PDA

View Full Version : ஞானி - தத்துவ கதை தொகுப்பு



leomohan
29-09-2006, 11:55 AM
1. மனிதன்

கால் சட்டையும் மேல் அங்கியும் நவநாகரீக தோற்றத்துடன் ஒருவன் ‘ஞானி நான்’ என்றான்.

“என்ன ‘ஞானியா’? உன்னிடம் தாடி இல்லையே? அழுக்கு வேட்டி கிழிந்த சட்டை இப்படி எதுவுமே இல்லையே? நீ ஞானி இல்லை” - என்றேன் நான்.

“மாயை” - என்றான்.

“என்ன?”.

“மாயை”.

“உன் பெயர் என்ன?”

“பெயரா?”;. மெல்ல சிரித்தான். “முகவரிக்கு முன்னே எழுத கேட்கிறாயா? ‘எனக்கு முகவரியே இல்லை. அறிமுகம் தேவையா? அறிமுகம் இல்லாத பலரில் நானும் ஒருவன். ஏன் கேட்கிறாய் பெயரை?” - என்றான்

“கூப்பிடத்தான்”.

“யாரை?”

“உன்னைத்தான்”.

மீண்டும் சிரித்தான்.

“ஏன் சிரிக்கிறாய்?”.

“பெயரைக் கேட்டாய். கூப்பிட என்று. இன்னும் சில நொடிகளில் உன்னை நான் பார்க்க மாட்டேன். பிறகு ஏன்?” - என்றான்.

“ஏன்?” - என்று வினவினேன்.

“நடிக்கிறாய் நீ “ - என்றான்.

“நீ பேசுவதே புரியவில்லை” - என்றேன்.

“நான் ஞானி”.

“அதற்கும் பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?”

“நீ முட்டாள். உடையிலும் தாடியிலும் ஞானியை பார்த்தாய். அதில் ஞானி உனக்கு தெரிய மாட்டான். இப்படித்தான் இல்லாத ஒன்றை தேடி அலைகிறீர்கள்”; - என்றான்.

“பிறகு உன்னை ஞானி என்று எப்படி சொல்வது?”.

“நீ பைத்தியம். நான் பேசவதே உனக்கு புரியவில்லை. நான் ஞானிதானே” - என்றான.

“புரியவில்லை”.

“உலகின் நடப்புகளைப்பற்றி கவலையில்லை. ஆகாயத்தை வெறித்து பார்ப்பான். உடையில் கவனம் கொள்ள மாட்டான். குளிக்க மாட்டான். இதுதான் நீங்கள் ஞானியைப் பற்றி நினைத்திருப்பது. சரியா?”

“ஆம்”.

“நான் உடை உடுத்துவேன். குளிப்பேன். ஆகாயம் பார்க்க மாட்டேன. ஆனால் நான் ஞானி?”.

“எனக்கு கொஞ்சமும் புரியவில்லை. எப்படி?” - என்றேன்.

“எப்படி ஏன் என்று கேட்கிறாயே நீ மனிதன். நான் ஏற்கனவே இதையெல்லாம் கேட்டு விட்டேன். நீ பிறரிடமிருந்து விடை அறிய ஆசைப்படுகிறாய். காரணம் நீ மனிதன். எனக்கு விடை கிடைத்துவிட்டது. இல்லை. கிடைக்கவில்லை. ஆகையால் நான் ஞானி” - என்றான்.

“எனக்கு தெளிவாகச் சொல். ஒரு எழவும் புரியவில்லை” - என்றேன்.

“நீ மனிதன். நான் ஞானி”.

அவன் சென்று விட்டான்.

-எழுத்து - மோகன் கிருட்டிணமூர்த்தி

leomohan
29-09-2006, 03:26 PM
ஞானி - 2. வெற்றி


“வெற்றி வெற்றி” என்று கத்திக் கொண்டே வந்தேன்.

எதிர்ப்பட்டான் ஞானி.

“உன்னை பார்க்க முடியாது என்றாயே?” நான் கேட்க சிரித்தான்.

