PDA

View Full Version : வலி



பாரதி
05-10-2006, 11:39 PM
வலி

நேற்று அப்படித்தான்....

காலை எட்டேகால் மணி இருக்கும்.

வேகமாக ஓடி வந்த சத்யா "அப்பா... பஸ்ஸு போயிருச்சுப்பா... ஸ்கூல்ல கொண்டு போயி விடுப்பா..." என்றான்.

"நேரத்துக்கு போகாம என்னடா பண்ணிகிட்டு இருந்த...? ஒரு பத்து நிமிசம் முன்னாடி போனாத்தான் என்ன..?"

"எப்பயும் போற நேரந்தாப்பா... பஸ்ஸு இன்னைக்கு சீக்கிரம் போயிருச்சு.... ப்ளீஸ்ப்பா..."

"பெட்ரோல் விக்கிற வெலைல... நானே பஸ்ஸுலதான் போறேன். உன்ன ஸ்கூல்ல விடணும்னா தண்டத்துக்கு பெட்ரோலுக்கு அழணும்" சலிப்பில் அவனிடம் கத்தினேன்.

கண்களில் நீர் திரண்டு அழப்போகும் நிலையிலிருந்த அவனைக் கண்டதும் "சரி சரி - அழுது தொலக்காத. கொண்டு போயி விடுறேன்" என்றேன்.

--------------------------------------------------------------

இன்றைக்கு என்னடா வென்றால் ... பேருந்து நிறுத்தத்தில் எவ்வளவு நேரம்தான் காத்திருப்பது...?

"சை" என்றிருந்தது. சீக்கிரமாக பேருந்து வந்தால் தேவலாம் போலிருந்தது. இன்றைக்கு அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியாதுதான் போலும்.

எத்தனை பேருந்துகள் போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருக்கின்றன..? நாம் போக வேண்டிய பேருந்து மட்டும் எப்போதும் ஏன் தாமதமாக வருகிறது என்பது மட்டும் புரியாத புதிர்தான்.

ஒரு வழியாக பேருந்தை கண்டதும் வந்த மகிழ்ச்சி, கூட்டத்தை பார்த்ததும் காணாமல் போனது. அடித்துப் பிடித்து, பேருந்தில் ஏறி பயணச்சீட்டை வாங்குவதற்குள் 'போதும் போதும்' என்றாகிவிட்டது.

இன்றைக்கு எத்தனை வேலைகள் இருக்கிறதோ என்று மனம் அலுத்துக்கொள்ளும் நேரத்தில் ' சுரீர்' என்ற வலி.. வலது கால் சுண்டுவிரலை ஒரு செருப்புக் கால் நசுக்கிக்கொண்டிருந்தது.

வலியும் கோபமும் தாங்க முடியாமல் " கொஞ்சமாச்சும் அறிவிருக்கா....? இப்படி மாடு மாதிரி மிதிச்சுகிட்டிருக்கியே.. கால எடுய்யா.." என்று கத்தினேன்.

காலை மிதித்தவர் "அடடா... சாரிங்க... தெரியாம மிதிச்சுட்டேன்" என்றார்.

"ஆமாய்யா... சாரி... சொன்னா போதுமா...? விரல்ல வலி உயிர் போற மாதிரி இருக்கு... ஒனக்கென்ன தெரியப்போகுது...?"

"கூட்ட நெரிசல்ல தெரியாம செஞ்சுட்டேங்க... மன்னிச்சுக்கோங்க..."

"ஆமா.... படிச்சவர் மாதிரி இருங்க... ஆனா கூட்டத்துல எப்படி நடந்துக்கணும்னு மாத்திரம் தெரியாது....ஹும்... என்ன ஆளுங்களோ" முனகிய படியே விரலைப் பார்த்தேன். நல்ல வேளை ஒன்றும் ஆகவில்லை என்று மனதிற்குள் சற்றே மகிழ்ச்சி.

