PDA

View Full Version : நவீன ஆத்திச் சூடி - மோகன்leomohan
02-10-2006, 12:27 PM
நவீன ஆத்திச் சூடி - மோகன்
அ-விலிருந்து ஃ-வரை

அ அன்பர்களே என் நண்பர்களே

ஆ ஆழந்த கருத்துடையது இந்தக் கவிதை

இ இறைவன் இருக்கிறானோ இல்லையோ - ஆனால்

ஈ ஈர்ப்பு வேறிடத்தில் இல்லாமல் இருத்தல் அவசியம்

உ உன்னிடத்தில் உள்ள சக்தியும் புத்தியும் அபாரமானது - அதைக்கொண்டு

ஊ ஊரைக் காட்டிலும் உயர்ந்து நில்

எ என்ன என்று எதையும் நீ கேட்டு உணர்

ஏ ஏமாந்து போனால் யாருக்கு என்ன லாபம் - உன்னிலுள்ள

ஐ ஐயத்தை வைத்து பணம் பண்ணும் கயவர்களுக்கு

ஒ ஒரு புதிய பாடமாவது நீ புகட்டு

ஓ ஓடிச் சென்று உதவுவதைக் கடமையாகக் கொள்

ஒள ஒளவை எழுதியதிலிருந்து இக்காலப் புத்தகம் வரை அனைத்தையும் கல்

ஃ அஃதே நாமும் நாடும் நலமடைய நல் வழி!
க-விலிருந்து ன-வரை

க கடவுள் உண்டென்று கொள்வோமே

ங ஙப்போல் வளைந்து அவன் முன் நில்வோமே

ச சாமியார்கள் உண்மையில்லை என்று அறிவோமே

ஞ ஞானத்தை நாமே பெறுவதற்கு முனைவோமே

ட டம்பம் வீணானது என்று உணர்வோமே

ண கணப்பொழுதும் இதில் வீண் செய்யோமே

த தன்னை அறிய பிறர் தேவையில்லை என்று சொல்வோமே

ந நல்லது செய்ய மட்டும் விழைவோமே

ப பகட்டுக்கும் பசப்புக்கும் விடை சொல்வோமே

ம மாயை யாதுமில்லை என்று கொள்வோமே

ய யாருக்கும் துன்பம் ஒன்று புரியோமே

ர ராகம் தாளம் அறிவியலென்று பல கலை கற்போமே

ல லாவகமாய் அறியாமையை கையாளுவோமே

வ வாழ்விலே சிறந்தது மனிதவாழ்வென்று ஆனந்த கூத்தாடுவோமே

ழ வழக்கென்று உண்டென்றால் அதில் நன்மையை வாதிப்பிரதிவாதியாக்குவோமே

ள களம் என்ற வாழ்க்கையில் வெற்றி காண்போமே

ற கற்றதனால் ஆய பயன் என்று போற்றுவோமே

ன நன்றியென்ற சொல்லறிந்து நலம் பல பெருக்குவோமே!

தொடரும்.................

அறிஞர்
02-10-2006, 01:49 PM
வித்தியாசமான முயற்சிகள்.. அருமை.. தொடருங்கள்......

leomohan
02-10-2006, 02:35 PM
நன்றி அறிஞரே. மேலும் வரும்.

