PDA

View Full Version : சின்னதாய் நிறைவாய் ஒரு பயணம்



umanath
28-09-2006, 01:14 PM
சின்னதாய் நிறைவாய் ஒரு பயணம் - 1 & 2

பெங்களூரில் இருந்து திருச்சி செல்லும் பேருந்து ஏறி "காலை ஆறு மணிக்கு திருச்சியில் இருப்பேன்" என்ற குறுந்தகவலை கல்லூரி கணினி துறைத்தலைவருக்கு (HOD) அனுப்பி உறங்க சென்றேன். 11 மணிக்கு.."சார் நாளை காலை வருகின்றீர்களா?". "ஆமாம்"..அலைபேசியில் துறைத்தலைவர் அழகவேல். பின்னர் தான் தெரிந்தது நான் இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்கு வருவதாக நினைத்துக்கொண்டு இருந்தார் என்று. காலை 7 மணிக்கு திருச்சி வந்தடைந்துவிட்டேன். திருச்சியை ஒரு சுத்து சுத்தினேன். சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் சென்று, மீண்டும் சத்திரத்திற்கே வந்தேன். இரண்டு மாணவர்கள் என்னை அழைத்து செல்வதற்காக வந்திருந்தனர்."சார் எங்க இருக்கீங்க". "ஐயங்கார் பேக்கரிக்கு கீழே.ஒல்லியா இருப்பேன்.." சரி சார்"..நான் அவர்களை அடையாளம் கண்டுவிட்டேன். அவர்களுக்கு அதிர்ச்சி...இவனா ஒல்லி?

நான் சென்றது தனலட்சிமி சீனிவாசன் பொறியியல் கல்லூரிக்கு. "கேலிஸ்டோ" என்ற தேசிய அளவிலான தொழில்நுட்ப சிம்போசியம்(தமிழில் என்னங்க??) சிறப்பு விருந்தினராகவும், நீதிபதியாகவும். கல்லூரி இருப்பது பெரம்பலூரில்.திருச்சியில் இருந்து சுமார் 55 கி.மீ தொலைவில். கல்லூரி பேருந்தில் திருச்சியில் இருந்து புறப்பட்டோம். கார்திக், இனியன் என்ற மாணவர்கள் என்னை கவனித்து கொண்டனர். எங்க பார்த்தாலும் மச்சி, மாமா, துள்ளலான பேச்சுக்கள், கிண்டல்கள். பேருந்தின் முற்பாதியில் ஆண்களும் பிற்பாதியில் பெண்களும். கல்லூரியை பற்றியும் சுற்றி இருந்த மாணவர்கள் பற்றியும் விசாரித்து வந்தேன். வழியில் தென்பட்ட எல்லா கல்லூரிகளை பற்றியும் மாணவர்கள் காட்டினர்.

ஹோட்டலில் குளித்து முடித்து கல்லூரிக்கு செல்லும் முன்னரே துவக்க விழா துவங்கிவிட்டது. கல்லூரியே மங்களகரமாக இருந்தது, மாணவிகள் சேலைகளில்,மாணவர்கள் ஷூ டையுடன். எங்கும் புன்னகை. விழா நடந்த அரங்கிற்கு அழைத்து சென்றனர். சுமார் முன்னூறு மாணவர்கள். பின்னாடி போய் உட்காரலாம் என இடம் பார்த்தேன். அதற்குள் மேடைக்கு அழைத்து சென்றுவிட்டனர். மேடையில் இருந்த கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர். ஆஹா கிளம்பிட்டாங்கையா...நமக்மெல்லாம் இது ஓவரப்பான்னு நினைப்பதற்கு ம ுன்னால் "கல்லூரி முதல்வர் உமாந்தை கெளரவரிப்பார்" என்று அறிக்கை. நம்ம வளத்தி தெரியாததால் சால்வையும் துண்டு போல தான் இருந்தது. ஒரு பிள்ளையார் சிலை வேற. இந்த மேடைக் கலாச்சாரம் எல்லாம் தேவையான்னு புரியவில்லை. யார் யாரோ பேசினார்கள். நிஜத்தை சொல்ல வேண்டுமானால் கோபம் தான் வந்தது. மாணவர்களுக்கு சொல்லாக்கூடாத விடயங்கள் மட்டுமே சொல்லப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு பயன்படும் செய்திகளை விட்டுவிட்டு போலி புகழ்ச்சியும், தன் அறிவுஜீவிதத்தை காட்டும் காரியம் மட்டுமே நடந்தது/நடக்கின்றது.