ஆனால் என் முணுமுணுப்பை கேட்ட அந்த நபரின் முகம் மட்டும் கருத்துப்போனது. "எல்லாம் நடிக்கிறானுங்க" என்று எண்ணிக்கொண்டேன்.

--------------------------------------------------------------

நினைத்த படியே அலுவலகத்திற்குள் நுழையும் போது பதினைந்து நிமிடங்கள் தாமதமாகி விட்டது. மேலாளர் என்ன சொல்வாரோ என்று நினைத்துக்கொண்டே இருக்கையில் அமர்ந்தேன். உடனே மேசையில் இருந்த தொலைபேசி அலறியது.

"கொஞ்சம் ரூமுக்கு வந்துட்டுப்போங்க..." - மேலாளர்தான்.

'இன்னைக்கு என்ன சொல்லப் போறானோ' என்று நினைத்துக்கொண்டே மேலாளர் அறைக்குள் நுழைந்தேன்.

"என்ன சார்.. இப்படி நீங்க லேட்டா வந்தா எப்படி...? கஸ்டமர்களுக்கு நேரமாகாதா...?"

"இல்ல சார்... பஸ்ஸு வர்றதுக்கு லேட்டாயிருச்சு..."

"நீங்களும் படிச்சவர்தானே சார்... இதுதான் மொத தடவன்னா சரி... இந்த மாசத்துல இப்படி நடக்குறது எத்தனையாவது தடவன்னு நான் சொல்ல வேண்டியதில்ல.."

"நான் நேரத்துக்குதான் சார் வந்தேன். பஸ்ஸுதான்...."

"ச்சு... சும்மா கத விடாதீங்க சார். உங்களுக்கு மாத்திரம் எப்பவும் பஸ்ஸு லேட்டு. ஆனா நீங்க மாத்திரம் கரெக்ட்டு. அப்படித்தான..!
கொஞ்சம் முன்னாடி வந்தா கொறஞ்சு போயிருவீங்களோ..? இதுதான் லாஸ்ட் டைம். இனிமே லேட்டா வந்தா 'ஆக்சன்' எடுக்க வேண்டி வரும். நீங்க போகலாம்..."

முகத்தில் அறைந்தது போல இருந்தது.

'பொடிப்பய... என்ன பேச்சு பேசறான்..?' - எரிச்சலாக வந்தது.

பேருந்தில் அடிபட்ட விரல் வலிப்பது போல இருந்தது. பேசாம 'மெடிக்கல் லீவு' போட்டுருக்கலாமோ என்று யோசித்தேன்.

--------------------------------------------------

மாலையில் வீட்டுக்குள் போகும் போது, "அப்பா..." சந்தோசமாக சொல்லிக் கொண்டே காலைக்கட்டிக்கொள்ள ஓடி வந்தான் சத்யா.

"ஆமா... அது ஒண்ணுதான் கொறச்சல்.. ஏண்டா ஓடிவர்ற..? எங்கயாவது விழுந்து வைக்கப்போற.." - திட்டிக்கொண்டே அவனுடைய முகத்தைப்பார்த்தேன்.

மலர்ந்திருந்த அவன் முகம் கூம்பிப்போனது...

லேசாக நெற்றியில் வீங்கியிருப்பது போல தோன்றியது.

"என்னடா... எங்கனாச்சும் விழுந்தியா...?"

"இல்லியே..."

அவன் தாத்தாவும் "அப்படியெல்லாம் ஒண்ணும் தெரியலயே.." என்றார்.

"பஸ்ஸூல ஒரு வெளங்காதவன் வெரல நல்லா மிதிச்சுட்டான்.
இன்னும் வலிக்குது. வெந்நி ஒத்தடம் கொடுக்கணும். ஏதாச்சும் ஆயிண்மெண்ட் இருந்தா கொண்டா..." என்றபடியே விரலைத் தடவிக்கொடுத்தேன்.

மருந்து பூசியதும் ஏற்பட்ட சூட்டில்... வலி குறைந்தாற் போல இருந்தது.

--------------------------------------------------------------

தூங்கப்போகும் நேரத்தில்.... படுக்கையில்...

