PDA

View Full Version : அப்பாவின் எதிர்பார்ப்பு



மதி
26-09-2006, 04:21 AM
அந்த பணக் கவரை நான் வாங்கும் போது அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. பின்ன..வாழ்க்கையிலேயே முதன் முதலாய் வாங்கின ஸ்டைபண்டு ஆச்சே. இது நடந்தது 2003ம் வருடம், ஜூலை மாச இறுதியில் ஒரு நல்ல மாலைப் பொழுதில். இடம், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் (Indian Institute of Science) அலுவலகம்.

என்ன நடந்துச்சுன்னு பாப்போமா? உங்கள்ல பல பேருக்கு தெரியுமானு தெரியல. இந்திய அறிவியல் கழகத்தில் படிக்க ஆளாளுக்கு ஆசைப்பட எனக்கு அங்க ஒரு ரெண்டு மாசம் ப்ரொஜக்ட் பண்ண வாய்ப்பு கிடச்சுது. அதைப் பத்தி சில குறிப்புகள். இந்திய அறிவியல் கழகம் வருடா வருடம் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்களுக்கு Young Engineer Fellowship Programme என்னும் திட்டம் மூலமாக இரண்டு மாதம் அங்கு தங்கி ஒரு ப்ரொபசரின் மேற்பார்வையில் ப்ராஜக்ட் செய்யும் வாய்ப்பளித்து வருகிறது. தேர்வாகும் மாணவர்களுக்கு இரண்டு மாதம் தங்க இடமும் இன்னபிற வசதிகளும் செய்து கொடுப்பதுடன் மாதம் ஊக்கத் தொகையாக ரூபாய் இரண்டாயிரமும் தருகிறது. அவ்வளவே திட்டம் பற்றிய அறிமுகம். இதுக்கும் எனக்கும் எப்படி சம்பந்தம் வந்ததுங்கறது ஒரு சுவாரஸ்யமான விஷயம். அதப் பத்தி இன்னொரு முறை சொல்றேன்.

கல்லூரி தேர்வெல்லாம் முடிஞ்சு கொஞ்ச நாள் கழிச்சு ஜூன் மாத இறுதியில் பெங்களூருக்கு வந்தேன். கல்லூரிக்கு போய் ப்ரொபஸரை பார்த்து ப்ராஜெக்ட் பண்ண ஆரம்பிச்சாச்சு. அங்கேயே தங்கி இருந்ததால் மிகவும் வசதியாயிருந்தது. ப்ரொபஸர் அங்கிருந்த ஆய்வக சாவியை என்கிட்ட கொடுத்துட்டார். கல்லூரியை முடிச்சாச்சு, இனிமேலாவது உருப்படியா கத்துப்போம்னு கொஞ்சம் வெறியோடு கத்துக்க ஆரம்பிச்சேன். தினமும் ஆறு மணி நேரம் தான் ஆய்வகத்தை விட்டு வெளியே இருக்கும் நேரம்.

ஒரு மாசம் ஆச்சு. ஸ்டைபண்டு வாங்க வேண்டிய நாளும் வந்துச்சு. கொஞ்சம் படபடப்பு, நிறைய சந்தோஷம் , இப்படி ஒரு மாதிரியான உணர்வுடன் கல்லூரி அலுவலகம் போய் பணத்தை வாங்கினேன். எத்தனையோ முறை அப்பாவிடமும் அம்மாவிடமும் பணம் வாங்கியிருக்கேன். ஆனா, எல்லாத்தையும் தாண்டி இந்த முறை ஒரு தனிப்பட்ட சந்தோஷம். எல்லோருக்கும் ஏதாவது வாங்கிட்டு போகணும்னு அப்பவே முடிவு பண்ணிட்டேன்.

அன்னிக்கு ராத்திரியே திருச்சிக்கு புறப்பட்டேன். திருச்சியில் என்னுடன் பள்ளியில் படித்த நெருங்கிய நண்பன் வீடு இருந்தது. அவனும் விடுமுறைக்காக ஹைதராபாத்திலிருந்து அப்போது வந்திருந்தான். அவனை பார்த்துவிட்டு சனி இரவு வீட்டுக்குப் போவதாக திட்டம். நேராக திருச்சியில் சித்தி வீட்டுக்கு சென்றேன். பணத்தை அம்மாச்சியிடம் குடுத்துவிட்டு அவங்க காலில் விழுந்து வணங்கினேன்.

