PDA

View Full Version : கடைசி பேட்டி மர்மத் தொடர் - 2leomohan
29-09-2006, 11:43 AM
2
தமிழக அமைச்சரவை
பத்தாவது முறையாக இந்த பட்டியலைப் படித்தான் ராஜேஷ்மணி 11. இரவு பணிக்கு வருபவர்கள் வந்திருந்தனர். அவன் மேசையின் மேல் மூன்று காலியான டீ கோப்பைகள். புகை பிடிக்கும் பழக்கம் இல்லாததால் வெளியே சென்று வரவேண்டிய அவசியம் அவனுக்கு ஏற்படவில்லை.

கணினியில் தட்டித்தட்டி பல விஷயங்களளை சேகரித்திருந்தான். 10 வயதில் பள்ளிக்கூடத்தில் வாத்தியார் அடித்ததற்காக திருப்பி அவரை அடித்துவிட்டு ஓடிய சிறுவன் பலப்பல குற்றங்கள் புரிந்து விட்டு இன்று அமைச்சரவையில். கல்வி மந்திரி.

நிலத்தகராறில் தம்பியின் கைகளை வெட்டிவிட்டு பல படிகளைத் தாண்டி இன்று சுகாதாரத்துறை மந்திரி.

ராமேஸ்வர கடல்களில் பல முறை படகுகளில் நடக்கும் சட்டவிரோத செயல்களை பிடிக்கச் சென்ற காவலர்களிடம் சிக்கய ஒருவர் இன்று மீன் வளத்துறை அமைச்சர்.

பரம்பரையாக அரசியலில் இருந்த வரும் குடும்பத்திலிருந்த வந்த ஒருவர் இன்று போக்குவரத்து துறை அமைச்சர். தெரிந்த எந்த குற்றத்திலும் மாட்டியதில்லை. மாட்டாவிட்டால் குற்றம் செய்ததாக ஆகிவிடுமா?

இன்று அவன் எழுதிய எண் 4. அவன் குறித்து வைத்திருந்த அமைச்சர்களின் எண்ணிக்கை 4.

மொபைலில் பாஸை அழைத்தான். ஒரு நிமிட மௌனம். இன்னும் அரை மணி நேரத்தில் அங்கிருப்பேன் சீஃப் .

தலைசோடு ( ஹெல்மெட்) எடுத்துக் கொண்டு கிளம்பினான். லிஃப்ட் ஓட்டுபவரிடம் அக்பர் நாளைக்கு கார் எடுத்துட்டு வருவேன் நீங்க காலையில வீட்டுக்கு போயிட்டு என் பைக்கை ஓட்டிகிட்டு வந்துடங்க என்றான்.

சரி சார் என்றுவிட்டு கதவை திறந்துவிட்டான் அக்பர்.

அலுவலக கட்டிடத்திலிருந்து 1 நிமிட நடை. மரங்கள் நிறைந்த சோலையில் அவன் அலுவலகம். காட்டில் வந்தது போல ஒரு அமைதி. காய்ந்த சருகுகள் மீது ஒவ்வொரு காலாக வைத்து அந்த சருகுகள் நொறுங்கும் சத்தத்தில் செய்யலாமா வேணாமா செய்யலாமா வேணாமா என்று பாடினான்.

பீட்டர்ஸ் சாலை பிடித்து அண்ணாசாலைக்குள் நுழைந்து ஜெமினி மேம்பாலம் பிடித்து வேகமாக கீழே சறுக்கி நுங்கம்பாக்கம் சாலையில் கைகளில் காற்று சில்லென்று அடிக்க இரவின் அமைதியை கிழித்துக்கொண்டு பைக் ஓடியது. அவன் எண்ணமோ அதைவிட வேகமாக ஓடியது.

நீர் லாரி ஓடி பள்ளமாக இருந்த சாலை இப்போது சரியாகிவிட்டது. ஆனாலும் அவன் பைக் பழக்க தோஷத்தில் மெதுவாக சென்றது. வள்ளுவர் கோட்டத்திற்கு ஏதிரே 12 மணிக்கும் மேலே திறந்திருக்கும் ஒரு தேனீர் கடையில் வண்டியை நிறுத்தினான்.

இன்னும் 15 நிமிடம். அதற்குள் ஒரு குளியல் போட்டுவிட்டு சாந்தோம் பீச்சில் பாஸை சந்திக்க வேண்டும். முடியுமா? பாதியில் கப்பை வைத்துவிட்டு பணம் தராமல் நகன்றான். வழக்கமாக வரும் கடை. நட்பு சில நேரத்தில் நல்லது. ஆனால் அவன் செய்யும் தொழிலுக்கு நட்பு நல்லதல்ல. எத்தனைப் பேருக்கு அவனை தெரியாமல் இருக்கிறதோ அத்தனை நல்லது.

அவசரமாக கோடம்பாக்கம் பிரிட்ஜ் கடந்து லிபர்டி பார்க் எதிரே உள்ள சந்தில் பைக்கை நிறத்திவிட்டு அவசரமாக வீடு திறந்து முதல் மாடிக்கு சென்றான். அவன் மேசையின் மேல் ஒரு போஸ்ட் இட். இந்த முறை அதில் எண்கள் இல்லை. அவன் கையெழுத்தும் இல்லை.

மின்னல் குளியல். சாதாரண உடைக்கு மாற்றம். காரை கராஜிலிருந்து எடுத்த விரட்டினான்.

5 நிமிடம் தாமதமாக போய் சேர்ந்தான். அவன் முதலாளியோ அங்கு முன்பே வந்திருந்தார்.

தயாரித்து வைத்திருந்த பட்டியலை காண்பித்தான். அந்த நான்கு பெயரையும் காண்பித்தான். பிறகு தன் திட்டத்தை விவரித்தான்.

நல்லா யோசிச்சிட்டீங்களா? இது ரொம்ப ரிஸ்க்கா இருக்கும் போலிருக்கே. ஆனா இது நடந்தா இது தொலைக்காட்சி அகராதியில் ஒரு மிகப் பெரிய திருப்புமுனையாக இருக்கும்

சீஃப் இது செஞ்சே ஆகனும். இதப்பாருங்க என்று வீட்டிலிருந்து அவன் எடுத்துவந்த அந்த போஸ்ட் இட்டை காண்பித்தான்.

அவர் உறைந்து போனார்.

அந்த நான்கு அமைச்சரில் நானும் ஒருவன். சந்திக்கத்தயார். எப்போது எங்கே என்று சொல்
- அமைச்சர் கரி. நீலவாணன்.

leomohan
29-09-2006, 09:39 PM
கடைசி பேட்டி மர்மத் தொடர் - 3 3
கரி. நீலவாணன் வீட்டில் ஒரே கூட்டம். காலையில் ஐந்து மணிக்கு எழுந்து வீட்டுத்தோட்டத்தில் ஒரு மணி நேரம் உலவும் பழக்கம் உள்ளவர் அன்று எழுந்திரிக்கவில்லை.
பத்திரிகை டிவி வானோலி உள்நாட்டு வெளிநாட்டு நிருபர்கள் அனைவரும் கூடியிருந்தனர்.
நீலவாணன் இயற்கை எய்தவில்லை. யாரோ அவரை செய்ற்கையாக மேலே அனுப்பினர் என்ற செய்தி மக்களை அதிர வைத்திருந்தது.
தொண்டர்கள் திரளாக வந்துக்கொண்டிருந்தனர்.
மையிலாப்பூர் திருவல்லிக்கேணி பெரியவர்கள் டிவி முன் அமர்ந்துக் கொண்டு கெட்டவாளுக்கெல்லாம் நல்ல சாவே வராது. கொஞ்சமாவது நல்லது பண்ணியிருந்தா இவாளுக்கு இந்த நிலமை வந்திருக்குமா? பகவான் எல்லாத்தையும் பார்த்துண்டுதான் இருக்கார் என்ற ஊர் நியாயம் பேசிக்கொண்டிருந்தனர்.
முதல்வர் தலமை காவல் ஆனயரை கூப்பிட்டு 24 மணி நேரத்திற்குள் கொலையாளியை கண்டு பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
பல முறை கரி. நீலவாணனிடம் வம்பளத்த எதிர்கட்சிகள் எங்கே பழைய பகையை மனதில் வைத்துக் கொண்டு ஆளும் கட்சியினர் தங்களை கொலை கேசில் உள்ளே தள்ளிவிடுவார்களோ என்று பயந்திருந்தனர்.
உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்தாலும் அவரின் அரசியல் விரோதிகள் மலர் வளையம் எடுத்து சென்றனர்.
வீட்டிற்கு முன் பலத்த காவல். யாரையும் உள்ளே விடவில்லை. தூரத்திலிருந்து தொண்டர்கள் பார்த்துச் சென்றனர்.
மகாபலிபுரம் ரோட்டில் இரவு முழுதும் தூங்காமல் வண்டி ஓட்டிக் கொண்டிருந்த ராஜேஷுக்கு 5.50க்கு தொலைபேசியில் அழைப்பு.

ராஜேஷ்இட்ஸ் வெரி சீரியஸ். நீலவாணனை இன்னிக்கு 4.30 மணிக்கு யாரோ கொன்னுட்டாங்க. உங்க லிஸ்ட்ல இருந்த 4 பேர்ல ஒருத்தர் இல்லை. நீங்க இப்ப ஜாக்கிரதையா இருக்கணும். உடனே டிவி ஸ்டேஷனுக்கு வாங்க. மத்ததை அப்புறம் பேசுவோம்.
இரவு முழுதும் தூங்காமல் இருந்தது இப்படி ஒரு செய்தி வந்தது இவை சேர்ந்து அவனுக்கு தலை சுற்றியது. டைடெல் பார்க் அருகே வந்த பிறகு வேகமாக வண்டியை திருப்ப முயன்றபோது வண்டி அருகிலிருந்து மரத்தை மோதி நின்றது. தலையில் பயங்கர அடி. கையை தலையில் வைத்து எடுத்தான். கை முழுவதும் ரத்தம். மொபைல் எடுத்து சீஃப் எனக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிடுத்து. டைடல் பார்க் கிட்ட என்றுவிட்டு மயங்கிவிழுந்தான்.
கண் திறந்து பார்த்தபோது அடையாரில் ஏதோ ஒரு தனியார் மருத்துவமனையில்.
பாஸ் மிகவும் கோபத்திலிருந்தார். என்ன காரியம் பண்ணிட்டிங்க ராஜேஷ்என்ன பண்ணிகிட்டு இருந்தீங்க அடையார் கிட்ட?
சீஃப் ஏன் இப்படி டென்ஷனா இருக்கீங்க? நாம டிஸ்கஸ் பண்ண விஷயத்தைப் பத்தி தீவிரமா யோசிச்சுகிட்டு இருந்தேன். நேரம் போனதே தெரியலை
நீங்க ஒரு சீரியஸ் பிரச்சனையில மாட்டிகிட்டு இருக்கீங்க. அமைச்சர் கரி. நீலவாணனை யாரோ கொன்னுட்டாங்க
தெரியுமே சீஃப். அதைத்தான் காலையிலே போன்ல சொன்னீங்களே. அதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?
ராஜேஷ் புரியாம பேசாதீங்க. நீங்க இந்த விபத்து பண்ணாம இருந்திருந்தீங்கன்னா போலீஸ் வந்திருக்காது. போலீஸ் வராம இருந்திருந்தா உங்ககிட்ட அமைச்சரோட லிஸ்ட் அவங்க கையில மாட்டியிருக்காது. நல்லா ஹைலைட்டரில் நீங்க போட்ட நாலு அமைச்சர்ல ஒருத்தர் கொலை செய்யப்பட்டிருங்காங்க. புரியுதா?

தலை வலித்தது ராஜேஷுக்கு. தலையில் அடி. மேலும் இந்த செய்தி. மருத்துவமனையின் மருந்து வாசனை. கண்ணை மூடினான்.
ராஜேஷ்ராஜேஷ்என்று பாஸ் கூப்பிட்டதைக் கூட ஏதோ தொலைவில் பேசுவதாக நினைத்து தூங்கச் சென்றான்.
பல மணி நேரம் தூங்கியது போல் இருந்தது. வயிறு முட்ட கண் விழித்தான். அவன் படுக்கையை சுற்றி போலீஸ்.
அதில் மிகவும் சீனியர் போல் இருந்த ஒரு அதிகாரி மிஸ்டர் ராஜேஷ்உங்க கிட்டே இருந்து ஒரு லிஸ்ட் கிடைச்சிருக்கு. அதில 4 பெயரை ஹைலைட் பண்ணியிருக்கீங்க. என்ன அர்த்தம் அதுக்கு?
அந்த அதிகாரிக்கு பின் நின்றுக் கொண்டு அவனுடைய பாஸ் உதட்டை குவித்து குவித்து ஒலியில்லாமல் இன்டெர்வ்யூ என்று கூறினார்.
பல முறை டப்பிங் செய்து பழகிய ராஜேஷ்அதை உடனடியாக புரிந்துக் கொண்டான். எந்த சீரியலிலும் ஆங்கிலம் பேசும் ஒரு பாத்திரம் வந்தால் உடனே ராஜேஷ்பேசினா ஸ்டைலாக இருக்கும் என்று அவனை கூப்பிட்டு விடுவார்கள். வேலையே இல்லாவிட்டாலும் ஆபிஸில் இருக்கும் ஜாதியை சேர்ந்தவன். அதனால் பல முறை மற்றவர் வேலையை செய்து முடிப்பான்.
சார் இந்த நாலு அமைச்சரையும் இந்த மாசம் பேட்டி எடுக்கனும்னு ப்ளான் போட்டிருந்தோம். இதில என்ன தப்பு?
எதுக்காக இந்த 4 பேரையும் தேர்ந்தெடுத்தீங்க?
சார் தமிழ் நாட்டை வடக்கு தெற்கு கிழுக்கு மேற்குன்னு பிரிச்சா இந்தா நாலு பேரும் திசைக்கு ஒருவராக வராங்க. நான்கு திசையிலிருந்து நான்கு அமைச்சர்கள் என்ற தலைப்பில பேட்டி எடுக்க திட்டம் போட்டிருந்தோம். வேற என்ன சந்தேகம் உங்களுக்கு?

அதிகாரி இந்த பதிலில் திருப்தியடைந்தது போல் இருந்தது. அவன் பாஸும் நிம்மதி பெருமூச்சுவிட்டார்.
உங்களுக்கு நீலவாணன் கொலை செய்யப்பட்டது தெரியுமா?
தெரியும் சார். எங்க பாஸ் காலையில என்ன பார்க்க வந்தாரு. அப்ப சொன்னாரு.
உங்ககிட்ட அதைப் பத்தி சொல்ல வேண்டிய அவசியம்?
என்ன சார் இது சாதாரணமாகவே நாங்க நியூஸ் மீடியாவில இருக்கறவங்க. அதுவும் இல்லாம நீங்க பேட்டி எடுக்க வேண்டிய அமைச்சர்ல ஒருத்தர் இல்லையின்னு வருத்தத்தோட சொன்னார்.
காலையில மகாபலிபுரம் ரோட்ல என்ன பண்ணிகிட்டு இருந்தீங்க?
சார் தினம் ஒரு பீச்சு போவேன். இன்னிக்கு நீலாங்கரை போயிட்டு வந்தேன் பொய்.
ஆல் ரைட். இன்னும் ஏதாவது சந்தேகம் இருந்தா திரும்பி வருவோம். ஒரு வாரம் ஊர்ல இருங்க என்று கூறிவிட்டு போலீஸ் பட்டாளம் அகன்றது.
ஆனால் விட்டுச் சென்ற நர்ஸ் எந்த கோணத்திலும் நர்ஸ் போல் இல்லை.
இவள் ஒரு பெண் போலீஸ் என்று மனதில் நினைத்துக் கொண்டான்.
அதை அவரும் உணர்ந்தது போல அவன் பாஸும் குட் ஜாப் ராஜேஷ்உடம்பை பார்த்துக்கங்க என்று கூறிவிட்டு விடை பெற்றார்.
ஏதோ நினைவுக்கு வந்தது போல ஜீன்ஸ் பான்டில் கைவிட்டான். அமைச்சர் எழுதியது போல வந்திருந்த போஸ்ட் இட் இருந்தது. போலியாக நர்ஸ் வேடம் இட்டிருந்த போலீஸ் பெண்மணி பார்ப்பதற்குள் மீண்டும் அதை உள்ளே வைத்தான்.
ஆனால் அவன் செய்வதையெல்லாம் ஒரு சிசிடிவி காமிரா படம் பிடிப்பதை உணரவில்லை.மறுபடியும் தூங்கச்சென்றான்.

leomohan
29-09-2006, 09:39 PM
கடைசி பேட்டி மர்மத் தொடர் - 4 4
ராதிகா. வயது 24. மலர்ந்த முகம். எதிரே வந்தால் உற்று பார்க்கத்தோன்றும் முகம். நளினமான நடை. நாகரீகத்திற்கும் ஆபாசத்திற்கும் இடையில் ஒரு உடை உடுத்தும் பாணி. ஆனாலும் தமிழ் பெண்மணி என்று கண்டு பிடித்து விடலாம். நீளமான முகம். நீலமான கண்கள். இடை வரை வரும் முடியை பார்லர் சென்று கழுத்துவரை ஆக்கியிருந்தாள். கழுத்தில் இருதய வடிவ டாலர் கொண்ட ஒரு செயின். ஹீரோ ஹோண்டா ஆக்டிவா வண்டி. இவள் கதையின் ஹீரோயின்.

நேராக சூப்பர் டிவியின் வரவேற்ப்பு அறைக்கு வந்தவள் டைரக்டரை சந்திக்க வேண்டும் என்று கூறினாள்.

முன்கூட்டியே வாங்கிய அப்பாயிண்ட்மென்ட் இருக்கா என்று ரிசப்ஷனிஸ்ட் கேட்க ஆம் என்று கூசாமல் பொய் சொன்னாள்.

பெயர்?

ராதிகா.

எத்தன மனிக்கு அப்பாயிண்மென்ட்?

மெல்லிய இருதய வடிவில் இருந்த கைகடிகாரத்தில் கை உயர்த்தி பார்த்துவிட்டு 10.30 என்றாள்.

ஓ. இப்ப 9.45 தான் ஆகிறது. இன்னும் எம் டி வரவில்லை. இப்படி உட்காருங்க என்று உபசரித்தாள் நந்தினி - சூப்பர் டிவியின் ரிசெப்ஷனிஸ்ட்.

நன்றி என்று கூறிவிட்டு கறுப்பு நிற தோல் சோபாவில் அமர்ந்தாள். அருகில் மேடையில் இருந்த ரீடர்ஸ் டைஜஸ்டை எடுத்துக் கொண்டு கால் மேல் கால் போட்டு படிக்கத்துவங்கினாள்.

நந்தினி. வயது 21 இருக்கும். பணக்கார அப்பாவின் செல்லப் பெண். வேலை செய்வதே வீட்டை விட்டு வருவதற்கு என்னும் நம்பிக்கை கொண்டவள். ராஜேஷ் மீது கொள்ளை பிரியம். ஆனால் இதுவரை அவனிடம் பேசியது இரண்டே வார்ததைகள். அதுவும் பல முறை. குட் மார்னிங். பை. ஒரு முறை மதியம் சேர்ந்து சாப்பிடலாமா என்று அவனிடம் கேட்க அவன் இன்னிக்கு பிஸி என்று சொன்னதால் கோபம் கொண்டு அவனிடம் பேசாமலே தூரத்தில் நின்று காதலிக்கிறாள்.

அரை மணிக்கு ஒரு முறை டாய்லெட் சென்று லிப்ஸ்டிக் கரையாமல் இருக்கிறதா முடி கலையாமல் இருக்கிறதா என்று பார்ப்பதே அவளுக்கு வேலை.

நந்தினி ராதிகாவை பார்த்து புன்னகைத்துவிட்டு டாய்லெட் நோக்கி நடந்தாள். இந்த நேரத்திற்காக காத்திருந்தவளைப் போல சட்டென்று அலுவலகத்தின் உள்ளே நுழைந்தாள். சரளமாக டைரக்டெரின் அறையை நோக்கி நடந்தாள். யாரும் உணர்வதிற்கு முன்பே அவரின் டயரியில் ராதிகா 10.30 என்று எழுதிவிட்டு சட்டென்று வெளியே வந்து புத்தகத்தை எடுத்து படிக்கத் துவங்கினாள்.

ராஜேஷ்பிரச்சனையினால் வழக்கம் மறந்திருந்த டைரக்டர் ராஜகோபால் நந்தினி சொன்ன காலை வணக்கத்திற்கு பதில் சொல்லாமல் உள்ளே அவசரமாக சென்றார்.

நந்தினி அவர் அறைக்குள் சென்றுவிட்டாரா என்று பார்த்துவிட்டு இண்டெர்காமில் போன் செய்தாள்.

சார் 10.30 மிஸ் ராதிகாவுக்கு அப்பாயிண்ட்மென்ட கொடுத்திருங்கீங்க. அவங்க வெயிட் பண்றாங்க. உள்ளே வர சொல்லட்டுமா?

ராதிகா? நான் அப்பாயிண்ட்மென்ட் கொடுத்தேனா? எப்ப? என்று ஆச்சர்யப்பட்டுக் கொண்டே டயரியை புரட்டினார். அதில் ராதிகா 10.30 என்று எழுதியிருந்தது. மிகவும் ஆச்சர்யப்பட்டுக் கொண்டே ஓகே உள்ளே வரச் சொல்லுங்க என்றார்.

மிஸ் ராதிகா நீங்கள் உள்ளே போகலாம் என்று சொல்லிவிட்டு வரவேற்பாளினிகளின் முத்திரை சிரிப்பை அளித்தாள்.

குட் மார்னிங் சார் உள்ளே வரலாமா?

வாங்க மிஸ் ராதிகா. உட்காருங்க. உங்களுக்கு அப்பாயிண்மென்ட கொடுத்ததா எனக்கு ஞாபகம் இல்லையே?

சார் நான் உங்களுக்கு கால் பண்ணேன் நீங்க இன்னிக்கு வரச் சொன்னீங்க.

எப்போ?

10ம் தேதி.

10ம் தேதி! யோசித்தார். அன்றுதான் ராஜேஷ்அடிபட்டு ஹாஸ்பிடலில் கூத்து நடந்தது. அந்த குழப்பத்தில் அப்பாயிண்ட்மென்ட் கொடுத்தது மறந்திருக்கலாம்.

ஆல்ரைட். என்ன விஷயமாக வந்திருக்கீங்க?

சார் நான் ஒரு ஜர்னலிஸ்ட். பத்திரிக்கை நிருபர் கோர்ஸ் முடிச்சிருக்கேன். பார்ட்-டைமாக நிருபர் வேலையும் செஞ்சிருக்கேன். ஒரு வட இந்திய சானலுக்கு தமிழ் மொழிபெயர்ப்பும் செஞ்சிருக்கேன்.

பட் எங்களுக்கு இப்ப புதிய நிருபர்கள் தேவையில்லை மிஸ்!

சார் நான் இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸத்தில ஸ்பெஷலைஸ் பண்ணியிருக்கேன். சமீபத்தில வட இந்திய சானல் டுடே அன்ட் டுமாரோவில் வந்த சாமியார்கள் செய்யும் அட்டுழியங்களை அம்பலம் செஞ்ச அன்டர் கவர் நிருபர் நான்தான் என்றாள்.

இதை கேட்டதும் ராஜகோபால் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

சுவாரசியமாக இருக்கே. உங்களைப்பத்தியும் நீங்கள் செய்த வேலைகளைப்பற்றியும் இன்னும் சொல்லுங்கள் என்றார்.

அவள் தன் மென்மையான குரலில் பேசத்தொடங்கினாள். இனிமையான குரல். அழகான தோற்றம். முறத்தால் புலியை விரட்டும் தமிழ் வீரப்பெண். மெல்லிய கைகளை அசைத்து அசைத்து அவள் பேசும் போது வெண்டைக்காயை ஏன் லேடீஸ் ஃபிங்கர் என்று சொல்கிறார்கள் என்று புரியும். அவள் பேச்சில் லயித்துவிட்டார் டைரெக்டர். அவளுடைய சிவந்த உதடுகளையே பார்த்துக்கொணட்டிருந்தவருக்கு அவள் அதற்கு மேல் பேசியது ஏதுவுமே காதில் விழுந்ததாக தெரியவில்லை.

வெரி நைஸ். உங்க டாகுமென்ட்ஸ் எல்லாத்தை ஹெச் ஆர் டிபார்மென்டுக்கு கொடுங்க. நீங்க நாளைக்கே வேலைக்கு சேரலாம். சம்பளம் 10000. என்றார். இரவு நேரத்தில் பணிபுரிய நேர்ந்தால் சாப்பாடு போக்குவரத்து அனைத்தும் கம்பெனியின் செலவு என்றும் மற்ற பல சௌகரியங்களை விரிவாக சொன்னார்.

மிக்க நன்றி என்று கூறிவிட்டு பணிவாக வெளியே சென்றாள். நந்தினிக்கு ஒரு நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தாள்.