"அப்பா... நீங்க காலைல ஸ்கூல்ல கொண்டு வந்து விட்டதப்பாத்து, என்னோட ஃபிரெண்ட்ஸு எல்லாரும் நீங்கதான் என்னோட அப்பாவான்னு கேட்டாங்க..."

"நீ என்ன சொன்ன...?"

"ஆமா.. ன்னு சொன்னேன் - ஏம்ப்பா... இனிமே பஸ் லேட்டானா நீங்க ஸ்கூல்ல கொண்டு வந்து விடுவீங்கதான.."

"ஓஹோ... தொரைக்கு அப்படி வேற ஆச இருக்கா... சர்தான்.... இனிமே ஸ்கூலுக்கு கூட்டிட்டு போக முடியாதுன்னு சொன்னா ...?"

உடனே அவன் கண்களில் இருந்து நீர் வழிய ஆரம்பித்தது.

அவன் எதுவும் பேசவில்லை.

முகம் சிவந்து, மூக்கு விடைக்க கோபத்தில் எதிர் பக்கமாக புரண்டு படுத்தான்.

அப்போதுதான் கவனித்தேன்.... முழங்கைக்கு மேலே இடது கையில் இரண்டு இஞ்சு அளவிற்கு ஒரு வெட்டுக்காயம். இரத்தம் வந்து காய்ந்து போயிருந்தது. வீட்டுக்கு வரும் போது சீருடை மறைத்திருந்ததால் யாருமே கவனிக்கவில்லை போல - இப்போது தெளிவாக தெரிந்தது..

"என்னடா இது..? கைல எப்படி இவ்ளோ பெரிய காயம்..?"

"........."

"கேக்குறேனில்ல... பதில் சொல்றா..."

"வரிசைல வரும் போது பின்னாடி இருந்தவன் தள்ளி விட்டுட்டான். கீழ
விழுந்துட்டேன்.."

"எங்கன...?"

"ஸ்கூல்ல..."

"டீச்சர்கிட்ட சொன்னியா...?"

"........."

"ஏண்டா வீட்டுக்கு வந்ததும் சொல்லல..? மருந்து போட்டிருக்கலாம்ல..?"

"வலிக்கலப்பா.." என்றான்.

சூடு வைத்தாற் போல எனக்கு வலித்தது.

பென்ஸ்
06-10-2006, 08:00 AM
முதலில் பாரதியின் பதிவை பார்த்ததும் மற்ற பதிவுகளையும் தான்டி வாசிக்கும் ஒரு உந்துதல்....

வாழ்க்கையில் தினமும் நடக்கும் சம்பவங்கள் என்றாலும் அதில் கண்டும் காணாமலும் விட்டு செல்லும் தீவிர விஷயங்கள், மனதின் அடியில் எங்கோ ஒளிந்து இருக்கும் உணர்வுகளை ஒரு சிறு(கதை) தீண்டுதலால் தீண்டி விட்டு அலைக்க வைக்கும் எழுத்துகள்... நீங்கள் நீண்ட நாளுக்கு பின் கொடுக்கு இந்த முத்து ... விலை மதிப்பேற்றது... சம்பவங்களை இணைத்திருக்கும் விதம், அதன் வடிவு, தேவைக்கு வார்த்தைகள், கடைசியில் அந்த சூடு.... பாரதியின் வழக்கமான பதிவுகளை போலவே, இருப்பினும் இன்னும் புதுமையாய்...

தன் கையில் அதிகாரம் இருக்கிறது என்பதற்க்காக நாம் அடுத்தவர்களை காயப்படுத்துவதில் கவலைப்படுவதில்லை, தினம் தினம்... எல்லோர் வாழ்க்கையிலும் தான், தெரியாமல் செய்யும் தவறுக்கோ, அல்லது அடுத்தவர் இயலாமைக்கோ மன்னிப்போ அல்லது மரியாதை கொடுக்காததுதான் இந்த சாடலில் ஆணி வேரோ???