குளித்துவிட்டு கிளம்பி நண்பன் வீட்டிற்கு சென்றேன். ரொம்ப நாள் கழிச்சு பாத்ததால ஏகப்பட்ட விஷயங்கள் பேச இருந்துச்சு. பேசிக்கிட்டே என்.எஸ்.பி ரோடு போய் சாரதாஸ்ல அம்மாக்கு ஒரு புடவை, அப்பாக்கு சட்டை எல்லாம் எடுத்துக்கிட்டு கிளம்பினோம். இப்படியா அன்றைய பொழுத ஓட்டிட்டு மாலை சித்தி வீடு திரும்பி அம்மாச்சியிடம் நூறு ரூவாய் குடுத்துட்டு தஞ்சைக்கு கிளம்பினேன்.

எட்டு மணிவாக்கில் வீடு போய் சேர்ந்ததும் வீடு அமைதியாயிருந்தது. மனசுக்குள்ள ஒரே சந்தோஷம், பெருமிதம். அப்பா, அம்மாக்கு துணிமணில்லாம் வாங்கிட்டு வந்திருக்கோமேன்னு.

நுழைந்தவுடனே அம்மா,
என்னடாயிது துணிமணியெல்லாம்?

சும்மா தான்..நல்லாருக்கா பாருங்க

அப்பா முகத்தில சலனமேயில்ல. அட! வாங்கிட்டு வந்தத பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லலியேன்னு ஒரு சின்ன சஞ்சலம். அமைதியா ரொம்ப சந்தோஷம்னு போயிட்டார். கொஞ்ச நேரம் கழிச்சு தான் உறைச்சுது. வாங்கி வச்சிருந்த ரெண்டாயிரத்தையும் முழுசா செலவழிச்சுட்டோமேன்னு.

கொஞ்ச நேரம் கழிச்சு அம்மா வந்தாங்க.

ஏண்டா, சொல்லாம கொள்ளாம நீ பாட்டுக்கு துணி எடுத்துட்டு வந்துட்ட?

ஏன், ஒரு சர்பிரைஸா இருக்கட்டுமேன்னு தான். பிடிக்கலியா?

நீ எடுத்துட்டு வந்ததெல்லாம் பிடிச்சிருக்கு. ஆனா..

என்னம்மாஆனா?

இல்ல.. வாங்கின பணத்தை அப்படியே அப்பா கையில குடுத்து அப்புறமா நீ அதை வாங்கிட்டு போய் எல்லோருக்கும் துணி வாங்கிட்டு வந்திருந்தியானா அப்பா ரொம்ப சந்தோஷப் பட்டிருப்பார்.

தலையில இடி விழுந்தது மாதிரி இருந்துச்சு. அட இது நமக்கு தோணாம போயிடுச்சேன்னு. அப்பா எவ்ளோ கஷ்டப்பட்டு நம்மையும் தம்பியையும் சக்திக்கு மீறி படிக்க வச்சார். என்ன பெருசா ஆசப்பட்டுட்டார். புள்ள முத முதல்ல வாங்கின பணத்த தன்கிட்ட வந்து குடுப்பான்னு எதிர்பார்த்தார். அதையும் அவருக்குன்னு எதிர்பாக்கலை. முதன்முதலா கையில பணம் வந்ததும் தலைகால் புரியாம ஆடி அத்தனையும் செலவழிச்சுட்டு வந்து நிக்கிறேன். இதோ, எல்லாத்தையும் செலவழிச்சுட்டானே. இவன் எப்படி வாழ்க்கைய நடத்தப்போறான்னு குழம்பி நிக்கிறார்.