mgandhi
02-10-2006, 06:10 PM
தொடறட்டும் உங்கள் முயற்ச்சி

leomohan
03-10-2006, 03:27 AM
க-விலிருந்து க்-வரை

க கடவுளை மட்டும் வணங்கு

கா காணமுடியாத பிற எதைப்பற்றியும் கவலை கொள்ளாதே

கி கிழக்கு மேற்கு பயணம் செய்து மக்களைக் காண்

கீ கீழ் புத்தியைவிட்டு மேலானதை மட்டும் கற்றுக் கொள்

கு குரங்கிலிருந்து மனிதன் வந்தானா என்று ஆராயாதே

கூ கூட்டுறவே நாட்டுயர்வு என்பதை நீ மறுக்காதே

கெ கெட்டுப்போகாத மனதை நீ தயார் செய்

கே கேட்காமல் ஒரு அறிவுரையும் வழங்காதே

கை கையறியாமல் மறு கை தானம் வழங்குமாறு செய்

கொ கொடுமை யாதென நீ நினைக்கிறாயோ அதனை பிறர்ககு செய்யாதே

கோ கோபத்தை காட்டினால் நட்டம் உனக்கே என்று அறிவாய்

கௌ கௌதமரோ கிருஷ்ணரோ சொன்னது அந்த கால மக்களுக்கு

க் இக்காலத்திற்கு எது சரியோ அதை மட்டும் பிரயோகம் செய்

leomohan
03-10-2006, 03:32 AM
ச-விலிருந்து ச்-வரை

ச சமமாக அனைவரையும் நினை

சா சாவுக்குப் பின் ஏதுமில்லை

சி சிகரத்தில் ஏற முயல்

சீ சீர்தூக்கி அனைத்தும் பார்

சு சுகத்தை நியாயமான முறையில் தேடு

சூ சூரியன் போல் பிறர்க்காக ஓளி விடு

செ செய்யாத செயலுக்காக புகழை வேண்டாதே

சே சேமித்து சேமித்து நாளைக்காக இன்றை இழக்காதே

சை சைகை யாவும் உயர்வாய் இருக்கட்டும்

சொ சொர்க்கம் என்று எதுவுமில்லை

சோ சோமிபேறித் தனத்தை விதி என்று மறைக்காதே

சௌ சௌக்கியத்திற்கு பிறரை வதைக்காதே

ச் ச்சே என்று யாரையும் இழிக்காதே

leomohan
03-10-2006, 03:33 AM
த-விலிருந்து த்-வரை

த தங்கம் வெள்ளி தேடுவதில் தவறு இல்லை

தா தான் தான் பெரியவன் என்ற நினைப்பை ஓழி

தி தினம் உண்மை சொல்

தீ தீங்கை ஒரு மிருகத்திற்கும் நினைக்காதே

து துன்பமோ இன்பமோ எதையும் சமமாய் சந்திப்பாயாக

தூ தூய்மைக்கு முதல் இடம் கொடு

தெ தெளிவாக சிந்தனை செய்

தே தேசத்திற்கு உயிர் கொடு

தை தையலர் ஆடவர்க்குச் சமம் என்று பறை சாற்று

தொ தொய்வை முயற்சியால் வெல்

தோ தோல்வி உன்னால் தான் எனறால் பிறரை நிந்திக்காதே

தௌ .................................

த் கத்திப் பேசினால் பொய் உண்மையாகாது

leomohan
03-10-2006, 03:33 AM
ந-விலிருந்து ந்-வரை

ந நல்லது எது என்பதை அறிந்து செய்

நா நாவிலிருந்து வந்த வார்த்தைக்கு நியாயம் செய்

நி நிகரற்ற நிலையை அடைய நித்தம் உழை

நீ நீ நினைப்பதும் செய்வதும் எப்போதும் சரியாக இருக்காது

நு நுட்பம் அறிய முயல்வதில் தவறில்லை

நூ நூல்களை கடன் வாங்கினால் திருப்பிக் கொடு

நெ நெகிழ்ந்து ஏழைக்காக உருகு

நே நேரத்தை உபயோகமாய் செலவு செய்

நை நையாண்டி பிறர் மனம் நோக செய்யாதே

நொ நொந்துக் கொள்வதை நிறுத்து

நோ நோகாமல் வெற்றி இல்லை

நௌ .................................

