PDA

View Full Version : விடுதலை - சிறுகதை



gragavan
31-10-2006, 09:21 AM
நண்பர்களே இந்தச் சிறுகதை தேன்கூடு இணையதளமும் தமிழோவியமும் இணைந்து நடத்திய பரிசுப் போட்டிக்காக எழுதியது. ஆகையால் மன்றத்தில் முன்னால் இடவில்லை. இந்தக் கதை இரண்டாம் பரிசு பெற்றிருக்கிறது. அதை உங்கள் பார்வைக்காக இங்கே தருகிறேன்.

--------------------------------------------

உருளைக் கிழங்கு போண்டாவை சாஸில் தோய்த்து மகனுக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள் அந்த சேட்டுப் பெண்மணி. அவுக் அவுக்கென்று வாய் நிறைய அமுக்கிக் கொண்டிருந்தான் அந்த உருண்டைப் பையன். பகலில் ரயிலில் போகின்றவர்கள் பொழுது போக்குவது இப்படி வாங்கித் தின்றுதான். திறந்த கதவருகில் நின்று கொண்டிருந்த சசிக்கு இந்தக் காட்சி புன்னகையை வரவழைத்தது.

"ஹே! போண்டாவாலா! இதர் ஆவோ!" வாங்கிய போண்டா பத்தாமல் இன்னும் வாங்கக் கூப்பிட்டாள் அந்தப் பெண்மணி. "போண்டா தின்னும் போண்டா" கேணக் கவிதை படித்தது சசியின் மனம்.

இப்படித்தான் சசியின் அம்மாவும் ஊட்டி ஊட்டி வளர்த்தார். சசிக்கு உளுந்த வடை என்றால் ரொம்பப் பிடிக்கும். வீட்டில் செய்ததை விடக் கடையில் வாங்கினால் இன்னமும் பிடிக்கும். வாரத்துக்கு இரண்டு மூன்று முறை பள்ளிக்கூடத்திலிருந்து வருகையில் வாழையிலையில் கட்டித் தெருமுக்கு டீக்கடை வடை காத்திருக்கும். மிளகாயும் புளியும் உப்பும் மட்டும் போட்டரைத்த ரொம்பவும் உறைத்த சண்டாளச் சட்டியினோடு தொட்டுத் தருவாள் அம்மா.

அந்த அம்மா ஒரு நாள் சொன்னாள். "எனக்கு சசிகுமார்னு மகனே பொறக்கலைன்னு நெனச்சுக்கிறேன். எனக்குப் பொறந்தது ஒரு மகதான். ஒனக்கும் எனக்கும் தொடர்பே கெடையாது. நீ வெளியில போடா! நான் செத்தாக் கூட இந்தப் பக்கம் வரக்கூடாது!" நினைக்கையிலேயே சசியின் முகம் இறுகியது. அழுக விரும்பாமல் அந்த சேட்டம்மாவின் மீது பார்வை திரும்பியது.

"தேக்கோ தேக்கோ....பூரா டிரஸ் மே....." மகனின் டிரஸ்சில் விழுந்த சாஸைத் துடைத்து விட்டார் சேட்டப்பா. நீளமான வெள்ளைத் துண்டு சுருண்டு கிடந்தது. பெயரளவில்தான் அது வெள்ளைத் துண்டு. அழுக்கு அப்பட்டமாகத் தெரிந்தது. துவைக்கவோ மாட்டார்களோ! வடக்கில் ஒழுங்காகக் குளிக்க மாட்டார்களாமே! அந்த அழுக்குத் துண்டை வைத்து மகனின் சட்டையைத் துடைத்து விட்டார். "பானி தேதோ" மனைவியிடம் மகனுக்குத் தண்ணீர் குடுக்கச் சொன்னார்.