தனது ஹோண்டா ஆக்டிவா மீது அமர்ந்துக் கொண்டு ஸாம்ஸங் மொபைலை எடுத்து போன காரியம் சக்சஸ் என்று சொல்லிவிட்டு வைத்தாள்.
__________________

leomohan
29-09-2006, 09:40 PM
கடைசி பேட்டி மர்மத் தொடர் - 5 5
வா ரவி வாங்க சீஃப். உங்களுக்கு எதுக்கு இவ்வளவு சிரமம் என்று ரவியையும் முதலாளியையும் படுக்கையிலிருந்தே வரவேற்றான் ராஜேஷ்.

அவனுடன் பல வருடம் இருக்கும் வீட்டு பணியாள் ரங்கன் அவர்களுக்கு நாற்காலி சரிசெய்துவிட்டு குடிக்க தண்ணீர் எடுத்துவர அடுப்படி நோக்கிச் சென்றான்.

ராஜேஷின் அறை அவனைப்போன்று விநோதமானது. ஒவ்வொரு அறைக்கும் ஒரு நிறம். விளக்குகள் கீழ் இருந்து மேலாய். எல்லா அறைகளிலும் ஒரு கணினி. அனைத்தும் ஒரு நெட்வொர்க்கில் வொயர்லெஸ் மூலம் இணைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு அறையிலும் செர்ரி நிறத்தில் ஒரு சிறிய முக்காலி. அதன் மேல் ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் அகராதிகள். முன் அறையில் ஆளுயர அன்டர்டேக்கரின் படம் டபிள்யு டபிள்யு எஃப்விலிருந்து. சுவற்றின் மேல் வெள்ளை போர்டு. கலர் மார்க்கர்ஸ். ஏதாவது குறிப்பு எழுதியிருந்தது. நிறைய எண்கள் எழுதியிருந்தது.

நிஜ பூக்கள் இருந்த பூத்தொட்டி. சிறிய பென்சில் பேனா. வெள்ளைத்தாள்கள். விவேகானந்தரின் படம். ஜெ கிருஷ்ணமூர்த்தியின் புத்தகங்கள். ஆர் கே நாராயண்னின் புத்தகங்கள். சில அகதா கிரிஸ்டி. பல எர்ல் ஸ்டான்லி கார்ட்னர்.

ராஜகோபால் இதை நோட்டம் விட்டார். நல்ல வீடு ராஜேஷ் என்று தன் கருத்தை கூறினார்.

என்ன சீஃப் நீங்க வாங்கி கொடுத்த வீடு தானே. கிரஹபிரவேசத்திற்கு அப்புறம் இப்பத்தான் வர்றீங்க.

என்ன சார் வாங்கி கொடுத்த வீடா? ரவி ஆச்சர்யத்துடன் கேட்டான். கோடம்பாக்கத்தில் இத்தனை பெரிய வீடு என்றால் சுமார் ஒரு கோடியாவது ஆகியிருக்கும். ஒரு சாதாரணமான நிருபருக்கு இவ்வளவு பெரிய வீட்டை டைரக்டெர் ஏன் வாங்கித்தர வேண்டும் என்று பல எண்ணங்கள் அவன் மனதில் ஓடின.

அது இல்லை ரவி என்று விளக்கம் அளிக்க முயன்ற அவனை கண்களால் அமர்த்தினார் ராஜகோபால்.

பரவாயில்லை சார். ரவிக்கு தெரிஞ்சா என்ன? 3 வருஷமா எனக்கு எல்லாமே அவன்தான்.

டேய் ரவி நீ எங்க சானல்ல சேர்றதுக்கு முன்னாடி ஒரு இரண்டு வருஷம் இருக்கும். அப்ப ரெயின் டிவி டாப்ல இருந்தாங்க. கர்ணா ஸ்டோர்ஸ் இரண்டு வருஷம் விளம்பர கான்ட்ராக்ட். 13 கோடி ரூபாய். ரெயின் டிவிக்கு போக இருந்ததை நம்ம டிவிக்கு கொண்டு வந்தேன். அப்ப சீஃப் கேட்டாரு உனக்கு என்ன வேண்டுமானாலும் கேளு வாங்கித்தரேன். இந்த வீட்டுக்கு எதிர்த்த வீட்டு மாடியில் தான் தங்கிருந்தேன். இந்த வீட்டு மேல ஒரு கண். இந்த வீடு வேண்டும் என்று கேட்டேன். டு மை சர்ப்ரைஸ் உடனே என் பேர்ல வாங்கி ரெஜிஸ்டர் பண்ணிட்டாரு. எனக்கு ஒரே ஷாக். அந்த நன்றி உணர்ச்சியில தான் நான் சீஃப்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கேன்.

இல்லை ரவி. ராஜேஷ்இதுக்கு தகுதியானவர் தான். அதவிடுங்க உங்க ஹெல்த் எப்படி இருக்கு?

பரவாயில்லை சீஃப். இன்னும் இரண்டு நாள்ல நான் ஆபீஸ்ல இருப்பேன்.

நீங்க ஆபீஸ்க்கு வந்தீங்கன்னா உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வைச்சிருக்கேன் என்று கண்ணடித்தார்.

என்ன சீஃப் சொல்றீங்க? என்றான் ஆச்சர்யத்துடன்.

ரவி ஒன்றும் புரியாமல் சிரித்தான்.

உங்களுக்கு அந்த இமயமலை ப்ராஜெக்ட்காக ஒரு செக்ஸி செகரெட்டரியை ஏற்பாடு பண்ணியிருக்கேன் என்று நக்கலாக சிரித்தார்.
ரவி என்ன என்ன என்று கேட்டான்.

டேய் ரவி எப்ப பார்த்தாலும் ஆபிஸ்ல ஹெட்போன் வைச்சி பாட்டு கேட்டு கேட்டு உனக்கு காது செவிடாய் போச்சா என்றான்.

என்னடா சொல்ற என்று குழம்பி நின்றான் ரவி.

ஓகே. எனக்கு நேரம் ஆயிடுச்சு. உடம்பை பார்த்துக்கங்க். நாளை மறுநாள் உங்களை ஆபிஸ்ல சந்திக்கிறேன். வாங்க ரவி போகலாம்.

பை என்று சொல்லிவிட்டு குழப்பம் அகலாமல் ராஜகோபால் பின்னால் பூனை போல நடந்து சென்றான்.

ரங்கா டேபிளை க்ளீன் பண்ணிடுங்க. டிவியை ஆன் பண்ணிடுங்க. மழை எப்படி பெய்யுதுன்னு பாக்கனும்

leomohan
29-09-2006, 09:41 PM
கடைசி பேட்டி மர்மத் தொடர் - 6 6
ராதிகாவின் முதல் நாள் சூப்பர் டிவியில். அவளுக்கென்று தனி அறை ஆனால் சிறிய அறை. ஒரு போன். லாப் டாப் கம்ப்யூட்டர். கம்பெனியின் செல் போன். தனி எண்.

ராஜேஷின்அறைக்கு எதிர் அறை. அதனாலே அவளுக்கு உடனே ஒரு எதிரி. நந்தினி.

வெகு நாட்களாக அந்த அறையின் மேல் ஒரு கண். லஞ்ச் செய்ய அங்கே சென்றுவிடுவாள். அவனை கண்களால் விழுங்கிக் கொண்டே சாப்பாட்டையும் விழுங்குவாள். அவனோ எப்போதாவது பார்ப்பான். அப்போது அவனிடத்திலிருந்த ஒரு புன்னையாவது வருமா என்று ஏங்குவாள். அவன் அவளை பார்க்கிறான் என்று தெரிந்ததும் சட்டென்று தலையை குனிந்துக் கொள்வாள். சில விநாடிகளுக்கு பிறகு மீண்டும் கண்களால் காதல் காட்சி தொடரும். இது ஒரு தலை காதலா என்று அடிக்கடி கலங்கியது உண்டு. அப்போதெல்லாம் அவனுக்கு போன் செய்து உங்களுக்கு இந்த மெஸெஜ் வந்திருக்கு உங்களை இவரு பார்க்க வந்தாரு அவருக்கு என்ன சொல்லனும் என்று ஏதாவது சொல்லிவிட்டு அவன் பேசுவதை கேட்பாள்.

இன்டர்னல் ரெக்கார்டிங்கை ஆன் செய்துவிட்டு அவன் பேசுவதை பல முறை கேட்பாள். அந்த டேப்பை எல்லாம் வீட்டிற்க்கு எடுத்துப் போய் அவன் பேசிய பேச்சிலிருந்து தனித்தனியாக வார்த்தைகளை எடுத்து டபுள் டெக்கில் எனக்கு ..உனக்கு...ரொம்ப...பிடிச்சிருக்கு என்று ஒரு வாக்கியமாய் கோர்த்து பதிவு செய்து பல முறை கேட்பாள். உன்னை என்ற வார்த்தையை எப்போதாவது பேசினால் அவள் ஜென்மம் சாபல்யம் ஆகிவிடும்.
இதில் ராஜகோபால் வேறு மிஸ் ராதிகா ராஜேஷோடு ஒரு புது ப்ராஜெக்டில் வேலை செய்யப் போறாங்க என்று நந்தினியடம் அறிமுகப்படுத்தியிலிருந்து அவளுக்கு தூக்கம் இல்லை.

அப்பிளிகேஷனில் அவளுடைய புகைப்படத்தை பார்த்து நீ என்னை விட அழுகா என்று கேட்டுக் கொண்டாள். ராஜேஷ்மீது ஏவரும் வெறித்தனாமாக காதல் கொள்வது சகஜம் தான். அதிலும் இவள் உச்சக்கட்டத்தில் இருந்தாள். கனவினில் திருமணம் கண்டு குழந்தை பெற்று தினமும் சமைத்து பரிமாறி அவன் உடல் நலமில்லாமல் இருந்தால் இவள் அழுது இதுவும் காதலில் ஒரு வகை. ஆனால் இதை அறியாது இருந்தானா அந்த காதல் மன்னன்?

நந்தினியைப்பற்றியும் இங்கு கொஞ்சம் சொல்ல வேண்டும். அந்தக் காலத்திலேயே இன்ஜினியரிங் படித்துவிட்டு இருபது ஆண்டு காலம் அமெரிக்காவில் வேலை செய்துவிட்டு தாயகம் திரும்பி சொந்தமாக ஒரு தொழில் செய்து அதிலும் நிறைய பணம் கண்டவர் நந்தினியின் தந்தை.
அம்மா வீட்டை காக்கும் காவல் மட்டும் அல்ல ஷேர் மார்கெட்டில் தினமும் ஐந்து லட்சம் வரை விளையாடும் ஒரு நவீன வீட்டு வியாபாரி. ஆனாலும் பண்பை மறக்காமல் கோவில் குளம் என்று சென்று வருபவர்.
ஒரே பெண். அன்பு செல்லமாக மாறிவிட்டதால் நந்தினியிடத்தில் பல பிடிவாத குணங்கள். ஆனால் கண்ணியத்தில் எந்த மீறலும் இல்லை. டிஸ்கோ செல்லும் கண்ணகி. துடிப்பாக தம்மும் அடிப்பாள் கண்டவன் கைப்பட்டால் கன்னத்திலும் அடிப்பாள். 10 வருடம் அமெரிக்காவில் பயின்றாலும் இந்தியா வந்ததும் இந்திய ஆங்கிலத்தில் பேசக்கற்றவள். பல நேரத்தில் எளிமை. சில நேரத்தில் ஆடம்பரம். வீடு முழுக்க ஹார்டி பாய்ஸ் நான்சி ட்ரூ டின் டின் சூப்பர் மேன் ஸ்பைடர் மேன் என்று காமிக்ஸ் புத்தகங்களாக அடுக்கி வைத்து தினம் படிக்கும் வளர்ந்த குழந்தை.

சார்லி சாப்ளின் படங்கள் என்றால் அவளுக்கு உயிர். அதன் நடுவே வரும் ஆங்கில வாக்கியங்கள் அவளுக்கு அத்துப்படி.

கவர்ச்சியாக உடை அணிவது தான் செய்யும் வேலைக்காகவே என்று வீட்டில் சொல்லிக் கொண்டாலும் எதிராளி தன் கழுத்துக்கு கீழ் பாய்ந்து செல்வதை ரகசியமாய் ரசிப்பாள். ஆனாலும் எவரையும் சீண்டவிட்டதில்லை. இந்த விஞ்ஞான உலகில் இவள் ஒரு விந்தை.

ராஜேஷைப்பற்றி அம்மா அப்பாவிடம் சொல்லிவிட்டாள். அவள் அப்பாவும் ராஜேஷ்அப்பா பற்றி விசாரிக்கப்போக இருவரும் ஹூய்ஸ்டனில் பணிபுரிந்ததாகவும் அவர் பரிட்ச்சயம் இல்லையென்றாலும் மிகவும் நல்ல குடும்பம் என்று கேள்விப்பட்டதாகவும் தங்களுக்கு முழு சம்மதம் என்றும் தெரிவித்தார்.

ஆனாலும் ராஜேஷின் சம்மதம் இன்னும் கிடைக்கவில்லையே. நந்தினியின் அப்பா நான் வேணா ராஜேஷின் அப்பாகிட்ட பேசட்டுமா? என்று கேட்டதிற்கு அவள் மறுத்துவிட்டாள்.

ஒரு முறை ஆபீஸில் நடந்த ஏதோ விளையாட்டில் தனக்கு வான் நீலம் பிடிக்கும் என்று அவன் சொன்னதற்காக தான் அணியும் உடையிலிருந்து தன் அறையின் நிறம் வண்டியின் நிறம் என்று அனைத்தையும் நீலமாக மாற்றிவிட்டாள் இந்த நீலாம்பரி.

இந்த வெறித்தனமான காதலுக்கு காரணம் இல்லாமல் இல்லை. ராஜேஷைஇது வரை எந்த பெண்னோடும் யாரும் பார்த்ததில்லை. புகைப்பிடிக்கும் பழக்கமோ மது அருந்தும் பழக்கமோ அவனுக்கு இல்லை. ஆபீஸ் பார்ட்டியில் குடிப்பதோடு சரி. அதுவும் இந்த வளர்ந்த வரும் கணினி கலாச்சாரத்தில் ஒரு அங்கம். இதுவரை பொய் பேசியதாக அவனைப்பற்றி யாரும் சொன்னதில்லை.

புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்களுக்கான பயிற்சியில் முதல் நாளாய் அவனைப் பார்த்தாள். டிவி சானல் பற்றியும் சமுதாயித்தில் அதன் கடமைப் பற்றியும் கம்பெனி செய்து தரும் வசதிகளைப்பற்றியும் சம்பளம் வேலை நேரங்கள் பற்றியும் அவன் பேசிய பேச்சில் கலந்து போனாள். கண்டதும் காதல்.

அவன் உள்ளே நுழைந்த இரண்டாவது நிமிடம் உள்ளே இருந்த 20 பேரும் ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் அவனிடம் மயங்கி விழுந்தனர். இவளோ சாதாரணமான மங்கையல்லவா? காதலே கொண்டுவிட்டாள்.

உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் என்று அனைவரையும் கேட்கும் போது இவள் நந்தினி என்று சொல்ல அவன் அதை மீண்டும் உச்சரிக்க என்னமோ ஆஸ்கார் அவார்ட் கிடைத்தது போல குளிர்ந்தாள். இமயத்தை தொட்டாள். அதன் பிறகு 3 வருடமாய் அவன் இன்னோரு முறை நந்தினி என்று சொல்லமாட்டானா என்று காத்திருக்கிறாள்.

இப்படி இருக்க இன்னொரு பெண் அதுவும் அழகானவள் அதுவும் அவன் எதிரில். எப்படி அனுமதிப்பது? இனிமேல் அவள் அந்த அறைக்குள் செல்லத்தான் முடியுமா அல்லது அங்கே உட்கார்ந்துக் கொண்டு சாதத்ததையும் ராஜேஷையும் சாப்பிடத்தான் முடியுமா?

ராஜேஷ்அடிப்பட்டதைக் கேட்டதும் துடிதுடித்துப்போனாள். இரண்டு நாட்களாய் அவனைப் பார்க்கவில்லை. சாப்பாடும் இறங்கவில்லை. எப்படியாவது இன்று சென்று பார்த்துவிடவேண்டும் என்று திட்டம் இட்டாள்.

ஐந்து மணிக்கு வீட்டிற்கு வந்து வான் நீல நிறத்தில் ஒரு சுடிதார் அணிந்து அதற்கு ஏற்ற நிறத்தில் கடிகாரம் முதல் காலணி வரை தேர்ந்தெடுத்து தயாரானாள். தாயாருக்கு எங்கே செல்கிறாள் என்று தெரியும். அவளும் தடுக்கவில்லை. போகும் முன் அம்மா ராஜேஷூக்கு ஆக்ஸிடண்ட்...நான்... என்று முடிப்பதற்குள் போயிட்டு வாடா என்றாள் செல்லமாக. மணிக்கு 120 மைல் துடிப்பாக பேசிய பெண்னை காதல் இப்படி பணிவாக்கிவிட்டதே என்ற ஆச்சர்யத்தில் தன் பெண் ஹோண்டா ஆக்டிவாவை தவிர்த்து ஹோண்டா சிட்டியை எடுப்பதைப் பார்த்தாள். காலையில் புதுமைப் பெண். மாலையில் அழகு பதுமைப் பெண். தன் குழந்தையை மெச்சினாள்.

கோபாலபுரத்திலிருந்து வண்டியை விரட்டி அண்ணா மேம்பாலத்தை கடந்து பாண்டி பஜாரைப் பிடித்து துரைசாமி சப்வே நெரிசலைக் கடந்து ஐந்து விளக்கு வழியாக சென்று அங்கிருக்கும் சிறிய அம்மன் கோவிலில் இருக்கும் அம்மனை வணங்கி லிபர்டி தியேட்டர் முன் வண்டி இன்ஜினை அணைத்தாள்.

ஓடிச்சென்று ஃபுட் வேர்ல்ட் முன்னே இருக்கும் ஒரு பூக்கடையில் ஒரு ரோஜாப்பூவை வாங்கினாள்.

மெதுவாக நடந்து அவன் வீட்டின் காலிங் பெல்லில் தன் முத்திரை பதித்தாள். பெண்மையின் மென்மை தீண்டலை முதல் முறையாக உணர்ந்த அந்த மணியோ கிளர்ச்சியில் ஆனந்தக் கூத்தாடியது.

ரங்கன் வந்து கதவைத்திறந்தான். யார் நீங்க என்றான்.

நான் ராஜேஷோட வேலை செய்யறேன். அவருக்கு விபத்துன்னு கேள்விப்பட்டு பார்க்க வந்திருக்கேன் என்றாள் தயக்கத்துடன். தனியாக இருப்பான் என்று நினைத்திருந்தாள்.

உள்ளே வாங்க என்ற அவன் அறைக்கு வழி காட்டினான்.

போர் கால கவிதைகள் என்ற ஒரு தொகுப்பை படித்துக் கொண்டிருந்தான். அவன் வீட்டிற்கு முதன் முறையாக வருகிறாள். ஆனாலும் பிக்னிக் சென்றுவிட்டு நண்பர்களுடன் ஒரு முறை திரும்புகையில் அவன் வீட்டின் முன்னே வண்டியை நிறுத்தி தண்ணீர் நிரப்பியதால் அவன் வீட்டை அறிவாள்.

வாங்க நந்தினி என்ன திடீரென்று?

ரோஜாவை மறைத்தாள். வாங்க என்று அவன் சொன்னது தூரத்தை அதிகரித்துவிட்டது.

மௌனமாக இருந்தாள்.

உட்காருங்க.

மீண்டும் அந்த ங்க. உறுத்தியது அவளுக்கு.

ரங்கா தண்ணி கொடுங்க நந்தினிக்கு.

இரண்டாவது முறையாக நந்தினி. குளிர்ந்தாள். குழைந்தாள்.

leomohan
29-09-2006, 09:42 PM
கடைசி பேட்டி மர்மத் தொடர் - 6 தொடர்ந்து ராஜேஷ் 3 வருஷமா நாம ஒரே கம்பெனியில் வேலை செய்யறோம். உங்களை விட 4 வயசு நான் சின்னவ. எதுக்கு வாங்க போங்க என்றாள். நந்தினி அட் ஹெர் பெஸ்ட்.

ராஜேஷpன் முகம் சிவந்து போனது. இவ்வளவு பேசுவாளா இவள்?

சரி சரி நந்தினி எப்படி இருக்கே. உட்காரு போதுமா என்றான் சிரித்தப்படியே. உன்னை 3 நாளாச்சு பார்த்து என்றான்.

அம்மா! உன்னை என்ற வார்த்தை வந்துவிட்டதே இவன் வாயிலிருந்து. எனக்கு... பிடிச்சிருக்கு.. இரண்டும் முன்பே இருக்கிறது. ஆனால் இந்த உன்னை இப்போது தான் இவன் வாயிலிருந்து வந்திருக்கிறது. ஆஹா ரிகார்ட் செய்ய டேப்பில்லையே என்று வருந்தினாள். ஆனால் என் மனதைவிட பெரிய ரிகார்டர் ஏது என்று சமாதானப்படுத்திக் கொண்டாள்.

என்ன யோசிக்கிறே?

ஒன்னும் இல்லை.

நீ இந்த டிரெஸ்ல ரொம்ப அழகா இருக்கே.
உள்ளுக்குள் பாரத ரத்னா விருதே வாங்கிவிட்டாள்.

அப்பாடா இப்பவாவது உங்க கண்ணிற்கு பட்டதே.

இல்லை. நீங்க ஸாரி நீ இப்பத்தான் சுடிதார் போட்டு பார்க்கறேன். அதுவும் இந்த ப்ளு எனக்கு பிடிச்ச வேரியேஷன்.

தெரிஞ்சுதான் போட்டு வந்திருக்கேன்டா முட்டாள் - மனதுக்குள் தான் .

என்ன இந்த பக்கம் அதிசயமாய்?

ராஜேஷ்கொஞ்சம் நியாயமா பேசுங்க. உங்களுக்கு அடிப்பட்டிருக்கு. நான் உங்க கொலீக். உங்களை பார்க்க வந்திருக்கேன். என்னமோ ஷாம்பூ விக்கிற சேல்ஸ் கேர்ல் உள்ள நுழைந்த மாதிரி இருக்கு உங்க பேச்சு - பொய்யாக கோபித்தாள்.

இல்லம்மா. இதுக்கு முன்னாடி நீ வந்ததில்லையே அதனால கேட்டேன்.

ம்மா. நெருக்கத்திற்கு இதைவிட வேறு என்ன வார்த்தை இருக்கிறது தமிழில்.

உற்று அவன் கண்களை பார்த்தான். அதில் சற்றும் காதல் தெரியவில்லை.

என்ன பார்க்கறே நந்தினி

மூன்றாவது முறை நந்தினி. அவன் வேறு ஏதுவும் பேசவேண்டாம். தன் பெயரைப் மட்டும் சொல்லிக் கொண்டிருந்தால் போதும் என்று அவளுக்குத் தோன்றியது.

என்னாச்சு உங்களுக்கு?
காபி அவளுக்கும் தேனீர் அவனுக்கும் வந்தது.

வேண்டும் என்றே தேனீரை எடுத்து அவசரமாக பருகினாள்.

நந்தினி அது எனக்கு என்றான் அவசரமாக.

நான்காவது முறை நந்தினி.

ஓ ஐயாம் ஸாரி என்றுவிட்டு வேற டீ எடுத்துட்டு வரச்சொல்லட்டுமா என்றாள். இவளுக்கு யார் கற்றுக் கொடுத்தது நடிப்பு? பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் தொலைக்கல்வி படிக்கிறாளோ?

பரவாயில்லை என்று கூறிவிட்டு அவள் அருந்திய கோப்பையிலிருந்தே குடிக்கத்தொடங்கினான். கணவன் உண்ட இலையில் மனைவி உண்பது போல கணவன் செய்யக்கூடாதா? புதுமைப் பெண்ணின் மனம் பூரிப்படைந்தது. இன்றே இவன் காலடியில் மரணம் என்றாலும் புன்னகையோடு ஏற்றுக்கொண்டிருப்பாள்.

என்னாச்சு உங்களுக்கு? மறுபடியும் கேட்டாள்.

சின்ன ஆக்ஸிடெண்ட்.

10 வருஷமா கார் ஓட்டற உங்களுக்கு எப்படி ஆக்ஸிடெண்ட்?

ராத்திரி முழுசா தூங்காம கார் ஓட்டிக்கிட்டிருந்தேன். அதனால ஏற்ப்பட்ட லாப்ஸ்.

ஏன் இப்படி வேலை செய்யறீங்க?

வேற என்ன செய்ய?

கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்த ஆசையில்லையா உங்களுக்கு?

இருக்கே. நிறையா இருக்கு. ஆனா என்னுடைய எதிர்பார்புக்கு இன்னும் யாரும் அமையவில்லை.

ஏன் நான் இல்லையா உன் கண் முன்னே? குருடா? - உள்ளே ஒரு குரல்.

நீங்க யாருகிட்ட பழகறீங்க அவங்களைப் பத்தி தெரிஞ்சிக்க?

ஆழமா பழக அவசியமில்லை நந்தினி. ஒரு நிமிஷத்தில கண்டு பிடிப்பேன்.

ஐந்தாவது முறை நந்தினி.

ஒரு நிமிஷம் மேலாக இங்கே இருக்கேன். என்னைப் பத்தி என்ன தெரிஞ்சிகிட்டீங்க?
மௌனமாக புன்னகைத்தான்.