அன்னிக்கு முடிவு பண்ணினேன். அதற்கப்புறம் வாங்கின முதல் சம்பளத்தை அப்பாவிடம் கொடுத்துட்டு அப்புறம் வாங்கிதான் செலவு பண்ணினேன். இப்ப கூட அம்மா பொறந்தநாளுக்காக என் செலவுக்குன்னு வச்சிருந்த பணத்தில புடவை எடுத்துட்டு அப்பாகிட்ட மட்டும் சொல்லிட்டேன். அம்மாக்கு கொஞ்சம் சர்பிரைஸா இருக்கட்டுமே? என்னங்க நான் சொல்றது?

umanath
26-09-2006, 05:11 AM
ம்ம்..அழகா எழுதறீங்க ராஜேஷ்..

pradeepkt
26-09-2006, 06:04 AM
சூப்பர்... நீங்க குடுத்து வச்சவரு... முதல் சம்பளத்தைப் பெத்தவங்களுக்குக் குடுக்குறதுதான் நாம அவங்களுக்குக் காட்டுற சின்ன சந்தோஷமும் மரியாதையும்! நானும் காலேஜ் முதல் வருடம் படித்த போது வாங்கிய உதவித் தொகைதான் முதல்... ஆனால் அதில் ஃபீஸ் கட்ட வேண்டி இருந்ததால் வேறெதுவும் வாங்க முடியலை. எங்கப்பா அதையும் பல பேருகிட்ட பெருமையாச் சொல்லிக்கிட்டாரு!

அடுத்த வருசம் அந்தக் காசு வந்தவுடனே போயி அப்பாகிட்ட அவங்களுக்கு புதுத் துணியும் எனக்கு ஒரு டேப் ரிக்கார்டரும் வாங்கணும்னு கண்டீசனா சொல்லிட்டேன்... அந்த வருசமும் கொஞ்சம் செலவு வந்துருச்சு, அதுனால ஃபீஸ்! அப்பயும் முடியலை. என்னமோ ஏதோ பண்ணி எனக்கு ஒரு புஷ் டேப் ரிக்கார்டர் மட்டும் வாங்கிக் கொடுத்துட்டாங்க.

மூணாவது வருசமாச்சும் வீட்டுக்கும் அப்பா அம்மாவுக்கும் ஏதாச்சும் வாங்கணும்னு நினைச்சேன். ஆனா அப்ப அம்மாவுக்கும் தம்பிகளுக்கும்தான் வாங்க முடிஞ்சுது. ஏன்னா அப்ப அப்பா இல்லை!

மதி
26-09-2006, 06:35 AM
ஆமாம் பிரதீப். உண்மையிலேயே நான் குடுத்து வச்சவன் தான். நான் எப்படி தேர்வானேன்கற கதைய நாளைக்கு சொல்றேன். என் நண்பர்கள் அனைவருமே சொல்லுவாங்க. கஷ்டப்படாமலேயே நல்லா இருக்கறவன்டா நீன்னு. பல சமயம் நெனச்சுப் பாக்கும் போது உண்மைதான்னு தோணும்.

பென்ஸ்
26-09-2006, 07:04 AM
அடடே.. கலக்குறிங்க மக்கா....
பிண்ணிட்டிங்க....

ஆங், நாந்தான் உதவாக்கரை போல....

ஆறு வருசம் பெங்களூரில் குப்பை கொட்டியும் ஒரு பைசா சேமிப்பும் கிடையாது,
ஒரு பைசா வீட்டுக்கும் கொடுத்தது கிடையாது...
(யப்பு நீங்க எல்லாம் இந்த லோன், கிரடி கார்ட் எல்லாம் உபயோகிப்பது இல்லையா???)

ஆனா.. என்னோட முத சம்பாத்தியம் நான் ஏழாவது படிக்கும் போது,
எடை பாக்கும் ஸ்பிரிங் தராசு "காலிபிரேசன்" பண்ணியதுக்காக ஒருவர் 10 ரூபாய் கொடுத்தார்...
(அப்பா கத்து கொடுத்ததுதான்).
ஆனா அதை அப்பா கையில் தான் கொடுத்தேன்....