“என்ன வெற்றி?” என்னை அலட்ச்சியப் படுத்திவிட்டு கேட்டான்.

“நான் சென்ற காரியம் வெற்றி” என்றேன்.

“பாவம்”;.

“என்ன?”

“பாவம்”.

“ஏன்”?

“வெற்றி என்று கூச்சலிட்டு செல்வாய். வழியில் இறக்கமாட்டாய் என்பது என்ன நிச்சயம்?”

“அபசகுனமாய் பேசாதே! பைத்தியம் போல்!” என்றேன்.

“யார்?”

“நீ தான்”.

“இல்லை நீ”.

“ஏன்?” என்றேன்.

“பிறகு? சகுனம் யாம் பார்ப்பதில்லை. யாம் ஞானி. நீ மனிதன்”;.

“சென்ற முறை பதில் சொல்லாமல் சென்றுவிட்டாய். ஒரு கேள்வி என்னை உறுத்துகிறது”.

“என்ன கேள்வி?”

“யார் நீ? என்ற கேள்விதான்”;.

“ம்ம்”. சிரித்தான்.

“ஏன் சிரிக்கிறாய்?”

“முட்டாள் நீ”.

“ஏன்?”

“உன் மனதில் எத்தனையோ கேள்விகள். ஒன்றுக்கும் உனக்கு விடை தெரியாது. நீ என்னவென்றால் ஒரே கேள்விதான் என்கிறாய்?”

“என்ன சொல்கிறாய்? எனக்கு புரியவில்லை”.

“ம்ம். முதலில் உன் கேள்விகளுக்கும் உன்னைப்பற்றியும் தெரிந்துக் கொண்டு வா. நான் யாரென்று பிறகு சொல்கிறேன்”.

அவன் திரும்பி நடந்தான்.

leomohan
29-09-2006, 03:26 PM
ஞானி - 3. கல்

என் வீட்டின் வாசல் வழியில் இருந்த கல்லை நகர்த்திக் கொண்டு இருந்தேன். ஞானி வந்தான்.

“அடே! என்ன இந்த பக்கம். என் வீடு இதுதான் என்று உனக்கு எப்படி தெரிந்தது?”

“உன் வீடா?”

“ஆம். இது என் வீடு தான்” - என்றேன்.

“பாவம். மனிதர் இல்லாத ஒன்றை தனது என்கிறார்”.

“நீ சொல்வது தான் என்ன?”

“உண்மை”.

“என்ன?”

“ஆம். என்ன செய்கிறாய்?”

“பாதையில் தடையாக இருந்த கல்லை அகற்றுகிறேன்”.

நான் சொன்னதை கேட்டு சிரித்தான்.

“எதற்கு?” என்றேன்.

“பின்னே! உன் பாதை எது என்று உனக்கே தெரியாது. ஆனால் அதிலிருந்த தடையை அகற்ற போய்விட்டாயே? சிரிக்காமல் என்ன செய்வது?”

“என்னை குழப்புகிறாய்!”

“எத்தனையோ தடைகள். ஆனால் இந்தக் கல்லை தடை என்கிறாய். மனிதர்களே இப்படித்தான்!” என்று அங்கலாயித்தான்.

“நீயும் மனிதன் தானே?”

“இல்லை. ஞானி”.

“தடைகள் என்றாயே? என்ன அது?”

“நீதான் உனக்கு தடை”.

“என்ன? நானேவா எனக்கு தடை?”

“ஆம். உன் பார்வை உனக்குத் தடை. நீ கேட்பது உனக்குப் பகை. உன் பேச்சு உனக்கே எதிரி”.

“நீ சொல்வது எப்போதுமே எனக்கு புரிவதில்லை. எனக்கு அறிவு பற்றாது. நீ நிறைய பேசுகிறாய். சரி விடு. சாப்பிடவா!” என்றேன்.

“நாளை யார் தருவார்?”

“நீ சாப்பாட்டிற்கு என்ன செய்கிறாய்?”

தோளில் இருந்த பையைக் காட்டினான். அதனுள் நிறைய கடலை உருண்டைகள்.

“பணம்?”

