PDA

View Full Version : யாருக்கு இலவசம்



மயூ
06-11-2006, 04:34 AM
http://i76.photobucket.com/albums/j37/mayooresan/images.jpg
வானம் எங்கும் கரிய பெரிய மேகங்கள் உருண்டு திரண்டு நகர்ந்து கொண்டு இருந்தன. அப்பப்போ கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்துடன் மின்னலும் அதைத் தொடர்ந்து இடியும் கேட்டுக்கொண்டே இருந்தது. மழை சாதுவாகத் தூறத் தொடங்கிவிட்டது. அந்தப் பழைய சுண்ணாம்பு வீட்டிலிருந்து சலிப்புடன் ஒரு உருவம் எட்டிப்பார்த்தது. இன்றும் இப்படிப் சில பழைய சுண்ணாம்பு வீடுகளை யாழ்பாணத்தின் புறநகர்ப்பகுதிகளில் காணலாம்.

அந்தக் கலைந்த கேசமும் இளமையிலேயே முதுமை தோன்றிய அந்த முகமும் முதற் பார்வையிலேயே காட்டிக்கொடுத்துவிடும் இவள் ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தலைவியென்று. கண்களை சுருக்கி மழைத் தூறலூடு யாரையோ தேடினாள். அவளுக்குத் தெரியும் மழையென்றால் இவன் நனையவென்றே வெளியில் ஓடிவிடுவான்.

டேய்! சின்னத்தம்பி.....! எங்கையடா நிக்கிறாய்? தன் கடைக்குட்டியைச் சற்றே உரிமையோடு அதட்டிக் கூப்பிட்டாள்.

ஓம் அம்மா! வாறேன்!! பக்கத்துக் காணிக்குள் இருந்து சத்தம் வந்தது.

வரட்டும் இண்டைக்கு நல்ல முறி முறிச்சு விடுறன். எத்தின தரம் சொன்னாலும் இவன் தான் நினைச்சதத்தான் செய்யிறான் என மனதுக்குள் நெறுவிக்கொண்டாள் அன்புத்தாயார் கண்ணம்மா.

இஞ்சருங்கோ இண்டைக்கும் இவன் மழையில நனைஞ்சு போட்டு வாறான். நீங்கள் தேப்பன் எண்டு இருக்கிறியள் அவனக் கொஞ்சம் கண்டிக்க மாட்டியளே? விறாந்தையோரத்தில் கதிரையில் இருந்து வெத்திலை சப்பிக்கொண்டிருந்த தன் கணவனைக் கடிந்து கொண்டாள்.

நீங்கள் மட்டும் அவனுக்கு அடிக்கிறியளே? சும்மா வாய் கிழியக் கத்திறது அவன் வந்து முன்னால நிண்டதும் முறிச்சுப் போடுவன் என்டு வெருட்டுறது. இதவிட்டா வேற என்ன செய்யிறியள். சும்மா என்னையும் அவனையும் ஏத்திவிடப் பார்க்காதையுங்கோ தகப்பனார் தன் மகனுடன் கண்டிப்பாக இருக்க மாட்டேன் என்பதைத் தெளிவாகக் கூறினார்.

கண்ணம்மா சுந்தரேசன் தம்பதியர் யாழ்ப்பாண நகரத்தில் இருந்து 10 மைல் தூரத்தில் உள்ள அந்த சிறியக் கிராமத்தில் வசிக்கின்றனர். ஆசைக்கொன்று ஆஸ்திக்கொன்று என ஆணும் பெண்ணுமாக இரண்டு பிள்ளைகள். மூத்தவள் பிறந்து ஏழு வருடங்களின் பின்னர் சின்னத்தம்பி பிறந்தான். இயல்பாகவே வீட்டில் செல்லம். அவன் செய்யும் அடாவடியை யாரும் தட்டிக் கேட்பதில்லை. பாவம் பிஞ்சு மழலை என்று தாயும் தந்தையும் கண்டிக்காமல் விட அன்பு அக்காவோ அதைவிட ஒரு படி மேல் சென்று தன் தம்பிமேல் அளவு கடந்த அன்பு காட்டுவாள். மொத்தத்தில் இந்த ஐந்து வயதுப் பாலகனுக்குக் கட்டுப்பாடு எதுவும் இல்லை.

