PDA

View Full Version : சிறிய விஷயங்கள் தந்த பெரிய இன்பங்கள்



leomohan
09-10-2006, 04:24 PM
பெரிய குடும்பத்தில் பிறப்பது பெரு மகிழ்ச்சி
அதிலும் என் தாயோ பண்ணிருவரில் மூத்தவள்
பல சித்திகள் மாமாக்கள் அண்ணன் தம்பியர் அக்கா தங்கயைர்
சாதாரணமாகவே நடந்த சென்றாலே ஊர்வலம் என்று ஊர் நினைக்கும்

தந்தை பெரும் குடும்பத்தில் முதல் மாப்பிள்ளை
அம்மா செய்யும் பருப்பு சாதம் தரும் பெரு மகிழ்ச்சி
அம்மா ஊரில் இல்லாத போது அப்பா செய்யும் சமையல்
உருண்டையாய் சாதத்தை பிசைந்து எங்கள் மூவரின் கையில் இட
ஒவ்வொரு உருண்டைக்கும் ஒரு இனிப்பின் பெயர் சொல்ல
எனக்கு 5 ஸ்டார் உனக்கு மில்க் சாக்லேட் என்று உண்ணுவதில் மகிழ்ச்சி

அம்மா அப்பா நான் தம்பி அக்கா என்று அனைவருடன் காரம் விளையாடி
கிரிகெட் விளையாட மட்டையை கேட்டால் அப்பாவே அதை வீட்டில் செய்ய
ஸ்டெம்பு வேண்டும் என்றால் அறமெடுத்து அவரே உருவாக்க
கூட்டாளிகளிடம் சென்று பார்த்தாயா என் அப்பா வீட்டிலே செய்த செட்டை
இந்த கிரிகெட் மட்டை என்று பெருமிதம் பேசியதில் ஒரு மகிழ்ச்சி

அப்பாவிடம் அதிகம் அடிவாங்குவத நான் தான்
அடிக்கும் போதெல்லாம் என் உதவிக்கு வரும் பாட்டி
மெலிந்த கைகளால் என் தலையை கோதி விடுவது
நான் எங்கு சென்றுவிட்டாலும் மோகன் எங்கே என்று கேட்டு துளைத்து
நான் வந்ததும் உச்சி மோர்ந்து முத்தம் வாங்கியதில் ஒரு மகிழ்ச்சி

பாட்டிக்கு முன் பாட்டு பாடி நடிப்பு காட்டி அவளை தொந்தரவு செய்து
இதையெல்லாம் உன் அப்பா செய்யும் போதெ நான் பார்த்துவிட்டேன் என்று சொல்ல
அந்த குடும்பத்தின் ஒரு இணைப்பு ஒரு நாள் துண்டித்து போக
வந்தவர் போகவேண்டும் என்ற விதிமுறை அறிந்து நின்ற அறிவாளி
இறுதி ஊர்வலத்தில் என் நெற் பந்தம் நீண்ட நேரம் எரிந்ததில் ஒரு மகிழ்ச்சி

இனி உதைக்கும் போது யாரும் இல்லை ஆனால் அப்பா உதைப்பதும் இல்லை
முன்பு நன்றாக அடித்து விட்டு உன் அக்காவைப்பார் உன் தம்பியைப்பார் என்று
பல முறை அறிவுரை அளித்து ஓய்ந்து போன அப்பா ஓயாத நான்
என் கால்களில் சங்கலியிட்டு என் தந்தை அலுவலகம் செல்ல
தடைகளை உடைத்து என் சுட்டித்தனத்தை மீண்டும் துவக்கியதில் மகிழ்ச்சி


பள்ளியில் பேச்சுப் போட்டி என்றால் மோகன் மேடைக்கு செல்வதில் ஒரு போதை
துவக்க உறையில் ஒரு முத்திரை பாரதி பாரதிதாசனை கரைத்து குடித்தாக ஒரு நினைப்பு
திருவள்ளுவரிடம் தமிழ் பயின்றது போல ஒரு நம்பிக்கை ஆரவாரம்
என் வயதுப் பெண்கள் என்னை ஆவலாக பார்க்க
மேடைக்கு சென்று பரிசை வாங்கி அனைவருக்கும் காண்பித்தில் ஒரு மகிழ்ச்சி

என் தமிழ் புலவர் சித்தியிடம் தமிழ் கவிதைகளின் பரிமாற்றம்
பின்பு தேனீ என்று கைப்பிரதி துவக்கிய முயற்சி
பாரதியார் சிறுவர் சங்கம் தலைவர் பதவி
கலைக்கழக போட்டியின் தொகுப்பாளர் பள்ளி
கலை சங்கத்தின் செயலாளர் என்று கலையில் ஆர்வம் காட்டியது ஒரு மகிழ்ச்சி