சட்டைப் பையிலிருந்து ஒரு கட்டுப் பணத்தை காட்டினான்.

“எப்படி கிடைத்தது?”

“கிடைத்தது என்றா கேட்டாய்? நீ என்னை சந்தேகிக்கிறாய்?”

“இல்லை. எங்கு வேலை செய்கிறாய்?”

“ஞானி மனிதன் போல சிந்திக்க கூடாது. மனிதனைப் போல வேலை செய்து சம்பாதிக்கலாம்”.

“எந்த நிறுவனத்தில் வேலை செய்கிறாய்? அதன் பெயர் என்ன?”

“மீண்டுமா பெயரைக் கேட்கிறாய்? உனக்கு அறிவில்லை?”

“மன்னித்துக் கொள். உன் முதலாளி யாரென்று சொல்!”

“யாருக்கு யார் முதலாளி? நானே எனக்கு முதலாளி”.

“நீ சொல்வது விளங்கவில்லை”.

“மனிதன் முட்டாள்தான்”.

அவன் போயேவிட்டான்.

leomohan
29-09-2006, 03:27 PM
ஞானி -4. கண்


ஞானியை மீண்டும் சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தது.

“வீட்டில் அனைவரும் நலமா?” கேட்டான்.

“வீட்டைப் பற்றியெல்லாம் கேட்கிறாயே? நீ மனிதனாக மாறுகிறாயா?” என்றுவிட்டு “நலம்” என்றேன்.

“அவர்கள் மேல் உனக்கு அன்பு அதிகமா?” கேட்டான்.

“ஆம். என் பிள்ளைகள் இருவரும் என் இரண்டு கண்கள”;.

“உன் மனைவி எந்தக் கண்?”

“ஏதாவது ஒன்றை வைத்துக் கொள். இது என்ன கேள்வி?” சிரித்தபடி கூறினேன்.

“சரி. ஒரு கண் ஒரு பிள்ளைக்கு. மற்றொரு கண் மனைவிக்கு. இரண்டாம் பிள்ளைக்கு கொடுக்க கண்ணே இல்லையே?”

ஆகா மறுபடியும் இவனிடம் மாட்டிக் கொண்டேனே என்ற நினைத்துக் கொண்டே “என்னை குழப்பவே நீ வருகிறாயா?” என்று கேட்டேன்.

சிரித்தான். அதே “அடேய் முட்டாள்” என்பது போல ஒரு சிரிப்பு.

“ஏன்?”

“இப்படித்தான் மனிதர் எதை எப்படி பிரித்துக் கொடுப்பது என்பது அறியாமல் திணறுகிறார். கண் மூக்கு என்கிறார். உயிரின் மேலாக நேசிக்கிறேன் என்று வாய் கிழிய பேசுகிறார். வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார். பிறகு சங்கடப்படுகிறார். பாவம்”.

“என்ன?”

“பாவம் நீங்கள்” என்று கூறிவிட்டு எதிர் திசையில் நடந்தான்.

leomohan
29-09-2006, 09:47 PM
ஞானி -5. பயணம்
நானும் ஞானியும் நண்பர்களாகிவிட்டோம். பேருந்து நிலையத்தில் நின்றிருந்தேன். ஞானி வந்தான். கடலை உருண்டை தின்றுக்கொண்டே.

“எங்கே போகிறாய்?”

“என் ஊருக்கு பயணம்?”

“உன் ஊருக்கு ஏன் இத்தனை விரைவாக போகிறாய்? உனக்கு காலம் இன்னமும் இருக்கிறதே?”

“என்ன தான் சொல்கிறாய் நீ?”

“பயணம் செய்ய ஏன் பறக்கிறாய்?”

எனக்கு புரிவது போல் இருந்தது.

“புரிகிறது” என்றேன்.

“என்ன?”

“இறப்பைத் தானே சொல்கிறாய் இல்லையா?”

“முட்டாள். இதை அறிய நீ தேவை இல்லை”.

இதைக் கேட்டவுடன் முதன் முறையாக அவனிடம் பாராட்டு பெறலாம் என்றிருந்த எண்ணத்திலும் மண் விழுந்தது.