சின்னத்தம்பி இப்போ மழைச் சாரலில் நனைந்தபடி விட்டினுள் நுழைந்தான். வழமைபோல தாயார் தன் பாணியிலான வசைபாடிள் தகப்பனாரும் தன் பங்கிற்கு பொறுமையாக தன் பாணியில் சும்மா ஒப்புக்கு புத்திமதி கூறினார். சின்னத்தம்பிக்குத் தெரியும் அவ்வளவுதான் பின்னர் அனைத்தையும் இவர்கள் மறந்து விட்டு தன்னுடன் செல்லம் கொட்டுவார்கள் என்று.

சரி போய் தலையை துடைச்சுக் கொண்டு வா! குசினிக்குள்ள தேத்தண்ணி போட்டு வைச்சிருக்கிறன் எடுத்துக் குடி

ஏன் அம்மா இண்டைக்கு சீனி போட்ட தேத்தண்ணியோ இல்லாட்டி இண்டைக்கும் சீனி இல்லையோ? சீனி இல்லாட்டி எனக்கு தேத்தண்ணி வேண்டாம்.

என்னப்பு நீ! உனக்குத் தெரியும்தானே இப்ப யாழ்ப்பாணத்திற்கு சாப்பாடுச் சாமான் ஒன்டும் வாறதில்லை எண்டு பொறுமை இழக்காமல் கூறினார் சுந்தரேசன்.

அப்பா அப்ப நாங்கள் கொழும்புக்குப் போவமே! அங்கையெண்டால் சீனி இருக்கும் தானே

ஓமடா தம்பி கொழும்பில சீனி இருக்கும் ஆனால் நிம்மதி இருக்காதுடா. செத்தாலும் இங்க இருந்து செத்தால் தூக்கிப்போடவாவது யாராவது வருவாங்கள் மனவிரக்தி யாருடன் பேசுகின்றோம் என்பதைக் கூட யோசிக்காமல் அவரைப் பேச வைத்தது.

இதே வேளையில் பக்கத்தது வீட்டுக் கமலா வேலிக்குள்ளால் எட்டிப் பார்த்தாள்.

கண்ணம்மா அக்கா! நேற்று கொழும்பில இருந்து வந்த கப்பலில கொஞ்சம் சாமான் வந்திருக்காம். இண்டைக்கு சங்கக்கடையில சாமான் குடுக்கிறாங்களாம். இப்பத்தான் எங்கட இவர் போய் சீனி எடுத்துக் கொண்டு வந்தவர். 3 கிலோ சீனி குடுத்து இருக்கிறாங்கள் அக்கா. சனம் நிரம்ப முதல் போய் லைனில இடத்தப் பிடியுங்கோ சட சடவெனக் கூறிவிட்டு மழையில் தன் தலை நனையாதிருக்க கைகளை தலைக்கு மேலே பிடித்தவாறு வீட்டினுள் ஓடினாள் கமலா.

கணவனுக்கோ கடும் காய்ச்சல் இன்று வேலைக்கும் போகவில்லை. மழையில் எப்படி அவரை நனைந்து கொண்டு போகச் சொல்லுவது. அவளிற்கு இப்போ தெரிந்தது கண்முன்னே நின்ற சின்னத் தம்பிதான்.

டேய் சின்னத்தம்பி! ஓடிப்போய் சங்கக்கடைக்கு முன்னால நிக்கிற லைனில இடத்தைப் பிடி நான் வந்ததும் நீ வீட்ட திரும்பலாம். அம்மா சாறியக் கட்டிக் கொண்டு கெதியாவாறன்

சின்னத் தம்பிக்கு பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலானது. இப்போது ஆசைக்கு மழையில் நனையலாம்.

பீப் பீப் பீப்.... தான் ஏதோ கார் ஓடுவது போன்று பாவனை செய்து கொண்டே சாட்டுக்குக் குடையையும் பிடித்துக் கொண்டு சந்தியில் இருக்கும் சங்கக் கடையை நோக்கி ஓடத் தொடங்கினான் சின்னத்தம்பி.