இப்பவும் வீட்டிர்க்கு போகும் போது அம்மாவுக்கு காசு கொடுப்பேன்...
ஆனால் பெங்களுருக்கு திரும்பி வரும் போது செலவுக்கு
அம்மாவிடம்தான் காசு வாங்கி வருவேன், கொடுத்ததை விட அதிகமாக....
அம்மாவும் வருத்தபட்டதேயில்ல, நானும் வெக்கபட்டதேயில்லை.... :rolleyes: :rolleyes: :D :D :D

பென்ஸ்
26-09-2006, 07:27 AM
மதி.... நல்ல வருது... இன்னும் எழுது...
அப்பதானே குட்டு எல்லாம் வெளியே வரும்....:D :D :D

வாழ்க்கை ஓட்டத்தின் வேகத்தில் மறந்த சில நினைவுகள்
ஓட்டத்தின் வலி நெஞ்சை அடைக்கும் போது
ஒரு முறை பாதம் நிறுத்தி வலி களையும் போது
பாத சுவடுகளும் திரும்பி பார்க்க படுகின்றன...
யதாத்தம் பகிர்தலில் முள்ளும் மலரும்....

மதி
26-09-2006, 08:11 AM
அடடே.. கலக்குறிங்க மக்கா....
பிண்ணிட்டிங்க....

ஆங், நாந்தான் உதவாக்கரை போல....

ஆறு வருசம் பெங்களூரில் குப்பை கொட்டியும் ஒரு பைசா சேமிப்பும் கிடையாது,
ஒரு பைசா வீட்டுக்கும் கொடுத்தது கிடையாது...
(யப்பு நீங்க எல்லாம் இந்த லோன், கிரடி கார்ட் எல்லாம் உபயோகிப்பது இல்லையா???)

ஆனா.. என்னோட முத சம்பாத்தியம் நான் ஏழாவது படிக்கும் போது,
எடை பாக்கும் ஸ்பிரிங் தராசு "காலிபிரேசன்" பண்ணியதுக்காக ஒருவர் 10 ரூபாய் கொடுத்தார்...
(அப்பா கத்து கொடுத்ததுதான்).
ஆனா அதை அப்பா கையில் தான் கொடுத்தேன்....

இப்பவும் வீட்டிர்க்கு போகும் போது அம்மாவுக்கு காசு கொடுப்பேன்...
ஆனால் பெங்களுருக்கு திரும்பி வரும் போது செலவுக்கு
அம்மாவிடம்தான் காசு வாங்கி வருவேன், கொடுத்ததை விட அதிகமாக....
அம்மாவும் வருத்தபட்டதேயில்ல, நானும் வெக்கபட்டதேயில்லை.... :rolleyes: :rolleyes: :D :D :D
இதுக்கு நாம ஏங்க வெக்கப்படணும்? இப்படி தான் சம்பாதிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் நான் அப்பாகிட்ட இது வேணும்னு கேட்டதேயில்ல. அவர் எனக்கு ஒரு ட்ரெஸ் எடுக்கறேன்னு சொன்னா கூட வேண்டாம்னு சொல்லுடுவேன். அப்பா அதுக்கு வேற வருத்தப்பட்டிருக்கார். சம்பாதிக்க ஆரம்பிச்சதுக்கப்புறம் புள்ள நம்ம கையால எதுவும் வாங்கமாட்டேங்கறான்னு. தெரிஞ்சதுக்கு அப்புறம் அப்பா எது வாங்கி கொடுத்தாலும் மறுக்கதில்ல.!

என்ன இருந்தாலும் அவங்க சந்தோஷம் தானே நமக்கு முக்கியம்..!

மதி
26-09-2006, 08:14 AM
மதி.... நல்ல வருது... இன்னும் எழுது...
அப்பதானே குட்டு எல்லாம் வெளியே வரும்....:D :D :D

வாழ்க்கை ஓட்டத்தின் வேகத்தில் மறந்த சில நினைவுகள்
ஓட்டத்தின் வலி நெஞ்சை அடைக்கும் போது
ஒரு முறை பாதம் நிறுத்தி வலி களையும் போது
பாத சுவடுகளும் திரும்பி பார்க்க படுகின்றன...
யதாத்தம் பகிர்தலில் முள்ளும் மலரும்....
நிச்சயமான உண்மை. அப்பப்போ வாழ்க்கையின் நிகழ்வுகளை திரும்பிப் பார்ப்பேன். ஆனால் பகிர்ந்து கொள்ளணும்னு தோணியதில்ல.. இதெல்லாம் குட்டுன்னு நீங்க நெனச்சாலும் தப்பில்ல..