போட்டிகள்..

காலை 11 மணிக்கு மாணவர்கள் தங்கள் கட்டுரைகளை சமர்பித்தன்ர். இரண்டு அரங்கில் போட்டிகள் நடந்தது, நானும் அஸ்ரப் என்னும் நண்பனும் (முதல் நாள் பழக்கத்திலேயே "டா" போட்டு அழைத்த நண்பர்களில் இவனும் ஒருவன்) நீதிபதிகளாக அமர்ந்தோம். மாணவர்கள் ஆர்வத்துடன் தங்கள் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். ஒரு சின்ன குழப்பம் ஆங்கிலத்தில் இதை Paper Presentation என்கின்றோம், தமிழில் என்ன சொல்ல? ஆய்வறிக்கை ? கட்டுரை? ஆய்வுக்கட்டுரை? ஆனால் இவர்கள் சமர்பித்தது பெரும்பாலும் கட்டுரைகள் மட்டுமே. எந்த ஆய்வும் நடந்ததாக தெரியவில்லை." கூகிளில் ஆய்வதெல்லாம் ஆய்வாகாது?". இது என்றால் என்ன? அது என்றால் என்ன? போன்ற கட்டுரைகளே வந்திருந்தது. அப்படியே வந்தவைகளிலும் ஆழமான பார்வைகள் புரிதல்கள் மிக மிக குறைவாகவே காணப்பட்டது.

மாணவர்களிடம் மிக எளிதான வினாக்களை மட்டுமே எழுப்பினேன், அவை இன்னும் தாங்கள் தேடலில் பாதையினை கண்டுகொள்ளவே. போட்டிக்கு பின்னர் "என்ன சார் இப்படி கொடஞ்சி எடுத்துவிட்டீர்கள்" என்று கேட்டன்ர் மாணவர்கள். அவை எல்லாம் அவர்கள் நல்லதிற்கே என்று காலம் புரியவைக்கும். தீச்சுவர் Firewall பற்றி கட்டுரை சமர்ப்பித்த மாணவர்களிடம் "உங்கள் கல்லூரியில் என்ன தீச்சுவர்?" என்றதற்கு பதிலில்லை. "சரி என்ன பரிந்துரைக்கின்றீர்கள்?"...முதலில் நம்மை சுற்றி இருக்கும் விடயங்களை பற்றி தெரிந்து கொண்டு இருக்க வேண்டும் அல்லவா? மேலும் படித்ததை எல்லாவற்றையும் நடைமுறை படுத்தி பார்க்கவேண்டாமா? சரி எல்லாவற்றையும் பரிசோதிக்க முடியாது..அந்த முயற்சி கூட இல்லாவிட்டால்?

மணி 2.30 .புதிய செய்திகள் கேட்கும் ஆர்வத்தில் பசிக்கவில்லை..அதிசயம்தாங்க..நல்ல சாப்பாடு. மீண்டும் மதியம் மற்றொரு அரங்கில் கட்டுரை சமர்பித்தனர். நல்ல ஆய்வுகளும் வந்திருந்தன. இந்த எண்ணிக்கை அதிகமாக வேண்டும் என்பதே ஆவல். ஆவல் மட்டுமல்ல அதுவே வளர்ச்சி. இணையத்தில் பாதுகாப்பு, மறையீட்டியல்,இதயத்தில் இருந்து அலைபேசிக்கு, மருத்துவத்தில் நேனோ, மெம்ஸ், என்று பல்வேறு துறைகளில் கட்டுரைகள் இருந்தது. பல மாணவர்கள் நல்ல முயற்சிகளை மேற்கொண்டு இருந்தனர். எல்லாவற்றையும் முக்கியம் அந்த ஆர்வம். அவர்களுக்கு தேவைப்படுவது ஒரு வழிகாட்டுதலே..

