
சார். தப்பா எடுத்துக் கூடாது. நீங்கள் கொடுத்த கட்டுரை வரிக்கு வரிக்கு மயிலை சீனி எழுதன புத்தகத்தில வந்திருக்கு.
என்ன சொல்றே. மயிலை சீனி வேங்கடசாமி எழுதின களப்பிறர் ஆட்சியில் தமிழகம் அப்படிங்கற புதத்த்தை பத்தியா சொல்றே.
ஆமாம் சார்.
இருக்காதே. நான் உன்கிட்டே கொடுத்து என்னுடை கம்பராமாயண்த்தோட உரைநடையாச்ச என்று சொல்லி பெரிதாக சிரித்தார்.
என்ன சார் சொல்றீங்க.
ஆமாம்மா. உங்க கூட்டத்தில ஒரு ஐந்தாம் படை இருக்கான். அவன்கிட்ட என் கட்டுரை மாட்டக்கூடாதுன்னு தான் நான் கம்பராமாயணத்தை எடுத்து கொடுத்தேன்.
ஆனா அவன் என்னடான்னு கம்பராமாயணத்தை எடுத்துட்டு மயிலை சீனியோட புத்தகத்தை வெச்சிட்டான். ஹா ஹா என்றார் களிப்புடன்.
சார் எனக்கு ஒன்றும் புரியலை.
பரவாயில்லைம்மா. நான் சொல்றத நல்லா கேட்டுக்க. யாருக்கும் தெரியாம இன்னும் 15 நிமிஷத்தில நீ பெரிய கோவிலுக்கு வந்து சேரு. வடக்கு மூலையில் நான் இருப்பேன். என்கிட்டேர்ந்து நீ ஒரிஜினல் காபி வாங்கிட்டுப் போ. ஆனால ஒன்னு இதுவும் தொலைஞ்சிட்டா என்னால ஒன்னும் பண்ணமுடியாது. என்கிட்ட நிறைய காப்பி இருக்கு. ஆனா என்னோட உயிருக்கும் உன்னோட உயிருக்கும் ஆபத்து.
சரி சார். நான் ஜாக்கிரதையா இருக்கேன்.
போனை வைத்துவிட்டு இருவரும் திறுதிறுவென்ற முழித்தார்கள். ஆராய்ச்சின்ற பேருல காதல் ஜோடியாக ஊரை சுற்ற நினைத்தவர்களுக்கு சங்கரின் மரணம், ஞானப்ராகசம் 30 வருடங்களுக்கு முன் வாங்கிய அடிகள், இப்போது கரிகாலனின் நடத்தை, காணால் போன கம்பராமாயணத்தின் உரைநடை என்று பீடிகை அதிகரித்துக் கொண்டே போனது.
சவி, நான் சொல்றேன் நேத்து நடந்த பிரச்சனைக்கு நடுவில கரிகாலன் தான் பேப்பர்ஸை மாத்தியிருக்கனும். ஞானப்ரகாசம் சொன்ன ஐந்தாம் படை இவருதான். இவரைப் பத்தி உடனே பழனியப்பன் சாருக்கும் சந்திரசேகர் சாருக்கும் சொல்லனும் என்றான் ரவி.

leomohan
13-11-2006, 02:13 PM

leomohan
15-11-2006, 01:22 PM

leomohan
15-11-2006, 01:22 PM
நான் வரலை இந்த ஆட்டத்துக்கு, ஏதாவது இங்கிலீஷ் மன்றமா பார்த்து என் கறுப்பு வரலாறை போடவேண்டியது தான்.

ஓவியா
15-11-2006, 06:22 PM
நான் வரலை இந்த ஆட்டத்துக்கு, ஏதாவது இங்கிலீஷ் மன்றமா பார்த்து என் கறுப்பு வரலாறை போடவேண்டியது தான்.

வானா சார், அம்புட்டு பேரும் அப்படியே காத்துகிட்டிருக்கோமில்லே.....
இப்படி பாதிலே வுட்டுட்டு போகாதீங்க சார்

ஓவியா
01-12-2006, 04:05 PM
13ம் பாகம் இங்கு தொடர்கின்றது
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7213

படித்து மகிழவும்

நன்றி