இன்னும் எழுதனும்னு தோணுது. பார்ப்போம்..!

இளசு
26-09-2006, 08:16 PM
மிக அழகான பதிவு... மிக நுணுக்கமான நினைவு மதி..

பிரதீப்பின் பின்னூட்டம் கலங்க வைக்கிறது..
பென்ஸின் பின்னூட்டம் நெகிழ வைக்கிறது..

பகிர்தலில் முள்ளும் மலரும்...
பதில் கருத்தே கவிதையாய்.... அசத்தல் பென்ஸ்..


------------------------------------------

ஒண்ணு..
அப்பா -அம்மாக்கிட்ட நாம் வாங்கிக்கிட்டே இருக்கணும்..
இல்லை... அதை நிறுத்தியவுடன்
நாம் அவங்களுக்கு கொடுத்துக்கிட்டே இருக்கணும்...

இதில் பணம் - பரிசு என்பதைத்தாண்டி
உணர்வுகளால் ஒரு சார்பிழை ஊடாடுகிறது...

சரியா மக்கா?

அறிஞர்
26-09-2006, 10:22 PM
அழகான நடையில் நெகிழ வைக்கும் அனுபவம்.. அருமை அன்பரே....

பெற்றோருக்கு கொடுக்கும் சிறு சிறு சந்தோசங்களில் எவ்வளவு இன்பம் இருக்கு..... அதை அனுபவச்சிவங்களுக்குதான் புரியும்.

10 வகுப்பில் கணக்கில் 100 எடுத்தவுடன்.. வீதியில் சென்ற பையன்களில் ஒருவன் என் அம்மாவை பார்த்து.. இவங்க தான் நம்ம பள்ளியில் 100 மதிப்பெண் எடுத்தவரின் அம்மா என்று அடுத்தவனிடம் கூறியிருக்கிறான். இதை கேட்ட என் அம்மாவுக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா.... வாவ்.

முதல் சம்பளம்... 1000 ரூபாய் வாங்கி அப்பாவிடம் கொடுத்ததில் அவருக்கு சந்தோசம்.....

பின் மாத மாதம் சம்பளத்தின் ஒரு பங்கை அனுப்பும் போது... பெற்றோருக்கு அதில் இன்பம்....

பெற்றோர் பார்த்த பெண்ணை திருமண செய்த பொழுது... அளவில்லா இன்பம்.... என இன்னும் தொடர்கிறது...

mukilan
27-09-2006, 02:55 AM
மனதை வருடும் பதிப்பு. எனக்கு சில பாடங்களைக் கற்றுத் தந்திருக்கின்றது.நான் இங்கு வரும் வரையில் மாதம் மாதம் என் பெற்றோரிடம் வாங்கித்தான் செலவு செய்தேன்.ஆனால் இறைவன் அருளால் இப்பொழுது என்னால் அவர்களுக்கு அன்பைத் திரும்பச் செலுத்த முடிகிறது. நீங்கள் மட்டுமில்லை மதி. நானும் கஷ்டப்படாமலேயே நன்றாக இருப்பதாகவே உணர்கிறேன்.

மதி
27-09-2006, 02:57 AM
முகில்..
பல தருணங்களில் நம்மையும் அறியாமல் சில தவறிழைத்து விடுகிறோம். இதை பகிர்ந்து கொள்ளணும்னு ஏனோ தோன்றியது. நண்பர்களுக்கும் அனுப்பி வைத்தேன். பிறகு தான் புரிந்தது. இது பலரையும் பாதித்தது என்பது. கொஞ்சம் பேர் மடலிலும் கொஞ்சம் பேர் செல்பேசியிலும் தொடர்பு கொண்டனர்.
"இதுவரைக்கும் நான் இத பத்தி நெனச்சு பாக்கலடா. ரொம்ப தேங்க்ஸ்"னு. ஏதோ அவங்களுக்கு பெற்றோர் எதிர்பார்ப்பை தெரியபடுத்திட்டோமேன்னு ஒரு சின்ன திருப்தி.