PDA

View Full Version : சீனியம்மா



gragavan
27-09-2006, 05:38 PM
"ஏல சீனி. இப்ப எப்பிடியிருக்கு? சவுரியந்தானா?" சீனியம்மாவிடம் கேட்டது மாரியம்மா.

சீனியம்மா சென்னைக்குப் போயி கண்ணு ஆப்புரேசன் செஞ்சிட்டு வந்துருக்குல்ல. அதான் ஊருல எல்லாரும் வந்து பாக்காக. புதூரு கொளக்கட்டாங்குறிச்சிதான் சீனியம்மாவுக்குச் சொந்தூரு. மிஞ்சி மிஞ்சிப் போனா தெக்க நாலாரமும் வெளாத்திகொளமும் போயிருக்கும். வடக்க அருப்புகோட்ட. கெழக்க சாத்தூரு. இதத் தாண்டி எங்க போயிருக்கு. அதான் இப்பச் சென்னைக்குப் போயிட்டு வந்துருக்கே.

"இப்ப நல்லாத் தெரியுது மாரி. ஒரு வாரத்துக்கு டாக்குடரு மூடுன மானிக்கி இருக்கனுன்னு சொல்லீருக்காரு. தோட்டந் தொரவு போய்ப் பாக்க முடியாது. இப்பிடி வீட்டுக்குள்ளயே கெடக்க வேண்டியிருக்கு." சொகமா அலுத்துக்கிருச்சி சீனியம்மா.

"அட இதென்ன பச்சத்துணி போட்டுல்ல மூடீருக்கு. இதத் தொறக்கக் கூடாதாக்கும்......" இழுவ எசக்கிதான். வேறாரு.

"இவ ஒரு இவ. பெரிய படிச்ச டாக்குடரு சொன்னா சும்மாவா இருக்கும். கூரில்லாமக் கேக்கியே? நம்ம அழகரு சென்னப் பட்டணத்துல இருக்கப் போயி சரியாப் போச்சு. இல்லீன்னா செலவுக்கு எங்க போக? சாத்தூரு டாக்குடரு கிட்டதாம் போகனும். ஆனாலும் பட்டணம் பட்டணந்தேன்." பெருமதான் சீனியம்மாவுக்கு. பின்னே மகன் வயுத்துப் பேரன் அழகருதான கூட்டீட்டுப் போயி பெரிய ஆசுப்பித்திரீல கண்ணு மருந்து காட்டி ஆப்புரேசன் செலவு செஞ்சது. மாரி மகன் அருப்புக்கோட்ட மில்லுல சூப்பருவைசருதான. எசக்கிக்கு மகதான். அவளையும் உள்ளூருல குடுத்துருக்கு. இவுக எங்க பட்டணம் போயி.....அந்தப் பெருமதான் நம்ம சீனியம்மாவுக்கு.

"இந்தால...பட்டணம் நாங்க எங்க பாக்க? என்னென்ன பாத்தன்னு சொல்லு. கேட்டுக்கிருதோம்." மாரியம்மா எறங்கி வந்துருச்சி. வெவரம் கேக்குறதுல்ல ரொம்பக் கெட்டிக்காரி மாரி.

"அதயேங் கேக்க மாரி. நம்மூருல பஸ்சு வர்ரதே பெரிய பாடு. அங்கன எங்கன பாத்தாலும் பிளசருதாம் போ. சர்ரூ சர்ரூன்னு போகுது. அழகரு வீட்டுலதான் தங்கீருந்தேன். கூடக் கூட்டாளிக ரெண்டு பயலுக. பாட்டி பாட்டீன்னு பாசமாக் கூப்புட்டானுக. கூட வேல பாக்குற பயலுகளாம். நல்லபடியாப் போயிருந்தா பொங்கிப் போட்டுருப்பேன். பாவம் கெளப்புக் கடைலயே எப்பவும் திங்கானுக. நம்ம சொருணந்தான் ரெண்டு நாளைக்குச் செஞ்சு போட்டா. (சொருணம் அழகரப் பெத்தவ. சீனியம்மாவோட மகன் வெள்ளச்சாமியக் கட்டுனவ.) நல்லாருக்கு நல்லாருக்குன்னு ருசிச்சி ருசிச்சி சாப்புட்டானுக. பாவம் யாரு பெத்த புள்ளைகளோ!"