வலி உடல் சம்பந்தபட்டது அல்ல.. மனம் சம்பந்தபட்டது....
அருமை பாரதி...
தொடருங்கள்...

மன்மதன்
06-10-2006, 09:57 AM
தன் கையில் அதிகாரம் இருக்கிறது என்பதற்க்காக நாம் அடுத்தவர்களை காயப்படுத்துவதில் கவலைப்படுவதில்லை, தினம் தினம்... எல்லோர் வாழ்க்கையிலும் தான், தெரியாமல் செய்யும் தவறுக்கோ, அல்லது அடுத்தவர் இயலாமைக்கோ மன்னிப்போ அல்லது மரியாதை கொடுக்காததுதான் இந்த சாடலில் ஆணி வேரோ???

வலி உடல் சம்பந்தபட்டது அல்ல.. மனம் சம்பந்தபட்டது....
அருமை பாரதி...
தொடருங்கள்...

பாரதியின் கதையும், பென்ஸின் பிண்ணூட்டலும் மனதை கவர்ந்தது..

Shanmuhi
06-10-2006, 02:17 PM
வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அழகாக கோர்த்து கதையாக வடித்தது அருமை. உடம்பில் ஏற்படும் காயங்கள் மட்டும் வலி அல்ல. மனதில் ஏற்படும் வலிகளைப்பற்றியும் தத்ரூபமாக சொல்லியிருக்கிறீர்கள்.
கதையில் உரையாடும் இடங்களில் பஸ் என்று குறிப்பிட்டு மற்றைய இடங்களில் பேருந்து என்ற சொல்லை பாவித்தமுறை அருமை.

வாழ்த்துக்கள்...
மேலும் தொடருங்கள்...

Shanmuhi
06-10-2006, 02:19 PM
எப்படி பாரதி நலமாக இருக்கிறீர்களா...
உங்களை நீண்ட நாட்களின் பின் கண்டதில் மகிழ்ச்சி

ஓவியா
06-10-2006, 06:47 PM
பாரதி,

மிகவும் யதார்தமான நடைமுறையில் கதை அருமையாய் அமைந்துள்ளது,
யரோ ஒருவருக்கு இது சரித்திரமாக கூட இருக்கலாம் அவ்வலவு உண்மைகள்......

என்னை போல் புதிய வரவுகள் படித்து, கற்று, களிப்புர மீண்டும் தொடருங்கள் உங்கள் எழுத்துக் கணைகளை. ....நன்றி


வலி உடல் சம்பந்தபட்டது அல்ல.. மனம் சம்பந்தபட்டது....
பெஞ்சுவின் பின்னுட்டம் கதைக்கு வலிமை கொடுக்கின்றன...
நன்றி பெஞ்சு

பாரதி
07-10-2006, 09:56 PM
அன்பு பெஞ்சமின்,
நான் சொல்ல நினைத்ததை யாராவது சொல்ல மாட்டார்களா என்று பார்க்க விரும்பினேன். அந்த வார்த்தைகள் "வலி உடல் சம்பந்தப்பட்டதல்ல; மனம் சம்பந்தப்பட்டது". உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்ததும் நான் சொல்ல வந்தது தெளிவாக போய் சேர்ந்திருப்பதில் மகிழ்ச்சி. உங்கள் ஊக்கம் தரும் கருத்துக்களுக்கும் நன்றி.

அன்பு மன்மதன், மிக்க நன்றி.

அன்பு ஷண்முகி, உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. நான் நலமே. நான் பெரும்பாலும் மன்றத்திற்கு வந்து கொண்டுதான் இருக்கிறேன். படைப்பது குறைந்து விட்டதே தவிர படிப்பது குறையவில்லைதான்.
நினைவு கூர்ந்து நலம் விசாரித்தமைக்கு நன்றி.

அன்பு ஓவியா,
இக்கதையில் சிறிதளவுதான் வாழ்வில் நடந்த உண்மை. மற்றவை கற்பனையே. கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

pradeepkt
10-10-2006, 05:49 AM
அண்ணா
ரொம்ப நாள் கழிச்சு எழுதினாலும் அருமையான இன்னொரு கதை எழுதியமைக்கு வாழ்த்துகள்.
தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்னு சும்மாவா சொன்னாங்க?