சரியான சந்தர்ப்பம் இது. சுற்றிப் பார்த்தாள். ரங்கன் தென்படவில்லை. ரோஜாவை எடுத்து அடிபட்ட அவன் தலையில் லேசாக அடித்துவிட்டு அவன் மார்பருகே வைத்தாள்.

அவன் கண்ணை உற்றுப்பார்த்தாள். அவன் கண்கள் நெகிழ்வது தெரிந்தது. அழுதுவிடவேண்டும் போலிருந்தது. முகத்தை திருப்பிக் கொண்டாள். அவன் நெகிழ்வான பார்வையை பார்க்கும் சக்தி அவளுக்கு இல்லை. அதை பார்த்துவிட்டால் காதலை தானாக வெளிப்படுத்த வேண்டிய நிலை வந்துவிடுமோ என்ற பயம்.

அவன் படுக்கை சுற்றி புத்தகங்கள். போஸ்ட் இட்டுகள். அதில சில எண்கள்.

என்ன இந்த எண்கள்? பேச்சை மாற்ற முயன்றாள்.

சும்மா.

சும்மான்னா?

எப்போதாவது மனசுல வர்ற நம்பரை எழுதுவேன்.

என் மனசுல ஒரு நம்பர் வருது எழுதட்டுமா?

எழுதேன்.

5 என்று எழுதினாள்.

என்ன 5. உன் டேட் ஆப் பர்த்தா?

முட்டாள் என் பிறந்த நாள் கூட உனக்குத் தெரியவில்லை? அதே குரல்.

இல்லை. என்னை இந்த மூன்று வருஷத்தில இத்தனை தடவைதான் பேர் சொல்லி கூப்பிட்டிருக்கீங்க. உள்ளுக்குள் அழுதேவிட்டாள்.

சட்டென்று பையை எடுத்துக் கொணட்டு நான் கிளம்பறேன் என்று சொல்லிவிட்டு வெளியேறினாள்.

ஏதோ மறந்துவிட்டது போல திரும்பி வந்தவள் அந்த சீட்டில் இருந்த 5-ஐ அடுத்து 00000000000000 என்று எழுதிவிட்டு திரும்பி பார்க்காமல் வெளியேறினாள்.

அவனுக்கு புரியாமல் இல்லை. உள்ளுக்குள் மாற்றம் வந்தது. ஆனால் காதல் இன்னும் வரவில்லை.

மார்பின் மேலிருந்த ரோஜாவைப்பார்த்தான். அது வாடாமல் இருந்தது. வாசம் இருந்தது. அழகு இருந்தது. ஆனால் அது அவனுடையது இல்லை என்று தோன்றியது.

ஹோண்டா சிட்டி கிளம்பியது. அது வரை அந்த வீட்டை நோட்டம் விட்டுக்கொண்டிருந்த ஒரு டிவிஎஸ் விக்டரும் கிளம்பியது.

leomohan
29-09-2006, 09:42 PM
கடைசி பேட்டி மர்மத் தொடர் - 7 7
இன்ஸ்பெக்டர் விக்ரமன். திருவிக்ரமன். 38 வயது. நரை இல்லை. வழுக்கை இல்லை. தொப்பை இல்லை. தமிழக போலீசா என்று பலரையும் சந்தேகப்பட வைக்கும் ஃபிட்னஸ். லஞ்சம் வாங்கியதாக சரித்திரம் இல்லை. கான்ஸ்டபிளிடம் வீட்டு வேலை வாங்கியதில்லை. சொந்த வேலைக்காக 15 வருஷசர்வீசில் சேர்த்த வைத்திருந்த பணத்தில் ஒரு ஹூண்டாய் கார் வாங்கியிருந்தார். பழைய டிவிஎஸ் சமுராய் நின்றிருப்பதையும் காணலாம்.

காலையில் எழுந்ததும் ஒரு மணி நேரம் மெரீனா பீச்சில் ஓடுவார். வீட்டுக்கு வந்ததும் ஒரு பெரிய சொம்பிலிருந்து காய்ச்சிய பால். பிறகு ஏதாவது ஒரு இனிப்பு பலகாரம்.

சட்டையின் மேல் புறத்தில் காலர் மைக்கை சரி செய்துக் கொண்டு வந்திருந்த நிருபர்களிடம் பேசத்தொடங்கினார்.

வணக்கம். கொலை நடந்து 72 மணி நேரம் ஆகிவிட்டது. இன்னும் ஒரு தடயமும் கிடைக்கவில்லை என்பது தான் உண்மை. ஒருவர் மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது. அது யாரென்று உங்களுக்கு சொன்னால் உண்மையான குற்றாவாளியை பிடிக்க அது உதவாது. கொலை செய்யப்பட்டது ஒரு அரசியல்வாதி. அதுவும் ஒரு அமைச்சர். ஆதலால் எதிரிகளுக்கு பஞ்சம் இல்லை. அதனால் எங்களுக்கு அதிக வேலை. கொலை தலைகானியை அவர் முகத்தில் அமுக்கிச் செய்திருக்கிறான் கொலையாளி. இது ஒரு கன்வென்ஷனல் மெதட். அதனால் கொலையாளி ஒரு கன்வென்ஷனல் ஆளாக இருக்க வேண்டும். எந்த திருட்டும் போகவில்லை. வாட்ச்சுமேன் யாரும் வந்து போனதை பார்க்கவில்லை. எந்த சத்தமும் இல்லை. சண்டை கூச்சலும் இல்லை. 2 நிமிடத்திற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.

என்னை இந்த கேஸ் எடுத்துக்கச்சொல்லி காலை 6 மணிக்குத்தான் உத்தரவு போட்டார்கள். இதற்கு மேல் ஏதாவது தகவல் இருந்தால் நானே உங்களை கூப்பிடுகிறேன். நீங்கள் போகலாம் என்று கூறிவிட்டு மைக்கை கழற்றினார்.

சார் அவருக்கு எதிர்கட்சியில் யாராவது பகையாளி இருக்கிறாரா என்று தினம் முழங்கு பத்திரிகையின் நிருபர் ஆவலாக கேட்டார்.

நோ மோர் கொஸ்டின்ஸ் என்று நிருபர்கள் செய்து சலசலப்புக்கு அஞ்சாத புலி போல நடந்து உள்ளே சென்றார்.

நேராக ராஜேஷின் மொபைலுக்கு போன் செய்தார். ராஜேஷ்நான் தான் இந்த கேஸை நடத்தறேன். என் பெயர் விக்ரமன். உங்களை ப்ரைம் சஸ்பெக்டாக மார்க் பண்ணியிருக்காங்க. ஆனா நான் உங்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. ஏதாதவது வேண்டும்னா நானே போன் செய்யறேன். உங்க ஒத்துழைப்பை ஏதிர்பார்க்கிறேன் என்றார் தடால் அடியாக.

என்னைத்தவிர வித்தியாசமான மனிதர் இவ்வுலகில் உண்டா? வியந்தான் அவன்.

நிச்சயமாக சார். எப்பவேண்டுமானால் போன் பண்ணாலம் நீங்க என்றான்.

leomohan
29-09-2006, 09:43 PM
கடைசி பேட்டி மர்மத் தொடர் - 8 8
முட்டிக்காலுக்கு சற்றுக்கீழ் வரும் அளவுக்கு ஒரு லெதர் கருப்பு ஷூ. கருப்பு நிறத்தில் ஒரு ஸ்கர்ட். பிரவுன் நிறத்தில் ஒரு டீ ஷர்ட். கையில் கடிகார அளவில் ஒரு லெதர் பாண்ட். கழுத்தில் ஒரு ஸ்கார்ப் வெள்ளை நிறத்தில். அலையாக பறக்க விடப்பட்ட தலை முடி. முகத்தில் பொட்டு இல்லை. உதடுச் சாயம் இல்லை. கண்களில் அந்த துறுதுறுப்பு. டீ ஷர்ட்டின் முதல் இரண்டு பட்டன்கள் அலட்ச்சியமாக திறந்துவிடப்பட்டிருந்தன. பப்பிள்கம் மென்றுக்கொண்டிருந்தாள். இது ராதிகா. சூப்பர் டிவியில் இரண்டாவது நாள்.

ராஜேஷைப்பற்றி அவளிடம் பேசாதவர்கள் யாருமே இல்லை. அவனைப்பார்க்க ஆவலாக இருந்தாள். அவனுடைய புகைப்படம் வீடியோ க்ளிப்ஸ் என்று அனைத்தையும் பார்த்துவிட்டு அரை மயக்கமாய் இருந்தாள். எப்போது அவன் வருவான் என்று அலுவலக வாசலைப்பார்த்துக்கொண்டே அவள் அறையில் அமர்ந்திருந்தாள்.

நந்தினி. பலமுறை பனிமழையில் குளித்துவிட்டாள். இரவு முழுவதும் தூங்காத கண்கள். பல முறை தான் நேற்று செய்த சம்பாஷணைகளை தனக்குள்ளே பேசிப்பார்த்திருந்தாள்.

அந்த ரோஜாப்பூவை அவன் தலையில் அடிக்கும் தைரியம் எப்படி வந்தது? தனக்கு தானே ஒரு ஷொட் கொடுத்துக்கொண்டாள்.

பிறகு 5 எழுதிவிட்டு அதன் பின் 00000000000000 எழுதிய சாதனை? அது மிகப்பெரிய சாதனையல்லவா? முன்பிற்கும் அதிகமாக ராஜேஷைகாதலித்தாள்.

வெள்ளை நிற சுடிதார். (நீ சுடிதாரில் அழகா இருக்கே). வான் நீல பொட்டு (எனக்கு வான் நீலம் ரொம்ப பிடிக்கும்). வரட்டும் இன்று என்று காத்திருந்தாள்.

ராஜேஷ்லிப்டிலிருந்து வெளிப்பட்டான். சட்டென்று உள்ளே நுழைந்து குட் மார்னிங் என்று சொன்னவன் மின்னல் வேகத்தில் சென்றேவிட்டான்.

நேற்று அவளை பார்த்தாகவோ அரை மணி அவளுடன் கழித்ததாகவோ அவன் காட்டிக் கொள்ளவில்லை. கோபத்தில் டெலிபோன் டைரக்டெரியை தூக்கி கீழே எரிந்தாள். கர்வம் பிடிச்சவன். ஆனாலும் என் இனியவன். இவனை இன்று ஒரு வழி செய்யவேண்டும் என்று நினைத்தாள்.

ராஜேஷ்கருப்புச் சட்டை கருப்பு பாண்ட் கருப்பு டை என்று அனைத்தும் கருப்பிலே வந்திருந்தான். எப்போதாவது இதுமாதிரி வருவான்.

நேராக அறைக்குள் நுழைந்து கத்ரி கோபாலனை துவக்கினான். இமெயில் எப்போதும் வீட்டிலே பார்த்துவிட்டு கிளம்புவான். அதனால் ஆபீஸ்சுக்கு வந்ததும் இமெயில் பார்க்க பறக்கமாட்டான். இன்டர்காமில் ராமுவை அழைத்து ஒரு டீ என்றான்.

இன்டர்காம் அழைத்தது. பாஸ் தான். விரைந்துச் சென்றான். செல்லும் வழியில் ரவி இடர்பட்டான். மச்சான் ராமுவை டீயை பாஸ் ரூமிற்கு அனுப்பச் சொல்லிடு என்று விரைந்தான்.

எப்படிடா இருக்கே? என்று ரவி கேட்டதற்கு வந்து பேசறேன என்று விட்டு ஓடினான்.

உள்ளே வரலாமா என்று சம்பிரதாயத்திற்கு கேட்டுவிட்டு கதவைத் திறந்தான். அங்கு ஒரு புரட்சிப்பெண்மனி தொடையிலிருந்த ஸ்கர்ட் விலகியிருக்க ஹாலிவுட் நடிகையை போல நீளமான லெதர் ஷூவுடன் அமர்ந்திருப்பதைப் பார்த்தான்.

ஓ ஏதோ மீட்டிங்கல இருக்கீங்களா? என்று மன்னிப்பு கேட்டுவிட்டு கதை மூட முயன்றான்.

இட்ஸ் ஓகே ராஜ் இவங்களை அறிமுகப்படுத்தத்தான் உங்களை கூப்பிட்டேன். கம் இன் என்றார்.

யாரிந்த பெண்மனி. இவள்தான் அந்த செக்ஸி செகரெட்டரியோ? என்று யோசித்தப்படி அமர்ந்தான்.

அவளைப் பார்த்து ஒரு சம்பிரதாயப் புன்னகை. அவளும் தலையை சாய்த்து அதை ஏற்றுக் கொண்டாள்.

ராஜ் இவங்க ராதிகா. உங்களோட அந்த முக்கியமான ப்ராஜெக்ட்ல வொர்க் பண்ணப்போறாங்க. செர்டிஃபய்ட் அண்ட் க்வாலிஃபய்ட் ஜர்னலிஸ்ட். மிகவும் திறமைசாலி. புத்திசாலி.

இவங்களை சந்தித்ததில எனக்கு ரொம்ப சந்தோஷம். இவங்க திறமையில் எந்த சந்தேகமும் எனக்கு இல்லை. ஆனா இந்த ப்ராஜெக்ட்ல நான் தனியா வேலை செய்ய ஆசைப்படறேன் என்றான்.

உங்க கருத்து எனக்கு புரியுது ராஜ். ஆனா இவங்களைப்பத்தி ஒன்னு சொன்னா நீங்க இவங்க உதவியை மறுக்க மாட்டிங்க என்றார்.

என்ன? என்ற கேள்விக்குறியோடு பார்த்தான்.

இவங்க தான் சமீபத்தில நடந்த சாமியார்களின் கூத்தை எக்ஸ்போஸ் பண்ண அன்டர் கவர் நிருபர்.

ஓ இந்தப்பூவூக்குள் புயலும் இருக்கிறதா? ஆர்வமானான். அவள் இன்னும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் அவன் அவளிடம் ஈர்க்கப்பட்டான்.

அவன் நிறைய புரட்சிகரமான நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறான். இந்த புது வருட நிகழ்ச்சியில் அவன் வழங்கிய குற்றத்தை ஒழிக்க வேண்டுமானால் குற்றவாளிகளை ஒழிக்க வேண்டும் என்று சொன்னது தமிழகம் எங்கும் பெரிய சர்ச்சையையும் ஆதரவையும் பெற்றது. ஆனாலும் துப்பறியும் நிருபராக எந்த பெரிய காரியத்தையும் அவன் செய்யவில்லை.

சாமியார்களின் காம லீலைகளையும் பொய் வேஷங்களை எப்படி பொது மக்களை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள் என்பதையும் ஒரு வடநாட்டு சானல் வெட்ட வெளிச்சமாக காட்டியது. அதை செய்தது ஒரு பெண் நிருபர். ஆனால் அவளே அந்த காமிராவை தன் கழுத்தில் அணிந்திருந்ததால் அவள் முகம் சரியாக தெரியவில்லை. ஒரு பெண் இத்தனை துணிச்சலாக இத்தனை கடினமான அபாயகரமான விஷயத்தை செய்தது அவனுக்கு வியப்பாகவே இருந்தது.

ஓகே சீஃப் இவங்களை இப்பவே என் டீமில் எடுத்துக்கறேன். வாங்க ராதிகா நாம் நம் திட்டத்தை பற்றி விவாதிப்போம; என்று கூறி பாஸுக்கு நன்றி கூறி அவளை தன் அறைக்கு அழைத்துச் சென்றான்.

சக ஊழியர்கள் ராஜேஷுக்கு சரியான ஜோடிதானஎன்று காதுபட கமெண்ட் அடித்ததை அவன் ரசித்தான். அவளோ காதில் விழாததைப் போல அவன் பின்னால் நடந்து வந்தாள்.

தன் அறைக்குள் சென்றவுடன் அவளை அமரச்சொன்னான்.

ஒரு நிமிடம் அவள் அந்த அறையின் அழகை அளந்தாள். சுத்தமான அறை. இசை. சரியான அளவுக்கு வெளிச்சம். நல்ல மணம். புகைப்பிடிக்காதவரின் அறைக்குப்போனால் தான் அறையின் மணம் தெரியும். நோட்டீஸ் போர்ட் மட்டும் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். ஏகப்பட்ட போஸ்ட் இட்டுகள். எண்கள் பெயர்கள் தேதிகள் சின்னப்பறவைகள பொம்மைகள் என்று கிறுக்கல்களாக இருந்தது.

அவன் அவளை அளந்தக் கொணட்டிருந்தான். மெல்லிய குவிந்த உதடுகள். சாயம் தேவையில்லை. நிஜமாகவே சிவந்திருந்தது. ஒரு முறை மட்டுமே பார்த்துவிட்டு விட்டுவிடமுடியாத குர்குரே அவள். புத்திசாலி என்று முகத்தில் தெரிந்தது. இனிக்கும் விஷமோ என்று லேசான பயம் தொட்டுச் சென்றது.


ராதிகா உங்களுக்கு என்னோட திட்டத்தை விரிவாக சொல்றேன். கேட்டுட்டு உங்களோடு கருத்துக்களை சொல்லுங்க.

ம். என்றாள்

நான் ஒரு லிஸ்ட் தயார் செஞ்சிருக்கேன். அதில் எல்லா தமிழக மந்திரிகள் இருக்காங்க. அவங்களை பற்றிய சில விவரங்களை சேகரிச்சிருக்கேன்

அதுல நாலு பேரை தேர்ந்தெடுத்திருக்கேன். இந்த நாலு பேரோட வாழ்கை வரலாற்றை அவங்க செஞ்ச நல்லது கெட்டவைகளை குற்றங்களை நாடக வடிவிலே காண்பிக்கிறோம். ஆனா வேற பெயர்ல. யாரைப்பத்தி பேசறோம்னு யாருக்கும் தெரியாது. திங்கள் முதல் சனி வரை ப்ரைம் ஸ்லாட் 8.30 இருந்து 9.00 மணி வரை. ஞாயிறு நிகழ்ச்சியில நாம இதுவரை யாரைப்பத்தி பார்த்தோம்னு செல்லிட்டு இந்த அமைச்சரோட பேர் ஊர் புகைப்படங்கள் சொத்துப் பத்திரங்கள எப்ஐயார் கிரிமினல் ரிக்கார்ட்ன்னு எல்லாத்தையும் காட்றோம். இந்த தொடருக்குப் பேர் வெற்றிக்குப்பின் வெக்கங்கள். இதைப்பார்த்த 24 மணி நேரத்துக்குள்ள அவரு ராஜினாமா பண்ணிக்கனும் இல்லாட்டா தற்கொலை பண்ணிக்கனும். எப்படி இருக்கு ஐடியா? என்று அவளை ஆவலோடு எதிர்பார்த்தான்.

பிரில்லியண்ட் ஐடியா என்றாள் உற்சாகத்தோடு கை தட்டிக் கொண்டே.

அஹா இந்த உற்சாகத்தைத் தான் பெரியவர்கள் ஒவ்வொரு வெற்றிக்குப் பின் ஒரு பெண் இருக்கிறாள் என்று கூறுகிறார்கள்?

உடனே தான் சேகரித்து வைத்திருந்த அனைத்து விபரங்களையும் அவளுக்கு காண்பித்து விவரித்தான்.

9.30 மணியிலிருந்து 11.30 மணி அப்படி என்னத்தான் இருவரும் பேசிக் கொள்கிறார்கள். நந்தினிக்கு ஒரே பொறாமையாக இருந்தது. நானும் ஜர்னலிசம் படித்திருந்தால் ஆயுள் முழுக்க ராஜேஷின் செகரெட்டரியாக ஆகியிருப்பேன். அவனை நன்றாக கவனித்துக் கொணட்டிருப்பேன். வேளா வேளைக்கு ஜீஸ் கொடுப்பேன். இப்படி தேனீர் குடித்து வீணாக விடமாட்டேன் என்று பெருமூச்சு விட்டாள்.

நேராக அவன் அறைக்குச் சென்று லஞ்ச் என்று கேட்டுவிட்டு சரி என்று சொல்லிவிடமாட்டானா என்று ஏங்கித்தவித்தாள்.

இல்லை. இன்னிக்கு ராதிகாவோட போறேன். சில முக்கியமான விஷயங்கள் பேச வேண்டியதிற்கு. ராதிகா நீங்க ஃப்ரீ தானே? என்றான் ராதிகாவை நோக்கி. அவளும் ஆம் என்று தலை அசைத்தாள்.

போடா ஆணவ அரக்கா! நேற்று வந்தவளின் பெயரை இரண்டு முறை சொல்கிறாய் மூன்று வருடத்தில் வெறும் ஐந்து முறைதான் என் பெயரை உச்சரித்தாய்! வெகுண்டாள். ராதிகா நாளை தூக்கில் தொங்கினால் எப்படி இருக்கும் என்று மட்டமான எண்ணம் தோன்ற உடனே அதை அடக்கிக் கொண்டு சே நாம என்ன இப்படி பைத்தியமாய் ஆயிட்டோம் என்று தன்னைத்தானே கடிந்துக் கொண்டாள்.

அவன் மறுத்ததும் அவள் முகம் வாடியது. அதை அவன் காணத்தவறவில்லை.

அவள் தன் சீட்டுக்கு திரும்பி நடந்தாள்.

இந்த ஆம்பிள்ளைங்களை எப்பவும் அலைய விடனும். நாம அவங்க பின்னாடிப் போன நம்மை மதிக்கமாட்டாங்க. இனிமே அவன்கிட்ட பேசவே கூடாது. இது அவள் பல முறை எடுத்த சபதம். ஒரு முறை கூட காப்பாற்றியதில்லை. வண்டுக்கள் பார்க்காமல் பூக்கள் வாடிவிடும் அல்லவா? அதுபோல இவளும் அவனைப் பார்க்காவிட்டால் சோர்ந்துவிடுவாள். இத்தனைக்கும் அவன் இவளை காதலிக்கிறானா இல்லையா என்று இவளுக்குத் தெரியாது.

இன்னும் ஒன்றரை மணிநேரம் உள்ளே பேச்சு நடந்துக்கொண்டிருந்தது. பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்தே வெளியே வந்தனர்.

என்னடா மச்சான் வந்த அன்னிக்கே செட் பண்ணிட்டாயா என்று கண்களால் ரவி கேட்க. உதை என்று உதட்டை குவித்து சத்தம் இல்லாமல் பதில் அளித்தான்.

leomohan
29-09-2006, 09:43 PM
கடைசி பேட்டி மர்மத் தொடர் - 8 தொடர்ந்து நந்தினியை தாண்டி வெளியே செல்லும் முன் தன்னுடைய வேகத்தை குறைத்து ராதிகாவை முன்னே செல்லவிட்டு தான் கிறுக்கி வைத்திருந்த போஸ்ட் இட்டை அவள் பார்க்கும் போது அவளுடைய போன் போர்ட் மீது ஒட்டிவிட்டு லிப்டுக்குள் நுழைந்தான்.

அதை படித்ததும் அவளுக்கு தலைசுற்றியது.

இந்த ரோஜா வாடக்கூடாது


அதை கை நடுங்க எடுத்தாள். தன் முகம் வாடியிருந்ததை அவன் பார்த்திருக்கிறான். மெதுவாக அதை முத்தம் இட்டாள். டாய்லெட் ஓடிச்சென்று 100 முறை படித்தாள். அம்மாவுக்கு போன் செய்தாள்.

அம்மா இன்னிக்கு என்ன நடந்தது தெரியுமா? நான் ராஜேஷைலஞ்ச்சுக்கு கூப்பிட்டேன். அவன் வரமாட்டான்னு சொல்லிட்டு ராதிகாவோட போயிட்டான். நானும் டல்லா திரும்பி என் சீட்டுக்கு வந்துட்டேன். போகும் போது ஒரு போஸ்ட் இட்ல இந்த ரோஜா வாடக்கூடாதுன்னு எழுதி கொடுத்திட்டு போயிட்டாம்மா என்றாள் உற்சாகக்குரலில்.

என்னடா இது அவன் ஐ லவ் யூ சொன்ன மாதிரி குதிக்கிற என்றாள் தோழி போன்ற அம்மா.

இது போதும்மா எனக்கு. ஒரு நாள் அவனை சொல்ல வைக்கிறேன் என்றாள்.

ஆமாம். அவன் சொல்றதுக்குள்ள உனக்கு வயசு ஆயிடும்.

அம்மா ஓளவையாரா ஆனாலும் அவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று கூறி வைத்தாள்.

மீண்டும் மீண்டும் அந்த சீட்டிற்கு முத்தமிட்டாள். காதல் என்பது ஒரு வித மூளைக்கோளாறுதானோ?

லிப்ட்டில் செல்லும்போது அவன் கை ராதிகாவின் இடையில் பட்டுவிட்டது. ஸாரி என்று சொன்னான். பரவாயில்லை என்றாள் ராதிகா.

ராதிகா நாம செய்யறது ரொம்ப ரசசியமான ப்ராஜெக்ட். அதனால ஹோட்டல்ல எதுவும் பேசவேணாம்.

அதுக்கு எதுக்கு ஹோட்டலுக்கு போகனும் பேசாம ஏதாவது ஆர்டர் பண்ணி சாப்பிட்டிருக்கலாமே?