ஐந்து நிமிடங்களில் அவன் கடைவாயிலில் நின்றிருந்தான். வரிசை அவ்வளவு நீளமாக இல்லை. உணவுப் பஞ்சம் மீண்டும் ஒரு தடவை யாழ்ப்பாணத்தில் தலைவிரித்து ஆடத் தொங்கிவிட்டதை நினைவு படுத்தும் முகமாக சங்கக் கடை வாசலில் மக்கள் மெல்ல மெல்ல வந்து நிறையத் தொடங்கினர். மூன்று கிலோ சீனிக்கு மூன்று மணிநேரம் காத்திருக்கவும் இவர்கள் இப்போது தயாராக இருந்தார்கள்.

அடுத்த சில நிமிடத் துளிகளில் சின்னத்தம்பியின் அன்புத்தாயார் கண்ணம்மாவும் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்து விட்டாள்.

சின்னத்தம்பி.. நல்ல காலம் நீ வந்து இடம் பிடிச்சாய்! இல்லாட்டி இப்ப நானும் லைனில பின்னாலதான் நிண்டிருக்கோணும் பரிவுடன் கூறினாள் தாயார். வாய் நிறையச் சிரிப்புடன் தாயாரின் பாராட்டை ஏற்றுக்கொண்டான் அந்தப் பாலகன்.

அடுத்து சில நிமிங்களில் இவர்களுக்கான மூன்று கிலோ சீனி இலவசமாகக் கிடைத்துவிட்டிருந்தது. கண்ணம்மா அதை கவனமாக இரு கைகளாலும் ஏந்தியபடி கடையை விட்டு இறங்கினாள்.

கடவுளே இத்தனை நாட்களிற்குப் பின்னர் இன்றுதான் மீண்டும் சீனித் தேத்தண்ணி குடிக்கப் போறம்... மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

அம்மா! பையை என்னட்ட தானே! நான் கொண்டு வாறன்

சும்மா இருடா உன்னோட பெரும் கரைச்சல் நோகாமல் கடிந்து கொண்டாள் கண்ணம்மா.

அம்மா! நான் கவனமாக் கொண்டருவன்... தாங்கோ!!!

இரட்டை மனத்துடன் கண்ணம்மா தன் மகனிடம் பையைக் கொடுத்தாள். பையை வேண்டியதுதான் தாமதம் மீண்டும் பீப் பீப் எனச் சத்தம் இட்டவாறு ஓடத்தொடங்கினான் சின்னத்தம்பி.

டேய்.. டேய்.. பார்த்துடா! பை கிழிஞ்சு போகப்போகுது.....

அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே பை கிழிந்து சீனி அவ்வளவும் காலை பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு அருகாமையில் விழுந்து விட்டது.

இரண்டடி முன்னே சென்ற கண்ணம்மா பளீர் எனச் சின்னத்தம்பியின் கன்னத்தில் ஒரு அறை விட்டாள். பாலகனோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தாங்காமல் ஒரு வினாடி சிலையாய் நின்றிருந்தான். மறு கணம் கண்ணீர் மல்க வீடு நோக்கிக் கட கடவென நடக்கத் தொடங்கினான்.

போ போ வீட்ட வைச்சு உனக்கு நல்ல முறி தாறன் சீனித் தேத்தண்ணி கனவு கலைந்த கோபத்துடன் கூறிய கண்ணம்மா சின்னத்தம்பியின் பின்னால் நடக்கத் தொடங்கினாள். சற்றே நடந்தவள் மனம் கேட்காமல் சீனி கொட்டுப்பட்ட இடத்தை திரும்பிப் பார்த்தாள்.

மழை வெள்ளத்திற்கு அப்பால் இருந்த குடிசை வீட்டில் இருந்த ஒரு சின்னப் பெண் எப்பிடியும் சின்னத் தம்பியிலும் இரண்டு வயசு அதிகமாக இருக்கலாம், மட மட என கொட்டுப் பட்ட சீனியை தன் கிழிந்த பாவாடைத் துணியில் போட்டுக் கொண்டு இருந்தாள். மழை வெள்ளம் நன்கு ஊற முதல் சீனியை அள்ளிவிட வேண்டும் என்பதில் அவள் குறியாக இருந்தாள். அவள் வாடிய முகம் சாப்பிட்டு சில நாட்களாவது இருக்கும் என்று சொல்லாமல் சொல்லியது.