வெளியே போனால் சசிக்கு அப்பா கண்டிப்பாக பழரசம் வாங்கித் தருவார். திருநெல்வேலி ஜங்சனில் ஒரு பழரசக் கடை உண்டு. பழங்களையெல்லாம் ஒன்றாகக் கலக்கி அதோடு கலக்க வேண்டியதைக் கலந்து செக்கச் செவேலென்று பழரசம் கண்ணாடித் தம்ளர்களில் கிடைக்கும். வெயிலுக்குக் குடிக்கக் குளுகுளுவென்றும் இனிப்பாகவும் இருக்கும். குடித்த பிறகு வாயோரத்தில் பழரசம் ஒட்டியிருக்கும். அப்பாதான் பேண்ட்டின் பின் பாக்கெட்டில் வைத்திருக்கும் கர்ச்சீப்பை எடுத்து வாய் துடைத்து விடுவார். ஏனென்றால் வீட்டில் தெரிந்தால் பழரசம் வாங்கிக் கொடுத்ததற்குத் திட்டு விழுகுமே. பழரசம் வாங்கிக் கொடுத்தால் வீட்டில் சொல்லக் கூடாது என்று அப்பாவுக்கும் மகனுக்கும் எழுதாத ஒப்பந்தம். ஜங்சனில் குடித்த பழரசத்தின் இனிப்பு சமயநல்லூர் வரை இருக்குமாதலாம் சசியும் ஒப்பந்தத்தில் மானசீக கையெழுத்திட்டிருந்தான்.

அந்த அப்பா ஒரு நாள் சொன்னார். "சீச்சீ! மானத்த வாங்கீட்டியேல...ஊரு மூஞ்சீல முழிக்க முடியுமால.....கங்காணாமப் போயிரு.....இருந்து எங்க பேரையும் கெடுக்காத. ஊராரு மூஞ்சீல நாங்களாவது முழிக்கனும். சொத்துல சல்லிக்காசு கெடையாது ஒனக்கு. அப்படித்தாம்ல உயிலும் எழுதப் போறேன். பாசங் கீசம்னு இங்குட்டு வந்துறாத. அப்புறம் அந்தப் பாசத்தக் காட்ட நாங்க இருக்க மாட்டோம்."

லேசாகக் கண்ணீர்க் கோடு வழிந்து ரயில் காற்றில் உடனே காய்ந்து போனது. ஒரிசாக் காடுகள் மிக அடர்த்தியாக வெளியே தெரிந்தன. ஏதோ ஒரு பட்டிக்காடு அது. ஓலைக்குடிசை வேய்ந்த வீடுகள் நிறைய இருந்தன. வெளியே புழுதியில் பிள்ளைகள் கூடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். இப்படிக் கூடி விளையாடியவள்தாள் சசியின் தங்கை ராஜேஸ்வரி. அம்மாவும் அப்பாவும் திட்டிய அந்த நாளில் அழுது கொண்டே வீட்டிற்குள் ஓடியவள்தான். அதற்குப் பிறகு பார்க்கவேயில்லை. எப்படி இருக்கிறாளோ! கல்யாணம் ஆயிருக்குமோ! குழந்தைகளும் ஆகியிருக்குமோ! பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்தது!

பக்கத்தில் நின்றிருந்த ஏஞ்சல் இடித்தாள். "ஏடி! சசிகலா....அங்க பாருடி....ஹீரோ ஒருத்தன் வர்ரான். கும்முன்னு இருக்கான் பாரு. நார்த் இண்டியன் மாதிரி இருக்கு. நேரா இங்கதான் வர்ரான். அப்படியே தள்ளிக்கிட்டு போயிருவோமா!" கிக்கிக்கெனச் சிரித்தார்கள் ஏஞ்சலும் சசிகலாவும். காக்கைக் கூட்டிலிருந்து விடுதலை வாங்கிய குயில் குஞ்சுகளாய்.

அன்புடன்,
கோ.இராகவன்

meera
31-10-2006, 09:31 AM
ராகவன், கதை நல்லா இருக்கு.இன்று தான் இந்த கதையை தேன்கூடு இணையதளத்தில் படித்தேன்.முதலில் புரியவில்லை மீண்டும் வாசித்தபோது புரிந்தது.

தொடர்ந்து பரிசு பெற வாழ்த்துகள்.