“பின்னே! ஊருக்கு போவதை பயணம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?”

“இது பயணம் இல்லை. வெறும் அசைவுதான். குளத்தில் கல் எறிந்தால் ஏற்படும் சலனம் போல. இதை பயணம் என்று சொல்லாதே! பயணம் என்பது இறுதியில் போவது தான். புரிகிறதா?”

“கொஞ்சம்”.

“பயணமா?”

“இல்லை. ஊருக்கு போகிறேன். வரட்டுமா?”

அவன் பதில் சொல்லாமல் கிளம்பினான்.

leomohan
29-09-2006, 09:48 PM
ஞானி - 6. மனம்
மெதுவாக சாலையில் நடந்து வந்துக் கொண்டிருந்த போது குறுக்கிட்டான் ஞானி.

“என்ன?” என்றான்.
“மனசு சரியில்லை. அதுதான் உலவுகிறேன்” என்றேன்.

சரிதான். அவன் அப்படி சிரிக்கும் போது ஓங்கி ஒரு அறை விடவேண்டும் என்று தோன்றியது. நான் இருந்த மனநிலையில் செய்திருப்பேன். அடக்கிக் கொண்டேன். என்ன இருந்தாலும் மனித சாதியில் இல்லாத என் ஒரே நண்பன் இல்லையா?

“மனசா?”

“ஆம். ஏன்?”

“எங்கிருக்கிறது இந்த மனசு?”

மௌனமானேன். “தெரியவில்லை” என்றேன்.

“என்ன வடிவம் என்றாவது தெரியுமா?”

“ம்ம். இல்லை. தெரியாது”.

அவன் ஏதோ ராகத்தில் பாடினான்.

“முகம் ஒன்றுமறியார் - ஐயோ
முகத்திற்கு அஞ்சுவார்”

“என்ன பாடுகிறாய்?” கத்தினேன்.

“மனம் விதி என்று எதிரே இல்லாத ஒன்றை முக்கியத்துவம் கொடுத்து பேசுகிறாய். எதிரே வரும் எதிரியை வெல்வாய். ஆனால் இல்லாத எதிரியை காணாமலே நடுங்குவாய்!”

“நீ “மனம்” என்ற ஒன்று இல்லவே இல்லை என்கிறாயா?” கேட்டேன்.

“இல்லை. அப்படி சொல்லவில்லை”.

“பின்?”

“அதற்கு அஞ்சுவதில்லை. நான் ஞானி”.

leomohan
29-09-2006, 09:48 PM
ஞானி - 7. உறக்கம்

ஒரு ஞாயிறு மதியம் உணவிற்கு பிறகு நன்றாக தூங்கிக் கொண்டிருந்தேன். நேராக என் படுக்கை அறைக்கே வந்து என்னை எழுப்பினான் ஞானி.

“என்ன வேண்டும் உனக்கு?”

“என்ன செய்கிறாய்?” அவன் என்னிடம் கேட்டான்.

“உனக்கு கண் தெரியவில்லையா? நான் தூங்கிக் கொண்டிருந்தேன்”.

“ஏமாறுகிறாய்?”

“என்ன?”

“ஆம்”.

“யாரிடம்?”

“உன்னிடமே?”

“என்ன? தெளிவாகச் சொல்”.

“உறங்குகிறாய். உறக்கத்தில் கனவு வரும். ஆடம்பரமாய் வாழ்வாய் - கனவில் தான். எழுந்தவுடன் ஏமாறுவாய். கனவில் உன் அன்புக்குரியவன் இறப்பான். நினைவில் அழுவாய்”.

“அதற்காக?”

“யாம் உறங்குவதில்லை”.

“என்ன உண்மையாகவா?”

“ஆம்”.

“பிறகு இரவில் என்ன செய்வாய்?”

“உறங்குவேன்”.

“மறுபடியும் குழப்புகிறாய் நீ”.

“ஆனால் ஏமாறுவதில்லை”.

“கனவு வராமல் இருக்க வேண்டும் என்கிறாயா?”