ஹோட்டலுக்கு போறது சாப்பிட மட்டும் இல்லை உங்களை பத்தி இன்னும் தெரிஞ்சிக்கத்தான் என்றான் அவன்.

leomohan
29-09-2006, 09:44 PM
கடைசி பேட்டி மர்மத் தொடர் - 9 9
அந்த மாதத்தின் சிறந்த ஊழியனாக ராஜேஷைதேர்ந்தெடுத்த செய்தியை அனைவருக்கும் இமெயிலில் அனுப்பியிருந்தனர்.

ரவி அந்த மெயிலலை படித்துவிட்ட ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். நானும் அவனும் ஒரே உயரம் தான். என்னை ஸ்மார்ட்டா இருக்கேன்னு நிறைய பேர் சொல்லியிருக்காங்க. ஆனா நானும் அவனும் பக்கத்தில் நின்றால் எல்லாரும் அவனைப் பத்தியே பெருமையா பேசறாங்க. அவன் முன் நான் அடிப்பட்டுப் போய்விடுகிறேன். நான் அவனை விட நல்ல நிறம் வேற. என்னக் குறைச்சல் என்னிடம்?

ரவி சூப்பர் டிவி சேர்ந்த கதை உங்களுக்கு சொல்லவேணாமா? கதைக்கு இவன் பெரிய முக்கியத்துவம் இல்லாத பாத்திரமாக இருந்தாலும் அவனிடத்திலும் ஒரு சுவாரஸ்யமான கதை ஒன்று இருக்கிறது.

அவன் சூப்பர் டிவியில் சேர்ந்த கதை. இதற்கு முன் ரெயின் டிவியில் இதைவிட நல்ல சம்பளத்தில் இன்னும் பெரிய நிலையில் வேலை செய்துக்கொண்டிருந்தான்.

வழக்கமாக போட்டி டிவியிலிருந்து யார் வந்தாலும் அவரை சேர்த்துக்கொள்ளமாட்டார் ராஜகோபால். இது ஒரு வித்தியாசமான பழக்கம். ஆனால் அவர் ஓன்ஸ் என் எம்ப்ளாயி ஆஃப் அ கம்பெனி ஹி இஸ் ஆல்வேஸ் தெர் எம்ப்ளாயி என்பார்.

ஆனால் இவனை சந்தித்து இவன் சோகக்கதையை கேட்டதும் இப்ப உங்க பொஸிஷனுக்கு இடம் இல்லை காமிராமேனுக்கு மட்டும் காலியிடம் இருக்கு பரவாயில்லையா? என்றார்.

ரொம்ப நன்றி சார் என்று கூறி அதை ஏற்றுக் கொண்டான். காமிரா மேனுக்கே உரிய தொப்பி ஜீன்ஸ் டைட் டீ ஷர்ட். கை எட்டும் தூரத்தில் காமிரா.

சேர்ந்த பிறகு வழக்கமான வேலையே செய்து வந்தான். ஒன்றும் சிறப்பாக செய்யாததால் இன்னும் காமிராமேனாகவே இருக்கிறான்.

இவனுடைய ரெயின் டிவி முதலாளி இவனுடைய முதல் தங்கைக்கு முழு கல்யாண செலவும் தருவதாக வாக்களித்திருந்தார். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை கல்யாணத்திற்கு 10 நாள் முன்பாக மறுத்துவிட்டார். அவர் தரும் 20 லட்சத்ததை நம்பி அமெரிக்காவில் மாப்பிள்ளை பார்த்து ஆடம்பரமாக நிச்சயதார்தம் நடத்தி ஏகப்பட்ட இடத்தில் கடன் வாங்கி வீட்டுப் பொருட்கள் நகைகள் துணிமணிவாங்கியிருந்தான்.

தங்கையும் மாப்பிள்ளையும் பல இடங்களுக்கு சேர்ந்து செல்வதை தடுக்கவில்லை. நிச்சயம் ஆன பிறகு வெளியே செல்வதில் என்ன தவறு?

நிச்சயமான திருமணம் காதலாக மாறியிருந்த நேரத்தில் இந்த அதிர்ச்சி. மாப்பிள்ளை வீட்டிடம் மிகவும் கெஞ்சினான். எப்படியாவது ஒரு வருடத்தில் அவர்கள் எதிர்பார்த்ததை செய்வதாகவும் அதனால் திருமணத்தை நிறத்த வேண்டாம் என்றும் கெஞ்சினான். ஆனால் அமெரிக்காவில் இருப்பவர்கள் எல்லாம் பக்குவம் அடைந்துவிடுவதில்லை. இளம் வயதில் டாக்டராக பட்டம் பெற்று பிறகு வரதட்சணை கொடுமை செய்து மனைவியை தள்ளி வைத்த படித்த மேதையும் அமெரிக்காவில் இருந்தவன் தான்.

குறிபிட்ட நாளில் திருமணம் ஆகாத அதிர்ச்சியில் தங்கையின் பேச்சு நின்றுவிட்டது. தினமும் காலையில் எழுந்து குளிப்பாள் உடை உடுத்திக் கொள்வாள். எதிரில் உணவு இருந்தால் சாப்பிடுவாள் தண்ணீர் இருந்தால் குடிப்பாள். எதிரில் ஒன்றும் இல்லையென்றால் பல மணி நேரம் கூட சாப்பிடாமல் தண்ணீர் குடிக்காமல் இருப்பாள்.

மூன்று மாதம் ஆகியும் இந்த நிலமை மாறாததால் டாக்டர்கள் அந்த மாப்பிள்ளைளை ஒரு முறை பார்த்தால் சரியாக வாய்ப்பிருக்கிறது என்று கூறினர்.

மாப்பிள்ளை பையினிடம் தனியாக பேசி மன்றாடி டிக்கெட் செலவை ஏற்றுக் கொண்டு படாதபாடுப்பட்டு அழைத்தான். அவனைப் பார்த்தும் கூட அவள் மீது எந்த மாற்றமும் இல்லை. வேறு வழியில்லை இனிமேல் திருமணம் அவனுடன் நடந்தால் அவள் நிலை மாறும் என்று கூறிவிட்டனர்.

பிறகு இது பொய் கல்யாணம் தான். மனிதாபிமான அடிப்படையில் நான் உதவி செய்கிறேன். எனக்கும் இந்த குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பத்திரம் எழுதி நான் முழ மனதுடன் சம்மதிக்கிறேன் என்று ரவியிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டுதான் அந்த அமெரிக்க மாப்பிள்ளை ஒரு போலி திருமணத்திற்கு ஒத்துக்கொண்டார்.

மண்டபம் அமைத்து நாதஸ்வரம் வைத்து நிஜ திருமணம் போல் பொய்யான ஒரு போலி மனோ மருத்துவ திருமணம் ஒன்று நடந்தேறியது.

இது எதுவும் அவளை பேச வைக்கவில்லை. அவள் கண்ணில் சலனமும் இல்லை. அழவும் இல்லை. சிரிக்கவும் இல்லை.

நடந்தது நடந்துவிட்டது இனிமேல் அவள் என் தலையெழுத்து என்று போலி மாப்பிள்ளைக்கு நன்றி கூறி அவனை வழியனுப்பி வைத்தான்.

அன்றிலிருந்து அவனுக்காகவே வாழ்கிறான். முதலாளி செய்த துரோகத்தை அவனால் தாங்க முடியவில்லை. இந்த அவமானத்துடன் அவன் அங்கு வேலை செய்யவும் முடியவில்லை. பல மாதங்கள் வேலையில்லாமல் இருந்த பிறகு ரெயின் டிவியை பழிவாங்குவதாக நினைத்து அதன் எதிரியான சூப்பர் டிவியில் வேலைக்கு சேர்ந்தான்.

அவன் அதிகம் பேசுவதும் பழகுவதும் ராஜேஷுடம் மட்டும் தான்.

அவனைப் பார்த்து இவன் அசராத நாள் இல்லை. சற்று பொறாமையும் படுவதுண்டு.

கங்கராஜுலேஷன்ஸ் மச்சான் என்று அவனுக்கு ஒரு மெயில் தட்டிவிட்டு புகைப்பிடிக்க வெளியே வந்தான். நந்தினியைப் பார்த்து ஒரு புன்னகை பதிலுக்கு அவள் நிஜமான ஒரு புன்னகை அளித்தாள். அவள் நிஜமான புன்னகை சில பேருக்கு மட்டுமே. ரவி ராஜேஷின் நண்பன் என்பதால் அவனுக்கு இந்த பாக்கியம் உண்டு.

சிகெரெட்டை எடுத்து பெட்டியின் மேல் தட்டி புகையிலையை நன்றாக கீழே இறக்கி வெற்று இடத்தை முதலில் கொளுத்திவிட்டு மீண்டும் தடித்த அந்த புகையிலையை பற்றவைத்து நன்றாக இழுத்தான். வானம் நோக்கி புகையை விட்டான்.

ஒருவர் புகையை எப்படி விடுகிறார் என்பதை வைத்து அவருடைய குணத்தை கூறலாம் என்று எப்போதோ படித்த புத்தகம் ஞாபகத்திற்கு வருகிறது.


புகைப்பிடித்துவிட்டு நேராக புகைவிட்டால் அவர் நம்பிக்கையானவர் என்றும் தலையை குனிந்து புகைவிட்டால் தன்னம்பிக்கை குறைவானர் என்றும் மேலே பார்த்து புகைவிட்டால் ஒரு ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார் என்றும் கூறுவர். இவன் மேலே பார்த்து புகைவிட்டுக் கொண்டிருந்தான்.

leomohan
29-09-2006, 09:44 PM
கடைசி பேட்டி மர்மத் தொடர் - 10 10
8.30 மணிக்கு வீடு சென்றவன் மேசையின் மேல் உள்ள காகிதத்தில் 2 என்று எழுதிவிட்டு குளியலறைக்குச் சென்றான்.

குளியலறையையும் ரசித்துக் கட்டியிருந்தான். பெரிய அறை. ஒரு புறம் பெரிய கண்ணாடி. சின்ன டேபிள். அதன் மேல் சில புத்தகங்கள். நடிகை சோனாலி பிந்த்ரேயின் கவர்ச்சி போஸ்டர். காலடிகள். பெரிய டப். நீல வண்ண டைல்ஸ் ஒரு கடல் போல தோற்றத்தை அளித்து. வெள்ளை டப் மற்றும் வசதி சாதனங்கள் விலை உயர்ந்த பீங்கானில். சிறிய தொங்கும் பெட்டியில் பல வகையான சோப்புச்சீப்க்கண்ணாடிகள். வாசனை திரவங்கள்.

ஒரு டேப்ரிக்கார்டர். ஒரு போன். இரண்டுக்கும் பாலிதீன் உறை போட்டிருந்தான் நீர் படாமல் இருக்க. ஸ்டிவீ வான்டர் ஃபார் த சிடி பாட்டு போய்கொண்டிருந்தது.

டப்பை அதிவேகத்தில் தண்ணீர் நிரப்ப ஒரு சிறிய மோட்டர். அதை தொடக்கிவிட்டு உடலையும் மனதையும் அமைதிப்படுத்த ஒரு மூலிகை திரவத்தை டப்பில் ஊற்றினான். அது வேகமாக பாய்ந்து தண்ணீரில் பட்ட உடன் நுரை கொடுத்தது. இரண்டு நிமிடங்களில் 100 லிட்டர் டப் நிறைந்தது. தண்ணீர் தட்டுப்படவில்லை வெறும் நுரைதான். ஜாக்கி உள்ளாடைகளை களைந்துவிட்டு குழந்தையாய் அந்த நுரைக்குள் புகுந்தான். மென் ஆர் ஃபரம் மார்ஸ் விமென் ஆர் ஃபரம் வீனஸ் புத்தத்தை இடக்கை பக்க சிறிய பெட்கத்திலிருந்து எடுத்து 31ம் பக்கத்திலிருந்து படிக்கத்துவங்கினான். நந்தினி வந்துவிட்டுப் போனதால் இந்த புத்தகம் தேவைப்பட்டது. இப்போது ராதிகாவை புரிந்துக் கொள்ள படிக்கத் துவங்கினான்.

ஒரு இருபது நிமிடம் இருந்திருப்பான் போன் ஒலித்தது. பல மணி நேரம் டப்பில் உட்கார்ந்திருப்பது வழக்கம். பல புத்தங்களை டப்பிலிருந்தே படித்து முடித்திடுவான்.

குளியலறை அழகாக இருந்தால் எல்லேரும் அதில் தான் அதிக நேரம் செலவிடுவார்கள். ஆனால் மனிதனோ குளியலறையை சின்னதாக கட்டி அதன் முக்கியத்துவத்தை இழக்கடித்து விடுகிறான். ஆனால் ராஜேஷ்அந்த முட்டாள்களில் ஒருவர் இல்லை. ஹால் வந்தவர்களை சந்திப்பதற்கு மட்டும். படுக்கை அறை தூங்க மட்டும். படிக்கும் அறை படிக்க மட்டும். சாமியறை கடவுளை வேண்ட மட்டும். ஆனால் குளியலறை மற்ற எல்லாவற்றிற்கும். மன அமைதியில்லாமல் இருந்தாலோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாலோ இல்லை மனதை சந்தோஷப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றாலோ குளியலறைதான்.

எழுந்தவுடன் ஒரு அழகான அமைதியான முகத்தை பார்க்கவே விரும்புவான். சில வருடம் முன்பு வரை திப்தி பட்நாகர். தற்போது சோனாலி. தற்போது என்ன பல வருடங்களாகவே அவள்தான். அவளுக்கு பிறகு ஒரு அழகியே அவன் பார்க்கவில்லை என்று ஒரு நினைப்பு அவனுக்கு.

பல முறை போன் ஒலித்ததும் எடுத்து யா என்றான். ராதிகா மறுபுறம் பதட்டமாக பேசினாள்.

ராஜேஷ்ராஜேஷ்இன்னிக்கு அந்த இரண்டாவது அமைச்சரை தொடர்ந்து போனேன் இல்லையா?

பரவாயில்லையே முதல் நாளே பொறுப்பாக வேலையை ஆரம்பித்துவிட்டாளே!

சரி என்னாச்சு?

இங்கே ஒரு பிரச்சனை. அவசரமா ஆல்வார்பேட்டையில வீனஸ் காலனிகிட்ட அவசியம் வாங்க என்றாள்.

ஏன் என்னாச்ச?

நான் அதிகம் பேசமுடியாது. சீக்கிரம் வாங்க அமைச்சர் வீட்டுக்கு என்றாள்.

டப்பிலிருந்த வெளிப்பட்டு உடம்பு குளிர பிறந்த மேனியா வார்ட்ரோப்புக்கு ஓடி அவசரமாக கிடைத்த க்ரோக்கடைல்களைப் போட்டுக்கொண்டு குளிர் அதிகமாக இருக்கிறதே என்று ஒரு ஜாக்கெட்டையும் க்ளவுசுகளையும் எடுத்துக் கொண்டு ஹெல்மெட்டை குழந்தை போல தூக்கிக் கொண்டு வெளியே ஓடினான்.

ஓடும் முன் 2 அவன் கண்ணிற்கு பட்டது.

இன்னிக்கென்ன இரண்டு என்று யோசித்துக் கொண்டே சென்றான்.

கோடம்பாக்கம் பிரிட்ஜ் கடக்கும்போது மேரேஜஸ் ஆர் மேட் இன் ஹெவென். மேரேஜ் கார்ட்ஸ் ஆர் பிரின்டட் இன் மேனகா என்று பிரிண்டிங் பிரஸ்ஸின் பெரிய எழுத்துக்களை படித்துக் கொண்டே சென்றான். எனக்கு கல்யாண வயது வந்துவிட்டதா என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்.
நுங்கம்பாக்கம ஹைரோடை பிடித்து ஜெமினி பாலம் கீழே அமெரிக்கன் கன்ஸ்லேட்டை கடந்து வலப்புறம் திரும்பி நிமிடங்களில் வீனஸ் காலணி வந்தடைந்தான்.

அங்கு ஒரு மரத்தின் கீழ் ராதிகா நின்றிருந்தாள். மிகவும் பதட்டத்துடன் காணப்பட்டாள்.

ராஜேஷ்ராஜேஷ்அமைச்சர் கரிகால வளவனை யாரோ கொன்னுட்டாங்க என்றாள்.

என்ன என்று கேட்கும் போதே ஒரு காவல் வாகனம் விரைந்து அவனை நோக்கி வந்தது.

இவளை எந்த பிரச்சனையிலும் மாட்டிக் கொள்ள விடக்கூடாது என்று நினைத்து ராதிகா நீ இங்க இருந்து உடனே போயிடு. ஆபிஸ்ல யாருகிட்டையம் எதுவும் சொல்லாதே. போயிடு. போயிடு என்று அவசரப்படுத்தினான். அவளும் என்ன ஏது என்று புரியாமல் பக்கத்திலிருந்த மரத்தின் பின் சென்று ஒளிந்துக் கொண்டாள்.

வந்த போலீஸ் வண்டி அவன் முன் வந்து நின்றது.

நீங்க யாரு? என்று கேட்டார் விக்ரமன்.

சார். குட் ஈவ்னிங். என் பேர் ராஜேஷ் நான் சூப்பர் டிவியில சீஃப் ரிப்போர்டர் என்றான்.

ஸாரி ராஜேஷ்இட்ஸ் பேட் ஈவ்னிங் ஃபார் யூ. குற்றம் நடந்த இடத்தக்கு அருகாமையில் இருக்கீங்க. அமைச்சர் சில நிமிடங்களுக்கு முன் கொல்லப்பட்டிருக்காரு. அவர் பாடிக்கு பக்கத்தில உங்க ஐடென்டிடி கார்ட். வீட்டுக்கு 20 அடி கிட்ட நீங்க. கையில க்ளவுஸ். உங்களை சந்தேகத்தின் பெயரில் கைதி பண்றோம்.

வாட் நான்சென்ஸ் இன்ஸ்பெக்டர். நான் இன்னொஸென்ட்.

எதுக்காக இந்த நேரத்தில இங்க வந்தீங்க?

இந்த கேள்விக்கு அவன் தயாராக இல்லை. ராதிகா அழைத்து இங்கு வந்ததாக சொல்ல விரும்பவில்லை. அந்தப் பிராஜெக்ட் பற்றி யாருக்கும் தெரியக்கூடாது.

மௌனமாக இருந்தான். பிறகு சரி சார் என் பைக்கை யாராவது ஓட்டி வரட்டும் நான் உங்க கூட ஜீப்பில் வரேன் என்றான.

உங்க க்ளவுஸ்?

கொடுத்தான். அதை ஒரு பாலிதீன் ரேப்பரில் வாங்கிக் கொண்டார். இதெல்லாம் ரொம்ப ஓவர் என்று நினைத்தான்.

உங்க மொபைல் ப்ளீஸ்?

மொபைலை அணைத்துவிட்டு கொடுத்தான்.

வண்டியை கான்ஸ்டபிள் ஸ்ரீரங்கம் வாங்கிக் கொண்டார். ஹெல்மெட் போட்டுட்டு போங்க சார். காவலே சட்டத்தை மதிக்கலைன்னு கிண்டல் பண்ணப்போறாங்க அவன் நகைச்சுவையாய் பேசி சகஜ நிலைக்கு வர நினைத்தான். உள்ளுக்குள் ஆயிரம் கேள்விகள்.

கான்ஸ்டபிள் சிரித்தார். விக்ரமன் சிரிக்கவில்லை. இந்த நகைச்சுவையையும் அவர் ரசிக்கவில்லை.

இரண்டாவது அமைச்சர் கொலை. அதுவும் முதல் அமைச்சர் கொல்லப்பட்ட ஒரே வாரத்தில். முதல்வர் கொடுத்த கெடு என்றோ முடிந்துவிட்டது. எந்த தடயமும் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் யாருடைய ஜோக்கையும் கேட்க அவர் தயாராக இல்லை. குறிப்பாக கொலையாளி என்று கைதி செய்த ஒருவனிடமிருந்து. நோ வே!

வண்டி நேராக பீச்ரோடில் இருக்கும் கமிஷ்னரின் ஆபீஸை நோக்கிச்சென்றது.

மரத்தின் பின் ஒளிந்திருந்த ராதிகா அதிர்ந்து போயிருந்தாள். பாஸிடம் சொல்லலாமா வேண்டாமா என்று குழப்பம். சொல்ல வேண்டாம் என்று ராஜேஷ் சொல்லி விட்டானே என்று நினைப்பு. வேலைக்குச் சேர்ந்த இரண்டாவது நாளே இப்படியா என்ற அதிர்ச்சி. மெதுவாக வண்டி ஓட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்றாள்.

leomohan
29-09-2006, 09:45 PM
கடைசி பேட்டி மர்மத் தொடர் - 11 11
இன்று சக்களத்தியை விடக்கூடாது நானே அவனோடு லஞ்சுக்கு போவேன் என்று நினைத்துக் கொண்டே ஆபீஸ்சுக்கு வந்தாள். வழக்கமாக நிறுத்தும் இடத்தில் அவன் வண்டியில்லை. ஆனாலும் பரவாயில்லை எப்போதாவது தான் அவளுக்கு முன்னால் வருவான். பாவம் செல்லம் ராத்திரி முழுக்க வேலை செஞ்சிருக்கும் என்று குழந்தையைப் போல தனக்குத்தானே பேசிக்கொண்டாள். தலை குளித்த ஈரமாக இருந்த கூந்தல். பெண்கள் தலை குளித்தாலே ஒரு அழகுதான். அதுவும் நன்றாக துடைத்த பிறகும் விட்டுப் போன சில நீர் துளிகள் சாவகாசமாய் நெற்றியில் கொட்டும் அழகு இன்று நந்தினியை இன்னும் அழகானவளாக காட்டியது.

சந்தோஷமாக உள்ளே நுழைந்தாள். தன் சீட்டுக்கு பாடிக்கொண்டே சென்றாள். வந்ததும் முதல் வேலையாக வாய்ஸ் மெயிலை நிறுத்திவிடுவாள். பிறகு ஏதாவது வாய்ஸ் மெயில் இருக்கிறதா என்று பார்ப்பாள். பிறகு ஈமெயில் பார்த்துவிட்டு காபி குடிக்கச் செல்வாள். ராமுவை கூப்பிடுவது இல்லை. நேராக கான்டீனுக்குச் சென்று அவளாகவே காபி போட்டுக் குடிப்பாள். வேண்டும் என்றே ராஜேஷின் கப்பில் கலந்து குடிப்பாள்.

மேடம் அது ராஜேஷ் சாரோடது என்று பதட்டப்படுவான் ராமு.

சரி சரி தெரியாம எடுத்துட்டேன் அவர்கிட்ட சொல்லிடாதே என்று விட்டு மறுபடியும் மறுபடியும் அந்த தப்பையே செய்வாள்.

அவளாகவே காப்பி போட வேறு ஒரு காரணம் இருக்கிறது. அப்போது தானே உள்ளே வந்து அவளுடைய ஆளின் காபினை கடந்து கான்டீனுக்குச் செல்ல முடியும்.

இன்று கான்டீனில் சக்களத்தி எதிர்பட்டாள். முதல் நாளில் இருந்த பந்தா இல்லை. கரும் பச்சை நிற சுடிதார் சாதாரண செருப்பு. வந்துவிட்டாயா தரைக்கு என்று நினைத்துக் கொண்டாள். இல்லை நீ விட்ட ஜொள்ளை என் ஆள் நேற்று லஞ்ச் நேரத்தில் கண்டுக் கொள்ளவில்லையா?

ஹாய் எப்படி இருக்கீங்க ராதிகா? நீ எப்படி இருந்தா எனக்கென்ன. மனக்குரல்.

நல்லா இருக்கேன். நீங்க?

நான் நல்லா இருக்கேன். ஏன் நீங்க டல்லா இருக்கீங்க? சரியா
தூங்கலையா நேத்து?

இல்லையே நல்லா தூங்கினேன். ஆனா காலையிலிருந்து ஏதோ தலைவலி.

தலைவலி எல்லாருக்குமே. குறிப்பா திருவிக்ரமனுக்கு.

யார் திருவிக்ரமன்?

என்ன ராதிகா ஜர்னலிஸ்டா இருக்கீங்க ஒரு ரிசப்ஷனிஸ்டப் போய் கேட்கறீங்களே! அமைச்சர் கொலை வழக்கை அவர்தான் ஹாண்டல் பண்றார். இன்னோரு அமைச்சரை கொன்னுட்டாங்க. அப்ப அவருக்குத்தலைவலி தானே.

சங்கடமாய் சிரித்துவிட்டு அங்கிருந்து அவசரமாய் நகன்றாள்.

9.45 இன்னும் வரவில்லை என் ஹீரோ. இங்கே ஒருத்தி காத்திருக்கேன்னு ஏதாவது பொறுப்பிருக்கா அவனுக்கு? கல்யாணத்திற்கு அப்புறம் ஒரு நிமிஷம் லேட்டா வந்தாலும் பட்டினி போடவேண்டியது தான். செல்லமாக கடிந்துக் கொண்டாள்.

இது காதலின் உச்சம். வெறும் காமத்தின் ஏக்கம் இல்லை. மூன்று வருடங்களாக அவனை தூரத்திலிருந்து ரசித்த பொறுமை. அவன் நன்றாக இருக்க வேண்டும் என்ற கரிசனம். அவனுக்காக எதையும் செய்யும் தியாகம். அவனுடன் வாழ் நாளை கழிக்க வேண்டும் என்ற மோகம். அவன் பிள்ளைகள் பெற்று அவனுடன் சேர்ந்து அவர்களை வளர்த்து பிறகு அவனுடன் வயது முதிர்ந்து பிறகு மறுபிறப்பிலும் அவனுடன் வாழு வேண்டி கனவு.