"அது கெடக்கட்டும். ஆசுபித்திரி எப்பிடி? வீட்டுக்குப் பக்கத்துலயா?" எசக்கிக்கு வந்த சந்தேகம்.

லேசா முக்கி மொணங்குச்சு சீனியம்மா. "க்கூம். ஆசுபித்திரி ஒரு மூலைல. வீடு ஒரு மூலைல. புதூருலயிருந்து நாலாரம் போயி அங்கேருந்து வெளாத்திகொளம் போயி இன்னும் தெக்கால போற தூரம். கொஞ்சம் போனா குறுக்குச்சாலயே வந்துரும் போல. அம்புட்டு தூரம். அதுவும் ஆட்டோவுல கூட்டீட்டுப் போனான். ஆட்டோ ஆட்டுன்னு ஆட்டீருச்சு. லேசா கக்க வந்தது. கண்ண மூடிட்டுப் பல்லக் கடிச்சிட்டுப் போயிட்டேன்.

பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ஆசுபித்திரி மாரி. அஞ்சாறு மாடியிருக்கும். அடேங்கப்பா...நிமுந்து பாத்தா கழுத்து வலிக்கு. உள்ள போனா ஆளு வெச்சித் தரையத் தொடச்சிக்கிட்டே இருக்காங்க. அப்பிடித் தொடைக்கங்காட்டிதான் தரை வழுவழூன்னு இருக்கு. ஆசுபித்திரி நடத்துறவக வெளிநாட்டுக்காரக போல. ஏன்னா அழகரு அவுககிட்ட இங்குலூசு பேசுனான். அவுக கிட்டப் பேசப் பயந்து கிட்டுத்தேன் நானு தலையத் தலைய ஆட்டுனேன். அதுவும் அவகளுக்குச் சிரிப்புதாம் போ.

அங்கன ஒருத்தி எந் தண்டட்டியப் புடிச்சிப் பாக்கா. என்னவோ பட்டிக்காட்டன் முட்டாய்க் கடையப் பாத்தாப்புல.

அத விடு. அங்க ஒரு பெரிய தெராசு இருக்காத்தா. ஒரே வேளைல நாலஞ்சு பேர நிப்பாட்டி நிறுக்கலாம். அத்தாம் பெருசு. அடிக்கடி அதுல ஆளுகள எட போட்டுப் பாத்தாக. நாம் போனதுங் கூட மொதல்ல என்ன எட பாத்தாக. ரெண்டு நாளு கழிச்சிப் பொறப்படும் போதும் எட பாத்துத்தான் விட்டாக. அவ்வளவு பதமா எதமா பாத்துக்கிட்டாக. எட பாக்கைல அப்பிடியே ஜிவ்வுங்குது. பெரிய தராசுல்ல. நான் அழகரு கையப் பிடிச்சிக் கிட்டேன்.
அங்கனயே ரூம்புல சாப்பாடு. உள்ளயே படுக்கச் செய்ய வசதி. பளபளக் கக்கூசு. பெரிய பதவிசாத்தா....."

மாரியம்மாவும் எசக்கியும் இதெல்லாங் கேட்டுக் கெறங்கிப் போனாக. சீனியம்மா சொன்னத வெச்சிப் பாத்தா ஆசுபித்திரி கட்டபொம்மங் கட்டுன அரமண கெணக்கா இருக்கனுமுன்னு நெனச்சிக்கிட்டாக. அந்த ஆசுபித்திரிக்கு ஒரு வாட்டியாச்சும் போய்ப் பாக்கனுமுன்னு மனசுக்குள்ள இருக்கங்குடி மாரியாத்தாளுக்கு நேந்துக்கிருச்சி எசக்கி. மூனாவது பொறக்கப் போற பேரனுக்கோ பேத்திக்கோ இருக்கங்குடீல மொட்டையெடுத்து காது குத்தி கெடா வெட்டனுமுன்னு நேந்துக்கிருச்சி. இல்லைன்னாலும் எல்லா அங்கதான் செய்யுறது.