“இல்லை. கனவுகள் வந்துபோகும். அதை சட்டை செய்வதில்லை. நான் ஞானி. நீ மனிதன். எழுந்து உட்கார். உன்னிடமே நீ ஏமாறாதே!”

என் தூக்கத்தை கெடுத்துவிட்டு அவன் போய்விட்டான். அவன் கதவை திறந்து செல்வது காதில் விழுந்தது. நான் தலையை பிய்த்துக் கொள்ளாத குறை.

leomohan
29-09-2006, 09:49 PM
ஞானி - 8. சந்தேகம் 8. சந்தேகம்

ஞானியை நானே ஒரு நாள் தேடிச்சென்றேன். அவன் வழக்கமாக செல்லும் பூங்கா கடற்கரை என்று தேடினேன்.

சாலையில் பிடித்தேன்.

“மனிதன் உயிருடன் இருக்கும் போதே ஞானத்தை தேடிவருவது விந்தையாக இருக்கிறதே?” - வழுக்கமான ஞானியின் நையாண்டி.

“என்ன ஞானி எப்படி இருக்கிறாய்?”

“இருப்பது என்ன? உடலில் ஒரு குறையும் இல்லை. இல்லாதது அறிவு ஒன்று தான்”.

“நீ ஞானியல்லவா? உனக்கா அறிவுக்கு பஞ்சம்?”

“என்னைச் சொல்லவில்லை. உன்னைச் சொன்னேன்”.

“இருந்தாலும் உனக்கு தற்பெருமை அதிகம் தான்”.

“இருக்கட்டும். என்ன செய்தி சொல்”.

“எனக்கு ஒரு சந்தேகம். உன்னைக் கேட்கலாம் என்று வந்தேன்”.

“நான் படித்தவன் இல்லை”.

“உனக்கு தெரியும்”.

“அறிவாளி இல்லை நான்”.

“உனக்கு தெரியும்”. மீண்டும் சொன்னேன் நான்.

“மனிதர் ஏன் இப்படி இருக்கிறார்?”

“எப்படி?”

“ஒருவனால் செய்ய முடியாத செயலை முடியும் என்கிறார். அவனே தனக்கு தெரியாது என்றாலும் அவன் மேல் திணிக்கிறார். இறுதியில் அவனால் செய்ய முடியவில்லை என்றால் பழிக்கிறார். காரியம் ஆக வேண்டும் என்றால் மனிதன் எதையும் செய்கிறான்”.

“ஞானி.... “ என்று இழுத்தேன்.

“நான் பழிக்கு ஆளாக விரும்பவில்லை. வருகிறேன்”. சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

leomohan
29-09-2006, 09:49 PM
ஞானி - 9. சாதி 9. சாதி

ஞானியை ஒரு நாள் நான் கேட்டேன்.

“நீ என்ன சாதி?”

மௌனமாக இருந்தான்.

“இத்தனை நாளாக நாம் பழகுகிறோம். கேட்க மறந்து விட்டேன். நீ என்ன சாதி?” என்று மீண்டும் கேட்டேன்.

என்னை முறைத்தான்.

“எத்தனை சாதிகள் சொல்” என்று என்னையே பதில் கேள்வி கேட்டான்.

“என்னை கேட்கிறாயா?”

“நீ என்ன கேட்டாய்?”

“சாதி?”

“சாதி?”

“ஆம்”.

“நிச்சயமாய் மனித சாதி இல்லை”.

“நீ?”

“நான் ஞானி. நாம் சாதி பார்ப்பதில்லை. காரணம் சாதிகள் மனிதனால் ஏற்படுத்தப்பட்டது. மனிதனை நாம் மதிப்பதில்லை”.

“மனிதன் என்றால் அவ்வளவு கேவலமா உங்களுக்கு?”

“ஆம்”.

“ஏன்?”

“கேள்வியிலேயே புரியவில்லை? நீங்கள் கேவலமானவர்தான்”.

“அப்படி என்ன கேட்டுவிட்டேன்?”

“சாதி”.

“சாதியை கேட்டால் தப்பா?”

“நீ மனிதன்”. அவன் சென்றுவிட்டான்.