செல்வா
19-02-2008, 09:20 PM
பாரதி அண்ணாவின் தேதியில்லா குறிப்புகள் படித்த பின்பாக அவரது படைப்புகளைத் தேடித்தேடி போய் படிக்கும் வழக்கம் எனக்கு.
தூக்கமில்லா இரவுகளில் தனிமையில் ஒரு பக்கத்தில் திரு கேவி மகாதேவன் அவர்களின் இசைத்தொகுப்பை கேட்டுக் கொண்டே மன்றத்தில் இத்தகைய படைப்புகளை வாசிப்பது ஒரு இனிய அனுபவத்தைக் கொடுத்தது.
மீண்டும் காலத்தால் மூழ்கிய ஒரு முத்தை எடுத்து பார்வைக்கு வைக்கும் பாக்கியம் கிடைத்தமைக்கு நன்றி பாரதியண்ணா...

இளசு
19-02-2008, 09:32 PM
இக்கதையை பாரதியுடன் உரையாடலாய் அலசிய நினைவு..


பின் ஏன் நான் அப்போது விமர்சனம் தரவில்லை எனப் புரியவில்லை!

மனவலி உடல்வலி அளவுக்கு வீரியமானது.
எனவே சொல்லால் செயலால் பிறர்க்கு தேவையற்ற வலி தருவதை முடிந்தவரை தவிர்க்கப் பார்க்கிறேன்.

நுண்ணிய உணர்வுகளைப் பின்னிச் சொல்லும் பாரதிக்கும்
உய்த்துணர்ந்து விமர்சனம் அளிக்கும் இனிய பென்ஸூக்கும்
முத்தகழ்ந்த செல்லத்தம்பி செல்வாவுக்கும் - பாராட்டுகள்!

சிவா.ஜி
20-02-2008, 03:31 AM
இப்படிப்பட்ட அரிய பொக்கிஷங்களை வெளிக்கொண்டுவந்து வாசிக்கத் தரும் செல்வாவுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

சம்பவங்களை மிகக் கோர்வையாகச் சொல்லி,அதன் ஒவ்வொரு பாத்திரங்களின் எண்ண ஓட்டங்களை நேர்த்தியான சொற்களால் நிரப்பி...கதையின் கருவுக்குள் அனைவருக்கும் வலிக்கும் விதமாய் செய்தி வைத்து...இப்படி அத்தனை அம்சங்களையும் நிறைவாக அளித்த கதை.
பாரதியின் எழுத்து வன்மைக்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு.
மிக அருமை வாழ்த்துகள் பாரதி.

யவனிகா
20-02-2008, 04:32 AM
பாரதியின் ஒவ்வொரு பதிவுகளைப் படிக்கும் போதும் ஏதோ ஒன்று உள்ளே உதிர்ந்து போவதான உணர்வு. எத்தனை வலிகளை பெரிது படுத்தி இருப்போம் என்று யோசிக்கத் தோன்றுகிறது. வளர வளர சுயம் சார்ந்து அதிகம் யோசிக்கத் தொடங்கிவிடுகிறோம். இந்தப் பதிவு படித்தவுடன் வலிக்கிறது.சாதாரண வரிகளில் வலி சொல்லிப் போகும் எழுத்து வன்மை. வாழ்த்துக்கள் பாரதி அண்ணா.

பாரதி
21-02-2008, 07:08 AM
ஊக்கம் தரும் அருமையான பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி பிரதீப், செல்வா, சிவா, யவனிகா.

பொதுவாக எந்த மாதிரியான விடயங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்ற எண்ணம் வைத்துக்கொள்ளும் திறன் மனதிற்கு கிடையாது. மிகச்சிறிய விடயங்கள் கூட காலங்களைக் கடந்து நிற்கும் - காரணங்களை அறியாமலே. அப்போதைக்கு எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்ததாலேயே இக்கதையை எழுத முடிந்தது.