ரெண்டு பேருங் கொஞ்ச நேரம் சீனியம்மாகிட்ட பேசீட்டுப் பொறப்பட்டாக. அப்பப் பாத்து வந்தான் அழகரு. வட்டக் கெணத்துல குளிச்சிட்டு துண்டக் கெட்டிக்கிட்டு வந்தான். திண்ணைல வெச்சிக் கெழவிக அவனப் பிடிச்சிக்கிட்டாக.

"எய்யா அழகரு. ஒங்க ஐயாளம்மாவ ஆசுபித்திரில போனப்பயும் வந்தப்பயும் பெரிய தெராசுல எட பாத்தாகளாமுல. என்ன எடையாம்? எம்புட்டுக் கூடிச்சாம்? கொறஞ்சுச்சாம்?" கேட்டது வெவரம் மாரியம்மா.
"அது தெராசில்ல பாட்டி. அது லிஃப்டு. அது மேல போகும். கீழ வரும்."

"இவன் ஒருத்தன் வெவரம் புரியாம. அதுதான் தெராசு. அதத்தான சீனி சொல்லுச்சு. தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லுல. சரி. வர்ரோம். நேரமாச்சு. வீட்டுப் பக்கம் வர்ரது. சுடுகருவாரு சுட்டுத்தர்ரேன்...." கிழவிக ரெண்டும் சொல்லீட்டு நகந்து போய்க்கிட்டேயிருந்தாக. அழகருதான் செலயா நின்னான்.

அன்புடன்,
கோ.இராகவன்

mukilan
28-09-2006, 03:40 AM
வட்டார வழக்குல வழக்கம் போல பின்னிப் பெடலெடுத்திறிக்கீக. உங்களுக்கு தனியாவா சொல்லணும். எல்லா ஊருகளும் எங்கூரு பக்கத்திலதேன். இதில பாருங்க எங்க பாட்டி ஒருத்தங்க பேரும் சீனியம்மாதான். எனக்கு சின்னதா ஒரு வெகரக்கால் சொல்லுங்க. கொளக்காட்டாங்குறிச்சிக்கு மேக்காலாதான சாத்தூரு இருக்கு.

மதி
28-09-2006, 05:20 AM
அருமையா எழுதியிருக்கீங்க ராகவன். அதிலேயும் கிராமத்துல இருக்கிற பெருசுங்க பண்ற ரவுசை...அட்டகாசம் போங்க..! லிப்ட் எடை பாக்கற மெஷினா..? ஹ்ம்ம்..கலக்குங்க.!

பென்ஸ்
28-09-2006, 07:37 AM
எல ராகவா ...
என்னல கலக்கிபோட்டியே...
.எப்பிடில இது, அப்படியே பத்தமாதிரியெ சொல்லிட்டியெல...

ராகவன்.... உங்க எழுத்து பிசிறு இல்லாம இருக்கு.. வாழ்த்துகள்...

பாரதி
28-09-2006, 11:59 AM
மிகவும் அருமையாக இருக்கிறது இராகவன். உங்களது படைப்பாற்றல் மென்மேலும் வளர மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

pradeepkt
29-09-2006, 04:18 AM
ம்ம்ம்... உங்களுக்கு எழுதுறதே சீனிப்புட்டுத் திங்குற மாதிரி... இதுல உங்கூரு பாசய வேற பாசத்தோட இழுத்துக்கிட்டீக... கேக்கவா வேணும்?