நான் யோசிக்கத் தொடங்கினேன்.

leomohan
29-09-2006, 09:50 PM
ஞானி -10. அழகு “கடல் எத்தனை அழகாக உள்ளது” என்று சொல்லி ஒரு நாள் மாட்டிக் கொண்டேன்.

சிரித்தான்.

“அழகான வெள்ளை நுரை அலைகள். எல்லையற்ற வானமும் நீலக் கடலும் தொட்டுக் கொள்ளும் காட்சி ஆகா அழகு”.

“எது அழகு? இதுவா?”

“ஆம்”.

“இதுவா?”

“ஆம். ஏன்?”

“மக்களுக்கு எது அழகு எது அழகில்லை என்பதே தெரிவதில்லை”. மெதுவாக சொன்னான்.

“என்ன சொல்கிறாய்?”

“அழகு அழகில்லை”.

“என்ன?”

“ஆம். அழகான ரோஜா ஆறே நிமிடம். அதை அழகு என்கிறார். குழந்தை அழவதைக் கேட்டு ஆகா என்பார். ஆனால் எதற்கு என்று அறியார். அழகு அனைத்தும். ஆனால் அழகு ஒன்றும் இல்லை”.

“நீ எப்போதும் புரியாததையே பேசுவாய்”.

“புரிந்துக் கொள்ள முயற்சி செய்வதில்லை. காரணம் நீ மனிதன். போ! நான் சொன்னதில் ஒன்றையாவது புரிந்துக் கொள்ள முயற்சி செய”;.

தலை தூக்கி பார்ப்பதற்குள் அவன் போயேவிட்டான்.

leomohan
29-09-2006, 09:50 PM
ஞானி -11. ஞானி மீண்டும் ஒரு சந்திப்பு பல வருடங்களுக்கு பிறகு ஞானியை சந்கிக்கிறேன். அவனிடத்தில் ஒரு மாற்றமும் இல்லை. ஆனால் நான் முன் தலையில் முடி இழந்து கண்கள் சுருக்கடைந்து முப்பதில் மூப்படைந்திருந்தேன்.

“நண்பா உயிருடன் தான் இருக்கிறாயா?” வழக்கமான ஞானித்தனம். அவன் என்னை நண்பன் என்று கூறியதே எனக்கு பெருமையாக இருந்தது.

“உயிர் மட்டும் தான் இருக்கிறது. நீ எப்படி?” என்றேன்.

எப்போதாவது என் கேள்விக்கு பதில் சொல்லியிருக்கிறானா இப்போது சொல்ல.

“பதவி உயர்வு பெற்றுவிட்டாய். பிறகு ஏன் கவலை?”

“படிப்பு வேலை சம்பளம் மனைவி மக்கள் என்று அனைத்தும் பெற்றுவிட்டேன். இதற்கு பிறகு? என் வாழ்வில் செய்ய என்ன மீதம் இருக்கிறது?”

“ஏன் பிள்ளைகள் படிப்பு அவர்களின் திருமணம் இல்லையோ?”

“என் சம்பளம் அவர்களை கவனித்துக் கொள்கிறது. உணவு உடை இடம் செலவு செய்ய பணம். சம்பளம் குறைவாக இருந்தபோது இருந்த மகிழ்ச்சி இல்லை”.

“கார் மாளிகை?” கேட்டான் ஞானி கிண்டலாக.

“ஆம். ஒருவரை ஒருவர் கண்டு உறையாட தடைகள்”.

“பிறகு எதற்காக இவ்வளவு உழைத்தாய் நீ?”

“ஞானி நீ என் வளர்ச்சியை கண்டவன். அப்போது இவைகளை அடைவதே வாழ்கை என்றிருந்தேன். இப்போது அடைய ஒன்றுமே இல்லை என்பது போல ஒரு எண்ணம். என்ன செய்ய?”

“இதற்காகவே யாம் திருமணம் செய்து கொள்ளவில்லை”. பழைய ஞானி.

“திருமணத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?”

மௌனமானான் ஞானி.