மாலையில் வளாகத்தை சுற்றி வந்தோம். ஆறு வருடத்தில் அதீத வளர்ச்சி தான். சுமார் 6-7 நிறுவனங்கள் உள்ளே இருக்கின்றது. விடுதிகளும் உள்ளே இருக்கின்றது. எங்கும் மாணவர்கள். ஒவ்வொரு நிகழ்வும், மாணவனும் எந்த கல்லூரி நிகழ்வையாவதும், ஏதாவது நண்பனை நினைவு கூர்ந்து வந்தது. பச்சைபசேல் என்று எங்கும் செடிகள். உள்ளே கரும்பு தோட்டம் வேறு இருந்தது. "சார் மாலை 6.30 மணிக்கு கலை நிகழ்ச்சி. அது முடிந்ததும் எல்லோருக்கும் உணவு. கண்டிப்பாக இருந்துவிட்டு அறைக்கு போகனும்" துறைத்தலைவரின் வேண்டுகோள்.

நீண்ட வருடங்கள் பிறகு மேடையில் பாடினேன்..விவரமாக விரைவில்..

umanath
28-09-2006, 01:24 PM
சின்னதாய் நிறைவாய் ஒரு பயணம் - 3 * 4

http://vizhiyan.wordpress.com/2006/09/28/back-to-college-2/

கலைநிகழ்ச்சி

மாலையில் ஒரு குளுகுளு அரங்கில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. சினிமா பாடல்கள், நடனங்கள் என்று மாணவர்கள் கலக்கினார்கள். கூச்சலும் கும்மாளமும் நிறைந்து இருந்தது. ஒரு மாணவி பாடச்சென்று மாணவக்கூட்டத்தில் இருந்து சத்தம் கிளம்ப சிரித்துக்கொண்டே பாதியில் மேடையில் இருந்து இறங்கினாள். நிச்சயம் அந்த மாணவிக்கு ஒரு சபாஷ். தன்னை கிண்டலடித்ததையும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளும் குணம் காண்பது அரிதல்லவா.. முதலாண்டு மாணவர்கள் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி செய்தனர். மேடையில் ஒரு பென்ச் போட்டு ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜை மிஞ்சும் அளவிற்கு விரல்களில் மேலதாளம் போட்டனர். விசில் அடிக்கலாம் என்று கை சென்றுவிட்டது, அடங்கு உமாநாதா என்று நிறுத்திவிட்டேன். வெளி கல்லூரியில் இருந்து வந்த மாணவி ஒருத்தி திடீரென மேடையேறி ராரா..பாட்டுக்கு பரதம் ஆடினாள்.அனாயசமான ஆட்டம். முழு பாடலுக்கு சிரித்தபடி, அபினயங்கள், கோபம் என்று பாவங்கள் விளையாடின. எங்கிருந்து வந்த உத்வேகம் தெரியவில்லை, அடுத்து நான் பாடுகின்றேன் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் சொல்லி விட்டேன். டொய்ன் டொய்ன்ன்னு மேடைக்கும் சென்று விட்டேன். நான் மேடைக்கு போய் பாடுகின்றேன் என்றது, ஏண்டா இந்த வேண்டாத வேலை, பசங்க பாவம் என்றான் அஸ்ரப்.