அமெரிக்கா வாசம் அவளை எள்ளளவும் மாற்றவில்லை. அமெரிக்காவில் இது போன்று ஒரு ஆண்மகனை கண்டதில்லை. ஆபிஸில் அவளுக்கு கடலை போடாதவர் யாரும் இல்லை. ஆனாலும் இன்று வரை அவன் இவளை ஏறெடுத்துப் பார்த்ததில்லை. இவளுடைய லோகட் அங்கிகள் அந்த ஆஞ்சனேய பக்தனை இம்மி அளவும் அசைக்கவில்லை. அமெரிக்காவில் டேட்டுக்குச் சென்ற ஐந்தாவது நிமிடம் இடையில் கை போட்டவரை பார்திருக்கிறாள். இங்கோ அவன் ம் என்று சொன்னாள் அனைத்தையும் தர இவள் தயார். விநோதமான மனம். விநோதமான பெண் நந்தினி.

10.30 இன்னும் வரவில்லை என் நாய்குட்டி. எங்கேடா போயிட்ட? நல்லா தூங்கிகிட்டு இருக்கியாடா? இரு உன்னை எழுப்புறேன்.

மறுபுறம் இன்டெர்காம் ஒலித்தது. பாஸ் தான். என்ன நந்தினி இன்னும் ராஜ் வரவில்லை. மொபைல் ஆஃப் ஆயிருக்கு வீட்டு நம்பர் அடிச்சிகிட்டே இருக்கு? அக்பரைவிட்டு அவர் வீட்டுக் போய் பார்த்திட்டு வரச்சொல்லுங்க.

சார் எனக்கு வெளியே சின்ன வேலை இருக்கு. நானே போய் பார்த்துட்டு வரட்டுமா?

உங்களுக்கு எதுக்கு சிரமம் நந்தினி?

இல்லை சார். சிரமம் இல்லை. நானே போறேன் என்றுவிட்டு பறந்தாள்.

ஆக்டிவாவை மாற்ற வேண்டும். என் சக்களத்தி வெச்சிருக்கிற வண்டி மாதிரி நான் ஏன் வெச்சிக்கனும்?

ஒரு புறம் இன்பமாக இருந்தது. மறுபுறும் கலக்கம். உடம்பு சரியில்லையோ? அப்படி இருந்தாலும் போன் ஆஃப் ஆயிருக்காதே? வீட்டு நம்பர் அடித்தால் ரங்கன் எடுத்திருப்பானே? தலையிலிருந்த கட்டு எடுக்கப்பட்டிருந்தாலும் பாண்ட் எய்ட் போட்டிருந்தான். சிறது முன் முடியும் வழிக்கப்பட்டிருந்தது அவனுக்கு. ஆனால் வெளி அழகை மட்டும் பார்த்து மயங்கியவளில்லை இவள். அவன் உயிரோடு கலந்துவிட்டவள்.

அவன் வீட்டிற்கு முன் போலீஸ் நின்றிருந்தது.

யார் நீங்க?

நான் அவரோட வேலை செய்யறேன்? என்ன பிரச்சனை கான்ஸ்டபிள்?

அவரை அரஸ்ட் பண்ணியிருக்கோம். இப்ப கமிஷனர் ஆபீஸ்ல இருக்காரு. நீங்க வேணா அங்க போய் பாருங்க.

என்ன? அதிர்ந்து போனாள். என் செல்லம் எந்த தப்புத்தண்டாவுக்கும் போகாதே.

ரங்கன் பதட்டமாக நின்றிருந்தான். அம்மா அம்மா தம்பியை பாக்கனும். நீங்க அவரை வெளிய எடுங்கம்மா என்று கெஞ்சினான்.
பயந்தவன் அருகே இன்னோரு பயந்தவன் இருந்தால் முதல் பயந்தவன் தைரியசாலி ஆகிவிடுவான் அல்லவா? இவள் அவனுக்கு ஆறுதல் சொன்னாள்.

ஒன்னும் பயப்படாதீங்க வாங்கப் போகலாம் என்று அவனை வண்டியின் பின்புறம் உட்காரவைத்துவிட்டு வண்டியை துவக்கினாள்.
ராதாகிருஷ்ணன் சாலையில் நின்றிருந்தபோது ரங்கன் விம்மி அழும் சத்தம் கேட்டது. என்னைவிட ராஜேஷை விரும்பவன் யாரென்று திரும்பி ரங்கனைப்பார்த்தாள். அவன் வண்டிவிட்டு இறங்கி என்னை மன்னிசிடுங்கம்மா என்று ரோட்டிலேயே சாஷ்டாங்கமாக கீழே விழுந்தான்.

என்னாச்சு அண்ணே எந்திரிங்க ரோடு இது. சிக்னல் விழுந்தா ட்ராபிக் ஜாம் ஆயிடும் வாங்க என்னாவாக இருந்தாலும் அந்த டீக்கடையில போய் பேசிக்கலாம் என்று வண்டியை ஒரம் கட்டினாள்.

அவளை பின் தொடர்ந்து வந்த காவல் இந்த குழப்பத்தில் அவள் எங்கு போனாள் என்று தெரியாமல் கமிஷ்னர் ஆபிஸை நோக்கிப் போனது.

leomohan
29-09-2006, 09:46 PM
கடைசி பேட்டி மர்மத் தொடர் - 12 12
மீடியாவில் இருப்பதால் அவனை மரியாதையாகவே நடத்தினர் போலீஸார்.

அவனுக்கு தேனீர் கொடுத்துவிட்டு இரண்டு இட்லியும் கொடுத்தனர். பிறகு ஒரு தனியறைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கே உயர் அதிகாரிகள் மூன்று பேர் இருந்தனர். காவலும் இன்று கார்ப்ரேட் லுக்கில் தான் இருக்கிறது என்று நினைத்தான் ராஜேஷ்.

பெரிய கான்பரென்ஸ் ரூம். ப்ரொஜெக்டர். மைக் ஸ்டீரியோ வெள்ளை போர்ட் ஃபிலிப் சார்ட் வீடியோ என்று கலக்கியது காவல்.

சொல்லுங்க ராஜேஷ் எதுக்கு அமைச்சர் நீலவாணனை கொன்னீங்க?

என்ன சார் சொல்றீங்க? அமைச்சர் கரிகாலவளவனை கொன்னதாக தானே சொல்லி அரெஸ்ட் பண்ணீங்க?

ஆமா சார். இந்த ரெண்டு கொலையையும் நீங்கத்தான் பண்ணியிருக்கீங்கன்னு சொல்றோம்?

வாட்? அவங்களை கொல்றதுக்கு எனக்கு எந்த நோக்கம் இருக்கு?

நீங்க ஒரு ரிபெல். புரட்சியாளர்.

என்ன?

ஆமா.

சார் நான் ஒரு டிவி சானல் நிருபர் சார். நல்லா சம்பாதிக்கிறேன். நல்லா வாழ்ந்துகிட்டு இருக்கேன். யாராலையும் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.

விக்ரமன் வீடியோவை ஆன் செய்தார். அதில் அவனுடைய பிரபல நிகழ்ச்சி பதிவாகி இருந்தது

முகம் சிவக்க பேசிக் கொண்டிருந்தான் ராஜேஷ் அந்த நிகழ்ச்சியில்

முன்பு ஒரு அரசியல்வாதி ஏழ்மையை ஒழிக்கிறேன்னு ஊர்ல இருக்கிற ஏழைங்களை ஒழிச்சிகிட்டு இருந்தாரு. ஆனா ஏழைங்க ஒழியறதால ஏழ்மை ஒழியாது. ஆனால் குற்றங்களை ஒழிக்கனும்னா குற்றவாளிகளை ஒழிச்சுத்தான் ஆகனும். குற்றவாளிகளை ஒழிக்க என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறேன். இந்த சமுதாயத்தில வளர்ந்துகிட்டு இருக்கிற அரசியல் குற்றவாளி எனும் கரப்பான் பூச்சிகளை ஒழிக்கும் ஹிட் மருந்தாக நான் இருப்பேன்

இதுக்கு என்ன சொல்றீங்க?

சார் இது டிவி ப்ரோக்ராம். உங்களுக்கு தெரியாதது இல்லை. கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு பேசினாத்தான் ஜனங்களுக்கு மெஸெஜ் போய் சேரும். அதுக்காக எல்லா அரசியல்வாதிகளையும் நான் போய் கொன்னுகிட்டு இருக்க முடியுமா?

சரி. இந்த கிளிப்பை பாருங்க.

ஹாஸ்பிட்டலில் இன்ஸ்பெக்டர் கேள்வி கேட்டபோது பின்னால் இருந்து ராஜகோபால் வாய் அசைத்ததையும் அதை பார்த்து ராஜேஷ் பதில் சொன்னதையும் அதில் பதிவாகியிருந்தது.

வலையில் மாட்டிக்கிட்டே மாப்பிள்ளை என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.

சார் நாங்க மினிஸ்டர்ஸ் மேல ஒரு ப்ராஜெக்ட் பண்றோம். அதுக்காகத்தான் அந்த லிஸ்ட் தயார் பண்ணோம். அதில் நாலு பேரை முக்கியமா தேர்ந்தெடுத்து வெச்சிருந்தோம். அதில ஒத்தர் கொலைசெய்யப்பட்டிருக்காரு. என் கிட்ட அந்த லிஸ்ட் உங்ககிட்ட மாட்டிகிச்சு. கொலைப்பழியில நான் மாட்டக்கூடாதுங்கறதுக்காக அப்படி சொல்லச்சொன்னாரு. அது பொய்தான். ஆனா இந்த கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

சரி. நம்பறோம். இந்த கிளிப்பை பாருங்க.

தூக்க கலக்கம். அதில் ஒன்று மாற்றி ஒரு கேள்வி வேறு. வக்கீலை கூப்பிட முடியும். ராஜகோபாலிடம் சொன்னால் சில நொடிகளில் சுதந்திர காற்றை வீச முடியும். இதைச் செய்ய விரும்பாமல் போலீஸின் ஆட்டத்திற்கு ஆடிக்கொண்டிருந்தான்.

அடுத்த க்ளிப் எதுவாக இருக்கும் என்று கணிக்க முயன்றான். மூளை வேலை செய்ய வில்லை.

மூன்றாவது க்ளிப்பும் ஆஸ்பத்திரி க்ளிப் தான். இந்த முறை அவன் அமைச்சர் எழுதிய போஸ்ட் இட்டை அவசரமாக எடுத்து உள்ளே வைத்தது பதிவாகியிருந்தது.

அது என்ன சிலிப் ராஜேஷ்?

மௌனமாக இருந்தான். யோசித்தான். அந்த சிலிப் என் டிராவில் பத்திரமாக இருக்கும். இந்த காமிராவை எவ்வளவு ஜும் செய்தாலும் அதில் இருப்பதை படிக்க இவர்களால் முடியாது. புளுக வேண்டியதுதான்.

பாக்கெட்ல ஏதோ உறுத்திற மாதிரி இருந்தது. அதான் எடுத்துப்பார்த்தேன். ஏதோ பேப்பர். பெட்ரோல் பில்லாக கூட இருக்கலாம். தொழில் பொய். சொந்த வாழ்கையில் பொய் சொல்ல அவசியம் ஏற்படவில்லை. ஆனால் செய்யும் தொழிலிக்கு இது அவசியம்.

ராஜேஷ் அதெப்படி கூசாம பொய் சொல்றீங்க? உங்ககிட்ட இருந்த சிலிப் இதுவான்னு பாருங்க?

தமிழக போலீஸின் திறமைக்கு ஒரு சல்யூட்.

மௌனமாக அவர்களைப் பார்த்தான்.

இதுக்கென்ன அர்த்தம்?

நீங்க தான் சொல்லனும். 11.00 மணிக்கு அன்னிக்கு ஆபிஸ்சிலிருந்து வீட்டுக்கு போனேன். அன்னிக்கு தோணின ஐடியா. அன்னிக்கித்தான் 4 பேரை தேர்ந்தெடுத்தேன். அன்னிக்கு வீட்டுக்குப் போனா இந்த சிலிப் இருக்கு. இதெப்படி சாத்தியம்னு நீங்களே சொல்லுங்க!

அப்படின்னா இந்த சிலிப் வீட்ல எப்படி வந்துதுன்னு உங்களுக்கு தெரியாதுன்னு சொல்றீங்க இல்லையா?

ஆமாம் சார்.

இந்த சிலிப் வந்ததும் எங்க போனீங்க? அமைச்சரைப் பார்க்வா?

இல்லை சார்.

வேறே?

ராஜகோபாலையும் அவன் இழுக்க விரும்பவில்லை. ஆனால் வேறு வழியில்லை.

எங்க சீஃப் ராஜகோபாலை சாந்தோம் பீச்சில் பார்க்கப் போனேன்.

ஏன் சார் இவ்வளவு பெரிய ஆபீஸ்சு இருக்கு. உங்க வீடு இருக்கு. அவர் வீடு இருக்கு? இதெல்லாம் விட்டுட்டு ஏன் சாந்தோம் பீச்சுக்குப் போனீங்க?

சார் இது ஒரு சீக்ரெட் ப்ராஜெக்ட்.

ராஜேஷ் உங்களை அரெஸ்ட் பண்ணியிருக்கோம். உங்களுக்கு எதிரா பல தடயங்கள் இருக்கு. உங்க உயிரே ஊசலாடிகிட்டு இருக்கு இந்த நேரத்திலும் அந்த ரகசியத்தை நீங்க சொல்ல விரும்பலையின்னா அது கொலைகள் சம்பந்தப்பட்டதுன்னு எங்களுக்கு சந்தேகமா இருக்கு?

சார். அதுக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது டிவி சானல் சம்பந்தப்பட்ட ரகசியம். அதை சொல்ல விரும்பவில்லை நான். நான் கொலை செய்யலை. உங்க திறமை மேல எனக்கு நல்ல நம்பிக்கை இருக்கு. நீங்க நிச்சயம் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிச்சிடுவீங்க. அதனால என் உயிர் ஒன்னும் ஊசலாடலை.

முதன் முறையாக புன்னகைத்தான்.

நீங்க ஒரு சைக்கோவா?

வாட் அ ரிடிகுலஸ் கொஸ்டின் இஸ் திஸ்? என்று கேட்டான் காட்டமாக.

விக்ரமன் இன்னொரு வீடியோ க்ளிப்பை ஓட்டினார். அதில் அவன் வீட்டி சுவற்றிலிருந்த நோட்டிஸ் போர்ட் முழுவதும் இருந்த போஸ்ட் இட்டுகள் மேசையின் மேல் இருந்த போஸ்ட் இட்டுகள் என்று அனைத்தையும் படம் பிடித்திருந்தனர்.

இந்த நம்பர்களுக்கு என்ன அர்த்தம்?

தெரியாது?

தெரியாதுன்னா?

சின்ன வயசிலிருந்தே இந்த நம்பர் எழுதற பழக்கம் இருக்கு.
அப்படின்னா இந்த நாலு பேரை தேர்ந்தெடுத்த அன்னிக்கும் இந்த மாதிரி நம்பர் எழுதி போஸ்ட் இட்டில் ஒட்டினீங்களா?
பொய் சொல்ல அவன் விரும்பவில்லை. ஏன் இந்த பழக்கம் தன்னிடம் வந்தது என்று முதன் முறையாக வருத்தப்பட்டான். எந்த சூழ்நிலையிலும் ஒரே மாதிரி யாராவது வாழ்ந்தால் அவரை சுலபமாக கண்டு பிடித்துவிட முடியும். ஒருவன் 6 மணிக்கு தூங்கியெழுந்து 8 மணிக்கு சாப்பிட்டு 9 மணிக்கு அலுவலகம் சென்று.. என்று வாழ்ந்தால் அவனை எந்த கூட்டத்திலும் கண்டு பிடிக்க முடியும். இது ஒரு இயந்திர வாழ்க்கை.

ஆமா சார். அன்னிக்கும் 4 என்று எழுதினேன்.

இந்த அமைச்சர் எழுதின மாதிரி சிலிப்பையும் நீங்களே எழுதினீங்களா?

சார் நீங்க அனாவசியமா என்னை மாட்ட வைக்க பார்கறீங்க. உண்மை குற்றவாளி வெளியே இருக்கான். அவனைப் போய் தேடுங்க.

நிறுத்துங்க. நாங்க என்ன பண்ண வேனும்னு நீங்கள் சொல்லத் தேவையில்லை.

இதே வரிகளை இந்த காகிதத்தில் எழுதுங்க என்று இன்னொரு போஸ்ட் இட்டும் அதே மாதிரி ஒரு பேனாவும் கொடுத்தார்.
பொறுமையாக அதை எழுதினான்.

இதை கையெழத்து கண்டுபிடிக்கிற டீமுக்கு அனுப்புங்க என்று சொல்லி விட்டு ராஜேஷின் பக்கம் திரும்பினார் விக்ரமன்.
கடைசியா எப்ப உங்ககிட்ட ஐ கார்ட் இருந்தது?

சார் எங்க கம்பெனி ஐ கார்ட் வெறும் ஐ கார்ட் மட்டும் இல்லை இதை நாங்க அட்டெண்ட்ஸ்சுக்காகவும் பயன் படுத்தறோம். கடைசியா நேத்து சாய்காலம் ரீடர்ல என் என்ட்ரி பதிவாகி இருக்கும். அதுக்கு அப்புறம் தான் இது தொலைஞ்சி போயிருக்கனும்.

நல்லா இருக்கு கதை. இது உங்க கார்டான்னு பாருங்க?

ஆமாம் சார். இது என்னுடைய கார்ட்தான்.

இது எப்படி அமைச்சர் வீட்டிக்கு போச்சுன்னு சொல்ல முடியுமா?

தெரியாது சார்.

நீங்க அன்னிக்கு ராத்திரி அங்க என்னப் பண்ணிகிட்டு இருந்தீங்க?

அமைச்சர் வீட்டை நோட்டம் பார்த்திகிட்டு இருந்தேன். மறுபடியும் பொய். ஆனால் அவன் புது ஊழியன் ராதிகாவை காட்டிக் கொடுக்க விரும்பவில்லை.

நீங்க என்ன உளவாளியா?

இல்லை சார். இது இன்வெஸ்டிகெடிவ் ஜர்னலிஸம். எங்கத் தொழில்ல இதெல்லாம் சகஜம்.

எது சகஜம்? கொலை பண்ணறதா?

சார் நீங்க நக்கலா பேசறீங்க.

எங்க வண்டி உங்களை நோக்கி வரும்போது ஒரு பெண் கிட்ட பேசிகிட்டு இருந்தீங்களே அது உங்க கூட்டாளியா?

இல்லை சார். யாரோ ஒரு பெண். மெயின் ரோட்டுக்கு வழி கேட்டாங்க. மறுபடியும் பொய்.

ராஜேஷ் உங்களால எப்படி சரளமா பொய் சொல்ல முடியுது?
மௌனமாக இருந்தான்.

உங்களை லை டிடெக்ஷனுக்கு அழைச்சிகிட்டு போகப் போறோம். உங்களுக்கு சம்மதமா?

சம்மதம் இல்லைன்னா விடவா போறீங்க. வெறுமையாக சிரித்தான். நீங்க என்னை சட்டவிரோதமா வெச்சிருக்கீங்க. குற்றப் பத்திரிக்கை இல்லை வாரண்ட் எதுவும் இல்லை. என்னுடைய போனை எடுத்துகிட்டீங்க. வக்கீலை கூப்பிட விடவில்லை. இப்படி எல்லாமே சட்ட விரோதமாக நீங்களே செஞ்சிகிட்டு இருக்கீங்க.

பரவாயில்லை ராஜேஷ் உங்களுக்கு சட்டம் நல்லாவே தெரிஞ்சிருக்கு. அதனாலத்தான் அதுல இருக்கிற ஓட்டையும் தெரிஞ்சிருக்கு.

சட்டம் படிக்க வேணாம் சார். தமிழ் படங்களை பார்த்தாலே போதும். உண்மையாக நகைத்தான்.

போகலாமா?

நான் ரெடி என்றான்.

இன்னொரு அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அவன் மேல் பல வொயர்களைச் சுற்றினார்கள். மானிடரில் ஏதோ அலைகள் ஒடியது.
கேள்வி கேட்டார். இன்னும் இரண்டு மணி நேரம் இந்த கூத்து நடந்தது. அவன் சோர்ந்து போயிருந்தான். இது முடிந்ததும் அவன் குளியலறைக்குச் சென்று அங்கே 10 நாள் இருக்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால் தான் எடுத்துக் கொண்ட வேலையில் இதெல்லாம் சகஜம் என்று நினைத்தான்.

leomohan
01-10-2006, 11:45 AM
கடைசி பேட்டி மர்மத் தொடர் - 13
13
ரங்கன் சொன்னதைக் கேட்டதும் அதிர்ந்து போனாள் நந்தினி.
அவன் நடுரோட்டில் காலில் விழுந்துதும் அவனை அருகில் உள்ள தேனீர் கடைக்கு அழைத்துச் சென்றாள். தேனீர் வாங்கித்தந்தாள்.

அமைதியாக என்னாச்ச அண்ணே என்றாள்.

அம்மா தம்பியோட நான் பல வருஷம் இருக்கேன். எனக்கு பொண்டாட்டி கெடையாது. பல வருஷம் முன்னாலேயே செத்துப் போச்சு. ஒரே புள்ளை. அவனை என் மச்சினிதான் வளத்துகிட்டு இருக்கா. என் வீட குரோம்பேட்டை ராதா நகர்கிட்ட இருக்கு. மச்சினியும் அவ புருஷனும் என் சொந்த வீட்ல தான் தங்கியிருக்காங்க. எனக்கும் யாரும் இல்லாததால தம்பியோடையே தங்கிட்டேன்.

தம்பிக்கு என்ன புடிக்கும் என்ன புடிக்காதுன்ன எனக்குத் தெரியும். தம்பியை நல்லா பாத்துக்கறேன். தம்பியும் நான் கேட்டபோதெல்லாம் எனக்கு ஒதவி செஞ்சிருக்கு. ஆனா நான் தான் தம்பிக்கு துரோகம் பண்ணிட்டேன் என்றான்.

ஒரு வேலைக்காரன் முதலாளிக்கு என்ன துரோகம் செய்ய முடியும்? பணத்தை திருடியிருப்பான் இல்லை வீட்டிலிருந்த பொருளை எடுத்து விற்றிருப்பான் என்று நினைத்தாள் நந்தினி. ஆனால் அவன் சொன்னது இன்னும் அதிர்ச்சியான விஷயம்.

அம்மா தம்பி எனக்கு இதுவரைக்கும் 30 ஆயிரம் ரூபாய் கடனா கொடுத்திருக்கு. என்னோடைய மச்சினி பிரசவம் இப்ப வரப்போவுது. இன்னும் 5 ஆயிரம் கேட்கலாம்னு இருந்தேன். எவ்வளவுதான் தம்பியை பணம் கேட்கறதுன்னு எனக்கே வெட்கமா இருந்திச்சு.

அந்த நேரத்தில ஒரு போன் வந்தது. நாங்க சொல்ற வேலையை செஞ்சா 5 ஆயிரம் தர்றோம்னு சொன்னாங்க. தம்பி பேசையில இருக்குற மஞ்சள் சிலிப்பில ஒரு செய்தி எழுதி வைக்க சொன்னாங்க. அப்படி செஞ்சா 5 ஆயிரம் தர்றேன்னு சொன்னாங்க.

நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்.

வீட்டு கதவை திறந்துப்பாரு ஒரு பொம்பளை நிப்பாங்க அவங்க கிட்ட 5 ஆயிரம் இருக்கும் வாங்கிக்கோன்னு சொன்னாங்க. வெளியே பார்த்தேன்.

ஒரு பொம்பளை பணத்தோட நின்னுகிட்டு இருந்தாங்க. நான் போனதும் பணத்தை வாங்கிகிட்டேன் அவங்க போயிட்டாங்க. மறுபடியும் போன் பண்ணாங்க. விஷயத்தை எழுதச் சொன்னாங்க. எழுதலைன்னா அமைச்சர் விஷயம் பெரிய பிரச்சனையில மாட்டிப்பேன்னு பயம்புறுத்தனாங்க.

நானும் சரின்னு அவங்க சொன்ன மாதிரியே எழுதி வெச்சிட்டேன்.

அது என்ன பிரச்சனையோ தம்பியை போலீஸ் பிடிச்சிகிட்டு போயிடிச்சு என்று அழுதான்.

காலையில போலீஸ் வந்து வீட்டையெல்லாம் வீடியோ பிடிச்சிகிட்டு போயிட்டாங்க என்று மேலும் அழுதான்.

குழப்பத்துடன் நந்தினி அப்படி என்ன எழுதச் சொன்னாங்க என்று கேட்டாள்.

அந்த நான்கு அமைச்சரில் நானும் ஒருவன். சந்திக்கத்தயார். எப்போது எங்கே என்று சொல் - அமைச்சர் கரி. நீலவாணன்.

இது என்னிக்கு நடந்தது?

தேதியைச் சொன்னான்.