ந் மந்தத்தை மதியால் வெல்

leomohan
03-10-2006, 03:34 AM
ப-விலிருந்து ப்-வரை

ப பகவானுக்காக குடும்பத்தை துறக்காதே

பா பாப புண்யம் என்று பொய்யுரைக்காதே

பி பிறர் நலனும் நினை

பீ பீதியை வெல்

பு புண்படுதல் கடினமாயின் புண்படுத்துதலும் தவறே

பூ பூசை மனிதனுக்கு செய்யாதே

பெ பெண் இனத்தை இழிவு செய்யாதே

பே பேச்சை குறைத்து செயலை அதிகம் செய்

பை பைந்தமிழ் போல மொழி இல்லை ஆனால் பிற மொழிகளையும் மதி

பொ பொறுமையால் கெட்டவர்கள் இல்லை

போ போதும் என்ற மனத்தால் மெய்யுலகில் வளர்ச்சி இல்லை

பௌ பௌதிகம் இதிகாசம் படி ஆனால் படித்தவை அனைத்தும் நம்பேல்

ப் குப்பமும் கோபுரமாக வேண்டும் ஒரு நாள்

leomohan
03-10-2006, 03:34 AM
ம-விலிருந்து ம்-வரை

ம மனிதன் கடவுளை வைத்து வியாபாரம் செய்தல் முறையன்று

மா மானுடனாய் பிறந்தது இழுக்கன்று

மி மிதமாய் குடிப்பதில் தவறில்லை

மீ மீதம் வைக்காமல் உண்ணப் பழகு

மு முன்னுக்கு வர தவறான பாதையைத் தேடாதே

மூ மூன்று உலகம் என்று ஏதுமில்லை; இவ்வுலகமே நிஜம்

மெ மெய்யுலகம் உன்னெதிரே பொய்யுலகை நாடாதே

மே மேகம் போல் உன்னிலையை மாற்றிக் கொள்ளாதே

மை மைந்தன் வேண்டுமென்று மகளைக் கொல்லாதே

மொ மொட்டு மலர்வதைப்போல உன் அறிவு வளர வழி செய்

மோ மோகத்திற்காக தவறு செய்யாதே

மௌ மௌனம் நல்ல சாதனம் ஆனால் பேசவேண்டிய நேரத்தில் பேசு

ம் நம்பிக்கையை பிறர் உனக்கு எதிராக பயன்படுத்த விடாதே

leomohan
03-10-2006, 03:35 AM
ர-விலிருந்து ர்-வரை

ர ரத்த தானம் செய்

ரா ராகம் தாளம் என்று இசை பயில்

ரி காரண காரியம் அறிந்து செய்

ரீ ரீங்காரமும் நாதம் தான்

ரு ருசிக்காக உண்ணுவது தப்பில்லை

ரூ ரூபத்தை வணங்காதே

ரெ கற்றவர்யாரென்று அறிந்தே தர்க்கம் செய்

ரே ரேகையும் ஜோசியமும் பிதற்றல்களே

ரை கரை மனிதனின் குணங்களுக்கும் உண்டு

ரொ ரொக்கம் வேண்டி சுற்றம் துறக்காதே

ரோ ரோகமில்லா வாழ்க்கை வேண்டுமானால் சுத்தம் அவசியம்

ரௌ ரௌத்திரம் வேண்டாத ஒன்றே

ர் கர்வம் விட்டு விடு

leomohan
03-10-2006, 03:35 AM
வ-விலிருந்து வ்-வரை

வ வழக்கு போட காரணம் தேடாதே

வா வாழ்வு வாழ்வதற்கே வாழாமல் பிறகு ஏங்காதே

வி விளைந்த நெல்லும் விளைகின்ற நெல்லும் பசித்தவனுக்கே

வீ வீணராய் வாழ்வதைவிட விநாடிக்குள் சாவதே மேல்

வு காவு கடவுள் கேட்பதில்லை

வூ எவ்வூரும் நம் ஊரே

வெ வெறும் பேச்சினால் உலகை வெல்ல முடியாது

வே வேதம் என்பதும் சாதி என்பதும் மனிதனின் தவறுகளே

வை வைபவமும் வானவேடிக்கையும் கோவில்களில் வீண் செலவு

வொ ஒவ்வொன்றாய் நல்ல செயல் செய்யத் தொடங்கு

வோ வெல்வோம் மனதின் போராட்டங்களை

வெள வெளவால் நிலை வேண்டாம் நேர்மை வாழ்வில்

வ் சவ்வாதும் சந்தனமும் சாமி கேட்பதில்லை

pradeepkt
04-10-2006, 04:41 AM
ஹ்ம்ம்... சூப்பர்...
ஆனா நான் இன்னொரு பதிவில் சொன்ன மாதிரி ஒவ்வொண்ணாக் கொடுங்க... மக்கள் தினமும் வந்து ரசிப்பாங்க....
இது இனிப்புன்னாலும் திகட்டுதுல்ல... ஹி ஹி

மனோஜ்
20-05-2007, 09:43 AM
அருமை மோகன் சார் உங்கள் முயற்சி என்றும் வித்தியாசமாக
தொடர்ந்து பல வித்தியாசங்கள் தாருங்கள்

shivasevagan
20-05-2007, 10:45 AM
வித்தியாசமான முயற்சி! பாராட்டுக்கள்!

leomohan
20-05-2007, 11:04 AM
நன்றி மனோஜ்.

நன்றி சிவசேவகன்.

நன்றி ப்ரதீப்.

lolluvathiyar
20-05-2007, 01:30 PM
மோகன் சூப்பர் தொடரவும்

வித்தியாசமான முயற்சி! பாராட்டுக்கள்!

ஐயா நீங்க எப்ப இருந்து மற்ற திரிகளை
படிக்க ஆரம்பிச்சீங்க.
உங்கள் சிவபனிக்கு சற்று ஓய்வு தந்து விட்டீர்களா

ஜோய்ஸ்
20-05-2007, 02:23 PM
குணக்குன்றே மோகன்,
நின்னை எங்கனம் போற்றுவேன்?

அதிமதுர ஆத்திசூடியை
அடியேனுக்கு அருளிய

ஆத்பாந்த பாவனே
நீர் வாழி,மென்மேலும் வாழி.

இப்படிக்கு நின் சூடியில்
மையல்கொண்ட ஜோய்ஷ்.

leomohan
20-05-2007, 03:12 PM
மோகன் சூப்பர் தொடரவும்


ஐயா நீங்க எப்ப இருந்து மற்ற திரிகளை
படிக்க ஆரம்பிச்சீங்க.
உங்கள் சிவபனிக்கு சற்று ஓய்வு தந்து விட்டீர்களா

நன்றி வாத்தியாரே.

leomohan
20-05-2007, 03:13 PM
குணக்குன்றே மோகன்,
நின்னை எங்கனம் போற்றுவேன்?

அதிமதுர ஆத்திசூடியை
அடியேனுக்கு அருளிய

ஆத்பாந்த பாவனே
நீர் வாழி,மென்மேலும் வாழி.

இப்படிக்கு நின் சூடியில்
மையல்கொண்ட ஜோய்ஷ்.

கவிதை பின்னூட்டம் இட்டு அசத்திவிட்டீர்கள் joys. நன்றி.

aren
20-05-2007, 03:15 PM
வித்யாசமாக இருக்கிறது. இதை நீங்களே எழுதினீர்களா? அருமை.

leomohan
20-05-2007, 03:18 PM
வித்யாசமாக இருக்கிறது. இதை நீங்களே எழுதினீர்களா? அருமை.

ஆம் ஆரென். நன்றி.

நேரம் கிடைத்தால் மெய்யுலக அந்தாதியையும் படித்து கருத்து கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.