நம்மூருல தெருவுக்குத் தெருவு இப்படிக் கிழவிக இருப்பாக... ஒரு பக்கம் வீட்டு வீட்டுக்குச் சண்டைய இழுத்து விட்டுக்கிட்டே சண்டை போட்ட வீட்டுலயே பச்சப் புள்ளையளுக்குப் பண்டுதமும் பாப்பாக.. கேட்டா... தாயா புள்ளையாப் பழகிட்டம், என்ன செய்யிறதும்பாக...

இவுகளப் புரிஞ்சுக்குறது இருக்கே... அது என்னமோ நெலாவுக்குப் பஸ்ஸூ விடுறாகளாமே அந்த வேலைய விடச் செரமமாத்தா...

gragavan
29-09-2006, 06:26 AM
வட்டார வழக்குல வழக்கம் போல பின்னிப் பெடலெடுத்திறிக்கீக. உங்களுக்கு தனியாவா சொல்லணும். எல்லா ஊருகளும் எங்கூரு பக்கத்திலதேன். இதில பாருங்க எங்க பாட்டி ஒருத்தங்க பேரும் சீனியம்மாதான். எனக்கு சின்னதா ஒரு வெகரக்கால் சொல்லுங்க. கொளக்காட்டாங்குறிச்சிக்கு மேக்காலாதான சாத்தூரு இருக்கு.வாங்க முகிலன். நாகலாபுரத்துல இருந்து அருப்புக்கோட்ட போற வழியில செவலார்பட்டி வெலக்குக்கு முந்துன ஊரு புதூரு. கொஞ்சம் பெரிய பட்டிக்காடு. டூரிங் டாக்கீசெல்லாம் உண்டு. புதூருதான் கொளக்கட்டாங்குறிச்சி. புதூருல இருந்து செவலார்பட்டி நெம்மேனி இருக்கங்குடி வழியாவும் சாத்தூருக்குப் போகலாம். நீங்க சொன்ன மாதிரி...மேக்கதான்.

gragavan
29-09-2006, 06:29 AM
அருமையா எழுதியிருக்கீங்க ராகவன். அதிலேயும் கிராமத்துல இருக்கிற பெருசுங்க பண்ற ரவுசை...அட்டகாசம் போங்க..! லிப்ட் எடை பாக்கற மெஷினா..? ஹ்ம்ம்..கலக்குங்க.!நன்றி நன்றி மதி. சீனியம்மா இத்தோட விடலை. இன்னமும் வருவாங்க. வந்து வம்பு செஞ்சிக்கிட்டேயிருப்பாங்க. நடுநடுவுல இழுவ எசக்கியும் வெவரம் மாரியம்மாவும் கூட வருவாங்க.

தாமரை
29-09-2006, 06:34 AM
1977 -ல் சேலம் நேஷனல் லாட்ஜில் சிவாஜி கணேசன் தங்கி இருந்த பொழுது, எங்கம்மா முதன் முறையாய் லிஃப்டில் சென்று (காங்கிரஸ் மாதர்சங்கம் சார்பாய்) பார்த்து வந்ததை சொன்னாங்க.. அதை நினைவு படுத்துறீரே ராசா..

gragavan
29-09-2006, 07:03 AM
எல ராகவா ...
என்னல கலக்கிபோட்டியே...
.எப்பிடில இது, அப்படியே பத்தமாதிரியெ சொல்லிட்டியெல...

ராகவன்.... உங்க எழுத்து பிசிறு இல்லாம இருக்கு.. வாழ்த்துகள்...ஒம்ம விடவாய்யா கலக்குறோம். ஆனாலும் நீர் சொல்லும் போது சந்தோசமாத்தான் இருக்கு.

gragavan
29-09-2006, 07:11 AM
மிகவும் அருமையாக இருக்கிறது இராகவன். உங்களது படைப்பாற்றல் மென்மேலும் வளர மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.அண்ணா உங்களை விடவா! இப்பொழுதெல்லாம் நீங்கள் எழுதுவதில்லை. ஆகையால் இது பெரிதாகத் தெரிகிறது. அவ்வளவுதான். நீங்கள் மறுபடியும் எழுதுங்கள். என்னுடைய வேண்டுகோள் அது.

gragavan
29-09-2006, 08:38 AM
ம்ம்ம்... உங்களுக்கு எழுதுறதே சீனிப்புட்டுத் திங்குற மாதிரி... இதுல உங்கூரு பாசய வேற பாசத்தோட இழுத்துக்கிட்டீக... கேக்கவா வேணும்?