நீலவாணன் கொல்லப்பட்டதற்கு முதல் நாள் இரவு.

அவரு இந்த சிலிப்பை பார்த்தாரா?

நான் வெளியே போயிட்டேன். அவரு வந்து பார்த்திருப்பாரு. ஏன்னா நான் திரும்பி வரும்போது தம்பி இல்லை. அந்த சிலிப்பும் இல்லை என்றான் ரங்கன்.

நீலவாணன் கொலை வழுக்குக்கும் ராஜேஷுக்கும் என்ன சம்பந்தம். பயந்து போனாள் நந்தினி.

சரி. நாம அவரை பார்ககப்போவோம். நானா சொல்ற வரைக்கும் இதை யாருக்கும் சொல்லாதீங்க. இப்ப கண்ணை துடைச்சிகிட்டு வாங்க என்று அவனை பின்னால் உக்காரவைத்து வண்டியை கிளப்பினாள்.
__________________

leomohan
01-10-2006, 11:46 AM
கடைசி பேட்டி மர்மத் தொடர் - 14
14
ராஜேஷ் மேலிருந்த வொயர்கள் இன்னும் அகற்றப்படவில்லை. அவன் அறையில் யாரும் இல்லை. அவன் யோசிக்கத் தொடங்கினான். இந்த வேலை எடுத்துக் கொண்ட நாள் முதல் ராஜகோபாலை பார்த்தது நந்தினி வீட்டுக்கு வந்தது அமைச்சர்கள் கொலையானது ராதிகா வந்தது போலீஸ் அவனை விசாரனை செய்தது அவன் அடிப்பட்டது என்று கோர்வையில்லாமல் அவன் மனதில் அனைத்தும் வந்து போயின. டக்கென்று ஒரு விளக்கு அடித்தது.

ஒரு அதிகாரி வந்து உங்களை பார்க்க உங்க கொலீக் நந்தினியும் உங்க வேலைக்காரன் ரங்கனும் வந்திருக்காங்க. ஆனா ஒவ்வொருத்தரா பார்க்க மட்டும் உங்களுக்கு அனுமதி இருக்க யாரை முதலில் அனுப்பட்டும்? என்று கேட்டார்.

ரங்கனை அனுப்புங்க என்றான்.

உள்ளே வந்ததும் தம்பி என்ன இப்படி ஆயிடுச்சு என்று அழுதான்.
பரவாயில்லை ரங்கா பத்திரிகை தொழில்ல இதெல்லாம் சகஜம். பயப்படாதீங்க என்று ஆசுவாசப்படுத்தினான்.

என் கையை கட்டியிருக்காங்க. அம்மாவுக்கு ஒரு லெட்டர் எழுதனும் தயவு செய்து அந்த பேப்பர் பேனா எடுத்து நான் சொல்றதை எழுதுங்க என்றான்.

அன்புள்ள அம்மாவுக்கு

நலம். நான்கு நாட்களாக உடம்பு சரியில்லை. நானும் உங்களுக்கு எப்போதுமே போன் செய்ய நினைக்கிறேன். எங்க நேரம் எனக்கு நீங்களே சொல்லுங்கள். அமைச்சர் இரண்டு பேரை கொலை செய்ததால் தமிழகம் அரண்டுவிட்டது. நான் ஒருவன் தான் அதை டிவியில் கவர் செய்கிறேன். கரி. நீலவாணன் கரிகாலவளவன் இரண்டு பேர். நீங்கள் எனக்கு பெண் பார்த்தால நான் சந்திக்கத்தயார்.

அன்புடன்

ராஜேஷ்

ரங்கா அந்த லெட்டரை என் பாக்கெட்டில் வை. நான் கொஞ்ச
நேரத்தில ஆபீஸ் போயிடுவேன் அங்கேர்ந்து கொரியர் செய்திடுவேன் என்றான்.

அதுக்குள்ள உங்களை விட்டுடுவாங்களா தம்பி என்று வாஞ்சையுடன் கேட்டான்.

ரங்கா என்னை உள்ளப்போட ஒரு ஜெயிலும் இல்லை. நான் யாரையும் கொலைப் பண்ணலை. அதனால எனக்குப் பயம் இல்லை.

நீ போயி நந்தினியை அனுப்பு. ஒரு 5 நிமிஷம் கழிச்சு என்றான்.

அவன் வெளியே போனதும் கை கட்டியிருந்தது போல பாவனை செய்துக் கொண்டிருந்தவன் சட்டென்று கைகளை விடுவித்து தன் பர்ஸுக்குள் இருந்த அமைச்சர் எழுதிய சிலிப்பின் போட்டோ காப்பியை எடுத்த ரங்கன் எழுதிய கடித்தின் வார்த்தைகளில் வட்டம் இட துவங்கினான்.

அந்த நான்கு அமைச்சரில் நானும் ஒருவன். சந்திக்கத்தயார். எப்போது எங்கே என்று சொல் - அமைச்சர் கரி. நீலவாணன்.

அன்புள்ள அம்மாவுக்கு

நலம். நான்கு நாட்களாக உடம்பு சரியில்லை. நானும் உங்களுக்கு எப்போதுமே போன் செய்ய நினைக்கிறேன். எங்கே நேரம் எனக்கு நீங்களே சொல்லுங்கள். அமைச்சர் இரண்டு பேரை கொலை செய்ததால் தமிழகம் அரண்டுவிட்டது. நான் ஒருவன் தான் அதை டிவியில் கவர் செய்கிறேன். கரி. நீலவாணன் கரிகாலவளவன் இரண்டு பேர். நீங்கள் எனக்கு பெண் பார்த்தால நான் சந்திக்கத்தயார்.

அன்புடன்

ராஜேஷ்

புன்னகைத்தான். தன் புத்திசாலித்தனத்தை தானே மெச்சிக்கொண்டான்.

நந்தினி உள்ளே வரும் சத்தம் கேட்டு சட்டென்று காகிதங்களை உள்ளே வைத்துக்கொண்டான்.

மெதுவாக புன்னகைத்தான்.

அவன் தலை கலைந்திருந்தது. வேர்த்து ஒழுகி இருந்தது. உடம்பில பல வொயர்கள் இன்னும் இருந்தன. முகம் வாடியிருந்தது. கண்கள் சிவந்திருந்தது. மொத்தத்தில் இந்த கோர உருவத்தில் அவன் வாழ்க்கையில் என்றுமே இருந்தததில்லை. இருந்திருந்தாலும் நந்தினி அதை பார்த்ததில்லை. துடிதுடித்துப்போனாள். அவனை அடியுடன் பார்க்ச்சென்றதை விட பலமடங்கு. கண்கள் தேங்கி நின்று கண்ணீர் எப்போது வேண்டுமானாலும் கரைகடந்து ஓட தயாராக இருந்தது. ஆனால் அவள் இங்கு அழுது அவள் காதலை சொல்ல வரவில்லை. உனக்கு நான் இருக்கிறேன் பலமாக என்று ஆறுதல் கூற வந்திருக்கிறாள். அவனக்கு பக்கத்துணையாக ஒரு பலமாக இருக்க வந்திருக்கிறாள்.

15 நிமிடம் என்று நேரம் குறித்திருந்தார்கள் காவல் அதிகாரிகள்.
மெதுவாக அவன் மீதிருந்த வொயர்களை கழற்றினாள். அவன் தலையை சரி செய்தாள். தன் கைக்குட்டையால் அவன் முகத்தை துடைத்துவிட்டாள். பக்கத்து மேசையின் மேல் இருந்த தண்ணீர் டம்பளாரால் அவனுக்கு தண்ணீர் கொடுத்தாள். இயற்கையின் விந்தை. அவள் அவனுக்கு அவ்வளவு நெருக்கத்தில். அவளுடைய உடையின் மணம் அவனை கிறங்க வைத்தது. அவள் கை படும் போது அவன் உள் பல மாற்றங்கள் கிளர்ச்சிகள். அவள் தலையை கோதிவிட்ட போது அன்னையின் அற்புத அரவணைப்பை ஞாபகப்படுத்திக் கொண்டான். பல மணி நேர விசாரணை கொடுமைக்கு பிறகு இந்த குளிர்ச்சி தேவைப்பட்டது.

அவனருகில் அமர்ந்தாள். தன் கையை அவன் கைகளில் வைத்தாள். இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். அவனுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

என்ன நந்தினி எமோஷ்னல் ஆயிட்டீங்க? ஸாரி ஆயிட்டே. சிரித்தான்.

இந்த நேரத்திலும் இவனால் எப்படி சிரிக்க முடிகிறது. அந்த கள்ளமில்லா சிரிப்பில் லயித்துப்போனாள். இருவரையும் குற்றவாளி என்று சொல்லி ஒரே சிறையில் போட்டுவிட்டால் காலம் முழுவதும் இவனுடன் சிறையில் கழித்துவிடுவேன் என்று எண்ணிக்கொண்டாள்.
அவன் கைகளின் வெப்பம் அவளை ஆறுதல் படுத்தியது. நான் அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்தேனா இல்லை அவன் ஆறுதல் சொல்கிறானா என்று கேட்டுக் கொண்டாள் தன்னைத்தானே. முதன் முறையாக அவன் ஸ்பரிசம்.

நீ என்ன பண்ற இங்க நந்தினி? நந்தினி என்ற வார்ததை அவனிடத்திலிருந்து தடையில்லாமல் வரத் தொடங்கியிருந்தது. நல்ல அறிகுறிதான்.

பாஸ் நீங்க போன் எடுக்கலைன்னதும் வீட்டுக்குப் போய் பார்த்துட்டு வரச் சொன்னார்.

உன்னையா?

என்னையில்லை. அக்பரத்தான். ஆனா நான் தான் உங்களை பார்க்கனும்னு வந்தேன்.

எதுக்கு?

தெரியாதாடா முட்டாள். உன்மேல் நான் பைத்தியமாய் இருக்கிறேன் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்.

ஆன். உங்களை தினமும் பார்கறதா பிரார்த்தனை என்றாள் கிண்டலாக.

பதிலுக்கு அதே உணர்ச்சிகளை தூண்டிவிடும் அந்த மாயகள்வனின் சிரிப்பு.

உங்க வீட்டுக்கு போனேன். ரங்கனைப் பார்த்தேன். அவன் தான் உங்களை போலீஸ் பிடிச்சிக்கிட்டு போயிட்டதா சொன்னான். வர வழியிலை என் கால்ல விழுந்து அழ ஆரம்பிச்சிட்டான். இவன் என்ன காரியம் பண்ணியிருக்கான் தெரியுமா? என்று கோபத்துடன் கூறினாள்.

கண்களால் காமிராவைக்காட்டி ஒன்னும் சொல்ல வேண்டாம் என்று சைகை செய்தான். எனக்கு எல்லாம் தெரியும் என்று கண்களால் காட்டினான்.

இப்பத்தான் அம்மாவுக்கு ரங்கனை விட்டு லெட்டர் எழுதச்
சொன்னேன் என்றான்.

அவள் புரிந்துக் கொண்டாள். என் மாயக்கள்வனின் மூளையைப்பற்றி எனக்குத் தெரியாதா? பூரித்துப் போனாள்.

வேறு ஏதுவும் பேசுவதற்கு இல்லை.

பாஸ்சுக்கு ஏன் சொல்லலை? என்று கேட்டாள். நேரம் கடத்தினால் தானே அவன் கூட இருக்க முடியும்.

வேண்டாம். இன்னும் கொஞ்ச நேரத்தில என்னை விட்டுடுவாங்க.
எப்படி அவ்வளவு நம்பிக்கையா சொல்றீங்க என்றாள்.

பதிலுக்கு சிரிப்பு. இனிமேல் சிரித்தால் உனக்கு அடிதான் என்று சொல்லத்தோன்றியது.

கைகளை எடுத்தாள். ஆனால் மீண்டும் அவன் கை மீது வைத்துக் கொண்டாள். முதல் முறையாக அவன் கைகளும் இவன் கையை வேண்டியதை உணர்ந்தாள்.

அடுத்த 10 நிமிடம் யாரும் ஏதுவும் பேசவும் இல்லை. செய்யவும் இல்லை. அமைதியான அந்த அறையில் சில நேரம் கண்கள் சந்தித்தன. பல நேரம் அவன் கண்கள் அவளை அங்குல அங்குலமாக பார்த்துக் கொண்டிருந்தன. இவள் எனக்கு பொருத்தமானவளா? ராதிகாவிடம் இருக்கும் ஏதோவென்று இவளிடம் இல்லை? எது? அந்த ஆணவ அலட்ச்சியமா? அந்த அசட்டுச்தைரியமா? இல்லை அந்த செக்ஸி லுக்கா?

அவனால் சொல்ல முடியவில்லை. ஆனால் நந்தினியின் கைகள் அவன் உடலில் பாதிப்பை ஏற்படுத்த துவங்கி விட்டிருந்தது. அதை சுகமா உணர்ந்தான். 1000 வருடங்கள் அப்படி இருந்ததாக அவளுக்கு நினைப்பு. ஒரு அதிகாரி வந்து கூப்பிடும் வரை. கைகளை விடுவித்துக் கொண்டாள்.

நான் உன்னை உயிரையும் மேலாக காதலிக்கிறேன் என்று சொல்ல நினைத்தாள். ஆனால் அது தேவையில்லை. அவன் என்னைக் காதலிக்கிறான். இன்று இல்லாவிட்டாலும் என்றாவது அவனே சொல்வான். என்னைவிட யாரும் அவனை காதலிக்க முடியாது என்ற சொல்லிக் கொண்டாள். காதலுக்கு கண்ணில்லை. கண்களால் விடை பெற்றுச் சென்றாள். அவனும் கண்களால் கவலை வேண்டாம் என்று சொன்னான். பல நேரங்களில் வார்த்தைகளை விட மௌனம் அதிகாமான விஷயங்களை கூறிவிடும். அதை விட கண்கள் ஆயிரம் விஷயங்களை அரை நோடியில் அறிவித்து விடும்.

இவர்கள் கண்களால் பேசிக் கொண்டார்கள். எந்த டேப்ரிக்கார்டரும் காமிராவும் இதை பதிவு செய்ய முடியாது.

leomohan
01-10-2006, 11:47 AM
கடைசி பேட்டி மர்மத் தொடர் - 15
15

பக்கத்து அறையில் அவனிடம் கேட்ட கேள்விகளுக்கும் அவனுடைய பதில்களையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பொய் கண்டுபிடிக்கும் கருவியின் கருத்தையும் ஆராய்ந்து கொண்டிருந்தார்கள்.

உங்கள் பெயர்?

ராஜேஷ் - உண்மை

உங்கள் அப்பா அம்மா எங்க இருக்காங்க?

அமெரிக்காவில். - உண்மை

நீங்க எத்தனை வருஷமா சூப்பர் டிவியில் வேலை செஞ்சிகிட்டுஇருக்கீங்க?

6 வருஷமா - உண்மை

நீங்க இதுவரைக்கும் யாரையாவது கொலை பண்ணியிருக்கீங்களா?

இல்லை. - உண்மை

அமைச்சர் நீலவாணனை நீங்க கொலை பண்ணிங்களா?

இல்லை - உண்மை

அமைச்சர் கரிகாலவளவனை கொலை பண்ணிங்களா?

இல்லை. - உண்மை.

நீலவாணன் கொலை நடந்த அன்னிக்கு காலையில எங்கிருந்தீங்க?

மகாபலிபுரம் ரோட்டில் - உண்மை

ஏதுக்காக மினிஸ்டர் லிஸ்ட் தயார் பண்ணிங்க?

பேட்டி எடுக்க. - பொய்

இந்த நாலு பேரை ஏன் தேர்ந்தெடுத்தீங்க?

எப்படின்னு சொல்லத்தெரியவில்லை.

இந்த பதிலுக்கு இயந்திரம் தடுமாறியிருந்தது. உண்மை பொய் என்று ஏதுவுமே சொல்லவில்லை.

நேற்று இரவு நீங்க அமைச்சர் வீடுகிட்ட ஒரு பெண்ணோடு பேசிகிட்டு இருந்தீங்களா? அந்த பெண்ணை உங்களுக்கு தெரியுமா?

தெரியாது. - பொய்.

யார் உங்களை அங்க வரச்சொன்னது?

நானாக வந்தேன். - பொய்

ஏதுக்காக வந்திங்க?

நோட்டம் பார்க்க. - பொய்

கொலை செய்ய வந்திங்களா?

இல்லை. - உண்மை.

கொலையாளிக்கு உதவி செய்ய வந்திங்களா?

இல்லை. - உண்மை

உங்களோட ரகசிய ப்ராஜெக்ட் பத்தி சொல்ல முடியுமா?

சொல்ல முடியாது.

இயந்திரம் திணறியிருந்தது.

அதனால யாருக்காவது நஷ்டம் ஏற்படுமா?

மக்களுக்கு நல்லது ஏற்படும்.

யாருடைய உயிர் சேதம் ஏற்படுமா?

இதுக்கு பதில் சொல்லத்தெரியலை.

இந்த பதில்களில் இருந்த ஒன்றும் கண்டு பிடிக்க முடியவில்லை. எந்திரங்கள எல்லாம் செய்துவிட்டால் மண்ணில் மனிதனுக்கு இடம் ஏது?

தட்ஸ் ஆல்.

விக்ரமன் அனைவரையும் பார்த்துவிட்டு இந்த எக்ஸாமினேஷன் எங்கேயும் நம்பள கொண்டு போகவில்லை. நாம வேற ஆங்கிள்ல முயற்சி பண்ணனும் என்று முடித்தார்.

விக்ரமன் ராஜேஷை வந்து பார்த்தார்.

ஸாரி ராஜேஷ் உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன். இது எங்களோட தொழில். உங்க ஒத்துழைப்பு வேண்டும் எங்களுக்கு.

சார் நான் சம்பந்தபட்டதனால மட்டும் சொல்லல எப்பவுமே காவல் துறைக்கு சூப்பர் டிவியின் ஒத்துழைப்பு இருக்கும் என்றான்.

நீங்க போறதுக்கு முன்னாடி சில சந்தேகங்களை தீர்த்து வைக்க முடியுமா?

பெரிதாக சிரித்துவிட்டு இப்ப என் வேலைக்காரனுடன் பேசியதும் என் கொலீக்குடன் பேசியதும் வீடியோ பிடிச்சிட்டீங்களா? என்றான்.

ஆமா. ப்ளீஸ்.

சரி. விக்ரமன் உங்களை பத்தி நல்லா தெரிஞ்சதால சொல்றேன். அது மட்டும் இல்லாம இந்த கொலைகளையும் தடுக்கனும்னு நல்ல எண்ண்த்தில சொல்றேன். நான் இப்போ ரொம்ப டயர்டா இருக்கேன். வீட்டுக்கு போயிட்டு குளிச்சிட்டு ரெடியா இருக்கேன். லஞ்சில நல்ல ஹோட்டல்ல மீட் பண்ணலாம். சாதாரண உடையில் வாங்க என்று விட்ட வெளியே நடந்தான்.

அவனுடைய தன்நம்பிக்கையும் தைரியமும் இரண்டு கொலையில் மாட்டியிருந்தாலும் குறையாத அந்த முகத்தின் களையும் அவரை வெகுவாக ஈர்த்தது. எனக்கொரு தங்கச்சி இருந்தா இவனையே மாப்பிள்ளை ஆக்கிடுவேன். இது விக்ரமன் எனும் மனிதர்.ஆனா இவன் கொலை செய்யலேன்றது உறுதியாகனும். இது விக்ரமன் எனும் போலீஸ்.

போகறதுக்கு முன்னாடி ஒரு கேள்வி?

நீங்க நந்தினியை காதலிக்கிறீங்களா?

அழகாக சிரித்துவிட்டு கண்ணடித்துக் கொண்டே அவள் என்னை காதலிக்கிறாள் என்று சொல்லிவிட்ட வெளியே வந்தான்.

கான்ஸ்டபிள் ஸ்ரீரங்கம் அவனுடைய பைக்கை தயாராக எடுத்து வந்தார். ஹெல்மெட்டும் தான்.

நன்றி என்று கூறிவிட்டு பீச்சுக்காற்றை சுவாசித்துக் கொண்டு பறந்தான்.

leomohan
01-10-2006, 11:48 AM
கடைசி பேட்டி மர்மத் தொடர் - 16
16

ரவியும் பல முறை போன் செய்துவிட்டான். பதில் இல்லை. ராதிகாவும் அவனுடைய மொபைலில் முயற்சி செய்துவிட்டு அமைதியானாள். ராஜகோபாலுக்கு ஒரே குழப்பம். ராஜேஷையும் காணவில்லை அவனைத் தேடச்சென்ற நந்தினியையும் காணவில்லை.

ரெயின் டிவிக்கு செய்தி சென்றடைந்திருந்தது. அவர்களுக்கு ஒரே குதுகலம். சின்ன எழுத்துக்களில் அவர்களுடைய நிகழ்ச்சிகளின் நடுவே ப்ளாஷ் நியூஸ் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அமைச்சர்கள் கொலை. ஒரு பெரிய தொலைக்காட்சியின் நிருபர் கைது. மேலும் விவரங்கள் இல்லை என்று கலக்கிக் கொண்டிருந்தனர். வெறும் வாயயை மெல்லுபவர்களுக்கு அவல் கிடைத்தால் என்ன செய்வார்கள்?

இதை பார்த்த ராஜகோபால் ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கணக்குப் போட்டிருந்தார்.

நந்தினி உள்ளே அவசரமாய் வந்தாள். அவள் வருவதை பார்த்ததும் ராதிகா என்னாச்சு என்றாள். ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு நடந்தாள். ரவி எங்கே ராஜேஷ் என்று பதட்டத்துடன் கேட்டான். சொல்றேன் என்று சொல்லிவிட்டு பாஸின் அறைக்குச் சென்றாள்.

பாஸ் ராஜேஷை பார்த்தேன். போலீஸ் ஸ்டேஷனில் இருந்தார். ஏதோ ஓவர் ஸ்பீடிங்க கேஸ். ஒன்னும் பயப்படத் தேவையில்லை. இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கிருப்பார் என்றாள் புத்திசாலித்தனமாக.

ராஜகோபால் அவளைஅமரச் சொன்னர்.

சின்னப் பெண்ணே நீ அழகா இருக்கேன்னு தான் உன்னை ரிசிப்ஷனிஸ்ட்டா போட்டேன். உன் குரலும் இனிமையா இருக்கு. ஆனா ரிப்போர்டர் வேலையை செய்யச் சொல்லலை என்றார் காட்டமாக.

அவள் நெளிந்தாள்.

அங்க பாரு என்று ரெயின் டிவி ப்ளாஷ் நியூஸை காண்பித்தார்.

அவள் குழப்பத்துடன் ஸாரி சார் என்று விட்டு நடந்ததை கூறினாள்.

எப்ப வருவாரு என்றார் யோசனையுடன்.

எனக்கு இப்ப மொபைல்ல கால் பண்ணாரு. உங்க கிட்டயோ ராதிகா கிட்டயோ மொபைல்ல பேசமுடியாது. மதியம் மூன்று மணிக்கு வருவேன்னு சொன்னாரு என்றாள்.

அது இன்னும் அவரை குழப்பத்தில் ஆழ்த்தியது. அவருக்கு மட்டுமே தெரிந்திருந்த அவனுடைய இன்னொரு எண்ணில் போன் செய்தார்.

ஸ்பீக்கர் போன் ஆனாக இருந்தது. நந்தினிக்கு அவன் குரல் கேட்டதும் உள்ளுக்குள் பூரிப்பு. அதைவிட பாஸ் தன் மேல் இத்தனை நம்பிக்கை வைத்து ஸ்பீக்கர் போனில் நம் முன் பேசுகிறாரே என்று ஆனந்தம்.

சீஃப். எந்த பிரச்சனையும் இல்லை. தலமை காவல்
நிலையத்திலிருந்து வெளியே வந்துட்டேன். விக்ரமனோட ஒரு ரகசிய சந்திப்பு இருக்கு.அது முடிஞ்சதும் உங்களுக்கு விவரம் கொடுக்கறேன். ஒன்னும் பயப்படத்தேவையில்லை என்றான்.

ராஜேஷ் நிலமை புரியாமல் பேசறீங்க என்று சொல்லிவிட்டு ப்ளாஷ் நியூஸை படித்துக் காண்பித்தார்.

என்ன பைத்தியக்காரத்தனம் இது. நம்ம ரத்தம் கீழே விழ காத்திருக்காங்களா. இது நியூஸா இல்லை அவங்க கற்பனையா? நம்மகிட்ட நல்லா அடிவாங்கியும் திருந்தலை அவங்க. அப்புறம் பார்த்துக்கலாம் சீஃப் என்று விட்டு நிலமை சகஜமாக்க

அப்புறம் இன்னோரு விஷயம் ...

என்ன?

வீ ஹாவ் அ ப்யூடிஃபுல் லேடி இன் அவர் ரிசெப்ஷன். நான் அடுத்த தடவை போலீஸ்ல மாட்டினா அவளையே வந்து என்னை பார்க்கச்சொல்லுங்க என்றான் சிரித்துக்கொண்டே.

அவள் முகம் வெட்கத்தில் சிவந்தது.

நீங்க எனக்கு விலை மதிப்பற்றவர். ஜாக்கிரதையா இருங்க என்றார்.