மதி
31-10-2006, 12:38 PM
ராகவன்,
இதைப்பத்தி தான் நான் முன்னாடியே என் கருத்தை உங்களிடம் சொல்லிவிட்டேனே...!
பரிசினை தட்டிச் சென்றதற்கு வாழ்த்துக்கள்...!
யாரங்கே....சீக்கிரம் ஃபாரம் மாலில் ட்ரீட்டுக்கு ஏற்பாடு செய்யுங்கள்..!

gragavan
31-10-2006, 01:15 PM
ராகவன், கதை நல்லா இருக்கு.இன்று தான் இந்த கதையை தேன்கூடு இணையதளத்தில் படித்தேன்.முதலில் புரியவில்லை மீண்டும் வாசித்தபோது புரிந்தது.

தொடர்ந்து பரிசு பெற வாழ்த்துகள்.நன்றி மீரா. :) அடுத்த போட்டியில் கலந்து கொள்ள மாட்டேன். மற்ற நண்பர்கள் கலக்கட்டும். நான் பார்வையாளனாக மட்டும்.

gragavan
31-10-2006, 01:16 PM
ராகவன்,
இதைப்பத்தி தான் நான் முன்னாடியே என் கருத்தை உங்களிடம் சொல்லிவிட்டேனே...!
பரிசினை தட்டிச் சென்றதற்கு வாழ்த்துக்கள்...!
யாரங்கே....சீக்கிரம் ஃபாரம் மாலில் ட்ரீட்டுக்கு ஏற்பாடு செய்யுங்கள்..!மதி, உங்கள் கருத்து நல்லதொரு ஆய்வாகவே இருந்தது. எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.

நான் இன்று இரவு சென்னை செல்கிறேன். ஞாயிறு இரவுதான் திரும்ப வருவேன். :)

மதி
31-10-2006, 01:17 PM
அப்ப இந்த வாரம் ட்ரீட் கிடையாதா..அடுத்த வாரம் பாக்கலாம்..

meera
31-10-2006, 02:38 PM
மதி, உங்கள் கருத்து நல்லதொரு ஆய்வாகவே இருந்தது. எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.

நான் இன்று இரவு சென்னை செல்கிறேன். ஞாயிறு இரவுதான் திரும்ப வருவேன். :)

அட,சென்னைக்கு வாறீயலா??அப்போ சென்னைகாரவுகலுக்கு ட்ரீட் நிச்சயம்..:D :D :D :D

ஓவியா
31-10-2006, 06:07 PM
ராகவன்,

கதையின் கரு.......
இப்படி அலியாய் வாழ்ந்தவர்களின் உள்ளங்களில்
எங்கோ ஓர் இடத்தில் ஏக்கங்களும்.....அதன் தாக்கமும்

அருமையான நடை
(கண்கள்) ஒரு காட்சியை கானும் பொழுது
(மனதில்) அதன் பிம்பம் பிரதிபலிப்பில்

அருமையாய் எழுதியுலீர்....

பரிசுக்கு வாழ்த்துக்கள்...

gragavan
01-11-2006, 09:16 AM
அட,சென்னைக்கு வாறீயலா??அப்போ சென்னைகாரவுகலுக்கு ட்ரீட் நிச்சயம்..:D :D :D :Dநான் சென்னைல இல்ல...நான் சென்னைல இல்ல..........

meera
01-11-2006, 09:32 AM
நான் சென்னைல இல்ல...நான் சென்னைல இல்ல..........


ராகவன்,

நம்ம ஊரு பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்களே அது என்ன........

என் அப்பன்...........................

அது இது தானா???:eek: :eek: :eek:

pradeepkt
01-11-2006, 09:50 AM
நான் இல்லாமல் டிரீட்டுகளுக்குச் செல்வதைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். மறக்குறதுக்கு முன்னாடி ராகவனுக்கு வாழ்த்துகள்.

gragavan
01-11-2006, 03:37 PM
ராகவன்,

கதையின் கரு.......
இப்படி அலியாய் வாழ்ந்தவர்களின் உள்ளங்களில்
எங்கோ ஓர் இடத்தில் ஏக்கங்களும்.....அதன் தாக்கமும்

அருமையான நடை
(கண்கள்) ஒரு காட்சியை கானும் பொழுது
(மனதில்) அதன் பிம்பம் பிரதிபலிப்பில்

அருமையாய் எழுதியுலீர்....