நம்மூருல தெருவுக்குத் தெருவு இப்படிக் கிழவிக இருப்பாக... ஒரு பக்கம் வீட்டு வீட்டுக்குச் சண்டைய இழுத்து விட்டுக்கிட்டே சண்டை போட்ட வீட்டுலயே பச்சப் புள்ளையளுக்குப் பண்டுதமும் பாப்பாக.. கேட்டா... தாயா புள்ளையாப் பழகிட்டம், என்ன செய்யிறதும்பாக...

இவுகளப் புரிஞ்சுக்குறது இருக்கே... அது என்னமோ நெலாவுக்குப் பஸ்ஸூ விடுறாகளாமே அந்த வேலைய விடச் செரமமாத்தா...இந்த மாதிரி நெறையச் சமாச்சாரங்க இருக்கு. ஊருல ஒரு கெழவி முருங்கக்காயே திங்காது. முருங்கக் கீர...ம்ஹூம்....என்னடான்னா கட்டுனவரு பேரு முருகனாமய்யா....பாத்தீகளா கூத்த...புருசன சோத்துல வெச்சித் தின்னவன்னு சொல்லீருவாகளாம். அதுல முருங்கக்கான்னு சொல்றது கூட இல்ல..மரத்திக்காயாம். மரத்துக் கீரையாம்.

gragavan
29-09-2006, 08:40 AM
1977 -ல் சேலம் நேஷனல் லாட்ஜில் சிவாஜி கணேசன் தங்கி இருந்த பொழுது, எங்கம்மா முதன் முறையாய் லிஃப்டில் சென்று (காங்கிரஸ் மாதர்சங்கம் சார்பாய்) பார்த்து வந்ததை சொன்னாங்க.. அதை நினைவு படுத்துறீரே ராசா..ஐயா...அதப் பத்திச் சொல்றது...நாங்களும் கேட்டுக்கிறோம்.

தாமரை
29-09-2006, 08:42 AM
இந்த மாதிரி நெறையச் சமாச்சாரங்க இருக்கு. ஊருல ஒரு கெழவி முருங்கக்காயே திங்காது. முருங்கக் கீர...ம்ஹூம்....என்னடான்னா கட்டுனவரு பேரு முருகனாமய்யா....பாத்தீகளா கூத்த...புருசன சோத்துல வெச்சித் தின்னவன்னு சொல்லீருவாகளாம். அதுல முருங்கக்கான்னு சொல்றது கூட இல்ல..மரத்திக்காயாம். மரத்துக் கீரையாம்.

அவுக புருஷனை அவுக மரம்னு வைவாங்க.. ராசா ந்னு கொஞ்சுவாக..
மரத்திக்காய் - முருங்கைக் காய்
மரம் - முருகன்
புரிஞ்சிக்க முடியாதுதான்

ஓவியா
05-12-2006, 06:41 PM
ராகவன்
எப்படியோ விட்டதயெல்லாம் தோண்டி எடுத்து படிசிபுட்டேன்

இன்னாமா எழுதரீக....அடடா...........பாராட்டுக்கள்

உங்க எல்ல பதிவுக்கும் நான் போடும் புள்ளையார் சுழி இந்த வார்த்தைதான் .......

ரசிச்சு படிச்சேன்...

இளசு
05-12-2006, 10:58 PM
வெள்ளந்தி - வெபரக்காரி சீனியம்மாவின் ரசிகனாகிவிட்டேன்.

பாராட்டுகள் ராகவன்.

லிஃப்ட்டுக்குப் பின்னால் இத்தனை கதைகளா?

(செல்வன் கதையையும் கேட்க ஆவல்)