ரொம்ப நாள் ஆச்சு மேடையில் எல்லாம் பேசி. கணினியை கை தொட்டதில் இருந்து இந்த மாதிரி சந்தர்பங்கள் மிக குறைவாகவே கிடைத்தது. அதுவும் கல்லூரி கலை நிகழ்ச்சிக்கெல்லாம் போவதே இல்லை. அது வரை எல்லோரும் ஆங்கிலத்தில் பேசியபடியாலும் நான் தமிழில் "அனைவருக்கும் மாலை வணக்கம்" என்றவுடன் கைதட்டல். மேடையில் இருக்கும் போது கைதட்டல் நாம் இன்னும் பேசவா இல்லை பேசியதும் அறுத்ததும் போதும்டா கீழ இறங்குன்னு சொல்வதற்கா என்று தெரியாது..:"சிவ பூஜையில் கரடி புகுந்தது போல உங்க பூஜையில நான்..எனக்கும் ஆடனும்னு ஆசை தான்..ஆனா.." என்று ஆரம்பித்து.."வெறும் சினிமா பாடல்கள் மட்டுமல்ல பாட்டு, இன்னும் ஏராளமான பாடல்கள் உள்ளது, அதே போல சிரிப்பு மட்டுமல்ல கலை, அழுகை, கோபம், கீரல்,ரணங்கள்,பாசம் நேசம் பற்றி பல விஷயங்களையும் தொட வேண்டும், உங்களுக்காக ஒரு அம்மா பாடல்..." என்று சிறிது நேரம் பேசி பாடினேன். (ரமணன் + விபாகை சந்திப்பில் பாடிய பாடல்). அது கொஞ்சம் அம்மா செண்டிமெண்ட் பாடல் ( அம்மான்னா பிரச்சனை வந்துவிட போகின்றது :-) சாரிங்க தாய் பற்றிய பாடல்). மேடையில் இருந்து கிழே வரேன் பெண்கள் முகத்தில் அங்கும் இங்கும் கண்ணீர்.அடடா ஜாலியா இருந்தவங்களை இப்படி பண்ணிட்டேனே என்ற வருத்தம்.. சீட்டில் வந்து உட்கார்ந்தால் நம்ம அஸ்ரப்பும் கண்ணை துடைக்கின்றான்.கை கொடுத்து.."கலக்கிட்ட மா". ஒரு நிறைவு தான். நிகழ்ச்சி முடிந்தது சாப்பாடு.

தொழில்நுட்ப புதிய செய்திகள் தெரிந்து கொண்டு உமாநாத் நிறைவடைந்தான், கலை நிகழ்ச்சியில் கலைரசிகன் நிறைவடைந்தான். இரவு உணவினை ஆனந்தமாக உண்டு பாப்பாவும் 'பூரி'ப்படைந்தைது. இரவு உணவினை ஒரு மைதானத்தில் வைத்தனர். சைவமும் இருந்தது, அசைவவும் இருந்தது. என்ன செய்ய யாரும் வருத்தம் கொள்ள கூடாது என்று இரண்டுமே உண்டேன். சார் ஒரு மீன் ..சார் ஒரு பரோட்டா, சார் தயிர் சாதம். சார் சிப்ஸ்..நடக்க முடியாமல் நடந்து காரில் ஹோட்டலுக்கு சென்றோம். நான்,அஸ்ரப், தீபக், சாதிக் என்ற இரண்டு மாணவர்களும். என் அறைக்கு சென்று குளித்துவிட்டு அஸ்ரப் அறைக்கு வந்தேன். அஸ்ரப் அன்று இரவே கோவை செல்ல வேண்டுமாம். அவனுக்கு எங்களை விட்டுச்செல்ல மனதே இல்லை. 9.30 மணிக்கு போகிறேன், 9.45, 10.00 ,10.15 என்று கடைசியாக 10.30 மணிக்கு பேருந்தில் ஏற்றிவிட்டோம். சாதிக்கும் வீட்டிற்கு சென்றான். தீபகை என்னோடு தங்குமாறு கேட்டுக்கொள்ள அவனும் என் அறையில் தங்கினான். இரவு 2 மணி வரை பேசிக்கொண்டு இருந்தோம். எனது கல்லூரி வாழ்கை, காதல், கடலை, பெங்களூர் வாழ்கை, எழுத்து...அவனது குடும்பம், கல்லூரியில் சுவாரஸ்ய சம்பவங்கள், கலாட்டாக்கள்..ஏதோ ஒரு இடத்தில் ஊங் குட்டியபடி உறங்கிவிட்டிருந்தேன்..