“தீர்வு சொல் ஞானி”. பவ்யமான மாணவனாக நான் நின்றிருந்தேன்.

“வாழ்வை உயிருள்ளதாக செய்ய ஏதாவது ஒரு நோக்கம் கொள். பணம் உயர்வாழ்வு இவையெல்லாம் ஒரு நோக்கமே அல்ல. தீர்வு உன் கையில”;.

அகன்றான் ஞானி.

leomohan
29-09-2006, 09:51 PM
ஞானி -12. மாற்றம் - நிறைவு பகுதிஉணவகம் ஒன்றில் ஞானியை சந்தித்தேன். கடலை உருண்டையுடன் ஒரு காபி.

“நலமா ஞானி?”

“இன்று ஒரு குறையும் இல்லையா?” என் கேள்வியை வழக்கம் போல அலட்ச்சியம் செய்துவிட்டு அவன் கேட்டான்.

“குறைகளுக்கா பஞசம்?”

“என்ன?”

“நீ கேட்பாயா?”

“சொல்”.

“விடுமுறைக்கு அயல்நாடு செல்ல வேண்டுமாம் என் மனைவிக்கு. என் பண முடக்கம் புரிகிறதா அவளுக்கு?”

“யார்?”

“என் மனைவி?”

“யார்? சில வருடங்களுக்கு முன்பு நூல் புடவையில் அடக்கமாக இருந்த அந்தப் பெண்மணியா?”

“ஆம்”.

“ஆனால் நீ மட்டும் மாறவில்லை”.

“இது பாராட்டா இல்லை பாட்டா? என்ன சொல்ல வருகிறாய் நீ?”

“உன்னைச் சூழ்ந்தவர்களின் மகிழ்ச்சிக்காக இத்தனைக்காலமாக உழைக்கிறாய். உன்னையே வதைக்கிறாய் ஆனால்...”

“ஆனால் என்ன?”

“ஆனால் அவர்களை திருப்தி படுத்துகிறாயா என்றால் இல்லை. அனைவரையும் திருப்திபடுத்த முயலுகிறாய் ஆனால் உன்னால் ஒருவரையும் மகிழ்ச்சிபடுத்த முடியவில்லை”.

“அதற்கு என்ன செய்ய?”

“உன்னை திருப்திபடுத்த முயற்சி செய். அது போதும். பகைவர் அதிகரிப்பர். ஆனால் கவலைப்படாதே!”
மௌனமாக இருந்தேன்.

“உனக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அது செய். மற்றவரின் அழுத்தத்தினால் எதையும் செய்யாதே. போ!”

“மீண்டும் சந்திப்போம்”; என்று நான் சொன்னதை காதில் வாங்காமல் தன்னுடைய காப்பிக்கு மட்டும் பணம் தந்துவிட்டு விலகினான் ஞானி.

முற்றும்
தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்.

leomohan
03-11-2006, 03:34 PM
அனைவருக்கும் நன்றி. இந்த தொகுப்பையும் இம்மன்றத்தில் மின் புத்தகப் பகுதியில் ஏற்றியுள்ளேன்.

guna
06-11-2006, 02:53 AM
மோகன்..

ஜானியின் தோழனாக வருபவனை போலவே, குணாக்கும் எதுவும் புரியவில்லை..
சிலது மட்டுமே புரியர மாதிரி இருந்தது..
ஆனாலும் இப்படியே விட்டு விட போறது இல்லை, குணாக்கு புரியர வரை படிக்கப் போறேன், புரியும் பொழுது குணாவின் விமர்சனத்தை பதிக்கறேன்..

மோகன், ஒரு சின்ன சந்தேகம், நீங்க புரிஞ்சு தான் எழுதனீங்களா?

leomohan
06-11-2006, 10:46 AM
மோகன்..

ஜானியின் தோழனாக வருபவனை போலவே, குணாக்கும் எதுவும் புரியவில்லை..
சிலது மட்டுமே புரியர மாதிரி இருந்தது..
ஆனாலும் இப்படியே விட்டு விட போறது இல்லை, குணாக்கு புரியர வரை படிக்கப் போறேன், புரியும் பொழுது குணாவின் விமர்சனத்தை பதிக்கறேன்..