தெரியும் சீஃப். உங்களுக்காக எதுவேண்டுமானாலும் செய்யக் காத்திருக்கேன் என்று சொல்லிவிட்டு போனைத் துண்டித்தான்.

நீங்க எனக்கும் தான் விலை மதிப்பற்றவர் என்று நினைத்தப்படியே அறையிலிருந்து வெளியேறினாள் நந்தினி. இன்னொரு அவார்ட் கிடைத்துவிட்டது இன்று.

leomohan
01-10-2006, 11:49 AM
கடைசி பேட்டி மர்மத் தொடர் - 17 17

நுங்கம்பாக்கம் ஹைரோடில் இருக்கும் பாம் குரோவ் ஹோட்டலுக்கு 2.00 மணிக்குச் சென்றடைந்தான்.

அதற்கு முன் ரங்கன் கையால் தேனீர். நல்ல மூலிகைக்குளியல். வெள்ளைச் சட்டை கரு நீல கால் சட்டை. சிவப்பு நிற டை. தலையை பாராசூட் க்ரீமினால் படியவைத்திருந்தான். க்ளீன் ஷேவ். எப்போதுமே பார்க் அவன்யூ சோப் பார்க் அவன்யூ ஷேவிங்க க்ரீம் ஆஃப்டர் ஷேவ் லோஷன் என்று பார்க் அவன்யூப் பிரியன்.

பல நாட்களுக்குப் பிறகு குளித்தது போல இருந்தது.

வெளியே வந்து சேகர் எம்போரியம் எதிரில் இருந்தப் பெட்டிக்கடையில் எல்லா பேப்பரையும் வாங்கி அமைச்சர் கொலைகளைப்பற்றி ஒரு முறை படித்தான். பிறகு தன் காரில் பாம் குரோவ் வெஜிடெரியன் ரெஸ்டாரெண்ட் சென்றடைந்தான்.

ஒரு சவூத் இண்டியன் தாலி 100 ரூபாய். 2.00 மணிக்கு மேல் கூட்டமிருக்காது. ஒரு கார்னர் சீட்டில் இருவரும் அமர்ந்தனர். இரண்டு தாலி ஆர்டர் செய்தார் திருவிக்ரமன்.

நீங்க வெஜிடேரியனா? என்று ஆச்சர்யமாக கேட்டான்.

சிரித்துக்கொண்டே ஆம் என்றார். போலீஸ் உடை களைந்து சாதாரண உடையில் வந்திருந்தார். ரகளையாக இருந்தார். வெள்ளை டீ ஷர்ட். நீல ஜீன்ஸ். இன்னும் வயது குறைந்தவர் மாதிரி இருந்தது. முடியை கலைத்துவிட்டிருந்தார்.

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அமைச்சர்களின் சீரியலைப்பற்றி விளக்கினான். தன் எண் எழுதும் பழக்கத்தை விளக்கினான். தான் வருவதற்கு முன்பாக வீட்டில் எப்படி அந்த சிலிப் வந்தது என்பதைப்பற்றி கூறினான். ஆபீஸ்சில் சந்தேகப்படும் படியாக யாரும் இல்லையென்றும் அவன் பாஸ் எந்தவிதத்திலும் இதில் சம்பந்தப்பட வாய்பில்லை என்றும் கூறினான்.

புதிதாக சேர்ந்த ராதிகாவைப்பற்றியும் அவள் அன்று கூப்பிட்டதால் வந்தது பற்றியும் பிறகு அவரிடம் மாட்டிக் கொண்டதைப்பற்றியும் கூறினான்.

அவனுடைய சீக்ரெட் ப்ராஜெக்ட்டினால் பல தலை உருள முடியும் என்றும் அதனால் போலீஸ் ரிக்கார்டில் எதுவும் சொல்லவில்லை என்றும் கூறினான்.

ராதிகா கொலையில் சம்பந்தப்பட வாய்ப்பில்லை என்றும் முதல் கொலை நடந்த பிறகே அவள் கம்பெனியில் சேர்ந்ததாகவும் கூறினான்.

குறுக்கே கேள்வி கேட்காமல் அமைதியாக அனைத்தையும் கேட்டுக் கொண்டார். குறிப்பு எதுவும் எடுக்கவில்லை.

சொல்லி முடித்து விட்டு இன்னும் ஏதாவது தெரியவேண்டுமா என்பது போல பார்த்தான்.

ஒன்றும் இல்லை என்பது போல அவரும் பார்த்தார்.

ஒரு நிமிஷம் சார் உங்க மொபைல் மாடல் நல்லா இருக்கே பார்க்கலாமா என்று கேட்டான்.

ஓ ஷ்யுர் என்று கொடுத்தார் அவரும்.

அதில் ஏதோ தட்டிப்பார்த்துவிட்டு சார் இப்ப நாம பேசின அனைத்தும் நீங்க ரிக்கார்ட் செஞ்சிங்க இல்லை. அதை நான் எரேஸ் பண்ணிட்டேன் என்றான் புன்னகையுடன்.

நீங்க மேதாவி என்றார் சிரித்துக்கொண்டே. பில் கொடுத்துவிட்டு விடை பெற்றனர் இருவரும்.

leomohan
01-10-2006, 11:50 AM
கடைசி பேட்டி மர்மத் தொடர் - 18
18
டிவியில் விளம்பரதாரர் மக்களுக்கு பல வகையான பொருட்களை வழங்குகிறார்கள். இதில் எத்தனை மக்களைப் போய் சேருகிறது என்பது ஆராய்ச்சி செய்ய வேண்டிய விஷயம்.

வீட்டுப் பொருட்கள் டிவி ஃபிரிஜ் வாஷிங் மெஷின் துவங்கி சோப் சீப் கண்ணாடி ஷாம்பு வரை டிவியில் வேலை செய்பவர்களுக்கு தினமும் ஏதாவது கிடைத்துக் கொண்டே இருக்கும்.

சென்று முறை பெருங்காய வியாபாரி கொடுத்த நிகழ்ச்சியினால் இன்னும் மூன்று மாதத்திற்கு பல வீட்டில் பெருங்காயமே வாங்கத் தேவையில்லை எனும் நிலை.

பலரும் உள்ளே நுழைந்தவுடன் அக்பர் இன்னிக்கு என்ன கிஃப்ட் என்று கேட்டுக் கொண்டே நுழைவார்கள்.

இன்றும் அக்பர் ஒரு பெரிய தட்டில் ஸ்வீட் கொடுப்பது போல ஒவ்வொருவரிடமும் சென்று தட்டை நீட்டினான். கௌவரம் பார்ப்பவர்கள் ஒன்று மட்டுமே எடுத்துக் கொள்வார்கள். பேராசைப்படுபவர்கள் பலவற்றை அள்ளிக்கொள்வார்கள்.
அதில் ரவியும் ஒருவன். இரண்டு தங்கைகள் அல்லவா. அக்பர்

இன்னிக்கு என்ன ஸ்பெஷல்?

பேனா சார். ரெனால்ட்ஸ் ஸ்பான்சர்.

சே வெறும் பேனாதானா என்றான்?

இல்லை சார். அப்படிச் சொல்லாதீங்க. இது ஒரு ஸ்பெஷல் பேனா. மூன்று நிறத்தில எழுதும். முன்னாடி சின்ன டார்ச் லைட். அலார்ம் க்ளாக்குன்னு பல சங்கதி இதில. விலையே 250 ரூபாய் சார். பாருங்க இதில கழுத்துல மாட்டிக்க ஸ்டராப் கூட இருக்கு என்றான்.

அப்படியா? போனாவில இவ்வளவு சங்கதியா? என்ற ஆச்சர்யப்பட்டுக் கொண்டே 4-5 எடுத்து டிராவில் போட்டுக் கொண்டான். அக்பர் விடை பெறுவதற்கு முன் இன்னொன்றை எடுத்து கழுத்தில் மாட்டிக் கொண்டான். அக்பர் லேசாக சிரித்துவிட்டு அடுத்த டேபிளுக்குச் சென்றான்.

அவனுடன் சேர்ந்து இந்த பேனாவை இன்று கழுத்தில் அணிந்து திரிபர்கள் இந்த ஆபிஸில் 60 பேர். எல்லோரும் பேனாவை பற்றியே பேச்சு. நந்தினிக்கு இதில் ஆர்வமில்லை. ஒரு பேனாவை எடுத்துக்கொண்டாலும் அதில் ஆர்வம் செலுத்தவில்லை. அவள் நினைப்பு முழுவதுமாக ராஜேஷ் ஆக்கரமித்திருந்தான். இப்ப வந்துடுவான் இப்ப வந்துடுவான் என்று லிஃப்டையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அந்த ஹீரோவும் புயலாக உள்ளே நுழைந்தான். சட்டென்று பையிலிருந்த ஒரு ரோஜாவை எடுத்து நீட்டிவிட்டு தன் அறைக்குச் சென்றான்.

அதில் ஒரு போஸ்ட் இட்.

இந்த நிஜ ரோஜாவுக்கு இயற்கையின் பொய் ரோஜா

பைத்தியம் ஆகிவிட்டாள். டேய் நில்லுடா உன்னோட பேசனும் என்று சொல்லத்தோன்றியது. இதே போஸ் இட்டில் நான் உன்னை காதலிக்கிறேன்னு எழுதியிருந்தா குறைந்தா போயிடுவான் என்று கடிந்துக் கொண்டாள்.

7 முறை நந்தினி 2 போஸ்ட் இட் 2 முறை தனிமையில் சந்திப்பு 1
ரோஜாப்பூ என்று டைரியில் எழுதிக் கொண்டாள்.

உள்ளே சென்று அறையில் அமர்ந்ததும் ராதிகா உள்ளே வந்தாள். அக்பரும் உள்ளே வந்தான். தட்டை நீட்டினான்.

என்ன இது என்று கேட்டான்

பேனா பரிசு ஐடம் என்றான் அக்பர்.

முக்கியமாக வேலையை இருக்கும் போது ஏம்பா இப்படி தொந்தரவு செய்யறீங்க. அது தான தினமும் ஏதாவது குப்பை வருதுல்ல. அப்படி போட்டுட்டு போவீங்களா என்னமோ சொந்த காசுல ஸ்வீட் வாங்கி கொடுக்கற மாதிரி தட்டை நீட்டறீங்ளே. என்று கோபமாக பேசினான் ராஜேஷ்

அக்பர் அரண்டு போனான். ராஜேஷ் எப்போதுமே இப்படி பேசியதில்லை. அவமானம் தாங்காமல் ரிசெப்ஷனில் உள்ள சேரபாவில் வந்து உட்கார்ந்துக் கொண்டான்.

என்னாச்சு அக்பர் என்று நந்தினி கேட்டாள். அவன் நடந்ததைச் சொன்னான். ஆச்சர்யமா இருக்கே. என் செல்லத்திற்கு கோபமே வராதே. கமிஷ்னர் ஆபிஸ்லேயே சிரிச்சிக்கிட்டு தானே இருந்தது. என்னன்னு போய் பார்க்கலாம் என்று அவன் அறையை நோக்கிப் போனாள்.

ராதிகாவிடம் அவன் பேசிக் கொண்டிருந்தான்.

ராதிகா நிலமை மிகவும் மோசமாகிட்டே போகுது. நாம இந்த ப்ராஜெக்டை கை விட்ற வேண்டியது தான்.

என்ன சொல்றீங்க ராஜேஷ் நீங்க ஒரு தைரியசாலி நீங்களே இப்படி பேசலாமா?

இல்லை ராதிகா நிலமை பார்த்து வேலை செய்யனும். எனக்கு இன்னும் ஒரு முறை போலீஸ் ஸ்டேஷன் போக விருப்பமில்லை என்றான்.

அப்போது அவன் மொபைல் ஒலித்தது.

ராதிகா ஆச்சர்யமாக கேட்டாள. உங்க போன் இங்கே இருக்க

எங்கிருந்தது இந்த சத்தம்?

வெல். என்கிட்ட ரெண்டு போன் இருக்கு. யாருக்குமே தெரியாது ஏன்னா இரண்டாவது போன் ஒலிச்சதே இல்லை. இது நம்ம பாஸுக்கு மட்டுமே தெரிந்த எண். நாம நிறைய ப்ராஜெக்ட் சோந்து பண்ணா உங்களுக்கும் இந்த நம்பர் தருவேன் என்றான். இன்று அவள் போட்டிருந்த ஆடையில் அவள் உடற்கட்டு நன்றாக தெரிந்தது. அதை ரசித்தப்படியே போனை தன் பாண்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்தான்.

அப்படியா சரி என்று இரண்டு வார்த்தை பேசிவிட்டு வைத்துவிட்டான்.

பாஸ் தான் ஆபீஸ்ல இருக்காரே அப்படி இருக்க ஏன் மொபைல்ல கூப்பிடனும்?

பாஸுக்கு தெரியாம இன்னொருத்தருக்கும் இந்த நம்பர் கொடுத்திருக்கேன் என்றான் கண்ணடித்தபடியே.

ராதிகா முகம் வாடியபடியே யாரு கேர்ல் பிரெண்டா என்று கேட்டாள்.

யெஸ் என்றான் சிரித்தப்படியே.

அவள் முகம் வாடியே விட்டது.

கவலை வேண்டாம். இன்னும் பல பெண்களுக்கு என் இதயத்தில் இடம் இருக்கிறது என்றான் அவன் பாணியில். ஃப்ளாம்போயன்ஸ் என்ற வார்த்தைக்கு அர்த்தம் பார்த்தால் ராஜேஷ் என்று இருக்குமோ?

அவன் நகைச்சுவையை அவளால் ரசிக்கமுடியவில்லை.

உள்ளே நுழைந்து நந்தினி நீங்க அக்பரை திட்டினீங்களா? என்று கேட்டாள்.

அக்பர் ஒரு பணியாள். நீங்க ஒரு ரிசெப்ஷனிஸ்ட். நீங்க என் முதலாளி இல்லை உங்க வட்டத்தை தாண்டாதிங்க. என் நேரத்தை வீணாக்காமல் வெளியே போங்க என்று பொரிந்து தள்ளினான் ராஜேஷ் கோபமாக.

அதிர்ந்து போய்விட்டாள் நந்தினி. இதுபோல அவன் பேசி பார்த்ததில்லை கேட்டதில்லை. ஏன் இந்த கோபம்? யார் மேல் இந்த கோபம்? எல்லாம் இந்த சண்டாளி வந்த பிறகு தான். யாருக்கு வேண்டும் இந்த ப்ராஜெக்டும் மன்னாங்கட்டியும்.
தலைகுனிந்து அங்கிருந்து விலகினாள். ஓடிச் சென்று டாய்லெட்டுக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டு அழுதாள். நீ ஏன் இப்படி பேசினே என்கிட்ட? காலையில தானே உன் கைபிடிச்சிக்கிட்டு உட்கார்ந்திருந்தேன்? இப்பத்தானே எனக்கு ரோஜாப்பூ கொடுத்தே? ஏன் இப்படி எல்லார் மேலையும் எரிஞ்சு விழற? உனக்கு ஏதாவது பிரச்சனையின்னா என்கிட்ட சொல்லக்கூடாதா? என் மடியில உன்னை படுக்க வைச்சி நான் தலை கோதிவிட்டா உன் பிரச்சினை பறந்து போயிடும்டா? என்ற அரற்றினாள். சில நிமிடங்களுக்கு பிறகு வெளியே வந்தாள். அக்பரும் அவளும் ராஜேஷிடம் திட்டு வாங்கிய விஷயம் அலுவலகத்தில் அனைவரிடமும் சுனாமி போல பரவியது. அனைவரும் ராஜேஷா என்று ஆச்சர்யமாக கேட்டனர்.

தன் சீட்டுக்குச் சென்று ஐயாம் ஸாரி என்று ஒரு இமெயிலை அவனுக்கு தட்டிவிட்டாள். இந்தச் செயலுக்காக அவன் காதை கடிக்க வேண்டும் என்று குழந்தைப் போல நினைத்துக் கொண்டாள்.
ராதிகாவுக்கு ஒரே மகிழ்ச்சி. அப்பாடா தான் சந்தேகப்பட்டமாதிரி இவங்க இரண்டு பேருக்கும் ஒன்றும் இல்லை. அவள் இவனுடைய கேர்ல் பிரண்டாக இருந்தால் இப்படியா திட்டுவான்?

மீண்டும் ராதிகாவிடம் பேசத்துவங்கினான். இன்னொரு போன். இந்த முறை அவன் லேன்ட் லைனில்.

அமைச்சர் சொர்க்கத்தின் உதவியாளரிடமிருந்து ஒரு போன். அமைச்சர் உடனே உங்களை பார்க்க விரும்புகிறார்.

ஆச்சர்யப்பட்டான். அவனுடைய பட்டியலில் இருந்த மூன்றாவது அமைச்சர்.

ராதிகா இன்னொரு கொலை நடக்கும் போலிருக்கு. பயமா இருக்கு. அமைச்சர் சொர்க்கம் இன்டர்வியூ தரேன்னு கூப்பிடறாரு.
சிங்கத்தை அதன் குகையிலே சந்திக்க நான் தயார் என்றாள் அந்த புரட்சிப்பெண்.

மௌனமாக இருந்தான். நிறைய யோசித்தான். வரமாட்டேன் என்று சொல்லவும் முடியாது. பென்சில் எடுத்து 3.30 என்று எழுதினான். பிறகு தான் முதன் முறையாக தான் ஒரு முழு எண்ணை எழுதவில்லை என்று உணர்ந்தான்.

leomohan
01-10-2006, 11:50 AM
கடைசி பேட்டி மர்மத் தொடர் - 19
19
ராதிகாவை மெதுவாக முன்னே போகவிட்டு நந்தினியிடம் வந்தான். அவள் கைகளைத் தொட்டுத் திருப்பி ஒரு போஸ்ட் இட்டை ஒட்டிச் சென்றான்.

அவன் லிப்டுக்குள் சென்றான். அவனுக்கு அக்பர் மீது கோபமில்லை என்று காட்ட அவன் எடுத்து வந்த பேனாவை கழுத்துப் பட்டையுடன் அணிந்திருந்தான். அவனைப் பார்த்து புன்னகைத்தான்.

அவன் லிப்டுக்குள் சென்றதும் ஆவலாய் அதை திருப்பி பார்த்தாள்.
அதிர்ச்சியடைந்தாள்.

சாவு என்னை துரத்துகிறது. அதனால் நீ என்னைத் துரத்துவதை நிறுத்தி விடு.

என்ன பைத்தியக்காரத்தனம் இது. அப்படி சாகவேண்டும் என்றால் ஏன் அந்த வேலையை செய்யவேண்டும்.

ஒரு சிறிய காகிதத்தில் எதையோ கிறுக்கிவிட்டு படி இறங்கி ஓடினாள். அவன் காரில் நுழைந்து கதவை திறப்பதற்காக வெளியே காத்திருந்தாள் ராதிகா. வண்டியில் உட்கார்ந்தவன் காரை திறக்காமல் உள்ளேயிருந்துக் கொண்டு தன் பிரத்யேக போனில் விக்ரமனைத் தொடர்பு கொண்டான்.

சார் அமைச்சர் இன்டெர்வ்யூக்கு கூப்டறாரு. நானும் ராதிகாவும் போகப்போறோம். பரவாயில்லையா?

ஜாக்கிரதையா போயிட்டு வாங்க. நாங்க உங்களுக்கும் அமைச்சருக்கும் பாதுகாப்பு தர்றோம். நீங்க போறதுக்கு முன்னாடி எங்க ஆளுங்களை கட்சிக்காரங்க மாதிரி நிறத்தி வைச்சிடரோம்.

அவருடன் பேசிய பிறகே கதவைத் திறந்து ராதிகாவை உள்ளே அமர்த்தினான்.

ஸாரி ராதிகா ஒரு பெர்சனல் கால்.

பரவாயில்லை என்றாள் பவ்யமாக.

இன்ஜினை தொடக்குவதற்கு முன்பு நந்தினி ஓடி வருவதை பார்த்து வண்டியை விட்டு இறங்கினான். ராதிகா புரியாமல் பார்த்தாள்.
கண்ணாடி ஏற்றியிருந்ததால் என்ன பேசுகிறார்கள் என்று கேட்பது கடினம். ஆனால் அவர்களோ பேசவில்லையே!

ஓடி வந்தவள் அவனருகில் வந்ததும் நடையின் வேகத்தை குறைத்து மூச்சிறைக்க வந்தாள்.

கையிலிருந்த முதல் காகிதத்தை கொடுத்தாள்.

நீ செத்தால் நான் விதவை. என்றென்றும்.

முட்டாள் என்று சொன்னான். அவன் ராதிகாவின் முதுகு புறம் இருந்ததால் அவளால் அவனுடைய முகபாவத்தை பார்க்க முடியவில்லை. என்ன மீட்டிங் நடுவில் வந்து பேசியதால் மன்னிப்பு கேட்டிருப்பாள்.

நந்தினி இன்னொரு காகித்தை நீட்டினாள்.

தேனிலவக்கு எங்கே போகலாம்

கைகளை எடுத்து தலைக்கு வலதுகைப் பக்கம் சுற்றி நீ ஒரு கிறுக்கு என்பது போல பாவனை செய்து விட்டு அவன் அமர்ந்தான்.

அவன் காம்பௌண்டை விட்டு வெளியே செல்லும் வரை பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு தேனிலவுக்கு எங்கே போகலாம் என்ற கனவில் கரைந்தாள்.

leomohan
01-10-2006, 11:51 AM
கடைசி பேட்டி மர்மத் தொடர் - 20
20

அமைச்சர் ரமணி ஆனந்தனின் வீடு. வீட்டிற்கு ஏதிராக வண்டியை நிறத்தினான். தூரத்தில் பின்னாடி ஒரு ஜீப் வந்து நின்றதை கவனித்தான். விக்ரமனாக இருக்கும்.

வெளியே இருந்த காவலாளி வண்டியை நன்றாக சோதனைப் போட்டான். பிறகு வெடிகுண்டு கண்டுபிடிக்கும் இயந்திரத்தை வண்டிக்கு கீழ் உள்ளே விட்டு இழுத்தான்.

வெளியே நிறைய கட்சிக்காரர்கள். இவனுக்கு அவர்கள் போலீஸ் என்று தெரியும். உள்ளே நுழையும் முன்பே இவனை தனியாகவும் அவளை தனியாகவும் சோதனை செய்தனர். நிருபர்களிடம் பேனாவும் பேப்பரையும் தவிர்த்து என்ன இருக்கும். பேனாவால் கொலைசெய்ய முடியுமா? ஆனால் அதையும் எடுத்துக்கொண்டார்கள்.

முதல் தளத்திற்கு அழைத்துச் சென்று ஒரு பெரிய அறையில் அமரவிட்டார்கள்.

5 நிமிடம் கழித்து அமைச்சர் வந்தார். வணக்கம் தம்பி. வணக்கம் அம்மா. நல்லா இருக்கீங்களா?

நல்லா இருக்கோம் சார். நீங்களே கூப்பிட்டு இன்டர்வ்யூ கொடுக்கறது ஆச்சரியமாய் இருக்கு என்றான்.

நேரம் வந்திடுத்து தம்பி அதுக்கு. நீங்க ஒவ்வொரு அமைச்சராய் குறி வெச்சிக் கொலை பண்ணறீங்களாமே. அதனால நானே கூப்பிட்டு என்னால உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டுடலாம்ன்னு தான் கூப்பிட்டேன்.

சார் நீங்க எங்களை தப்பா புரிஞ்சிகிட்டிங்க. நாங்க யாரையும் கொலை செய்யலை. யாரு உங்களுக்கு சொன்னது?

போன் வந்தது தம்பி. நீங்கள் நம்பர் எழுதற பழக்கம் உள்ளவராம். நாலுன்னு எழுதினீங்களாம். மந்திரி பட்டியலை தயார் பண்ணீங்களாம். அதுல இரண்டு பேரை முடிச்சிட்டீங்களாம். மூனாவதா என் பேரு இருக்காம் என்று ஒப்பித்தார்.

யாரோ கூட இருந்து குழி பறிக்கிறார்களா? சே நம்ம கம்பெனியில் யாரும் இருக்க வாய்ப்பில்லை. திரும்பி ராதிகாவைப் பார்த்தான். கொலையெல்லாம் இவள் வருவதிற்கு முன்பே! போலீஸ் சைட்லேர்ந்து லீக் ஆக வாய்ப்பு இருக்கு.

இப்படி அவன் நினைவுகள் ஓடிக்கொண்டிருக்கும் போதே அவர் இவனுடைய பட்டியலின் போட்டோ காப்பியை எடுத்துக் காண்பித்தார்.

சரிதான். போலீஸ் தான் என்று முடிவுக்கு வந்தான்.

சார் நீங்க நினைக்கிறது தப்பு. யாரோ உங்களை குழப்பியிருக்காங்க. நான் கொலையாளியா இருந்தா போலீஸ் என்னை சும்மாவிட்டிருக்குமா?

தம்பி அதைப்பற்றி எனக்குத் தெரியாது.

அறையில் மௌனம். ராதிகாவுக்கு போராக இருந்தது. அமைச்சரின் தமிழ் அவளுக்கு எரிச்சல் மூட்டியது. அறையை சுற்றிப் பார்த்தாள். தனி டாய்லெட். அமைச்சருக்காக மட்டும் இருக்கலாம். உள்ளே போனால் 10 நிமிஷம் ஓட்டலாம். விடுவாரா? கேட்டுப் பார்க்கலாம்.