இரண்டாம் நாள்.

காலை எழுந்து ஒரு புத்தகத்தை முடித்தேன். அகிலன் எழுதிய "நான் கண்ட ரஷ்யா." 1970களின் பின் பகுதியில் அவர் பயணத்தை பற்றிய கட்டுரைகள். தீபக்கும் பொறுமையாக எழுந்தான். இரவு அவன் தூங்கவில்லை என்று நினனக்கிறேன். லொக் லொக்னு இரும்பியபடி இருந்தான். மூன்று மணிக்கு எழுந்து ஏ.சியை நிறுத்துவிட்டு தூங்கினான். "அண்ணா நான் ரூமுக்கு போய்விட்டு குளிச்சிட்டு வரேன்..நீங்க ரெடியாயிடுங்க..'.."இருடா காபி சாப்பிடுவோம்..". காபி அருந்துவிட்டு கிளம்பினான். தொலைக்காட்சியில் பூஜ்ஜியத்தில் இருந்து 85 சேனல் வரை இரண்டு முறை சென்று பிறகு கிளம்பினேன். அன்று தான் புதிதாக "மக்கள்" என்ற தனியார் தொலைக்காட்சியை பார்த்தேன். வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. இலக்கியம் சார்ந்த பல நிகழ்வுகள், சந்திப்புகள், புத்தக விமர்சனம் என்று வந்தது. யார் நடத்துகின்றார்கள் என்ற செய்தி தெரியவில்லை. நிச்சயம் இது மாறுபட்ட ஒரு முயற்சி.

"45 நிமிடத்தில் முடிச்சிடுங்க" என்று அழகவேல் சொல்லிவிட்டு அரங்கிலிருந்து கிளம்பிட்டார். காலை மணி 10.30. மாணவர்கள் அனைவரும் உற்சாகத்தோடு இருந்தனர். "தமிழில் பேசலாமா? ஆங்கிலத்திலா? " என்றேன். இரண்டிலும் பேசினேன். நேர ஆளுமை பற்றி சின்ன உரையாடல். "உங்களுக்கு நேரம் இருக்கா?.." என்று ஆரம்பித்து எப்படி நேரத்தை விரயப்படுத்துகின்றீர்கள், நீங்கள் போகவேண்டிய பாதை எது? போக வேண்டிய ஊருக்கு இன்னும் பேருந்து எங்கிருக்கின்றதே தெரியாமல் இருக்கின்றீர்களே? நாளை நிலைமையை பற்றி யோசித்தீர்களா? உங்களுக்குள் என்ன தனித்திறமைகள் இருக்கின்றது? அதை வளர்க்கின்றீர்களா? என்று கேள்விகளையும் அவர்கள் சிந்திக்குமாறு சில வினாக்களையும் தொடுத்து உரையை முடித்தேன். ஆங்காங்கு சோர்ந்த முகங்கள். சரி நம் பேசியது ஏதோ சில மாணவர்களுக்காவது சேர்ந்தது என்ற நிம்மதி. இன்று சோர்வுடன் இருந்தாலும் நாளை அது உற்சாகமாக மாறும் என்ற நம்பிக்கையில்...