பொங்கலுக்கு புது ஆடை உடுத்தி கரும்பு வாங்கி பூஜை செய்து
பிள்ளையார் பூஜைக்காக பிள்ளையாரை தேர்வு செய்து வீடு கொண்டுவந்து
தலையில் குட்டு போட்டு தோப்புக்கரணம் இட்டு கணபதியை குளத்தில் கரைத்து
இனிப்பு காரம் என்று பல வகை கொழுக்கட்டைகளை புசித்து
கிருஷ்ண ஜெயந்திக்கு அம்மா செய்யும் பலகாரங்களை ஆவலாக பார்த்து

அதில் வரும் வாசத்தை ருசித்து இன்னும் கொஞ்ச நேரம் கண்ணா என்று எங்களை காக்கவைத்து
கண்ணன் வருகிறான் என்று சிறிய பாதங்களை தெருவிலிருந்த வீடு வரை வரைந்து
அம்மா ஆண்டவனுக்கு படைத்து பிறகு எங்களுக்கும் முறுக்கு சீடை கொடுத்து
பிறகு பல நாள் வரை பள்ளியிலிருந்து வந்த பிறகு அலமினிய தூக்கை ஆவலாக நோக்கி
பல நாள் சுவைத்த பிறகு கடைசி நாள் அந்த தூக்கிலிருந்து துகளை தின்று

மீண்டும் எப்போது கிருஷ்ண ஜெயந்தி வரும் என்று அம்மாவைக் கேட்டு
முறுக்கு சீடையில் வெண்னெய் திரட்டில் கனவு கண்டு கழித்து
அது போல வேறென்ன விசேஷங்கள் வரும் என்று பட்டியலிட்டு
பிறகு திருவிழாவுடன் வரும் விடுமுறையையும் நினைத்து
அது செய்யலாம் இது செய்யலாம் என்று ஆசை கோட்டை கட்டியது ஒரு மகிழ்ச்சி

நடுவில் வரும் பல திருநாட்கள் அதில் எல்லாம் பல கேளிக்கைகள்
அப்பாவுடன் சேர்ந்து பொம்மைகள் செய்து வாங்கி கொலு வைத்து
நவராத்திரியின் ஒன்பது நாட்களில் ஊரில் அனைவரையும் அழைத்து
சுண்டல் பரிமாறி மண்ணால் பூங்கா செய்து விளையாட்டு மைதானம் அமைத்து
பல வண்ணங்களில் அலங்காரம் செய்து அதை புகைப்படம் எடுத்து
எல்லோர் வீட்டிற்கு சென்று அவர் செய்த அலங்காரங்களை ரசித்தில் மகிழ்ச்சி

தீபாவளி வந்தால் அதிகாலையில் எழுந்து அம்மா ஆரத்தி செய்ய
அப்பா எங்கள் உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து
சீயக்காய் இட்டு சுடு தண்ணீர் ஊற்றி குளிக்க வைத்து
பிறகு அவர்கள் கால்களில் நமஸ்கரித்து புது உடை அணிந்து
அனைவரும் வெடித்து தீர்த்த பிறகு மெதுவாக என் பங்கை எடுத்து

தரை சக்கரம் கம்பி மத்தாப்பு பாம்பு மாத்திரை என்று துவங்கி
லட்சுமி வெடி எங்கள் ஊரில் மட்டும் கிடைக்கும் முத்தோப்பு வெடி
சரவெடி அணுகுண்டு என்று வெடிகளை வெடித்து தீர்க்க
அமுதசுரபி போல இருக்கும் வெடிகளை கார்த்திகைக்கு மிச்சப்படுத்தி
அப்போது அனைவரும் வெடிக்காமல் நான் மட்டும் வெடித்ததில் மகிழ்ச்சி

கால் ஆண்டு தேர்வுகளை அலட்ச்சியம் செய்து அரையாண்டில் தவிக்க
அதிகாலை எழுந்து அப்பா காப்பி போட்டுத்தர
கண்கள் சொருக புத்தகம் எடுத்து வைத்து படிக்க துவங்கும்போது
செல்லியம்மன் கோவிலில் எல் ஆர் ஈஸ்வரியின் தாயே கருமாரி
பாடல்கள் முடிந்து திருவிளையாடல் முடிந்து பிறகு சரஸ்வதி சபதம்