மோகன், ஒரு சின்ன சந்தேகம், நீங்க புரிஞ்சு தான் எழுதனீங்களா?
ஆம் நண்பரே. நன்றாக புரிந்துக் கொண்டுதான் எழுதினேன். இது ஒரு கடினமான தலைப்பு. உங்களுக்கு விளக்குகிறேன்.
1. மனிதன்
மனிதர்கள் ஞானி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால் ஞானம் உருவத்தால் வருவதல்ல என்பதை வலியுறுத்தியிருக்கிறேன்.
2. வெற்றி
சிறிய வெற்றிகள் நிரந்தரம் அல்ல. வெற்றி தோல்விகளாக மாறுவதும் தோல்வி வெற்றிகளாக மாறுவதும் நிமிடத்துக்குள் நடக்கக்கூடியவை. நிரந்தரமற்றவைக்காக களியாட்டம் கூடாது.
3. கல்
நாம் பலவிஷயங்களை தடையாக நினைக்கிறோம். ஆனால் இவையெல்லாம் நம் மனதுள் ஏற்பட்ட கருத்துக்கள். நிஜமான தடை நமக்கு நாமேதான்.
4. கண்
அன்பை பகிர்ந்தளிக்க தெரியாமல் over committment செய்துக் கொண்டு தவிக்கிறோம். இதைப்பற்றி இந்த பகுதி.
5. பயணம்
சிறு அசைவுகள் நம் வாழ்வில் என்ன மாற்றம் ஏற்படுத்தும். நிச்சயம் அநிச்சயம் எது என்பதே இறப்பிற்கும் இருப்பிற்கும் உள்ள வித்தியாசம்.
6. மனம்
இல்லாத ஒன்றை கண்டு நடுங்கும் மனித குணத்தை தூற்றியிருக்கிறேன். விதி, மனம் எல்லாம் மாயை என்பதை காட்டும் கதை இது.
7. உறக்கம்
விழிப்பிலும் தூக்கத்திலும் நாம் காணும் கனவுகள் எத்தனை பாதிப்பை ஏற்படுத்தலாம். விழிப்புடன் இருக்க வேண்டும் சலனம் இன்றி இருக்க வேண்டும் என்பதே இங்கே கருத்து.
8. சந்தேகம்
தன் சந்தேகத்தை தீர்க்க ஞானியை நாடிச் செல்கிறான் மனிதன். அவனே முடியாது என்றாலும் விடுவதில்லை. இப்படி நம்முடைய குருட்டு நம்பிக்கையை தகர்க்கிறான் ஞானி.
9. சாதி
சாதி என்ற மனிதனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு சமூக கேட்டை தூற்றுகிறான் ஞானி.
10. அழுகு
கண்ணால் காணும் அழுகு, கண்கள் சொல்லும் அழகு நிரந்தமற்றது என்பதே கருத்து.
11. மீண்டும் சந்திப்பு
நோக்கமில்லா வாழ்கையை ஏசுகிறான் ஞானி. பணம் சம்பாதிப்பது மட்டுமே ஒருவனின் நோக்கமாக இருக்கக்கூடாது என்பது அவன் கருத்து.
12. மாற்றம்
புரியாத இவ்வாழ்வில் இயந்திரம் போல சுழலுகிறோம். சற்றே நின்று யோசித்தால் நாம் எதற்காக இதையெல்லாம் செய்தோம் என்பது நமக்கே விளங்காது. இது தான் கருத்து.

ஒவ்வொரு கட்டுரைக்கும் பல பக்கங்கள் விளக்கம் எழுதலாம். ஏனென்ராள் ஒரு சூத்திரம் போல சுருக்கமான கதைகளில் தத்துவங்களை விளக்கியிருந்ததால் இதற்கு ஞானி என்று தலைப்பை வைத்தேன்.
நான் மனிதனாகவும் ஞானி என்னுடயை ஞானமாகவும் இரு முகம் கொடுத்து எழுதியது தான் இந்த தொகுப்பு.