பின்னர் மேடை போட்டிகள் நடந்தது. 5 நிமிடத்தில் சொல்லும் ஒரு பொருளை விற்பனை செய்யவேண்டும், ஒரு நிமிடத்தில் ஏதாவது ஒரு தலைப்பில் பேசவேண்டும், 1 நிமிடம் அந்த தலைப்பிற்கு ஆதரவாகவும், அடுத்த நிமிடம் எதிர்த்தும் பேச வேண்டும்.சரக்கு போதவில்லை. நிறைய வாசித்து இருந்தாலே இது சாத்தியாமாகும். கொஞ்சம் ஆனந்தமாக சென்றது அந்த நிகழ்ச்சிகள். AXE Effectக்கு பதில் சாக்ஸ் Effect என்று விற்பனை செய்தனர். இன்னும் நிறைய போட்டிகள். தனியாக C Debugging போட்டியும் நடந்தது. அந்த போட்டியை காண கூட செல்லவில்லை. ஒரு காலத்தில் ஊருக்கே Debug செய்த காலம் உண்டு, கல்லூரியில் தான். (இப்படியே பேசுடா நீ..அந்த காலத்தில..சின்ன வயசில..ஒல்லியா இருக்கும் போது...போடாங்க...)

மதியம் மல்டிமீடியா காட்சிகள். இதுவும் போட்டி தான். சுனாமி ஏற்படுத்திய பாதிப்பு, புகை நமக்கு பகை, நல்ல சிந்தனைகள் போன்றவற்றை மையமாக வைத்து மாணவர்கள் தங்கள் வேலைகளை காட்டினார்கள். மாலை நிறைவு விழா.மிண்டும் ஒரு வழக்கமான நிகழ்வு. மாணவர்கள் தங்கள் இரண்டு நாள் அனுபவத்தினை பகிர்ந்தனர். நானும் இரண்டு வார்த்தை பேசினேன் (நன்றி வணக்கம் இல்லைங்க..) இரண்டு வார்த்தை என்றால் இரண்டு அல்ல..என்னை அழைத்த அழகவேலுக்கு நன்றி தெரிவித்தேன். இத்தனை சிறப்பாக ஒரு நிகழ்ச்சி நடக்கின்றந்தென்றால் அதன் பின்னால் எத்தனை சண்டை, வேர்வை, உழைப்பு இருக்கும் என்று தெரியும், அவர்களுக்கு முதல் நன்றி & பாராட்டு என்றேன்.. பலத்த கரகோஷம். (இறங்கிடு...போதும்..)

தீபக் என்ற புதிய உறவு...

நான் எத்தனை முறை சார் எல்லாம் வேண்டாம் டா..நான் யூத்டா ஒழுங்க உமான்னு கூப்பிடு இல்ல அண்ணா ஓகெ என்றேன் இவனிடம். அப்பொழுதும் சார் சார் தான் வந்தது அவன் வாயில். ஊருக்கு கிளம்பும் போது தான் வாய் நிறைய அண்ணா அண்ணா என்றான்.ஒத்த கருந்துள்ள நண்பர்களை எங்காவது காணும் போது தான் எத்தனை ஆனந்தம் போரின்பம். அதுவும் எதிர்பார்க்காத ஊரில், எதிர்பார்க்காத இடத்தில்..ஓடி ஓடி வேலை செய்தான். பம்பரமாக சுற்றினான். பஸ்சில் போகலாம் டா...வேணாம் சார் காரில் போகலாம்...இப்படி திரும்பினால்..என்ன சார் வேணும்..? டேய் அமைதியா இருடா என்று பாச வசனங்கள்..வேலூருக்கு பஸ் வந்தது. என்னுடம் இரண்டு வேலூர் மாணவிகள் (போட்டிக்கு வந்திருந்தவர்) வந்தனர். மூவருக்கும் சீட் பிடித்துவிட்டு கிழே இறங்கினான். "அண்ணா என்னை மறந்துடாதீங்க..." கண்கள் குளமாயிருந்தது. அந்த மாணவிகளுக்கு அதிசயமாக இருந்தது. இரண்டு நாளில் இப்படி ஒரு நட்பா..? நட்புக்கு இரண்டு நாள் என்ன இரண்டு நொடி போதுமே.. "அடிக்கடி போன் பண்ணுங்க..நான் பண்றேன்.." என்னால பேச முடியவில்லை. "நல்லா படிடா..பெங்களூர் வந்த மறக்காம வா..".பேருந்து கிளம்பியது..."சேன்ஸே இல்ல..இந்த மாதிரி ஒரு Feeling வந்ததே இல்லைண்ணா..ஏதோ தொலைக்கிற மாதிரி இருக்கு..."..இருவர் கண்ணில் இருந்தும் ஒரு சொட்டு கண்ணீர் அந்த பயணத்தை நிறைவாக்கியது..