அரக்கபரக்க குளித்து முடித்து பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி
ராகுகாலம் கழிந்த பிறகு பள்ளிக்கு சென்று வரும் வழி கோவில்களில் வேண்டி
நண்பர்களிடம் நன்று படித்ததாக கூறி அவர்களை பயமுறுத்தி
பிள்iயார் சுழி போட்டு பரீட்சை எழுதி அனைவருக்கு முன்னமே முடித்து
ஆசியரின் அன்புத் தட்டை பெற்று அவசரமாக வெளியே வந்து

வீட்டுக்கு போகாமல் நண்பர்களுக்காக காத்திருந்து
அவர்கள் வந்ததும் நீ இந்த கேள்விக்கு பதில் எழுதினாயா
நான் அந்த கேள்விக்கு பதில் எழுதினேன் என்று அரட்டை அடித்துவிட்டு
வீட்டிற்கு வந்ததும் பரீட்சை எழுதிவிட்டு வந்த பையன் என்று விசேஷ வரவேற்பை பெற்று
சூடாக காபி குடித்து முடித்து விட்டு பரீட்சையின் புத்தகங்களை ஓரமாக வைத்ததில் ஒரு மகிழ்ச்சி


ஆண்டுத் தேர்வு எப்போது முடியுமோ என்று காத்திருந்து
தேர்வின் இறுதியில் வரும் கோடை விடுமுறையில் கதை எழுதுவேன்
காவியம் படைப்பேன் கிரிகெட் விளையாடுவேன் என்று மனபட்டியலிட்டு
பிறகு முடிந்த வரை தூங்கி கழித்து விளையாடி ஓய்ந்து
கோடையில் வரும் நுங்கு இளநீர் நீர் மோர் குடித்ததில் ஒரு மகிழ்ச்சி

விளையாட்டை விட வேறென்ன முக்கியம் அந்த வயதில்
வீட்டினின் உள்ளே விளையாடி வீட்டு விளக்கை உடைத்து
அதை அப்பா கண்டுவிட்டு உதைப்பாரோ என்று பயந்து
பிறகு ஒன்றுமே நடக்காதது போல் அப்பா அந்த விளக்கை மாற்றி
எங்களை பார்த்து சிரித்தபோது ஒரு மகிழ்ச்சி

வடக்கே சென்று வேலை செய்து 1000 ரூபாய் முதல் சம்பளம் பெற்றது
சொந்த மாக ஒரு இரண்டு சக்கரம் வாங்கியது
முதல் பெரிய சம்பளத்தில் அம்மாவுக்கு மிக்ஸி வாங்கி
அவள் கண்ணில் என் பையன் சம்பாத்தியத்தில் வாங்கியது
என்ற பூரிப்பை காணும் போது வந்து மகிழ்ச்சி

கப்பா கப்பா என்று மழலை பேசிய என் அக்கா பையன்
அவன் சிறிய தலையை என் புஜத்தில் வைத்து உறங்க செய்து
அவனை தூங்க வைக்க பாட்டு பாடி நடை பழக அழைத்துச் சென்று
அவனை ஸ்கூட்டரில் முன்னே நிக்கவைத்து ஊர் சுற்றியதும்
அவனுக்கு பேச வந்த பிறகு பெரிய மாமா என்று அழைத்ததில் ஒரு மகிழ்ச்சி

சனியானால் அரை நாள் அக்கா மாமா வீட்டில்
பீர் வாங்கிக் கொண்டு நண்பர்போல மாமா வீட்டில் அரட்டை அரங்கம்
அந்த சித்திப்போல் நையாண்டி இந்த சித்தப்பாபோல் குரல் மாற்றி
அந்த மாமாவைப்போல் நடிப்பு இந்த மாமியைப் போல் சிரிப்பு
கதை கவிதை பாட்டு நாடகம் என்று கூத்தடித்ததில் ஒரு மகிழ்ச்சி

அக்காவின் வகை வகையான சமையல் வடநாடு தென்னாடு என்று
எனக்கென்று சப்பாதி வடநாட்டு வகை கறி குறைந்தது இரண்டு வகை
அரை மணிக்கொரு காப்பி பீர் சாப்பிட வகையாக பஜ்ஜி
வீடியோ படம் தமிழ் சினிமா நையாண்டி தர்பார் பட்டிமன்றம்
எப்போது அடுத்த சனி-ஞாயிறு என்று ஏங்கியதில் ஒரு மகிழ்ச்சி

முதல் முறையாக வெளிநாட்டில் கணினி ஆசிரியர் வேலை
முதல் முறையாக வெளிநாட்டு பயணம்
பஹ்ரைன் வந்து இறங்கியவுடன் விமானதள மண்ணை கையால் தொட்டது
பதினெட்டு மாதம் ஊரைவிட்டு குடும்பத்தை விட்டு இருந்து அனுபவம்
வெளிநாட்டில் வேலை செய்கிறேன் என்று உணர்ந்ததில் ஒரு மகிழ்ச்சி