பரிசுக்கு வாழ்த்துக்கள்...நன்றி ஓவியா. அந்த ஏக்கங்களை முழுதாய் அல்லது கொஞ்சமேனும் கொண்டு வந்திருக்கிறேன் என்றே நம்புகிறேன். அதற்கு அத்தகைய நண்பர் ஒருவர் கதையை அங்கீகரத்தில் இருந்து புரிந்து கொண்டேன்.

அமரன்
27-05-2007, 08:39 PM
ராகவன் அண்ணா இப்போதுதான் இந்தக்கதையைப் படித்தேன். எளிமையான நடையில் எழுதியுள்ளீர்கள். ஓவியா சொன்னதைப்போல விழித்திரையில் ஒருகாட்சி மனத்திரையில் ஒரு காட்சி என இரட்டைக் குதிரையில் சவாரி செய்து வெற்றி அடைந்துவிட்டீர்கள். நல்ல ஒரு சிறுகதையைப் படிக்கத் தந்தற்காக எனது நன்றிகள்.

gragavan
27-05-2007, 08:57 PM
நன்றி அமரன். பல நாட்களுக்கு முன்னால் எழுதிய கதை. தேன்கூடு போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை. உங்களுக்குப் பிடித்திருந்ததில் மெத்த மகிழ்ச்சி.

சிவா.ஜி
28-05-2007, 04:38 AM
பரிசுக்கு பாரட்டுக்கள் ராகவன். விதியாசமான கரு. கடைசிவரை சசியை அரவானியாக தோன்ற வைக்காத உங்கள் எழுத்து நடை மிக அருமை. பரிசு பெற்றதில் வியப்பேதுமில்லை.

மனோஜ்
28-05-2007, 04:51 PM
குறுங்கவிதை மாதிரி இல்லை
தொடர்ந்து இதன் மீதி பகுதியை வாசிக்க ஆசை தொடருவீர்களா...

விகடன்
28-05-2007, 06:05 PM
மனதை சற்றே இறுக்கிச்சென்றது தங்களின் கதை ராகவன். சிறு கதையென்றாலும் அயலவரிற்காக வாழும்பொருட்டு பல மனங்களை பிணங்களாக்கும் கருத்தாழமிகுந்த கதை.

வாழ்த்துக்கள்.

அக்னி
13-06-2007, 07:36 PM
கதாபாத்திரத்தை விளக்காமல், கதாபாத்திரத்தை விளக்கும் கதை...
வாசிக்கத் தொடங்கும் போது ஒரு காட்சி...
நடுப்பகுதியில் இன்னொரு காட்சி...
முடிவில் எதிர்பாராமல் ஒரு திருப்பக் காட்சி...
அதிலும்,

காக்கைக் கூட்டிலிருந்து விடுதலை வாங்கிய குயில் குஞ்சுகளாய்.

இந்த ஒரு வரியிலேயே கதையின் விளக்கம்... அருமை...
குயிற்குஞ்சை வளர்த்தபின் கொத்தித் துரத்தும் காக்கைகளின் செயல் குயிற்குஞ்சை பாதிக்காதிருக்கலாம்.
ஆனால்,
மனிதப்பிறப்பில் தவறு செய்யாமல் தவறிப்போன பிறவிகளின் வாழ்க்கை பாதிக்காமல் என்றும் இல்லை. மனதாலும் உடலாலும்...

விரிவாக எழுத வேண்டிய ஒரு ஆய்வுக்கட்டுரை, எளிமையான ஒரு சிறு கதையாக, சகல பிரச்சினைகளையும் கோடிட்டுத் தன்னுள்ளே அடக்கி கொண்டது கதாசிரியரின் திறனுக்குச் சான்று...

மிக நன்றாக இருந்தது. அனுபவித்தேன்...
பாராட்டுக்கள்...