இப்போது கண்ணம்மாவின் கண்களில் இருந்து சில சொட்டுக் கண்ணீர்த் துளிகள் வழிந்தோடி வந்து அந்த இரத்தம் தோய்ந்த வரலாறு கொண்ட மண்ணில் விழுந்தது. அவள் வலிமைக்கு முடிந்தது சில கண்ணீர் துளிகளை அந்த அபலைச் சிறுமிக்காகச் சிந்துவதுதான்.

பி.கு (தமிழக உறவுகளுக்காக) : சீனி எனப்படுவது தமிழகத்தில் சர்க்கரை என நீங்கள் அறிந்த பண்டத்தையே!

pradeepkt
06-11-2006, 05:48 AM
மயூரேசா,
அருமையான கதை. இலவசம் யாருக்கு என்பது இன்றும் நம் நாட்டில் வரையறுக்கப் படாத ஒன்று. எப்போதுமே நமக்கும் கீழே உள்ளவர் கோடி என்பதை நினைத்து வருத்தங்களை மறப்பதே நன்று. உன் படைப்புத் திறன் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே வருவதைக் காண்பதில் எனக்கு மெத்த மகிழ்ச்சி...

எங்க பக்கமும் வெள்ளைச் சர்க்கரையைச் சீனி என்றுதான் அழைப்போம். சர்க்கரை என்றால் வெல்லப் பொடிதான்.

leomohan
06-11-2006, 10:50 AM
நல்ல படைப்பு தொடருங்கள் மயூரேசன்.

ஓவியா
06-11-2006, 05:55 PM
மலேய்சியாவில் நாங்களும் சீனி என்றுதான் அழைப்போம்

அன்பு தம்பி மயூரா

முதல் சபாஷ் கதையின் கருவுக்கு
இரண்டவது சபாஷ் அழகான எளிய நடைமுறை தமிழ்,
மூன்றாவது சபாஷ் சிறுகதை இலக்கனம்....அருமை
நான்காவது சபாஷ் நீங்கதானே அந்த எழுத்தாளர்...அது உங்களுக்கு...:D

பாராட்டுக்கள் பல

தொடரவும்

மதி
07-11-2006, 02:59 AM
மயூரா...!
நல்லதொரு கதையை கொடுத்தமைக்கு நன்றி.
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..

மயூ
07-11-2006, 06:01 AM
மயூரேசா,
அருமையான கதை. இலவசம் யாருக்கு என்பது இன்றும் நம் நாட்டில் வரையறுக்கப் படாத ஒன்று. எப்போதுமே நமக்கும் கீழே உள்ளவர் கோடி என்பதை நினைத்து வருத்தங்களை மறப்பதே நன்று. உன் படைப்புத் திறன் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே வருவதைக் காண்பதில் எனக்கு மெத்த மகிழ்ச்சி...

எங்க பக்கமும் வெள்ளைச் சர்க்கரையைச் சீனி என்றுதான் அழைப்போம். சர்க்கரை என்றால் வெல்லப் பொடிதான்.
சில நேரங்களில் இலவசம் மானியம் என்பவை தவிர்க்கப்பட வேண்டும் என்பது சில பொருளாதார வல்லுனர்களின் ஆலோசனை ஆயினும் எம்மைப் போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இது சாத்தியம் இல்லை... எங்கயாவது ஒரு மூலையில் இலவசம் ஒட்டிக்கொண்டே இருக்கும்.:confused:
வழமை போல முந்திக் கொண்டு பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி!!!!:)
உங்கள் வாழ்த்துக்கு கோடி நன்றிகள்.:)

மயூ
07-11-2006, 06:07 AM
நல்ல படைப்பு தொடருங்கள் மயூரேசன்.
பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி லியோ மோகன் அவர்களே!