தொலைபேசியில் பேசி எதிர் வீட்டு பெண் ஓடிவிட்டாளா
பக்கத்து வீட்டு பையன் வேறுமத பெண்ணை மணம்முடித்தானா
சித்தப்பா பையனுக்கு வேலை கிடைத்ததா மாமா பெண் கோட்டு அடித்தாளா
என்று தினாரில் பில் ஏறுவதை அலட்ச்சியம் செய்துவிட்டு ஊர்வம்பு
இன்னும் அவல் வேண்டும் அம்மா என்று கேட்டதில் ஒரு மகிழ்ச்சி

முதல் முறையாக நாடு திரும்பியபோது அப்பாவுக்கு ஒரு கடிகாரம்
தம்பிக்கு ஒரு கடிகாரம் அம்மாவிற்கு வீட்டுப்பொருட்கள்
அக்காவிற்கு அலங்கார சாமான் மாமாவுக்கு ஒரு பணப்பை
அக்கா பையனுக்கு பள்ளிக்கு புத்தகங்கள் எடுத்து செல்ல ஒரு பை
எது வாங்கி வந்தாய் என்பதை விட எனக்காக வாங்கினாயே என்று கண்டதில் ஒரு மகிழ்ச்சி

மீண்டும் பஹ்ரைன் திரும்பி எனக்கு ஏற்ற ஒரு வேலை மாற்றம்
நான்கைந்து நாடுகள் பார்த்த ஒரு அனுபவம்
புது விஷயங்களை கற்றுக் கொண்ட இன்பம்
அமெரிக்காவில் வேலை கிடைத்து அதை மறுத்து
என் பாதை சரியென்று ஆசுவாசப்பட்டதில் ஒரு மகிழ்ச்சி

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்
கொலையும் செய்வாள் பத்தினி
சேரிடம் அறிந்து சேர் என்று
நான் படித்த பல பழமொழிகள் உண்மையானதில் ஒரு மகிழ்ச்சி

தம்பியுடன் மீண்டும் இருக்க கிடைத்த வாய்ப்பு
பலர் போற்றும் பெரிய பதவி கீழ் பணிபுரியும் பல பேர்
சிக்கலை சீர் படுத்தி நேராக செல்ல வைக்கும் மாலுமி வேலை
பணம் பொருள் புகழ் என்று பல முன்னேற்றங்கள்
பிரச்சனைகள் மறக்கடிக்க வாய்ப்பு கிடைத்ததில் ஒரு மகிழ்ச்சி

தினம் ஒரு கவிதை ஆங்கில கவிதைகளின் மொழியாக்கம்
இருபத்திநாலு மணிநேரம் வீட்டில் இன்டெர்நெட்
சகோதரன் வீட்டில் புது வரவு என்ற செய்தி
அதை கேட்டு தந்தை தாய் மாமா அக்காவின் குதூகலம்
என்று மகிழ்ச்சியான செய்திகள் கேட்பதில் ஒரு மகிழ்ச்சி

பல கவிதைகள் கட்டுரைகள் எழுதி நாடங்கள் நையாண்டி
கட்டுரைகள் படைத்து இசை கற்று ஓவியம் கற்று பல கலைகள்
ஆனாலும் எண்ணத்தில் ஏற்ற நண்பர்கள் இல்லை விவாதித்து விடைகேட்க
என்றதையும் ஈடுகட்டும் வகையில வலைதள நண்பர்கள் கிட்டியதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி

meera
10-10-2006, 05:20 AM
மோகன் ஒரு பெரிய காவியம் படிச்சமாதிரி இருக்கு.ரொம்ப தெளிவா, அழகா எழுதுறீங்க.

leomohan
10-10-2006, 05:38 AM
நன்றி மீரா.

pradeepkt
10-10-2006, 08:09 AM
இதை இம்மாதிரி எழுதுவத விடவும் உங்கள் உரைநடை பாணியில் எழுதி இருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்குமோ???
ஏனெனில் செய்திகளின் விஸ்தாரமும் தாக்கமும் அப்படி!

பென்ஸ்
10-10-2006, 08:46 AM
அன்பின் மோகன்....
நினைவுகளை வருசை படுத்தி இருக்கும் விதம் அருமையோ அருமை...
அப்படியே எல்லாருக்கும் பொருந்து சம்பவங்கள் மட்டும் இருப்பது போல் உணர்வு...