அன்பு அண்ணா... இப்போது வலி தீர்ந்து விட்டது!

இளசு
21-02-2008, 07:23 AM
அன்பு பாரதி

இருநாளாய் உன்னை இங்கு காணாமல் என் மனவலியும்....

பாரதி
21-02-2008, 07:31 AM
அன்பு பாரதி

இருநாளாய் உன்னை இங்கு காணாமல் என் மனவலியும்....

அன்பு அண்ணா... பணியிடத்தில் வேலைப்பளு காரணம் _ சுழற்சி விடுமுறையில் பயணத்தில் இருந்ததாலும் வர இயலவில்லை அண்ணா.. உங்களன்பு கண்டு நெஞ்சம் நெகிழ்கிறேன்.

பென்ஸ்
22-02-2008, 02:13 AM
என் உரையாடல்களின் இடையே என் கருத்துகளை நிலை நிறுத்த
பலமுரை நான் தமிழ்மன்றத்தில் வாசித்த படைப்புகளை எடுத்து
காண்பிப்பதோ அல்லது சொல்லுவதோ உண்டு...

என் விடுமுறையின் இடையில் அப்படி நான் அப்படி மீண்டும் வாசித்து, வாசிக்க வைத்த கதை இது... அதன் வரிகள் அததனை பாதிப்புகளை கொடுத்துள்ளது பாரதி....

இளசு.. உங்கள் சுவடுகளை பின்பற்றி வரும் என்னால் இந்த
சிறுவரிகளை கூடவா எழுத முடியாமல் போகும்...????

பூமகள்
22-02-2008, 07:05 AM
மனத்தில் ஏதோ லேசாய் அதிர்ந்த நினைவு..!!

வலி கொண்ட உடலை விட - உள்மனம்
கொண்ட வலி அதிகம்..!

மனம் சோர்ந்தால் உடல் வெறும் செல்லாக் காசு.!!

மனமே உற்சாக உடலின் ஆதாரம்..!!

"எண்ணம் போல் வாழ்வு..!!"

-------

கதையைப் போலவே எனக்கு அமைந்த சந்தர்ப்பங்களை யோசித்துப் பார்க்கிறேன்... கால் விரல் மிதித்து.... முட்டி வயிற்றை அழுத்தி.. அப்பப்பா... அச்சமயம், நான் என் கோபத்தை காட்டியிருக்கேனா?? யோசித்துப் பார்த்து சிலிர்த்தது மனம்..

புண்படுத்தாத மனம் கொண்டு பொறுமை காத்தது புரிகிறது.. ஆயினும்.. உள்ளே இது போல் தேவையற்ற பல அழுத்தங்கள் மனத்தில் தேங்கி.. திடீரென வெடிக்கும்.. வீட்டில்..!!

எங்கிருந்து இத்தனை ஆத்திரம்... தோண்டிப் பார்த்தால்... ஆரம்பம் முதல் ஆரம்பித்த இத்தகைய சிறு சிறு பொறுமைகள் சாயலில் மனத்தில் வெடிக்காமல் விட்ட அணுகுண்டுகள் பதுங்கியிருக்கும்..!!

யோசிக்க வைத்த பதிவு..!!

வலி கொண்டு எங்களை நல் வழி நடத்த முயன்ற பதிவு தந்த பாரதி அண்ணாவுக்கு எனது பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்..!! :)

அனுராகவன்
23-02-2008, 02:00 AM
வாழ்க்கையில் எத்தனையோ வலிகள் , வேதனைகள்..
ஒரு ஏதார்த நடையில் கதையே பலர் அழகூட்டி..
நல்ல கதைகள் தரும் பாரதிக்கு என் வாழ்த்துக்கள்.
ம்ம் தொடர்ந்து மன்றத்தோடு இணந்து பல தர வேண்டுகிறேன்.

பாரதி
22-03-2008, 07:46 AM
கருத்துக்களுக்கு மிக்க நன்றி பெஞ்சமின், பூமகள், அனு.