சார் உங்க டாய்லெட்டை யூஸ் பண்ணிக்கலாமா? நீங்க தப்பா நினைக்கலேன்னா?

தாராளமாக. இதில தப்பா நினைக்க என்ன இருக்கு என்று கை காட்டினார். தாய்குலம் எது கேட்டாலும் செய்ய வேண்டும் என்பது மேலிடத்தின் உத்தரவு.

அவள் எக்ஸ்க்யூஸ் மீ என்று விட்டு நளினமாக நடந்து சென்றாள்.

தம்பி என் மேல ஏதாவது பகையின்னா நாம பேசி தீர்த்துப் போம் என்றார் பொறுமையாக.

கதவு திறக்கும் சத்தம் வந்தது. எல்லாப்பக்கமும் கொலையாளிகள் இருப்பதால் சற்று பயந்து பார்த்தார். அவருடைய ஐந்து வயது பேரன் தாத்தா என்று ஓடிவந்து அவர் மடியில் உட்கார்ந்துக் கொண்டான்.

என்னால உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராது சார் என்று ஆறுதல் கூறினான்.

டாய்லெட்டிலிருந்து வெளியே வந்தாள் ராதிகா. முகம் சற்று மாறியிருந்ததை கவனித்தான் ராஜேஷ்.

போகலாமா என்று அவன் கேட்டு முடிப்பதற்குள் அவள் தன்னுடைய கைப்பையிலிருந்து துப்பாக்கியை எடுத்து அமைச்சரை நோக்கி சுடத்தொடங்கினாள். குழந்தை இருக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் 2 கொலைகள். இல்லை 1.30 கொலைகள். இதுவரை மொத்தம் 3.30 கொலைகள். 3.30 எழுதியதின் அர்த்தம் அவனுக்கு புரிந்தது.

என்ன செய்யறே ராதிகா என்று கத்திக் கொண்டே அவளுருகில் வந்தான்.

கிட்ட வராதீங்க ராஜேஷ் உங்களையும் சுடவேண்டியது வரும் என்று எச்சரித்தப் படியே பின்னால் சென்றாள்.

எதற்கும் தயாராக இருந்த போலீஸ் தடதடவென்று உள்ளே நுழைந்தனர்.

அவர்களில் முதலாக நுழைந்தது துணிச்சலுக்கு பெயர் எடுத்த விக்ரமன்.

அவர் எல்லா காவலாளிகளிடமும் ராஜேஷ்அப்பாவி என்று கூறியிருந்தார். இப்போது அவர்களின் முயற்சி அவனைக் காப்பாற்றவே. ஏனென்றால் அந்த ஒன்றரை ஜீவன்கள் தரையில் உடல் பரப்பி ரத்த வெள்ளத்தில் எப்போதோ மிதந்துக் கொண்டிருந்தன.


ராதிகா சரணடைஞ்சிருங்க. இங்கேர்ந்து நீங்க உயிரோட தப்பிக்க வழியில்லை என்றார் விக்ரமன்.

அது என்னாட கவலை இன்ஸ்பெக்டர். என்னோட வேலை முடிஞ்சிருச்சு அனாவசியமா தலையிட்டீங்கன்னா இன்னொரு உயிர் போகவேண்டியதிருக்கும்.

துப்பாக்கியால் அவன் கழுத்தின் பின் பக்கத்தை நெம்பிய படியே படிக்கட்டில் கீழே இறங்கினாள்.

கேட்டைத்தாண்டி வெளியே வந்தாள். கண் இமைக்கும் பொழுதில் ஒரு வேன் வந்து இருவரையும் உள் இழுத்துக் கொண்டு விரைந்தது. உள்ளே வந்ததும் பாட்டில் ஒன்று அவன் தலையை பதம் பார்த்தது. மயங்கி விழுந்தான்.

leomohan
01-10-2006, 11:52 AM
கடைசி பேட்டி மர்மத் தொடர் - 21 21

ரெயின்போ டிவிக்கு யோகம். சூப்பர் டிவி நிருபர்கள் மூன்று அமைச்சர்களையும் ஒரு அமைச்சரின் பேரனையும் கொன்று விட்டு ஓடிவிட்டார்கள்.

பகிரங்கமாகவே சூப்பர் டிவி குற்றவாளிகள் என்று தலைப்பிட்டு செய்திகள் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.

இவர்களே சில நேயர்களை செட்டப் செய்து இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்க அவர்களும் சொல்லிக் கொடுத்தப் படி ஒப்பித்தார்கள்.

இவங்களை தூக்கில மாட்டனும். பொறுப்பான பொதுவாழ்வில் இருக்கிறவங்களை இப்படி சட்டத்தை கையிலெடுத்துகிட்டு சூப்பர் டிவி நிருபர்கள் செய்தது கொடுமை

சூப்பர் டிவி சீப் பப்ளிசிட்டிக்காக இப்படி பண்ணியிருக்கக்கூடாது என்று நாக்கு மீது நரம்பில்லாமல் பேசிக் கொண்டிருந்தனர்.

செய்தியாளர் நேராக ராஜேஷின் தந்தைக்கு போன் செய்து உங்க மகன் கொலை செஞ்சிருக்கிறதை பத்தி என்ன நினைக்கிறீங்க என்று கேட்க அவர் அதிர்ந்து போனார். அவன் தாயிடமோ சின்ன வயசிலேர்ந்தே உங்க பையன் கொலைகளை செய்வாரா? என்று கேனைத்தனமாக கேள்வி கேட்க அவர் அழுதுக்கொண்டே அவன் அப்படி செய்யமாட்டாங்க. அவன் நல்ல பிள்ளை என்று சொன்னார்.

அவரு அமெரிக்காவுக்கு ஓடி வந்தால் நீங்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுப்பீர்களா இல்லை மறைத்துவிடுவீர்களா என்று செந்தமிழில் இன்னொரு பிதற்றல்.

இல்லை. அவன் தப்பு செஞ்சிருந்தா அவன் தண்டனையை அனுபவிக்கனும். ஆனால் அவன் தப்பு செய்யமாட்டான். அவன் இங்கே வந்தா கட்டாயம் போலீஸ்சுக்கு சொல்லுவோம் என்று விட்டு அழுதுக் கொண்டே இணைப்பை துண்டித்தார்.

டிவி பார்த்துக்கொண்டிருந்த நந்தினிக்கு ஒரே அதிர்ச்சி. என் செல்லக் குட்டியின் பெயரை இப்படி அசிங்கப் படுத்துகிறார்களே என்று. அழுது அழுது அவள் கன்னம் வீங்கி கண் சிவந்திருந்தது. பெண்கள் அழுதால் நன்றாக இருப்பதில்லை. அதுவும் நந்தினி போன்ற அழகு பதுமைகளின் புன்னகையால் உலகை அடக்கலாம்.

அவள் தந்தை தாய் அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தனர். சமயோசிதமாக அவள் தந்தை ராஜேஷின் தந்தைக்கு போன் செய்து நான் ராஜேஷோட நண்பன். நீங்க ஏதுக்கும் பயப்படவேண்டாம். நீங்க அவசரமாக இந்தியா வரவேண்டாம். உங்கப் பையன் எந்த தப்பும் செய்திருக்கமாட்டாரு. நாங்க எல்லாத்தையும் பாத்துக்குறோம் என்று ஆறுதல் அளித்தார்.

இந்த காரியம் செய்ததற்காக அப்பாவை கட்டி அணைத்து முத்தம் இட்டாள்.

ஐ லவ் யு என்று அன்போடு அவள் உச்சந்தலையில் முத்தமிட்டார்.

என் செல்ல தேவதைக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேனடா என்று மகளை அணைத்தார்.

உருகிப்போனார் ராஜேஷின் தந்தை. உங்க போனுக்கும் நீங்க செய்யற உதவிக்கும் ரொம்ப நன்றி என்றார்.

ரெயின் டிவி புழுதி மேல் புழுதி வாரி இறைத்துக் கொண்டிருந்தது.

சூப்பர் டிவியில் ப்ளாஷ செய்தியாக வதந்திகளை நம்ப வேண்டாம். நாங்கள் பொறுப்பான சமூக சிந்தனையுடன் செயல்படும் ஒரு தொலைக்காட்சி. கடைசியான தகவல் காவல் துறையிடம் இருந்து வரும் வரை எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

நந்தினி தன் அறைக்குச் சென்றாள். அவன் கொடுத்த போஸ்ட் இட்களை படித்தாள். அவன் தந்த ரோஜாவை முத்தம் இட்டாள். சீக்கிரம் வந்துற்ரா என்று அதனிடம் பேசினாள்.

leomohan
01-10-2006, 11:52 AM
கடைசி பேட்டி மர்மத் தொடர் - 22 22
கண்விழித்துப் பார்த்தான். மயக்கம் வருவதற்கு முன் கை கட்டுடன் தான் எழுந்திரிக்கப்போறேன் என்று நினைத்துக்கொண்டு தான் மயங்கினான். அதிசயமாக கையில் கட்டு இல்லை.

தலையில் பத்துப் பேர் உட்கார்ந்திருந்தது போல கனத்தது. சட்டையில் ரத்தம். ஒழுகி கசிந்து ஒரு துர்நாற்றத்தை கொடுத்தது. பசித்தது. ரத்தத்தை தொட்டு நாற்காலியில் 8.30 என்று எழுதினான். இரண்டாவது முறையாக முழு எண் இல்லை.

இருட்டான ஒரு அறை. பெரிய பங்களாவின் ஹாலாக இருக்கும். ஒரு டிவி. ரெயின் டிவி ஓடிக்கொண்டிருந்தது.

ரவி ஒரு அறையிலிருந்து இரண்டு தேனீர் கோப்பைகளுடன் வெளிவந்தான்.

இந்தாடா மச்சான் காபி என்றான்.

ரவி நீயா. நீ எப்படி அவங்க கிட்டேர்ந்து என்னை காப்பாத்தி அழைச்சிகிட்டு வந்தே? இது யாரோடு வீடு?

அதெல்லாம் அப்புறம் சொல்றேன். நீ ரெயின் டிவியைப் பாரு என்றான்.

பிதற்றல் செய்திகளும் அவன் அப்பா அம்மாவுடன் நடந்த கூத்துகளையும் பலமுறை காட்டிக் கொண்டிருந்தார்கள்.

இது அநியாயம். அக்கிரம். அனாவசியமா அவங்களை ஏன் தொந்திரவு பண்றாங்க? நம்ம டிவிக்கு கெட்ட பேர் வரவழைக்க சதி பண்றாங்க என்று கத்தினான்.

ரிலாக்ஸ் ராஜேஷ்

டேய் ரவி உனக்குத் தெரியும் நான் கொலை பண்ற ஆள் கிடையாதுன்னு. அந்த ராதிகா டாய்லெட் போனா கன் எடுத்திட்டு வந்த அந்த அமைச்சரையும் அந்த குழந்தையையும் சுட்டுட்டாடா. வெளியே செக்கிங்கல்ல இல்லாத துப்பாக்கி அவள்கிட்டே எப்படி வந்தது? அவள் முதல் நாளே அமைச்சர் வீட்டுக்கு போய் டாய்லெட்ல பதுக்கி வச்சிருந்திருக்கனும்.

கரெக்டா சொன்ன மச்சான். அப்படித்தான் செஞ்சோம். ஆனா பாவம் குழந்தையை எதிர்பார்க்காம கொல்ல வேண்டியதா போச்சு என்றான் ரவி வருத்தத்துடன்.

வாட்? செஞ்சோமா? நீ .... இதுல ... இன்வால்வ்டா? தமாஷ்
பண்ணாதே!

இன்னொரு அறையிலிருந்து ராதிகா வெளியே வந்தாள்.

இன்னும் என் அண்ணா இவன்கிட்ட பேசிகிட்டு? அடிச்சி ரோட்ல போடுங்க என்று ஆக்ரோஷமாக சொல்லிவிட்டு நேராக அவன் அருகில் வந்து அவன் முகத்தில் ஒரு குத்துவிட்டாள்.

குடித்துக் கொண்டிருந்த தேனீர் கீழே கொட்ட முகத்திலிருந்து ரத்தம் ஒழுக தொடங்கியிருந்தது.

ரா...தி...கா என் மேல எ..துக்..கு இத்தனை கோபம் என்று கர்ச்சீப்பால் மூக்கை அழுத்திக் கொண்டு பேசினான்.

ரிலாக்ஸ் ராதிகா. உட்காரு.

ராதிகா என் தங்கை என்றான் ராஜேஷை நோக்கி புது அறிமுகம் பாணியில்.

என்ன ராதிகா உன் தங்கச்சியா?

ஆமாம் மச்சான்.

பட் இதெல்லாம் எதுக்காக? நான் என்ன தப்பு பண்ணேன்? ரவி உன்னால எப்படி?

நீ என்ன விட ஸ்மார்டா இருக்கிறது தப்பு. கர்ணா ஸ்டோர்ஸ் 13 கோடி கான்ட்ராக்ட் எனக்கு போட்டியா எடுத்தது தப்பு.

என்னடா சொல்ற? அதுக்கும் இந்த கொலைகளுக்கும் என்ன சம்பந்தம்.

இருக்குடா. அந்த கான்டராக்ட் எடுத்தா என் பாஸ் 25 லட்சம் தருவேன் சொல்லியிருந்தார். அதை வெச்சித்தான் என் முதல் தங்கச்சிக்கு பெரிய எடத்துல கல்யாணம் ஏற்பாடு செஞ்சிருந்தேன். நீ அந்த ஆர்டர் எடுத்ததால எனக்கு பணம் கிடைக்கலை. அதனால இன்னிக்கும் என் தங்கச்சி ஒரு நடை பிணமா வாழ்ந்துகிட்டு இருக்காடா. எல்லாத்துக்கும் நீதான் காரணம் என்றான் குரலில் வெறியோடு.

டேய் இது நியாயமா? அப்படியே என் மேல கோபம் இருந்தா என்ன கொன்னுட்டு போயிருக்கலாமே? எதுக்கு இத்தனை கொலைகள்?
நீ சாகக்கூடாது. உன் பேரு கெட்டுப்போகனும். அதோட அந்த சூப்பர் டிவி பேரும் கெட்டுப் போகனும்.

நீ வேலையில்லாம இருந்தப்ப வேலை கொடுத்த நம்ம பாஸுக்கா இந்த துரோகம்?

என்ன பொல்லாத வேலை. காமிராமேன். நான் சீஃப் ரிப்போர்டரா இருந்தேன்டா ரெயின் டிவியிலே!

அப்ப நீதான் என் வீட்ல சிலிப் வெச்சியா?

இல்லை நண்பா. அதுக்குத் தான் மூளையை உபயோகம் செய்யனும். நீ என்னை ஹெட்போன்ல பாட்டு கேக்கறவன்னு தானே நினைச்சே? நான் ஜாயின் பண்ண நாள்ளேர்ந்த உனக்கு வர்ற போன் கால்லாம் ஒட்டுக் கேட்டுகிட்டு இருந்தேன். எப்படியாவது உன்னை அழிக்க நல்ல சந்தர்ப்பத்திற்காக கொக்கு மாதிரி காத்திருந்ததேன்.

வியப்பில் முன்னாள் நண்பனை நோக்கினான் ராஜேஷ்.

உன் ரூம்ல காமிரா ஃபிட் பண்ணியிருக்கேன்டா. பவர்ஃபுல் ஜும் காமிரா. உன் தலை மயிரை கூட எண்ணிடலாம். அதை வெச்சு நீ மார்க் பண்ண நாலு பேரோட பெயர்களை தெரிஞ்சிகிட்டேன்.

உன் வீட்டுக்கு போன் போட்டேன். ரங்கனை ஐயாயிரம் கொடுத்து எழுதச்சொன்னேன். பணம் கொடுத்து என் முதல் தங்கச்சித்தான். பிணமா இருந்தாலும் நிக்க வெச்ச இடத்தில நிப்பா.

நீலவாணனை தலைகாணியால கொன்னேன். கரிகால வளவனுக்கு பெண் வீக்னஸ். முதல்ல ஒரு விலை மாதுவை அனுப்பனேன். இருட்ன பிறகு ராதிகாவை அனுப்பி அவர் கழுத்த அறுத்துட்டேன். எல்லாத்திலேயும் உன்னை மாட்டி வைக்கத்தான் இந்த திட்டம்.
உலகத்துக்கு நான் நல்லவன். ஊரைப் பொருத்தவரையிலும்

ராதிகாவும் நீங்களும் தப்பிச்சு போயிட்டிங்க. ராதிகா தலைமறைவா இருந்துட்டு ஒரு புது வாழ்கை தொடங்கிடுவா. என் ரெண்டு தங்கச்சியோடு வாழ்கை செட்டில் பண்ண முதலாளி 50 லட்சம் தர்றேன்னு சொல்லியிருக்காரு. 25 லட்சம் அட்வான்ஸ் வாங்கிட்டேன்.

முதலாளியா?

ஆமாம் டா. ரெயின் டிவி முதலாளி. இந்த நிகழ்ச்சியை வழங்கியர்கள் ரெயின் டிவி என்றான் சினிமாவில் வரும் வில்லனைப்போல்.

ராதிகா அவனிடம் வந்து ஏன்னா நேரம் வேஸ்ட் பண்ணிகிட்டு இருக்கே. இவனை அடிச்சு ரோட்ல போட்டுட்டு சீக்கிரம் இங்கிருந்த கிளம்புவோம்

ஒரு நிமிஷம். நான் அடி வாங்கறதுக்கு முன்னாடி கடைசியா ப்ரைம் ஸ்லாட் போடறியா?

ஹா ஹா என்று சிரித்துக் கொண்டே ரிமோட்டால் சானலை மாற்றினான்.

சூப்பர் டிவியில் ஒரு இருட்டறை இரண்டு ஆண்கள் ஒரு பெண் தெரிந்தனர். லைவ் என்று வந்தது. ராஜேஷ் சரியாக தெரியவில்லை. மூக்கில் ரத்தம் காமிராவில தெரிந்தது. ராதிகா அவனருகில். ரவியும் தெரிந்தான்.

மச்சான். இன்னிக்கு கிடைச்ச கிஃப்ட்டை கழுத்துல போட்டிருக்கியே அது மைக்ரோ ட்ரான்ஸ்மிட்டர். திருவிக்ரமனும் அவங்க ஆளுங்களையும் வழி நடத்தி இங்கே கொண்டு வந்திருக்கும். நான் போட்டிருக்கனே இந்த பேனா மைக்ரோ காமிரா. வெளியே தான் சூப்பர் டிவியோட மொபைல் ஸ்டியோ ட்ரான்ஸ்மிட்டர். இந்தப் ப்ரோக்ராம் லைவா சூப்பர் டிவியில வந்திட்டிருக்கு.

அதிர்ச்சியில் உறைந்து நின்றனர் இருவரும். சட்டென்று பையிலிருந்த துப்பாக்கியை எடுத்து ராஜேஷை சுடச்சென்றான் ரவி. பின்புறம் கதவை உடைத்துக் கொண்டு விக்ரமன் சந்திரமுகி ரஜினி காப்பியை தட்டி விட்டது போல துப்பாக்கியை தட்டி விட்டு அவனை கீழே தள்ளினார். ஓடச் சென்ற ராதிகாவை இரு காவல் அதிகாரிகள் தாவிப்பிடித்தனர்.

பேனா காமிராவை கழற்றி முகத்தின் முன்னே வைத்து நீங்கள் இதுவரை பார்த்தது ஒரு லைவ் நிகழ்ச்சி. வழங்கியது உங்கள் ராஜேஷ் சூப்பர் டிவியிலிருந்து. உலகின் நம்பர் ஒன் சானல் என்று விட்டு விக்ரமனை பார்த்து சிரித்தபடியே வெளியேறினான்.

சிறிது தூரம் நடந்த அவன் திரும்பி வந்து சார் ஒரு போன் பண்ணிக்கிறேன் என்று விக்ரமனின் போனை வாங்கி நந்தினிக்கு போன் செய்தான்.

இவன் குரலை கேட்டதும் அவள் உயிர்த்தெழுந்தாள்.

கலக்கிட்டீங்க என்றாள்.

ஒரு முக்கியமான வேலை இருக்கு என்றான்

செத்துப்பிழைத்து வந்தவன் ஐ லவ் யூ சொல்லாமல் எப்ப பார்த்தாலும் என்ன வேலை?

சொல்லுங்க என்றாள் கடுப்புடன்.

உன் மொபைல்ல ரிக்கார்டர் இருக்கா?

இருக்கு.

ரிக்கார்ட் பண்ணிக்கோ.

பேசுங்க.

உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வானத்தை தொட்டாள்.

leomohan
01-10-2006, 11:53 AM
கடைசி பேட்டி மர்மத் தொடர் - 23 முற்றும்.
இதுவரை இந்த தொடர்கதையை பொறுமையுடன் படித்ததற்கு மிக்க நன்றி. இதைப் பற்றி தங்கள் விமர்சனங்களை எழுதினால் மகிழ்ச்சி கொள்வேன்.

pradeepkt
03-10-2006, 11:49 AM
யோவ்... எப்படிய்யா இவ்வளவு பொறுமையா பெரிசா நாவல் எழுதிருக்கீங்க... நல்ல ராஜேஷ் குமார் நாவல் படித்த அனுபவம் கிடைத்தது

பாராட்டுகள்

leomohan
03-10-2006, 01:23 PM
நன்றி பிரதீப். நல்ல கேள்வி கேட்டீர்கள்.

நான் சுமார் 15 நாடுகள் சென்றுள்ளேன். இந்தியாவைத் தவிர்த்து எந்த நாட்டிலும் 5 மணிக்கு மேல் வேலை செய்யும் கட்டாயம் இல்லை. அதனால் தாமதமாக தூங்கும் எனக்கு ஒரு நாளே 48 மணி நேரம் போல் தோன்றுகிறது.

தமிழ் சாஃப்ட் என்ற நிறுவனம் 2000-ம் ஆண்டிலேயே தமிழ் தட்டச்சு பயில ஒரு மென்பொருள் உருவாக்கியது. ஆங்கிலத்தில் நான் 83 வார்த்தைகள் அடிப்பேன் ஒரு நிமிடத்திற்கு. அதனால் சுலபமாக 45 வார்த்தைகள் தொட முடிந்தது என்னால்.

நான் என்னுடைய 13 வயதிலிருந்து கதை கவிதைகள் எழுதி வருகிறேன். ஆனால் பிரசுரிக்க முயலவில்லை. நீங்கள் படித்த ஞானி தொகுப்பு 1990-ம் ஆண்டில் எழுதியது.

யூனிகோட் முறையில் மாற்றி பதிக்கிறேன். ஆகையால் முன்பே எழுதிவிட்டதால் சுலபமாக அதிக பதிவுகளை தர முடிகிறது.

இப்போது யூனிகோட் முறையில் தட்டச்சு பயில்வதால் நேரடியாகவே உங்களுக்கு பதில் தட்டுகிறேன். ஆனால் வேகம் அதிகம் இல்லை. :)

pradeepkt
04-10-2006, 04:54 AM
சபாஷ். உங்கள் நேரத்தைப் படைப்புகள் உருவாக்குவதற்குப் பயன் படுத்துவமைக்குப் பாராட்டுகள்.
உங்கள் கதையை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அரை மணி நேரத்துக்கு மேல் ஆனது. இதை அனைவரும் செய்வார்களா என்று தெரியாது. எனவே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அத்தியாயம் என்று போட்டுக் கலக்குங்கள். மன்றத்தில் இதற்கு முன் பலர் அப்படித் தொடர்கள் எழுதிக் கலக்கி இருக்கிறார்கள்.

leomohan
04-10-2006, 05:38 AM
நன்றி பிரதீப். அவ்வாறே செய்கிறேன்.

pathman
27-10-2006, 06:10 AM
நான் ராஜேஸ் குமாரின் மர்ம நாவல்கள் மற்றும் சுஜாதாவின் விஞ்ஞான புனைகதைகளை வாசிப்பவன் என்ற வகையில் திரு லியோ மோகன் அவர்களுக்கு நன்றிகள் பல. ராஜேஸ் குமாரின் மர்ம நாவல் ஒன்றை படித்தது போன்ற ஒரு உணர்வு.

leomohan
27-10-2006, 07:32 AM
மிக்க நன்றி பாத்மன். மெல்லக் கொல்வன் கதையை படித்துவிட்டும் உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

guna
28-10-2006, 05:33 AM
அருமையா எழுதி இருகறீங்க மோகன்..

விருவிருப்பான மர்ம கதையில,ஒரு அழகான காதலை சொல்லி கலகிட்டீங்க..
வாழ்துக்கள் மோகன்..
_______________________________________________________________
குணா

leomohan
28-10-2006, 07:49 AM
மிக்க நன்றி குணா. கதையை படித்து பாராட்டிய அனைவரும் இதில் இருந்த மர்மகதையை கண்டு பாராட்டினார்கள். நீங்கள் தான் அதில் இழையோடிய காதல் கதையை கண்டிருக்கிறீர்கள். நன்றி.

leomohan
03-11-2006, 03:34 PM
அனைவருக்கும் நன்றி. இந்த தொகுப்பையும் இம்மன்றத்தில் மின் புத்தகப் பகுதியில் ஏற்றியுள்ளேன்.