பென்ஸ்
28-09-2006, 01:34 PM
எழுதுவது ஒரு கலை, அதை சரியாகவே செய்கிறிர்கள் விழியன்...

விட்டு வந்த கல்லூரியை மீன்டும் சிறப்பு விருந்தினராக செல்வது..
கெளரவிக்க படுவது...
அட எவ்வளவு நல்ல விஷயம் தெரியுமா...

(என்னை எல்லாம் நான் அமெரிக்க ஜனாதிபதி ஆனாலும் எங்க கல்லூரியில் கூப்பிடமாட்டாங்க)...
போனதடவை ஊருக்கு போயிருந்த பொது ஒரு வாத்தியார் என்னை பாத்து
"நீ எதாவது செய்யுதியாடே??"
என்று நக்கலா கேட்டது அதை விட வருத்தமா போயிடுச்சு....

இந்த மனநிலையில் இருப்பவனிடம் வந்து...
நான் கல்லூரி போனேனா..
அங்க... அது...
அருமையோ அருமை..
என்று "விழியன் எழுத்துகளில்" சொல்லும் போது...

அட போங்கையா.... B) B) :rolleyes: :rolleyes: :D :D

மதி
28-09-2006, 01:42 PM
அட..
ரொம்பவே வருத்தப்படாதீங்க பென்ஸூ..

நமக்குத் தெரிஞ்சவர் சிறப்பு விருந்தினரா கல்லூரிக்கு போய்ட்டு வந்தத பாத்து சந்தோஷப்படாம...

umanath
29-09-2006, 03:24 AM
அதான..

பென்ஸ்
29-09-2006, 04:13 AM
அட அதுதானே....!!!1

pradeepkt
29-09-2006, 06:02 AM
ஹ்ம்ம்... விழியன் கலக்கல் பதிவு..
நமக்கும் அந்த வாய்ப்பெல்லாம் கல்லூரியில் கிடைக்காது.
அதுனால பள்ளிக் கூடத்துக்குப் போலாமின்னு இருக்கேன். அங்க மக்களுக்கு நம்ம இங்க என்ன கிழிக்கிறமுன்னு தெரியாதுல்ல??

தாமரை
29-09-2006, 07:05 AM
இன்று எங்கள் கல்லூரியில் சிறப்பு விருந்தினராய் அழைத்திருந்தார்கள்.. செல்ல இயலவில்லை..
அக்கல்ஃபெஸ்ட் என்னும் காரைக்குடி அழகப்பச்செட்டியார் கல்லூரி கலை விழாவில் இதே மாதிரியான எபவ்ட் டர்ன் போட்டியில் .. வகுப்பறையில் தூங்குவது நல்லதா கெட்டதா எனப் பேசி முதல் பரிசு வாங்கியது நினைவிற்கு வருகிறது..

meera
29-09-2006, 08:11 AM
ஆஹா எவ்ளோ ஆருமையா கல்லூரி வாழ்க்கைய ஞாபகபடுத்திட்டீங்க.எனக்கும் என்னோட கல்லூரிக்கு போகனும்னு ஆசையா இருக்கு ஆனா போக பயமாயிருக்கு.(அடிச்சு விரட்டீடாங்கன்னா என்ன செய்யறது அதான்).ம்ம் அப்பறம் மக்கள் TV பத்தி சொன்னீன்க இல்ல அது நடத்தறது Dr.ராமதாஸ்.பா.மா.க தலைவர்.