ஒவ்வொரு வரியையும் வாசிக்கும் போது உதட்டின் ஓரத்தில் என்னையும் அறியாமல் ஒரு புன்னகை....

இந்த முறை வீட்டிற்க்கும் சென்றிருந்த போது, அண்ணாவும், அக்காவும் கூட வந்திருந்தார்கள், அவர்களிடம் இதே போல நினைவுகளை நினைவு படுத்து பிகிர்ந்தபோது கிடைத்த அதே சுவை....
அட நாங்களும் தாங்க படிக்கிறோம் என்று தீபாவளிக்க்ற் கிறிஸ்துமஸ் பற்றி திட்டமிடுவோம், அடு முடிந்தவுடம் கோவில் திருவிழ திட்டம் ஆரம்பிக்கும், அதுக்கு அப்புறம் விடுமுரை திட்டங்கள், அது முடிந்ததும் திரும்பவும் தீபாவளி என்று தொடரும்...

பள்ளியிலிருந்து திரும்பும் அண்ணன் டிபன் பாக்ஸில் குச்சி ஐஸ் வாங்கி வந்து ஒருவனாய் குடித்து அழவைத்து குடிப்பது முதல்... எது செய்தாலும் தம்பியும் தங்கையும் முதலில் சாப்பிடட்டும் என்று விட்டு கொடுப்பது வரை...

ஒரே மேசையை பங்கிடும் அக்காவிடம் சரியாய் கோடு போட்டு இது கடக்க கூடாது என்றும், கடந்தால் குட்டுவதும்... அவள் செய்யும் தவறுக்காக , அவளுக்காக நானே குற்றத்தை ஏற்று அடி வாங்கியதும்... அட இது எல்லாம் கூட நினைக்க வைத்துவிட்டீர்களே....

leomohan
10-10-2006, 10:59 AM
நன்றி பென்சமீன்.

முயற்சி செய்கிறேன் ப்ரதீப்.

ஓவியா
18-11-2006, 01:37 PM
ம்ம்ம்
பிறக்கும் பொழுதே கடவுளிடம் தனிமடல் போட்டு எல்லா வரமும் வாங்கியச்சுபோலே...

படிக்க படிக்க ஒரே சுவாரஷ்யமாதான் இருக்கு

கொடுத்துவைத்த உங்களுக்கு மேன்மேலும் மகிழ்ச்சியுற ஒரு வாழ்த்துக்கள்

leomohan
18-11-2006, 02:34 PM
அப்படியில்லை ஓவியா. இதன் இரண்டாம் பாகம் நான் வாழ்வில் சந்தித்த துன்பங்களை பற்றியும் உள்ளது.

ஓவியா
18-11-2006, 02:53 PM
அப்படியில்லை ஓவியா. இதன் இரண்டாம் பாகம் நான் வாழ்வில் சந்தித்த துன்பங்களை பற்றியும் உள்ளது.



ஓ அப்படியா.......:eek: :eek: :eek: :eek:

அதிர்ச்சியாய்
ஓவியா



அந்த நொந்த கவிதையையும் போடுங்களேன் சார்

சோகமாய்
ஓவியா

இளசு
20-11-2006, 07:33 PM
மோகன்

பல முறை படித்தேன். ஆழ்ந்து திளைத்தேன்.

அப்பா செய்த கிரிக்கெட் மட்டை
அடிப்பார் என பயப்படும்போது அடிக்காத அப்பா
முறுக்குத்தூள் டப்பா
நீடித்த நெய்ப்பந்தம்..

என பல மின்னல்கள் படிக்கும்போது...

கொலையும் செய்வாள் பத்தினி
என ஒரு கத்தியைச் சொருகிய வரி..
பகீர் என்றது.


உங்கள் படைப்புத்திறனும்.. பகிரும் மனசும்
நெகிழ வைக்கின்றன.. என் பாராட்டுகள்.. புரிதல்கள்..

தோழமை வளர்க்கும் நெருக்கப்பதிவு...தொடருங்கள்..

ஓவியா
20-11-2006, 07:40 PM
அஹா மோகன்

இளசு பாராட்டியாச்சு...இளசு பாராட்டியாச்சு....இளசு பாராட்டியாச்சு....

இனி வெறென்னா வேனும்.....:D :D

leomohan
21-11-2006, 02:57 AM
நன்றி இளசு.

நன்றி ஓவியா.

pradeepkt
21-11-2006, 06:26 AM
சிறிய விஷயம் என்று இன்று தோன்றுவது அன்று தந்த இன்பங்கள் பெரிது ஐயா....
பழைய நினைவுகள் அசைபோட ஒரு வாய்ப்புத் தந்தமைக்கு நன்றி.