மயூ
07-11-2006, 06:12 AM
மலேய்சியாவில் நாங்களும் சீனி என்றுதான் அழைப்போம்

அன்பு தம்பி மயூரா

முதல் சபாஷ் கதையின் கருவுக்கு
இரண்டவது சபாஷ் அழகான எளிய நடைமுறை தமிழ்,
மூன்றாவது சபாஷ் சிறுகதை இலக்கனம்....அருமை
நான்காவது சபாஷ் நீங்கதானே அந்த எழுத்தாளர்...அது உங்களுக்கு...:D

பாராட்டுக்கள் பல

தொடரவும்
நான் நினைத்தேன் இலங்கையில் மட்டும் தான் சீனி என்று சொல்வார்கள் என்று!! பரவாயில்லை தென் தமிழகம் (பிரதீப் அண்ணா உட்பட) மலேசியா எல்லாம் சினீ தானா!:D
பாரட்டுக்கு நன்றி ஓவியா அக்கா!:)
அதென் கடைசியில் ஒரு சந்தேகம் நீங்கதானே எழுதியவர் என்று:confused: ... நான் தானுங்கோ!!!:D :eek:

மயூ
07-11-2006, 06:17 AM
மயூரா...!
நல்லதொரு கதையை கொடுத்தமைக்கு நன்றி.
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..
நன்றி மதி அண்ணா!
உங்கள் ஊக்கம் என்னை தொடர்ந்து எழுத வைக்கும் என்பதில் ஐயமில்லை!

ஓவியா
07-11-2006, 05:16 PM
வழமை போல முந்திக் கொண்டு பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி!!!!:)
உங்கள் வாழ்த்துக்கு கோடி நன்றிகள்.:)

பெரிய ஆள்தான் நீங்க
கோடிகனக்கில் நன்றியா...:D :D

ஓவியா
07-11-2006, 05:19 PM
நான் நினைத்தேன் இலங்கையில் மட்டும் தான் சீனி என்று சொல்வார்கள் என்று!! பரவாயில்லை தென் தமிழகம் (பிரதீப் அண்ணா உட்பட) மலேசியா எல்லாம் சினீ தானா!:D


பாரட்டுக்கு நன்றி ஓவியா அக்கா!:)
அதென் கடைசியில் ஒரு சந்தேகம் நீங்கதானே எழுதியவர் என்று:confused: ... நான் தானுங்கோ!!!:D :eek:


சந்தேகமா....:eek: :eek: ......இல்லடா தம்பி அது பாராட்டுக்கள்....:D :D

gragavan
08-11-2006, 10:31 AM
சில நேரங்களில் இலவசம் மானியம் என்பவை தவிர்க்கப்பட வேண்டும் என்பது சில பொருளாதார வல்லுனர்களின் ஆலோசனை ஆயினும் எம்மைப் போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இது சாத்தியம் இல்லை... எங்கயாவது ஒரு மூலையில் இலவசம் ஒட்டிக்கொண்டே இருக்கும்.:confused:
வழமை போல முந்திக் கொண்டு பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி!!!!:)
உங்கள் வாழ்த்துக்கு கோடி நன்றிகள்.:)அதென்ன முயூரேசா அப்படிச் சொல்லி விட்டாய். இந்தியாவில் மட்டும் என்னவாம்? இலவசம் கொடுத்தே ஆட்சியில் இருந்தவர்களும் இருந்தார்கள். இலவசம் கொடுத்து ஆட்சியைப் பிடித்தவர்களும் இருக்கிறார்கள்.

கதை மிக அருமை. மனதைத் தைக்கிறது.

மயூ
18-12-2006, 03:15 AM
அதென்ன முயூரேசா அப்படிச் சொல்லி விட்டாய். இந்தியாவில் மட்டும் என்னவாம்? இலவசம் கொடுத்தே ஆட்சியில் இருந்தவர்களும் இருந்தார்கள். இலவசம் கொடுத்து ஆட்சியைப் பிடித்தவர்களும் இருக்கிறார்கள்.

கதை மிக அருமை. மனதைத் தைக்கிறது.

நன்றி இராகவன் அண்ணா!
நிசங்கள் மனதைத் தைப்பது நிசம் தானே!!! :(

MURALINITHISH
18-08-2008, 09:40 AM
இலவசம் எப்படி எல்லாம் வேலை செய்கிறது பாருங்கள் அதிலும் காய்ந்து கிடக்கும் அவர்களுக்கு இப்படி எல்லாம் நடந்தால்